
அடையாறு…
சென்னை மாநகரின் பிரதான நகரங்களுள் ஒன்று.
அந்த நகரத்தின் ஒரு தெரு அமைதியாய் இருக்க ஒரு வீட்டில் இருந்து மட்டும் ஒலி கேட்டு கொண்டே இருந்தது.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனால் அங்கே சுற்றி தோட்டத்து செடிகள். அதன் நடுவில் சிக்கனமாக அதே சமயம் பாந்தமாக கட்டப்பட்டு இருந்தது அந்த வீடு
கீழே படர்ந்து இருந்த நித்திய மல்லி கொடி மாடி வரை தன் கிளைகளை விரித்து இருந்தது.
அந்த மல்லியின் வாசனையை ஆழ்ந்து ரசித்து கொண்டே தன் தேன் குரலால் காற்றை ஆசிர்வதித்து கொண்டு இருந்தாள் அவள்.
இசையரசி!
பெயருக்கு ஏற்றாற் போல இசையின் அரசியாக காற்றை தன் இனிய ஓசையால் ஆக்கிரமித்து இருந்தாள்.
யமுனை ஆற்றிலே
ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் பாட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ என்று அவள் தாளகதியில் பாடி கொண்டு இருக்க
அபஸ்வரமாய் ஒலித்து கொண்டு இருந்தது காரின் ஹாரன் ஒலி.
அதுவரை பாடலின் வரிகளில் லயித்து பாடி கொண்டு இருந்த இசையரசி, விடாது ஒலித்த அந்த ஒலியில் இமைகளை திறந்தாள்.
முகத்தில் சின்னதாய் ஒரு எரிச்சல் வந்து அமர்ந்தது.
“டேய் பார்த்தி யாருனு பாருடா” என்றாள் அவள் பாட்டு கிளாஸில் முதலாவதாய் அமர்ந்து இருந்த பையனைப் பார்த்து.
“இதோ டீச்சர்” என்று மாடியில் இருந்து எட்டி பார்த்த அந்த சிறுவன் “டீச்சர் நம்ம வீட்டுக்கு எதிர் வீட்டுலே நிற்கிற ஆடி கார்லே இருந்து தான் விடாம ஹாரன் அடிக்கிறாங்க” என சொல்ல அவளோ பொறுமை இழந்தாள்.
இரண்டு காதுகளையும் கை கொண்டு பொத்தியவள் மாடியின் திண்டிற்கு வந்து “யாரது விடாம ஹாரன் அடிக்கிறது?” என்றாள் சப்தமாக.
அவள் குரல் கேட்ட அடுத்த நொடி அந்த காரின் கதவு படாரென்று திறந்து கொண்டது.
பூட்ஸ் கால்கள் தரையில் பட
ஒரு கை காரின் மீது இருந்தது.
அந்த கையில் கட்டப்பட்டு இருந்த ரோலக்ஸ் வாட்சின் பளபளப்பு தூரத்தில் நின்று பார்த்த இசையின் கண்களுக்கு தெள்ளந் தெளிவாக தெரிந்தது.
மறு கையில் கூலர்ஸை போட்டபடி அந்த உருவம் திரும்ப இசையின் முகத்தில் உட்சபட்ச அதிர்வு.
“வம்சி” என்றது அவள் உதடுகள் அவளை மீறி.
“நான் தான் செல்லம்!” என்றான் அவன் பதிலுக்கு.
அவனுடைய செல்லம் என்ற அழைப்பில் அவள் முகம் ரத்த பசையாக மாற” யூ ஸ்கௌண்ட்ரல்” என்றவளின் வார்த்தைகள் கோப நதியில் நனைந்து வந்தது.
“திட்டுறது தான் திட்டுற கொஞ்சம் தமிழ்லே திட்டு பேபி… ” என்றவன் கத்தலில் மூடிய வீட்டுக்குள் இருந்து சில பேர் தெருவில் வந்து நின்றனர்.
வீடு தேடி வந்து அசிங்கப்படுத்துகிறானே என்று பல்லை கடித்தவள் “உனக்கு என்ன தான் வேணும் டா” என்றாள் கோபமாக.
“எனக்கு வேண்டியது எல்லாம்
சிம்பிள் விஷயம் தான். உன் பாட்டு க்ளாஸ்லே சேரணும் அவ்வளவு தான்” என்றவனின் கோரிக்கையில் தலையை சுற்றி கொண்டு வந்தது இசையரசிக்கு.
இனி அடிக்கடி அவளை தலை சுற்ற வைப்பான் அந்த அரக்கன்.


