Loading

போவோமா ஊர்கோலம்..

அத்தியாயம் -01

நடுநசி இரவு நேரம் அது.

இல்லத்தில் அனைவரும் உறங்கி விட்டார்களா என்று ஒருமுறை எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்தவன் தந்தை உறங்காமல் இருப்பதை கண்டு அவனின் மனமே வெறுத்து போனது.

” நாளைக்கு உன்னைய பார்க்க பொண்ணு வூட்டுக்காருவ வராணுவ, நீனு எங்கன வெளியே போவதா ராசா “என அவனின் அன்னை கூறியது இன்னும் அவனின் செவியில் ஒலித்து கொண்டே இருந்தது.

அவனுக்கு தான் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை.

கல்லூரிபடிக்கும் போது ஏற்பட்ட காதல் தோல்வியால் பெண்களை அறவே வெறுத்தான் அவன்.

” பொண்ணுங்கன்னா பிசாசுங்க, பணப்பேய்ங்க, கொடுமைக்காரிங்க, எவளையோ தூக்கி என் தலையில கட்டி வைக்க பார்க்கறீயா ஆத்தா “என்றவனிடம்,” இந்தா டா சேது எனக்கு இருக்கற ஒரே ஆம்புள புள்ளய்யா நீனு, உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பேரன் பேத்திய பார்க்கணும் ன்னு ஒரு பெத்த தாய் நினைக்கறது தப்பா டா ராசா ” என்று அவனின் அன்னை கூற,அவனோ ” இந்தா ஆத்தா இதே டைலாக்க எத்தனை வாட்டி தான் சொல்லுவ, வேற பல்லவியை பாடு ” என்று சலிப்பாக கூறினான் அவன்.

அவனின் அன்னையோ ” ஏன்ய்யா ராசா இப்ப ஏதும் பேச வேணாம், நீனு போயி சாப்பிட்டு தூங்கு, காலையில பேசிக்கலாம் ” என்று அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க, அவனுக்கு தான் எங்கேயாவது ஓடிவிடலாம் என்று தோன்றியது.

அவனும் தாயின் வார்த்தைக்கு மறுச்சொல் ஏதும் பேசாமல் இரவு உணவை உண்டு விட்டு அமைதியாக அறைக்கு சென்றவனின் மனமோ ஒலையாய் கொதித்தது.

நொடிக்கொரு பத்து தரம் அறைக்கும் கூடத்துக்கும் எட்டி எட்டி பார்த்து சோர்ந்து போனவன், சிறிது நேரம் கழித்து மீண்டும் கூடத்தை நோக்கி பார்வையால் அலசினான்.

அங்கு அவனின் தந்தையோ குறட்டை அடித்து மல்லாந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

‘ அப்பாடா மனுஷன் தூங்கிட்டாரு, இது தான் சரியான நேரம் நாம இங்கிருந்து எஸ்கேப் ஆகிடலாம் ‘ என்று யோசித்தவாறே அவனின் உடமைகளை ஒரு பையில் எடுத்துவைத்துக்கொண்டு மொபைல் சார்ஜ், கிரெடிட் கார்டு, ஹெல்மெட், ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவனின் நினைவோ அவனின் தாயிடம் சென்றது.

நேராக தாய் உறங்கும் இடத்துக்கு சென்றவன் அவரின் பாதத்தை தொட்டு தன் விழிகளில் ஒற்றி கொண்டவன் விருவிருவென கதவை திறந்து வெளியேறி அங்கு ஒரு ஓரமாக நின்று இருந்த தனது ராயல் என்பீல்ட்டை இரண்டு வீடு வரைக்கும் தள்ளி சென்ற பிறகு ஒரு உதை உதைக்க அது பயங்கர சத்ததோடு மின்னல் வேகத்தில் கிளம்பியது.

வண்டியில் சென்று கொண்டு இருந்தவனின் உள்ளமோ ஒரு இக்கட்டாண சூழ்நிலையில் இருந்து தப்பித்து வந்தது போல் இருந்தது அவனுக்கு.

மார்கழி மாதம் குளிற்காற்று அவனின் தேகத்துக்கு தீண்டி செல்ல,இந்த பனிக்காலத்தின் இரவு பயணம் அவனுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது.

கிராமத்தில் இருந்து கரூர் தேசியநெடுஞ்சாலையில் வந்தடைத்தவனுக்கு அப்போது தான் அப்பாடா என்று இருந்தது…

அவனின் அப்பாடா என்ற நிம்மதி அய்யோ வென்று ஆக போகிறது இன்னும் சிறிது நேரத்தில்.

சரியாக பத்து கிலோமீட்டர் வரைக்கும் நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தவன், ஏதேற்சையாக ஒரு உருவம் அவனின் வண்டியை பார்த்து கையை நோக்கி அசைந்தது.

அவனோ கொட்டும் பனியில் கூட கருப்பு நிறம் குளிர்கண்ணாடியை அணிந்து இருக்க, அவ்வுருவமோ அவனின் விழிகளுக்கு கருப்பாக தெரிய, ” யாரு இது முடிலாம் விரிச்சுப்போட்டுட்டு பேய் போல இருக்கு, அய்யோ நிஜமாவே பேய் தானா, ஆமா எதுக்கு என்னைய பார்த்து கைய காட்டுது ” என்று தனக்குள் பேசியவரே அந்த உருவத்தை தாண்டி செல்ல, ” டேய் எடுப்பட்ட பயலே வண்டியை நிறுத்து டா ” என்று கத்த, அவனும் ‘ என்ன இது பேய் பேசுது அதுவும் பொண்ணு வாய்ஸ்ல ‘ என்று யோசித்தவாறே வண்டியை நிறுத்தி திரும்பி பார்க்க, அவளோ தூக்க முடியாமல் இருந்த பெட்டியை கடினப்பட்டு இழுத்துக்கொண்டே அவனை நோக்கி வந்தவள், அவனிடம் ஏதும் பேசாமல் பக்கத்து இருக்கையில் ஏறி அமர, அந்த பெட்டியை எப்படி தூக்குவது என்பதை போல் முகத்தை ‘உர்’ என்று வைத்து இருந்தவளை கண்டு ஆடித்தான் போனான் அவன்.

” ஏய் நீயா இறங்கி டி கீழ, ஏன் டி இந்த வாட்டி எவன் கூட ஓடலாம்ன்னு பிளான் பண்ணி பொட்டிய தூக்கிட்டு வந்த, இந்தா டி கீழ இறங்குன்னு சொல்றேன்ல ” என்றவனின் வார்த்தைகள் அவளின் செவியில் வாங்கினால் தானே, அவளோ பெட்டியை தூக்குவதிலே குறியாக இருக்க, அவன் தான் கத்திக்கொண்டே இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த காவல்துறையினரின் ஜீப் இருவரை கண்டு நின்றது.

போலீஸ் வண்டி வந்து நின்றதை கூட கவனிக்காமல் அவன் பாட்டுக்கு அவளிடம் கத்திக்கொண்டே இருக்க, அவள் தான் திருத்திருவென முழிக்க வேண்டியதாகி போனது.

” டேய் சேது போலீஸ் டா செத்த நாழி கம்முனு இரு அவங்க போனதும் என்னைய என்ன வேணாலும் திட்டு டா ” என்றதும், ” அடியேய் சண்டாளி மறுபடியும் என் வாழ்க்கைல நுழையலாம்ன்னு பாக்கறியா, இந்தா டி நான் இப்ப எங்கன போறேன் ன்னு உனக்கு தெரியுமா, கைலாசாக்கு போறேன் டி, இனி நீயே நினைச்சாலும் என்னைய பார்க்க முடியாது, என்ன டி நான் பேசிட்டே இருக்குறேன் நீ பாட்டுக்கு என்னமோ புருஷன் மேல கையை போடற போல என் தோள் மேல கையை போடற, மரியாதையா கையை எடுத்துடு இல்லை செவுல நாலு அப்பு அப்புவேன் ” என்றதும் அவனின் கன்னத்தை பதம் பார்த்தது போலீஸ் சாரின் ஐந்து விரல் தடம்..

அவனும் யாரு அடித்தது என எரியும் கன்னத்தை பிடித்துக்கொண்டே திரும்பி பார்த்த போது அதிர்ந்து தான் போனான் ஆடனவன்.

” ஏன் டா நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு கிடக்குறேன், நீயும் இந்த பொண்ணை திட்டிட்டே இருக்குற, யாரு டா நீ இந்த பொண்ணுக்கு? ” என்று மிரட்ட, அவனோ ” சார் அதுவந்து இந்த பொண்ணு யாருனே எனக்கு தெரியாது சார், வண்டியை நிறுத்தாமலே ஏறி உட்கார்ந்து என் கழுத்துல கத்தியை வச்சி இதோ இந்த செயின் வேணும் ன்னு கேட்குது சார் ” என்று அவனின் கழுத்தில் இருந்த பித்தளை செயினை எடுத்து வெளியே காட்டி ஒரு பொய்யை சொன்னான் அவன்.

அந்த போலீஸ்காரனோ அவளை ஒரு மார்க்கமாக பார்க்க, 

அவளோ, ” அடப்பாடுப்பாவி என்னமா பொய் சொல்றான், நான் எங்க டா உன் கழுத்துல கத்தியை வச்சேன், சார் இவன் வாயை திறந்தாலே பொய்பொய்யா பேசுவான் சார், இங்க பாருங்க சார் என்கையில கத்தியே இல்லை ” என்று அவளின் இரு கரத்தை விரித்து காட்ட, அவனோ, ” இல்லை சார் நீங்க வந்தது தெரிஞ்சதும் இவ அப்படி ஓரமா புதருல தூக்கி போட்டுட்டா சார் ” என்றதும் அவனை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள்..

” ஏலேய் நிப்பாட்டுங்க டா, ஏன்மா நீ என்ன இந்த அர்த்த ராத்திரில அதுவும் பொட்டியை தூக்கிட்டு இவன் கூட வண்டில போற, வூட்டுக்கு தெரியாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ஓடி போறீங்களா?” என்று கேள்வியை வைக்க, இருவரும் திகைத்து தான் போனார்கள்..

அவனோ மௌனமாக அவளை வெறித்து பார்த்துக்கொண்டே இருக்க, அவளோ ” சார் நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் பாண்டிச்சேரிகு ஒரு கேம்பஸ் இன்டெர்வியூக்கு போய்ட்டு இருக்கோம் சார், ” என்று ஒரு பொய்யை கூற, அவளை உற்று நோக்கி பார்த்தான் சேது.

போலீஸ் சாரோ இருவருக்கும் அறிவுரை கூறி ஆயிரம் பத்திரம் கூறி வாழ்த்துக்கள் கூறி அவர்களை வழியனுப்ப படாதப்பாடுபட்டு நொந்து போனார்..

” தம்பி நீங்க பத்திரமா கிளம்புங்க, இப்ப கிளம்பினா தான் நாளைக்கு காலையில வெரசா பாண்டிச்சேரிக்கு போயி சேர முடியும் ” என்றதும் அவனோ ” சார் நான் சொல்லவரத்த கொஞ்சம் கேளுங்க சார் ” என்றவனிடம், ” நீ ஒன்னும் சொல்லும் வேணாம் தம்பி நாழி ஆகுது கிளம்புங்க ” என்று விடாபிடியாக கூற, சேதுவோ ” இல்லை சார் இவ யாருனே எனக்கு தெரியாது, இவளை நீங்களே கூட்டிட்டு போங்க எனக்கு வேற சோலி இருக்கு ” என்று வண்டியில் ஏற முயன்றவனை தடுத்து நிறுத்தி, ” என்ன டா நானும் பொறுமையா ஏதோ அறியாத பசங்களா இருக்கீங்களே ன்னு போனா போட்டோம் ன்னு விட்டா ஓவரா இந்த பொண்ணு யாருனு தெரியாதுனு முன்னூறு தடவை சொல்லிட்டு கிடக்குற, கிளம்பு டா இந்த பொண்ணை கூட்டிட்டு, இல்லை லாக்கப்ல வச்சி முட்டி பேத்து எடுத்துடுவேன் ” என்று மிரட்டியதும் தான் அவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

அவர்கள் சென்ற பிறகு சிறிது நேரம் அங்கேயே நடைப்பயிற்சி செய்துவிட்டு கிளம்பினான் அந்த இன்ஸ்பெக்டர் சதீஷ்.

நாயகனோ ” ஏய் என்ன நீ வண்டி வண்டியா பொய் பேசற, உனக்கு இப்படிலாம் பேச வருமா? ” என்று கூறியதும், கெக்கபிக்கவென நகைத்தாள் அவள்..

சேதுபதி என்ற பெயரை சுறுக்கி தான் சேது என்று அழைப்பார்கள்.

இயந்திர பொறியாளர் பட்டதாரியான அவன், வீட்டுக்கு ஒரே ஆண்மகன். 

அடுத்து அவள் தான் சைலஜா. மின்னணு பொறியாளர் பட்டதாரியான அவள் வீட்டுக்கு தெரியாமல் ஓடி வந்த வழியில் தான், வாழ்க்கையின் யாரை முக்கியமாக பார்க்க கூடாது என்றியிருந்தாளோ அவனின் வண்டியை இன்று கண்ட பிறகு அவனிடம் எப்படி உதவி கேட்பது என்று முழிக்க, ஆள் நடமாட்டம் இல்லாத அந்த தேசிய சாலையை கண்டவளுக்கு அச்சம் தொற்றி கொள்ள, வேறு வழி இல்லாமல் அவனின் வண்டியை நோக்கி கையை காட்டினாள்.

அவனோட வண்டியை நிறுத்தாமல் செல்லவதை கண்டவளுக்கோ கோவம் தலைகேறியது.

” டேய் எடுப்பட்ட பயலே “என்றதும் தானே அவன் வண்டியை நிறுத்தினான்.

அவனும் அவளும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு துறையில் பயின்றவர்கள் ..

சேதுவோ மெக்கானிக்கல் துறையை தேர்தெடுக்க, சைலஜாவோ மின் மற்றும் மின்னணு துறையை தேர்வு செய்தாள்.

ஒர்க்ஷாப் லேப்க்கு இரண்டு துறைக்கும் ஒன்றாகவே தான் பயிற்சி நடக்கும்.

அப்படி அடிக்கடி இருவரும் பார்த்து சந்தித்த போது தான் நட்பு ஏற்பட்டது.

மூன்று மாதம் இவர்களின் நட்புக்கு எந்த இடைச்சலும் வராமல் அழகான நாட்களும் நகர்ந்து கொண்டே செல்ல, இருவரும் மிக நெருங்கமான நண்பர்களானார்கள்..

ஒன்றாகவே அமர்ந்து மதிய உணவை சாப்பிடுவது, வாரத்தில் மூன்று நாட்கள் சேதுவோடு தான் வண்டியில் கல்லூரிக்கு வருவாள்.

இது இரண்டு துறை மாணவர்களின் விழிகளுக்கு தவறாக தெரிய, சேதுவும் சைலுவும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தியை பரப்பி இது இருத்துறை தலைவர்களுக்கும் ஆசிரியர்கள் செவிக்கும் சென்றடையத்தது…

ஆசிரியர்களும் இது அறியாத வயதில் வரும் ஈர்ப்பு மட்டுமே என்று சாதாரணமாக நினைத்து விட்டது தான் அந்த நண்பர்களின் கல்லூரி வாழ்வில் பெரும் புயலே அடித்தது…

அப்படி என்ன புயல் அடிச்சதுனு நேரம் வரும் போது சொல்றேன்.

” ஏய் எங்கன போவணும் நீயி ” என்றதும் அவளிடம் இருந்து தெரியாது என்ற பதிலே வந்தது.

” ஏய் என்ன விளையாடறியா, அப்புறம் உன்னைய காணோம்னு உன் அப்பன் என்னைய பிடிக்க ஆளு அனுப்புவாரு டி வெண்ண மவளே, ஒழுங்கா கீழ இறங்கு டி இந்த நடுராத்திரில தலை முடியை வேற விரிச்சு போட்டுட்டு வந்திருக்குற, ஏய் என்னை தொடாத, கையை எடுடி ” என கத்திக்கொண்டே வண்டியை நிறுத்தினான்.

” ஏய் நீ முதல்ல கீழ இறங்கு எந்த பக்கம் போவணுமோ, அந்த பக்கம் பஸ் வரும் அதுலே கிளம்பு, ஆத்தா போதும் உன்னால நான் அவமான பட்டது, இனி நீ முன்னாடி வந்த அவ்வளவு தான் துண்டு துண்டா வெட்டியே போட்ருவேன் ” என்று அவளின் பெட்டியை தூக்கி கீழ வைத்துவிட்டு அவளையும் இறங்க சொன்னான்.

அவளும் தன் கர்வத்தை விட்டு கொடுக்காமல், ” என்ன டா விட்டா ஓவரா பேசிட்டே போற உன் கூட ஊர் சுத்தணும்ன்னு எனக்கு ஆசையா என்ன போ டா வெண்ண மவனே ” என்க வண்டியில் இருந்து கீழ இறங்கியவளை கண்டு, ” ஏய் ஒழுங்கா வீட்டுக்கு போயி சேரு பொம்பள புள்ளயா இருக்குறியேனு அக்கறை தான் சொல்றேன், உலகம் ரொம்ப மோசம் கெட்டு சீரழிஞ்சி கிடக்குது ” என்று கூறி அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அவளை பேருந்து நிலையத்தில் இறங்கிவிட அவனோ மின்னல் வேகத்தில் சென்றான்.

அவளோ, ” ச்சே கல்நெஞ்சகாரன் ஒருத்தி தனியா இருக்குறாளே என்ன ஏது எதுக்கு வந்த என்ன பிரச்சனைன்னு கேட்டா வாயி என்ன கோணலாவா ஆவ போவுது, சரியான முரட்டு பயலா இருப்பான் போல, ” என்றவளின் மனசாட்சியோ ” ஆமா நீ பண்ண வேலைக்கு அவன் உன்னைய இப்படியே விட்டதே பெரிசு, என்ன ஏதுன்னு கேட்டா அவனை தான் நீ எல்லாருகிட்டையும் மாட்டி விடுவியே, உன் சேட்டையை முதல்ல அடங்கு ” என்று அவளின் மனசாட்சி அவளை காரி துப்ப, அவளோ ” இந்தா உன்னைய யாரு இங்கன வர சொன்னது கம்முனு கட, நானே பயத்துல இருக்குறேன், அந்த ஆளு வேற என்னையே குறுகுறுன்னு பாக்குற போல தெரியுதே ச்ச குடிகாரபய, ஐயோ நம்மளை தான் பாக்குறானோ ” என்ற பயத்தோடு என்ன செய்வதென்று அறியாமல் அங்கேயே நின்றவளுக்கு இந்த பனியில் கூட முகத்தில் முத்து முத்தாக வியர்வை கொட்டியது.

அந்த குடிகார பயலோ அவளை நோக்கி வர அவளின் பயம் மேலும் அதிகரித்தது.

பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள அனைத்து கடைகள் மூடி இருக்க அங்கு ஒரே ஒரு வயதான முதியவர் மட்டுமே உறங்கி கொண்டு இருக்க, அதை பயன்படுத்திய அந்த குடிகார ஆயோக்கியனோ அவளை நெருங்கி வந்தான்.

அவளோ கண்களை மூடி கடவுளிடம் வேண்டி கொண்டு இருந்தாள், ” முருகா ஏதோ அவசர புத்தியால வூட்டை விட்டு வந்துட்டேன், தப்பு தான் அதுக்காக எனக்கு தண்டனை கொடுத்துடாத. நான் அப்பா பாக்குற மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்குறேன் முருகா என்னைய காப்பாத்து ” என்று வேண்ட அந்த கயவனோ அவளை நெருங்கி நிற்க சமயம் அங்கு வந்து நின்றது ராயல் என்பீல்ட்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      படிச்சுட்டேன் படிச்சுட்டேன்🥳🥳🥳🥳செல்ஃபிக்கு பிரேக் விட்டு படிச்சுட்டேன்🤣🤣🤣🤣 இதுங்க ரெண்டு எதுக்காக அடிச்சுக்குதுங்கன்னு சொல்லுங்க 🤣🤣🤣