Loading

 

 

 

அடுத்த நாள் முழுவதும் அங்கேயே இருந்து விட்டு, மீண்டும் மதுரை வந்து சேர்ந்தனர். திருச்சியில் ஒரு வீடு பார்த்து இருந்தனர். இன்னும் அங்கு வைக்க பொருட்கள் எதுவும் வாங்கவில்லை. அடுத்த மாதமே சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை வரலாம். அதனால், வருணிகாவை மதுரையிலேயே விட்டு விட்டு, ஹரிஹரன் மட்டும் கிளம்ப வேண்டும்.

 

தேனியில் இருந்து வந்ததுமே, அவன் திருச்சி செல்ல கிளம்ப, வருணிகாவின் முகம் சோர்ந்து போனது.

 

உலகத்தையே மறந்து விட்டு அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள். அவனும் மனைவியைப் பிரிய மனமில்லாமல், அவளோடு தான் இருந்தான்.

 

அன்று இரவே கிளம்ப வேண்டும். உடமைகளை எடுத்து வைத்தவனை, வருணிகா வேகமாக கட்டிக் கொண்டாள்.

 

“என்னமா?”

 

“மிஸ் பண்ணுவேன்”

 

“நான் பண்ண மாட்டேன்”

 

“தெரியும் தெரியும்”

 

அவள் முகத்தை கோபமாக திருப்பினாலும், அவனை விட்டு அகலவே இல்லை. என்னவோ, இப்போது போனால் மொத்தமாக தன்னை விட்டு தொலைந்து விடுவான் என்ற பிரம்மை.

 

“இப்படி கோபமா முகத்த வச்சுக்கிட்டா வழி அனுப்புவாங்க?”

 

“ப்ச்ச்.. போகதீங்கனு சொல்லவும் முடியல. அனுப்பவும் முடியல”

 

அவள் கண்கள் கலங்கி விட, முகத்தைப்பற்றி இதழில் முத்தம் பதித்தான்.

 

“நான் எங்க போயிடப்போறேன்? திருச்சி தான? லீவ் கிடைச்சதும் ஓடி வர்ரேன். சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சதும், மொத்தமா அங்க போயிடலாம். அப்படி கிடைக்கலனாலும், ஒரு மாசத்துல திருச்சிக்கு உன்னை கூட்டிட்டுப்போயிடுறேன். சரி தான?”

 

திருமணத்திற்கு முன்பே சொன்ன விசயங்கள் தான். இன்று மீண்டும் விளக்கினான்.

 

“ம்ம்”

 

“இப்போ சிரிச்சுட்டே வந்து டாடா காட்டு வா”

 

அவன் கையைப்பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 

தந்தையிடம் உடமைகளை கொடுத்து விட்டு, எல்லோரிடமும் விடை பெற்று பைக்கில் அமர்ந்தான்.

 

கலங்கிய கண்களை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு நின்று இருந்தாள், வருணிகா. ஹரிஹரன் அவளை பார்த்து தலையசைக்க, உதட்டை இழுத்து வைத்து கையாட்டினாள்.

 

பைக் கிளம்பி, அவள் கண்ணை விட்டு மறைந்ததுமே, கண்ணீர் கண்ணை விட்டு இறங்கி விட்டது. என்னவோ மொத்தமாக அவனை தொலைத்து விட்டது போல் தான் தோன்றியது.

 

பைத்தியக்காரத்தனம் தான். அவன் வேலையைப் பார்க்கச் செல்கிறான். வார விடுமுறையில் வந்து விடுவான். எல்லாம் அறிவுக்குப் புரிகிறது. மனம் தான் எதையோ நினைத்து கலங்குறது.

 

அவளது கண்ணீரை பார்த்ததும், சாரதாவுக்கு பாவமாகி விட்டது.

 

“அண்ணி.. அழாதீங்க” என்று வேகமாக கண்ணைத்துடைத்து விட, வேதனையோடு அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

 

பிறகு எல்லோரும் அவளை பார்ப்பது தெரிய, வேகமாகத் திரும்பி அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

“பாவம் அண்ணி” என்று சாரதா வருத்தப்பட, “விடு. உன் அண்ணன் பார்த்துப்பான்” என்றான் நகுல்.

 

_________

 

 

ஒரு வாரம் கடந்து விட்டது…

 

வருணிகா வாசலுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்தாள். ஒரு வாரத்திற்கு முன்பு சென்ற கணவன், இன்று தான் வருகிறான். முகமெல்லாம் எதிர் பார்ப்பு மின்ன, வாசலையே பார்த்துக் கொண்டிருந்த மருமகளை, அனுராதா சிரிப்போடு பார்த்தார்.

 

வருணிகாவிற்கு இருப்புக்கொள்ளவில்லை. பேருந்து நிலையம் செல்லத்துடித்த மனதை அடக்கிக் கொண்டு வீட்டிலிருக்கிறாள். ஹரி ஊருக்குச் சென்ற பின்பு, இரண்டு நாட்கள் நன்றாக பேச முடிந்தது. அதன் பின்பு அவ்வளவாக பேச முடியவில்லை. சனிக்கிழமை வரை வேலை இருக்க, மாலை தான் கிளம்பி வருகிறான்.

 

ஹரிஹரனின் தந்தை, ஏகாம்பரம் அழைக்கச் சென்று இருக்கிறார். பைக் சத்தம் கேட்கும் போதெல்லாம், அவள் தெருவை எட்டிப் பார்த்தாள்.

 

“வருணி” என்று அனுராதா அழைக்க, “சொல்லுங்க அத்த” என்றாள்.

 

“போய் பால அடுப்புல வை”

 

உடனே ஓடிச் சென்று பாலை வைத்தாலும், கண் வாசலில் தான் இருந்தது.

 

“அடுப்ப சிம்ல வச்சுட்டு, இங்க வந்து இதை எடுத்துட்டுப்போ”

 

அவளுக்கு அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவளும் செய்தாள். ஆனாலும் அவளது தேடல் குறையவில்லை.

 

‘இன்னைக்குனு பார்த்து இவ்வளவு நேரம் ஆகுது. இந்த பொண்ணு வேற வாசலையே பார்த்துட்டு இருக்கு. சீக்கிரமா வந்தா என்ன?’ என்று மனதில் கணவரையும் மகனையும் சேர்ந்தே கடிந்து கொண்டார் அனுராதா.

 

பைக் சத்தம் வீட்டு வாசலில் கேட்க, வருணிகா ஓடாத குறையாக வாசலை நோக்கிச் சென்றாள். அனுராதாவும் வர, பைகளோடு பைக்கை விட்டு இறங்கினான் ஹரிஹரன்.

 

அவனை பார்த்ததும் ஏனோ வருணிகாவின் கண்கள் கலங்கி விட்டது. இருவரையும் பார்த்து புன்னகைத்தவன், “வாசல் வரை வந்து வரவேற்பு பலம்மா இருக்கே” என்றான்.

 

“ஏன் இவ்வளவு லேட்டு?” என்று அனுராதா கேட்க, வருணிகா அவன் கையிலிருந்த ஒரு பையை வாங்கிக் கொண்டாள்.

 

“கட்சி மீட்டிங்மா. ட்ராஃபிக்னு வேற பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. சுத்தி வர்ரோம்”

 

உள்ளே சென்றதும், அவன் கையிலிருந்த இரண்டு பையையும் வாங்கிச் சென்று, அறையில் வைத்தாள் வருணிகா. வைத்து விட்டு வெளியே வரவில்லை. கணவன் தனியாக வேண்டும். அது அறைக்குள் இருந்தால் மட்டுமே சாத்தியம். அதனால் உள்ளே இருந்து கொண்டாள்.

 

“போய் முகமெல்லாம் கழுவி வேற ட்ரஸ் மாத்திட்டு வா. டீ போட்டு வைக்கிறேன்” என்று அனுராதா மகனை அனுப்பி விட்டு, கணவரிடம் ஏதோ கேட்க ஆரம்பித்து விட்டார்.

 

உள்ளே நுழைந்து கதவை அடைத்ததும், ஓடி வந்து கணவனை கட்டிக் கொண்டவள் அழுது விட்டாள்.

 

“ஏய்.. ஏன் அழற?”

 

பதில் இல்லை. சிரிப்போடு அவனும் அணைத்துக் கொண்டான்.

 

“ஐ மிஸ் யூ”

 

“நான் பண்ணலயே”

 

“பரவாயில்ல”

 

“இப்படியே நிக்க முடியாது. பஸ்ல வந்தது கசகசனு இருக்கு. குட்டியா குளியல் போட்டுட்டு வரேன். அப்புறம் ஆற அமர பேசலாம்”

 

அவனை விட மனமில்லை என்றாலும், அவன் பேச்சை கேட்டு தலையாட்டி விலகி நின்றாள். அவசரமாக அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு, உடனே குளிக்கச் சென்றான்.

 

குளித்து உடை மாற்றி வரும் போது, டீயும் லட்டு இரண்டும் அவனுக்காக காத்திருந்தது.

 

அதை புருவம் சுருக்கிப் பார்த்தான்.

 

“இதென்ன லட்டு?”

 

“ஆமா.. சாப்பிடுங்க. வேணாம். டீ டேஸ்ட் தெரியாது. டீ குடிச்சுட்டு சாப்பிடுங்க”

 

“லட்டு நீ பண்ணியா?”

 

“எனக்கு சுடு தண்ணியே ஒழுங்கா வைக்கத் தெரியாதுனு உங்களுக்குத் தெரியாதா?”

 

“அதான.. அப்போ அம்மா பண்ணதா?”

 

“கடையில வாங்குனது”

 

தலையாட்டி விட்டு, தேனீரை அவளை உரசிக் கொண்டு அமர்ந்து குடித்து முடித்தான். ‌அவளுக்காக ஒரு சேலை வாங்கி வந்திருக்க, அதை கொடுத்ததும், “வாவ்” என்றாள்.

 

“செம்ம.. எனக்கு பிடிச்ச கலர். எப்படித்தெரியும்?”

 

“சும்மா கெஸ்”

 

“சூப்பரா இருக்கு” என்றவள், வேகமாக அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

 

“இங்க மட்டும் தானா? அப்ப மத்த இடத்துல வாங்குறதுக்கு என்ன வாங்கி கொடுக்குறது?” என்று அவன் சத்தமாக யோசிக்க, அவன் கையைக் கிள்ளி வைத்தாள்.

 

அவளை வாரி அணைத்து, அவனுக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொண்டு தான் விட்டான்.

 

அடுத்த நாள் ஞாயிறு..

 

“வெளிய எங்கயாவது போயிட்டு வாங்க” என்று அனுராதா கூற, “வேணாம் அத்த. அவரு இத்தனை நாள் வேலை வேலைனு அலைஞ்சாரு. இன்னைக்கு வீட்டுல நல்லா தூங்கட்டும்” என்று வருணிகா கூறினாள்.

 

அவள் சொன்னதை தான் ஹரிஹரனும் ஆமோதித்தான். வெளியே சுற்றுவதை விட, வீட்டில் கைக்குள் இருக்கும் மனைவியை கொஞ்சுவதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

 

மாலை நேரம்..

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு, கதை பேசிக் கொண்டிருந்தனர்.

 

“உனக்கு சந்திரானு ஃப்ரண்ட் இருக்காங்க இல்ல?”

 

“ஆமா.. கல்யாணத்துக்கு கூட வந்து இருந்தாளே”

 

“அது தெரியல. அன்னைக்கு.. நம்ம கல்யாணம் முடிஞ்ச மறுநாள் காலையில போன் வந்தது. அப்போ பேசுனேன் சொல்ல மறந்துட்டேன்”

 

“ம்ம்.. அவ எதுவும் சொல்லல. நான் போன்ல பார்த்தேன். பேசினது காட்டுச்சு. சரி நீங்க தான் பேசி இருப்பீங்கனு விட்டுட்டேன்”

 

“நான் தான் பேசுனேன். அன்னைக்கு வெளிய ஆளுங்க இருந்தாங்க. அதான் கூப்பிடல” என்று மேலும் எதோ சொல்ல வந்தான்.

 

“சரி நான் அத்தைக்கு ஹெல்ப் பண்ண போகவா? பாவம் தனியா வேலை பார்க்குறாங்க” என்று வருணிகா இடையில் புகுந்தாள்.

 

“இவ்வளவு நாள் அவங்களுக்கு கம்பெனி கொடுத்த தான..? இன்னைக்கு எனக்கு கொடு”

 

“அத்த பாவம்”

 

“நான் அத விட பாவம். நைட் கிளம்பிடுவேன்”

 

அவளை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான்.

 

இரவு உணவு உண்ணும் போது, “உனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சதா?” என்று அனுராதா விசாரித்தார்.

 

“ம்ம். ஆல் மோஸ்ட். நெக்ஸ்ட் வீக் வரும் போது கண்டிப்பா ப்ரோமோஷன் லெட்டரோட தான் வருவேன்”

 

இதைக்கேட்டு அனுராதாவிற்கு நிம்மதியாக இருந்தது. மருமகள் படும்பாட்டை பார்த்துக் கொண்டிருந்தாரே. இப்போது அவன் கிளம்பப் போகிறான் என்றதும், முகம் சுருங்க அமர்ந்து இருக்கிறாளே.

 

“ப்ரமோஷன் கிடைச்சதும் அந்த வீட்ட காலி பண்ணிட்டு இங்க வந்துடு. சென்னையில வீடு பார்த்ததும் ரெண்டு பேரும் சேரந்தே கிளம்புங்க”

 

“பண்ணலாம் தான். அப்பாவுக்கு இன்னும் அஞ்சாறு மாசத்துல ரிடயர்மெண்ட் வந்துடும். அப்போ நீங்களும் வாரலாம்ல?”

 

“வரலாம். இப்போ உங்க தேவைக்கு பாருங்க. பின்னாடி நாங்க கிளம்பி வரோம்” என்று ஏகாம்பரம் கூறி விட்டார்.

 

ஹரிஹரன் கிளம்பி விட, இம்முறை வெளிப்படையாக வருணிகா அழவில்லை. அமைதியாக விடை கொடுத்தாள்.

 

அடுத்த வாரமும் கடந்து விட, ஹரிஹரன் சொன்னது போல் பதவி உயர்வோடு தான் வந்து சேர்ந்தான். வருணிகாவை கையில் பிடிக்க முடியவில்லை. இனி கணவனோடு இருக்கலாம் என்ற சந்தோசமே அவளை காற்றில் மிதக்க வைத்தது.

 

“இன்னும் மூணு நாள் வொர்க் இருக்கு. அத முடிச்சப்புறம் லீவ் போட்டுட்டு வந்துடுவேன். சென்னையில வீடு இல்லனா ஃப்ளாட் பார்க்குறத ஸ்டார்ட் பண்ணனும்” என்று ஹரி சொன்ன உடனே, வேலைகள் துரிதமாக நடந்தது.

 

அறிந்தவர் தெரிந்தவர் என்று எல்லோரிடமும் சொல்லி வைக்க, மறுநாள் செய்தி கிடைத்தது.  இவர்களது நல்ல நேரம். தூரத்து சொந்தம் ஒருவர், தங்கள் மகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால், குடும்பத்தோடு வெளிநாடு செல்கின்றனர். அதனால் வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்திருந்தனர்.

 

அவர்கள் வீடு இருக்கும் இடம் ஹரிக்கு அலுவலகத்திற்கும் பக்கமாக இருக்க, சந்தோசமாக சம்மதித்தனர். வீட்டில் சோஃபா இன்னும் சில பொருட்களை மட்டும் விட்டு விட்டு, மற்றதை அவர்கள் தங்களது மற்றோரு ஃப்ளாட்டுக்கு மாற்றி விட்டு, சாவியை இவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.

 

மதுரையில் இருந்து கிளம்பும் போதே, சென்னை சென்றதும் உபயோகப்படுத்தக் கூடிய பொருட்களை எல்லாம், எடுத்துக் கொண்டனர்.

 

அனுராதா, ஏகாம்பரம், வருணிகா, ஹரிஹரன், தெய்வா, மாணிக்கம் எல்லோருமே கிளம்பினர் சென்னை நோக்கி. வாழ்வின் பல முக்கியத்திருப்பங்களை சந்திக்க போகிறோம் என்று அறியாமலே, வருணிகா அவ்வளவு சந்தோசமாக கிளம்பினாள்.

 

அவளுக்கு கொடுக்க வேண்டிய சீர்வரிசை பாக்கி இருந்தது. அதை எல்லாம் சென்னையில் மொத்தமாக வாங்கி, அங்கேயே அவர்களிடம் கொடுத்து விடுவதற்காகவே, அவளது சித்தி சித்தப்பா உடன் வந்தனர்.

 

அனுராதாவும் தெய்வாவும் வீட்டிற்கு வேண்டிய பொருட்களின் பட்டியலை தயாரித்து இருக்க, ஆண்கள் மூவரும் அவர்களோடு அலைந்து எல்லாவற்றையும் வாங்கி வந்தனர்.

 

வீட்டை சிறப்பாக அலங்கரித்து முடித்து விட்டே ஓய்ந்தனர். இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு. சற்று பழைய வீடாக இருந்தாலும், பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. தனி வீடாக கிடைத்ததே போதுமானதாக இருந்தது அவர்களுக்கு.

 

பால் காய்ச்சி அக்கம் பக்கத்தினரோடு பழகிய பின், இரண்டு நாட்கள் தங்கி விட்டு, பெரியவர்கள் கிளம்பி விட, சிறியவர்கள் வேண்டிய தனிமை கிடைத்தது.

 

அடுத்த நாள் ஹரிஹரன் அலுவலகம் சென்று வேலையில் சேர, மறு நாள் சந்திரா அதே நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்