Loading

                  தந்தையின் மகள்

அழகிய சிறு கிராமம். அங்கு சிறிய பறவை கூடாக வாழ்ந்து வந்த குடும்பம் தான் நாகராஜ்-சுலோச்சனா.

 

அவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். வசதி இல்லையொன்றாலும் பாசத்திற்கும், அன்பிற்கும் ஈடு இணையில்லாமால் வாழ்ந்து வந்தார்கள்.

 

ஒரு நாள் அவரது சித்தப்பா அவரை பார்க்க வந்த போது வீட்டு விஷயங்களை பேசி கொண்டிருந்தவர், அங்கே விளையாடி கொண்டிருந்த பெண் பிள்ளைகளை பார்த்தபடி “ஏன் டா நாகா(நாகராஜ்) இப்படி ரெண்டையும் பொட்டை புள்ளையா பெத்து வைச்சுருக்கியே. நாளை பின்ன அதுங்களை வளத்து ஆளாக்கி கல்யாணம் பண்ணி குடுக்கனும்னா எவ்வளவு சிரமப்படனும்?. அதுக்கு இன்னொரு ஆம்பிளை புள்ளையை பெத்துகிட்ட அவன் எல்லாத்தையும் பார்துப்பான்ல என்றவரிடம்

 

  1. “ஏன் பொம்பளை பிள்ளை என்ன பார்த்துக்காத?, இல்லை பொம்பளை பிள்ளைங்க பொறக்க கூடாதா?. ஏன் எல்லாம் இப்படி இருக்கீங்க?. பெண் பிள்ளைங்க தான் டா வீட்டோட மகாலட்சுமி. அதுங்களை வளர்க்குறது ஒன்னும் எனக்கு கஷ்டமாவும் பெரிசாவும் தெரியலை. அப்புறம் என்ன சொன்ன?. ஆம்பிளை பிள்ளையை பெத்துகிட்டா அவன் எல்லாத்தையும் பார்த்துப்பானா?. பார்த்துக்குவான் தான். அதும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை. அதுக்கு அப்புறம் அவன் வளந்து ஆளாகி அவனுக்குனு ஒரு குடும்பம் வந்ததுக்கு அப்புறம் என் பெண்ணுங்களுக்கு செய்யுனு அவன்கிட்ட போய் நிக்க முடியுமா?. அவன் அவன் குடும்பத்தை பார்ப்பானா இல்லை இந்த பொம்பளை பிள்ளைங்களுக்கு செய்வான சொல்லு பார்க்கலாம்?

 

“அதுக்கு இல்லை டா நாகா. நம்ம கடைசி காலத்துல முடியாம போன கூட பொம்பளை பிள்ளைங்க வீட்டுல போயி இருக்க முடியுமா”?. அதே ஆம்பிளை பையன் இருந்தா அவன் கிட்ட போய் இருக்கலாம்ல. அதுக்கு தான் டா சொன்னேன்.

 

“ஏன் டா எந்த பிள்ளையா இருந்தா என்ன?. நம்ம கை,‌ கால் நல்லா இருக்க வரை உழைப்போம். நம்மளா நமளே பார்த்துப்போம். பிள்ளைங்க எல்லாம் ஆளாகி அது அது குடும்பத்தோட சந்தோஷமா இருக்குறத பார்த்துட்டு நம்மளால முடுஞ்சதை அவங்களுக்கு செஞ்சுட்டு போய் சேர வேண்டியது தான். அதை விட்டுட்டு அந்த புள்ளை செய்யும், இந்ந புள்ளை செய்யுமுனு கிட்டு சுத்துறத விட்டுட்டு போய் பொழப்ப பாருங்க டா” என்று கோபமாக கூற அவரது சித்தப்பா வாயடைத்து போய் அமைதியாகி விட்டார்.

 

தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். சுலோச்சனா அருகிலிருக்கும் பஞ்சு மில்லுக்கு வேலைக்கு செல்ல அவர் கணவரோ லாரி டிரைவர். ஒரு முறை வேலைக்கு சென்றால் திரும்ப வர எப்படியும் ஒரு வாரம் அல்லது ஒரு மாத காலம் கூட ஆகலாம். அது அவரது வேலையை பொறுத்தது‌.

குழந்தைகள் இருவரும் வளர்ந்ததும் அவர்களை அருகில் இருந்த அரசு பள்ளியில் சேர்த்தவர் குடும்பத்தை காக்கும் பொருட்டு தனது பணியின் காரணமாக வெளியூர் சென்று விடுவார்.

சிறுமிகள் இருவரும்  பள்ளிக்கு சென்று வந்து எப்போதும் போல் தெருவில் பிள்ளைகளோடு விளையாடி கொண்டிருக்க, ஒரு நாள் மாலை நேரம் சுலோச்சனா வேலை முடித்து வந்த போது, “அப்பா எங்கம்மா?. அவர் வேலைக்கு போய் எவ்வளவு நாள் ஆகுது?. இன்னைக்காவது எங்கள பார்க்க வருவரா? என்று ஏக்கத்துடன் கேட்டாள் தேவி.

குழந்தையின் ஏக்கத்தை பார்த்து தவித்து போன சுலோச்சனா அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு

 

“உங்க அப்பா வேலை அப்படி பாப்பா. லாரி ஓட்ட போனா எப்போ எங்க எந்த ஊருல இருப்பாருனு தெரியாது டா. இந்த வாரம் எப்படியும் உங்களை பார்க்க வந்துடுவாரு, உங்க அப்பா சரியா”? என்றவர் பின் அவர்களை கொஞ்சியபடியே இப்போ நான் உங்களுக்கு சாப்பாடு தரேன்.

 

நீயும்,பாப்பாவும் சாப்புட்டு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வாங்க. அப்புறம் வந்து தூங்குவீங்களாம் என்றவரிடம்,”சரிம்மா நீ சாப்பாடு குடு. நாங்க சாப்பிட்டு இங்கேயே விளையாடுறோம்” என்றவள் தன்னை விட ஐந்து வயது சிறியவளான தன் தங்கையை அழைத்து வந்து அவளுக்கும் சாப்பாடு ஊட்டி விட்டு அவளும் சாப்பிட்டு அவளை இன்னொரு அன்னையாய் கவனித்து கொண்டாள்.

 

மறுநாள் வழக்கம்போல் எழுந்த சுலோச்சனா தன் பிள்ளைகளையும் எழுப்பி அவர்களையும் பள்ளிக்கு கிளப்பி விட்டு தானும் வேலைக்கு செல்ல தயாரானவர் தேவியை அழைத்து,

 

“பாப்பா இங்க பாரு. இந்த டிபன் பாக்ஸ்ல உனக்கும் குட்டிமாக்கும் சாப்பாடு வச்சிருக்கேன். மதியம் ஸ்கூல்ல சாப்பிட வேண்டாம். ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போங்க. சரியா”? என்றவரிடம்.

 

“மா ஸ்கூல்ல சாப்பிடலைன்னா புக்கு தர மாட்டேன்னு அந்த ஹெட்ச்எம் சார் திட்டினார்மா. நாங்க ஸ்கூல்ல சாப்பிட்டுகிறோம். நீ சாப்பாடு எடுத்து வை. சாயந்திரம் வந்து சாப்பிடலாம்” என்றாள் மூத்தவள்.

 

இளையவளோ இப்பொழுதுதான் பால்வாடி சென்று கொண்டிருக்கிறாள். அவளுக்கு இவர்கள் பேசுவது புரியாவிடினும் தன் அக்கா என்ன சொல்கிறாளோ அதற்கு தலையை மட்டும் ஆட்டினாள் அவள்.

 

அவர்களையே பார்த்து இருந்தவர் தன் மழலைகளின் பேச்சில் கண் கலங்கியவாறு “வேண்டாம் டா. நீங்க ரெண்டு பேரும் மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போங்க‌. அம்மா மில்லுக்கு போற வழியில அந்த ஹெட்ச்எம் சார பார்த்து, பாப்பா ரெண்டு பேரும் வீட்டிலேயே மதிய சாப்பாடு சாப்பிடட்டும்னு சொல்லிட்டு போறேன். சரியா?” என்றவர் சாப்பாட்டு கூடையை எடுத்து வெளியே வைத்துவிட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு “அம்மாடி பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ. அம்மா வேலைக்கு போயிட்டு சீக்கிரம் வந்திடுறேன்” என்றவர் வேலைக்கு சென்று விட்டார்.

அப்படியே அந்த வார நாட்களும் சென்றது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் சுலோச்சனா வேலைக்கு சென்றுவிட பிள்ளைகள் இருவரும் அக்கம்பக்கத்தில் இருக்கும் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தனர்.

 

அப்போது மதியம் போல் அவர்கள் ஊருக்குள் வரும் பேருந்திலிருந்து அவர்கள் தந்தை இறங்குவதை கண்ட இருவரும் “அப்பா” என்று கூறிக்கொண்டே ஓடிச்சென்று தன் தந்தையை அணைத்துக் கொள்ள அவர்களை கண்டதும் நெகிழ்ந்தவர் முத்த மழை பொழிந்து அவர்களை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு தான் வாங்கி வந்த தின்பண்டங்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடை போட்டார்.

 

“ஏண்டா பாப்பா அம்மா இன்னைக்கும் வேலைக்கு போயிட்டாளா?”.

 

“ஆமாம் ப்பா. அம்மாவை வேலைக்கு போகாத சொன்ன கேட்கல. லீவு தர மாட்டாங்கனு சொல்லி போயிடுச்சு ப்பா” என்றாள் இளையவள்.

 

“சரி விடுடா. அவ வரட்டும் நான் பேசிக்கிறேன். சாப்பிட்டீங்களா ரெண்டுபேரும்?”என்றவரிடம் மறுப்பாகத் தலையை அசைத்தது இரு வாண்டும்.

 

“ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? அம்மா என்ன செஞ்சு வச்சுட்டு போயிருக்கா?”.

 

“புளி சாதம் செஞ்சு வைச்சுட்டு போயிருக்குப்பா அம்மா”.

 

“சரிடா. அந்த சாப்பாடு அப்படியே இருக்கட்டும். நான் சிக்கன் வாங்கிட்டு வந்திருக்கேன். அதை செஞ்சு சாப்பிடலாம்,”என்றவர் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்று சமைக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் சமையலை முடித்தவர் தன் மனைவிக்கு எடுத்து வைத்துவிட்டு, தன் மழலைச் செல்வங்களை அழைத்து உணவை ஊட்டியவர் தானும் உண்டு விட்டு பாத்திரங்களை கழுவி வைத்தவிட்டு தன் பிள்ளைகளோடு சிறிது நேரம் விளையாடிவிட்டு அப்படியே உறங்கியும் போனார்கள் மூவரும்.

 

மாலையில் சுலோச்சனா வர கணவரை எதிர்பாராமல் பார்த்த மகிழ்ச்சியில் திணறியவர் அவர் செய்து வைத்த சமையலை ஆசையுடன் சாப்பிட அன்றைய பொழுது நாகராஜின் வரவால் அந்த குடும்பம் அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியது‌.

 

மறுநாள் வழக்கம்போல் அவரவர் பணியை பார்க்க ஆரம்பித்தனர். முன்புபோல் நாகராஜ் வாரம் ஒரு முறை வருவதை தவிர்த்து வேலைப்பளுவின் காரணமாக மாதம் ஒருமுறை அல்லது இரு மாதம் ஒருமுறை வரும்படியாக மாறிப்போனது.

 

அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்கள் தான் குழந்தைகளோடு செலவழித்தார்.

 

இடையில் இளையவளுக்கு தந்தையை பார்க்காமல் இருந்த ஏக்கத்தில் ஜுரம் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட பார்க்க வராத நாகராஜின் மீது தேவிக்கு கட்டுக்கடங்காமல் கோபம் தான் வர அந்த கோபமானது நாளடைவில் வெறுப்பாக மாறி விட்டது.

 

இப்படியே நாட்களும் மாதங்களாக, மாதங்களும் வருடங்களாக, உருண்டோடி மூத்தவள் ஒன்பதாம் வகுப்பும், இளையவள் நான்காம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடைசி தேர்வு நடைபெற்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர். இவள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவள் தன் தாயிடம் “மா என்னன்னு தெரியல. வயிறு ரொம்ப வலிக்குது. காலையிலிருந்து முடியலை ம்மா”என்றவள் சுருண்டு படுத்து கொண்டாள்.

 

“சரிடா. நீ படுத்துக்கோ. நான் எதாவது கசாயம் வச்சி தரேன். குடி. சரியாகலைனா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன்” என்று ஆறுதல் சொல்ல.

 

“சரிமா” என்றவள் படுத்தும் உறங்கியும் போனாள். சிறிது நேரத்திற்குள் எழுந்து கழிவறை சென்றவள் அங்கிருந்தே “அம்மா” என்று அலற அவளின் அலறலைக் கேட்ட அவள் தாயோ என்னவோ ஏதோ என்று பயந்து ஓடிச்சென்று பார்க்க “அம்மா இங்க பாரு. என் டிரஸ் பூரா ரெட் கலர்ல இருக்கு. பயமா இருக்கும்மா. நான் செத்து போயிடுவேனா?” என்று கேட்டு அழுதவளை தன்னுடன் சேர்த்து அணைத்தவாறே “ஏய் பாப்பா… என்ன இப்படி பேசுற?. அது எல்லாம் ஒன்னும் இல்லடா. நீ பெரிய புள்ளையாகிட்ட. அதுதான் இப்படி இருக்கு. வேற ஒன்னும் இல்ல. பயப்படாத. அம்மா உன் கூடவே தான் இருக்கேன். என்ன?” என்றவர் நீ இங்கேயே இரு. நான் போய்” சாவித்திரி அக்காவை கூட்டிட்டு வரேன்” என்று சென்றுவிட அவளும் அப்படியே அமர்ந்து விட்டாள்.

 

சுலோச்சனா பலவித யோசனைகளில் சென்றவர் சாவித்திரியின் வீட்டை நெருங்கியதும்,

 

“சாவித்திரி சாவித்திரி வெளிய வா கொஞ்சம்”என்று அழைத்தார்.

 

“என்ன சுலோ அக்கா, என்ன ஆச்சு? என்ன விஷயம் எதுக்கு என்ன கூப்பிடுற?”.

 

“அது வந்து நம்ம பாப்பா வயசுக்கு வந்துட்டா டி, அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன்.”

 

“என்னக்கா சொல்ற நம்ம தேவியா”?.

 

“அட ஆமாடி”.

 

“நல்ல செய்தி தான் சொல்லி இருக்கே இப்போ எங்க அவ? அண்ணாக்கு சொல்லிட்டியா?”என்றவர் மகிழ்ச்சியில் விசாரிக்க.

 

“இன்னும் இல்லடி. உங்க அண்ணா எந்த ஊர்ல இருக்குன்னு தெரியல. அவர் முதலாளிக்கு தான் போன் பண்ணி அவர்கிட்ட சொல்ல சொல்லணும். அவள நம்ம வீட்டுல தான் விட்டுட்டு வந்து இருக்கேன். நீ போய்க் கொஞ்சம் பாத்துக்கடி. நான் போயி அவங்க அப்பாக்கு சொல்லிட்டு அவ அத்தையை கூட்டிட்டு வரேன்” என்று சொல்ல.

 

“சரிக்கா.” நீ போயி முதல்ல அண்ணாவோட முதலாளிக்கு போன் பண்ணி சொல்லு. அப்போ தான் அது எங்க இருந்தாலும் கிளம்பி வரும். அப்புறமா அவங்க அத்தையை கூட்டிட்டு வா, என்று அவள்  சொல்ல.

 

“சரிடி. நான் அப்படியே பண்றேன். நீ போய் பாப்பா கூட கொஞ்ச நேரம் இரு. அவ ரொம்ப பயந்து போய் இருக்கா” என்றவர் சென்றுவிட, இவளும் அவளை காணச் சென்றாள். அங்கே சென்று பார்த்தால் அவளோ ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள்.

 

“அடியே! தேவி ஏன் இப்படி இருக்க? எழுந்திரி.பயக்காத. ஒன்னுமில்ல. அது எல்லாம் இந்த வயசுல வர்றது தான் கவலை படக்கூடாது” என்றவள் தேற்ற அதில் தேவி சிறிது ஆசுவாசமடைந்தாள்.

 

அவளின் தாயாரோ முதலில் தன் கணவன் வேலை செய்யும் முதலாளிக்கு போன் செய்து தன் மகள் பூப்படைந்த செய்தியைச் சொல்லிவிட்டு அவளின் அத்தையை அழைத்து வந்தார்.

அதன்பின்பு உள்ள வேலைகள் துரிதமாக நடைபெற்றது. இச் செய்தியானது தந்தையுமானவரை சென்றடைந்ததும் மனதளவில் சந்தோஷம் அடைந்தவர், மறுநாள் வேகமாக வீட்டிற்கு விரைந்தார்‌.

வீட்டிற்கு வந்ததும் மகளை பார்த்து கண்கலங்கியவர் ‘நான் என் பசங்கள இன்னும் நல்லா பாத்துக்கணும். அவங்கள நல்லபடியா கரை சேர்க்கணும். அதுக்கு நான் இன்னும் நிறைய பணம் சம்பாதிக்கணும்’ என்று மனதில் சூளுரைத்து கொண்டார்.

அந்த11 நாட்களும் தன் மகளின் அருகில் இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டவரை கண்ட போதும் அவளின் கோபமும், வெறுப்பும் குறையவில்லை. அவரும் நாட்கள் செல்ல செல்ல தன் மகளின் மனம் மாறிவிடும் என்று நம்பினார்.

பதினோராம் நாள் முடிவில் புண்ணியதானம் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து அந்த தெருவில் உள்ள அனைவரையும் அழைத்து நன்முறையில் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்தார்.

இப்படியாக அவர்களின் வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்த சமயம் தான் அச்செய்தி பேரிடியாக வந்தது. அது அந்தக் குடும்பத்தின் தாயுமானவரின் உடல்நிலை குறித்த செய்தி தான் அது. அச் செய்தியை கேட்ட குடும்பமானது இருளில் மூழ்கி ஒளி இழந்தது போல் ஆனது.

குடும்பத்துக்காக உழைத்தவர் தனது உடல்நிலையை கவனத்தில் கொள்ளாமல் இருக்க அது அவரது உடல்நிலையை மிகவும் பாதித்தது.

 

இத்தனை நாட்கள் தந்தையின் மீது கோபத்தில் இருந்த தேவி இப்போது தான்,தன் தந்தையின் மனதை புரிந்து கொண்டாள்.

 

அவள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்த சமயத்தில் அவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சில பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை நடைபெற்றது.

பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு மருத்துவர் மகளையும் மனைவியையும் அழைத்து, “இங்க பாரு மா உங்க அப்பாக்கு  இருக்க நோய் கேன்சர். அதுவும் அது அவருக்கு லாஸ்ட் ஸ்டேஜ்ல இருக்கு. இவ்வளவு நாளா எப்படி கவனிக்காம விட்டீங்க?” என்றவர், மேலும் தொடர்ந்தார் ரொம்ப நாளாக அவருக்கு ஒடம்பு சரியில்லாம, இருந்திருக்கு அதை அவர் அப்ப பெரிதுபடுத்தாமல் விட்டுட்டார். இப்போ அது நுரையீரலோட ஒரு பாகத்தை கொஞ்சம் கொஞ்சமா அரிச்சிகிட்டு வருது. அதை சரி பண்ண கூடிய ஸ்டேஜ்ஜையும் தாண்டியிருச்சு. இப்போதைக்கு ஒன்னு மட்டும் பண்ணலாம்,என்று கூறியவர் நிறுத்த..

“சார் என்ன சொல்றீங்க?. அவரு இப்டி சொல்லாம இருப்பாருனு நாங்க நினைக்கலையே” என்று கதறியவர் நாங்க இப்போ என்ன பண்ணனும்னு சொல்லுங்க. என கேட்க அவள் தாயாரின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. தேவி அதிர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றவள் கண்கள் கலங்க மருத்துவரை பார்த்தபடி நின்றாள்.

 

அதைப் பார்த்த மருத்துவரும் “அம்மா இங்க பாருங்க. ரெண்டு பேரும் இப்படி அழுதா மட்டும் உங்க கணவருக்கு சரி ஆகிடுமா என்ன? . எப்பயோ போக போற உசுரு. இப்போதைக்கு போகாமல் தடுப்பதற்கான வழி தான் இது. அந்த கேன்சர் கட்டியை கரைக்க அதற்கான மருந்து வேணா வைக்கலாம். அதையும் இங்க செய்ய முடியாது. மதுரைல இருக்க கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல தான் வைக்க முடியும் வேணும்னா அங்க கூட்டிட்டு போயிட்டு வாங்க” என்று சொல்ல.

“சரிங்க சார் நீங்க சொல்ற மாதிரி நாங்க பண்றோம். அந்த ஆஸ்பத்திரிக்கு போக எழுதிக் கொடுங்க. கூட்டிட்டு போய் மருந்து வைத்துவிட்டு வர்றோம்” என்று தன்னை தேற்றியபடி சுலோச்சனா கேட்க.

சரிமா நான் எழுதிக் கொடுக்கிறேன். அதை எடுத்துட்டு போயிட்டு அங்க அட்மிஷன் போட்டு மருந்து வைத்துவிட்டு வாங்க பார்க்கலாம், என்றார்.

 

அதன் பின்பு அவர் எழுதிக்கொடுத்த சீட்டை எடுத்துக்கொண்டு தாயும், மகள்களும் சேர்ந்து அவரை அழைத்துக்கொண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று மருந்து வைத்து விட்டு அவர்களின் ஊருக்கு திரும்பினர்.

ஊருக்கு திரும்பியதும் தன் தந்தையை வீட்டிலேயே இருக்க சொல்லியவள் தன் தங்கையை அவருக்கு துணையாக இருந்து பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு தன் தாய் வேலை செய்யும் மில்லுக்கு அவளும் வேலைக்கு சென்றாள்.

 

தாய், மகள் இருவரும் காலையில் எழுந்து வீட்டு வேலை அனைத்தையும் முடித்துவிட்டு, சிறியவளை எழுப்பி அவளையும் பள்ளிக்கு தயார்படுத்தி தன் தந்தைக்கும் தேவையானவற்றை செய்து வைத்துவிட்டு தன் தங்கையிடம் ” பாப்பா உனக்கு ஸ்கூல்ல பிரேக் விடுற டைம்ல அப்பாவ வந்து பாத்துக்கோ. சரியா” என்றவள் தன் தாயுடன் வேலைக்கு சென்றாள்.

 

தாய் மகள் இருவரும் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவர்.

 

இப்படியே மாதத்தில் இருமுறை மதுரை சென்று மருந்து வைத்து வந்தனர். இப்படியாக மூன்று மாதங்கள் சென்று ஆறுமுறை மருந்து வைத்து வந்தனர்.

ஆறாவது முறையாக மருந்து வைத்து வந்து ஒரு வாரம் கழித்து தாயும் மகளும் வேலைக்கு சென்றிருந்த நேரம் திடீரென்று மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு தன் இளைய மகளை துணைக்கு அழைத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து வழக்கமாக நாகராஜன் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு சென்றபின் மருத்துவர் அவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு ஐசியூவில் அனுமதித்தார். அவருடன் சென்ற இளையவளுக்கு தன் தந்தையை அப்படி பார்க்கவும் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. உடனே அங்கிருந்த வரவேற்பறையில் இருந்த தொலைபேசியில் இருந்து தன் தாய் வேலை செய்யும் இடத்திற்கு போன் செய்து விபரத்தைக் கூறி அவர்கள் இருவரையும் சீக்கிரம் மருத்துவமனைக்கு வருமாறு பணித்து விட்டு போனை வைத்து அந்த அறையின் வாயிலின் முன்பு போய் அமர்ந்து கொண்டாள்.

சிறுது நேரத்தில் செய்தி கேட்டு தாயும் மகளும் அடித்துப் பிடித்துக் கொண்டு வர அதுவரை அங்கு அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் தன் தமக்கை வருவதை பார்த்து ஓடிச்சென்று கட்டியணைத்து கதறி அழுதாள்.

“அக்கா அக்கா நம்ம அப்பாக்கு மூச்சு விட ரொம்ப கஷ்டமாகி இங்க கூட்டிட்டு வந்தேன். இந்த டாக்டர் செக் பண்ணிப் பார்த்திட்டு அவரை இந்த ரூமுக்குள்ள கொண்டுபோய் வச்சிருக்காங்க” என்று ஐசியூவின் அறை வாயிலை நோக்கி கை காட்டியவள்.

“எனக்கு பயமா இருக்கு நம்ம அப்பாக்கு ஒண்ணும் ஆகாது தானே?”என்று அவள் இன்னும் விம்மி,விம்மி அழ அவளை அணைத்து ஆறுதல்படுத்தியவளின் விழிகளிலும் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அவர்களின் அன்னையோ தன் கணவனை அந்த நிலையில் பார்த்ததும் கல்லாய் சமைந்து விட்டாள்.

சற்று நேரத்திற்கு எல்லாம் அந்த அறையில் இருந்து வெளியேறிய மருத்துவரை ஒருவித பதற்றத்துடன் எதிர்கொண்டார்கள் அம்மூவரும்.

வந்தவரும் அவர்களைப் பார்த்து “ரொம்ப கஷ்டம்மா.இனி அவரை காப்பாற்ற முடியாது. எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்க இருக்கட்டும். நாளைக்கு டிசார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க” என்றார் அவர்.

மருத்துவர் கூறியதைக் கேட்ட மூவரும் அழுது கொண்டே “சார் நாங்க இப்ப உள்ள போய் பார்க்கலாமா”என்று வினவினார்கள்.

“தாராளமா போய் பாருங்க. அவர்கிட்ட எதையும் காட்டிக்காதீங்க. போங்க. போய் பாருங்க”என்றவர் தன் அறைக்கு சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் மூவரும் அந்த அறையினுள் சென்று அவரைப் பார்த்தபோது மிகவும் துடித்துப் போனார்கள்

இதுவரை தன் தந்தையை கம்பீரமாகவும் ஒரு ஆளுமை திறன் உடையவராகவும் பார்த்தவளால் இன்று தலையில் முடி இல்லாமலும், உடல் பாதி இழைத்தும்,வாடிய கொடியன இருந்தவரை காணமுடியாமல் மேலும் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவளின் அழுகை சத்தம் கேட்டு மெதுவாக விழி திறந்து பார்த்தவர் தன் பெரிய மகளை அருகில் அழைத்து “அப்பாக்கு ஒன்னும் இல்லடா. ரத்தம் இல்லை என்றுதான் சொல்லி இருக்காரு. டாக்டர் ரத்தம் எத்துன சரியாகிடும்‌. நீ அழுகாதே” என்றவரால் தொடர்ந்து பேசமுடியாமல் மூச்சிரைக்க ஆரம்பித்தது.

“அப்பா அப்பா நீ பேசாத‌. உனக்கு ஒன்னும் இல்ல. ரத்தம் தானே, நானே தரேன். அதையே ஏத்திக்கலாம். நீ அமைதியா கொஞ்ச நேரம் படு ப்பா” என்றவள் , அவரை படுக்க வைத்துவிட்டு தன் தாயையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்து அமர்ந்தாள்.

சற்று நேரத்தில் தன் தந்தையின் நண்பரான முதலாளியின் மகன் வரவும் அவரை அழைத்துக்கொண்டு தன் தந்தை இருந்த அறைக்குள் சென்றவள் தன் தந்தையை எழுப்பி “அப்பா இங்க பாரு சாதிக்  மாமா வந்திருக்காரு.நீ மாமாகிட்ட பேசிட்டு இரு. நான் போய் மாமாக்கு ஏதாச்சும் குடிக்க வாங்கிட்டு வரேன” என்று அவள் அறையை விட்டு வெளியேறியதும். தன் நண்பனை பார்த்து திரும்பியவர் , “உனக்கு எப்படிடா தெரியும்?. நான் ஆஸ்பிட்டல்ல இருக்கிறது பாப்பா சொன்னாளா?” என்றவரிடம். 

 

“இல்லடா. பாப்பா சொல்லல. நம்ம பானுவோட அக்கா இங்க தானே வேலை பார்க்குது. அவங்க சொல்லி தான் டா தெரியும். ஏன்டா?, எங்க கிட்ட எல்லாம் சொல்ல மாட்டியா?. உன் பிள்ளைங்களும் உன்னை போலவே இருக்குங்க. நான் என்ன அவ்வளவு வேண்டாத ஆளா போயிட்டேன். ஏன்டா இப்படி பண்ற”? என்று அவர் ஆதங்கப்பட்டார்.

 

“இதுக்குதாண்டா சொல்லல. சொன்னா நீ கஷ்டபடுவ அதை பார்க்கற சக்தி எனக்கு இல்லை” என்று கண்கலங்கினார்.

“விதியை பாத்தியாடா?. நான் இங்க வந்து இப்படி படுத்துக் கிடக்கிறேன். என் புள்ள வேலைக்கு போயி என்னைய பார்த்துக்குது. படிக்க வேண்டிய வயசுல அது வேலைக்கு போயி என்ன பார்த்ததுக்குது. அவளுக்காகவது நான் சீக்கிரம் குணமாகி வரணும். வந்து அவளை நல்லபடியா படிக்க வைக்கணும்” என்றவரின் கண்களில் இருந்து ஒரு துளி நீர் வெளியேறியது. 

 

“டேய் அது எல்லாம் சீக்கிரம் நீ சரியாகி வந்து உன் புள்ளைங்க இரண்டையும் நல்லபடியா படிக்க வைப்ப. கவலைப்படாதே‌. நான் கிளம்புறேன். எதையும் நினைச்சு வருத்தப் படாதே” என்றவராலும் கண்ணீரை அடக்க முடியாமல் மறு பக்கம் திரும்பி தன் கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

அவர் சென்று சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவளோ “ப்பா எங்க மாமா அதுக்குள்ளே போய்ட்டாரா?”என்று வினவியவளிடம்.

 

“ஆமாண்டா ஏதோ வேலை இருக்குது சொல்லி கிளம்பிட்டான்” என்றவர்.

 

“சரி பாப்பா. மணி ஆகுது. நீயும், சின்னவளும் வீட்டுக்கு போங்க. அம்மா மட்டும் இங்க இருக்கட்டும்” என்றவரிடம்.

“அதல்லாம் முடியாது. நான் இங்கதான் இருப்பேன்” என்று பிடிவாதம் பிடித்தவளிடம்.

“வேண்டாம் பாப்பா. இங்கே இருக்கவேண்டாம். இங்க நைட்ல இருக்க முடியாது. கொசு அதிகமா இருக்கும். அது கடிச்சா உனக்கு ஒத்துக்காது. நீ பாப்பாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு போ. அப்பா காலையில வந்துருவேன். நாளைக்கு எனக்கு பிறந்தநாள் தான.அதனால நீ வீட்டுக்கு போயிரு. நான் காலையில சீக்கிரம் வந்துடுறேன்” என்று கெஞ்சி, கொஞ்சி ஒருவழியாக அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவர்.

மனமே இல்லாமல் தான் அங்கு இருந்து தன் தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றால் தேவி.

பிள்ளைகள் இருவரும் சென்று சிறிது நேரம் கழித்து தன் மனைவியை அழைத்தவர் “சுலோம்மா, ஒருவேளை நான் இருந்தாலும் இல்லனாலும் நம்ம பிள்ளைங்கள கஷ்டப்பட விட்றாத. எந்த காரணத்தை கொண்டும் உன் பிறந்த வீட்டிலயோ இல்ல என் வீட்டு ஆளுங்க கிட்டயோ எதுக்கும் உதவின்னு கேட்டுப் போக கூடாது என்ன? . உன்னால என்ன முடியுமோ அதை நம்ம பிள்ளைகளுக்கு செய். அது போதும்”என்றார்.

“யோவ் இப்படி எல்லாம் பேசாத. உனக்கு ஒன்னும் இல்ல. உன் பிள்ளைங்க கிட்ட சொன்ன மாதிரி நாளைக்கு காலைல நீயே எழுந்திரிச்சு வீட்டுக்குப் போகலாம் வா அப்படின்னு கூப்பிடுவே” என்றவளை பார்த்து மென்மையாக சிரித்துக் கொண்டார் அவர்.

” சரி. நீ கொஞ்ச நேரம் தூங்கு. நான் இங்க பக்கத்திலேயே தான் இருக்கேன். எதுனாலும் கூப்பிடு” என்றவர் அவரை தூங்க வைத்துவிட்டு இவரும் சற்று கண்ணயர்ந்து விட்டார்.

இரவு 2 .30 மணி போல் தன் மனைவியை எழுப்பி குடிக்க தண்ணீர் கேட்க

 

“இருங்க. இதுல பச்ச தண்ணி தான் இருக்கு. நான் போய் உங்களுக்கு சுடுதண்ணி கொண்டு வரேன்” என்று கூறியவர்,போய் தண்ணீர் கொண்டு வரும் முன்னே அவரின் உயிரானது அவர் உடலை விட்டு பிரிந்து சென்று இருந்தது.

சுடு தண்ணீர் எடுத்து வந்தவரோ தன் கணவனின் கண்கள் மேலே சொருகி நாக்கு வெளியே நீட்டியவாறு இருந்த நிலையை பார்த்து பதறி அடித்து மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து விட்டார் என்று கூற மருத்துவர் கூறிய செய்தியைக் கேட்ட அவளும் தன் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

“ஐயோ…இப்படி எங்கள விட்டுட்டு போயிட்டியேயா… அந்தப் புள்ளைங்க எவ்வளவோ சொல்லுச்சே. நாங்க வீட்டுக்கு போகல. உன் கூடவே இருக்கறோம்னு கேட்காம அதுங்களை அனுப்பிவிட்டு நான் காலைல வந்துடுறேன்னு சொன்னியே… அதுங்க உனக்காக காத்திருக்குமேயா… நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவேன்… சின்னவளுக்கு தொடர்ந்து 10 நாள் உன்னை பார்க்கலைன்னா ஜுரம் வந்துடுமே. பெரியவள சொல்லவே வேண்டாம். இப்பதான் நீ அவ கூட இருக்கனு சந்தோஷப்பட்டா. இப்படி எல்லாத்தையும் ஒரேடியா அள்ளிக்கிட்டு போயிட்டியே…நான் அதுங்களை எப்படி தேத்துவேனு தெரியலையே… ஆண்டவா எங்களை இப்படி நடுத்தெருவில் விட்டு போயிட்டாரே… இந்த மனுஷன் நான் என்ன பண்ணுவேன்” என்று கூறி தலையில் அடித்துக்கொண்டு அழுதவளை…

 

அங்கு பணி புரியும் செவிலியர்கள் தான் சமாதானம் செய்து தேற்றி அடுத்து நடைபெற வேண்டிய வேலைகளை துரிதமாக செயல்படுத்தி அவரின் உடலை ஆம்புலன்சில் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதேசமயம் வீட்டிற்கு சென்றவர்களுக்கு இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்து விடியும் நேரம் தான் கண்ணயர்ந்தர்கள் இருவரும்.

இருந்தும் சிறிது நேரத்திற்குள் விழிப்பு தட்டி எழுந்தவள் மணியை பார்க்க அது நான்கு என்று காட்டியது.

பெரியவளோ எழுந்து “ஏய் சோபி எழுந்திரி டி . இன்னைக்கு நம்ம அப்பாக்கு பிறந்தநாள் இல்ல. ஏதாவது ஸ்வீட் செய்யலாம். நீ கடைக்கு போய் ரவை, ஜவ்வரிசி, சேமியா வாங்கிட்டு வா. அப்பா ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வரதுக்குள்ள கேசரியும், பாயாசமும் செஞ்சு வைச்சுட்டு ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு அவர் பெயரில் அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்” என்றவள்…

 

தன் தங்கையை எழுப்பி கடைக்கு அனுப்பி விட்டு, இவளும் எழுந்து வேலைகளைப் பார்க்கச் சென்றாள். கடைக்கு சென்றவளும் சிறிது நேரத்தில் திரும்பி விட இருவரும் சேர்ந்தே இனிப்பு வகைகளை செய்து விட்டு கோவிலுக்கு சென்றனர்.

கோவிலுக்குச் சென்று தன் தந்தையின் பெயரில் அர்ச்சனை செய்தவர்கள் கண்மூடி இறைவனை வேண்டிக் கொண்டனர்.

பின்பு அங்கிருந்து புறப்பட்டு தங்கள் இல்லத்திற்கு வந்தவர்களோ வீட்டு வாசலில் ஆம்புலன்சும் உறவினர்கள் சிலரும் நிற்பதைப் பார்த்து “ஏய் சோபி அப்பா வந்துட்டாரு போல. அதான் நம்ம வீட்டு வாசல்ல எல்லாரும் நிக்கிறாங்க. சீக்கிரம் வா. போய் இந்த தீருநிறை அவருக்கு பூசிவிட்டு ஸ்வீட் எடுத்துக் கொடுக்கலாம்” என்றவள் அவளை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

அவள் வருவதைப் பார்த்த அவள் பாட்டி வழியிலேயே அவளை மறித்து கட்டி அணைத்து அழ அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

“ஏய் பாட்டி இப்போ எதுக்கு நீ என்ன புடிச்சுகிட்டு இப்படி அழுகுற?.”எங்க அப்பா நல்லா தான இருக்காரு. நல்லபடியா தானே வீட்டுக்கு திரும்ப வந்து இருக்காரு,என்றவளை பார்த்து எதுவும் கூறாமல் தன் முந்தானையை எடுத்து வாயை பொத்தி அழுதுகொண்டே உள்ளே போய் பார்க்குமாறு அவளிடம் சைகை செய்தார்.

சிறியவளோ அந்தப் பாட்டியின் அழுகையை பார்த்து பயம் தொற்றிக் கொண்டு கண்ணில் ஒரு மிரட்சியுடன் இருந்தவளை உலுக்கி “ஏய் இங்க பாருடி… அந்த கெழவி எதே லூசு மாதிரி அழுதுகிட்டு போது. நீ ஏன் இப்படி நிக்கிற?. வா, நம்ம வீட்டுக்கு போகலாம். நம்ம அப்பாக்கு ஒன்னும் இருக்காது”என்றவள் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

வீட்டிற்குள் நுழைந்த அவளின் விழிகளோ தன் தந்தையின் உயிரற்ற உடலை பார்த்ததும் வேரற்ற மரம் போல் துவண்டு மண்டியிட்டு அமர்ந்து விட்டவளின் கண்களில் இருந்து ஒரு துளி நீர் கூட கசியவில்லை. அவள் தங்கையோ ஓடிச்சென்று தன் தந்தையின் உடல்மீது விழுந்து கதறி துடித்தவள் சிறிது நேரத்திற்குள் கைகால்கள் எல்லாம் ஒருமாதிரி இழுத்துக்கொண்டு மயக்க நிலைக்குச் சென்றவளை அருகில் இருந்தவர்கள் தூக்கி அமர வைத்து அவளை ஆசுவாசம் அடையச் செய்தனர். ஆனால் ,தேவியோ அனைவரும் எவ்வளவு சொல்லியும் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாமல் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.

அதன்பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து அவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வரையிலும் கூட ஒரு துளி நீர் அவள் கண்களிலிருந்து கசியவில்லை. அங்கு சென்றும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து அவரின் உடலை எரியூட்டும் கருவிக்கு அனுப்பும் முன் அங்கு இருந்தவர் “கடைசியாக ஒரு முறை முகத்தை பாக்குறவங்க பாத்துக்கோங்க” என்று சொல்ல அப்பொழுதும் அவள் கண்கள் தன் தந்தையை வெறித்து தான் பார்த்துக் கொண்டு இருந்ததே தவிர ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை.

எல்லாம் முடிந்து வந்தவர்கள் அனைவரும் அவரவர் இல்லம் திரும்பி ஆகிற்று. இப்பொழுது அந்த வீட்டில் அவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். நாட்களும் வேகமாக செல்ல அவர்களின் தாயாரும் நிதர்சனத்தை உணர்ந்து இருவரையும் தேற்றி சிறியவளை பள்ளிக்கும், பெரியவளை தன்னுடன் வேலைக்கும் பழையபடி அழைத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார்.

நாட்களும் வருடங்களாக மாற ஊராரும் உறவினர்களும் பேசிய பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் காதுகொடுத்துக் கேளாமல் ஒற்றை ஆளாய் நின்று தன் மகள்களை வளர்த்து ஆளாக்கி இன்று இரு மகள்களுக்கும் திருமணம் முடித்து அவரவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வழி செய்த சுலோச்சனா தன் கணவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக இன்றளவும் யாரிடமும் உதவி என்று கேட்காமல் தன்னால் முடிந்த அளவு அவர்களுக்கு நன்முறையில் திருமணமும் முடித்து தன்னைத்தானே பார்த்துக் கொண்டும், தன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து கொண்டும் இருக்கிறார்..

தன் மகள்கள் இருவரும் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் அவர்களுடன் போக மறுத்த அவர் தன் கணவர் வாழ்ந்த அதே வீட்டில் இன்றளவும் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தேவியோ தன் தந்தையே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என இறைவனிடம் வேண்ட அரூபமாய் அவர்களை காத்தபடி இருந்த அவர்களின் தந்தையோ அவர்கள் அனைவரின் ஆசையையும் நிறைவேற்றினார்.

_________________சுபம்___________________

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. kumuthini.07

      சொல்ல வார்த்தை இல்லை. தேவியின் அப்பா எப்போதும் அவர்கள் கூடவே துணையாக இருப்பார்.