Loading

துபாயிலிருந்து மொத்தமாக இந்தியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கு சம்பாதித்த பணத்தில் ஒரு பிளாட் வாங்கியுள்ளதாகவும் தன் தாய்மாமன் ரகுபதியிடம் பகிர்ந்திருந்தான் நந்தன். குறிப்பிட்ட தேதியைச் சொல்லி, புதுமனைப் புகுவிழாவிற்கு (கிரஹப்பிரவேசத்திற்கு) குடும்பத்துடன் வருமாறு அழைத்திருந்தான்.

குடும்பத்தை அழைத்து வராமல் தனியாக வந்த ரகுவை நந்தன் கட்டியணைத்து வரவேற்றான். ரகுபதி தன் குடும்பத்தோடு நந்தனை ஒட்டவிடாமல் தடுத்ததற்கான காரணத்தைத் தாமதமாகவே நந்தன் அறிந்தான்; அப்போதுதான் மாமன் தன் மீது வைத்திருக்கும் உண்மையான பாசம் அவனுக்குப் புரிந்தது. அத்தையின் குணத்தைக் கண்டே தன் குடும்பத்துடன் நந்தனை அவர் சேரவிடவில்லை என்பதும், வாய்ப்பு வந்த நொடியே அவனைத் துபாய்க்கு அனுப்பி வைத்ததும் அவனுக்குப் புரிந்தது.

பல ஆண்டுகளுக்குப் பின் தன் தாய்மாமனைப் பார்க்கிறான். தாயைக் கண்டது போல அவனைக் கட்டியணைத்துக் கொண்டான். சிறுவனைப் போல அவர் தோளில் முகம் புதைத்து அழுதான். அவரோ அவன் முதுகை வருடிக்கொடுத்தார்.

“மாமா! எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டவனுக்கு, உடல் மெலிந்து காணப்பட்ட அவரைத் திகைப்புடன் பார்த்தான்.

“ஏன் மாமா இப்படி இருக்கீங்க? உங்களுக்கு என்னாச்சு? ரொம்ப மெலிஞ்ச மாதிரி இருக்கீங்க?” என நந்தன் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான்.

“சுகர்தான்டா உன் மாமன் கொழுப்பைக் கரைச்சிருச்சு!” என இருபொருள் படச் சொன்னார்.

“இன்னும் நீங்க குடிக்கிறீங்களா?”

“இல்லடா, விட்டுட்டேன்! வீட்டுக்கு இந்த மனுஷன் தேவைப்படலைன்னாலும், அப்பான்னு சொல்லிக்கவாவது அவங்களுக்கு நான் வேணும். அதுக்காகவாவது உயிரோட இருக்கணும்னு சொல்லும்போதும் உடம்பைப் பார்த்துக்கணும் தானே!” என்றார் விரக்தியோடு.

இவனுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “அத்தை, சரண், சரண்யாவை அழைச்சிட்டு வந்திருக்கலாமே மாமா?”

“வர்றேன்னுதான் சொன்னாங்க! நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன். கஷ்டகாலத்துல சொந்தமா இருந்து உன்னை அரவணைக்கலை, உதவி செய்யலை! இப்போ காசைப் பார்த்ததும் சொந்தம் கொண்டாடிட்டு வருவாளா? நீ எப்பவும் போலவே இரு! அங்கெல்லாம் வர வேணாம்னு சொல்லிட்டு நான் மட்டும் வந்துட்டேன்ப்பா!”

“ஏன் மாமா?”

“அவ உன் கிட்ட பாசத்துக்காக வரப்போறது இல்லை, பணம் கேட்பா! கொடுக்க முடியாதுன்னு சொன்னா, என்னை வச்சு உன்னைத் திட்டுவா. நல்ல நாள்ல நீ சந்தோஷமா இருக்கணும்,” என்று அவர் மெய்யான அக்கறையில் சொல்ல, நந்தன் நெகிழ்ந்து போனான்.

“வா ரகு, எப்படி இருக்க?” என நீலகண்டனும் வரவேற்க, “என்னப்பா இப்படி இளைச்சுப் போயிட்ட?” எனச் சதாசிவமும் கேட்டார். ரகுபதி தன் உடல்நலப் பாதிப்பைப் பற்றிச் சொல்ல, அதற்கு அவர்கள் சில அறிவுரைகளை வழங்கினர்.

விபு, ஜோவியை அறிமுகம் செய்து வைத்த நந்தன், ஜனனியையும் சச்சினையும் அறிமுகப்படுத்தினான். அவர்கள் இருவரையும் யோசனையாகப் பார்த்த ரகுபதி, நந்தனைப் பார்க்க, அவன் மென்மையாகக் கண்களை மூடித் திறந்தான்.

மதிய விருந்திற்காக ஜனனி சமையலை ஆரம்பிக்க, சுதா, கௌரி, வள்ளி, ஜோவி ஆகியோர் அவளுக்கு உதவி செய்தனர். விபு சச்சினோடு விளையாட, சம்பந்திகள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். மாமனைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று நந்தன் பேசினான்.

“இராமச்சந்திரன் இறந்துட்டானா? எனக்கு எந்த விஷயமும் தெரியாது நந்தா! உனக்கு எப்படித் தெரிஞ்சது?”

“விபு சொன்னான் மாமா.”

“ம்ம்… உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் இப்படியா ஆகணும்?”

“மாமா…” என இவன் தயங்க, “என்னடா?” என்றார்.

“நான் இன்னமும் ஜனனியைத்தான் விரும்புறேன் மாமா! அவளையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்,” என்று சொல்லி அவருக்கு அதிர்ச்சி அளித்தான்.

“தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குப் போனது ஞாபகமில்லையா? மறுபடியும் அதே பொண்ணை நினைச்சுட்டு இருக்கேன்னு சொல்ற? அதுவும் சின்னப் பையனோட இருக்கிறவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றியே, பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு?”

நகத்தின் இடுக்குகளைப் பார்த்தபடி, “என் வாழ்க்கையில ஒரே பொண்ணுன்னா அது ஜனனிதான்! அவ புருஷன், குழந்தையோடு சந்தோஷமா இருந்திருந்தா எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது மாமா. ஆனா அவளும் வாழ்க்கையையும் வயசையும் தொலைச்சுட்டு என்னைப் போலவே நிக்கிறா! எங்க வாழ்க்கையைச் சீரமைக்கிறதுல என்ன தப்பு இருக்கு மாமா?”

“அந்தப் பொண்ணு ஒத்துக்கிட்டாளா?”

“இன்னும் இல்லை மாமா, ஆனா ஒத்துக்க வச்சுடுவேன்,” என்றான் நம்பிக்கையாக.

அவரும் சிரித்துக்கொண்டே, “உன்னை இப்படிப் பார்க்கும்போது என்னைப் பார்க்கிறது போலவே இருக்கு,” என்றார். அவனுக்கு அவரது காதல் விவரங்கள் தெரியும் என்பதால் சிரித்துக்கொண்டான்.

“அப்புறம் ஒரு விஷயம் நந்தா…!”

“என்ன மாமா?!”

“என் அப்பா, அதாவது உன் தாத்தா, உன் அம்மா பேர்லயும் என் பேர்லயும் ஏக்கர் கணக்குல நிலத்தை எழுதி வச்சுட்டுப் போயிட்டார். நான் பிசினஸ் பண்றேன்னு எனக்கு இருந்ததை அழிச்சது இல்லாம, உங்க அம்மா பேர்ல இருந்த நஞ்சையையும் (நிலம்) அழிக்க நினைச்சேன். அதைத் தெரிஞ்சுகிட்ட அப்பா, உயிலை உன் பேருக்கு மாத்திட்டார். அதுவும் நீயும் உனக்கு வரப்போற மனைவியும் சேர்ந்து கையெழுத்துப் போட்டால்தான் விற்க முடியும்னு எழுதி வச்சுட்டார். எனக்கு அந்தச் சொத்து வேணாம். குத்தகைக்கு விட்டு அதுல வர்ற வாடகையை வச்சுதான் என் பங்குக்கு நான் வீட்ல காசு கொடுக்கிறேன்… உனக்கு இப்படி ஒரு நிலம் இருக்கிறது தெரியணும், தாத்தா உயில் எழுதி வச்சிருக்கிறது தெரியணும்னு உன்கிட்ட சொல்றேன். இத்தனை நாள் நீ இங்க இல்லை, அதனால அந்தப் பணத்தை நானே வச்சுக்கிட்டேன். இனி உனக்கு நான் கொடுக்கணும், இந்தா…” என்று பணத்தோடு உயில் பத்திரத்தையும் கொடுத்தார்.

அதை அவரிடமே திரும்பக் கொடுத்தான் நந்தன். “இல்ல, இதெல்லாம் உனக்குச் சேர வேண்டியது, உன்கிட்டயே இருக்கட்டும்,” என்று அவர் மீண்டும் கொடுக்க, பணத்தை மட்டும் எடுத்து அவர் பையிலேயே வைத்தான். “எனக்கு அந்தப் பணம் ஒன்னும் கஞ்சி ஊத்தப் போறது இல்லை. இந்தப் பணம் உங்க மரியாதையைக் காப்பாத்தட்டும், நீங்களே வச்சுக்கோங்க… எனக்குக் கல்யாணம் நடந்தால் அப்புறம் யோசிப்போம் மாமா!”

“வயசு போய்க்கிட்டு இருக்கு நந்தா! உன் பெரியப்பாகிட்ட பேசவா? பொண்ணு கேட்போம்டா!”

“கேட்டா மட்டும் அவ சரின்னு சொல்லிடுவாளா? அவ முடிவுக்குத்தானே அவங்க கட்டுப்படுவாங்க… அவளைத்தான் மாமா சம்மதிக்க வைக்கணும், அதுக்குத்தான் பொறுமையா இருக்கேன்.”

“என்னவோடா! சீக்கிரமா அந்தப் பொண்ணோட மனசை மாத்தப் பாரு!” என்றார்.

நீலகண்டன் வந்துவிட, நந்தன் சச்சினோடு விளையாடச் சென்றான். நில விவகாரத்தைப் பற்றி ரகுபதி நீலகண்டத்திடம் சொல்ல, சதாசிவமும் கேட்டுக் கொண்டிருந்தார். “சீக்கிரமா அவனுக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க மாமா!” என்றார் ரகுபதி. “கண்டிப்பா அடுத்த வேலை அதுதான்டா!” என்றனர். மாலையில் விபுவின் குடும்பம் கிளம்பிவிட, நீலகண்டன் குடும்பம் மட்டும் அங்கேயே தங்கிக்கொண்டனர்.

அனைவரும் உறங்கிய நேரம், ஜனனி அவனுக்குப் பால் காய்ச்சி எடுத்து வந்து கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டவன், அவளிடம் பணத்தை நீட்டினான். ‘எதுக்கு?’ என்பது போல அவள் பார்த்தாள்.

“என் வீட்டு விசேஷத்துக்கு நீங்க ரெண்டு வேளை சமைச்சுக்கொடுத்ததுக்கு உங்களுக்குப் பணம் கொடுக்க வேணாமா? அதான்…” என்றதுமே ஜனனிக்குக் கோபம் வந்து சப்பென்று அறைந்தாள்.

கன்னத்தைத் தேய்த்தபடி நந்தன் நின்றான். “என்னடா இது? என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? உன்கிட்ட காசை எதிர்பார்த்து இதையெல்லாம் செஞ்சேனா? என்னை என்ன நினைச்சுட்டு இருக்க நீ?”

“நான் என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு சொல்லட்டுமாடி?” எனக் கேட்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என் கேள்விக்கு பதில் சொல்லுங்க மேடம். எதுக்காக என் வீட்டு விசேஷத்துக்குச் சமைச்சுக் கொடுத்தீங்க?” என அவன் கைகளைக் கட்டிக்கொண்டு மெலிதான குரலில் கேட்டான்.

“அது… நீ என்னோட ஃபிரண்ட் (நண்பன்). உனக்கு ஒரு நல்லது நடக்கும்போது, அந்தச் சந்தோஷத்துல என் பங்காக இருக்கட்டும்னு சமைச்சேன். அதுக்கு நீ காசு தருவியா?”

“நண்பர்களா இருந்தாலும் உழைப்பும் பணமும் வேற வேறதானே! வாங்கிக்கோங்க.”

“இதை நான் வாங்கிக்கணும், அவ்வளவுதானே? அப்போ புடவைக்கும் சச்சின் டிரஸ்ஸுக்கும், அவனுக்கு நீ வாங்கித்தந்த பொருளுக்கும் சேர்த்து நான் பணம் தருவேன், நீ வாங்கிப்பியா மிஸ்டர்?” எனத் திமிராகக் கேட்க, நந்தன் நீட்டிய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டான். அவளை மடக்க நினைத்தவன், அவளிடம் மாட்டிக்கொண்டான்.

“முட்டாள்தனமா ஏதாவது செஞ்சு என்கிட்ட வாங்கிக் கட்டிக்காத! போடா,” என்று அவள் நகர்ந்துவிட, அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ‘எப்படித்தான் இவளை என் வழிக்குக் கொண்டு வர்றதுனு தெரியலையே’ என்ற புலம்பலோடு படுக்கச் சென்றான்.

“கந்தன் பைனான்ஸ்” என்று பொறிக்கப்பட்டிருந்த அலுவலகத்திற்குள் சதாசிவமும் அவரது நண்பர் காளீஸ்வரனும் நுழைந்தனர். பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் அவர்களை உள்ளே அனுமதித்தான் கந்தன். தொழிலுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் பணம் கேட்டார் காளீஸ்வரன்.

யோசனையோடு அவர்கள் இருவரையும் பார்த்த கந்தன், “ஐம்பது லட்சம் கொடுக்கச் சரி! எனக்கு ஜாமீன் (Surety) வேணும். அது இருந்தால்தான் பணம் தருவேன்.”

“எல்லாமே அடமானத்துல இருக்கு தம்பி,” எனச் சதாசிவம் கூற, “யாராவது ஜாமீன் கையெழுத்துப் போட்டால் நான் பணம் தர்றேன்,” என்றான் கந்தன்.

“நான் போடுறேன்ப்பா! இவன் என் நண்பன், சரியாப் பணத்தைக் கொடுத்துடுவான். நேர்மையானவன், இவனுக்காக நான் கையெழுத்துப் போடுறேன்,” என்று சதாசிவம் பெருமிதமாகச் சொல்ல, “நீங்க யாரு?” எனக் கேட்டான் கந்தன்.

“என் பேரு சதாசிவம் தம்பி. இவனோட பாலிய நண்பன். என் பேர்ல ரெண்டு வீடு, நிலம் எல்லாம் இருக்கு,” என்றார்.

“உங்களுக்கு வாரிசு?”

“ஒரே பொண்ணுப்பா! ஜனனி கேட்டரிங் சர்வீஸ் கேள்விப்பட்டிருப்பீயே, என் பொண்ணுதான்!” என்றதும் கந்தனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“உங்க பொண்ணா அவங்க? வரதராஜன் மாமா வீட்டு விசேஷத்துல விருந்து பிரமாதமா இருந்தது! அவங்க அப்பாவா நீங்க? கேட்கவே சந்தோஷமா இருக்குங்க! நான் பணம் கொடுக்கிறேன், நீங்க சில பேப்பர்ல கையெழுத்துப் போடணும்,” என்றான்.

சதாசிவத்திற்குப் பெருமிதம் தாங்கவில்லை. தன் மகளின் திறமையைப் பாராட்டியதும் கர்வமாக அமர்ந்தவர், அவனது கடைசி வாக்கியத்தை அலட்சியமாக விட்டுவிட்டார். நண்பருக்காகக் கையெழுத்துப் போட்டார். இந்தக் கையெழுத்துதான் ஜனனியின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்பதை அறியாமல் போனார்.

“பணம் சரியா வரணுங்க! முக்கியமா வட்டி! இல்லைன்னா இந்த கந்தனை வேற மாதிரி பார்க்க வேண்டியிருக்கும்,” என்று சிரித்துக்கொண்டே மிரட்ட, அவர்களும் “கண்டிப்பா வட்டியையும் முதலையும் சேர்த்து அடைச்சுடுவான்ப்பா,” எனச் சதாசிவம் நம்பிக்கையாகக் கூறினார்.

“உங்களை நம்பித்தான் கொடுத்திருக்கிறேன், நீங்கதான் பொறுப்பு! அவர் தரலைன்னா உங்ககிட்டதான் கேட்பேன்,” என்றான் கந்தன்.

விளையாட்டாகப் பேசுகிறான் என்று சதாசிவம் சிரித்துக்கொண்டே தலையை அசைக்க, அவனோ அதில் விஷமத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்பதை அவர் உணரவில்லை

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
6
+1
2
+1
0

Leave a Reply