
சில வருடங்களுக்குப் பிறகு…..
ட்ரெஸிங் டேபிள் கண்ணாடி முன்னால் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டு இருந்த மனைவியை சட்டென பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் துஷ்யந்த்.
அப்போது தான் குளித்து வந்தவனின் ஈரத் தலையில் இருந்து வழிந்த நீர் சகுந்தலாவின் தோள்பட்டை வழியே கீழிறங்க, சகுந்தலாவின் இடையில் மாயம் செய்து கொண்டு இருந்த துஷ்யந்தின் குளிர்ந்த கரங்களின் காரணமாக பேச்சற்றுப் போனாள் பெண்ணவள்.
முதல் தடவை போலவே இன்றும் கூட தன்னவனின் நெருக்கத்தில் கிறங்கிப் போய் விழிகளை மூடிக் கொண்ட சகுந்தலா, “எ…என்ன பண்ணுறீங்க?” எனக் கேட்டாள் தட்டுத் தடுமாறி.
“எ… என்ன பண்ணுறேன்?” என அவளைப் போலவே பதிலுக்குக் கேட்டான் துஷ்யந்த் கிசுகிசுப்பான குரலில்.
சகுந்தலாவோ தன்னவனின் தொடுகையில் தன்னிலை இழந்து பெருமூச்சு விட, சகுந்தலாவின் கழுத்தில் முகம் புதைத்த துஷ்யந்த் சில நொடிகள் கழித்து மெதுவாக அவளின் ஆடைகளுக்கு விடுதலை கொடுக்க ஆரம்பித்தான்.
அவ்வளவு நேரமும் கணவனின் நெருக்கத்தில் மதி மயங்கி நின்று இருந்த சகுந்தலா சட்டென இமைகளைப் பிரித்துக் கொண்டு துஷ்யந்தை விட்டு வேகமாக விலகினாள்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்பது போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்ட துஷ்யந்தை இடுப்பில் கை ஊன்றி முறைத்துப் பார்த்தாள் சகுந்தலா.
துஷ்யந்தின் விழிகளில் மோகம் குடி கொண்டு இருக்க, மீண்டும் சகுந்தலாவை நெருங்கி அணைக்க முயன்றவனின் தோளில் சகுந்தலா பட்டென ஒரு அடியைப் போட்டாள்.
“ஆஹ்… ஏன் டி?” என முகத்தை சுருக்கிக் கொண்டு கேட்ட துஷ்யந்த் சகுந்தலா அடித்த இடத்தைத் தேய்த்து விட்டான்.
“அடிக்காம பின்ன என்ன? இன்னைக்கு எழுந்ததுல இருந்து ரெண்டு முறை குளிச்சிட்டேன். ரெண்டு சேலை மாத்திட்டேன். யாரால? எல்லாம் உங்களால தான். இப்போ திரும்பவும் ஆரம்பிக்குறீங்க? உங்களுக்கு சலிக்கவே சலிக்காதா?” எனக் கோபமாகக் கேட்ட சகுந்தலாவைப் பார்த்து கள்ளப் புன்னகை புரிந்தான் துஷ்யந்த்.
சகுந்தலா எதிர்ப்பார்க்காத நேரம் அவளின் கரத்தைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்த துஷ்யந்த் தன் மார்பில் வந்து மோதியவளை இறுக அணைத்துக் கொண்டு, “டயர்டா? எனக்கா? நெவர்… என் பொண்டாட்டிய கொஞ்சுறதுக்கும் மிஞ்சுறதுக்கும் நான் எதுக்கு நேரம் காலம் எல்லாம் பார்த்துட்டு இருக்கணும்?” எனக் கேட்டவாறு சகுந்தலாவின் மூக்கோடு மூக்கு உரசினான்.
துஷ்யந்தின் பேச்சில் இவ்வளவு நேரமும் பொய்யாக இழுத்துப் பிடித்த கோபம் சட்டென மறைய, வாய் விட்டு சிரித்தாள் சகுந்தலா.
மனைவியின் சிரித்த முகத்தை ஆசையாக ரசித்த துஷ்யந்தின் கண்கள் லேசாகக் கலங்க, அதனைத் தன்னவளுக்குக் காட்டாது மறைப்பதற்காக அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
பதிலுக்குத் தன்னவனை இறுக அணைத்துக் கொண்ட சகுந்தலாவின் மனமோ நிறைந்து இருந்தது.
சில நிமிடங்களுக்கு இருவரும் ஒருவரின் அணைப்பில் மற்றொருவர் தம்மைத் தொலைத்து நின்று இருந்தனர்.
அந்த மோன நிலையைக் கலைப்பது போல் அவர்களின் அறைக் கதவு திறக்கப்பட்டது.
வேகமாக இருவரும் விலகி நிற்க, உள்ளே வந்த தம் நான்கு வயது மகனைக் கண்டதும் இருவரின் விழிகளிலும் ஈரம்.
பிருந்தன்… துஷ்யந்த் மற்றும் சகுந்தலாவின் காதலுக்கு கிடைத்த பரிசு.
பரத்தையே உரித்து வைத்துப் பிறந்து இருந்தான்.
அதனால் தான் என்னவோ அவ் வீட்டினர் அனைவரும் பிருந்தன் மீது உயிரையே வைத்து இருந்தனர்.
அதுவும் துஷ்யந்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
பிருந்தன் பிறந்ததில் இருந்தே அவனைக் கையை விட்டு இறக்கவே இல்லை.
பரத்திற்கு தம்மால் கொடுக்க முடியாத அனைத்தையும் பிருந்தனுக்கு அள்ளிக் கொடுத்தனர்.
பிருந்தனின் நடை, உடை, பாவனை எல்லாமே பரத்தையே ஒத்து இருந்தது.
தம் மூத்த மகனே மீண்டும் தமக்கு மகனாக வந்து பிறந்துள்ளான் என்று தான் துஷ்யந்த் மற்றும் சகுந்தலா இருவருமே நம்பினர்.
பரத்தே தம்முடன் இருப்பது போல் தான் இருவரும் உணர்ந்தனர்.
சில சமயங்களில் தம்மை மறந்து பிருந்தனை பரத் என நினைத்துப் பேச, நிஜம் நெற்றிப்பொட்டில் அறையும் நேரம் கணவன் மனைவி இருவராலும் சில நிமிடங்களுக்கு தம்மை மீட்டுக் கொள்ளவே முடியாது இருக்கும்.
வருடங்கள் கடந்தும் கூட யாராலுமே பரத்தின் பிரிவை விட்டு வெளியே வர முடியவில்லை.
சிறிது காலம் தான் என்றாலும் தம் உலகிற்கு வண்ண வண்ணமாய் நிறமூட்டி வாழ்க்கை என்றால் என்ன என்று காட்டி விட்டுச் சென்று இருந்தான் சிறுவன்.
தாயும் தந்தையும் நெருக்கமாக நிற்பதைக் கண்டதும் ஓடி வந்து தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்ட பிருந்தனைத் தூக்கிக் கொண்ட துஷ்யந்தின் முகத்தில் புன்னகை.
சகுந்தலா கணவனை முறைத்துப் பார்க்க, துஷ்யந்தின் சிரிப்பு அதிகரித்தது.
அது என்ன மாயமோ மந்திரமோ பரத்தைப் போலவே பிருந்தனும் பிறந்ததில் இருந்தே தந்தையைத் தான் ஒட்டிக் கொண்டு திரிந்தான்.
எல்லாவற்றுக்கும் பிருந்தனுக்கு துஷ்யந்த் தான் வேண்டும்.
அதனாலேயே எப்போதும் தாய்க்கும் தனையனுக்கும் தந்தையிடம் ரகசியமாக உரிமைப் போராட்டம் நடக்கும்.
கணவனதும் மகனினதும் ஒட்டுதலைப் பார்க்கும் போது உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் சகுந்தலாவிற்கு லேசாகப் பொறாமையும் எட்டிப் பார்த்தது.
ஏனென்றால் பிருந்தனிற்கு துஷ்யந்த் வீட்டில் இல்லாத சமயத்தில் மட்டும் தான் சகுந்தலா தேவைப்பட்டாள்.
மற்றபடி எப்போதும் தந்தையின் நாமம் தான்.
“மம்மி… பாப்பா அழுதுட்டு இருக்கா. பாட்டி சீக்கிரமா உங்கள வர சொன்னாங்க.” என பிருந்தன் கூறவும் தான் தம் ஒன்றரை வயது மகள் நவ்யாவை பரிமளத்திடம் விட்டு வந்ததே சகுந்தலாவிற்கு நினைவு வந்தது.
அவளுக்குத் தான் தன்னவனின் அருகாமையில் உலகமே மறந்து விடுமே.
“அச்சோ… மறந்தே போய்ட்டேன். நான் போய் குழந்தைய வாங்கிட்டு வரேன். நீங்க அதுக்குள்ள சீக்கிரம் ரெடி ஆகிட்டு பையனும் ரெடி பண்ணுங்க.” எனக் கணவனுக்கு உத்தரவு இட்டு விட்டு வெளியேறினாள் சகுந்தலா.
“டாடி… பிருந்தனும் நீங்களும் இன்னைக்கு சேம் சேமா ட்ரெஸ் பண்ணப் போறோமா?” என ஆர்வமாகக் கேட்ட மகனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்ட துஷ்யந்த், “யெஸ் மை போய். டாடியும் பிருந்தனும் சேம் சேமா ட்ரெஸ் பண்ணி மம்மிய வெறுப்பேத்தலாம் வாங்க.” என்றான்.
அதனைக் கேட்டு பிருந்தனின் வாய் எல்லாம் புன்னகை.
மாடியில் இருந்து வேகமாகக் கீழே இறங்கி வந்த சகுந்தலாவை வரவேற்றது என்னவோ அவளின செல்ல மகளின அழுகைக் குரல் தான்.
பரிமளம் குழந்தையை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் துஷ்யந்தின் செல்ல மகளோ தாயைத் தேடி ஏங்கி ஏங்கி அழுதாள்.
பிருந்தனிற்கு எப்படி துஷ்யந்தோ அது போலத் தான் நவ்யாவிற்கு சகுந்தலா.
அதுவும் துஷ்யந்த் மற்றும் சகுந்தலா இருவரையும் சேர்த்து வைத்துப் பிறந்து இருந்த மகளைப் பார்க்கும் போது சகுந்தலாவிற்கு அவ்வளவு சந்தோஷம் வரும்.
அதற்காக இருவருக்கும் மற்ற குழந்தை மீது பாசம் இல்லாமல் எல்லாம் இல்லை.
இரண்டு பிள்ளைகள் மீதும் இருவருமே ஒரே அளவு அன்பை வைத்து இருந்தனர்.
பிள்ளைகளுக்கும் அவ்வாறு தான்.
என்ன தான் பிருந்தனிற்கு தந்தையும் நவ்யாவிற்குத் தாயும் தான் எப்போதும் வேண்டும் என்றாலும் பெற்றோரில் ஒருவரைக் கூட பிரிந்து இருக்க மாட்டார்கள் பிள்ளைகள் இருவரும்.
அதனாலேயே பிள்ளைகள் இருவரும் ஓரளவுக்கு வளரும் வரை வெளிப் பயணங்களை வெகுவாகக் குறைத்துக் கொண்டு இருந்தான் துஷ்யந்த்.
“சாரி அத்தை… சாரி அத்தை… கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.” எனக் கெஞ்சல் குரலில் மன்னிப்புக் கேட்டவாறு வந்த மருமகளிடம் பேத்தியை ஒப்படைத்த பரிமளம், “சாரி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதல்ல உன் பொண்ணோட அழுகைய நிறுத்து.” எனக் கூறிக் கொண்டு இருந்த பரிமளம் நவ்யாவைக் கண்டு வாயில் கை வைத்தார்.
ஏனென்றால் இவ்வளவு நேரமும் ஊரையே கூட்டும் அளவுக்கு வீறிட்டு அழுது கொண்டு இருந்த குழந்தை சகுந்தலா விடம் சென்றதும் அழுகையை நிறுத்தி விட்டு தன் மழலைக் குரலில் தனியாக ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தாள்.
பரிமளத்தின் பார்வை சென்ற திக்கில் பார்த்த சகுந்தலாவின் முகத்திலும் புன்னகை.
“ப்பா… என்ன ஒரு மாயக்காரி… இவ்வளவு நேரமும் இவள சமாதானப்படுத்த நான் தலைகீழா நின்னேன். அம்மா கிட்ட போனதும் எல்லாம் சரி ஆகிடுச்சு. அப்படியே உங்க பெரிய அண்ணன போல பிடிவாதம். பரத்தும் இப்படி தான். அப்பா பக்கத்துல இருந்தா எல்லாம் சரி ஆகிடும்.” என்ற பரிமளத்தின் கண்கள் கலங்கின பரத்தின் நினைவில்.
சகுந்தலாவும் வெளியே வரத் துடித்த கண்ணீரை கஷ்டப்பட்டு உள் இழுத்துக் கொண்டாள்.
அதே நேரம், “பாட்டி…” எனக் கத்திக் கொண்டு ஓடி வந்த பிருந்தன், “பாட்டி… நான் எப்படி இருக்கேன் சொல்லுங்க. டாடியும் பிருந்தனும் சேம் சேமா ட்ரெஸ் பண்ணி இருக்கோம்.” என்றவன் தன்னை முன்னும் பின்னும் திருப்பிக் காட்டினான்.
பரத்தே வந்து தன்னுடன் பேசுவது போல் உணர்ந்த பரிமளத்திற்கு பேச்சே வரவில்லை.
“அம்மா…” என்ற மகனின் குரலில் தன்னிலை அடைந்த பரிமளம், “அச்சோ என் பேரன் எவ்வளவு அழகு. அப்படியே உங்க அப்பன போல ஹேன்ட்ஸமா இருக்கடா கண்ணா.” என்றவர் பிருந்தனின் கன்னம் கிள்ளி முத்தமிட்டார்.
“ஒரு நிமிஷம் நில்லுங்க.” என்ற பரிமளம் வேகமாக சமையலறைக்குச் சென்று திருஷ்டி கழிக்கத் தேவையானவற்றை எல்லாம் எடுத்து வந்தார்.
“துஷ்யந்த் கண்ணா… பையனையும் கூட்டிட்டு வந்து இப்படி மருமகள் பக்கத்துல நில்லு.” என்ற பரிமளம் நால்வரும் குடும்பமாக நிற்கவும் அவர்களுக்கு திருஷ்டி கழித்தார்.
“மம்மி… இங்க பாருங்க.” என்ற பிருந்தன் துஷ்யந்தின் கரத்தைப் பற்றிக் கொண்டு தந்தையைப் போலவே போஸ் கொடுத்தவாறு சகுந்தலாவைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.
மனதுக்குள் கணவனையும் மகனையும் ரசித்த சகுந்தலா, “நானும் என் பொண்ணும் கூட தான் சேம் சேமா ட்ரெஸ் பண்ணி இருக்கோம். இல்லையா குட்டிம்மா?” எனக் கேட்டாள் மகளிடம் திரும்பி.
குழந்தையும் எதுவோ புரிந்தது போல சிரித்துக் கொண்டு தாயின் கன்னத்தை எச்சில் படுத்தினாள்.
அதனைக் கண்டு அனைவருக்குமே புன்னகை.
“துஷ்யந்த்… அப்பா கால் பண்ணார். ஃபங்க்ஷன் ஸ்டார்ட் ஆக போகுது. இன்னைக்கு உங்க அப்பாவுக்கு ரொம்ப ஸ்பெஷலான நாள். லேட் பண்ணாம சீக்கிரம் போகலாம்.” என அவசரப்படுத்தினார் பரிமளம்.
ஏனென்றால் இன்று சந்திரசேகரன் தன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
அவரின் சேவையைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கும் விழா ஒன்று அன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதற்காகத் தான் குடும்பம் சகிதமாக அனைவரும் தயாராகி இருந்தனர்.
“நீங்க முன்னாடி போங்கம்மா… நான் வரேன்.” என துஷ்யந்த் கூறவும் பரிமளம் முன்னே சென்று விட, மனைவியின் கரத்தில் இருந்த மகளை வாங்கக் கை நீட்டினான் துஷ்யந்த்.
தந்தையைக் கண்டதும் குலுங்கிச் சிரித்த நவ்யா தாயிடமிருந்து வேகமாக தந்தையிடம் தாவினாள்.
துஷ்யந்த் மகளை ஒரு கையில் ஏந்திக் கொண்டு மறு கையால் பிருந்தனின் கரத்தைப் பற்ற, தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்ட சிறுவன் தன் மறு கரத்தால் தாயின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு இருவரையும் பார்த்துப் புன்னகைத்தான்.
பிருந்தனின் செயலில் அவனைப் பெற்றவர்களுக்கு பெருமையும் சந்தோஷமும் ஒன்றாகத் தாக்கியது.
என்ன நடந்தாலும் தன் தாய்க்கும் தந்தைக்கும் எப்போதும் தான் துணையாக இருப்பேன் என்பது போல் இருந்தது பிருந்தனின் செய்கை.
அதே சந்தோஷத்துடன் நால்வரும் விருது வழங்கும் விழா நடக்கும் இடத்துக்குச் செல்வதற்காகக் கிளம்பி வெளியே வந்தனர்.
அப்போது வானில் பௌர்ணமி நிலவு பிரகாசமாய் ஜொலித்தவாறு தன் ஒளிக்கீற்றை இவர்கள் மீது பரப்ப, ஒரே சமயத்தில் நிலவின் மீது பார்வையைப் பதித்த துஷ்யந்த் மற்றும் சகுந்தலா ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.
பெண்ணவளின் நெஞ்சின் வலி தீர்க்க வந்த மருந்தாளன் தானே அவளுக்கு மருந்தாகி மாயம் செய்தான்.
சுபம்

