Loading

அத்தியாயம்- 11

 

        நகரத்திற்குரியப் பரபரப்பு மெல்ல சோம்பல் முறித்து விழித்த விடியற்காலை வேளை, வேலைக்குக் போவோர் ஓரிருவர் தங்கள் கூடு விட்டு சாலையில் பரபரப்பாக வண்டியிலோ அல்லது நடந்தோ சென்றுக் கொண்டிருக்க, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்லூரி பேருந்தை நோக்கி எட்டு வைத்துக் கொண்டிருக்க, வாக்கிங் செல்வோர் செல்ல, இல்லத்தரசிகள் சிலர் வாசல் பெருக்கிக் கொண்டிருக்க, ஷிப்ட் முடிந்து வீடு திரும்பவர்களும் வந்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் லிங்கத்தின் ஆள் ஒருவன் தேன்மலர் ஒளிந்திருந்த அந்த புதர் மண்டியப் பகுதிக்குள் செல்ல, வாக்கிங் சென்றுக் கொண்டிருந்த வயதான ஆண்கள் இருவர் “ஏய்… யாருப்பா நீ… அங்க என்ன பண்ற…” என்று கேட்க, 

 

        ஒரு நொடி தடுமாறிய அவன் “இல்ல சார்… அது…” என்றிழுத்து சுண்டு விரலை உயர்த்தி காண்பிக்க, 

 

       அவர்கள் “அதுக்கு முன்னாடியே நின்று போக வேண்டியது தானே… நீ பாட்டுக்கு உள்ள போற…” என்று கேட்க, அவன் “இல்ல சார் போய்ட்டு போய்ட்றேன்… நீங்க போங்க…” என்கவும் அவனை நம்பாதப் பார்வைப் பார்த்தபடி அவர்கள் இருவரும் அங்கிருந்து அகல, அவன் இரண்டு நிமிடம் அங்குத் தேடிவிட்டு வேறுபக்கம் சென்றான். 

 

      அங்குத் தெரு விளக்கின் வெளிச்சம் சிறிதே விழுந்ததால், தன் கைப்பேசியின் ஒளியில் அங்குத் தேடினால் மற்றவர்களுக்கு அது சந்தேகத்தை வரவழைக்கக்கூடும் என்றெண்ணி அவன் ஒருமுறை புதர் மண்டிய அந்த இடத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றான். 

 

         லிங்கத்தின் ஆட்கள் அந்தக் குடியிருப்புப் பகுதி முழுவதும் ஒரு மணிநேரம் சுற்றி வந்தும் அவர்களுக்கு தேன்மலர் எங்குச் சென்றாள் என்ற சிறு தடயமும் கிடைக்கவில்லை. தேடித் தேடி ஓய்ந்தவர்கள் குடியிருப்புப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக விழித்தெழுவதைக் கண்டு அங்கு இனிமேலும் தேட வேண்டாமென்று முடிவு செய்து குடோனுக்கு வந்தனர். 

 

       குடோனுக்கு வந்ததும் லிங்கம் அங்கு தலையில் கை வைத்துக் குத்த வைத்திருந்த பச்சைக்கிளியிடம் “டேய் பச்சக்கிளி… அத்த பொண்ணு மெய்யாலுமே தானா தான் ஓடிப்போச்சா….” என்று கேட்க, பச்சைக்கிளி திருதிருவென்று விழித்தான். 

 

       ஏனெனில் அவன் சத்தம் கேட்டு அவர்கள் உள்ளே ஓடி வந்தபோது தேன்மலர் மயக்கமாக இருப்பதுபோல் நடித்து, ஏதோ சத்தம் கேட்டு அந்த அறைக்குப் போன தன்னையும் தன்னுடனிருந்தவனையும் அவள் வேண்டுமென்றே தாக்கிவிட்டு தப்பி ஓடியதாகக் கதை விட்டிருந்தான். இப்பொழுது லிங்கம் கேட்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் அவன் விழிக்க, அந்த நேரம் ஒரு உயர் ரக கார் ஒன்று குடோனுக்குள் நுழையவும் லிங்கம் அவனை முறைத்து விட்டு அதன் மீது தன் பார்வையைத் திருப்பினான். 

 

                காரிலிருந்து ஆர்யனும் ரகுவும் இறங்கி வர, ஆர்யனின் கோபமறிந்த லிங்கத்திற்கு உடல் வேர்க்க ஆரம்பித்து விட்டது.

 

         ரகு லிங்கத்திடம் “என்ன லிங்கம்… உள்ள ரூம்ல தானே வச்சுருக்கீங்க…” என்று கேட்க, 

 

லிங்கம் தயங்கி “அது சாரு…” என்றிழுக்க, 

 

ரகு புருவம் நெருக்கி “என்ன லிங்கம் இழுக்குற…. சொதப்பிட்டியா…” என்று கேட்க, லிங்கம் தலைக் குனிந்தான். 

 

        அதைக் கண்ட ஆர்யனுக்கு கட்டுக்கடங்காதக் கோபமேற, கண்கள் சிவக்க பல்லைக் கடித்துக் கொண்டு கடுமையானக் குரலில் “எப்டி தப்பிச்சா…” என்று கேட்டான். 

 

        ஆர்யனின் குரலிலிருந்தக் கடுமைக் கண்டு நிமிர்ந்து அவனை ஏறிட்ட லிங்கத்திற்கு வேர்த்துக் கொட்ட, எச்சிலைக் கூட்டி விழுங்கி “அது சாரு… மயங்குன மாறி நடிச்சு… நம்மாளுங்க ரெண்டு பேர அடிச்சு போட்டுட்டு தப்பிச்சுட்டா… நாங்களும் பின்னாடியே ஓடுனோம் ஆனா அவ எங்கப் போனானே தெரில…” என்றான். 

 

       ஆர்யன் கோபத்தில் சத்தமாக “போங்கடா… தடிமாடுகளா… ஒரு பொட்டச்சிய பத்ரமா பாத்துக்க துப்பில்ல… நாங்க தான் சொன்னோம்ல அவ ஆளு கொஞ்சம் மண்ட… ஜாக்கிரதயா இருங்கன்னு… கோட்ட விட்டுட்டு வந்து இதுல ஓடுனானுங்கலாம்… ஏன் அப்டியே நீங்களும் ஓடி எங்கயாவது ஒழிஞ்சு போயிருக்க வேண்டியது தானே… லிங்கம் உன்னை நம்புனதுக்கு…” என்று கத்தியின் பின் சிறிது கோபம் தணிந்து “இங்க பாரு லிங்கம்… இதுவரைக்கும் நீ நா குடுத்த வேலையெல்லாம் பக்காவா முடிச்சுருக்க… இதுல சொதப்புனதால நீ வேணாம்னு சொல்ல மாட்டேன்… கடைசி சான்ஸ் உனக்கு… என்ன வேணா பண்ணிக்கோ… ஆனா அவள கண்டுபுடிக்ற…” என்றுவிட்டு அவன் விறுவிறுவென்று உள்ளே அலுவலக அறைக்குச் சென்று விட்டான். 

 

        ரகு “லிங்கம் இந்த தடவ மிஸ்ஸாய்டாம பாத்துக்கோ… இல்லனா என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்…” என்று கூறி அவன் தோள் தட்ட, 

 

     லிங்கம் “சாரு… இந்த தடவ மிஸ்ஸாவாது… என் கைலயே டிமிக்கி குடுத்த அவள புடிக்காம எனக்கு வேற வேலையில்ல… அவள புடிச்சு உன் இடத்துக்கே இட்டாறேன் சாரே…” என்று உறுதியோடு கண்களில் அனல் தெறிக்கக் கூற, ரகு சிறிதாக இதழ் விரித்து அவனையும் அவன் ஆட்களையும் பார்த்துவிட்டு உள்ளேச் சென்றான். 

 

        ரகு சென்றதும் லிங்கம் திரும்பி பச்சைக்கிளியை முறைத்து ஓங்கி ஒரு அறை விட்டு “டோமரு… மரியாதையா மெய்ய சொல்லு… அத்த புள்ளயாதான் ஓடுச்சா… சரி இன்னா ***க்குடா நீயும் அவனும் அந்த ரூமுக்கு போனிங்க… நாந்தான் என்னை தவர வேற யாரும் அந்தப்பக்கம் போவாதிங்கன்னேல்ல… அப்றம் இன்னாத்துக்குடா அங்க போனீங்க…” என்று கேட்டான். 

 

        பச்சைக்கிளிக்கு வாங்கிய அறையில் கண்முன் பூச்சிப் பறக்க, காது கேட்கும் திறனை இரண்டு நொடி இழக்க, கன்னத்தில் கை வைத்தவாறு பீதியோடு லிங்கத்தைப் பார்த்தவன், லிங்கம் கேட்ட கேள்வியில் நடுக்கம் கொண்டாலும் குரல் பிசிறு தட்டாமல் “அதான் சொன்னேன்ல அண்ணாத்த… ஏதோ சத்தம் கேட்டுச்சு…” என்று கூறும்போதே, 

 

      லிங்கம் நாலு நல்ல வார்த்தைகளால் அவன் காதைக் கருக்கியவன் “என்கிட்டயே சுத்துறியா நீ… மரியாதையா சொல்றா…” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே ரகு அவனுக்கு அழைத்து அவனை உள்ளே வரும்படி கூறவும், “உள்ள போய்ட்டு வர வரலயும் தான் உனக்கு டையம்…” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு உள்ளேச் சென்றான்.

 

           லிங்கம் உள்ளேச் சென்ற இருபது நிமிடங்களில் வெளி வந்தவன் கண்கள் ஆதவன் உதிக்கும் அந்த அதிகாலை வானத்தோடுப் போட்டிப் போட்டுக் கொண்டு செவ்வண்ணமாய் சிவந்திருக்க, வந்த வேகத்தில் திரும்பி நின்று மற்றொருவனோடுப் பேசிக் கொண்டிருந்த பச்சைக்கிளியை பின்னிருந்துக் காலால் ஓங்கி எத்த, அவன் குப்புற விழுந்து திரும்பி ருத்தரமூர்த்தியாய் நின்றிருக்கும் லிங்கத்தை பயத்தோடுப் பார்க்க, லிங்கம் அவனை நாலு மிதி மிதித்து “ஏன்டா… என்கிட்ட டபாய்கிறியா நீ… என்னடா சறுக்கிறுச்சேன்னு மண்ட காஞ்சு போய் கெடந்தா… அதுக்கு காரணம் நீ தானா… இந்த தொழில்ல இருந்தாலும் பொம்பள விஷயத்துல என்னை அப்டி இப்டி சொல்ல முடியாது… காசுக்கு போனா கூட பொம்பளைக்கு விருப்பமில்லனா தொடக்க கூடாதுன்னு நினக்கிற ஆளு நானு…. என் பசங்களும் என்னை மாதிரியே தான்… ஆனா நீ மட்டும் எப்ட்றா இப்டி… ச்சீ… ராஜா காலத்துலேர்ந்தே பொம்பளய தொட்டு அழிஞ்சவனுங்க பல பேரு… கத்தி எடுத்தவன் கத்தியாலயே அழிஞ்சா பரவால்ல… ஆனா நீ… நாயே… என் பேர கெடுக்கன்னே வந்து சேந்தியாடா…” என்று அவனை எட்டி மிதித்தவன், “டேய் இவன நம்ம இடத்துக்குக் கொண்டு போங்கடா… பொம்பள சொகம் புடிச்சு அலையுறான்ல… சொர்க்கத்துல ரம்பா ஊர்வசி கூட போய் டான்ஸாடட்டும்… நம்ம பசங்க அங்க இவன வழியனுப்பி வைக்க ரெடியா இருக்கானுங்க…” என்று மற்றவர்களுக்குக் கட்டளையிட்டு அவன் மூஞ்சியிலேயே மிதித்து விட்டு திரும்பினான். 

 

        பச்சைக்கிளி மரண பயம் விழிகளில் வழிய “அண்ணாத்த… மன்னிச்சுரு அண்ணாத்த… ஏதோ புத்திகெட்டு போய் பண்ணிட்டேன்… அண்ணாத்த இந்த ஒரு தடவ மன்னிச்சுரு அண்ணாத்த… என் பொண்டாட்டி புள்ளயெல்லாம் நடுத் தெருவுல நிக்கும்…” என்று அவன் காலைக் கட்டிக் கொண்டு கதறினான். 

 

        லிங்கம் அவனை உதறிவிட்டு ஓங்கி அறைந்து “ஏன்டா…” என்று சில கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து “அத்த புள்ளய அப்டி பாக்றப்ப உன் பொண்டாட்டி புள்ள ஞாபகம் வரலயோ… நீ போ… உன் குடும்பம் நட்டாத்துல நிக்காது… நம்மள்ள யார் செத்தாலும் என்ன பண்ணுவோமோ அது சரியா உன் குடும்பத்துக்கு போய் சேரும்… அதனால நீ சமத்தா சொர்க்கம் போய் ஜாலியா இரு… டேய் தூக்கிட்டு போங்கடா…” என்று கூற, 

 

       பச்சைக்கிளி “அண்ணாத்த… வேணா அண்ணாத்த… இனிமே அப்டி நடந்துக்க மாட்டேன் அண்ணாத்த… உட்ரு அண்ணாத்த…” என்று கதறிய கதறலெல்லாம் காற்றில் கரைய, லிங்கம் திரும்பியும் பாராமல் உள்ளேச் சென்றுவிட, அவனை லிங்கத்தின் ஆட்கள் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு அவர்களின் இடம் நோக்கிப் பறந்தனர்.

 

                      லிங்கத்தை ரகு ஏன் அழைத்தான்? லிங்கம் ஏன் பச்சைக்கிளியை கொலை செய்ய கூறினான்? உள்ளே என்ன நடந்தது? பார்த்துவிட்டு வருவோமா…

 

                    ரகு லிங்கத்திடம் பேசிவிட்டு உள்ளேச் செல்ல, ஆர்யன் அலுவலக அறையிலிருந்த லேப்டாப்பில் ஏதோ பார்த்துவிட்டு கோவைப் பழமாய் சிவந்தவன் பின் இதழ்களில் மென்னகையைப் படர விட்டான். அவனைக் கவனித்துக் கொண்டே வந்த ரகு அப்படி என்ன பார்க்கிறான் என்ற யோசனையோடு குறுநகைப் புரிந்து “என்னடா… தானா சிரிச்சுட்ருக்க…” என்று கேட்க, ஆர்யன் புன்னகையோடு லேப்டாப்பை அவன்புறம் திருப்ப, ரகுவும் அதைப் பார்த்துவிட்டு ஆர்யனை கண்டுப் புன்னகைத்தான். 

 

        ஆர்யன் “இப்ப தான்டா எக்ஸைட்டடா இருக்கு… எதிரி பலமாயிருக்றதும் ஒரு கிக் தான் இல்ல… மூளைக்கு இனிமே ஓவர் டைம் குடுக்கனும்… இப்பதான் டா ரொம்ப ஆக்டிவ்வா ஃபீல் பண்றேன்… ஆனா சும்மா சொல்லக் கூடாதுடா செம பொண்ணு இவ…” என்றான். 

 

       ரகுவும் புன்னகையுடன் “ஆமாண்டா… செம போல்ட்… என்னா அடி அவனுக்கு… அவ கண்ல ஒரு ஃபயர் இருக்கு மச்சான்… நாம இனிதான் கேர்புல்லா இருக்கணும்… நீயும் இனி கோவத்தக் குறச்சுட்டு நிதானமா இருக்க பாரு…” என்றான். 

 

         ஆர்யன் அவனை சந்தேகத்தோடு பார்த்து “மகாமுனிவரே தாங்களா பேசியது… அதுவும் ஒரு பொண்ண பத்தி…” என்று கேட்க, 

 

       ரகு “டேய் டேய் ரொம்ப யோசிக்காத… அந்த பொண்ணோட தைரியமும் நமக்கே தன்னிக்காட்ற தில்லும் புத்திசாலித்தனமும் புடிச்சுருந்துது பாராட்னேன்… நீ நினக்கிற மாறி இல்ல… உனக்கே தெரியும் எங்க வீட்ல பாக்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஸ்ட்ராங்கா இருக்கேன்னு… அப்றம் ஏன் இந்த கேள்வி….” என்றான். 

 

       ஆர்யன் “அதானே பாத்தேன்… அந்த விஸ்வாமித்ரர் தவத்த கூட மேனகை கலச்சா… இந்த விஸ்வாமித்ரராவது தவம் கலையரதாவது… சரி லிங்கத்த கூப்டு…” என்றான். 

 

       அதன்பிறகு ரகு சிறு சிரிப்புடன் லிங்கத்தை அங்கு வரச் சொல்ல, லிங்கம் வந்தவுடன் அவனுக்கும் லேப்டாப்பிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் காட்ட, அதைக் கண்டவுடன் ஆத்திரம் கொண்ட லிங்கம் “சாரு மன்னிச்சுருங்க… அந்த பொண்ண கண்டு புடுச்சுட்டுதான் எனக்கு மறு வேல… அதுக்கு முன்னாடி அந்த நாதாரிய…” என்று பல்லைக் கடிக்க, 

 

      ஆர்யன் “லிங்கம் நீ அவன என்ன வேணா பண்ணு… நா கேக்க போறதில்ல… எனக்கு அந்த பொண்ண மட்டும் கண்டுபுடிச்சு குடுத்துரு… அப்றம் மண்டை உடைஞ்சவன் எங்கயிருக்கான்…” என்று கேட்டான். 

 

        லிங்கம் “அவன நம்மாளுங்க ரெண்டு பேரு ஆஸ்பத்திரிக்கு இட்னு போயிருக்கானுங்க…” என்று கூற, ஆர்யன் ரகுவை பார்க்க, 

 

      ரகு தன் பையிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய்க் கட்டுகளை எடுத்து லிங்கத்திடம் கொடுத்து “இதுல அவனோட ஹாஸ்பிட்டல் செலவுக்கும் உன் செலவுக்கும் பணமிருக்கு… இன்னும் வேணும்னாலும் தரேன்… ஆனா வேல பக்காவா முடியணும்…” என்றான். 

 

       லிங்கம் பணத்தை வாங்கிக் கொண்டு “சாரு… இது போதும்… மிச்சத்த வேலய முடிச்சுட்டு வாங்கிக்றேன்…” என்றுவிட்டு அறையிலிருந்து கோபமாக வெளியேறினான். அதன்பின் நடந்ததையெல்லாம் முன்பே பார்த்தோம்.

 

                   ஆர்யனும் ரகுவும் தேன்மலரை கடத்தி வைத்திருந்த அறைக்குச் சென்று அங்கு அவள் உடைத்த பூ ஜாடியையும் அவளின் கிழிந்த துப்பட்டாவையும் கண்டு ஒருவரையொருவர் அர்த்தமாகப் பார்த்துக் கொண்டனர். 

 

       பின் ஆர்யன் தேன்மலரின் கிழிந்த துப்பட்டாவை கையில் சுருட்ட, ரகு “ஏன்டா அத எடுக்குற…” என்று கேட்க, 

 

        ஆர்யன் மென்னகையோடு “இத பாக்கும்போதெல்லாம்… நம்ம வேலைய எவ்ளோ சீக்ரம் முடிக்கணும்ன்ற ஞாபகம் வரும்… அதுவுமில்லாம நாம எவ்ளோ புத்திசாலித்தனமா வேகமா செயல்படுனும்னு இது சொல்லும்…” என்று கூற, 

 

         ரகு அவனை ஒரு தினுசாகப் பார்த்து “நீ அதுக்கு மட்டும் எடுத்த மாறி தெரில…” என்று கூற, ஆர்யன் மர்மப் புன்னகைப் புரிந்தான். 

 

         ரகு “ஆர்யா… ஏற்கனவே அந்த ஜே பேச்ச கேட்டு பெரிய ரிஸ்க்ல மாட்டிருக்கோம்… அவனையும் முழுசா நம்ப முடில… நீ வேற எதாவது கிறுக்குத் தனமா பண்ணி வைக்காத…” என்று எச்சரிக்க, 

 

       ஆர்யன் சிரித்து “அவ்ளோ தூரம் போக விட மாட்டேன் டா… அப்றம் ஜே அவனுக்கு ஒரு ஸ்பை ஏற்பாடு பண்ணு… அப்ப தான் நாம ஸேஃபா இருக்க முடியும்…” என்று கூற, ரகு சிறு தலையசைப்புடன் “ஏதோ சொல்ற… சரி…” என்றான். 

 

       பின் ஆர்யனும் ரகுவும் அங்கிருந்துக் கிளம்பி சென்னையிலுள்ள அவர்களின் பண்ணை வீட்டிற்கு வந்தனர். ஆர்யன் குளித்துத் தயாராகி தனக்குப் பார்த்திருக்கும் பெண்ணைக் காணச் செல்ல, ரகு தன் லேப்டாப்பில் அலுவலக வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். மயங்கி விழுந்த தேன்மலர் என்ன ஆனாளென்று பார்ப்போம் வாருங்கள்.

 

                       தேன்மலருக்கு ஒருமுறை மயக்கம் தெளிந்துக் கண் விழிக்க, தன்னை கடத்தியது அதன்பின் நடந்தது தான் மயங்கியதெல்லாம் நினைவு வர, தேன்மலர் தன் கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டு பதறியடித்து எழுந்தமர, அவளருகில் நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்த வாலிபன் ஒருவன் தேன்மலரின் பதட்டம் கண்டு “ஹே… ரிலாக்ஸ்…” என்று கூற, தேன்மலர் அதைக் காதில் வாங்காமல் வேகமாகக் கட்டிலிலிருந்து எழ முயற்சித்ததில் மீண்டும் அவளுக்கு மயக்கம் வர, அவ்வாலிபன் அவள் கண்கள் சுழல்வதைக் கண்டு அவளின் தோள் பற்றி “ஹேய் கூல்… ஒன்னுல்ல… நீ பத்ரமா இருக்க… ரிலாக்ஸ்…” என்று கூற, தேன்மலர் மெல்ல பதற்றம் விடுத்து மீண்டும் மயக்க நிலையில் ஆழ்ந்தாள். 

 

           இருள் கவிழும் வேளை தேன்மலர் முழுதாக மயக்கம் தெளிந்துக் கண் விழித்தவள், மெல்ல தான் இருக்கும் அறையைச் சுற்றி பார்வையை சுழல விட்டாள். அந்த அறையின் சுவர் முழுவதும் இருபத்தி மூன்று வயதுடைய அழகான யுவதி விதவிதமான போஸ்களில் சிரித்துக் கொண்டிருக்கும் படங்கள் நிறைந்திருந்தது. சில படங்களில் சற்று முன்பு அவள் பார்த்த இளைஞனும் அவளோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான். அவ்வறை நிறைய அலங்காரப் பொருட்களாலும் கைவினைப் பொருட்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. தேன்மலர் மெல்ல படுக்கையை விட்டெழுந்து அவ்வறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தவள், அந்த இளைஞனும் யுவதியும் ஒன்றாகயிருக்கும் பெரியப் படத்தின் முன் வந்து நின்றவள் அதையே இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ அந்த யுவதியைப் பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்குப் பிடித்துவிட, மெல்ல அவளின் புகைப்படத்தை வருடியவள் நெஞ்சம் ஏனோ திடீரென வருத்தம் கொண்டது. அவள் ஏனென்று புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும்போதே வெளியே யாரோ இருவர் பேசும் அரவம் கேட்க, மெல்ல அந்த அறையைத் திறந்துக் கொண்டு வெளி வந்தாள். 

 

        அங்கு ஸோஃபாவில் தன்னிடம் பேசிய இளைஞன் ஒரு பெண்ணோடு அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தான். தேன்மலர் இப்போதுதான் அந்த இளைஞனை நன்றாகப் பார்த்தாள். மாநிறத்தைவிட சற்றுத் தூக்கலான நிறம், அலைஅலையான கேசம், பரந்த நெற்றி, அழகான கண்கள் ஆனால் அதில் அளவுக்கதிகமான சோகமும் சிறிது கோபமும் இழைந்தாடியது, ஆனால் கண்கள் காட்டும் உணர்ச்சிகளுக்கு நேரெதிராக இதழ்கள் புன்னகை சூடியிருந்தது, அளவான மீசை, சில நாட்களாக திருத்தப்படாத தாடி கன்னங்களின் பாதியை மறைத்துக் கொண்டிருந்தாலும் ஒழுங்காக பராமரிக்கப் பட்டிருந்தது. அவன் சிறிதாக இதழ் விரித்தாலும் ஏனோ பார்த்துக் கொண்டேயிருக்கலாமென்று தோன்றுமளவு வசீகரமாய் இருந்தது. ஆள் ஆறடிக்கு சற்று அதிகமான உயரம், கட்டுக்கோப்பான உடல், அவன் அணிந்திருந்த டீ ஷர்ட்டும் ஷார்ட்ஸும் கச்சிதமாக அவனுக்கு பொருந்தியிருக்க, மொத்தத்தில் அவன் தேன்மலருக்கு நவீன இளைஞனாக தெரிந்தான். 

 

        அவனோடுப் பேசிக் கொண்டிருந்த பெண் பச்சை நரம்புகள் தெரியுமளவு சிவந்த நிறம், நல்ல அழகி, தலையில் துப்பட்டாவால் முக்காடிட்டிருந்தாள். அவன் அவளிடம் “அப்றம் டேட் பிக்ஸ் பண்ணியாச்சா…” என்று கேட்பதைப் பார்த்தால் அப்பெண்ணிற்கு திருமணம் நிச்சயமாகியிருக்க வேண்டும். அவள் ஒரு தேதியைக் சொல்லி ஒன்றரை மாதத்தில் திருமணம் என்று கூற அவன் அவளுக்கு கைக் குலுக்கி வாழ்த்துக் கூறினான். அவன் வாழ்த்துக் கூறும்போது அப்பெண்ணின் கண்களில் ஏனோ ஏக்கம் சோகமெல்லாம் ஒரு நொடி வந்து மறைய பின் புன்னகையோடு அவன் வாழ்த்தை ஏற்றுக் கொண்டாள். அப்பெண் புன்னகையோடு திரும்பி தேன்மலர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளிடம் எழுந்த வந்தாள்.

 

                    அவள் புன்னகைக்கவும் தேன்மலரும் புன்னகைத்தாள். அவள் “எழுந்துட்டீங்களா… இப்போ எப்டியிருக்கு… திரும்ப மயக்கம் வருதா…” என்று கேட்க, 

 

       தேன்மலர் “இல்ல… இப்ப பரவால்ல… லைட்டா க்ரிடனஸ் தான் இருக்கு…” என்று கூறி அவளை நீ யார் என்பதுபோல் பார்த்தாள். 

 

         அதைப் புரிந்துக் கொண்ட அப்பெண் சிரித்து “அப்டி தான் இருக்கும்… கொஞ்ச நேரத்துல சரியாயிடும்… அப்றம் நா யாருன்னு உங்களுக்கு குழப்பமாயிருக்கலாம்… நா அமீரா… அமீரா பேகம் கைனகாலஜிஸ்ட்…” என்று கூறி கை நீட்ட, 

 

       தேன்மலர் அவளிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்ற யோசனையோடு கைக் கொடுத்தவள் “ஹாய்…” என்று சிறிதாக இதழ் விரித்தாள். 

 

         அமீரா புன்னகை மாறாமல் “ஹே என்னபா… நா ரௌடியுமில்ல கடத்தல்காரியுமில்ல… நீங்க தாராளமா உங்க பேர சொல்லலாம்…” என்று கூற, 

 

     தேன்மலர் இதழ் விரித்து “தேன்மலர்… இல்ல நா கைல வச்சுருந்த….” என்றிழுக்க, அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் அவனின் ஷார்ட்ஸ் பையிலிருந்து அவளது சாவியை எடுத்துக் கொடுக்க, அதைக் கண்கள் மின்ன வாங்கி பத்திரப் படுத்திக் கொண்ட தேன்மலர் கேள்வியாக அவ்விளைஞனைப் பார்த்தாள். 

 

       அதைக் கவனித்த அமீரா புன்னகையோடு அவனிடம் சென்று அவன் தோள்மீது கைப்போட்டு “ஹ்ம்ம்… இவன் தேவா… தேவரசன்… என் பெஸ்ட் ப்ரண்ட்… இவந்தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தான்…” என்று கூற, 

 

        தேன்மலர்‌ “ஓஓ… தேங்க்ஸ் சார்…” என்று கூறி புன்னகைக்க, அவன் அவளைத் தீர்க்கமாகப் பார்த்து விட்டு எதுவும் கூறாமல் தன் கைப்பேசியில் ஏதோ ஆராய ஆரம்பித்தான். 

 

       தேன்மலருக்கு அவன் பேசாதது ஏனோ சிறிது ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமீராவை பார்த்துப் புன்னகைத்தாள். 

 

       அமீரா மென்னகையோடுக் கண்கள் சுருக்கி “சாரி மலர்… அவன் கலகலப்பான ஆள்தான்… கொஞ்ச நாளா தான் இப்டி இருக்கான்… நீ எதுவும் தப்பா எடுத்துக்காத…” என்று கூற, 

 

        தேன்மலர் “ச்ச ச்ச… நா ஏன் தப்பா எடுத்துக்க போறேன்… அவரு என்னை எவ்ளோ பெரிய சிட்சுவேஷன்லேர்ந்து காப்பாத்திருக்காரு… பரவால்ல… மீரா… நா மீரான்னு கூப்ட்லால…” என்று கேட்க, தேவா அவளை சட்டென்று நிமிர்ந்துப் பார்க்க, அமீராவும் அவளை ஆச்சர்யமாக விழி விரித்துப் பார்த்தாள். 

 

       தேன்மலர் ஏனென்று புரியாமல் வித்தியாசமாக அவர்களைப் பார்த்து தயங்கி “நா எதாவது தப்பா சொல்லிட்டனா…” என்று கேட்க, 

 

       அமீரா இதழ் விரித்து முகம் மலர்ந்து “ஹேய் மலர்… அப்டிலாயில்ல… தேவா மட்டும் தான் என்னை மீரான்னு கூப்டுவான்… எங்க வீட்ல, மத்தவங்களுக்கெல்லாம் நா அமீ தான்… நீ மீரான்னு சொல்லவும் ஸ்வீட் ஷாக்… அதான் வேற ஒன்னுமில்ல… அச்சோ இப்பவே எனக்கு உன்னை ரொம்ப புடிச்சுருச்சு… பட் பேச தான் நேரமில்ல… இன்னும் அஞ்சு நிமிஷத்துல நா வீட்டுக்கு போகலனா… அத்தா பார்வையாலே எரிச்சுருவாரு… அத்தா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்… நா நாளைக்கு வரேன்… நிறைய பேசலாம்… இப்போ பை… தேவா கிட்ட விட்டமின் டேப்லட்ஸ் குடுத்துருக்கேன் சாப்ட்டு மறக்காம போட்டுக்கோ… பை மலர்…” என்று படபடவென்று பேசிவிட்டு தேன்மலரின் கன்னம் தட்டி செல்ல, 

 

      தேன்மலர் “ஆனா மீரா… என்னால தங்க முடியாது… நா கிளம்பணும்… வேலயிருக்கு…” என்று கூற, 

 

       அமீரா திரும்பி குறுநகையோடு “நோ வே… நீ வீக்கா இருக்க… இப்ப சேந்தாப்ல பத்தடி எடுத்து வச்சனா மறுபடியும் மயங்கி தான் விழுவ… அதுவுமில்லாம தேவா உனக்கு ஏதோ ஆபத்திருக்றதா சொன்னான்… அவன் உன்னை போக விட்டா நீ தாரளமா போகலாம்… அப்ப பை மலர்… ஸீ யூ டுமாரோ…” என்றவாறு அமீரா அவ்வீட்டை விட்டு வெளியேறினாள்.

 

                     அமீரா சொன்னதில் தேன்மலர் குழம்பி தவித்து திரும்ப தேவா அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். தேன்மலர் தயங்கியவாறு “சார்… நீங்க என்னை காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ்… உதவி செஞ்சவங்கள்ட்ட இப்டி பேசறது தப்பு தான்… என்னை சுத்தி ஆபத்தில்லாமயிருந்தா எனக்கு உங்களுக்கு நன்றி செலுத்திருப்பேன்… இப்போ நன்றின்ற வார்த்தைய தவர வேறெதுவும் சொல்ல முடியாத நெலைமையில இருக்கேன்… நா கிளம்பறேன் சார்…” என்றாள். 

 

       அவளைத் தீர்க்கமாகப் பார்த்த தேவா “மேடம் பேசி முடுச்சுட்டீங்களா… இப்போ நீ வெளில போனா மறுபடியும் உன்னை தொரத்துன ஆளுங்கள்ட்ட கண்டிப்பா மாட்டிப்ப…” என்று கூற, தேன்மலர் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். 

 

       தேவா “என்ன பாக்ற… உன்னை தொரத்துனுவனுங்க சாதாரண ஆளுங்க இல்ல… அவனுங்க நாராயணசாமி ஆளுங்க… நீ ஒரு குடோன்லேர்ந்து ஓடி வந்தியே… அது அவனோடதுதான்…” என்று கூற, 

 

     தேன்மலர் குழம்பி “என்ன சொல்றீங்க… அது நாராயணசாமியோடதா… அது யாரு…” என்று கேட்டாள். 

 

       தேவா கேள்வியாக “அப்ப உன்னை கடத்துனதே யார்னு உனக்கு தெரியாதா… நாராயணசாமி சிட்டில பெரிய பார்மசுட்டிக்கல் டீலர்… அவன்கிட்ட போரூர்ல இருக்கற மாறி சிட்டில ஆறேழு இடத்துல குடோன் இருக்கு… நிறைய பார்மசுட்டிக்கல் கம்பெனிஸோட அவனுக்கு டீலிங் இருக்கு…” என்றான். 

 

        தேன்மலர் குழப்பமாக சிறிது யோசித்தவள் “என்ன சொல்றீங்க… அவ்ளோ பெரிய டீலரோட குடோன்னா… அந்த ஏரியாக்கு சப்ளை பண்ணனுனா அவர் டீலிங் வச்சுருக்ற எல்லா கம்பெனிஸோட மருந்தும் அங்க இருக்கனுல்ல… ஆனா அங்க ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸோடது மட்டும் தான் இருந்தது…” என்று கூற, இப்பொழுது தேவா முகத்தில் குழப்பமான சிந்தனை ரேகைகள். 

 

       இதைக் கூறிய தேன்மலர் ஒருகணம் திடுக்கிட்டு தன்னை காப்பாற்றியவனாக இருந்தாலும் அவனிடம் நாம் ஏன் இதெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறோமென்று யோசித்தவள் “எதுவா இருந்தாலும் பரவால்ல சார்… என்னை நா பாத்துக்கறேன்… நா கெளம்பறேன்…” என்று செல்ல எத்தனிக்க, 

 

       தேவா அவள் கைப்பற்றி தடுத்து “இங்க பாரு நீ என்னை நம்பலன்னு நல்லா தெரியுது… நீ என்னை நம்பிருந்தா தான் கோவப்பட்ருப்பேன்… குட்… ஓகே நீ என்னை நம்பலனாலும் நீ இப்ப வெளிய போக முடியாது… நா உன்னை போக விடமாட்டேன்… நாராயணசாமி ஆளுங்க உன்னை சிட்டி புல்லா தேட்றதா எனக்கு தெரிஞ்ச ஸோர்ஸ்லேர்ந்து இன்பர்மேஷன் கிடச்சுது… ஸோ நீயா உள்ள போனா நல்லது… இல்லனா நா உன்னை தூக்கிட்டு போக வேண்டி வரும்…” என்றான். 

 

      அதைக் கேட்ட தேன்மலர் அதிர்ந்து வெடுக்கென்று தன் கையை அவனிடமிருந்து இழுத்துக் கொண்டு அவனை முறைத்தவள் “தூக்குவானாம்ல… அதுவரைக்கும் நாங்க என்ன புளியங்கா பறிப்போமாக்கும்… மூஞ்சிய பாரு..” என்று வாய்க்குள் முணுமுணுக்க, 

 

      தேவா அவள் செய்கையில் இதழோரம் புன்னகையை வெளிக் காட்டியவன் “நீ புளியங்காய் பறிப்பியோ இல்ல பொடலங்கா பறிப்பியோ… நீ உள்ள போகலனா நா தூக்கிட்டு போவேன்…” என்று கூற, 

 

      தேன்மலர் அவனை முறைத்து விட்டு “போய் தொலைக்றேன் வேற வழி…” என்றவாறு வேகமாகச் சென்று ஸோஃபாவில் அமர்ந்து அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

 

              தேவா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அருகே இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து நீரை அருந்தியவன் “ஆமா… நீ அந்த எப் டி ஏ ஆபிஸர் பொண்ணு தானே…” என்று கேள்வியாய் அவளை நோக்க, 

 

       தேன்மலர் அவனை முறைத்துக் கொண்டே “ஆமா… டிவில பாத்திங்களோ… அத எல்லாரும் மறந்துட்டாங்க உங்களுக்கு மட்டும் எப்டி ஞாபகமிருக்கு?” என்று கேட்க, 

 

       தேவா “முதல்ல எங்கயோ உன்னை பாத்த மாறிதான் தோனுச்சு… அப்றம் டவுட்டா தான் கூகிள் சேர்ச் பண்ணேன்… அப்றம் நீதான் அந்த பொண்ணுன்னு கன்பார்ம் ஆச்சு… உன்னை ஏன் அந்த நாராயணசாமி ஆளுங்க கடத்துனாங்க…” என்று கேட்டான். 

 

          தேன்மலர் “என்னையே கேக்றீங்களே… நீங்க ஏன் அங்க வந்தீங்க? என்ன ஏன் காப்பாத்துனீங்க?” என்று கேட்டுவிட்டு அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். 

 

         அவளைக் கூர்மையாகப் பார்த்த தேவா “அது எனக்கும் நாரயணசாமிக்கும் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு… நா இன்னிக்கு அநாதையா நிக்கிறன்னா அதுக்கு அவந்தான் காரணம்…” என்றவன் கண்கள் கோபத்தில் சிவந்தது. 

 

        பின் நிதானித்து “அவன் குடோன்ல சில இல்லீகல் அக்டிவிட்டீஸ் நடக்றதா கேள்விப்பட்டேன்… அதான் அங்க வந்தேன்… அப்பதான் அவங்க உன்னை உள்ள தூக்கிட்டு போறத பாத்தேன்… உன்னை எப்டியாவது காப்பத்தனுனு யோசிச்சு உள்ள வர வழி தேடிட்டுருந்தப்ப தான் நீ உள்ளேர்ந்து ஓடி வந்த… அவனுங்களும் உன்னை தொரத்துனானுங்க… நா உன்னை ஃபாலோ பண்ணி வந்தா நீ ஒளிஞ்சிருந்த இடத்துகிட்ட ஒருத்தன் வர்ரத பாத்து உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்… எங்க என்னை பாத்து நீ கத்திருவியோன்னு நினச்சு உன் வாயப் பொத்துனா… நீ என்ன பாத்து மயக்கம் போட்டுட்ட… உன்னை எழுப்பி எழுப்பி பாத்தா நீ எழுந்திரிக்கல… நல்ல வேளை அங்க வாக்கிங் போனவங்க அவன கேள்வி கேக்கவும் அவன் போய்ட்டான்… அப்றம் நா உன்னை அங்கயே யாருக்கும் தெரியாம படுக்க வச்சுட்டு… ரெண்டு தெரு தள்ளியிருந்த என் கார எடுத்துட்டு வந்து உன்னை யாரும் பாக்ற முன்னாடி கார்ல் ஏத்தி இங்க கூட்டிட்டு வந்துட்டேன்… வீட்டுக்கு வந்தும் நீ மயக்கம் தெளியல… அதான் என் ப்ரெண்ட் அமீராவ கூப்ட்டு உன்னை செக் பண்ண சொன்னேன்… அவதான் சொன்னா நீ அனெஸ்தீஷியா ஸ்மெல் பண்ணிற்கலான்னு… அதுவுமில்லாம சாப்டாம வேற இருந்துருக்க… அதான் ட்ரிப்ஸ் போட்டுவிட்டு என்னை ரீமூவ் பண்ண சொல்லிட்டு அவ ஹாஸ்பிட்டல் போய்ட்டா… இதான் நடந்தது… இப்ப தெரிஞ்சுருச்சா நா ஏன் அங்க வந்தேன்… உன்னை காப்பாத்துனேன்னு…” என்றான். 

 

          தேன்மலர் குழப்பத்தோடு இவனிடம் கூறலாமா வேண்டாமா என்று யோசனையோடு அவனைப் பார்த்தவள் அவன் கண்களில் பொய்யில்லாததுக் கண்டு சற்று நிம்மதியுற்று “சரி நா சொல்றேன்…” என்று கூறி தன்னைப் பற்றியும் வேலாயிக்கு அடிப்பட்டதிலிருந்து தான் கடத்தப்பட்டது வரை அனைத்தையும் கூறி முடித்தாள். 

 

         அதைக் கேட்ட தேவா “நீயும் என்னை மாறி தானா…” என்று வேதனைக் குரலில் கூற, தேன்மலர் அவன் கண்கள் கலங்கி முகம் வேதனைக் கொண்டிருப்பதைக் கண்டு அவளும் வருத்தத்தோடு அவனை ஏறிட, 

 

        தேவா “அப்பா அம்மாவ ஆக்ஸிடென்ட்ல பறிகுடுத்த ஈரம் காயறத்துக்குள்ள… என் ஒரே தங்கச்சி என் பெஸ்ட் ப்ரண்ட்… அவளயும்…” என்று கூறி நிறுத்த, தேன்மலர் “சார்… எனக்கு புரியுது… இதுக்குமேல நீங்க எதுவும் சொல்ல வேணாம்… ஃபீல் பண்ணாதீங்க ப்ளீஸ்…” என்றாள். 

 

      தேவா கண்கள் மூடி சில நொடிகளில் தன்னை நிதானித்தவன் “ஆமா மலர்… நீ அங்க வெறும் ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ் மருந்து இருக்கறதா சொன்னியே… நல்லா தெரியுமா… சரியா பாத்தியா…” என்று கேட்க, 

 

     தேன்மலர் “ஸ்யூரா தெரியும் சார்… ஏன் சார் எதுவும் பிரச்சனையா…” என்று கேட்க, தேவா சிறிது யோசனைக்குப் பின் “ஆமா மலர்…” என்றான். 

 

   தேன்மலர் “என்ன சார்…” என்று கேட்க, 

 

     தேவா “அதுக்கு நீ பர்ஸ்ட் நாராயணசாமி பத்தித் தெரிஞ்சுக்கணும்… அப்றம் தான் உனக்கு எதாவது க்ளு கெடைக்கும்…” என்று கூற, தேன்மலர் கேள்வியாக அவனைப் பார்த்து சிறிது யோசனைக்குப் பின் “சரிங்க சார் சொல்லுங்க…” என்றதும் தேவா நாராயணசாமியைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்.

தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்