
அப்பெரிய குளிரூட்டப்பட்ட மஹாலில் கேட்டரிங் தொழிலில் ஈடுபடுபவர்களுக்காக எக்ஸ்போ (Catering Expo) வைத்திருந்தனர்.
அந்தப் பரந்து விரிந்திருந்த பெருங்கூடத்தில் சிறு சிறு கடைகளைப் போல அமைத்து, தங்களின் கேட்டரிங் சர்வீஸ் பெயரைப் பெரிதாக எழுதி வைத்திருந்தனர். உள்ளே சில உணவுகளைத் தயாரித்துக் கொடுத்தும், தேடி வரும் மக்களுக்கு ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஏற்றார் போல உணவுப் பட்டியலையும் அதன் விலையையும் காகிதத்தில் அச்சிட்டு வழங்கினர். உணவுடன் சேர்த்துத் தங்களது கேட்டரிங் சர்வீஸைப் பற்றியும் விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.
இப்படித் தங்களின் கேட்டரிங் தொழிலை விளம்பரப்படுத்த நடத்தப்பட்ட இந்த எக்ஸ்போவில் பலரும் கலந்து கொண்டனர். பொதுமக்களும் ஒரு கண்காட்சியைப் போல இதைக் காண வந்திருந்தனர்.
முகநூல் (Facebook) வழியாக இந்தக் கண்காட்சி விளம்பரத்தைக் கண்ட ஜனனி, பணம் கட்டி அதில் ஒரு கடையைப் பதிவு செய்திருந்தாள்.
கண்காட்சியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், அச்சிட்ட நோட்டீஸ்கள், சில இனிப்பு மற்றும் கார உணவு வகைகள் என மேசையில் அடுக்கி வைத்து, உள்ளே அவளும் அவளது மாமனாரும் அமர்ந்திருந்தனர். தங்களை நோக்கி வரும் மக்களிடம் தங்களின் கேட்டரிங் சர்வீஸில் உள்ள உணவு வகைகள் மற்றும் விலைப் பட்டியலை விவரித்தபடி, வந்தவர்கள் ருசி பார்க்க உணவையும் தந்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு நேர் எதிரே ‘கந்தன் கேட்டரிங் சர்வீஸ்’ கடையைக் கந்தரூபன் விரித்திருந்தான். அவன் மட்டும் தனியாக இருந்தான். இன்னொரு நாற்காலியில் காலை நீட்டி வைத்து, மின்விசிறிக்குக் கீழே அமர்ந்திருந்தவன், தன் கந்துவட்டித் தொழிலையே கவனித்துக் கொண்டிருந்தான்.
இங்கு வர அவனுக்குத் துளியும் விருப்பமில்லை. கயலின் கணவர் கோபிநாத் தான் இந்தக் கண்காட்சி தகவலைக் கயலிடமும், மாமியார் மஞ்சுளாவிடமும் சொன்னான். அவர்களும் அவனைக் கண்டிப்பாகப் போகச் சொல்லி வற்புறுத்தினர்.
அவனோ, “பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?” எனச் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவர்கள் கேட்கவில்லை, அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தனர்.
விருப்பமில்லாமல், ஏனோ தானோ என்று சமைத்துத் தன் தந்தையின் கேட்டரிங் தொழிலை ஓட்டிக் கொண்டிருக்கிறான். தாயின் வார்த்தையை மீற முடியாமல், அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான்.
கந்துவட்டியில் அவன் எதிர்பார்ப்பிற்கும் மேலாகப் பணம் வரவு இருக்க, கேட்டரிங் தொழில் மேல் அவனுக்குப் பெரிதாக ஆர்வம் இல்லை. தந்தையின் உயிர் மற்றும் உழைப்பு அடங்கிய தொழில் என்பதால், தாயின் சொல்லுக்காக விருப்பமில்லாமல் அதைத் தொடர்கிறான்.
வீரமணி இருக்கும் வரை எந்த விசேஷம் என்றாலும் ‘கந்தன் கேட்டரிங் சர்வீஸ்’ என்ற பலகைதான் முதலில் இருக்கும். சில வீடுகளில் பிளாஸ்டிக் டப்பாக்களில் கூட கந்தன் கேட்டரிங் சர்வீஸ் பெயர் போட்டிருக்கும்; அந்த அளவிற்குத் தொழில் ஓஹோவென நடந்தது. கேட்டரிங் சர்வீஸ் தேதி கிடைத்த பின்னரே கல்யாணத்திற்குத் தேதி குறித்த காலமும் உண்டு. பேரும் புகழுடனும் ஓடிக்கொண்டிருந்த அந்தத் தொழிலின் வீழ்ச்சியைப் பார்க்க ஆசைப்பட்ட கூட்டமும் ஒரு பக்கம் இருந்தது.
அதையும் மீறி உழைப்பும், நேர்மையும், சுத்தமும் கொண்ட கந்தன் கேட்டரிங் சர்வீஸிற்கு அன்றைய நாளில் ஈடு இணை ஏதுமில்லை. ஆனால் இன்று, அவனது கேட்டரிங் சர்வீஸைத் திரும்பிப் பார்க்கக் கூட ஆளில்லை.
வீரமணி எப்போது இறந்தாரோ, பொறுப்புகள் எப்போது கை மாறியதோ, அப்போதே வீழ்ச்சியும் ஆரம்பித்துவிட்டது. ஆளுமை நிறைந்த ஒரு கட்சித் தலைவர் இறந்த பின், அந்தச் சரியான வழியில் நடத்த ஆளில்லாமல் சிதறிப் போவதைப் போலத்தான் கந்தன் கேட்டரிங் சர்வீஸின் நிலையும் ஆனது.
வீரமணியைப் போலக் கந்தரூபன் இல்லை. கந்துவட்டிக்காரனிடம் பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், வேலையாட்களுக்குச் சம்பளத்தைக் கிள்ளித் தந்ததால், பல வருடம் உழைத்தவர்கள் எல்லாம் விலகிச் சென்றனர். அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; இருப்பவர்களை வைத்துக்கொண்டு நடத்தினான். பெரிய லாபம் வரவில்லை. ஆறுமுகம் போன்ற ஒரு சிலர் மட்டுமே பணத்திற்காக இல்லாமல், வீரமணியின் நட்பிற்காகவும் விசுவாசத்திற்காகவும் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள்.
முதலாளி – தொழிலாளி என்ற பாரபட்சம் வீரமணியிடம் இருக்காது. அவர்களைச் சரிசமமாக அமர வைத்து ஆலோசனை கேட்டே சமையல் களத்தில் இறங்குவார். ஆனால் இவனோ, அவர்களை நிற்க வைத்து “நான் தான் முதலாளி, நீங்க தொழிலாளி” என்ற ரீதியில் பேசுவான்; அவர்கள் அமைதியாகக் கேட்க வேண்டும். இதுவே வீழ்ச்சிக்குப் பெரும் காரணமாக அமைந்தது.
ஆனால், தன் தாய் மஞ்சுளாவிடம் எல்லாம் சிறப்பாக நடப்பதாகச் சொல்லி வைத்திருக்க, அந்த ஜீவனும் தன் மகன் கணவனைப் போலவே மாடாக உழைக்கிறான் என்று நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மை தெரிந்தால் அவர் நிலைமை என்னவாகுமோ?
இப்போது கூடத் தொழிலின் முன்னேற்றத்திற்காக அவன் ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. மரநிழல் கிடைத்தவன் தூங்குவதைப் போல, குளிரூட்டப்பட்ட அந்த மஹாலில் வந்த நோக்கம் மறந்து சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு குழந்தை ஓடி வந்து அவன் வைத்திருந்த உணவை ருசி பார்த்துவிட்டு, “நன்றாக இல்லை” என்று சொல்லிவிட்டு ஓடுவதைக் கூட அவன் கவனிக்கவில்லை. ஆனால், அந்தக் குழந்தை முகம் சுளித்துச் செல்வதை ஜனனி கவனித்துவிட்டாள். ஏதோ ஒரு வகையில் அவளுக்குக் கந்தன் கேட்டரிங் தொழிலோடு ஒரு மெல்லிய தொடர்பு உண்டு.
அவளுக்கு மிகவும் பிடித்த கேட்டரிங் சர்வீஸ் அது. வீரமணி அவளுக்கு ஒரு முன்னோடி. அவரது பேட்டிகளை அவள் நிறையப் பார்த்திருக்கிறாள். அவரைப் போலவே கேட்டரிங் ஆரம்பித்து மக்கள் போற்ற வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டு. முன்னொரு சமயம் அவரிடம் தன் ஆசையைச் சொன்னபோது, அவர் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல், “நீ எனக்குப் போட்டியாக வரவேண்டும்” என்றும் சொல்லியிருந்தார்.
இன்று போட்டியாகத்தான் எதிரே கடை போட்டிருக்கிறாள். ஆனால், அதைக் காண அவர் இல்லையே என்ற வருத்தம் அவளுக்கு. அதைவிடக் கந்தரூபனின் மேல் கோபம் வந்தது. வீரமணியின் உழைப்பை அவன் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறான்.
அதைப் பொறுக்க முடியாமல் அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணி, தன் மாமனாரிடம் பத்து நிமிடத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு, அவன் முன்னே போய் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள்.
அவனும் தன் முன் நிழல் ஆடுவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தான். ஆச்சரியத்தில் அவன் விழிகள் விரிந்தன. அவளை அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை. உள்ளே ஒரு சிறு இன்ப அதிர்வு.
“அடடே! ஜனனி மேடம்… வாங்க, வாங்க! என்ன இந்தப் பக்கம்? ஓ… கந்தன் கேட்டரிங் சர்வீஸ் பத்தி தெரிஞ்சுக்க வந்திருக்கீங்களா?” என நகைப்புடன் கேட்டான்.
“கந்தன் கேட்டரிங் சர்வீஸ் பத்தித் தெரிஞ்சதால தான் இங்க வந்தேன்.”
“ஓ… என்ன தெரியும்? எதுக்கு வந்தீங்க?” என அவன் நக்கலாகக் கேட்க, ஜனனிக்குக் கோபம் தலைக்கேறியது.
“உங்களுக்குக் கொஞ்சம் கூடக் குற்றவுணர்ச்சியே இல்லையா மிஸ்டர் கந்தரூபன்?” எனக் கேட்டவளைப் புருவம் சுருங்கப் பார்த்தான்.
“உங்க அப்பா உழைப்பையும் அவர் சம்பாதிச்ச பேரையும் அழிச்சுட்டு இருக்கோம்ன்ற வருத்தம் கொஞ்சமாவது இருக்கா? வீரமணி சாரோட உழைப்பைக் கண்கூடா நானே பார்த்திருக்கேன். அவர்தான் என்னோட இன்ஸ்பிரேஷன் (Inspiration). ஆனா இப்போ அவரோட கேட்டரிங் தரம் குறைஞ்சு போயிருக்கு. அதை நினைக்கும் போதே வருத்தமா இருக்கு! என்ன மனுஷன் நீங்க? அப்பா ஒப்படைச்ச பொக்கிஷத்தைப் பாதுகாக்காமக் குழியில போட்டுப் புதைச்சுட்டு இருக்கீங்க!”
“இந்தக் கேட்டரிங் மொத்தமாக உயிர் இல்லாமல் போறதுக்குள்ள, அதற்கு உயிர் குடுங்க. நீங்களே முயற்சி எடுத்து முன்னுக்குக் கொண்டு வரலாம். உங்களுக்குப் பிடிக்கலைய, நல்ல சமைக்கற ஒருதருக்கு வாடகைக்கு விடுங்க. அதுவும் முடியலைன்னா உங்கள் அம்மா கிட்ட உண்மையச் சொல்லி இதை கேட்டரிங் வித்திடுங்க. இப்படி அலட்சியப்படுத்திச் சாகடிக்காதீங்க! என்னால் இதைப் பார்க்க முடியல! உங்களுக்கு இதோட மதிப்பு தெரியல, எனக்குத் தெரியும். அதனால்தான் பேசுறேன்… புரிஞ்சுக்கோங்க!”
சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட்டு நகர இருந்தவளை அவனது குரல் தடுத்தது.
“ம்ம்… எங்க அப்பா கேட்டரிங்கிற்கு இப்படி ஒரு மதிப்பு இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. ஒத்துக்கிறேன், எனக்கு இதில விருப்பம் இல்லை. எங்க அம்மா கிட்ட எவ்வளவு சொல்லியும் கேட்கல; இன்னமும் அப்பாவோட ஆன்மா இந்தக் கேட்டரிங்ல வாழ்றதா நினைக்கிறாங்க. நானும் முயற்சி பண்றேன்” என்றவன் உதடு பிதுக்கினான்.
தொடர்ந்து, “எங்க அப்பாவோட கேட்டரிங் மதிப்பு தெரிஞ்ச நீங்களே ஏன் இதை வாடகைக்கோ அல்லது விலைக்கு வாங்கவோ கூடாது? நான் எங்க அம்மாவைச் சமாளிச்சுக்கிறேன். வாங்கிக்கிறீங்களா?” எனக் கேட்டு அவளை அதிர வைத்தான்.
“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? அட்வைஸ் பண்ண வந்தீங்களே… அதை நீங்களே செயல்படுத்தினா என்ன? புண்ணியமாப் போகும் இல்லையா?” என அவளை வெறுப்பேற்றினான்.
அவளோ அமைதியாக நின்றாள். “என்ன… வாங்க முடியாது, அட்வைஸ் மட்டும்தான் பண்ண முடியும்னு சொல்லப் போறீங்களா?”
“என்னால முடிஞ்சா கண்டிப்பா கந்தன் கேட்டரிங் சர்வீஸை உங்ககிட்ட இருந்து காப்பாத்துவேன். ஆனா இப்போதான் தொழில்ல கால் வச்சிருக்கேன். என்னால இப்போ இது முடியாது” என்றாள் உறுதியாக.
“ஓகே, வாங்க முடியாது… வாடகைக்கும் எடுக்க முடியாது. அப்போ ஒரு ஆப்ஷன் இருக்கு…” எனப் பீடிகை போட்டான்.
“என்ன?” என்பது போலப் பார்த்தாள்.
“நாம ரெண்டு பேரும் சேர்ந்தால் என்ன?”
“வாட்?” எனப் பதறினாள்.
“கந்தன் கேட்டரிங் சர்வீஸ், ஜனனி கேட்டரிங் சர்வீஸ்… ரெண்டையும் ஒண்ணா சேர்த்து நடத்தினா என்ன?”
“ஸாரி! எனக்கு உங்க கூடச் சேர்ந்து வேலை செய்ய இஷ்டமில்லை. நான் தனியாவே பார்த்துக்கிறேன். நன்றி” என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்தாள்.
அவன் அப்படியே விடுவானா என்ன? உதட்டை வளைத்து விஷமமாகச் சிரித்துக் கொண்டான்.
ஒரு வாரம் கடந்திருந்தது. ஜனனியின் வீட்டில் பூ, பழத் தட்டுடன் நுழைந்தனர் கந்தரூபனின் குடும்பத்தினர். ஜனனியின் வீட்டில் அவர்களின் அதிரடி வருகையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து நிற்க, முகம் சிவந்து கண்களில் சீற்றத்துடன் நின்றிருந்தாள் ஜனனி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
7
+1
2
+1

