Loading

 

 

வருணிகா தேனிக்கு வந்து ஐந்து நாட்கள் ஆகிறது. அக்கம் பக்கம், சொந்தம் பந்தம் என எந்நேரமும் வந்து கொண்டிருந்தனர் அவளை பார்க்க.. நலம் விசாரிக்க..

 

அதுவும் திருமணமான மூன்று மாதத்தில், குழந்தையை பற்றிக் கேட்டவர்கள் தான் அதிகம். யாருக்கும் அவளது கர்ப்பம் பற்றிக்கூறவில்லை. இன்னும் சில நாட்கள் போகட்டும். சாரதாவின் வளைகாப்பில் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டனர். கண் திருஷ்டி படக்கூடாது என்று இந்த ஏற்பாடு.

 

ஐந்து நாட்களாக, கணவன் தன்னை அழைத்துப் பேசாததில், வருணிகாவிற்கு மலையளவு வருத்தம். அவளாக அழைத்தாலும், சரியாக பேச மறுக்கிறான். அன்று கிளம்பச் சொன்னதோடு சரி.

 

அங்கிருந்து மூன்று நாட்களுக்குப்பிறகு கிளம்பும் வரையிலும் கூட, ஹரிஹரன் எதுவும் பேசவில்லை. அவர்களை வழியனுப்பி விட்டு, அடுத்த நாளே அவன் பெங்களூர் செல்வதாக கூறி விட்டான்.

 

கைபேசியை சோகமாக பார்த்துக் கொண்டே அமர்ந்து இருக்க, சந்திரா அழைத்தாள்.

 

“ஹாய்டா..”

 

“என்னம்மா.. புது அம்மா.. என்ன பண்ணுறான் உன் குழந்தை? சமத்தா இருக்கானா?”

 

“பிள்ளைக்கு உருவமே வந்துருக்காது. அதுக்குள்ள பையன்னு முடிவு பண்ணிட்டியா?”

 

“ஏன் பையன் வேணாமா? பெத்துக்கோ வருணி. உன் ஹஸ்பண்ட் மாதிரி ஒரு பையன பெத்துக்கோ”

 

“ம்ம்.. பெத்துக்கலாம்”

 

“வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

 

“நல்லா இருக்காங்க. உனக்கு உடம்பு எப்படி இருக்கு?”

 

“நல்லா இருக்குமா. உன் உடம்பு எல்லாம் நல்லா பார்த்துக்கிறியா?”

 

“நல்லா தான் பார்த்துக்குறேன்.”

 

“உன் ஹஸ்பண்ட் உன்னை கவனிச்சுக்கிறாரா? இப்ப தேனியில தான இருக்க? அவர் பேசுனாரா?”

 

“நான் அப்புறம் பேசுறேன். சித்தி கூப்பிடுறாங்க” என்று அவசரமாக அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

 

மேனகா அவளுடைய அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

 

“யார் கிட்ட பேசிட்டு இருந்த?” என்று கேட்டதும், வருணிகா திருதிருவென முழித்தாள்.

 

“சந்திராவா? அவ கிட்ட பேச்ச கட் பண்ணலயா நீ இன்னும்?”

 

“அண்ணி”

 

“இங்க கொடு” என்று கைபேசியை வாங்கியவள் தூரமாக சென்று சார்ஜரில் போட்டு விட்டு வந்து அமர்ந்தாள்.

 

இந்த நிலைமையில் சொல்வதா? வேண்டாமா? என்று சில நொடிகள் யோசித்தாள். இதை வளர விடுவதும் சரியில்லை என்று நினைத்தவள், பேசி விட முடிவு செய்து விட்டாள்.

 

“நான் ஒன்னு சொல்லுறேன். பொறுமையா கேளு”

 

“சொல்லுங்க அண்ணி”

 

“சந்திரா கிட்ட நிறைய ஒட்ட வேணாம்னு ஏன் சொல்லுறேன்னு தெரியுமா?”

 

“அண்ணி அவ பாவம். குடும்பப் பிரச்சனைக்கு அவ என்ன செய்வா?”

 

“குடும்பத்துல பிரச்சனை தான். என்ன பிரச்சனைனு தெரியுமா?”

 

வருணிகா தலையாட்ட, “சொல்லு என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.

 

“சந்திராவோட அத்தை அப்பாவ…”

 

“ம்ம்.. உன் அப்பாவ?”

 

“அப்பாவ கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டாங்க. அப்பா வேணாம்னு சொல்லிட்டார். அதுல பிரச்சனையாகி அவங்க குடும்பத்து கூட பேசுறதே இல்ல”

 

“இது தான் எல்லாருக்கும் மேலோட்டமா தெரிஞ்ச விசயம். முழுசா என்ன நடந்ததுனு உனக்குத் தெரியாது”

 

“அதுக்காக சந்திரா கூட பேசக்கூடாதா?”

 

“உனக்கு முழுசா பிரச்சனைய சொல்லுறேன். சந்திராவோட அத்த.. அந்த லேகா நல்லவ கிடையாது. குடும்பத்த கெடுக்குற பாவி”

 

“அண்ணி..” என்று அதிர்ந்து போனாள்.

 

“ஏன் இப்படி எல்லாம் ஒருத்தர பத்தி பேசுறீங்க?”

 

“நான் இல்லாதத பேசல வருணி. இதான் உண்மை”

 

“அண்ணி..”

 

“அந்த லேகாவ பார்த்திருக்க தான? கால் சரியா நடக்க முடியாது”

 

“ஆமா”

 

“அந்த பொம்பளைக்கு உடல்ல மட்டும் குறையிருந்தா பரவாயில்ல. மனசுலயும் குணத்துலையும் குறை இருக்கு. சந்திராவோட அப்பா ராஜராஜன் கூட, அவ அம்மா ஊர்வசி சேர்ந்து வாழுறது லேகாவுக்கு பிடிக்கவே பிடிக்காதாம்.

 

ஊர்வசி ரொம்ப அழகானவங்க. முக்கியமா டான்ஸ் டீச்சர். அவங்க நல்லா ஆடும்போது எல்லாம், லேகா உட்கார்ந்து ஒப்பாரி வைப்பாளாம். எதுக்கு தெரியுமா? நான் ஊனமா இருக்கேன்னு ஊர்வசி குத்தி காட்டுறதுக்காக தான், இப்படி என் முன்னாடி ஆடுறானு சொல்லி அழுவாளாம்”

 

வருணிகா அதிர்ந்து போனாள். ‘இது என்ன பழி? ஒருவரின் திறமை இன்னொருவரின் இயலாமையை குத்திக் காட்டுவதாக கூறுவதா?’

 

“இது எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? எனக்குத் தெரியாதே”

 

“நீ இந்த வீட்டுல இருக்க பொண்ணு. எல்லார பொறுத்தவரையும் நீ இன்னும் சின்ன பிள்ளை. அதுனால உன் கிட்ட பெருசா எதையும் சொல்லல. நான் இந்த வீட்டு மருமகள். இங்க நடந்த விசயங்கள நான் நல்லா தெரிஞ்சுக்கிட்டா தான், குடும்பத்த என்னால அடுத்த தலைமுறைக்கு பார்த்துக்க முடியும். அதுனால எல்லாமே சொல்லிருக்காங்க”

 

“பாரேன்.. பிறந்த பொண்ணுக்கு உரிமை இல்லையாம். மருமகளுக்கு உரிமைய தூக்கி கொடுக்குறாங்களாம்.”

 

மேனகா சிரிக்க, வருணியும் சிரித்தாள்.

 

“நீயும் இன்னொரு வீட்டு மருமகள் தான். அங்க உனக்கு முதல் உரிமை கொடுப்பாங்க. ஆனா, இங்க நீ சின்ன பிள்ளை. உன்னை கொஞ்ச தான் செய்வாங்க. பிரச்சனைய தூக்கி உன் தோள்ல போட மாட்டாங்க”

 

வருணிகா புரிதலோடு தலையசைத்தாள்.

 

“விசயத்தை முழுசா கேளு. எங்க எங்கையோ போறோம்.” என்றவள் மீண்டும் ஆரம்பித்தாள்.

 

“லேகா இப்படி அழுது ஒப்பாரி வைக்கிறது மட்டும் இல்ல. இன்னும் நிறைய பண்ணுவா. அவளுக்கு ஊர்வசி சந்தோசமா இருக்கது பிடிக்காது. நரக வேதனைய அனுபவிச்சு இருக்காங்க ஊர்வசி. அதை எல்லாம் சந்திராவோட அப்பா கிட்ட சொன்னா…

 

என் தங்கச்சியே பாவம் நடக்கவே முடியாது. அவ போய் உன் சேலைய கிழிச்சுட்டா.. எண்ணைய கொட்டிட்டா.. தீய வச்சுட்டானு அபாண்டமா பழி போடுறியே.. அவள அப்படி சொல்லாதனு சொல்லி இருக்காரு.

 

ஊர்வசி, சந்திரா பிறக்குற வரை இதை எல்லாம் தாங்கி இருக்காங்க. சந்திரா பிறந்துட்டா சரியா போகும்னு வாழ்ந்துருக்காங்க. சந்திரா பிறந்தப்புறம், உண்மையிலயே பிரச்சனை சரியாகி இருக்கு. ஆனா வேற விதத்துல.

 

ஊர்வசி பச்சை உடம்புல இருக்கும் போது, ஈவு இரக்கம் இல்லாம, பச்ச தண்ணிய கொண்டு வந்து அவங்க தலையில ஊத்தி… எழுப்பி விட்டு, எனக்கு சுடு தண்ணி வச்சுக் கொடு. குளிக்கனும். போய் சமையல் செய். மகாராணி மாதிரி தூங்கிட்டு இருக்க? ஒழுங்கா எனக்கு சமைச்சு போடுறது தான் உன் வேலை. அதுக்குத்தான் என் அண்ணன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததேனு சொல்லி இருக்கா”

 

வருணிகா அதிர்ச்சியில் அசையாமல் அமர்ந்து விட்டாள். நெஞ்சை பிடித்துக் கொண்டாள். உள்ளம் பதறியது. ‘இப்படியா ஒருவரை கொடுமை செய்வார்கள்?’

 

“இத பார்த்து சந்திராவோட அப்பா ஒன்னும் சொல்லலையா?”

 

“ஒன்னுமே சொல்லலையாம். அவர் கிட்ட இந்த வில்லி அழுதுருக்கா. அண்ணி கிட்ட பசிக்குதுனு சாப்பாடு தான் கேட்டேன். அதுக்குப்போய் என்ன என்னமோ என் மேல பழி போடுறாங்கனு. அவரும் உடனே அதை நம்பிட்டு பொண்டாட்டிய போட்டு அடிச்சுட்டாரு”

 

“கடவுளே..”

 

“ஏற்கனவே தண்ணிய ஊத்துனது.. அடுத்து அடி வாங்குனதுனு அவங்களுக்கு ஜன்னி வந்துடுச்சு. ஊர்வசியோட மொத்த குடும்பமும் வந்து பஞ்சாயத்து பண்ணிட்டாங்க. ஊர்வசி பஞ்சாயத்துல வச்சு, லேகா பண்ணது, புருஷன் பண்ணது, எல்லாத்தையும் சொல்லி அழுதுருக்காங்க. உடனே லேகாவ எங்கயாவது அனுப்ப சொல்லி, பஞ்சாயத்துல கேட்டுருக்காங்க.

 

அவர்… முடியாவே முடியாது. என் தங்கச்சி என் கூட தான் இருப்பா. இவளுக்கு நாங்க வேணாம்னா, பிரிச்சு விட்டுருங்கனு சொல்லிட்டாரு. இந்த கொடுமையில இனியும் வாழுறத விட, பிரிஞ்சு போறதே மேல்னு ஊர்வசி பிரிஞ்சுட்டாங்க. ஆனா, சந்திராவ தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

 

சந்திராவ, லேகா.. நான் வளர்க்குறேன்னு வச்சுக்கிட்டு தர மாட்டேன்னு அடம் பண்ணி இருக்கா. ஊர்வசிக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு, அவரோட குடும்பமும் பிள்ளைய நீயே வச்சுக்கனு விட்டுட்டு போயிட்டாங்க”

 

“பாவம்ல சந்திரா?”

 

வருணிகாவை தான் இப்போது மேனகா பாவமாக பார்த்தாள்.

 

“சந்திராவ நான் வளர்க்குறேன்னு சொன்ன லேகா, ஒரு நாள்கூட அவள வளர்த்தது இல்ல. அவள வளர்த்தது எல்லாம், அவங்க வீட்டுல எடுபிடி வேலை செஞ்ச பருவதம் தான். சந்திராவோட அப்பா வரும் போது மட்டும், பிள்ளைய தூக்கி வச்சுக்கிட்டு நல்லவ மாதிரி நடிப்பாளாம்.”

 

“ம்ம்”

 

“உனக்கும் சந்திராக்கும் ரெண்டு வயசு இருக்கும். அப்போ தான், உங்கம்மா போய் சேர்ந்தாங்க. மாமா உன்னை வச்சுகிட்டு, உலகமே இடிஞ்சு போன மாதிரி அலைஞ்சுருக்காரு.

 

எல்லாரும் சேர்ந்து, இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசி இருக்காங்க. அதுக்கு தான் லேகாவ பார்த்தாங்க. லேகாவுக்கு ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல. ஆனா, நம்ம வீட்டு சொத்துல ஒரு கண்ணு.

 

அவளோட அண்ணன் சம்பாதிச்சாலும், நிறைய சொத்துனு தங்குனது இல்ல. நம்ம வீட்டுல அவங்கள விட ஒரு படி மேல இருக்கோம். அதுனால சொத்து கிடைச்சா போதும்னு, கல்யாணம் பண்ணிக்க ரெடியாகி இருக்கா”

 

“ஓ…”

 

“ஆனா கல்யாணம் நடக்கல. முதல்ல, மாமா வேணாம்னு மெதுவா தான் சொல்லி இருக்காரு. ஆனா, ஊர் பெருசுங்க கேட்காம, கல்யாண விசயத்தை பேசிக்கிட்டே இருந்துருக்குங்க. ஒரு நாள் என்ன நடந்துச்சோ தெரியல.. உன் அப்பா வந்து, இனிமே கல்யாணத்த பத்தி பேசுனா அவ்வளவு தான்னு எல்லாரையும் மிரட்டிருக்காரு”

 

“ஏன்?”

 

“சொல்லுறேன். அவர் மிரட்டிட்டு, அன்னைக்கு நைட்டே உன்னைக் கூப்பிட்டுக் கிட்டு ஊர விட்டுப் போயிட்டாரு. இங்க அந்த லேகா… விசயத்தைக் கேட்டு சூஸைட் அட்டன் பண்ண போயிட்டா”

 

“அய்யய்யோ..”

 

“பதறாத. அதான் இப்பவும் குத்துக்கல்லு மாதிரி இருக்காளே.அவளுக்கெல்லாம் ஒன்னும் ஆகாது. இவ தான் அடுத்தவங்களுக்கு எதையாவது செய்வா”

 

வருணிகாவின் கையைத்தட்டிக் கொடுத்தவள், மிச்சத்தையும் சொல்ல ஆரம்பித்தாள்.

 

“அவளுக்கு ஒன்னும் பெருசா ஆகல. காப்பாத்திட்டாங்க. ஆனா, அத வச்சுட்டு உங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. இல்ல இல்ல.. மிரட்டுனாங்க”

 

“ஓஓ.. அப்புறம்?”

 

“உங்கப்பா.. கல்யாணத்த பத்தி பேசுனீங்கனா, ஊரு பக்கமே வர மாட்டேன்னு சொல்லி, மூணு மாசமா வரவே இல்லையாம். எனக்கென்னவோ.. இவ.. அதான் இந்த லேகா, இப்படி சாகுற மாதிரி நடிப்பானு தெரிஞ்சு தான் உங்கப்பா ஊர விட்டு போயிட்டாரோனு தோனுது”

 

“நிஜம்மாவா?”

 

“ம்ம்.. அதுக்கப்புறம் லேகாவுக்கு வேற பையன பார்த்துருக்காங்க. அவன் நிச்சய வீட்டுல உட்கார்ந்துக் கிட்டு, பொண்ணுக்கு கால் சரி இல்ல. வரதட்சணை நிறைய கொடுத்தா தான் கல்யாணம் பண்ணுவேன்னு பேசி இருக்கான். அதுல பிரச்சனையாகி, அந்த கல்யாணம் நின்னுடுச்சு. அதுக்கப்புறம் எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டா லேகா.”

 

“ம்ம்”

 

“அதோட விட்டாங்களா? சொந்த பந்தம் எல்லாம், சந்திராவோட அப்பாவுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சு இருக்காங்க. அது லேகாவுக்குப் பிடிக்கல.

 

சந்திராவ காட்டி.. இவள சித்தி கொடுமைக்கு ஆளாக்கிறாதனு ஒரே அழுகையாம். அந்த கல்யாண பேச்சும் நின்னுடுச்சு. நான் நல்லா இல்லாதப்போ, அண்ணன் மட்டும் எப்படி சந்தோசமா இருக்கலாம்னு கெட்ட எண்ணம்.

 

ஆனா.. சந்திராவோட அப்பாவுக்கு, கல்யாணம் ஆகாம திண்டுக்கல்ல ஒரு குடும்பம் இருக்கு”

 

“அண்ணி” என்று வருணிகா பதறி விட்டாள்.

 

“நிஜம்மாவா சொல்லுறீங்க?”

 

“ஆமா.. இருக்கு. இது லேகாவுக்கு தெரிஞ்சாலும், இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வராத வரை சரினு விட்டுட்டா”

 

“இது சந்திராவுக்கு தெரியுமா?”

 

“தெரியும்னு தான் நினைக்கிறேன். அதான் அந்த லேகா சொல்லுறத, வேத வாக்கா நினைச்சுக்கிட்டு, அவங்கப்பாவ விட்டு தள்ளி இருக்கா”

 

“பாவம் தான அண்ணி?”

 

“பாவம் தான். அவ இல்ல நீ. நீ தான் இப்போ‌ பாவம்”

 

“நானா?”

 

“நீ மட்டும் தான். லேகாவ உங்கப்பா ஏன் கல்யாணம் பண்ணல தெரியுமா? கல்யாணம் பண்ணிட்டு வந்த கொஞ்ச நாள்லயே, உன் கழுத்த திருகி கொன்னுட்டு, அத்தையையும் மாமாவயும் வீட்ட விட்டு துரத்திடனும்னு சொல்லி இருக்கா. அப்ப தான் இந்த வீட்டுக்கு, அவ மட்டும் மகாராணியா இருப்பாளாம். எப்படி இருக்கு கேட்க?”

 

“என்ன அண்ணி இதெல்லாம் நிஜம்மா?”

 

“நிஜம் தான். அதுக்கு தான் உங்கப்பா கல்யாணம் வேணாம்னு பிடிவாதமா நின்னது.  அவ கிட்ட இருந்து உன்னை காப்பாத்த உங்கப்பா துடிச்சுருக்காரு. நீ அவ வளர்த்த சந்திரா கூட ஃப்ரண்ட் ஆகிட்ட”

 

“அவ அப்படி இல்ல அண்ணி”

 

“எப்படி இல்ல?”

 

“அவ ரொம்ப நல்லவ”

 

“அப்படினு உனக்கு யார் சொன்னா?”

 

“அவ நல்லவ இல்லனு உங்களுக்கு யார் சொன்னா?”

 

“அத்தை”

 

“என்னது? சித்தியா?”

 

“ஆமா. உன் சித்தியே தான். அவங்க பொய் சொல்லி பார்த்து இருக்கியா? இல்ல.. இல்லாததும் பொல்லாததுமா பேசி பார்த்து இருக்கியா?”

 

“என்ன அண்ணி.. எதெதோ சொல்லுறீங்க?”

 

“உண்மைய சொல்லுறேன். ஸ்கூல்ல நீ பர்ஸ்ட் மார்க் எடுத்துட்டா அவ வீட்டுல எதையாவது தூக்கிப்போட்டு உடைச்சுருவாளாம். நீ டான்ஸ் ஆடி பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கும் போது, அவ வீட்டுல பல பொருள உடைச்சுருக்காளாம். எப்ப பார்த்தாலும் நீ ஜெயிக்கிறனு, அவளுக்கு அவ்வளவு பொறாமை. தூண்டி விட்டது அவள வளர்த்த லேகா. இதெல்லாம் சின்ன பிள்ளைங்க கோபம். போக போக சரியாகிடும்னு பார்த்துட்டு விட்டாங்க. ஆனா ஆகல. நீ ப்ளஸ்டூல மார்க் எடுத்தப்போ, அவளுக்கு சாக்லேட் கொடுத்தப்போ, வாங்கினவ தீயில போட்டுருக்கா. அது கூட தெரியாம நீ இருக்க”

 

“இ.. “

 

“பொறு.. எல்லாத்தையும் கேளு. நீ சேர்ந்த காலேஜ்ல தான் சேருவேன்னு அவ அடம்பிடிச்சு, பணம் கட்டி சேர்ந்தா. அதுக்கு உன் கிட்ட என்ன காரணம் சொன்னானு எனக்குத்தெரியாது. ஆனா உண்மையான காரணம் உன் கூடவே இருந்து… ” என்றவள் ஒரு நொடி தயங்கி, “குழி பறிக்கிறதுக்கு” என்று முடித்தாள்.

 

வருணிகா நெஞ்சில் கைவைத்து ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள். மேனகாவிற்கு ஏனோ சந்திராவை பிடிக்கவில்லை என்று தெரியும். பின்னால் இவ்வளவு பெரிய காரணம் இருக்கும் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

 

“நான் சொல்லுறத உன்னால நம்ப முடியாதுனு எனக்கு தெரியும் வருணி. ஆனா, ஒரு விசயம் சொல்லுறேன் யோசிச்சுப்பாரு. உன்னோட ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் கடைசி நேரத்துல சொதப்பி.. நீ கேட்ட கம்பெனி உனக்கு பண்ணி கொடுக்க முடியாதுனு சொன்னது அவளால. அடிக்கடி நீ வச்சுருக்க நோட் புக்ஸ் எல்லாம் தொலையுறதும் அவளால. அதை எல்லாம் அவ வீட்டுல போட்டு எரிச்சுடுவா.”

 

“இதெல்லாம்..?”

 

“இதெல்லாம் எனக்கு சொன்னது உன் சித்தியும், அவள வளர்த்த பருவதமும். உன் சித்தி சொன்னது கூட, எதோ கேட்டத சொல்லி இருப்பாங்கனு வை.. ஆனா பருவதம் சொன்னது எல்லாம்? அவங்க தான் சந்திராவ உன் கிட்ட இருந்து முடிஞ்ச வரை பிரிக்கச் சொன்னாங்க”

 

வருணிகா கண்கலங்கி பார்க்க, ஆதரவாக அவள் தோளை தட்டினாள் மேனகா.

 

“ஒரு வேளை இவங்க எல்லாரு சொல்லுறதும் தப்பா இருக்கலாம். நாங்க நினைச்ச மாதிரி இல்லாம, சந்திரா நல்லவளாவே இருக்கட்டும். ஆனா, நீ எங்க வீட்டு புள்ள. உன்னை கைக்குள்ள வச்சு பார்க்க வேண்டியது எங்க கடமை. உனக்கு கல்யாணம் ஆகிப்போயிட்ட. அவ போயிடுவா உன் வாழ்க்கைய விட்டுனு நினைச்சோம். ஆனா, நீ இன்னும் அவ கிட்ட பேசிக்கிட்டு இருக்க. அவ கிட்ட இருந்து உன்னை எப்படி பிரிக்கிறதுனு தெரியல. அதான் உண்மைய சொல்லிட்டேன். இப்போ நான் சொல்லுறத எல்லாம் போட்டு குழப்பிக்காத. என்னைக்காவது அவள நேர்ல பார்த்தனா.. அவ கண்ண பாரு. அதுல இது வரை எனக்கு பாசம் தெரிஞ்சது இல்ல. ஒரு வன்மத்தோட தான் பார்ப்பா. அதை நீ உணர்ந்துட்டா, அவள விட்டு விலகிடுவ. உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்”

 

மேனகா அங்கிருந்து எழுந்து சென்று விட, வருணிகா கலங்கிய கண்களோடு அப்படியே அமர்ந்து இருந்தாள். வெளியே தெய்வா பேசும் சத்தம் கேட்டது.

 

“இந்த மாதிரி நேரத்துல ஏன் இத அவ கிட்ட சொல்லுற?” என்று தெய்வா கோபப்பட, “இப்பவும் சொல்லாம இருக்க முடியாது அத்த. அவ இன்னும் பேசிட்டு இருக்கா” என்றாள் மேனகா.

 

“அதுக்காக வாயும் வயிறுமா இருக்க பிள்ளை கிட்ட போய் இதையெல்லாம் சொல்லுவியா?”

 

“இப்ப விட்டா தப்பாகிடும். நான் சொல்லுறத புரிஞ்சுக்கோங்க. இது வரை அவளுக்கு நடந்தத அவ உணரல. அவ மனசு அப்படி. எல்லாரையும் நல்லவங்கனு நம்புறா. ஆனா, இனி அவ குழந்தை இல்ல. அவளுக்கே பிள்ளை வரப்போகுது. அவ பிள்ளைய இந்த மாதிரி நொள்ள கண்ணு இருக்க ஆளுங்க கிட்ட இருந்து, அவ தான் காப்பாத்தனும். அவ ஒரு அம்மாவா மாறனும்.‌ சுத்தி இருக்கவங்களயே புரிஞ்சுக்கலனா, அவ பிள்ளைக்கு என்னத்த சொல்லிக்கொடுத்து வளர்த்து காப்பாத்துவா?”

 

“எனக்கு இது சரியா படல மேனகா. அவ இதையே நினைச்சு எதையாவது இழுத்துக்கட்டும் அப்புறம் இருக்கு உனக்கு”

 

தெய்வா கோபமாகவே பேசி விட்டுச் சென்று விட்டார்.

 

எல்லாம் மெலிதாக திறந்திருந்த கதவு வழியாக, வருணிகாவின் காதில் விழுந்தது. அப்படியே சரிந்து மெத்தையில் படுத்துக் கொண்டவள், இரண்டு மாதக் கருவான தன் குழந்தையிடம் பேசினாள்.

 

“அப்படியா செல்லம்? எனக்கு யாரையும் அடையாளம் தெரிஞ்சுக்க முடியலையா? நான் ஏமாந்து போயிருக்கனா? அவ அவ்வளவு கெட்டவளா? என் கிட்ட இனிக்க இனிக்க பேசுவாளே.. அண்ணிக்கு எங்கள பிரிச்சு என்ன கிடைக்கப்போகுது? அண்ணி என் மேல நிறைய பாசம் வச்சுருக்காங்க. அவங்க சொல்லுறத எல்லாம் நம்புறதா வேணாமா?

 

ஆனா நான் உன்னை விட மாட்டேன். உன்னை பத்திரமா பார்த்துப்பேன். என்னை எப்படி சித்தி வளர்த்தாங்களோ, அதே மாதிரி உன்னயும் நல்லா வளரப்பேன். நீ நினைச்சத எல்லாம் படிக்க வைப்பேன். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய நான் கொடுப்பேன். நீ பையனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும், அம்மா உன்னை பத்திரமா பார்த்துப்பேன்”

 

கண்ணீர் வழிய பேசிக் கொண்டே இருந்தாள். இன்னும் எதெதோ பேசினாள். வேறு யாரிடம் பேசுவது என்று புரியவில்லை. தனக்குள் இருக்கும் இன்னொரு உயிரிடம் தான், அவள் மனதை திறந்து பேச முடிந்தது. பேசி ஓய்ந்து தூங்கி விட்டாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்