Loading

அத்தியாயம்- 17

 

          தேவா கண்கள் சொருக கீழே விழப் போகவும் தேன்மலர் உடனே அவனைத் தாங்கித் தன்மேல் சாய்த்துக் கொண்டாள். தேவாவின் கணத்தை அவளால் தாங்க முடியாமல், அவனின் ஒரு கையைத் தன் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, அவளின் ஒரு கையை அவன் தோள் மீதுப் போட்டு மறுகையால் அவன் கன்னம் தட்டி “சார்… சார்…. ப்ளீஸ் கொஞ்சம் முழிங்க ரூம்க்கு போய்டலாம்…” என்றாள். 

 

     தேவா மெல்ல மெல்ல விழித்தவன், மீண்டும் கண்கள் மூடிக் கொள்ள, அவனிருக்கும் நிலையில் மேலே அவனறைக்கு அழைத்துச் செல்ல முடியாததால் தேன்மலர் மெல்ல அவனை நடத்தி தான் தங்கியிருக்கும் அவனின் தங்கையின் அறைக்கு அழைத்துச் சென்றாள். சாப்பிடும் இடத்திலிருந்து இருபது அடிகளே இருந்த அந்த அறைக்கு வெகுச் சிரமத்துடன் அவனை பதினைந்து நிமிடங்கள் எடுத்து அழைத்துச் சென்று மெல்லக் கட்டிலில் படுக்க வைத்தாள். படுக்க வைத்து “சார்…. சார்…” என்று அவன் கன்னம் தட்ட, அவனிடம் எந்த அசைவுமில்லாமல் போகவும் தேன்மலர் பயந்து விட்டாள். 

 

      அவளுக்குப் பதட்டத்தில் மூளை வேலைச் செய்ய மறுக்க, என்ன செய்வதென்று தெரியாமல் கைகள் பிசைந்து நின்றவள், மீண்டும் அவனை எழுப்ப அவனிடம் அப்போதும் அசைவில்லாததால் அவள் கண்களிலிருந்து தானாக கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

 

      “தேவா… எந்திரிங்க தேவா… ப்ளீஸ்…” என்றவளுக்கு அப்போது தான் தன்னையறியாமல் தான் அழுதுக் கொண்டிருப்பதே அவள் உணர்ந்தாள். வேகமாகச் கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னை நிதானித்தவள், வேகமாக அடுக்களைச் சென்று வெந்நீர் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள். 

 

     பின் தன்னிடம் அமீரா கொடுத்திருந்த காய்ச்சல் மாத்திரை ஒன்றை எடுத்து, அவனை நிமிர்த்தி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவனின் வாயைத் திறந்து மாத்திரையைப் போட்டு அவனுக்குத் வெந்நீர் புகட்ட, அறைக்கண் விழித்துப் பார்த்த தேவா மீண்டும் கண்கள் மூடிக் கொண்டான். 

 

              தேவாவிற்கு அவளின் குரல் காதில் ஒலித்தாலும் அவனால் விழித் திறக்க முடியவில்லை. அவனை நன்றாகப் படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்தி விட்ட தேன்மலர், அமீராவிற்கு அழைத்தாள். 

 

     அமீரா அழைப்பை ஏற்றதும் “மீரா… அவருக்கு உடம்பு சரியில்ல… உன்னால வர முடியுமா… பீவர் ரொம்ப ஹெவியா இருக்கு…” என்றாள். 

 

    அதைக் கேட்டு அமீரா பதறியது அவள் குரலிலேயேத் தெரிய “சரி மலர் வரேன்… இப்ப தான் ஹாஸ்பிட்டலேர்ந்து கெளம்புறேன்… ஒரு ஹாப் அண்ட் ஹார்ல அங்க இருப்பேன்… நீ அவனுக்கு பர்ஸ்ட் நா டேப்ளட் குடுத்தேன்ல அத குடு… அதுக்கு முன்னாடி சாப்பிட எதாவது குடு…” என்றாள். 

 

      தேன்மலர் “மீரா… அவரு ஒரு வாய் வச்சவொடனே வாமிட் பண்ணிட்டாரு… நா மாத்திரை மட்டும் குடுத்துருக்கேன்… நீ கொஞ்சம் சீக்ரம் வாயேன்…” என்றாள். 

 

      அமீரா “சரி… நா வந்தர்றேன்….” என்று அழைப்பைத் துண்டிக்க, தேன்மலர் கவலையாக தேவாவின் நெற்றி மீது கை வைத்துப் பார்த்தாள். அவன் உடல் நெருப்பாய்த் தகிக்க, ஒரு துணியை குளிர்ந்த நீரில் நனைத்து அவன் நெற்றியில் பற்றுப் போட்டாள். 

 

     பின் அடுக்களைக்குச் சென்று, தனக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போது வேலாயி தனக்கு வைத்துக் கொடுக்கும் கசாயத்தை வைக்க ஆரம்பித்தாள். தண்ணீர் சுட வைத்து சிறிது இஞ்சி நசுக்கிப் போட்டு, பின் மூன்று மிளகு, சிறிதளவு சீரகம், கொத்தமல்லி விதைகள் சிறிதளவுப் போட்டவள், தோட்டதிற்குச் சென்று நான்கைந்து துளசி இலைகளையும் பறித்து வந்து அதில் போட்டாள். இரண்டு டம்ளர் தண்ணீர் கொதித்து ஒரு டம்ளராக வற்ற, அதில் பனை வெல்லம் இல்லாததால் சிறிது மண்டை வெல்லத்தை நுனுக்கிப் போட்டு இறக்கி, அதை நன்றாக ஆற்றி எடுத்துப் போய் தேவாவைப் பருகச் செய்தாள். 

 

                   தேவா அதைக் குடித்து முடிக்கவும் அமீரா வரவும் சரியாக இருந்தது. தேன்மலர் தன் மடியிலிருந்து அவனை மெத்தையில் படுக்க வைத்து எழுந்துக் கொள்ள, அமீரா வந்து அவனைப் பரிசோதனைச் செய்து தான் கொண்டுவந்திருந்த மருந்தை ஊசியிலேற்றி அவனுக்குப் போட்டு விட்டாள். 

 

       பின் தேன்மலரிடம் “மலர்… இன்ஜெக்ஷன் போட்ருக்கேன்… அவன் நல்லா தூங்குவான்… இந்த டேப்லட்டையும் சிரப்பையும் அவனுக்கு எதாவது சாப்ட குடுத்துட்டு குடு… நாளைக்கு மதியத்துக்குள்ள அவனுக்கு பீவர் சரியாயிடும்…” என்றாள். 

 

     தேன்மலர் சிறு தலையாட்டலோடு மருந்துகளைப் பெற்றுக் கொண்டு “மீரா… ஏன் திடீர்னு இவ்ளோ பீவர்… அவருக்கு ஒன்னுயில்லல…. பீவர் நாளைக்கு சரியாயிடும்ல…” என்று கண்களில் வலியோடு தவிப்பானக் குரலில் கேட்டாள். 

 

      அமீரா அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள். அவளின் தவிப்பும் வலியும் அவளுள் சுருக்கென்ற வலியை உண்டாக்க, இனி அதைப் பற்றி எண்ணக் கூடாதென்று தன்னைக் கட்டுப் படுத்திப் பெருமூச்சோடு “சரியாயிடும் மலர்…. நீ கவலப்படாத… ரெஸ்ட்டே இல்லாம இருந்துருக்கான்… பத்தாததுக்கு ரெண்டு மூனு நாள் அவன் சரியா வேற தூங்கல போல… அதான் டையர்ட்னஸ் எல்லாம் சேந்து பீவர் வந்துருக்கு… நீ கவலப்படாமயிரு… சரியாயிடுவான்… பயப்படாத…” என்றாள். 

 

     தேன்மலர் அவள் கண்களை ஊடுருவ, அமீரா அவளின் பார்வையைத் தாங்காது தலைத் தாழ்த்த, தேன்மலர் சற்று இறுகியக் குரலில் “யார் என்னனு தெரியாத என்னை காப்பாத்தி தங்க இடம் குடுத்து என் பிரச்சனை தீக்க ஹெல்ப் பண்றேன்னு சொன்ன நல்ல மனுஷன் முடியாம கெடக்குறாரேன்ற ஆதங்கம் தான்… அவர் சரியானா எனக்குப் போதும்… நா நல்லா பாத்துக்றேன் அவருக்கு பீவர் சரியாகுற வர… நீ கவலப்படாம போ… உனக்கு இன்னும் ரெண்டு நாள்ல என்கேஜ்மென்ட் இருக்குல்ல… நீ கெளம்பு மீரா அப்றம் உன் அத்தா திட்ட போறாரு…” என்று கூறி, நீ நினைப்பதுபோல் நானில்லை என்று மறைமுகமாக அவளுக்கு உணர்த்தினாள். 

 

     அமீரா விழிகள் கலங்க தேன்மலரை பார்த்தவள் அவளின் கைப்பற்றிக் கொண்டு “சாரி மலர்… நா அப்டி நினச்சுருக்கக் கூடாதுதான்… ஆனா அப்டியிருந்தா என்னன்ற ஒரு ஆசை நீ இங்க வந்த நாள்லேர்ந்து என் மனசுல ஓடிட்டே இருந்துச்சு… அதோட வெளிப்பாடு தான் நா இப்ப சொன்னது… ஆனா நீ அத வேற மாறி புரிஞ்சுகிட்ட… தேவா இப்டியே இருக்கானேன்னு நா கவலப்படாத நாளில்ல… இதுல நா எதுவும் சொல்ல முடியாது… ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம்… ஆனா நடந்தா சந்தோஷப்பட்ற மொத ஆள் நானா தான் இருப்பேன்…” என்று கூறி குலுங்கி அழ ஆரம்பித்தாள். 

 

                 தேன்மலருக்கு தான் என்னவோ போலாகிவிட்டது “அவசரப்பட்டோமோ…” என்று யோசித்தவள் நொடியும் தாமதமின்றி அவளை அணைத்துக் கொண்டு முதுகை ஆதுரமாய்த் தடவியபடி “சாரி மீரா… மன்னிச்சுரு… நா ஏதோ புரியாம அவசரப்பட்டுட்டேன்… நா இருக்ற நிலைமைல இதெல்லாம் யோசிக்க முடியாது… அதுமட்டுமில்லாம சார் மனசுல என்னயிருக்கோ…எனக்கும் சார புடிக்கும் தான் ஆனா நீ நினக்குற மாறியில்ல… அவருக்கு நா கொஞ்சமும் பொருந்த மாட்டேன்… சாரி மீரா…” என்றாள். 

 

     அமீரா அவளிடமிருந்து விலகி கண்களைத் துடைத்துக் கொண்டு “இப்டி சட்டுன்னு ஒரு முடிவுக்கு வராத மலர்… காலம் எல்லாத்துக்கும் பதில் வச்சுருக்கும்… சரி இனி இதபத்தி பேச வேணா… அவன பத்ரமா பாத்துக்கோ…. நா காலைல வரேன்…” என்றுவிட்டு அவள் திரும்பி ஒருமுறை தேவாவை புன்னகையுடன் பார்த்துவிட்டு அவளது வீட்டிற்குச் சென்றாள். 

 

     அமீரா இத்தனைக் காலங்களாய் தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகியது போல் மிகவும் லேசாக உணர்ந்தாள். அச்சமயம் அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை அவளுக்கு அழைக்க கண்கள் மின்னச் சிறுப் புன்னகையுடன் அழைப்பை முழுமனதுடன் ஏற்றுப் பேசியபடியே வீட்டினுள் நுழைந்தாள். கூடத்தில் அமர்ந்திருந்த அவளின் அத்தாவும் அமியும் அவளை வித்தியாசமாகப் பார்க்க, அமீரா சைகையில் யாரென்று உரைக்கவும் இருவரது முகங்களிலும் அவ்வளவு மகிழ்ச்சி. அதுவும் அவளின் அத்தா கொண்ட ஆனந்தத்திற்கு அளவேயில்லை. 

 

     தேன்மலர் தான் அமீரா ஏன் அப்படி பேசினாள்? தன்னுடைய நடவடிக்கைகள் அப்படியா இருக்கிறது? தான் தேவாவை ரசித்தது உண்மைதான். ஆனால் தன் நெஞ்சில் அப்படி ஏதும் எண்ணமில்லையே! பின் ஏன் அவளுக்கு அப்படி தோன்றியது? தான் தேவாவிற்கு உடம்பு சரியில்லை என்று அழுததாளா? வருத்தம் கொண்டதாளா? என்று குழம்பித் தவித்தாள். தேன்மலர் யோசனையும் குழப்பமுமாக கட்டிலில் சோர்ந்து துவண்டுப் போய்ப் படுத்திருக்கும் தேவாவை கண்டவள் இந்தக் குழப்பம் தேவையில்லாதது, இதைப் பற்றி இனி யோசிக்கவேக் கூடாது, என்ற முடிவோடு அவனுக்குக் கொடுக்கக் கஞ்சி வைக்கச் சென்றாள்.

 

                   மருந்தின் வீரியத்திலும் காய்ச்சல் தந்தச் சோர்விலும் மயக்க நிலையிலிருந்த தேவா, முழுதாக உறக்க நிலைக்குச் செல்லும் முன் தேன்மலர் அமீராவிடையே நடந்த உரையாடலில் முன்பாதியைக் காதில் வாங்கியிருந்தான். அதைக் கேட்டவனுக்கு மனதில் என்னென்னவோ எண்ணங்கள், நினைவுகள். அந்த நினைவுகள் தந்த வலியில் அப்படியே உறங்கியும் போனான். 

 

     தேன்மலருக்கு ஏனோ சாப்பிடப் பிடிக்காமல் போக, அனைத்தையும் எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு அடுக்களையை ஒழுங்குப் படுத்தி, கஞ்சி காய்ச்சி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு மீண்டும் வெந்நீர் வைத்து ப்ளாஸ்க்கில் ஊற்றிக் கொண்டு தேவா இருந்த அறைக்குச் சென்றாள். தேன்மலர் அறைக்குச் செல்லும் பொழுது தேவா உறக்கத்தின் பிடியில் இருந்தான். உறங்கும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த தேன்மலர் அவனுக்குக் காய்ச்சல் குறைந்து விட்டதா? என்று அவன் வெற்றியைத் தொட்டுப் பார்க்க, காய்ச்சல் சற்று குறைந்திருந்தது. பின் அவனது உடல் குளிரில் நடுங்குவதுக் கண்டு போர்வையைக் கழுத்து வரைப் போர்த்தி விட்டு அவனருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டாள். 

 

     அவனின் முகம் கண்டவளுக்கு ஏனோ நிம்மதியும் வலியும் ஒருசேர இதயத்தைத் தாக்கியது போல் ஒரு உணர்வு. அந்த உணர்வு அவளுக்கு பிடித்திருப்பது போலவும் பிடிக்காததுப் போலவும் இருந்தது. அடுத்தக் கணம் தன் நிலை உணர்ந்தவள் தன் உணர்வுகளைப் புறந்தள்ளி, தற்போது தன் அப்பா, அப்பாயியின் நலன் மற்றும் தன் அப்பாவிற்கு நடந்த நிகழ்விற்கான நியாயம் மற்றும் அம்முவிற்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அழுத்தமாக ஆழமாக, கண்டதையும் சிந்தனைச் செய்யும் தன் நெஞ்சத்தில் பதிய வைத்தாள். தனக்கு அடைக்கலம் அளித்ததோடு தனக்கு உதவியும் செய்யும் தேவாவின் மேல் மரியாதை, அன்பைத் தவிர வேறேதமில்லை என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள். அதன் பின்பே அவள் ஓரளவு தெளிவுற உறக்கம் அவள் கண்களைச் சுழற்ற, தேவாவிடம் அசைவுத் தெரிந்தது. 

 

      தேவா மெல்ல கண்விழித்துப் பார்க்க, தேன்மலர் “இப்போ எப்டி சார் இருக்கு…” என்று கேட்டாள். 

 

     தேவா பரவாயில்லை என்று தலையாட்ட, தேன்மலர் “சார்… கஞ்சி வச்சுருக்கேன்… அத மட்டும் கொஞ்சம் குடிங்க… டேப்லெட் போடணும்…” என்றாள். 

 

     கஞ்சி என்று கேட்டதுமே தேவாவின் முகம் அஷ்டகோணலாகியது. 

 

     அதைக் கவனித்த தேன்மலர் “சார்… கொஞ்சமா சாப்டுங்க சார்… வெறும் வயித்துல மாத்திரை போட கூடாது…” என்று கெஞ்சும் தொனியில் கேட்க, அவள் முகத்தைக் கண்ட தேவா சரியென்று தலையசைத்தான்.    

 

                 தேன்மலர் கஞ்சியில் சிறிய தேக்கரண்டியைப் போட்டு நீட்டினாள். தேவாவால் எழுந்துக் கொள்ளவே முடியவில்லை. அதைக் கண்ட தேன்மலர் “இருங்க சார்…” என்று அவனை கைத்தாங்கலாக நிமிர்த்தி ஒரு தலையணையை பின்னே வைத்து சாய்த்து அமரச் செய்தாள். 

 

     பின் தானே அவனுக்கு கஞ்சியை ஊட்டப் போக, தேவா “நானே சாப்ட்டுக்றேன் மலர்… உனக்கெதுக்கு சிரமம்…” என்றான். 

 

      தேன்மலர் அவனை முறைத்து “உங்களால எழுந்து உக்காரவே முடில நீங்க எப்டி சாப்டுவீங்க…. எனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணீற்க்கீங்க… அதுக்கு முன்னாடி நா பண்றதெல்லாம் ஒன்னுமேயில்லை… எனக்கு எந்த சிரமமும் இல்ல சார்… நீங்க பேசாம சாப்டுங்க சார்…” என்று தேக்கரண்டியை அவன் வாய் முன்பு நீட்டினாள். 

 

     தேவா அவள் முகத்தையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டே அவள் ஊட்ட ஊட்ட சாப்பிட்டு முடித்தான். நேற்று வரை அனைத்திற்கும் தயங்கி தயங்கிக் கொண்டிருந்தவளா இவள்? இல்லை நாம் தான் தவறாகப் புரிந்துக் கொண்டோம்…. அவளின் பேச்சில் எவ்வளவு உரிமை எவ்வளவு அக்கறை, அன்பு கூடவே கண்டிப்பு வேறு… என்ற அவளின் சிந்தனை தான் அவன் மனம் முழுதும். தேன்மலர் அவன் வாய்த் துடைத்து விட்டு மாத்திரை எடுத்து வர, தேவாவிற்கு மறுபடியும் குடலைப் பிரட்ட, அவன் வாய்ப் பொத்தி எழவும் தேன்மலர் பக்கதில் காலியாகயிருந்த ஒரு கிண்ணத்தை எடுத்து அவன் முன்பு நீட்டினாள். 

 

     தேவா அவளைப் பார்க்க, தேன்மலர் “சார்… ரொம்ப யோசிக்காதீங்க… இதுல எடுங்க… இப்போ எழுந்துப் போனா… கண்டிப்பா நீங்க இருக்கற நிலைமைக்கு கீழ் விழுந்துடுவீங்க…” என்று கூற, தேவா மீண்டும் அவளைப் பார்க்க, “சார்… என்ன சார் யோசிச்சுட்டே…” என்னும் பொழுதே அவனை மீறி அவன் சாப்பிட்ட கஞ்சியெல்லாம் வெளியேறி விட்டது. தேன்மலர் அக்கிண்ணத்தை சுத்தம் செய்து விட்டு கையில் இரண்டு பிரட் துண்டுகளோடு வந்தாள்.

 

      “சார்… சாப்ட்டதெல்லாம் வாமிட் பண்ணீட்டீங்க… இத கொஞ்சமா சாப்டுங்க…” என்று கூற, தேவாவிற்கும் இப்போதுதான் பசி தெரிந்ததால் மறுப்பேதும் கூறாது அதை வாங்கி உண்டான். பின் தேன்மலர் அவனுக்கு மாத்திரைக் கொடுக்க, அதை விழுங்கி விட்டு உறங்காமல் தேன்மலரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

                  தேன்மலர் அவன் பார்ப்பதைப் பார்த்து “என்ன சார் அப்டி பாக்றீங்க… தூங்குங்க…” என்றாள். தேவா ஒன்றுமில்லை என்று தலையாட்டிவிட்டு படுக்க, தேன்மலர் அவனுக்குப் போர்த்தி விட்டு அவனருகில் அமர்ந்தாள். தேன்மலர், ஸாம் குறுஞ்செய்தி அனுப்பிருக்கவும் அதற்கு பதில் அனுப்புவதில் கவனமாகிவிட, தேவா அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தேவா மருந்தின் வீரியத்தில் உறங்கிவிட, தேன்மலருக்கு பிக் பியிடமிருந்து அழைப்பு வரவும் தேன்மலர் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அறை விட்டு வெளி வந்தாள். 

 

     தேன்மலர் அழைப்பை ஏற்றதும் “ஹே ஏஞ்சல்… ஹௌ ஆர் யூ டியர்?” என்று கேட்க, 

 

     தேன்மலர் “ஹாய் பிக் பி… நா நல்லார்க்கேன்… நீங்க நல்லார்க்கீங்களா… மெடிசின்ஸ்லாம் கரக்ட்டா எடுத்துக்றீங்களா…” என்று கேட்டாள். 

 

     பிக் பி “நல்லார்க்கேன் டியர்… ஏஞ்சல் சொல்லி நா கேக்காம இருப்பனா… அதெல்லாம் கரக்ட்டா எடுத்துக்றேன்… ஆமா என் ஏஞ்சல் வாய்ஸ்ல இன்னிக்கு எனர்ஜி கம்மியா இருக்கே…” என்று கேட்டான். 

 

      தேன்மலர் “உங்களுக்கே தெரியும்… ஸாம் சொல்லிருப்பானே…அப்பாவுக்கு நாளைக்கு சர்ஜரி… நா இங்க இருக்கேன் அந்த கவலதான்…” என்றாள். 

 

     பிக் பி “எல்லாம் நல்லபடியா நடக்கும் ஏஞ்சல்… என் ஏஞ்சல் மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்… சரி சொல்லு ஏன் வாய்ஸ்ல எனர்ஜி இல்ல…” என்று கேட்டான். 

 

    தேன்மலர் “அதான் சொன்னேனே…” என்று கூற, 

 

      பிக் பி “என் ஏஞ்சல எனக்கு தெரியும்… உன் கவலை அப்பா பத்தினது மட்டுமில்ல… எதாவது பிரச்சனையா டியர்…” என்று அக்கறையாகக் கேட்டான். 

 

      அதைக் கேட்ட தேன்மலர் கண்கள் கலங்கி “யூ ஆர் ஆல்வேஸ் ஸீவீட் பிக் பி… நா சொல்லிற்ந்தேன்ல தேவான்ற ஒருத்தர் என்னை காப்பாத்தி எனக்கு இப்ப ஹெல்ப் பண்றாருனு… அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல…. அதான்…” எனன்றாள். 

 

     பிக் பி “ஹோ… கவலப் படாத ஏஞ்சல்… என் ஏஞ்சலுக்கு ஹெல்ப் பண்றவர் நல்லாதான் இருப்பார்…” என்று கூற, 

 

     தேன்மலர் “ம்ம்ம்… சரி நீங்க காரணமில்லாம கால் பண்ண மாட்டீங்களே… என்ன விஷயம் பிக் பி…” என்று கேட்டாள். பிக் பி “என் ஏஞ்சல் கூட பேசணுன்ற காரணம் தான்… அப்றம் லூஸர் பத்தி பேச… அவன தூக்கிறவா…” என்று கேட்டான். 

 

     தேன்மலர் “பிக் பி… இப்போதிக்கு வாட்ச் மட்டும் பண்ணுங்க… அப்றம் அவன பத்தின ஃபுல் டீடெய்ல்ஸ், அவன் ஏன் இந்தியா வந்தான்… அவனுக்கும் ஆர்யன், ரகுவுக்கும் என்ன சம்மந்தம்ன்ற டீடெய்ல்ஸ் லாம் எனக்கு மெயில் பண்ணுங்க… அந்த கருப்பு ஆட எப்ப தூக்கனுனு சொல்றேன் அப்ப தூங்குங்க…” என்றாள்.

 

     பிக் பி “சரி ஏஞ்சல்… வேற எதுவும் ஹெல்ப் வேணுனா கேளு… உனக்கு நா நெறைய செய்யனும்…” என்று கூற, தேன்மலர் “இப்போதிக்கு இது போதும் பிக் பி… வேணுனா நானே கேக்றேன்…” என்றாள். 

   

   பின் இருவரும் ஒரே நேரத்தில் அழைப்பைத் துண்டித்தனர். தேன்மலர் சிறிது நேர யோசனைக்குப் பின் அறைக்குள் சென்றாள்.

 

                தேவா ஏதோ உறக்கத்தில் முனகிக் கொண்டிருப்பதைக் கண்டு அவசரமாக அவனருகில் சென்றவள், அவன் நெற்றியிலும் கன்னத்திலும் கை வைத்துப் பார்க்க, காய்ச்சல் சற்று மட்டுப்பட்டிருந்தது. தேன்மலர் கை வைக்கவும் தேவாவிடமிருந்து எந்த முனகலுமில்லை. அவள் கையை எடுக்க, தேவா அவள் கையைப் பற்றிக் கொண்டான். தேன்மலர் திகைத்துப் பார்க்க, அவன் இன்னும் விழி திறக்காமலிருந்தான். 

 

     தேவா காய்ச்சல் வேகத்தில் உறக்கத்திலேயே “அம்மா… போகதா ம்மா… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றான். 

 

    தேன்மலர் குழம்பி, பின் அவனுக்கு அன்னை ஞாபகம் வந்துவிட்டதென்று உணர்ந்தவள் அசையாமல் நின்றாள். 

 

    தேவா “அம்மா… நா உன் மடில படுத்துக்கட்டுமா…” என்று கேட்க, தேன்மலருக்கு கண்கள் கலங்கி விட்டது, மறுப்பேதும் சொல்லாமல் மெத்தையில் அவள் அமர்ந்து அவன் தலை வருட, தேவா சட்டென்று அவள் மடியில் படுத்தவன் முகம் புதைத்து அழ ஆரம்பித்தான். தேன்மலருக்கு அவன் அழுவது இதயத்தில் வலியைத் தோற்றுவிக்க, இருந்தாலும் அவன் மனதை அழுத்தும் கவலையெல்லாம் கரைந்துப் போகட்டுமென்று அழ விட்டாள். தேவா அழுது முடித்து “அம்மா… நா உன்கிட்ட ஒரு விஷயம் மறச்சுட்டேன் மா…” என்று கூற, தேன்மலர் அவன் பேசட்டுமென்று அமைதியாக இருந்தாள். 

 

                 தேவா “அம்மா… நானும் மீராவும் சின்ன வயசுலேர்ந்தே ப்ரண்ட் தானே… ஆனா எங்களுக்குள்ள எப்போ எப்டி… அது ம்மா ஒருத்தர் ஒருத்தர் புடிச்சுருந்துது… அப்போ நாங்க ப்ளஸ் ஒன் படிச்சுட்ருந்தோம்… நா ஆரம்பத்துல அது வெறும் அட்ராக்ஷன்னு நினச்சேன்… ஆனா போக போக இல்லனு புரிஞ்சுது… அதுவரை ப்ரண்ட்டா அவக்கூட இயல்பா பழகுன என்னால அதுக்ப்றம் இயல்பா இருக்க முடில… அவளோட பேச்சு, செயல்னு எல்லாமே எனக்கு புதுசா அழகா தெரிஞ்சது… அவளும் என்கூட இயல்பா பேசல… நா பாத்தா வெக்கப்ட்றதுனு புதுசா புதுசா ஏதாவது செஞ்சா… அவ என்னைப் பாக்றதுலயும் வித்தியாசம் தெரிஞ்சது… அப்போ தான் அவளுக்கும் என்னை புடிச்சுருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்… ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் எதுவும் சொல்லல… ஆனா எங்க கண்ணு எல்லாம் சொல்லிருச்சு… அது எங்க ரெண்டு பேருக்கு மட்டுமில்லாம அவ அப்பாவுக்கும் சொல்லிருச்சு…. அங்கிள் தான் மதம், ஜாதினு அதுல ஊற்ன ஆளாச்சே… அவரு எங்கள கூப்ட்டு கண்டிச்சாரு… இதெல்லாம் வேணாம் அப்டி எதாவது பண்ணீங்கனா மீராவுக்கு உடனே கல்யாண ஏற்பாடோ இல்ல அவள வேற ஏதாவதோ பண்ணீடுவேன்னு மிரட்னாரு… மீராவுக்கு டாக்டர் ஆகனுன்றது கனவு மா… அவளுக்கு அவ அத்தா அமிய எவ்ளோ புடிக்கும்னு எனக்கு தெரியும்… என்னால எங்க காதலால அவ குடும்பத்தோட அன்பையும் கனவையும் கலைச்சுற வேணானு தோனுச்சு… இனி நா மீராவுக்கு நல்ல ப்ரண்ட் தான் அங்கிள்… எங்களுக்குள்ள இனி வேற ஒன்னுமில்ல… ப்ராமிஸ் அங்கிள்… ன்னு சொன்னேன்… மீராவும் அழுதுட்டே ஆமா அத்தா… நானும் ப்ராமிஸ் பண்றேன்… எங்க ப்ரண்ட்ஷிப்ப மட்டும் பிரிச்சுறாதீங்க அத்தா ன்னா… அதுக்கப்பறம் தான் அங்கிள் சமாதானம் ஆனாரு… எங்க காதல் மலராம மொட்டுலயே வாடிருச்சு… ஆனா அப்றமும் மீராக்கு ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ்… அதனால நா அவகிட்ட பேசறத கொறச்சுட்டேன்… அப்றம் நா இன்ஜினியரிங் அவ மெடிசின்னு பிரிஞ்சுட்டோம்… அப்றம் எங்களுக்குள்ள அப்பப்போ சின்ன நல விசாரிப்புகள் தான்… ரொம்ப நாள் கஷ்டபட்டேன்… அப்றம் என் மனச நானே தேத்திக்கிட்டேன்… அவளும் அப்டி தான்… ரொம்ப நாளா கல்யாணம் வேணானு சொல்லிட்ருந்தா மீரா… என்னால தானேன்னு எனக்கு குற்றயுணர்ச்சியா இருந்துச்சு… அவ எப்ப கல்யாணத்துக்கு ஓகே சொன்னாளோ அப்ப தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு… இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்கு நிச்சியம் மா… வலிக்குது ம்மா… என்று அழுதவன், பின் அவ கல்யாணம் பண்ணிக்க போறவர பத்தி விசாரிச்சேன்… நல்ல பையன் மா… மீராவ நல்லா பாத்துப்பான்… அவ சந்தோஷமா வாழப் போறான்னு நினக்கும்போது சந்தோஷமாயிருக்குமா… இனி எனக்கு மீராவ பத்தின குற்றயுணர்ச்சியும் இல்ல கவலயும் இல்ல மா… அம்மா இப்ப தான் மா லைட்டா ஃபீல் பண்றேன்… அம்மா அம்மு என்கிட்டேர்ந்து போறதுக்கு காரணமாயிருந்தவனுங்கள சும்மா விட மாட்டேன் மா…” என்று கோபத்தில் திமிற, அவன் பேசுவதை அமைதியாகக் கேட்ட தேன்மலர் ஏற்கனவே அவள் ஊகித்தது தான் என்றாலும் அவன் வாயால் கேட்கும்போது அவளுக்கும் கஷ்டமாகயிருந்தது. தேவாவின் வார்த்தைகள் வழியே அவன் வலியைக் கேட்டவளும் அதே வலியை அக்கணத்தில் உணர, அவள் விழிகளிலிருந்து நீர் நில்லாமல் வழிந்தது. 

 

              பின் அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டு “என்னைவிட்டு எங்கயும் போகாத…” என்று அவன் உறக்கக் கலக்கத்தில் கூற, தேன்மலர் அவன் கைமேல் தன் கை வைத்து மறு கையால் அவன் தலையை வருடியபடி விழி நீர் வழிய, நா தழுதழுக்க “போக மாட்டேன் தேவா…” என்றாள். 

 

      அதன் பின்பே தேவா அமைதியாக உறங்க, விழி நீர் வடிய தாய் பறவையின் சிறகுக்குள்ளிருக்கும் குஞ்சு போல் தன் மடியில் குறுகிப் படுத்திருந்தவனின் முகத்தை விழி அகலாமல் பார்த்துக் கொண்டே உறங்கிப் போனாள். 

 

    பொழுது புலரும் வேளை கண் விழித்த தேவா, ஏதோ தன் அன்னையின் அருகாமையில் இருப்பதுபோல் உணர்ந்தவன் நிமிர்ந்துப் பார்க்க, தேன்மலர் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தாள். தேவாவிற்கு முற்றிலும் காய்ச்சல் விட்டு மனம் புத்துணர்வோடு இருந்தாலும் உடல் சோர்வாகயிருந்தது. அவள் மடி மீது படுத்தவாறே அவள் முகம் பார்த்தவனுக்கு, நேற்று அவன் காய்ச்சலில் மயங்கியது தேன்மலர் தனக்கு கஞ்சி ஊட்டி மாத்திரைக் கொடுத்ததெல்லாம் நினைவு வந்தது. 

 

     அவள் முகத்தையே சிறிது நேரம் விழி அகலாமல் பார்த்தவன் பின் அவள் மடி மீதிருந்து எழுந்து அவளின் உறக்கம் கலையா வண்ணம் அவளைத் தூக்கி மெத்தையில் நன்றாகப் படுக்க வைத்தான். பின் அவளது முகத்தில் பிரண்ட முடி கற்றைகளைக் காதோரம் ஒதுக்கி, கள்ளமில்லா சிறு குழந்தையின் சாயலை அவளது முகத்தில் கண்டவனது இதழ்கள் வளைந்தது. 

 

     தேன்மலர் துயில் கலைந்து விழித்தவள், தேவாவை அவ்வளவு அருகில் கண்டுத் திடுக்கிட்டு தடுமாறி விழித்து “சா… சா.. சார்… நீ… நீ… நீங்க…” என்று கேட்டாள். 

 

    தேவா முகம் மலர இதழ் விரித்தவன் “ஹே பயப்படாத… தூங்கு…” என்று அவள் தலை வருடியவன், அவளது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்துவிட்டுச் செல்ல, தேன்மலர் அதிர்ந்து உறைந்தவள் அதன்பின் எங்கே தூங்குவது. அவனோ அறைவிட்டுச் செல்லும் முன் திரும்பிப் பார்த்துக் கண்ணடித்து விட்டுச் செல்ல, தேன்மலர் அடுத்த அதிர்ச்சி தாளாது உறைந்து சிலையென சமைந்து விட்டாள்.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்