Loading

நிதர்சனம் – சிறுகதை

அன்றைய மாதத்திற்கான மளிகைப் பொருட்களை வாங்க, பல்பொருள் அங்காடி  ஒன்றிற்குச் சென்றிருந்தாள் விஷாலினி.

அங்கு ஒரு பிரிவில், சற்று சத்தமாக பேசிக் கொண்டு இருந்த  இரு பெண்களின் குரல்கள் அவளுக்குக் கேட்டது.

தான் வருவதைக் கண்டாலும் , தத்தமது நிலையைப் பற்றி இருவரும் ஆழ்ந்து பேசிக் கொண்டு இருந்ததால் , அவர்களுக்குச் சங்கடத்தை வரவழைக்க விரும்பாமல் , நாகரீகம் கருதி அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள் விஷாலினி.

இப்பொழுதும் அவர்களது பேச்சுக் குரல்கள்,  கேட்கும் தூரத்தில் ஒலிக்க, அதைக் கேட்காமல் இருப்பதே நாகரீகம் என்று  கடந்து செல்ல நினைத்தாலும், இருவரில் ஒருவரின் நலிந்த குரல், இவளது செவிகளை எட்டியது.

” ஆமாம். ரொம்ப கஷ்டம் தான் டி. எல்லாம் துக்கம் விசாரிக்க மட்டும் தான் வருவாங்க. அதுக்கப்றம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டாங்க “

ஒருவர் கையை மற்றொருவர் ஆறுதலாகப் பற்றி இரு தோழிகளும் தங்கள் மனக்கசப்பை கிடைத்த சிறு ஓய்வு நேரத்தில் பகிர்ந்து கொள்கின்றனர்.

” ம்ம் . இந்த ஃப்ளோர்ல வொர்க் எப்படிப் போகுது  ? ”

” கொஞ்சம் ஈசி தான் டி . எல்லாத்தையும் அடுக்கி வச்சுட்டா வேலை முடிஞ்சுருச்சு. அங்க எப்படி இருக்கு ? ”

” ரொம்ப வேலை. புது ஸ்டாக்ஸ்  நிறைய வந்துருக்கு . பிரிச்சு அடுக்கனும். இன்னும் வந்துட்டே இருக்கு. கொஞ்சம் மிஸ் ஆனாலும், எண்ணிக்கை மறந்துடுது. அதனால, வேலையில் கவனமா இருக்கேன். அதான் லன்ச்   டைம் – ல மட்டும் கீழே வர்ற மாதிரி ஆகிடுது ”

தங்களது வேலைப் பற்றிய

பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கின்றனர் போலும் என்று விரைவாக  தெரிவு செய்து எடுத்துச் சென்று விடலாம் , என்று  பொருட்கள் அடங்கிய தள்ளுவண்டியை வேகமாக நகர்த்தினாள் விஷாலினி.

அடுத்தடுத்தப் பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது,  மற்றொருவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்க நேர்ந்த விஷாலினியின் கைகளும், கவனமும் அப்படியே நின்று விட்டது  !!!!

“நினைச்சாலே கஷ்டமா இருக்கு . அப்பா இறந்துட்டாருல்ல  ! ஏதோ ஒரு கதையில் சொல்லுவாங்கள்ல , ராஜாவோட நாய் செத்துப் போனா ஊர்ல இருக்கிற எல்லாரும்  அரண்மனையில் தான் இருப்பாங்க . ஆனா , அந்த ராஜா இறந்துப் போய்ட்டாருன்னா , ஒருத்தரும் வர மாட்டாங்க – ன்னு , இப்போ எங்க நிலைமையும் அதே தான் டி !!  அப்பா இருக்கிற வரைக்கும்  எதுவுமே கஷ்டமா தெரியல. அவர் இல்லாதப்போ தான் எங்களுக்கு எல்லாமே புரிஞ்சுச்சு . இனிமேல் நாங்க தான் வீட்ல எல்லாத்தையும் பாத்துக்கனும் டி . சொந்தக்காரவங்க யாரும் எட்டிக் கூடப் பாக்குறது இல்லை ! அதனால் இப்போ நாங்களும்  அவங்களை எதிர்பார்க்குறதும் இல்லை”

இவை தான் அவர் உதிர்த்த  வார்த்தைகள்  !!! 

நிதர்சனமான உண்மை  !!! அவரது  மனதில் அரித்துக் கொண்டிருக்கும் வலிகளின் வீரியம் தான் , இந்த உரையாடலின் வழியாக வெளிப்பட்டுள்ளது  !!!

எதேச்சையாக காதில் விழுந்த வார்த்தைகள் தான். ஆனால் அவை அவளது மனதை  உலுக்கியது.

அதற்குச் சமமாக, அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த தோழியும்  , ” கரெக்ட் தான் டி. கஷ்டப்பட்றப்போ சிலர் வர மாட்டாங்க ! “

அவரது குரலிலும் தேங்கிக் கிடந்த கசப்பான அனுபவம் தோழியின் கூற்றை ஆமோதிப்பது போலிருந்தது.

பிறகு, அப்பெண்ணே மீண்டும்,

” இதையே நினைச்சு ஃபீல் பண்ணாத !  வேலையைப் பாப்போம். வா ” அவரை சமாதானம் செய்து, அழைத்துக் கொண்டு சென்றார்.

அவ்விருவரும் அங்கிருந்து நகர்ந்ததும் , விஷாலினியின் கால்களும், மனமும் ஒரு சேர நகர மறுத்தது.

தந்தையை இழந்து வாழ்க்கையில் ,  உழைத்துத் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் அம்மகளானவர் தன் சொந்த அனுபவம் தந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டதைக் கேட்டதும், விஷாலினிக்கு மனம் கனத்துப் போனது.

விஷாலினிக்குப் பள்ளிக் காலங்களில் இருந்து , கல்லூரியிலும், இப்போது நிகழ்காலத்திலும் இந்நிகழ்வு, அனுபவத்தை  ஒருமுறையாவது  பெற நேரிடுகிறது.

மனம் தளராமல் , இவ்வாறு தங்களது வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இதயங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கவே செய்கின்றனர்.

நிதர்சனத்தைப் புரிந்து கொண்டும், தங்கள் வேலையையும், பொறுப்பையும் கவனமாகக்  கையாண்டு கொண்டும் இருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும், விரைவில் தங்களது உறுதியான மனநிலையாலும் , உழைப்பாலும் வாழ்வில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்பதையும், அவர்களது குடும்பத்தையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மனது முழுவதும் நிறைத்துக் கொண்டாள்.

அதற்குப் பிறகு, இந்த நிகழ்வினால் கிடைத்த அனுபவத்தை எண்ணிக் கொண்டே, பொருட்கள் அடங்கிய பைகளைக் கரங்களில் பிடித்துக் கொண்டு , தனது வீட்டை நோக்கிச் சென்றாள் விஷாலினி.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இம்மாதிரியான சூழ்நிலைகள் தான்  , ஒரு நபருக்குத் தன்னம்பிக்கையையும், மன திடத்தையும் அளிப்பது மட்டுமல்லாமல், வாழ்வில் உண்மையானவர்கள் யார், யாரென்று அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. நல்ல நிலைமைக்கு வரப் போராடிக் கொண்டு இருக்கும் இவர்களைப் போன்றவர்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியவராகவே திகழ்கின்றனர்.

– முற்றும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. vramakrishnan104

      நிதர்சனம் என்பதை விட எதார்த்தம் என்பது சரியான தலைப்பாக இருக்கும் . வாழ்த்துக்கள்.