Loading

வனின் கரங்களுக்குள் புதைந்திருந்த தன் கரத்தை அவளும் விடுவித்துக் கொள்ளவில்லை. அவனும் விடுவிக்கவில்லை.

சிறிது நேரம் மௌனமே அங்கு ஆட்சிபுரிய, “அவ்ளோ தானா டா?” என்றாள் இந்திரா. “இதுவே பெருசு இந்து. நம்ம ஃபிளவர் பாரி பிரதர்கிட்ட பேசுனதே உலக அதிசயம் தான், இன்னும் நம்ம எதிர்பார்க்கக் கூடாது. சரி, வா உள்ள போகலாம்என்றவன், அறைக்குள் நுழைய அவன் பின்னே இந்திராவும் சென்றாள்.

அவர்களைக் கண்ட மலர்விழி, வேகமாக எழப் போக அப்பொழுது தான் தன் கரம் பாரியின் கரத்தில் சிறைபட்டிருப்பதை உணர்ந்து மென்மையாகக் கரங்களை உருவிக் கொண்டாள்.

தான் எதையும் பார்க்காதது போல், “என்ன ஃபிளவர் இதுக்கெல்லாமா இப்படி அழுகுவ? உன் அழுகைய கேட்டோனே ஒருமாதிரி ஆகிருச்சு ஃபிளவர்என்றவன்,

எங்களுக்கு முன்னாடியே வந்துட்டீங்க போல பிரதர்?” என்றான் ஹரிஹரன். ‘மொத்த பிளானையும் இவனே பண்ணிட்டு இப்போ என்னமா நடிக்கறான் பாருஎன மனதினுள் அவனைக் கழுவி ஊற்றிய இந்திரா, மலரை ஆறுதலாகக் கட்டிக் கொண்டாள்.

அவர்களின் வருகை அவளுக்குச் சற்று தெம்பூட்ட, நால்வரும் மருத்துவமனை வராண்டாவில் வந்து அமர்ந்தனர்.

அங்கு வந்த செவிலியர் பாரியிடம், “அவங்க போலிஸ் அது இதுனு சொல்லிட்டுப் போனாங்க தம்பி. அவங்க காலைல போலிஸ்க்கு போறதுக்கு முன்னயே நீங்க தான் ஏதாவது செய்யணும்என்க,

நான் பார்த்துக்கறேன் சிஸ்டர். நீங்க தைரியமா இருங்கஎன்றான் பாரிவேந்தன். “என்ன பிரதர் இப்படி சொல்றீங்க, முதல்ல அவங்க போலிஸ்க்கு போனாலும் மொத கேஸ் அவங்கமேல தான் போடணும். பதினேழு வயசு புள்ளைய கல்யாணம் பண்ணி நிறைமாசமா இருக்கிற புள்ளைய ஒழுங்கா கவனிக்காம கடைசி நேரத்துல ஹாஸ்பிட்டல் வந்துட்டு போற இருந்த உசுர காப்பாத்திக் கொடுத்த ஃபிளவர் மேல கேஸ் போடுவாங்களாம். இத வேடிக்கை பார்த்துட்டு நம்ம சும்மா இருக்கணுமா? நான் அப்பாகிட்ட பேசறேன் ஃபிளவர். அவரு இதெல்லாம் பாத்துக்குவாருஎன அவன் அலைப்பேசியை எடுக்க,

இல்ல வேண்டாம் டா கரிச்சட்டி. இப்போ அந்தப் பொண்ணோட கண்டிசன் எப்படி இருக்குனு தான் தெரிஞ்சுக்கணும். சின்னப் புள்ள டா, நம்ம பெரியாஸ்பத்திரிக்குப் போகலாமா?” என்க, அவளை எரிக்கும் பார்வை பார்த்தான் ஹரிஹரன்.

ஏன், அங்க போயும் அந்த அம்மாவோட சாபத்த வாங்கி கட்டிக்கப் போறியா?” என்க, “நம்மளோட கோபதாபங்கள் அடுத்த பட்சம் டா. முதல்ல ஒரு டாக்டரா யோசி, அந்தப் பொண்ணு என்ன பாவம்டா பண்ணா. தான், பத்து மாசம் சுமந்த குழந்தைய இழந்துட்டு அவளும் சாவோட இறுதிக்கு போய்ட்டு பிழைச்சுருக்கா. அவளோட கண்டிசன் இப்போ எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கணும் டா. ப்ளீஸ், நீ வரலன்னா பரவாயில்லை. நானே போறேன்என அவள் எழப் போக,

இரு புள்ள, நானே அங்க இருக்கிற டாக்டருக்கிட்ட கேட்டுத் தகவல் சொல்றேன்என்றவன், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் தனக்குத் தெரிந்த மருத்துவரைத் தொடர்புக் கொண்டு விசயத்தைக் கூறி தகவல் கேட்க, அப்பொழுது அவர் பணியில் இல்லாததால் பணியில் இருந்த வேறொரு மருத்துவரைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணின் தற்போதைய நிலையை அறிந்துக் கொண்டு இவர்களிடத்தில் கூறினார்.

அவருக்கு நன்றி தெரிவித்த பாரிவேந்தன், “அந்தப் பொண்ணு இப்போ நல்லா இருக்காம் புள்ள, காலைல எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். மணி இப்பவே ரெண்டாச்சு, எல்லாரும் கொஞ்சம் நேரம் தூங்குங்கஎன்றான்.

ஆனால் மூவருமே எழாமல் அமர்ந்திருக்க, இந்திராவின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த மலர்விழி எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள்.

சற்றுமுன் நடந்த நிகழ்வுகள் இன்னும் அவள் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்க, கண்களை இறுக மூடினாள். அவளின் நிலையைக் கண்டு பாரிவேந்தனுக்கு உள்ளுக்குள் வலித்தாலும் அவளைத் தேற்றும் வழியறியாது முழித்தான்.

அப்பொழுது இந்திரா, “மலர், இன்னுமா அதயே நினைச்சுட்டு இருக்க?” என்க, அவள் பதிலளிக்காமல் அமைதியாக இருக்க,

இதெல்லாம் நம்ம வாழ்க்கைல சகஜம் மலர். வாழ்வையும் பார்த்தாகணும், சாவையும் பார்த்தாகணும். உன்னால முடிஞ்ச வரை நீயும் முயற்சி பண்ண தான, அதுக்குமேல நம்மனால என்ன பண்ண முடியும் சொல்லு! அவங்களுக்கு நல்லது நடந்தா நம்மள தலைமேல தூக்கி வச்சு, கடவுள் ரேன்ஜ்க்கு துதி பாடுவாங்க. அதே கெட்டது நடந்தா இல்லாத பொல்லாத சாபத்த எல்லாம் நம்மமேல வாரி இறைப்பாங்க. எவ்வளவு பார்த்துட்டோம். இதுக்குப் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு!” என்றாள் இந்திரா.

அப்போ மேடம் மேல மான நஷ்ட வழக்கு போடறேனு ஒரு கிழவி சொல்லிட்டுப் போகும்போது நீங்க என்ன பண்ணீங்களாம்?” என ஹரிஹரன் நக்கலடிக்க,

அதுஅது அப்போஎன்க, அவள் கூறிய தோரணையில் சிரித்த மலர்விழி, “ஆனாலும் அந்த கிழவி பாவம் டி, நீ கொடுத்த சாபத்துல அதுவே மிரண்டு போச்சுஎன்றாள் சிறு புன்னகையுடன்.

இவர்களின் பேச்சு புரியாமல் பாரி முழிக்க, அதனைக் கண்ட இந்திரா, “அண்ணா வேற புரியாம முழிக்கறாரு. இருங்கண்ணா, அந்த வீரதீர செயல நான் சொல்றேன்என முன்பொரு நாள் நடந்த நிகழ்வுகளைக் கூறத் தொடங்கினாள்.

ஒரு வருடத்திற்கு முன்பு

இன்டர்ன்ஷிப் தொடங்கி சில மாதங்கள் தான் ஆன நிலையில் அன்று டியூட்டியில் இருந்த இந்திரா, வந்திருந்த நோயாளிகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தாள்.

காய்ச்சல், தலைவலியென வருபவர்களுக்கு எல்லாம் இவர்களே மருந்துப் பரிந்துரை செய்ய, அப்பொழுது தான் ஒரு பாட்டி தனது இருபத்தியோரு வயது பேத்தியுடன் அங்கு வந்திருந்தார்.

தன்முன் அமர்ந்த அவரிடம், “சொல்லுங்க பாட்டி, உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்றாள் இந்திரா.

எனக்கு எதுவும் இல்ல டாக்டர், என் பேத்திக்குத் தான் இரண்டு மாசமா தீட்டு போக மாட்டேங்கிது. அதான் அத என்னனு கொஞ்சம் பாத்து சொல்லுங்கஎன்க,

கடைசியா எப்போ பிரீயட்ஸ் ஆனீங்க?” என அந்த பெண்ணைப் பார்த்து வினவ, அந்தப் பெண்ணும் இரு மாதங்களுக்கு முன்பான தேதியைக் குறிப்பிட்டது.

உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சா?” என்க, இல்லையென அந்தப் பெண் தலையாட்டியது. அதற்கு அந்த பாட்டியோ, “இப்போ தான் மா ஒரு வரன் கூடி வந்திருக்குஎன்க, “…” என்றவள் சிறு புன்னகையை வலிய வரவழைத்துக் கொண்டு மேலும் சிலபல கேள்விகளைக் கேட்டுவிட்டு, கர்ப்ப பரிசோதனைக்கு எழுதிக் கொடுக்க, அதனைக் கண்ட அந்தப் பெண்ணின் முகம் வெளிறிப் போனது.

அதனைக் கண்ட இந்திரா, “இது நார்மல் டெஸ்ட் தான்ங்க, இங்க இருந்து லெப்ட் சைட்ல இரண்டாவது ரூம் தான் லேப். அங்க போய் டெஸ்ட்க்கு கொடுத்தா டென் மினிட்ஸ்ல ரிப்போர்ட் வந்துரும். ரிப்போர்ட் வந்தோனே என்னை வந்து பாருங்கஎன்றவள், அடுத்தடுத்த நோயாளிகளைப் பார்க்க துவங்க, அந்த பாட்டியோ தன் பேத்தியிடம்,

இரத்தம் கொறைவா இருக்கும். அதான் டாக்டரு எழுதிக் கொடுத்துருப்பாங்க, நீ போய் அத எடுத்துட்டு வா மாஎன அனுப்பி வைத்தார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து அந்தப் பெண்ணும் பாட்டியும் அங்குவர, மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு, “உங்க பேத்தி கர்ப்பமா இருக்காங்க பாட்டிஎன அவள் முடிப்பதற்குள் அந்தப் பாட்டி ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்திருந்தார்.

என் பேத்தியோட கற்ப்பயே கலங்கப் படுத்திட்டியே, நீ எல்லாம் படிச்சு தான் இங்க வந்தியா, இல்ல காசு குடுத்து இங்க வந்தியா?” என தாம் தூம் எனக் கத்த ஆரம்பிக்க,

பாட்டி, நான் ஏன் பொய் சொல்லப் போறேன். இந்த ரிப்போர்ட் அப்படி தான் சொல்லுது, உங்க பேத்தி ரெண்டு மாசம் முழுகாம இருக்காங்கஎன்க,

என் வீட்டு வாரிச இப்படி சொல்ல உன் நாக்கு கூசல?” என அந்தப் பாட்டி தன் அர்ச்சனையைத் தொடங்க, ‘அடியேய் கிழவி, உன் பேத்தி பண்ண தப்புக்கு நான் என்ன பண்ணுவேன். என்னைய இந்த ஏறு ஏறுற, அந்தப் புள்ளைய கேட்க வேண்டிய கேள்விய எல்லாம் என்னைய கேட்குறியேஎன மனதினுள் நொந்துக் கொண்டிருந்தாள்.

அவரோ தனது பேத்தியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, “உன்னை எங்க நிறுத்தணுமோ அங்க நிறுத்தறேன்எனச் சூளுரைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

அப்பொழுது தான் மலர்விழி அவளைப் பார்க்க வந்திருக்க, “என்ன டி இந்த பாட்டி என்னமோ உன்னைத் திட்டிட்டுப் போகுது, என்னாச்சு?” என்றவாறே அவள் அறைக்குள் நுழைய,

அவ பேத்தி பண்ண தப்புக்கு நான் என்ன டி பண்ணுவேன். கடுப்பேத்தறாங்க மை லார்ட்என அவள் அழாத குறையாய் புலம்ப,

அப்படி என்னடி நடந்துச்சு?” என்றாள் மலர்விழி. நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, மலர்விழியோ விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.

உனக்குனு மட்டும் எங்க இருந்து டி இப்படிபட்ட கேஸ்லாம் வருது? எனக்குலாம் காய்ச்சல், தலைவலிய தவிர வேற யாரும் காணோம். ஆனாலும், அந்தப் பாட்டிக்கு ஓவர் தில்லு தான்என்க,

அடப் போ டி, வாய்ல வண்ண வண்ணமா வருது. டாக்டர் பொழப்பு நாறப் பொழப்பா இருக்கு. இதுல கொடுமை என்னன்னா ஒரு யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்ட பார்த்து, காசு கொடுத்துத் தான் பாஸாகுனியானு கேட்குது அந்த கெழவிஎன வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு அவள் கூற, மலர்விழியோ சத்தம் போட்டுச் சிரித்தாள்.

சிரிக்காத டி. டாக்டர்னாலே கெட்டவங்க அப்படினு அவங்களா நினைச்சுக்கிறாங்க. எல்லாம் காலக்கொடுமைஎனத் தலையில் அடித்துக் கொள்ள,

சரி சரி, வா உனக்கு பிரியாணி வாங்கி தரேன்என்க, “பிரியாணியாஎன ஆவலாக வினவியவளைக் கண்டு தற்போது தலையில் அடித்துக் கொள்வது மலர்விழியின் முறையாயிற்று.

இரு வாரங்கள் கடந்த நிலையில், அன்றும் தனது ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையில் மூழ்கி இருந்தவள் முன்பு ஒரு மருத்துவ அறிக்கை வந்துவிழ, நிமிர்ந்து பார்த்தாள் இந்திரா.

அன்று பார்த்த அதே பாட்டி தான் தன் பேத்தியுடன் இன்றும் வந்திருந்தார். ‘இந்தக் கிழவிக்கு இப்போ என்னவாம்!’ என மனதினுள் நினைத்தவாறே தன்முன் விழுந்த அறிக்கையை எடுத்துப் பார்க்க, அதில் அந்தப் பெண் கர்ப்பமாக இல்லை என்றிருந்தது.

ஒன்னும் தெரியாத இந்தப் பச்சைப்புள்ளை மேல அன்னிக்கு பழி சுமத்துனியே, இப்போ பாரு அவ கர்ப்பமா இல்லனு வேற ஒரு டாக்டர் ரிப்போர்ட் கொடுத்துருக்காருஎன்க,

அய்யோஎன்றிருந்தது இந்திராவிற்கு. கர்ப்பத்தை கலைத்துவிட்டு அதன்பின் எடுத்த மருத்துவ அறிக்கை என்பதை உடனே புரிந்துக் கொண்டவள் அந்த பெண்ணைப் பார்க்க அந்தப் பெண்ணோ தலை குனிந்து நின்றாள்.

ஆனால் அந்தப் பாட்டியோ விடாது, “இதுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்க, இந்திராவிற்கு கோபம் தலைக்கேற, “கர்ப்பத்த கலச்சுட்டு டெஸ்ட் எடுத்தா கர்ப்பம் இல்லைனு தான் காட்டும் பாட்டி. உங்க பேத்திக் கிட்டயே வேணும்னா கேளுங்கஎன்றாள்.

இன்னும் என் பேத்தி மேலயே பழி சொல்றியே நீ எல்லாம் ஒரு டாக்டரா? இரு, உன்மேல மான நஷ்ட வழக்குப் போட்டு உன் டாக்டர் சீட்ட கிழிக்கல என் பேரு ராக்காயி இல்லஎன சவால் விடுத்தது அந்த பாட்டி.

இதுவரை பொறுமையாக இருந்தவள், “நீங்க எங்க வேணும்னாலும் போய்க்கோங்க. என்கிட்ட உங்க பேத்தி கர்ப்பமா இருந்தபோது எடுத்த ரிப்போர்ட் இருக்கு. நானும் பாத்துக்கறேன். அப்படியே உங்க பேத்திய கட்டிக்கப் போறவர்கிட்டயும் ஒரு காப்பி அனுப்பி வைக்கறேன். அப்போ தெரியும் உங்க பேத்தி லட்சணம்என்றாள் இந்திரா.

உன்மேல மான நஷ்ட வழக்கு போட்டே தீருவேன்என்ற பாட்டியை இதற்குமேல் விட்டால் தன் மானம் பறிபோகும் என்றெண்ணி அந்தப் பெண் தான் ஏதேதோ சமாதானம் கூறி அழைத்துச் சென்றாள்.

மான நஷ்ட வழக்கா! தப்பு பண்ணவங்க ஒருத்தர், பழிகிடா ஆகறது நானா! பாவம் அந்தப் புள்ளைய கட்டிக்கப் போற ஜீவன்எனப் புலம்பித் தீர்த்தாள் இந்திரா.

….

இதனை இந்திரா கூறி முடிக்க, பாரியோ விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.

அதனைக் கண்டு, “அண்ணா சிரிக்காதீங்கண்ணாஎன இந்திரா சிணுங்க, “ஆனாலும் அந்தப் பாட்டிக்கு இவ்ளோ தில்லு இருக்கக் கூடாது மாஆமா, கடைசில உன்மேல மான நஷ்ட வழக்கு போட்டுச்சா இல்லையா?” என்றான் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு.

அத ஏன் கேட்குறீங்க பிரதர், அந்தப் பாட்டி கோர்ட் வரைக்கும் போய் ஒரு வக்கில ஏற்பாடு செய்ய, அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க தான் நம்ம புள்ள பேரு தான் நாறும்னு சொல்லி ஒருவழியா சமாளிச்சு அந்தப் பாட்டிய கூட்டிட்டுப் போனாங்க. ஆனாலும் அன்னிக்கு இவ முகத்த பாக்கணுமே. அய்யோ அம்மா முடியலஎன ஹரிஹரன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

டேய் அமைதியா இரு டாஎன இந்திரா அவனை அமைதிப்படுத்த, அவனோ சிரிப்பதை நிறுத்தாமல் அர்த்த ராத்திரியில் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனை இந்திரா அடிக்கவர, அவளிடமிருந்து தப்பி எழுந்து அவன் ஓட, மருத்துவமனை வராண்டாவில் இருவரும் ஓடிபிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் மலர்விழி சற்று தெளிவடைந்திருந்தாள். “ரெண்டு பேரும் வந்து அமைதியா உக்காருங்க டா, நடுசாமத்துல இப்படி கத்தி எல்லாரையும் பயமுறுத்துவீங்க போலஎன அவள் கடிந்துகொள்ள இருவரும் வந்து அமர்ந்தனர்.

வெளில இருந்து பார்க்கிறவங்களுக்கு டாக்டர்ஸ் எப்பவும் பணம் பறிக்கிற கும்பலாவே தான் தெரியுறாங்க. ஆனா, அது உண்மை இல்ல. சிலர் பணத்துக்காக மருத்துவத்த படிச்சுருக்கலாம், ஆனா எல்லாரும் அப்படி இல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு சாவ கண்ணுல பாக்க வேண்டி வரும். சில நேரம் நம்ம கண்ணு முன்னாடியே துடிதுடித்து இறந்து போவாங்க. அவங்கள காப்பாத்த முடியலையேனு நாலுநாள் சோறுகூட ஒழுங்கா உள்ள இறங்காது. தன் கண்ணு முன்னாடி ஒருத்தவங்க உசுரு போறத மனச கல்லாக்கிட்டு பாக்க வேண்டி இருக்கும்.

அவங்க உசுர காப்பாத்திக் கொடுத்தா எங்கள கடவுள் ரேன்ஜ்க்கு பார்ப்பாங்க. அதே அவங்கள காப்பாத்த முடியலன்னா எமன பாக்கிற மாதிரி பார்ப்பாங்க. இன்னும் சிலர் தன் வாய்க்கு வந்தத சாபம் விடுவாங்க. நாங்க கடவுளும் அல்ல, எமனும் அல்ல. சராசரி மனுஷங்க தான்னு என்னிக்குமே நினைக்கமாட்டாங்க. நிம்மதியா ஒரு வாய் சோறு சாப்ட கூட முடியாது. இதான் எங்க வாழ்க்கை, ஆனா வெளிய இருக்கிறவங்களுக்கு டாக்டர் அப்படினா பணப்பேய்ங்க. இந்த நிலைமை என்னிக்கு மாறுமோஎன மலர்விழி தன் மனக்கவலைகளைக் கொட்ட,

எது செஞ்சாலும் நம்ம மனசுக்கு உண்மையா செஞ்சா அது போதும் புள்ள. மத்தவங்க என்ன பேசறாங்க, என்ன சொல்றாங்கனு நம்ம பார்த்தா நம்ம மனநிம்மதி தான் போகும். ரொம்ப நேரமாச்சு, கொஞ்சம் நேரம் தூங்குங்க. காலைல பேசிக்கலாம்என்றான் பாரிவேந்தன்.

அண்ணா, அவங்க காலைல போலிஸ்க்கு போய்ட்டா?” என இந்திரா தயங்க, “அத நான் பாத்துக்கறேன் மா, நாங்க கிராமத்தாளுங்க தான். ஆனா, எல்லாரும் இப்படி புரியாம நடந்துக்க மாட்டாங்க. நம்ம பக்கமுள்ள நியாயத்த புரிஞ்சுக்கிறவங்களும் இருக்காங்க, ஒன்னு ரெண்டு பேரு இப்படி தப்பி பொழச்சவங்க. நான் பாத்துக்கறேன், நீயும் மலரும் போய் செத்த நேரம் தூங்குங்கஎன்றான் பாரிவேந்தன்.

இருவரும் அங்கிருந்த அறையிலேயே சற்று நேரம் கண்ணயர, பாரிவேந்தன் மருத்துவமனை வாசலில் வந்து நின்றான். வெளியே பொழுது இன்னும் விடியாமல் இருக்க, கும்மிருட்டாக இருந்த இடத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்த ஹரிஹரன், “நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க பிரதர். இங்க நான் பாத்துக்கறேன், காலைல வந்தா போதும்என்க,

இல்ல ஹரி. நானும் இங்கயே இருக்கறேன்என்றான். “இல்ல பிரதர், கல்யாண மாப்பிள்ளை வேற நீங்க. எதுக்கு உங்களுக்குச் சிரமம்? ஜாலியா இருக்க வேண்டிய தருணத்துல நான் வேற இங்க கூப்ட்டு உங்கள தொந்தரவு படுத்திட்டேன்என வேண்டுமென்றே அவன் மனதை அறிய வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தான்.

பதிலேதும் வராமல் வெளியே வெறித்துக் கொண்டிருந்தான் பாரிவேந்தன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. பாரி மனசுல? அட பொகடா நீக்கவும் உங்க கல்யாணமும்