Loading

தான் நினைத்தால் அக்காவைப் போல் கல்யாணம் பிடிக்கவில்லை என கடிதம் எழுதிவைத்து விட்டு மண்டபத்தை விட்டு ஓடி விடலாம் என்பது வினுவிற்கும் நன்றாகவே தெரியும். இருப்பினும் அவள் அதனை செய்யவில்லை காரணம் நன்றி உணர்வு, தன்னை பெத்து, வளர்த்தி, ஆள் ஆக்கி இன்று பணம் சம்பாதிக்கும் அளவுக்கு படிக்க வைத்து காப்பாத்தியது யார்? என்று யோசித்தால் பெற்றோர்கள் தானே என்பதை உணர்ந்து அவர்களுக்காக இந்த முடிவை எடுத்தாள். தான் இன்று தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறேன் என்றால், அதற்கு நான் பிறந்ததே காரணம், அப்படி இருக்க அந்த பிறப்பைத் தந்த பெற்றோர்களுக்காக நம் வாழ்க்கையையே தியாகம் செய்யலாம், ஆசையைத் துறப்பது எம்மாத்திரம் என அவளின் ஆசையான காதல் வாழ்க்கையை ஒதுக்கி வைத்து விட்டு, அம்மா அப்பாவிற்காக கட்டாய வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க போகிறாள் வினு, வினுமதி❤.

 

ஆம், ராமசாமியும் சாந்தாவும் வினுவைக் கண்டு அதிர்ந்து ஆச்சரியப்பட்ட விஷயம் இதுவே. அழுது கொண்டிருந்தவளுக்கு தன் அக்காவின் முகூர்த்த புடவை கண்ணில் பட அதை எடுத்து கட்டிக்கொண்டு தான் கதவைத் திறந்தாள்.

 

சாந்தாவிற்கோ தன் பெண்ணை முகூர்த்த புடவையில் பார்த்ததும் கண்கள் கலங்கிற்று.

ராமசாமி கை எடுத்து கும்பிட்டு,

“ரொம்ப நன்றி வினு, என் வாழ்க்கையையே காப்பாத்திட்ட”

 

‘என் வாழ்க்கையைத் தொலைச்சிட்டனேப்பா’ என மனதில் நினைத்தவள் அவரிடம் பேச விரும்பாமல், தரையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

“சரி சாந்தா நான் போய் சம்மந்திட்ட சொல்லிட்டு வரேன், கல்யாணத்துக்கு வினு ஒத்துக்கிட்டான்னு ” 

 

சாந்தாவோ, ” வாம்மா வினு டைம் ஆச்சு, மேக்கப் பண்றவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று மெல்லிய குரலில் கூறிய அம்மாவைப் படாரென ஒரு பார்வை பார்க்க அமைதி ஆகி விட்டார்.

 

இப்பொழுது சந்திரனின் அம்மா பார்வதி முகத்தில் பூரிப்புடன் வினுவைப் பார்க்க வந்துகொண்டு இருந்தார். இவர் குணத்தில் சிறந்தவர், பிரியா ஓடிவிட்டாள் என்பதைத் தெரிந்த போது கூட தன் மகனின் கல்யாணம் நிற்க போகிறதே என்று தான் அழுதாறே தவிற, இன்னொரு பெண்ணை மணமகள் ஆக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. ராஜன் வந்து இவரிடம் பிரியாவின் தங்கை ஒருவள் இருக்கிறாள் அவளைத் திருமணம் செய்து வைத்து விடலாம் எனக் கூறிய போது கூட அந்த பெண்ணிற்கு விருப்பம் இருக்கோ இல்லையோ தெரியவில்லையே வேண்டாம் என்று தான் யோசித்தார். ஆனால், ராஜனோ இவரிடம்,

 

“அந்த பெண்ணிற்கு விருப்பம் இருந்தால் மட்டுமே தான் இந்த கல்யாணம் நடக்கும்” என அப்பட்டமாக பொய் பேசினார் . இப்பொழுதும் அதே தான் நடந்தது ராஜன் இவரிடம் வந்து,

 

” பார்வதி, அந்த பொண்ணுக்கு முழு சம்மதமாம் நம்ம பையன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு” எனக் கூற இவருக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை,

“சரிங்க நான் போய் பொண்ண பாத்து பேசிட்டு வரேன்”

 

“வேணாம் வேணாம்”

 

“ஏங்க? நான் போய் என் மருமகளப் பாத்துட்டு வரேன்”

 

“எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் முடிஞ்சிரும், அதுக்கப்றம் நீ எவ்ளோ நேரம் வேணும்னா பேசு, யாரு கேக்க போறா?”

 

“இல்லங்க, என்ன இருந்தாலும் ஒரு தடவை நேர்ல பாத்துட்டு வந்தறனே”

 

“நான் எதுக்கு சொல்றேன்னா, இப்போ நீ போறேன்னு வை, கம்முன்னு இருப்பியா, அந்த பொண்ணுகிட்ட போய் இந்த கல்யாணத்துல உனக்கு முழு விருப்பமான்னு மறுபடியும் கேப்ப கரெக்ட் ஆ?”

 

“ஆமாங்க”

 

“பாத்தியா, பாத்தியா இதுக்கு தான் நான் சொல்றேன்”

 

“இத கேட்டா என்னங்க இருக்கு?”

 

“எதுக்கு கேக்க வேணாம்னு சொல்றேன்னா, ஏற்கனவே அந்த பொண்ணு அதிர்ச்சியில இருக்கு, அக்கா கல்யாணத்துக்கு வந்து இப்போ அந்த பொண்ணு கல்யாண பொண்ணா நிக்குது, நம்ம சும்மா சும்மா போய் விருப்பம் இருக்கான்னு கேட்டுகிட்டு இருந்தா அந்த பொண்ணு மனசு கஷ்டப்படாதா நீயே சொல்லு”

 

“ஆமா ஆமா”

 

“அதுக்கு தான் சொல்றேன்”

 

“சரிங்க, நான் போய் பாத்துட்டு வரேன்”

 

“என்ன பார்வதி இது, விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்ன மாதிரி இருக்கு”

 

“ஐயோ இல்லங்க, நான் போய் சும்மா நேர்ல மட்டும் பாத்துட்டு வந்தறேன், இத பத்தி எதும் கேக்க மாட்டேன், சரியா ” என அவரிடம் கூறிவிட்டு தான் இப்பொழுது வினுவைப் பார்க்க வந்திருக்கிறார் பார்வதி.

 

முன்பு ராஜன் மட்டுமே வினுவைப் பார்த்திருந்தார் அல்லவா அப்பொழுது அவர் தான் மாப்பிளையின் அப்பா என்பதை அறிந்து கொண்டாள் வினு. இப்பொழுது பார்வதி நேராக அறைக்கு வந்து வினுவைப் பார்த்து,

 

“அழகா இருக்க டா, உன் பேர் என்ன?” என வினவ வினு மௌனம் சாதித்தாள். அருகில் இருந்த சாந்தா உடனே,

 

“வினுமதி” என்றார்.

 

“ஓஹோ.. அந்த சந்திரனுக்கு ஏத்த மதி” என அவளை திருஷ்டி கழிப்பது போல் தன் இரு கைகளையும் அவள் முகத்தை தடவி எடுத்து நெற்றியில் வைத்து சொடுக்கு எடுத்தார். யார் என்றே தெரியாதவர் திடீர் என வந்து இவ்வாறு பேசுவது அவளுக்கு அசௌகரியத்தை உண்டாக்கியது.அது முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.

 

“ஏன் இன்னும் மேக்கப் போடாம இருக்கீங்க? கல்யாணத்துக்கு லேட் ஆகுது” என பார்வதி கேட்க வினுமதிக்கு கோபம் தான் வந்தது தான் என்ன நிலைமையில் இருக்கிறேன் என்பதை அறியாமல் ஆள் ஆளுக்கு மேக்கப் என்பது எரிச்சலை உண்டு பண்ணியது. சாந்தாவிற்கோ பயம் தட்டியது, இந்த விஷயத்தை முன்பு சொன்னதிற்கு தன்னையே முறைத்தாள் இப்பொழுது கோவத்தில் வார்த்தை ஏதேனும் விட்டு விட போகிறாள் என அஞ்சி மெதுவாக வினுவின் காதருகே சென்று,

 

“இவங்க தான் மாப்பிள்ளையோட அம்மா” எனக் கூறிய பிறகு சற்று அமைதி அடைந்தாள். இருப்பினும் இவளது முக மாற்றத்தை கவனித்த பார்வதி,

 

“ஏன் வினு ஒரு மாதிரி இருக்க?” எனக் கேட்க

 

“அது ஒன்னும் இல்ல சம்மந்தி, இன்னிக்கு நடு ராத்திரி ரெண்டு மணிக்கு தான் வந்தா அதான் டயர்ட் ஆ இருக்கா”

 

“ஓ சரி சரி, டைம் ஆச்சு சம்மந்தி கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகுங்க” என அந்த இடத்தை காலி செய்தார் பார்வதி.

வினுவின் மனதிற்கோ ஏதோ ஒன்று இடித்தது.

‘நம்ம அம்மா அப்பா கூட நான் சோகமா இருக்கேன்னு கவலை படல, அவங்க தப்புச்சா போதும்னு பாக்கறாங்க, மாப்பிளையோட அப்பாவும் என் நிலைமைய பத்தி யோசிக்கல அவங்க பையனுக்கு கல்யாணமானா போதும்னு பாக்கறாரு, ஆனா அவங்க அம்மா என் முகம் சரி இல்லன்னு என்னை பத்தி யோசிக்கறாங்களே , அப்போ இது கட்டாயக் கல்யாணம்ன்னு அவங்களுக்கு தெரியாதா என்ன? ஒரே கொளப்பமா இருக்கே’ என யோசித்து முடிப்பதற்குள் சாந்தா ஒப்பனை செய்து விடுபவர்களிடம் அழைத்து போய் விட்டார்.

 

முகூர்த்த நேரம் நெருங்க தொடங்கியது, ஒவ்வொரு சொந்தகளாய் மண்டபத்தை அடைந்தனர். மண்டபத்திற்கு வந்த பெண் வீட்டு சொந்தம் அனைவரும் ஒவ்வொருவராக மணமகள் அறைக்கு ப்ரியாவைப் பார்க்க சென்று விட்டு அங்கே இருந்த மணப்பெண் வினுவைப் பார்த்து என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டு திரும்பினர். அவர்கள் அனைவரும் வினுவின் காது படவே தான் விசாரித்தனர், இருப்பினும் இவள் இப்பொழுது எந்த ஒரு உணர்வும் இன்றி,

‘என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே’ என்ற நிலையில் இருந்தாள்.

 

இவை அனைத்தும் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்க மறுபக்கம் நம் கதையின் கதாநாயகன் குளித்து ரெடியாகி வெள்ளை வேஷ்டியும், மேலே வெள்ளை பனியனும் அணிந்து ஜன்னலோரமாக அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

 

அந்த மண்டபத்தில் இவனிற்கும் இவன் நண்பனான ரவியைத் தவிற அனைவருக்கும் நடந்து முடிந்த கலவரம் பற்றி தெரிந்திருந்தது. ஆனால் ஒருவரும் இவனிடம் சொல்ல விரும்பவில்லை, அப்படியே பெண் ஓடிவிட்டாள் என்று சொன்னாலும் இவன் பெரிதாக அலட்டி கொள்ளமாட்டான் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருந்த விஷயமே. ஆனால் மணப்பெண் மாறி விட்ட விஷயம் தெரிந்தால் ஒரு வேளை வேண்டாம் என்று சொல்ல கூட வாய்ப்பு இருக்கிறது என்று யாரும் சொல்ல விரும்பவில்லை.

 

மணமகன் அறையைத் திறந்து கொண்டு உள் நுழைந்த இவனின் நண்பன் ரவி,

 

“டேய் சந்திரா, இன்னும் ரெடி ஆகலையா?”

 

இதற்கு பதில் அவனின் பார்வை மட்டுமே, பார்த்து விட்டு மீண்டும் வேடிக்கை தான் அவனுக்கு.

 

“ஏன்டா டேய், இங்க ஒருத்தன் கேள்வி கேக்கறேன் நீ பாட்டுக்கு வேடிக்கை பாத்துட்டு இருக்க” இதற்கும் பதில் மௌனமாகவே இருந்தது.

 

“ஏன்டா மிஸ்டர் ராஜன் உனக்கு பண்ணி வெக்கற கல்யாணம் பிடிக்கலைன்னா எங்கிட்ட ஏன்டா பேசாம இருக்க பைத்தியம்” என கேட்டவனை இவன் முறைக்க

 

“சரி சரி நானும் தான் உன் கல்யாணத்துக்கு பிளான் பண்ணேன், ஆனா அதெல்லாம் எதுக்காக, எல்லாம் என் நண்பன் நல்லா வாழனும்ன்னு தான மச்சான், என்னை போய் துரோகி கணக்கா பாக்கறியே டா, ஓ மை கடவுளே, இவன்கிட்ட சொல்லி புரிய வைங்க ரவி ரொம்ப ரொம்ப நல்லவன் வல்லவன்னு, இவனுக்காக உயிரே கொடுப்பான் இந்த ரவின்னு, அவன்கிட்ட சொல்லி புரிய வைங்க காட் புரிய வைங்க, இவ்ளோ நல்லவன இன்னும் நீ நம்பலையா மச்சான், ஐ எம் எ குட்டு பாய் டா” என வராத கண்ணீரைப் பொய்யாக வரவழைத்து கைகளைத் தலை மேல் வைத்து கண்களை மூடி அழுவது போல் நடிக்க,

 

இந்த நடிப்பைப் பார்த்து பெரு மூச்சு விட்டுவிட்டு சேரில் இருந்து எழுந்து சென்றுவிட்டான் சந்திரன். இதை அறியாமல் கண்களை மூடியவாறே மேலும் தொடர்ந்து பேசி கொண்டிருந்தான் ரவி,

 

“பரவால்ல மச்சான் பரவால்ல உனக்காக நான் எவ்ளோ வேலை பண்ணிருக்கேன் தெரியுமா இன்னிக்கு? காலைல நேரமா மூணு மணிக்கு எந்திருச்சு குளிச்சு ரெடியாகி மறுபடியும் ஒரு குட்டி தூக்கம் போட்டு இப்போ மறுபடியும் எந்திருச்சு நாலு காபி, ரெண்டு டீ குடிச்சு இப்போ எவ்ளோ டையர்டா உன்னை ரெடி பண்ண வந்துருக்கேஏஏஏஏஏஏஏன்…” என கண்களைத் திறந்து பார்க்க ஒரே அசிங்கமாகி விட்டது. சந்திரனைக் காணாது வேறு பக்கம் திரும்பி பார்க்க சட்டையை அணிந்து பட்டனைப் போட்டு கொண்டிருந்தான்.

 

“தட்ஸ் மை பாய், கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டியா, ஆனாலும் இத முன்னாடியே பண்ணிருக்கலாம், நான் தொண்டை தண்ணி வத்த போராடி இப்போ உன்னை கிளப்பிருக்கேன், இப்போ டையர்ட் ஆகிட்டேன், அடுப்படியில இருந்து பாயாசம் வாசம் மூக்க துளைக்குது நான் போய் குடிச்சிட்டு வரேன்” எனக் கிளம்பிவிட்டான்.

 

சந்திரன் மெதுவாக பட்டனைப் போட்டு முடித்து விட்டு, தலை முடியை வாரி,தன் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு, சென்ட் அடித்து கொண்டு ஜம்மென்று மாப்பிள்ளை கலை பொருந்தி ரெடி ஆகிவிட்டான். சிறிது நேரத்துலயே ராஜன் வந்து,

 

“ரெடி ஆகிட்டியாப்பா ஐயர் வர சொன்னாரு”என்று அழைக்க அவனும் அவருடன் சென்று மணமேடையில் தன் அப்பாவின் கையைப் பிடித்து கொண்டு அமர்ந்தான். அங்கே ஐயர் அக்னியை வளர்த்தி, மந்திரங்களை ஓதி காலகாலமாக செய்து வரும் சம்பிரதாயங்களைச் செய்து கொண்டு இருந்தார்.

 

இன்னொரு அறையில் வினு தயாராகி ரதி போல் அமர்ந்திருந்தாள். ஆனால் அவளிடம் உணர்வு தான் ஏதுமில்லை, பொம்மை போல் அமர்ந்திருந்தாள். யாராவது இவளிடம் ஏதேனும் கேள்வி கேட்டாள், அதற்கு சாந்தா தான் பதில் கூறினார்.

 

“பொண்ணை வரச்சொல்லுங்க” என ஐயர் அழைக்க, வினு மணப்பெண்ணிற்கே உரியதான நளினமான நடையில் மெல்ல நடந்து வந்து சந்திரனின் அருகில் அமர்ந்தாள். அவளின் அழகில் மண்டபமே ஆச்சரியப்பட்டது மற்றும் மேலும் முனுமுனுத்தது.

“பரவால்ல சந்திரனுக்கு அமஞ்ச அதிர்ஷ்டத்த 

பாரேன் புள்ள எம்புட்டு அழகா இருக்கு…”

 

“சந்திரனுக்கு மட்டுமா அதிர்ஷ்டம், ராஜனுக்கும் தான், கல்யாணம் நின்னு போற நிலைமை இருந்தாலும், உடனே பொண்ணோட தங்கச்சி ஒத்துக்கிட்டு கல்யாணம் நடக்குது பாரு”

 

“அதுவும் இவ்ளோ அம்சமா அழகா பொண்ணு கிடைக்கிறதுன்னா சும்மாவா ” என ஒரு பக்கம் சந்திரனின் சொந்தங்கள் பேச மறுபக்கம் வினுவின் சொந்தங்களும் ஆரம்பித்தனர்.

 

“ராமசாமியும் ஒரு வகைல ராசிக்காரன் தான், புடிச்சாலும் புளியன்கொம்பால புடிச்சிருக்கான்”

 

“என்ன காசு இருந்தாலும் என்னப்பா இப்படி ஒரு மாப்பிளைக்கு கட்டி கொடுத்துருக்கான்”

 

“பணம் இருந்தா எந்த குறையும் கண்ணுக்கு தெரியாது”

 

“ஆமா ஆமா பணம் பத்தும் செய்யும்…” என இவ்வாறு தொடர்ந்தது சொந்தங்களின் பேச்சு.

 

ஐயர் அவரது சடங்குகளைத் தொடர்ந்து செய்ய,

 

“பொண்ணும் மாப்பிளையும் ஒருத்தர் உள்ளங்கை மேல இன்னொருத்தர் உள்ளங்கை வைங்க” என அவர் கூற

 

இருவருமே எந்த ஒரு ரியாக்ஷணும் இன்றி இருந்தனர்.

 

“நாழி ஆயிட்டு இருக்கு, ஒருத்தர் கை மேல இன்னொருத்தர் சீக்கிரம் வைங்கோ” என மீண்டும் கூற சந்திரன் அவள் கையினைத் தாங்கும் தோரணையில் மெதுவாக கையை நீட்டினான். ஆனால் இவளோ இன்னும் தன் கையை எடுக்கவில்லை. சாந்தா மெதுவாக காதருகே வந்து,

 

“அம்மாடி வினு மண்டபத்தில எல்லாரும் பாக்கறாங்க டா” என அவர் சொல்ல ஒரு நிமிடம் மண்டபத்தில் அமர்ந்திருந்த மக்களைச் சுற்றி பார்த்தவள் மெல்ல தன் கைகளை சந்திரனின் கைகள் மீது வைத்தாள். அதுவே அவர்கள் கை கோர்த்த நொடி. மீண்டும் தன் வேலைகளைத் தொடங்கினார் ஐயர்.

 

கைகள் மட்டுமே இதுவரை சந்தித்ததே தவிற கண்கள் சந்தித்த பாடில்லை. சந்திரன் இதுவரை பிரியாவையும் ஒரு முறை கூட பார்த்ததே இல்லை, இந்த நொடி வரை அவன் பிரியாவைத்தான் மணக்க போகிறேன் என்று நினைத்து கொண்டிருக்கிறான், இப்பொழுதும் பிரியாவின் கைகளையே தான் பற்றிகொண்டிருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறான் சந்திரன்.

 

ரவி ஒரு வழியாக பாயாசத்தை சாப்பிட்டு விட்டு வந்து மணமகன் அருகில் நின்றான். ரவி ஒரு முறை மட்டும் பிரியாவின் போட்டோவைப் பார்த்திருக்கிறான் அதுவும் எங்கயோ கிளம்பும் ஒரு அவசரத்தில் ராஜன் காட்டிய போது பார்த்துவிட்டு சென்றது தான். இப்பொழுது தான் மீண்டும் மணமகளைப் பார்க்கிறான்.முதலில் மாலை அணிந்து திருமண கோலத்தில் இருக்கும் இருவரையும் பார்த்து மகிழ்ந்த ரவி, சில நொடிகளில் வினுவைக் கவனித்து சற்று அதிர்ந்தான். பிறகு அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது, அவசரத்தில் பார்த்து இருந்தாலும் ஏதோ கொஞ்சம் நியாபகம் இருக்கத்தான் செய்தது பிரியாவின் முகம். ஆனாலும் அவனால் முழுமையாக முடிவு எடுக்க முடியவில்லை.

 

‘என்னடா ரவி இது பொண்ணு ஏதோ வேற மாதிரி இருக்கு, அன்னிக்கு அங்கிள் காட்டுன பொண்ணு மாதிரி தெரியலையே, பொண்ண மாத்தி வெச்சுட்டாங்கன்னு அங்கிள் கிட்ட சொல்லலாமா வேணாமா, ஆனா நம்மளே ஒரு அவசரத்துல பாத்தோம், ஒரு வேளை மேக்கப் அப்படியோ, இல்ல இல்ல மேக்கப் பண்ணா கலர் தான் மாறும் மூஞ்சுமா மாறும்’ என தனக்குள்ளேயே புலம்பிவிட்டு நன்கு கண்களைத் தேய்த்து பார்த்தான்.

 

‘இல்ல இது அந்த பொண்ணு மாதிரி இல்ல, இது வேற பொண்ணு தான், பொண்ணு வீட்டுக்காரங்க ஏமாத்த பாக்கறாங்க நம்மள, நான் தான் என் நண்பன் குடும்பத்த காப்பாத்தணும், இப்போவே நான் போய் அங்கிள் கிட்ட சொல்றேன்’ என இரண்டடி தள்ளி சென்று ராஜன் நின்ற இடத்தை அடைந்தான்.

 

ராஜன் காதருகில் சென்று,

 

“அங்கிள் நான் ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்”

 

“சீக்கிரம் சொல்லு “

 

“பொண்ணு வீட்டுக்காரங்க நம்மள மோசம் பண்ணிட்டாங்க”

 

“ஏன் அப்படி சொல்ற?”

 

“அன்னிக்கு சந்திரனுக்கு பாத்துருக்கற பொண்ணு இது தான்னு என்கிட்ட போட்டோல காமிச்ச பொண்ணு இது இல்ல”

ஒன்றும் தெரியாத அப்பாவி போல் 

“ஓஹோ ” என பதில் அளித்தார் ராஜன்.

 

“என்ன அங்கிள் கதை சொல்ற மாதிரி ஓஹோ.. ஆஹா.. ன்னு சொல்லிட்டு இருக்கீங்க, இது உங்க பையன் வாழ்க்கை அங்கிள்”

 

“ஓஹோ சரிப்பா, கல்யாணம் முடியட்டும் அப்றம் பேசிக்கலாம்”

 

“ஏதே கல்யாணம் முடியட்டுமா?, நான் கரெக்ட்டா தான பேசறேன், இல்ல எதும் உளறனா” என தலையை சொறிந்தவன், மச்சான் கிட்டயே சொல்ல வேண்டியது தான் என சந்திரனுக்கு கண் காட்டினான்.

 

அதை கவனித்த சந்திரன் ‘என்ன’ என்பது போல் புருவத்தைத் தூக்கி கேட்க,

 

‘பொண்ண பாரு, பொண்ண பாரு ‘ என ஹஸ்கி வாய்சில் பேச, ‘இவனுக்கு வேற வேலை இல்ல’ என சலித்து கொண்டவன் ரவி சொன்னதை துளியும் கண்டுகொள்ளாமல் ஐயர் சொல்லும் மந்திரங்களைத் திருப்பி உச்சரித்து கொண்டிருந்தான்.

 

“என்னங்க டா யாருமே நான் சொல்றதே மதிக்க மாட்டேங்கறீங்க?” ஒரு பக்கம் இவன் புலம்பி கொண்டிருக்க, மறுபக்கம் முகூர்த்தம் நெருங்கி கொண்டிருந்தது.

 

ஐயர் தாலியைத் தேங்காயின் மீது வைத்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பினார்.

 

“ஒரு வேலை நம்ம தான் போட்டோவை சரியா பாக்கலையோ? அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா இருக்குமோ? இல்லன்னா அங்கிலும் ஆன்ட்டியும் இவ்ளோ நார்மலா இருப்பாங்களா ? அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா இருக்கும்” என ஒரு வழியாக இவன் மனதை தேற்றி கொண்டான்.

 

ஆசீர்வதிக்கப்பட்ட தாலி மீண்டும் ஐயர் கைகளிடமே வந்து சேர்ந்தது,

 

“எல்லாரும் வந்தாச்சுல ” என ஐயர் வினவ,

 

“வந்தாச்சு ஐயரே” என ராஜன் பதில் கொடுத்தார்.

 

தட்டில் இருந்த தாலியை எடுத்து சந்திரனின் கைகளில் கொடுத்து, ” கெட்டிமேளம்.. கெட்டிமேளம்… ” என இவர் குரல் கொடுக்க, நாதஸ்வரம், மத்தளம் என அனைத்தும் இசைக்க தொடங்கியது. அந்த இசையுடன் ஐயர் மந்திரமும் சேர்ந்தது,

 

“மாங்கல்யம் தந்துனானே

 மம ஜீவன ஹேதுனா,

 கண்டே பத்னாமி சுபாகே த்வம்

 சஞ்சீவ சரத சதம்…”

 

நாதஸ்வர இசையும், மந்திரமும் சேர்ந்து ஒலிக்க, மண்டபத்தில் இருந்த அனைவரும் அச்சதை தூவ, சாந்தாவின் கண்களும் ராமசாமியின் கண்களும் குளமாக, மஞ்சதாலியை கையில் ஏந்தியவன் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான் அவளின் அவன் சந்திரன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
18
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்