Loading

ந்திராஎன்ற பெயரை அவன் அதரங்கள் உதிர்க்க, மலர்விழியின் கண்கள் வெளியே தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது அதிர்ச்சியுடன்.

அப்பொழுது அவர்கள் அருகே வந்த இந்திராவிற்கோ மாரடைப்பு வராத குறை தான். ‘ஙேஎன அவள் முழிக்க, “எரும, எருமஏன் டாஎனக்குக் கொஞ்ச நேரத்துல ஹார்ட் அட்டாக வர வச்சுட்டஎன மலர்விழி அவனை அடிக்கத் துவங்க,

அவனோ, “ஏன் ஃபிளவர், நான் குட்டி யானைய லவ் பண்ணக் கூடாதா?” என மேலும் அவளைக் கடுப்பேத்தி இன்னும் நான்கு அடிகளைச் சேர்த்துப் பெற்றான்.

அவனை அடித்து ஓய்ந்தவள், குனிந்து முட்டியில் கைகளைத் தாங்கிப் பெருமூச்சு விட்ட மலர்விழி, சற்று தள்ளி நின்றிருந்த இந்திராவை பார்த்து நிமிர்ந்தாள்.

அப்போது தான் ஹரிஹரனும் அவளைப் பார்த்தவன், மலர்விழியை பார்த்து அசடு வழிந்தான்.

இன்னும் இந்திரா அதிர்ச்சி விலகாமல் நின்றிருக்க, “பேயறைஞ்சவ மாதிரி நிக்கிறா குட்டியானை. ஒருவேள நான் சொன்னது அவளுக்குக் கேட்ருச்சோஎன மலர்விழியின் காதில் கிசுகிசுக்க,

அவனது காதை முறுக்கியவள், “டேய், அவ அத உண்மைனு நினைச்சு இன்னும் அதிர்ச்சில இருக்கிறா டா. ஒழுங்கா அவ ஹார்ட் அட்டாக்ல மண்டைய போடறதுக்கு முன்னாடி அவள இந்த உலகத்துக்குக் கொண்டு வாஎன்றாள் மலர்விழி.

குட்டி யானஎன்றவாறே இந்திராவின் முகத்திற்கு நேரே அவன் சொடக்கிட, அப்பொழுது தான் தலையை உதறி அவனைப் பார்த்தாள்.

உண்மைனு நினைச்சுட்டியா குட்டி யான! உன்னை லவ் பண்ணா அதுக்காகவே நான் மாசம் பத்து ஆப்ரேஷன் பண்ணி உனக்கு பிரியாணி வாங்கி கொடுக்கணும். அந்த அளவுக்கு என் உடம்புல தெம்பில்ல மா தாயேஎனக் கையெடுத்து கும்பிட, அவளோ அருகில் இருந்த தொடப்பக்கட்டையை தூக்க, அலறி அடித்துக்கொண்டு ஓடினான் ஹரிஹரன்.

அதனைப் பார்த்துச் சிரித்தவாறே, தன் அறைக்குள் மலர்விழி நுழைய, இங்கு இந்திரா தொடப்பக்கட்டையுடன் ஹரிஹரனை துரத்திக் கொண்டே அவன் பின்னால் ஓட, அவனோ வீட்டை விட்டு வெளியே வந்து அவள் இன்னும் துரத்துவதைக் கண்டு தோட்டத்திற்குள் ஓட, அவளும் விடாமல் அவனைத் துரத்தினாள்.

தோட்டத்திற்கு தண்ணீ்ர் பாய்ச்ச வந்திருந்த சண்முகம், அப்பொழுது தான் வீடு திரும்பலாம் என்றெண்ணி கைகால் கழுவி விட்டு, துண்டால் தேகத்தை துடைத்தவாறே வரப்பில் நடந்து வந்துகொண்டிருக்க, அவனைத் தாண்டி ஹரிஹரன் தலைதெறிக்க ஓடவும்,

ஏன் இந்தப் பய இப்படி ஓடறான், ஏதோ ஓட்டப்பந்தயத்துல ஓடற கணக்கா ஓடறான்என்றவாறே அவன் அவனைத் தாண்டி ஓடிய ஹரிஹரனை பார்த்துக் கொண்டே வரப்பில் நடக்க, ஹரிஹரனைத் துரத்திக் கொண்டு வந்த இந்திராவின் கவனம் முழுக்க ஹரியின் மேல் இருக்க இடையே இருந்த ஜீவன் கண்ணுக்குத் தெரியாமல் போனது.

ஹரியை பார்த்தவாறே முன்னால் திரும்பியவன் கண்டது என்னவோ கையில் துடைப்பத்துடன், ஓட முடியாமல் மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டிருந்த இல்லை இல்லை அவனது எண்ணப்படி நடந்து வந்து கொண்டிருந்த இந்திராவை தான்.

ஓடி வந்தவள், அவன்மீது மோதி வரப்பில் கீழே தடுமாறி விழப் போக, “ஹேய் பாத்து பாத்துஎன்றவாறே அவன் அவளை தாங்கிப் பிடிக்க முயன்றான்.

அதில் அவள் கையில் இருந்த துடைப்பம் அவன் முகத்தில் அர்ச்சனை செய்திருக்க, அவளோ அதனைக் கண்டுகொள்ளாமல் வரப்பில் ஒரு கையை ஊன்றி மற்றொரு கையில் துடைப்பதையும் விடாமல் இறுக பற்றியவாறே எழ முயற்சிக்க,

அம்மா, தாயே கொஞ்சம் அந்தத் தொடப்பத்த கீழ போடறியாஎன்றான் சண்முகம். அப்பொழுது தான் அவனைக் கவனித்தவள், “என் தொடப்பத்துமேல ஏன் உங்க முகத்த வைக்கிறீங்க?” என முறைத்தவாறே அவள் எழுந்தாள்.

என்னது இவ தொடப்பத்துமேல நான் முகத்த வச்சனா! தேவை தான்எனப் புலம்பியவன், எதுவும் பேசாமல் அவளை முறைத்தவாறே அங்கிருந்து நகர, “முறைக்கிறத பாரு. காட்டெருமை சைஸ்ல இருந்துட்டு என்ன லுக்கு வேண்டிக் கெடக்குஎன அவள் வாய்விட்டே புலம்ப,

அத ஒரு காட்டுப்பன்னி சொல்லுது பாருஎன அவன் கூற, வார்த்தைப் போர் ஆரம்பமானது. இருவரும் மாற்றி மாற்றிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்க, இந்த நிலையிலும் இந்திரா கையில் வைத்திருந்த துடைப்பத்தை மட்டும் கீழே விடவில்லை.

சற்று தூரம் ஓடிப் பின்னால் அவளை திரும்பிப் பார்த்த ஹரிஹரன் கண்டது, சண்முகத்திடம் சண்டையிட்டு கொண்டிருந்தவளை தான்.

பின், அவனே வந்து சண்முகத்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல,

ஏன்டா என்ன தடுத்த? அந்த காட்டெருமைய இன்னும் நாலு வார்த்தை கேட்டு விட்ருப்பேன். ஆளயும் மொகர கட்டையையும் பாருஎன அவள் வாய் மூடாமல் அரைத்துக் கொண்டிருக்க,

அவரு என்ன டி பண்ணாரு. நீ தான அவர்மேல மோதுன! இப்போ அவர கொற சொல்றஎன்றவனிடம் பாய்ந்தாள் இந்திரா.

ஏன்டா மலருக்கிட்ட பொய் சொன்ன? நீ அவ தங்கச்சிய தான் லவ் பண்றேனு தில்லு இருந்தா சொல்ல வேண்டியது தான, என்னைய ஏன்டா இழுத்து விட்ட?” என அவள் அக்னிரூபமாய் வினவ,

கொஞ்சம் மல இறங்கு ஆத்தா. இப்போதான் என் மச்சான் உன்கிட்ட செமத்தயா வாங்கி கட்டிக்கிட்டாரு. அடுத்து நானா!” என்க,

என்னது மச்சானா!” என அவள் விழி விரிய நின்றிருக்க, “யாழு என் எதிர்கால மனைவினா அவளோட அண்ணன் எனக்கு மச்சான் தான!” என அவன் அசால்ட்டாகக் கூறினான்.

 

டேய், சீரியஸ்ஸா தான் யாழினிய லவ் பண்றியா டா?” என்றாள் இந்திரா. “எனக்கு யாழுவ பிடிச்சிருக்கு இந்துஎன்றவாறே அவள் முகம் பார்க்காமல் சுற்றிலும் வேடிக்கை பார்த்தான் ஹரிஹரன்.

இது விளையாடற விசயம் இல்ல டா. யாழினிக்கும் பாரி அண்ணாவுக்கு இன்னும் அஞ்சு நாள்ள கல்யாணம். இப்போ போய் அந்தப் பொண்ண லவ் பண்றேனு சொல்ற! அவள பாத்து ரெண்டு, மூணு நாள் இருக்குமா? அதுக்குள்ள என்ன லவ் டா. இது வாழ்க்கை டா, விளையாட்டு மைதானம் இல்லஎன்றாள் இந்திரா தன் நண்பனின் முடிவைக் கேட்ட அதிர்ச்சியில்.

இல்ல இந்து, எனக்கு யாழுவ பிடிச்சிருக்கு. அத சொல்லத் தான் இன்னிக்கு ஃபிளவர் கிட்ட பேசுனேன். ஆனா, அவக்கிட்ட இத சொல்ற தைரியம் எனக்கில்ல. அதுனால தான் பேச்ச திசைதிருப்புனேன்என்றான் ஹரிஹரன்.

இல்ல டா, நீ ஏதோ ஒன்ன மனசுல வச்சுட்டு தான் இப்படி பேசற. கண்டதும் காதல்னு விழற ஆள் நீ இல்ல. உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியும் டா, நீ என்ன நினைச்சுட்டு இப்படி பண்ற?” என அவனைக் கேள்வியில் உலுக்க

அதான் யாழுவ லவ் பண்றேனு சொல்றேன்ல. அப்புறம் ஏன் இத்தன கேள்வி கேட்டு சாவடிக்கிறஎன அவன் கோபமாய் கூறிவிட்டு நடக்கத் துவங்க, அவன் முன்னால் சென்று அவனைத் தடுத்தவள்,

உண்மைய சொல்லு டா. நீ மலர பாரி அண்ணா கூட சேத்து வைக்க தான யாழுவ லவ் பண்றேனு சொல்ற?” என அவனின் காதலுக்கான அர்த்தத்தை அவள் பிடித்துவிட, அவன் அதிர்ந்தான்.

இங்க வந்ததுல இருந்தே நானும் கவனிச்சுட்டு தான்டா இருக்கேன். மலர் மனசுலயும் பாரி அண்ணா இருக்காருனு புரியுது. ஆனா, அடுத்த வாரம் பாரி அண்ணாக்கு கல்யாணம் அதுவும் மலரோட தங்கச்சி கூட. நம்மளே நினைச்சாலும் எதுவும் மாறப் போறதில்ல, தேவையில்லாத ஆசைகள மனசுல வளர்த்திக்காத. அவ்ளோ தான் சொல்லிட்டேன்என அவள் முகம் இறுக அவனை எச்சரிக்க,

இத நான் மாத்திக் காட்டுவேன்என்றவனின் முகத்தில் தென்பட்ட தீவிரத்தைக் கண்டவள் உள்ளுக்குள் அதிர்ந்தாள்.

இது நீயும் நானும் ஈசியா சால்வ் பண்ண கணக்கு இல்ல டா, இரண்டு குடும்ப பிரச்சினை. ஏற்கெனவே குணவதி அம்மாவ யாழினி வீட்ல எதிரியா தான் பாக்கறாங்க. இப்போ தன் மக வாழ்க்கையவும் பாழாக்க வந்துட்டானு மலர தான் பேசுவாங்க. இது கிராமம் டா, ஒரு கல்யாணத்த நிறுத்தறது அவ்ளோ ஈசியும் இல்ல. அதேநேரம் கல்யாணம் நின்னா அந்தப் பொண்ணோட வாழ்க்கையும் கேள்வி குறியாகிடும்என்றாள் இந்திரா அவனுக்குப் புரிய வைக்கும் நோக்கத்தோடு.

என் ஃபிளவர் சந்தோசமா இருக்கணும். அதுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்என அவன் உறுதியாகக் கூற,

அப்போ யாழினிக்கு நீ வாழ்க்கை குடுக்க போறேனு சொல்றியா டா?” எனக் கோபமாக இந்திரா வினவினாள்.

இல்ல இந்து, அவள எனக்கு உண்மையாலுமே பிடிச்சிருக்குஎன அவன் தலைகுனிய, “என்ன சொல்றதுனு தெரியல டா. அவளுக்குக் கல்யாணம் ஆகப் போறது தெரிஞ்சும் அவள நான் விரும்புறேனு சொல்ற. எனக்கு இதெல்லாம் எங்க போய் முடியுமோனு பயமா இருக்கு ஹரிஎன்ற இந்திராவின் வார்த்தைகளில் லேசான பயம் தென்பட்டது.

அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ இத ஃபிளவர் கிட்ட மட்டும் உளறாம இருந்தா சரிஎன்றவன், வீட்டிற்குள் செல்ல, இந்திராவிற்கு தான் தலை கனத்தது.

இந்த ஊர விட்டுப் போகும்போது உசுரோட போகணும் ஆண்டவாஎனப் புலம்பியவாறே அங்கிருந்து நகர்ந்தாள் இந்திராகாந்தி.

பாரிவேந்தனின் இல்லத்தில் அப்பொழுது தான் காலை உணவிற்காகத் தோட்டத்தில் இருந்து பாரி வந்திருக்க, வாசலில் நின்றிருந்த பழனியப்பன், “ஏப்பா பாரி, பூவ எல்லாம் மார்கெட்டுக்கு அனுப்பியாச்சா? கல்யாண சீசன்னால நல்ல ரேட்டுக்கு போகும்னு பாத்தா இந்த வானம் வேற கறுத்துட்டு கெடக்குஎன்றார்.

மல்லியும், செண்டு முல்லையும் அனுப்பியாச்சு ப்பா. கோழி கொண்டைய இனிதான் போய் அனுப்பணும்என்றவாறே தன் தந்தைக்கு பதிலளித்த வண்ணம் அவன் வாசலைக் கடக்க,

ஏன் டா பழனி, இன்னும் அஞ்சு நாள்ள கண்ணாலத்த வச்சுட்டு இந்தப் பயல போட்டு இத்தன வேல வாங்கற. அவன் மாப்பிள்ளை டா, அவனை செத்த வேலை வாங்காம மாப்பிள்ளையா சும்மா ஜம்முனு இருக்க விடுஎன்றார் ராமாயி.

நானே எல்லா வேலையும் பாத்துக்கறேனு சொன்னாலும் உன் பேரன் தான் கேட்க மாட்டேங்கிறான் ம்மா. நான் என்ன பண்றது?” என்றவாறே அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார். பாரிவேந்தனும் உள்ளே செல்ல, அப்பொழுது கையில் ஒரு குழந்தையுடனும், இடுப்பில் ஒரு குழந்தையுடனும் பாரிஜாதம் அங்கு வர,

வா மா, மாப்பிள்ளை வரலயா மா? பஸ்லயா வந்த?” என்றவாறே தனது பேத்தியை மகளிடமிருந்து தூக்கிக் கொண்டவர், மூன்று வயது பேரனைக் கையில் பிடித்துக்கொண்டு வினவினார்.

இல்ல ப்பா. அவருக்கு சோலி நிறைய இருக்குனு சொன்னாரு. சாயந்தரம் கொண்டு போய் விடறேன்னு சொன்னாரு, நான்தான் உடனே கெளம்பி வந்துட்டேன். இங்க அம்மா ஒருத்தியா வேல செஞ்சுக்கிட்டு கெடக்கும். நான் வந்தா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்லஎன்றவாறே வேர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டே திண்ணையில் அமர,

ரெண்ட புள்ளைகள தூக்கிட்டு இப்படி நடந்து வர்றதுக்கு உன் அண்ணனுக்கு ஒரு ஃபோன பண்ணி இருந்தா அவனே வந்து கூட்டிட்டு வந்துருப்பான்ல மாஎன்ற பழனியப்பன், கைக்குழந்தையாக இருந்த பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

உன் புருஷனுக்கு உன்னைய விட முக்கியமான சோலி என்ன கெடக்காம்?” என முகத்தைச் சிலுப்பினார் ராமாயி.

தோட்டத்து வேல தான் அப்பாயி, அவரும் கூட்டிட்டு வரேன்னு தான் சொன்னாரு. நான்தான் வேண்டானுட்டேன்எனத் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேச, மகளின் பேச்சுச் சத்தம் கேட்டு உள்ளே இருந்த ரேவதி வெளியே வந்தார்.

வா மா, எங்க மாப்பிள்ளை, வரலயா அவரு?” என்றார் ரேவதி. “இல்ல ம்மாஎன்றவள், “எங்க ம்மா அண்ணன்? ஆளயே காணோம்என உள்ளே எட்டி பார்க்க, “இப்போதான் தோட்டத்துல இருந்து வந்தான் மா. பின்னாடி கொல்லைல கைகால் கழுவிட்டு வரேன்னு போனான்என ரேவதி கூறிக் கொண்டிருக்கும் போதே பாரிவேந்தனும் அங்கு வந்திருந்தான்.

தங்கையை நலம் விசாரித்துவிட்டு தங்கையின் மக்களைத் தூக்கி கொஞ்ச, தாய்மாமனிடம் ஒட்டிக் கொண்டார்கள் அஜய்யும், ரோஜாவும்.

அஜய்க்கு தற்போது தான் மூன்று வயது நிறைவடைந்திருக்க, ரோஜாவும் தற்போது தான் நடக்க துவங்கி இருந்தாள்.

சிறிது நேரம் தங்கையின் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டவன், உணவை முடித்தவுடன் வேலையாக வெளியே கிளம்ப, அப்பொழுது அவனிடம் வந்த பாரிஜாதம், “ஏண்ணா மலரு ஊருக்கு வந்துருக்காமே. உன்கிட்ட பேசுச்சா ண்ணா?” என வினவ,

அவன் பதிலளிக்கும்முன் அங்கு, “அண்ணி எப்போ வந்தீங்க?” என்றவாறே யாழினி வந்திருக்க அதற்குமேல் எதுவும் பேசாமல், “வெளிய போய்ட்டு வரேன் மாஎன தங்கையிடம் கூறிவிட்டு அங்கிருந்து நகர, தன்னை பார்க்காமல் செல்லும் தன் மாமனையே பார்த்துக் கொண்டு நின்றாள் யாழினி.

நொடிப்பொழுதில் அண்ணனின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை பாரிஜாதமும் கவனித்திருந்தாள். யாழினியின் முக வாடலைக் கண்டு திசைத் திருப்ப எண்ணி பேச்சு கொடுக்க, அதன்பின் வீடே கல்யாண களை கட்டியது.

அவரவருக்கு எடுத்த புடவைகளையும் துணிமணிகளையும் நடுகூடத்தில் பரப்பி, பெண்கள் அதனை ஒருபக்கம் ஆராய்ந்து கொண்டிருக்க, ராமாயி பாட்டியோ தன் பேரனின் எண்ணப் போக்கைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.

இதற்கெல்லாம் காரணமானவனோ இன்னும் ஐந்து நாளில் தனக்கு கல்யாணம் என்றதையே மறந்தது போல் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தான்.

மலர்விழியின் இல்லத்தில், அன்று மருத்துவ முகாம் இல்லாததால் அனைவருமே வீட்டில் இருக்க, சமைக்கிறேன் என்று பெண்கள் மூவரும் சமையலறையை ஒருவழியாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் கலாய்த்துக் கொண்டே அவர்கள் செய்த உணவிற்கு பெயரிட்டு கொண்டிருந்தனர் செந்திலும் ஹரிஹரனும்.

இவர்களின் இந்த அலப்பறையை எல்லாம் புன்னகை முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார் குணவதி.

அப்பொழுது ஹரிஹரன், “ஃபிளவர் இன்னிக்கு நைட்டு உனக்கு டியூட்டி இருக்குல்ல?” என்றான். “ஆமா டா கரிச்சட்டி. முதல் நாள் டியூட்டி, அதுவும் நைட்ல போட்டுட்டாங்கஎன அவள் கூற,

எப்படியும் அங்க போய் தூங்கத் தான போற, அதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்?” என்று அவளிடம் அடியையும் சேர்த்து வாங்கிக் கொண்டான்.

இங்க பகல்லயே அதிக கேஸ் வராதுனு பெரிய டாக்டர் சொன்னாரு டா. அதுனால தான் நம்ம ஊரா ஊரா கேம்ப் போட உடனே சம்மதம் சொன்னாங்க. அப்படியாவது மக்கள் வருவாங்கனுஎன்றவள், “ஆனா ஒன்னு. அஞ்சு பேரையும் ஒரே இடத்துல போடாம வேறவேற ஊர்ல போட்டாங்க. இல்லனா அஞ்சு பேரும் ஒரே ஆஸ்பத்திரில இருந்தோம் அவ்ளோ தான், வர்ற நாலு பேஷண்ட் கூட தெறிச்சு ஓடிருவாங்கஎன அவள் புன்னகைக்க,

எங்கள எல்லாம் பார்த்தா அவ்ளோ பயமாவா இருக்கு?” என்றாள் இந்திரா. “பயம் இல்ல டி, நீ எப்பப் பாத்தாலும் சோத்து மூட்டையும் கையுமா இருப்ப. இதுங்க ரெண்டும் லவ் பண்றேன் பேர்வழினு கண்ணும் கண்ணும் நோக்கியானு சுத்திட்டு இருக்கும். இவன சொல்லவே தேவயில்ல, பல்லு போன ஆயால இருந்து ஒருத்தரையும் விடாம சைட் அடிப்பான். உங்கள எல்லாம் டாக்டர்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணா கூட இங்க யாரும் நம்ப மாட்டாங்க, அப்புறம் எங்க பேஷண்ட்ஸ் வர்றது?” என அவள் உச்சுக் கொட்ட, தங்களை நக்கலடித்த அவளை நால்வரும் கொலைகாண்டில் பார்க்க, அங்கிருந்து தப்பித்து ஓடினாள் மலர்விழி.

அன்றையபொழுது அழகாய் நகர, தனது பணிக்குக் கிளம்பினாள் மலர்விழி. அவள் மனம் ஏனோ அலைபாய, சற்று வாடி இருந்தவளைக் கண்டு, “என்னாச்சு ஃபிளவர்? ஏன் டல்லா இருக்க?” என்றான் ஹரிஹரன்.

தெரியல டா. ஏதோ மனசு ஒருமாதிரி அடிச்சுக்கிது. முதல் நாள் டியூட்டி, அதுவும் நம்ம ஊர்லயேனு நினைக்கும்போது சந்தோசம் தான் வரணும். ஆனா அதுக்கு ஆப்போசிட்டா மனசு கனமா இருக்கு டாஎன்றாள் மலர்விழி.

என்னாச்சு ஃபிளவர், ஏற்கெனவே நம்ம ஒரு வருஷம் பிராக்டிஸ் முடிச்சு தான இங்க வந்தோம். பிராக்டிஸ்லயே நீ அசத்துனவளாச்சே. அப்புறம் ஏன் பயப்படற?” என்றவாறே அவள் தோளில் கைப்போட,

பயம்னு இல்ல டா. ஆனா, ஒரு மாதிரி இருக்குஎன்றவள், தன்னை சமன்படுத்திக் கொண்டு, “சரி, நீ என்னை ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொண்டு வந்து விடு டாஎன அவள் கிளம்ப,

இரு, வண்டி சாவிய எடுத்துட்டு வரேன்என்றவன், தன் அறைக்குச் சென்றான். தன் தாயிடம் ஆசி பெற்றவள், அங்கிருந்து கிளம்ப, இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த அரசு மருத்துவமனையை நோக்கி கார் பயணமானது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
8
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. s.sivagnanalakshmis

      சஸ்பென்ஸ் போகுது கல்யாணம் யாருக்கு?.பாரிக்கு ஏதாவது நடக்குமா?.

    2. ஹரி செம. மலருக்கு என்ன பயம்?