Loading

“பரத்…….” என்ற சகுந்தலாவின் அலறல் அவ் அறை எங்கும் பட்டு எதிரொலித்தது.

துஷ்யந்தோ இன்னுமே நடந்ததை நம்ப முடியாமல் பரத்தின் முகத்தையே வெறித்துக் கொண்டு இருந்தான்.

சகுந்தலாவின் அலறல் சத்தம் கேட்டு வேகமாக உள்ளே நுழைந்த பரிமளமும் சந்திரசேகரனாலும் கூட எதையும் ஜீரணிக்க முடியவில்லை.

கணவனின் மார்பில் சாய்ந்து கதறி அழுதார் பரிமளம்.

“பரத்… பரத்… அம்மாவ பாரு கண்ணா… மம்மிக்கு பயமா இருக்கு செல்லம். ப்ளீஸ் தங்கம்… கண்ண திறந்து பாருப்பா. பரத்… பரத்…” எனக் கதறியவாறு பரத்தின் உயிரற்ற உடலைப் போட்டு உலுக்கினாள் சகுந்தலா.

மனைவியின் கதறலில் தன்னிலை அடைந்த துஷ்யந்தின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அவனின் கரத்தைப் பற்றி இருந்த பரத்தின் கரம் கூட இன்னுமே அதே போல் இருந்தது.

நடப்பவை அனைத்தும் கனவு போலவே இருந்தது.

‘சேம்ப்… அப்பாவ விட்டுட்டு போய்ட்டியா சேம்ப்? நிஜமாவே போய்ட்டியா? இனி எல்லாம் அவ்வளவு தானா?’ என மனதுக்குள் தன் மகனிடம் கேட்ட துஷ்யந்திற்கு பதில் தரத் தான் யாரும் இல்லை.

“என் தங்கம்… பரத்… உனக்காக மட்டும் தான் பரத் நான் இத்தனை வருஷமா உயிரோட இருந்தேன். உனக்காக தான் அவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிட்டு உயிர கைல பிடிச்சிட்டு இருந்தேன். இப்போ இப்படி ஒன்னுக்குமே அர்த்தம் இல்லாம போயிடுச்சே… ஐயோ…” எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் சகுந்தலா.

மனைவியின் நிலை கண்ட துஷ்யந்த் தன் வலியை மறைத்துக் கொண்டு சகுந்தலாவை நெருங்கி அவளை அணைக்க முயன்றான்.

துஷ்யந்த் தன்னை அணைக்கவும் அவனை ஆவேசமாகத் தள்ளி விட்ட சகுந்தலா துஷ்யந்தின் சட்டைக் காலரைப் பற்றினாள் கோபமாக.

அனைவரும் அதிர்ச்சியுடன் சகுந்தலாவை நோக்க, “என்ன நடந்தாலும் என் பையன காப்பாத்துவன்னு சொன்னல்ல… சொன்னல்ல… என்னாச்சு இப்போ? என் பையன கூட்டிட்டு வா… எனக்கு இப்போவே என் பையன் வேணும். என் பையன எனக்கு கொடுத்துடு…” என்றாள் சகுந்தலா கதறலாக.

துஷ்யந்தோ பதிலற்றவனாக மனைவியின் கோபத்தைத் தாங்கிக் கொண்டு கண்ணீருடன் நின்றான்.

பரிமளம் தான் வேகமாக வந்து சகுந்தலாவை துஷ்யந்திடம் இருந்து பிரித்து எடுத்தார்.

“என்னம்மா பண்ணுற? உனக்கு மட்டும் தானா கவலை? பரத் அவனுக்கும் தான் பையன். அவனுக்கு கவலை இல்லையா? நீ வெளிய காட்டுற. என் பையன் உள்ளுக்குள்ள எல்லாம் வெச்சிட்டு தவிச்சிட்டு இருக்கான்.” என்றார் பரிமளம் கண்ணீருடன்.

அவருக்கு சகுந்தலாவை அதட்டவும் மனம் வரவில்லை.

என்ன இருந்தாலும் குழந்தையின் இழப்பை நிச்சயம் ஒரு தாயால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

ஆனால் அதற்காக தன் மகனின் மேல் பழி சுமத்தப்படுவதையும் ஒரு தாயாக வேடிக்கை பார்க்க முடியவில்லை.

“அம்மா…” எனத் தாயை அதட்டிய துஷ்யந்த் பார்வையாலேயே அவரை எதுவும் பேச வேண்டாம் எனக் கூறியவன் அடம் பிடித்த மனைவியை நெருங்கி வலுக்கட்டாயமாக அணைத்துக் கொண்டான்.

முதலில் கணவனை விட்டு விலக சில நிமிடங்கள் போராடிய சகுந்தலா அதற்கு மேல் முடியாமல் தன்னவனை அணைத்துக் கொண்டு கதறினாள்.

“என் பையன் எனக்கு வேணும்… என் பையன் எனக்கு வேணும்ங்க. நீங்க சொன்னா அவன் கேட்பான் தானே. அம்மாவ கண்ண திறந்து பார்க்க சொல்லுங்க. மம்மின்னு கூப்பிட சொல்லுங்க.” என்றாள் சகுந்தலா துஷ்யந்தின் மார்பில் முகம் புதைத்தவாறு கதறிக் கொண்டு.

தன்னவளை சமாதானப்படுத்த வழி அறியாது, தன் வலியையும் வெளிக்காட்ட‌ முடியாது மௌனமாகக் கண்ணீர் வடித்தான் துஷ்யந்த்.

சத்தமாக அழுது கொண்டு இருந்த சகுந்தலா சட்டென அமைதியாக, துஷ்யந்த் அவசரமாக அவளின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.

சகுந்தலாவோ அழுது அழுதே மயங்கி விட்டு இருந்தாள்.

உடனே அவளை இன்னொரு அறையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட துஷ்யந்திற்கு மனைவியின் அருகில் கூட நிற்க நேரம் இருக்கவில்லை.

சந்திரசேகரன் பரிமளத்தை சமாதானப்படுத்துவதற்காக வெளியே அழைத்துச் சென்று இருக்க, யாருமற்ற அவ் அறையில் உயிரற்ற தன் உயிரணுவின் அருகில் சட்டென மண்டியிட்டான் துஷ்யந்த்.

குளிர்ந்து போய் இருந்த பரத்தின் கரத்தை எடுத்து அதில் தன் முகத்தைப் புதைத்த துஷ்யந்த், “அப்பா கிட்டயே திரும்ப வந்துடு சேம்ப். முன்னாடியே என் கண்ணுல நீங்க ரெண்டு பேரும் பட்டு இருக்கலாம்ல. என் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேனே. இனிமே நான் எப்படி சேம்ப் உங்க அம்மா முகத்த பார்ப்பேன்? அவ கிட்ட எப்படி நான் சொல்லி புரிய வைப்பேன் இனிமே நம்ம புள்ள நம்ம கிட்ட வரவே மாட்டான்னு. ஏன் சேம்ப்? இந்த அப்பாவுக்கு ஒரே ஒரு வாய்ப்ப தராம போய்ட்ட?” எனக் கேட்டான் கண்ணீருடன்.

வழமையாக துஷ்யந்தின் கண்ணீரைத் துடைத்து விடும் அவன் மகனோ இன்று தொலைதூரம் சென்று இருக்க, ஆறுதல் கூறக் கூட யாரும் இன்றி தனியாக அழுது கரைந்தான் அந்த வளர்ந்த பிள்ளை.

அன்றே பரத்தின் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறுநாள் இறுதிக் கிரியைகளுக்காக வைக்கப்பட்டது.

தான் உடைந்து போய் விட்டால் தன் குடும்பமும் உடைந்து போய் விடுவார்கள் என்பதால் துஷ்யந்த் தன் வலியை உள்ளுக்குள் பூட்டி வைத்து விட்டு, தன் குடும்பத்தினர் முன்னால் ஒரு நடைபிணமாக‌ நடமாடினான்.

பரத்தின் உடலை வீட்டுக்குக் கொண்டு வரும் வரையிலுமே துஷ்யந்த் பரத்தின் கரத்தை விடவில்லை.

எங்கே தன் பிடியை விட்டால் தன் இன்னுயிர் காற்றாய் மறைந்து விடுமோ என அஞ்சினான்.

பாவம் சகுந்தலா தான் பரத்தின் உடலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதவாறே இடை இடையே மயங்கி விழுந்தாள்.

துஷ்யந்தினால் கூட ஒரு கட்டத்துக்கு மேல் அவளைப் பிடித்து வைக்க முடியவில்லை.

இப்படி அழுதாவது தன்னவளின் வலி குறையட்டும் என்று மௌனமாய் வேடிக்கை பார்த்தான்.

ஆனால் சகுந்தலாவின் உடல்நிலை தான் அவனுக்குக் கவலை அளித்தது.

இந்த இரண்டு நாட்களும் மறந்தும் சாப்பாட்டை வாயில் வைக்கவில்லை.

மாறி மாறி அனைவரும் போராடிப் பார்த்தும் எதுவுமே பயன் அளிக்கவில்லை.

பரத்தின் உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு நடு ஹாலில் வைக்கப்பட்டு இருக்க, அதில் தலை சாய்ந்து அழுது கொண்டு இருந்தாள் சகுந்தலா.

துஷ்யந்த் ஒரு ஓரமாக கையைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்தவாறு நின்று பரத்தின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு மௌனமாய் மனதுக்குள் மகனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

துஷ்யந்திற்கு தன் உலகமே இருண்டு விட்டது போல் இருந்தது.

சரியாக அந் நேரம் தன் குடும்பத்துடன் உள்ளே நுழைந்தாள் நிரஞ்சனா.

அனைவரையும் ஒரு தலையசைப்புடன் சந்திரசேகரன் வரவேற்க, நிரஞ்சனாவோ வாசலிலேயே சமைந்து நின்று விட்டாள்.

அவளின் பார்வை எல்லாமே உறக்கத்தில் இருப்பது போல் சின்னப் புன்னகையுடன் கண் மூடி இருந்த பரத்தின் மீது தான் கிடந்தது.

இறுதியாக தன்னிடம் அச் சிறுவன் பேசியதே மீண்டும் மீண்டும் அவளது செவிகளுக்குள் எதிரொலித்தது.

‘எங்க அப்பாவ மம்மிக்கு கொடுக்குறீங்களா ஆன்ட்டி? மம்மிக்கு யாருமே இல்ல. பரத் சாமி கிட்ட போனா மம்மி தனியா இருப்பாங்க. மம்மி டெய்லி அழுவாங்க. பரத்தோட அப்பாவ மம்மிக்கு கொடுக்குறீங்களா ஆன்ட்டி?’

அவ் வார்த்தைகளே நிரஞ்சனாவின் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, ‘இதுக்கு தான் அன்னைக்கு என் கிட்ட அப்படி கேட்டியா பரத்? உன் மேல உயிரையே வெச்சி இருக்குற உன் மம்மியையும் டாடியையும் இப்படி அழ வெச்சிட்டு போறதுக்காகவா? என்னாலயே தாங்க முடியலயே. உன் மம்மி எப்படி பரத் தாங்குவாங்க? சின்னக் குழந்தைகள் கடவுளுக்கு சமம்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு எல்லாமே முன்கூட்டியே தெரியும்னு சொல்லுவாங்க. அது இது தானா? எல்லாம் தெரிஞ்சு தான் உங்க அம்மா தனி ஆக கூடாதுன்னு உங்க அப்பா கூட சேர்த்து வெச்சியா?’ என மனதுக்குள் பரத்திடம் கேட்டவளின் கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தது.

மறு நொடியே நிரஞ்சனாவின் பார்வை துஷ்யந்தைத் தழுவ, அவனும் அப்போது தான் நிரஞ்சனாவின் வருகையைக் கவனித்து இருந்தான்.

நிரஞ்சனாவைப் பார்த்த துஷ்யந்தின் முகத்தில் அவ்வளவு வலியும் வேதனையும்.

என்ன இருந்தாலும் துஷ்யந்திற்கு கிடைத்த முதல் தோழி அவள்.

தன் காதலைக் கூட உரியவளிடம் வெளிப்படுத்த முன் தன் தோழியிடம் தான் கூறி இருந்தான்.

துஷ்யந்தின் முகத்தில் பார்வையைப் பதித்தவாறே மெதுவாக உள் நுழைந்த நிரஞ்சனா சற்றுத் தள்ளி நின்றுவாறு கண்களை மூடித் திறந்தாள் ஆறுதல் படுத்தும் விதமாக.

பின் சகுந்தலாவை நெருங்கிய நிரஞ்சனா அவளின் தோளில் கரம் பதிக்கவும் சட்டெனத் திரும்பிப் பார்த்த சகுந்தலாவை நிரஞ்சனாவைக் கண்டதும் அவளின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “நிரஞ்சனா… இங்க பாருங்க என் பையன. கண்ண திறக்க மாட்டேங்குறான். எழுந்து இந்த அம்மாவ பார்க்க சொல்லுங்க நிரஞ்சனா. என்னால முடியல. மூச்சு முட்டுது போல இருக்கு. என் பையனுக்கு அவன் அப்பான்னா உயிர். ஆனா இப்போ துஷ்யந்த் சொல்லி கூட எழுந்துக்க மாட்டேங்குறான்.” என்றாள் கதறலாக.

நிரஞ்சனாவிற்கோ பேச வார்த்தைகள் வராது போக, சகுந்தலாவைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கண்ணீர் விட்டாள்.

அதன் பின் சற்று நேரத்தில் காயத்ரியை நிரஞ்சனாவிற்கு துணையாக நிற்க வைத்து விட்டு நிரஞ்சனாவின் குடும்பத்தினர் கிளம்பி விட்டனர்.

அன்று மாலை போல் பரத்தின் உடலை இறுதி சடங்கிற்காக எடுத்துச் செல்ல முயல, சகுந்தலாவோ பரத்தின் உடலை அணைத்துக் கொண்டு தன்னுடனேயே மகனை வைத்துக் கொள்ளப் போராடினாள்.

அப்படி ஒரு கதறல் அது.

பார்ப்பவர்கள் கண்ணில் இருந்து இரத்தக் கண்ணீரே வரும் அளவுக்கு புத்திர சோகத்தில் கதறினாள் சகுந்தலா.

இறுதியில் வேறு வழியின்றி துஷ்யந்த் கோபத்துடன் சகுந்தலாவை அதட்டவும் சட்டென மௌனமான சகுந்தலா துஷ்யந்தை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

ஆனால் விழிகள் மட்டும் விடாது கண்ணீரை சிந்தின.

அதன் பின் அடுத்த அடுத்த காரியங்கள் துரிதகதியில் நடந்தன.

பரத்தின் உடலை சிதையில் வைத்து எரிக்கும் போது அவ்வளவு நேரமும் அடக்கி வைத்து இருந்த மொத்த வலியையும் கதறி அழுது வெளிப்படுத்தினான் துஷ்யந்த்.

சந்திரசேகரன் தான் மகனை சமாதானப்படுத்தி இறுதிக் கிரியைகளை நடத்தி வைத்தார்.

பெற்றோர் உயிருடன் இருக்க, தமக்குக் கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளைகளுக்குத் தம் கரத்தால் கொள்ளி வைக்கும் வலி எந்தப் பெற்றோராலும் தாங்க முடியாதது.

துஷ்யந்த் இப்போது அந்த நிலைமையில் தான் இருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்