Loading

வீட்டிற்குள் சென்ற தேன்மலர் “அப்பாயி….” என்று அழைத்துக் கொண்டே வீடு முழுக்கச் சுற்றி வந்தவள், கொல்லைப்புறம் செல்ல, அங்கு வேலாயி மயங்கிய நிலையில் கீழே விழுந்துக் கிடப்பதைக் கண்டாள். அவ்வாறு தன் அப்பாயியைக் கண்ட தேன்மலர் ஒரு கணம் எதுவும் புரியாமல் அதிரிந்து விழித்து உறைந்து நின்றவள் கண்கள் தானாய்க் கண்ணீர் சொரிய மெல்ல அவரிடம் சென்று கீழே அமர்ந்தவள் நடுங்கும் கரங்களால் அவர் தலையைத் தூக்க, கையில் ஏதோ பிசுபிசுக்கவும் வேகமாக தன் ஒருக் கரத்தை எடுத்துப் பார்த்தவள் ரத்தத்தைக் கண்டு உறைந்தாள்.

பின் அழுதவாறே தன் அப்பாயியின் கன்னத்தைத் தட்டி எழுப்ப அவரிடம் அசைவில்லாததைக் கண்டு மேலும் கேவியவள் அவரைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு “அண்ணே…” என்று அலறினாள். காரை நிறுத்தி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்த சுரேஷ், தேன்மலரின் “அண்ணே…” என்ற அலறலலில் வேகமாகக் கொல்லைப்புறம் ஓடினான். அங்கு தேன்மலர் அடிப்பட்ட வேலாயியை நெஞ்சோடு சாய்த்து வைத்துக் கொண்டு அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு ஒரு நிமிடம் என்ன ஏதென்று எதுவுமே புரியவில்லை.

பதற்றமாக தேன்மலரிடம் சென்றவன் அவள் தோள் தொட்டு “தேனு… என்னாச்சுடா…. அப்பாயிக்கு எப்டி அடிப்பட்டுச்சு…” என்று கேட்க, தேன்மலரோ பதிலேதும் கூறாமல் அவனைக் கண்டு மேலும் அழுக, அது அவனை மேலும் பதட்டமடையச் செய்ய “தேனு… என்னமா… சொல்லு…” என்றான். தேன்மலருக்கோ அழுகையைத் தவிர வேறொன்றும் வரவில்லை, அவள் பதில் கூற நினைத்தாலும் வாயைத் திறந்தாளே கேவல் ஒலிதான் வந்தது.

ஒருக் கையால் அப்பாயியை அணைத்துக் கொண்டு மறுக்கையால் சுரேஷின் கரத்தைப் பற்றியவள் அழுதபடியே தன் பார்வையால் அவனுக்கு வேறுபுறம் சுட்டிக் காட்டினாள். தேன்மலரின் நிலையைப் புரிந்துக் கொண்ட சுரேஷும் கலங்கியத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் சுட்டிக் காட்டியபுறம் நோக்கினான். தேன்மலர் உணர்த்திய திசையில் பார்த்தவன் நொடியில் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்து விட்டான். அங்கு மாடு கட்டும் கட்டுமுளையில் ரத்தக் கறைப் படிந்திருக்க, மாடோ கயிற்றோடு ஓரமாக பெரிய மூங்கில் கூடையில் வைத்திருந்தப் புல்லைத் தின்றுக் கொண்டிருந்தது.

வேலாயி வெளியில் நின்ற மாட்டை அவிழ்த்து கொட்டகையில் கட்டப் போக, அங்கு கூடையிலிருந்த புல்லைக் கண்ட மாடு வேலாயியிடமிருந்து திமிறிக் கொண்டு புல்லை நோக்கி ஓட, வேலாயி விடாமல் கயிற்றைப் பிடித்து இழுக்கவும் அது அவரையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஓட, ஒருக்கட்டத்தில் வேலாயியால் மாட்டை இழுத்துப் பிடிக்க முடியாமல் அவர் வேகமாகக் கயிற்றை விட, அந்த வேகத்தில் வேலாயி நிலைத்தடுமாற, மழைப் பெய்து தரையெல்லாம் மண்ணும் சேறுமாய் வழுக்கியதால் அவரால் கால்களை சரியாக ஊன்ற முடியாமல் அப்படியேக் கீழேப் பின்புறம் விழுந்ததில் அங்கிருந்த கட்டுமுளையில் தலை மோதி மயக்கமாகினார்.

சுரேஷ் அதை ஊகத்தில் தெரிந்துக் கொண்டவன், சற்றும் தாமதியாது வேலாயியைக் கையில் தூக்கியவன் “தேனு அழுவுறத்துக்கு நேரமில்ல…. நீ போய் காரை எடு நா அப்பாயிய தூக்கிட்டு வரேன்…” என்று கூற, அழுதுக் கொண்டிருந்த தேன்மலர் நிலைமையின் தீவிரம் உணர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு வேகமாக சுரேஷிடமிருந்துக் கார் சாவியை வாங்கிக் கொண்டு காரை எடுக்க ஓடினாள்.

தேன்மலர் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் கூட்டமாக என்னவோ ஏதோவென்று பதறியடித்துக் கொண்டு வீட்டினுள் நுழைய, தேன்மலர் கண்ணீரோடு ஓடி வருவதைக் கண்டு அவளிடம் என்னவென்று விசாரிக்க, அவளோ யாரையும் கண்டுக் கொள்ளாமல் வேகமாக ஓடிச் சென்று காரை எடுத்து வந்து வாசலில் நிறுத்தினாள். தேன்மலர் பதில் கூறாமல் ஓடவும் அவர்கள் தங்களுக்குள் முனுமுனுத்தவாறிருக்க, அப்போது சுரேஷ் அடிப்பட்ட வேலாயியை தூக்கிக் கொண்டு வரவும் வேகமாக வழிவிட்டு நின்றனர்.

சுரேஷ் வேகமாக வேலாயியைக் காரில் கிடத்தியவன், கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண்மணியைப் பார்த்து “சுமதி அக்கா… மாடு அவுந்து நிக்கிது… அத புடிச்சுக் கட்டிட்டு… வீட்டை பாத்துக்க… நாங்க அப்பாயி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறோம்…” என்றவாறே ஓட்டுனர் இருக்கையை நோக்கி ஓடினான்.

ஆனால் தேன்மலர் கண்ணீரோடே “அண்ணே… நீ அப்பாயிட்ட இரு… நா ஓட்றேன்…” என்று இறுக்கமாக ஸ்டியரிங்கை வெறித்தவாறுக் கூற, தேன்மலரை நன்கு அறிந்த சுரேஷும் கால விரயம் செய்யாமல் பின்பக்கம் ஏறிக் கொண்டு அப்பாயியை தன் மடியில் கிடத்தினான்.

அப்போது அக்கம் பக்கம் கூடியிருந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர் “எப்பா… பெரியம்மாவுக்கு என்னாச்சு…” என்று கேட்க, சுரேஷ் “மாடு இழுத்து கீழ தள்ளிருச்சு சித்தப்பா…” என்றான். அதற்குள் தேன்மலர் காரை எடுத்து விட, கூடியிருந்தவர்கள் வேகமாக நகர்ந்து வழிவிட்டனர்.

தேன்மலர் எவ்வளவுக்கெவ்வளவு பாசக்காரி, கோபக்காரியோ அதே அளவு தன் மன உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு எந்த ஒரு சூழ்நிலையையும் விஷயத்தையும் தெளிவாக யோசித்துக் கையாளத் தெரிந்தவள். தேன்மலரின் கோபமெல்லாம் அவள் யார் மீது அதிக அன்புமும் உரிமையும் வைத்துள்ளாளோ அவர்களிடம் மட்டுமே வெளிப்படுத்துவாள். தன் அப்பாயிக்கு ஒன்று என்றவுடன் கதறித் துடித்தவள், சுரேஷ் காரையெடு என்று கூறியவுடனேயே தன் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு தன் அப்பாயியைக் காப்பாற்ற செயல்பட ஆரம்பித்தாள். சுரேஷிற்கு தேன்மலரிடம் மிகவும் பிடித்தவற்றில் இதுவும் ஒன்று. தேன்மலர் இறுகிய முகத்தோடு சாலையில் கவனம் பதித்து அதி வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருக்க, வீட்டிலிருந்துக் கிளம்பும்போதுக் கூட அழுதாளே! தற்போது எப்படி இவ்வளவு இறுகிப் போய் அழாமல் வருகிறாள்? என்று எண்ணமிட்டவாறு சுரேஷ் கலங்கிய விழிகளுடனும் ஆச்சர்யத்துடனும் அவளைப் பார்த்துக் கொண்டு வந்தான்.

தேன்மலர் தங்கள் ஊரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனைக்கு முக்கால் மணி நேரத்தில் வர வேண்டியவள் வெறும் இருபதே நிமிடங்களில் வந்து சேர்ந்திருந்தாள். தேன்மலருக்கு கார் ஓட்டத் தெரியும் என்றாலும் கார் விபத்தில் தன் அன்னை வள்ளி பலியானப் பின் காரை ஓட்டாதவள் இன்று தன் அன்பான அப்பாயியைக் காப்பாற்றக் காரை ஓட்டிக் கொண்டு வந்திருந்தாள்.

காரை வேகமாக மருத்துவமனை முன்பு நிறுத்தியவள், அதே வேகத்தில் சென்று மருத்துவமனையில் தன் அப்பாயியின் நிலைமையை அறிவித்து அவரை உள்ளே கொண்டு செல்ல பணியாளர்களையும் ஸ்டெரச்சரையும் கொண்டு வந்திருந்தாள். தேன்மலர் அவர்களோடு அப்பாயியை அழைத்துக் கொண்டு வேகமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு முன்னேச் செல்ல, சுரேஷ் ஒரு நொடி இப்பொழுதும் அழாமல் செல்லும் அவளை வெறித்து நின்று பின் பெருமூச்சோடு அவளைப் பின் தொடர்ந்தான்.

அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் வேலாயிக்கு ஒருவகையில் சொந்தம் என்பதால் விஷயம் கேள்விப்பட்டு அவரே வேலாயிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவசர சிகிச்சை பிரிவின் வெளியே சுரேஷ் நொடிக்கு ஒருமுறை அக்காண்ணாடி அறையை எட்டிப் பார்த்துப் பதட்டமாக நடந்துக் கொண்டிருக்க, தேன்மலரோ இறுகிய முகத்தோடும் நிலைத்தப் பார்வையோடும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

ஒருமணி நேரம் கழித்து சிகிச்சை முடித்து மருத்துவர் மோகன் வெளி வர, சுரேஷ் படபடப்போடும் பதட்டமான முகத்தோடும் அவரை ஏறிட, தேன்மலர் தன் இறுக்கம் தளர்த்தாமல் மெல்ல எழுந்து நின்றாள். மருத்துவர் “பின் மண்டையில பலமா அடிப்பட்ருக்கு…. வெளில காயம் சின்னதாயிருக்கலாம்…. ஆனா உள்ள மூளை நரம்பு அதிகமா பாதிக்கப்பட்ருக்கு…. இன்னிக்கு நைட்குள்ள கண் முழிச்சுட்டாங்கன்னா அத்தை பழைய மாறி நடமாட ஆரம்பிச்சுருவாங்க… இல்லன்னா…” என்றிழுக்க சுரேஷ் கலங்கிப் போக,

தேன்மலர் எவ்வித கலக்கமுமின்றி “அப்பாயிக்கு ஒன்னும் ஆகாது… எந்திரிச்சு வந்துரும் மாமா… இன்னும் என் வம்பு பேச்சுக்கெல்லாம் அது என்னை திட்ட வேணா…” என்று நம்பிக்கையோடுக் கூறினாள்.

அதைக் கேட்ட சுரேஷ் மேலும் கலங்கி அங்கிருந்து வேகமாகச் செல்ல, மருத்துவரோ “உன் நம்பிக்கை பலிக்கட்டும்டா தேனு… அப்பாயிய போய் பாரு…” என்று மென்னகையோடு அவளைத் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்துச் சென்றார்.

தேன்மலர் மெல்ல வேலாயி இருந்த அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைய, செவிலிப் பெண் “அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க…” என்றுவிட்டு அங்கிருந்து அகல, மெல்ல வேலாயியை நெருங்கிய தேன்மலர் தலையில் பெரியக் கட்டோடு மூக்கில் ஆக்ஸிஜன் குழாய் மாட்டியிருக்க உறங்குவது போல் படுத்திருந்தவரை சிறிது நேரம் கண்க்கொட்டாமல் பார்த்தவள் மனதிற்குள்ளேயே

“அப்பாயி… என்ன நீ பாட்டுக்கு வந்து படுத்து கெடக்க… வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி கெடக்கு…. நீ அடிக்கடி சொல்லுவியே வாயில்லா சீவென் த்தா அது… அத நாம தான் கண்ணும் கருத்துமா பாத்துக்கணுனு… மாடு அங்க நீயில்லாம பசில கெடக்கு… சீக்ரம் எந்திரிச்சு வந்துரு நாம வீட்டுக்குப் போவோம்… உன் மகனுக்கு நீ இப்டி கெடக்குறது இன்னும் தெரியாது… தெரிஞ்சுது என் அம்மாவ ஒழுங்கா பாத்துக்க முடியாதான்னு சிதம்பரம் என்ட்ட சண்ட போடும்… அப்பா என்னை திட்னா உனக்கு புடிக்காதுல்ல… அப்ப வேகமா என்ன திட்டு வாங்க வைக்காம எந்திரிச்சு வா… உனக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் தான் டைம் அதுக்குள்ள நல்லா தூங்கி எந்திரிச்சு வா…” என்று கூறியவள், அவர் நெற்றியில் இதழ் பதித்து அங்கிருந்து அகன்றாள்.

மருத்துவமனைக்கு வெளியே வந்த சுரேஷ், வேலாயியின் நிலை எண்ணி அழுவதா? இல்லை தேன்மலர் வேலாயி கண்டிப்பாக எழுந்து வருவார் என்று கண்ணீர் உகுக்காமல் நம்பிக்கையோடுத் தன் மனதின் எண்ணங்களை வெளிப் படுத்தாதவாறு இறுகிக் கிடப்பதை நினைத்து அழுவதா? என்றறியாமல் விம்மியத் தன் நெஞ்சை சிரமப்பட்டு அடக்கிக் கண்களைத் துடைத்துக் கொண்டு தற்பொழுது தேன்மலர் அருகில் அருளும் ராகவியும் இருந்தால் நலமென்றுக் கருதி அவர்களுக்கு அழைப்பு விடுத்து விஷயத்தைக் கூற, அவர்களோ “இப்ப தானே அப்பாயிய பாத்தோம்… அதுக்குள்ள எப்டி…” என்று அதிர்ந்து கலங்கியவர்கள் தாங்கள் உடனே வருவதாய்க் கூறினர்.

பின் மணியைப் பார்த்தவன் இந்நேரம் சிதம்பரம் டெல்லி சென்றிருக்கக் கூடும் என்று நினைத்து அவருக்கு வேலாயியின் நிலைக் கூற அழைப்பு விடுத்தான். ஆனால் சிதம்பரத்தின் ஃபோன் அனைத்து வைக்கப் பட்டிருப்பதாகக் கணினி பெண் கூறவே இன்னும் சிறிது நேரம் கழித்து முயற்சி செய்து பார்க்கலாம் என்றுவிட்டு ஊரிலிருந்து ஃபோன் செய்த நபர்களிடமும் செய்திக் கூறி, பின் சுமதிக்கும் அழைத்து விஷயத்தைக் கூறிவிட்டு தேன்மலரைக் காண உள்ளேச் சென்றான்.

தேன்மலர், வேலாயி இருந்த அறையின் வெளியேப் போடப்பட்டிருந்த இருக்கையில் கண்கள் மூடி சாய்ந்தமர்ந்திருந்தாள். சுரேஷ் அவளைப் பார்த்துக் கொண்டே வேலாயியைக் காணச் சென்றான். இந்த வயதிலும் ஒரு இடத்தில் அமராமல் எப்பொழுதும் ஓடியாடி ஏதாவது வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேலாயியை அந்நிலையில் காண சகியாதவன் போன வேகத்திலேயே திரும்பி வெளியே வந்தவன் தேன்மலரை கண்டு மேலும் கலக்கமுற்றான். தற்பொழுது தான் தான் தேனிற்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவள் அருகில் சென்று “தேனு…” என்றழைக்க, ஒரு நொடி அவனைக் கண் திறிந்துப் பார்த்த தேன்மலர் மறுபடியும் கண்கள் மூடி அமர்ந்துக் கொண்டாள்.

சுரேஷ் பெருமூச்சு விட்டு அவளைத் தொந்தரவு செய்யாது அவளின் பக்கத்து இருக்கையில் அமைதியாக அமர்ந்தான். நேரம் கடக்க, தேன்மலர் விழித் திறந்து தன் தந்தையின் எண்ணுக்கு அழைப்பு விடுக்க, முதலில் அணைத்து வைக்கப் பட்டுள்ளதாக கணினிக் குரல் வர, மறு முறை முயற்சித்த போது அழைப்பு மணி முழுதும் போய் ஓய்ந்தது. தேன்மலர் மறுபடி மறுபடி முயற்சி செய்ய, அப்பொழுதும் முழு அழைப்பு போய் ஓய்ந்துப் போக, சிதம்பரம் அழைப்பை ஏற்ற பாடில்லை.

அதன் விளைவாய் தேன்மலர் முகத்தில் சிறிது பதட்டத்தின் சாயல் தெரியவும் அவளை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த சுரேஷ் “தேனு… இரு நா ட்ரை பண்ணி பாக்றேன்…” என்று கூறி அவனும் முயற்சி செய்துப் பார்க்க அவனுக்கும் தேன்மலருக்குக் கிடைத்த அதே பதில் தான் கிடைத்தது. அச்சமயம் ராகவியும் அருளும் பதட்டமாக மருத்துவமனையில் விசாரித்து இவர்கள் இருந்த இடம் வந்து சேர, சுரேஷ் மற்றும் தேன்மலரின் கவனம் அவர்கள் புறம் திரும்பியது.

ராகவி தேன்மலர் அருகில் அமர்ந்து அவள் கைப்பிடித்து அழுக, தேன்மலர் “ஏய்… எதுக்குடி இப்ப அழர…. அப்பாயிக்கு ஒன்னுல்ல…. இன்னும் கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு வீட்டுக்குப் போலாமான்னு கேக்கும் பாரு…” என்று அதட்ட,

அருளும் “இத தான் ஹனிமலர் நானும் அப்பேலேர்ந்து சொல்லிக்கிட்ருக்கேன்…. இவ கேக்காம மூக்க உறிஞ்சிட்டேயிருக்கா…. “என்று கூறினாலும் அவன் கண்களும் கலங்கத் தான் செய்தது.

ராகவி கண்களைத் துடைத்துக் கொண்டு “சரி தேனு அழல…” என்று கூற, தேன்மலர் அவளை ஒருமுறை ஏறிட்டு விட்டு பின் தந்தைக்கு அழைப்பு விடுத்தாள். அச்சமயம் வேலாயி இருந்த அறையிலிருந்து செவிலிப் பெண் வேகமாக வெளி வந்து மருத்துவர் அறை நோக்கி ஓட, வெளியே இருந்த அனைவரும் எழுந்து நின்றனர்.

ராகவி, சுரேஷ் இருவரும் பேய் அறைந்தார் போல் நிற்க, அருள் கூட அப்போது பதட்டமாகிவிட, தேன்மலர் மட்டும் கல் போல் நின்றிருந்தாள். தேன்மலர் என்ன நினைக்கிறாள்? அவளின் மனநிலை என்ன? என்று அங்கிருந்த மற்ற மூவருக்கும் புரியவில்லை. மூவரும் வேலாயியை விட தேன்மலரைக் கண்டே அதிகம் கலக்கம் கொண்டனர்.

செவிலிப் பெண்ணோடு மோகன் வேலாயி இருந்த அறைக்குள் நுழைந்த பத்தாவது நிமிடம் வெளி வந்து தேன்மலரின் தலையை வருடிப் புன்னகையோடு “தேனு உன் நம்பிக்கை வீண் போகல… அத்தை கண் முழிச்சுட்டாங்க… போய் பாரு…” என்று கூறிவிட்டுச் சென்றார்.

தேன்மலர், விழிகள் கலங்க உதடுத் துடிக்க மெல்லப் புன்னகைத்தாள் மற்றவர்களைப் பார்த்து “நா சொன்னேன்ல… அப்பாயி எந்திரிச்சுரும்னு…” என்றாள். மற்ற மூவரும் கண்கள் கலங்க புன்னகைக்க, தேன்மலர் முகத்தில் புன்னகையைக் கண்டவுடன் தான் சுரேஷிற்கு போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.

ராகவி “ஆமா தேனு.. நீ சொன்ன… நாந்தான் அனாவசியமாக பயந்துட்டேன்… சரி வா அப்பாயிய பாக்க போலாம்…” என்று கூறவும் நால்வரும் வேலாயியைக் காணச் சென்றனர்.

அறைக்குள் நுழைந்ததுமே வேலாயி அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தவர் “எல்லாரும் பயந்துட்டீங்களா… இந்தக் கட்ட என் பேத்தி கண்ணாலத்த பாத்து… கொள்ளு பேத்தி கொள்ளு பேரன பாக்ற வரைக்கும் இருக்கும்யா… அவ்ளோ சீக்ரம் என் பேத்திய விட்டு போயிட மாட்டேன்…” என்று திக்கித் திணறி மெல்லியக் குரலில் கூறினார்.

அதைக் கேட்ட நால்வரும் கலங்கியக் கண்களோடு உதட்டில் புன்னகைத் தவழ அவரைப் பார்த்தனர். சுரேஷ் “அப்பாயி… சீக்ரம் வீட்டுக்கு வா… நீயில்லாம வீடு நல்லார்க்காது…” என்று கூற, வேலாயி புன்னகைத்தார். ராகவி அவர் கையைப் பற்றிக் கொள்ள, வேலாயி இமை மூடித் திறந்து புன்னகை புரிய, ராகவியும் புன்னகைத்தாள்.

அருள் “அப்பாயி…. சீக்ரம் வந்து கோழிக் குழம்பு வச்சுக்குடு… இன்னிக்கு வச்சுருந்தியே… ஸ்ஸ் ப்பா என்னா டேஸ்ட்டு… உன்னை மாறி யாராலயும் அப்டி கோழி குழம்பு வைக்க முடியாது…” என்று கூற, வேலாயி “போடா தின்னி மாட்டு பயலே…” என்று திட்ட, அருள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

பின் வேலாயி தேன்மலரைப் பார்க்க, தேன்மலரும் கலங்கிய விழிகளோடு அவரை ஏறிட, இருவருக்கும் மற்ற மூவரும் தனிமைத் தந்து வெளியேச் சென்றனர். தேன்மலர் மெல்ல அவரை நெருங்கி அவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு புன்னகைக்க, வேலாயி “பயந்துட்டியா தாயி…” என்று கேட்க,

தேன்மலர் இல்லை என்று தலையாட்டி “எனக்கு தெரியும் அப்பாயி… என்னை விட்டுட்டு உன்னால அவ்ளோ சீக்ரம் போக முடியாது… நீ நினைச்சாலும் நா போக விட்ருவனா…” என்று கேட்டாள்.

தேன்மலர் அப்படிக் கேட்டதும் வேலாயி முகத்தில் அப்படி ஒருப் புன்னகை, அதைக் கண்டு தேன்மலர் முகமும் மலர்ந்து இதழ்கள் விரிய, சிரித்துக் கொண்டிருந்த வேலாயியின் முகம் மெல்ல மாறி, திடீரென்று அவர் உடல் தூக்கிப் போட்டது. தேன்மலர் முகமும் இறுகி கண்கள் கண்ணீர் சிந்த வாய் “சிஸ்டர்…” என்று கத்த, அவள் குரல் கேட்டு ஓடி வந்த செவிலிப் பெண் வேலாயியின் நிலைக் கண்டு பதட்டமடைந்து அவர் உடல் மேலும் தூக்கிப் போடாதவாறு அழுத்திக் பிடிக்க,

தேன்மலர் “சிஸ்டர்… நீங்க போய் மாமாவ கூட்டிட்டு வாங்க… நா பாத்துக்றேன்…” என்று அவள் வேலாயியின் கை கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். செவிலிப் பெண் வேகமாக அறை விட்டு ஓடி வந்து மருத்துவரை அழைக்கச் செல்ல, வெளியே நின்றிருந்த சுரேஷ், ராகவி, அருள் மூவரும் செவிலிப் பெண்ணின் பதட்டம் கண்டு தாங்களும் பதட்டமாயினர். மோகன் வேகமாக வேலாயி இருந்த அறைக்குள் வந்து தேன்மலர் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு வேலாயிக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். தேன்மலரோ பூமியே நழுவுவது போல் உணர்ந்தவள் தடுமாறி அருகிருந்த சுவற்றைப் பற்றிக் கொண்டு வேலாயியை ஒரு முறைப் பார்த்தவள், அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் அழுதாவாறு அவ்வறை விட்டு வெளியே ஓடினாள்.

தேன்மலர் அழுதவாறு வெளி வரவும் ராகவியும் அழுதுக் கொண்டே “தேனு… என்னாச்சு டி…” என்று கேட்க, தேன்மலர் எதுவும் கூறாது ராகவியைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள். ராகவியும் அதற்குமேல் எதுவும் கேளாமல் அவள் முதுகை தடவி விட்டு தழுதழுத்தக் குரலில் “அப்பாயிக்கு ஒன்னும் ஆகாது டி… அப்பாடி இப்ப தானே சொல்லுச்சு கொள்ளு பேரன் பேத்தியெல்லாம் பாக்காம போக மாட்டேன்னு…” என்றாள்.

அதைக் கேட்ட தேன்மலர் வேகமாக ராகவியை விட்டு விலகி கண்களைத் துடைத்துக் கொண்டு “ஆமால்ல… என் அப்பாயி என்னைவிட்டு எங்கயும் போகாது… போகவும் விட மாட்டேன்…” என்று கூறி மேலும் விழிகளிலிருந்து வழிந்த நீரைத் துடைத்து விட்டு மறுபடியும் தன்னை இறுக்கமாக்கிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அந்த அறையின் கண்ணாடிக் கதவை வெறிக்க ஆரம்பித்தாள்.

ராகவியும் அருளும் வேலாயியை எண்ணி கலங்கியதை விட தேன்மலரின் நிலைக் கண்டு கலங்கியவர்கள் அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் விழித்து தவித்து நின்றனர். ஏனெனில் எப்போதும் எச்சூழலையும் பதறாமல் புன்னகையுடன் எதிர்கொள்ளும் தேன்மலரை கண்டவர்களுக்கு இவ்வாறு எவ்வுணர்வும் முகத்தில் காட்டாமல் இறுக்கமாக அமர்ந்திருக்கும் தேன்மலர் முற்றிலும் புதிதாகத் தெரிந்தாள்.

சற்று முன்னர் தான் தேன்மலர் முகத்தில் புன்னகைக் கண்டு ஆசுவாசமான சுரேஷ், மறுபடியும் அவளிடம் இறுக்கம் குடிகொள்ளவும் பெரிதும் கலங்கிப் போனான். அருள், ராகவியை விட சுரேஷின் நிலையே மோசமாக இருந்தது, ஒருபுறம் தன்னை வேற்று வீட்டுப் பிள்ளையாய் பார்க்காமல் சொந்த பெயரனாக அன்போடு அரவணைக்கும் வேலாயி உடம்பு முடியாமல் படுத்துக் கிடக்க மறுபுறம் தன்னை வாய் நிறைய “அண்ணே…” என்று உரிமையாக சொந்தத் தங்கைப் போல் தன் மீது பாசம் காட்டி எப்போதும் கலகலவென்று சிரித்து வம்பு செய்யும் தேன்மலர் இன்று இடிந்து இறுகிப் போய் அமர்ந்திருப்பது அவனை பெரிதும் கலங்கச் செய்தது. இருந்தும் சுரேஷ் தன் கலக்கத்தை மறைத்து, தேன்மலரிடம் “அப்பாயி… வந்துரும் டாயி…” என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.

பின் கலங்கி நின்ற அருளையும் ராகவியையும் ஆறுதல் படுத்தி அமர வைத்தான். அச்சமயம் தேன்மலரின் கைப்பேசி சினுங்க, திரையில் தன் தந்தையின் எண்ணைக் கண்டதும் கைகள் நடுங்க அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அந்தப் பக்கம் கூறிய செய்திக் கேட்டு அதிர்ந்து கைப்பேசியை தன் மடியில் நழுவ விட, ராகவியும் அருளும் உறைந்து அசைவில்லாமல் அமர்ந்திருக்கும் தேன்மலரை உலுக்க, சுரேஷ் வேகமாக கைப்பேசியை எடுத்துப் பேசியவனும் அதிர்ந்தான்.

வேலாயி அறையிலிருந்து மோகன் வெளிப்படவும் அவசரமாக விசாரித்து கைப்பேசியை அணைத்த சுரேஷ், மோகன் என்ன கூறப்போகிறாரோவென்று அவரை ஆவலாக நெருங்கினான். ராகவியும் அருளும் தேன்மலரை அழைத்துப் பார்த்துவிட்டு அவர்களும் மருத்துவரை நெருங்கினர்.

மோகன் எப்படி சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தயங்கியவர் பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “எவ்ளவோ ட்ரை பண்ணேன்…” என்று கூற மற்றவர்கள் பதற, மோகன் அவசரமாக “பதறாதீங்க… அத்தை உயிருக்கு ஒன்னுமில்ல… பட் தலையில அடிப்பட்ட வேகத்துலயும் மூளை நரம்பு பாதிக்கப்பட்டதுனாலயும் கொஞ்ச நேரம் முன்னாடி உணர்ச்சிவச பட்டதுனாலயும் அவங்க கோமாக்கு போய்ட்டாங்க…” என்று கூறியவர், தேன்மலரை நெருங்கி “சாரி தேனு…” என்றுவிட்டு சென்றுவிட்டார்.

ராகவியும் அருளும் அதிர்ந்து கலங்கி நிற்க, சுரேஷ் மனதில் சற்று முன்பு கேட்ட செய்தியும் தற்போதுக் கேட்ட செய்தியும் பயத்தை உண்டாக்க, பயத்தோடும் கலக்கத்தோடும் தேன்மலரை பார்த்தான். அதுவரை கல் போன்று அமர்ந்திருந்த தேன்மலர் ஓஓவென்று பெருங்குரலெடுத்து அழ, ராகவியும் அருளும் தவித்துப் போக, சுரேஷ் அதைக் காண சகியாமல் கண்களை மூடிக்கொண்டு அழுதவாறு அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று விழுந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்