Loading

அத்தியாயம் 14

நேரம் வேறு சென்றுக் கொண்டிருந்தது. நிச்சய விழா நடக்கவிருக்கும் வேளையில் இந்த ருக்மணி பாட்டி அலப்பறை செய்துக் கொண்டிருந்தார்.

“என்ன சாப்பாடு இது? சரியா வேகவே இல்ல. பொண்ணுக்கு புடவை எடுத்தீங்களா? இது என்ன இவ்ளோ கனமா லெஹங்கான்னு ஒன்னு? பொண்ணா லட்சணமா புடவ கட்டுனாதான நல்லா இருக்கும்.? இந்தா தெய்வா, உன் சம்பந்தி வீடு செய்றது கொஞ்சம் கூட சரியில்ல. மரியாதைன்னா என்னன்னு தெரியாதா? அவங்க வீட்ல யாருக்கும் பழக்க வழக்கம் என்னன்னே தெரியல. ரெண்டு வீட்டுக்கும் சேர்த்து நான் பாக்க வேண்டியதா இருக்கு.” என்று குத்தம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார்.

“மாறா, நீ எதுவும் தப்பா நினச்சுக்காத. அம்மாவ பத்தி உனக்கு தெரியும்தானே?” என்று தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார் தேவா.

“அட, இதுகூடவா எனக்கு புரியாது. கல்யாணம்னா கொஞ்சம் அப்டிஇப்டிதான் இருக்கும். நீ ஆக வேண்டிய வேலைய பாரு. பிறைம்மா, இதழ் ரெடியா?” என்று கேட்டுக்கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றார்.

அங்கு சுற்றி, இங்கு சுற்றி பேச்சு நேற்றைய நாளில் இளையாவை விசாரித்தது பற்றி வந்து நின்றது.

“மா, கொஞ்ச நேரம் சும்மா இருங்கமா. எல்லாம் சரியாதான் நடக்குது.”

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு என் வாய அடக்குற நீ? அப்டி என்ன ஊர் உலகத்துல இல்லாத சம்பந்தம்.? இப்போவே நீ ரொம்ப எடங்கொடுக்குற தேவா. இதுலாம் சரியில்ல பாத்துக்கோ. அப்ரோம் உன் தலைல மொளகா அரச்சிப்புட்டு போய்டுவாங்க. ஒத்த பொண்ணு தானே? சீரும் சிறப்புமா செய்ய வேண்டாம். இதுக்கு அப்ரோம் எவ்ளோ இருக்கு? பொண்ண பெத்தா அமைதியா தான் போகணும். நீ இம்புட்டு சலுக கொடுத்தா அப்ரோம் உன் மருமவ உன்ன மதிக்கவே மாட்டா.” என்று பேசியதில் தேவநந்தனிற்கு ஆத்திரம் தலைக்கேறியது.

பொது வெளியில் வைத்து பேசக் கூடாது என்பதற்காக அமைதி காத்தவர், ‘பொண்ண பெத்தா அமைதியா தான் போகணும்’ என்றதில் பொறுமை இழந்தார்.

“ம்மா, என்ன பேசுறன்னு யோசிச்சு தான் பேசுறியா? அவங்க மட்டுமா பொண்ண வச்சி இருக்காங்க. ஏன் நம்ம வீட்லயும் தான் திகழ் இருக்கா. நாளைக்கு அவ கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வந்தாலும் நீ இத தான் சொல்லுவியா? அதென்ன, பொண்ண பெத்தா அமைதியா போகணும்?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசியிருந்தார். நெருங்கிய உறவுகள் மட்டும் இருக்க இவர்களது இந்த உரையாடல் யாருக்கும் எட்டவில்லை.

மகனின் கோபத்தை அறிந்தவர் என்ன பேசுவதென்று இருக்க, தெய்வானை அவ்விடம் வந்தார்.

“இங்க பாரு தெய்வா, இவன் ப்ரெண்டுன்னு ரொம்ப எடங்கொடுக்குறான். மாமியாரா நீதான் சூதானமா இருக்கணும். இன்னொன்னு தெரியுமா, பொண்ணோட அம்மா நம்ம இளையாவ பத்தி விசாரிச்சு இருக்காம். எவ்ளோ நம்பிக்கன்னு பாத்துக்கங்க, ரெண்டு பேரும். இவன் தான் ப்ரெண்டு ப்ரெண்டுன்னு தூக்கி வச்சி ஆடுறான். அதுங்க பண்ண வேலைய பாரு” என்று சொல்லிவிட்டார். தன் மகன் தன் பேச்சைக் கேட்காது வரப் போகும் உறவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதில் எரிச்சலடைந்தவர் எது தன் மகனுக்கு தெரியவே கூடாது என்று நினைத்து இருந்தாரோ தன் வாயாலேயே சொல்லியும் விட்டார். இதில் இளையாவும் அகிலனும் தெய்வானை அழைத்ததன்பேரில் அவ்விடம் வர இதனை கேட்டும் விட்டனர்.

இருவரின் முகமும் கலவரமாகியது.

“இதுல என்ன அத்த இருக்கு? பொண்ணு கொடுக்குறவங்க பையன பத்தி விசாரிக்குறது சகஜம் தானே? ஏன், நாளபின்ன நம்ம திகழுக்கு மாப்ள பாக்குறப்போ நாமளும் விசாரிச்சு தானே கொடுப்போம். என்னதான் தெரிஞ்சவங்களா இருந்தாலும் சொந்தமா இருந்தாலும் தான் பொண்ணு பையன்னு வரப்போ அவங்க வாழ்க்க தான் அத்த முன்னாடி நிக்கும். நாளைக்கு பிள்ள கண்ண கசக்கிட்டு வந்து, நீங்க கை காட்டுனவன தான கட்டிக்கிட்டேன். விசாரிச்சு கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டீங்களான்னு கேட்டுட்டா பெத்த மனசு எப்டி இருக்கும்? இதுலாம் இப்போ ஒரு விசயமே இல்ல அத்த. நிச்சயத்துக்கு மனைல உட்கார வைக்கணும். நீங்க வாங்க. இளையா, வந்துட்டியா? போ, போய் அங்க மாமா கூட உட்காரு. நான் போய் இதழயும் பிறையயும் கூட்டிட்டு வரேன்” என்று படப்பட பட்டாசு போல் பேசிவிட்டு சென்றுவிட்டார்.

“இன்னொரு முற ஏதாவது சண்ட செய்யணும்னு பேசுன, கல்யாணம் நடக்குறதுக்குள்ள உன்ன கொண்டு போய் ஊர்ல விட்டுட்டு வந்துடுவேன்.” என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.

அதிலிருந்து தன் வாயை கடினப்பட்டு அடக்கிக் கொண்டார் ருக்மணி.

தெய்வானை பேசியதை மீண்டும் மீண்டும் தனக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்தான் இளையா. இந்த புரிதல் ஏன் எனக்கு எழவில்லை? என்ற கேள்வியில் உழன்று இருந்தவன் மயில் தோகை வர்ணத்தில் மிளிர்ந்த இதழைக் கண்டு மெய்மறந்து போனான்.

இந்தத் தருணத்தை தன்னுள் பெட்டகமாக்கிக் கொண்டவன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். இதழும் அவனைப் பார்த்தவள் ரசிக்கத்தான் செய்தாள். உள்ளுக்குள் அவனின்மேல் இருந்த அன்பு ஒரு பக்கம் பெருகினாலும் அவன் பேசிய வார்த்தைகள் முட்களாய் குத்தத்தான் செய்தது.

தன்னை ஏறிடும் நொடிக்காகக் காத்துக்கிடந்தவன், அவள் மட்டும் அறியும்வண்ணம் இதழைக் கூட்டி “சாரி” என்று சொல்லிவிட மலைத்துப் போனாள். கன்னக்கதுப்புகள் இரண்டும் செம்மையேறிட கைகளை இறுக்கியபடி குனிந்துக் கொண்டாள்.

இவற்றைத் தள்ளி நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிரவீனிற்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘எருமைக்கு வெட்கப்படலாம் தெரியுமா? ஓ காட்! ஒரே நாள்ல எத்தன அதிர்ச்சி?’ என்று தன் வலதுபக்கம் திரும்பிட எழிலோவியமாக நின்றிருந்தாள் திகழினி.

‘சும்மாவே இவ ஆள மயக்குறா! இன்னைக்கு சேரில வேற இருக்காளே!’ என்று அவளை ரசித்துக் கொண்டிருந்தவன் அவளின் பார்வை சென்ற திசையை நோக்கினான்.

‘லுக்கு வேற எங்கயோ போகுதே!’ என்று திரும்ப, திகழோ அகிலனை வெறித்துக் கொண்டிருந்தாள்.

அதனைப் பார்த்தவன் விழிகளோ அதிர்ச்சியில் பிதுங்கினாலும், ‘அண்ணனோட ஃப்ரெண்டு. நம்ம ஆளு சும்மாவே சேட்டை. ஏதாவது சண்ட போட்டு மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருப்பா போல. என்னமோ, ஆனா எனக்கு என் ஆளு தேவத தான்… வெள்ளக்கட்டி…’ தனக்குதானே காரணத்தை அறிந்துக் கொண்டு திகழைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

நிச்சயப் பத்திரிக்கை வாசித்து முடித்து, தாம்பூலம் மாற்றி இளையா இதழின் கைகளில் மோதிரம் போட, இதழும் தன் கோபத்தை மறந்து இளையாவிற்கு மோதிரம் போட்டாள். இந்தத் தருணம் இருவரின் மனதிலும் பெட்டகத்தில் பொதித்து வைத்துக் கொண்டனர்.

பின் அனைவரும் சாப்பிட செல்ல, இங்கு அறையில் இருவருக்கும் புகைப்படம் விதவிதமாய் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு படத்திற்கும் அவளிடம் மன்னிப்பை வேண்டிக் கொண்டிருந்தான் இளையா. அவனின் இத்தகைய செயல்களில் மொத்தமாய் உருகித்தான் போனாள். ஆனாலும் அந்த ஊடல் இன்னும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது.

இரவில் இளையா அழைத்தும் இதழ் அழைப்பை ஏற்கவில்லை.

உறங்கா இரவாகத்தான் சென்றது. சரியாக சிறிது கண்ணசந்த நேரம் முகூர்த்தத்திற்கு தயாராகவேண்டி எழுப்பிவிட்டனர் இருவரையும்.

‘யோசிக்காம தூங்கி இருக்கலாம்’ இருவரின் எண்ணமும் இதுவாகத்தான் இருந்தது.

இளையா தன் அறையில் தயாராகிக் கொண்டிருக்க, தெய்வானையை கையில் பிடிக்க முடியவில்லை. அவரின் ஆசையல்லவா இது. மகனின் திருமணம் அதுவும் அவர் பார்த்த பெண்ணோடு… சிறுவயதில் இருந்தே இதழ் என்றால் கொள்ளைப் பிரியம் தெய்வானைக்கு. பின், இடமாற்றம் வேலை என அவளின் முகமே மறந்துவிட்டார். மீண்டும் அவளோடு இருந்த அந்த மழலை பருவத்தை எண்ணி சிலாகித்துக் கொண்டவர் இதழைக் காண சென்றார்.

“பிறை, இதழ் எங்க?”

“அண்ணி, அவ குளிச்சிட்டு இருக்கா. ஐயர் வந்துட்டாரா? எல்லாம் எடுத்து வச்சிட்டேன். வேற ஏதாவது எடுக்கணுமா பாருங்களேன்”

“எல்லாம் சரியா இருக்கு பிறை. இன்னும் அந்த சின்ன வயசு இதழ் என் கண்ணுக்குள்ளயே இருக்கா. இந்த அத்த சொன்னதுலாம் மனசுல வச்சிக்காத பிறை. அவங்க அப்டித்தான்.”

“பரவாலங்க அண்ணி, இதுல என்ன இருக்கு. உண்மையாலுமே நான் விசாரிச்சேன்தான் அண்ணி. சின்ன வயசுல பாத்தது. நடுவுல பேசிக்கக் கூட ரெண்டு குடும்பத்துனாலயும் முடியல. இளையாவுக்கு லவ் ஏதாவது இருந்தா? பின்னாடி ரெண்டு பேருக்கும் மனசங்கடம் வந்துடக்கூடாதுன்னு அமுதன்தான் விசாரிச்சான். மன்னிச்சிடுங்க அண்ணி.”

“அட பிறை, என்ன இது? நான் அப்போ சொன்னது தான் இப்போவும். திகழா இருந்தா நாங்க என்ன செஞ்சு இருப்போமோ அதே தான் நீயும் செஞ்சு இருக்க. இதுலாம் இப்போ சகஜம். இப்போ போய் மனச குழப்பிக்க வேண்டாம். பாரு இதழ் வந்துட்டா. இதழ், சீக்கிரம் கிளம்பிடு. ஏதாவது வேணும்னா கூப்டு” என்றபடி அவ்விடத்தை விட்டு அகன்றார் தெய்வானை.

இதழ் அனைத்தையும் கேட்டுத்தான் இருந்தாள். தெய்வானைக்கு இருக்கும் புரிதல்கூட ஏன் இளையாவிற்கு வரவில்லை என்ற சந்தேகம் எழத்தான் செய்தது. அதனை ஓரம்கட்டியவள், இனிவரப்போகும் தருணத்தை சுகிக்கத்தயாரானாள்.

அதிகாலை ஐந்து முதல் ஆறு வரை முகூர்த்தம் என்பதால் அனைத்தும் விரைந்து நடந்தேற, மணமகனுக்கான தோரைணையுடன் வந்தான் இளையபாரதி.

அவர்கள் முறைப்படி சாங்கியம் சம்பிரதாயம் அனைத்தும் நடந்துக்கொண்டிருக்க, இதழ் வந்து முகூர்த்தப்புடவையை வாங்கிக்கொண்டு சென்றாள்.

இறுதியில் அனைவரும் எதிர்ப்பார்த்த அந்தத்தருணம் வந்துவிட்டதற்கான அறிகுறியாய் ஐயரின் “பொண்ண அழச்சிட்டு வாங்க” என்ற வாசகம் யாருக்கு இனித்ததோ இல்லையோ இளையாவிற்கு தித்திப்பாக இருந்தது.

ஒயிலென நடந்து வந்தவளின் வதனத்தில் திருமணக்கலையும் இணைந்துக்கொள்ள அழகென மிளிர்ந்தாள் இதழ். திருமணம் என்ற சொல்லுக்கான பூரிப்பு இருவரின் முகத்திலும் இருந்தது. முதல்நாள் நிச்சயத்தில் இருந்து கசப்புத்தன்மை கூட தற்போது காணாமல் போயிருந்தது.

மங்கலநாதங்கள் முழங்க கடவுளின் ஆசியோடு மாங்கல்யத்தை கையில் எடுத்தவன், ஒரு நிமிடம் நிறுத்தி “உனக்கு சம்மதம்தான இதழ்?” என்று அவள் கண்பார்த்துக் கேட்டான்.

இதழ் இதழோர சிரிப்பானது அகல விரிந்ததில் கண்களை மூடி தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். இளையாவும் புன்னகையோடு அவளை தன்னவளாக்கிக்கொண்டான்.

மூன்று முடிச்சிட்டவனோடு முந்தானை முடிச்சும் சேர்த்து, அக்கினி வலம் வந்து, அருந்ததி நட்சத்திரம் பார்த்து பெரியவர்கள் ஆசியோடு தம்பதிசமேதராய் நின்றனர் இருவரும். இளமாறனுக்கும் தேவநந்தனுக்கும் மகிழ்ச்சி தாளவில்லை என்பதே உண்மை. பின் விளையாட்டு நண்பர்களின் கொண்டாட்டம் என அனைத்தும் முடிந்தபின், மாப்பிள்ளை வீட்டாரின் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு இதழின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு இதழுக்கும் இளையாவிற்கும் பாலும் பழமும் கொடுக்கப்பட, பிரவீனின் கலாட்டாவில் கலகலப்பாக சென்றது. பின், இளையாவின் வீட்டிற்கு மருமகளாக அடியெடுத்து வைத்தாள் இதழினி இளையபாரதியாக.

“இதழ்மா, வந்து விளக்கேத்து” என்று தெய்வானை அழைக்க, முதலில் தயங்கியவள் பின் தெய்வானையிடம் சொல்லிவிட்டாள்.

“அத்தம்மா நான் இன்னைக்கு முத நாள். ஒன் வீக் முன்னாடி ஆகிடுச்சு. இன்னைக்கு ஆகும்னு நிஜமா எதிர்பாக்கல. என்ன பன்றது?”

“அச்சோ, சரி விடு. இதுக்கு யார் என்ன செய்ய முடியும் இதழ். ஆனா, என்கிட்ட சொன்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லாத. மனசு சுத்தமா இருந்தா போதும். போய் விளக்கேத்து. இல்லன்னா என் மாமியார் கிழவி இதுக்கும் கத்தும்.” என்று சாதாரணமாய் அவளை போக சொல்ல, ஒரு நிமிடம் ஆச்சர்ய அதிர்ச்சிதான் அவளுக்கு.

பின் முழுமனதாய் கடவுளை எண்ணி விளக்கையேற்றி வணங்கினாள் இதழ். பின் தெய்வானை திகழின் அறையில் அவளை ஓய்வெடுக்க சொல்ல, அதன்பின் அவளை காணவே முடியவில்லை இளையாவால்.

முதலில் இரண்டு நாட்கள் நடந்த விசயங்களை தன் நாட்குறிப்பில் எழுதியவள், அதன்பின் வயிற்றுவலியால் உறங்கிவிட்டாள்.

மாலை ஆறு மணியளவில் திகழ் வந்து எழுப்பிவிட்டாள்.

“அண்ணி… அண்ணி”

“ஹான் திகழ்…”

“எழுந்து ப்ரஸ் ஆகிக்கோங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நல்ல நேரமாம்” என்று திகழ் இன்று காலையில் அகிலனிடம் பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

சொன்னவள் எண்ணவலைகளில் மூழ்கியிருக்க, கேட்டவளோ பேந்தபேந்த விழித்துக் கொண்டிருந்தாள். பின் எழுந்து முகத்தை கழுவியவள் நேராக தெய்வானை இருக்குமிடம் சென்றாள்.

அங்கு ருக்மணி தெய்வானையிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவளுக்கு அத்தனை கோபமாக இருந்தது. இந்த களேபரத்தில் பிரவீனைப்பற்றி யோசிக்காமல் போனாள் இதழினி. அங்கு பிரவீன் மகிழாழி வீட்டருகினில் அகிலனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் உதடு கிழிந்து இரத்தம் வருமளவிற்கு.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்