
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 37
மருத்துவமனையிலிருந்து மதுவும், அன்புவும் வீடு திரும்பி ஒரு மாதம் கடந்திருக்கும். அவள் அறையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தாள் அப்போது,
“அத்தை.. அத்தை” என மதுதாராவை தேடி ஓடி வந்தான் அஸ்வந்தின் மகன் தரூண்.
“தரூ குட்டி.. பார்த்து மெதுவா” என ஓடிவந்து கீழே விழுக போன தன் அண்ணன் மகனைப் பிடித்து நிறுத்தினாள்.
“அத்தை சாக்கி..” என மெதுவாகக் கூறினான் கண்களை உருட்டித் திருட்டுமுழியுடன். அவன் முழியைப் பார்த்துச் சட்டெனச் சிரித்துவிட்டாள் மது.
“என்னடா லுக்கு இது?” என அவன் கன்னத்தில் முத்தமிட்டபடி கேட்க,
“அகிம்மா அடிக்கும் சாக்கி சாப்டா.. பாரு தரு பல்லு சொத்தை” எனக்கூறி தன் பல்லைக்காட்ட,
“அம்மா அடிக்கும்னும் சொல்லு.. அதுக்கு காரணத்தையும் நீயே சொல்லு.. அப்புறம் ஏண்டா சாப்பிடுற? உனக்கு தானடா பல் வலிக்கும்”
“பரவால்ல. இந்தா உனக்கு ஒன்னு”
“சாக்கி தின்னா உன்னை உங்கம்மா அடிக்கும்.. என்னை என் அம்மா அடிக்கும்”
“அகிம்மாக்கு தெரியாம தரு திங்கு.. அப்பத்தாக்கு தெரியாம அத்தை தின்னு” எனக்கூறி, அவனே சிரிக்க, அவனை அணைத்துக்கொண்டு தானும் சிரித்தவள், அவனிடமிருந்து மிட்டாய்யை வாங்கி பிரித்துக் கொண்டே,
“அது சரி அப்போ சாக்கி யாரு வாங்கி குடுத்தா?”
“அது.. மாமா”
“ஆது வந்துருக்கானா? எங்க சத்தத்தையே காணோம். வா போய் பார்ப்போம்”
“ஆது மாமா இல்ல சித்து மாமா” எனக்கூற, மனம் கலங்கியது. அவன் திரும்பி வந்துவிட்டானெனக் கலங்கியதா? இல்ல ஏன் வந்தானெனக் கலங்கியதா? அல்லது இத்தனை நாள் கழித்து வந்திருக்கானேயென நினைத்துக் கலங்கியதா அவளுக்கே வெளிச்சம்.
அவனை அவள் தான் தள்ளி நிறுத்தியது. அவளைப் பார்க்கத் தடை விதித்ததும் கூட அவள் தான். ஏன் இந்த வீட்டுக்கே வராத எனவும் கூடக் கூறினாள் ஆனால் அதை அனைத்தையும் அவளும் இலகுவாகச் செய்யவில்லை. அந்த முடிவை அவள் எடுக்க எத்தனை கஷ்டப்பட்டாளென அவளுக்குத் தான் தெரியும்.
தன்னுடைய உயிரானவன், அவனே அவளைத் தள்ளி நிறுத்தியிருந்த போதும் கூட அவளாக வழிய வழிய சென்று அவன் கோபத்தை தணித்து அவனுடன் தன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவள். அதில் அவளுக்கு ஆயிரத்தெட்டு துன்பங்கள் வந்தபோதிலும் அவனுக்காக எதையும் தாங்கியவள், இன்று இப்படியொரு முடிவை எடுக்கிறாளென்றால் என்னவாக இருக்க முடியும்.
கண்டிப்பாக அவளுக்காக அந்த முடிவை எடுத்திருக்க மாட்டாள். ஏன் அவள் குடும்பத்திற்காகவும் கூட எடுத்திருக்க மாட்டாள். அவள் அந்த முடிவைக்கூட அவனுக்காக மட்டுமே எடுத்திருப்பாள். அவன் நலனுக்காகவே எடுத்திருப்பாள்.
அன்று மருத்துவமனையில் அவனை இனி தன்னை பார்க்க வேண்டாம் எனக்கூறி, அவனை வெளியே அனுப்பியவள் அவனை ஒதுக்கித் தூரவே நிறுத்தினாள். ஆதவன், அஸ்வந்த் ஏன் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவளிடம் கேட்டுப் பார்த்தாகிவிட்டது காரணம் மட்டும் அவள் சொல்லவேயில்லை. அவள் உடல்நிலையை கருத்தில் வைத்து அவள் போக்குக்கே விட்டுவிட்டனர் அனைவரும்.
மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும், சித்தார்த் இரவு, பகல் பார்க்காமல் அங்கயே தான் கழித்தான். அங்கயே குளித்து, சாப்பிட்டு எங்கும் போகவில்லை, அவள் அறையின் வாயிலே கதியென இருந்தான். அன்பு கண்விழிக்கவும் அவரிடமும் தன் தவறுக்காக மன்னிப்பும் கேட்ட சென்றான்.
“மாமா..” என அழைக்க, அன்பு அவனை முன்பு எப்படி பார்த்தாரோ அதே போல் தான் பார்த்தார். அவருக்கு அஸ்வந்த் வேறு சித்து வேறல்லவே இருவரும் தன் பிள்ளைகள் தானே! அஸ்வந்த் கோபத்தில் பேசிவிட்டால் மன்னிக்கமாட்டாரா அதே போல் தான். அவ்வளவு கோபம் இருந்தாலும் அவனும் வளர்த்த பாசத்தில் அவரின் முன் ஒரு வார்த்தையும் தவறாகப் பேசவில்லையே!
“வா சித்து.. மது நல்லா இருக்காளா?”
“ம்ம். உங்களுக்கு உடம்புக்கு நல்லா இருக்கா மாமா”
“பரவால்லப்பா. அம்மா, அப்பா என்ன பண்றாங்க?”
“சாரி மாமா. என்னை மன்னிச்சிடுங்க மாமா. தாராவ எனக்குக் குடுக்கலனு கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா அவங்க தான் எல்லாத்துக்கும் காரணம்னு எனக்குத் தெரியாது மாமா. என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு உங்க முகத்தை எல்லாம் பார்க்கவே முடியல. என்னை நினைச்சா எனக்கு அசிங்கமா இருக்கு மாமா என்னை மன்னிச்சிடுங்க மாமா” என அவர் கையைப் பிடித்துக் கண்கலங்கினான்.
“விடுப்பா! மதும்மா மேல உள்ள பாசத்துல தான பண்ணின. விடு. எனக்கும் உங்கள பிரிக்க எண்ணமெல்லாம் இல்லப்பா ஆனா உன்னைப் பெத்தவங்க உன்னைக் கேக்குறதும் நியாயம் தான. அதான் இப்படி முடிவெடுத்தேன். ஆனா இப்படி ஆகும்னு நினைக்கல ஆனா இதுவும் நல்லதுக்கு தான். ஆசை பட்டவங்களை பிரிச்ச பாவம் எனக்கு வரல”
“ஆனா உங்களுக்கு இப்படி ஆக நானும், என் குடும்பமும் தான காரணம். இப்போ மதுக்கும். என்னால தாங்க முடியல.. மனச அழுத்துது தூங்க முடியல. என்ன பண்றதுன்னும் தெரியல ஆனா இனியும் உங்களுக்கு என்னாலயும், என் குடும்பத்தாலயும் எந்த ஆபத்தும், அவமரியாதையும் வராம இருக்கனும். அதுக்கு என்ன பண்றதுன்னு தான் என் எண்ணம். இனிமேல் இப்படி ஆக விடமாட்டேன் மாமா. சத்தியம்” எனக்கூற,
“விடுப்பா என் தங்கச்சி குணம் எனக்குத் தெரியாதா? அவ அப்படி தான். என் இதயம் பலவீனமா இருந்திருக்கு அதுக்கு யாரை நான் காரணம் சொல்ல முடியும்.. நடந்தது நடந்து போச்சு இனி நடக்க போறது நல்லதா இருக்கட்டும்” எனக்கூறினார்.
அன்று சித்தார்த் இளங்கோவையும், ஆனந்தியையும் திட்டி அனுப்ப, இளங்கோ அதிர்ச்சியில் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் வேறொரு மருத்துவமனையில். சித்தார்த்தோ எங்கும் செல்லவில்லை மதுவை விட்டு. தாய், தகப்பன் தங்கையென அத்தனை பேரையும் சுத்தமாக ஒதுக்கிவிட்டான். அவனுக்கு அவன் தாரா மட்டுமே போதுமானவளாகிப் போனாள்.
ஒரு வாரம் மருத்துவமனையில் செல்ல, அன்புவுக்கும் உடல்நிலை கொஞ்சம் தேறி இருவரையும் வீட்டுக்கு அனுப்பலாமென மருத்துவர் கூற, அஸ்வந்த் அந்த வேலைகளைப் பார்க்கச் செல்ல, ஈகை அன்பு அறையில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அன்புவையும் கூட்டிக்கொண்டு வருகிறேன் எனக் கூறிக்கொண்டு செல்ல, மதுவின் அறையில் நுழைந்தான் சித்தார்த். அவளது பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு நின்றான்.
“உங்கள இனி என்ன பார்க்க வர வேண்டாம்னு சொன்னதா ஞாபகம்”
“தாரா..” எனக்கூற, கை நீட்டித் தடுத்தவள்,
“மது” எனக்கூறி, “நான் என் அப்பா வீட்டுக்குக் கிளம்புறேன்” எனக்கூற, சித்தார்த்துக்கு அடுத்து என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
தாய், தகப்பனையும் விலக்கி வைத்தாகிவிட்டது இனி அந்த வீட்டுக்குச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை. ஒருவாரமும் மருத்துவமனையில் செல்ல, அவனுக்கு இனி எங்குச் செல்வது என்ற குழப்பமே.
முன்பு போல் இருந்தால் அவனுக்கு அன்பு வீட்டில் தனிஅறையே இருக்க, அங்குச் சென்று தங்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தைத் தவறாக நினைத்து இத்தனை இன்னல்களையும், துன்பங்களையும் கொடுத்துவிட்டு இனி எப்படி அந்த வீட்டு வாசல் படி மிதிப்பது.
அனைவரும் அவனை வேறாகப் பார்க்காமல், முன்பு எப்படி பழகினார்களோ அப்படியே பழக அவனுக்குத் தான் நெருஞ்சி முள்மேல் நிற்பது போல இருந்தது. அன்பு குடும்பத்தில் யாருக்குமே மனதில் கல்மிஷம் இல்லை ஆனால் அவனுக்குத் தான் அவர்களிடம் இன்னும் இலகுவாகப் பழக முடியவில்லை. தன் செய்த இமாலயபிழை அவனைச் செருப்பால் அடிப்பது போல இருந்தது.
இரண்டு நாட்களாகவே அவனுக்கு இந்த எண்ணம் தான். எங்குப் போவது என? அவனுக்குப் பணிக்கான கடிதமும் வந்துவிட்டது. தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அவனுக்கான பணி காத்துக் கொண்டிருக்க, அங்குச் சென்று முதலில் பணியில் அமர வேண்டிய கட்டாயமும் இருந்தது.
அங்கு அவனது நண்பன் மூலமாகத் தங்குவதற்கு வீடும் பார்த்தாகிவிட்டது ஆனால் மது வருவாளா? அவள் தான் அவனைக் காண்பதே கிடையாதே! எப்படி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வது என்பது தான் தயக்கமே.
அவனது தயக்கம் என்னவோ மற்றவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் வழமைபோல வீட்டுக்குக் கிளம்ப தயாராகச் சித்தார்த்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்போதைக்கு மதுவும் அவனுடன் வரப் போவதில்லை. அஸ்வந்தோ,
“டேய் இங்க எல்லா வேலையும் முடிஞ்சது. பழனி அண்ணன் கார் கொண்டு வருவாரு அதுல அப்பா, அம்மா மதுவ கூட்டிட்டு நீ வா. அகிலாவுக்கு வேற காய்ச்சல். நான் முன்னாடி போய் அப்பாக்கும், மதுக்கும் தேவையான ஏற்பாட செய்றேன்” எனக்கூறி, வேண்டுமென்றே அவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவன்பாட்டுக்கு செல்லச் சித்தார்த்துக்கு தான் தடுமாற்றமாக இருந்தது.
அந்த வீட்டிற்கு போக வேண்டுமென நினைத்தாலே உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து கதறியது. கையால் தலையைத் தாங்கியபடி அறை வாயிலில் அமர்ந்திருந்தவனை பார்த்த ஈகை,
“சித்து.. டாக்டர் கிளம்ப சொல்லியாச்சு நான் போய் அந்த ரூமை காலி பண்றேன் நீ இந்த ரூம்ல உள்ள பொருளை எல்லாம் எடுத்துக் கட்டப்பையில வைப்பா. நான் எல்லாத்தையும் எடுத்துட்டு மாமாவைக் கூட்டிட்டு வரேன்” என அவரும் மகளுக்கும், மருமகனுக்கும் தனிமை அளித்துவிட்டு செல்ல, அவள் அறைக்குள் வந்தான். வந்தனிடம் மது இப்படி கூற அடுத்து பேசாமல் நின்றான்.
“நான் அப்பா வீட்டுக்குப் போறேனு சொன்னேன்”
“சரி”
“நீங்க அங்க வரக் கூடாது”
“சரி நான் அங்க வரல. என் தப்புக்கு தண்டனையா நினைச்சுக்கிறேன். நீ எப்போ என் கூட வருவ?”
“எதே! நான் எதுக்கு வரனும்? போதும் நான் இனி என் அப்பாவ விட்டுட்டு எங்கயும் வரமாட்டேன்”
“மாமாக்கு நடந்தது தப்பு தான். மாமாக்கு மட்டும் இல்ல உங்க எல்லாருக்கும் நடந்ததும் தப்பு தான். அதுக்கு காரணமான என்னைப் பெத்தவஙக்ளையும் நான் அடியோடு வெறுத்துட்டேன், போதாததுக்கு விலக்கியும் வச்சுட்டேன். இனி அவங்க நமக்குள்ள வரமாட்டாங்க. தூத்துக்குடில வேலை கன்ஃபர்ம் ஆயிடுச்சு. வீடு கூடப் பார்த்துட்டேன். நம்ம அங்க போலாமா?”
“உங்களுக்கு வேலைனா நீ போங்க. நான் எதுக்கு? இனி எப்பவும் நான் எங்கயும் வரமாட்டேன், அதே மாதிரி நீங்களும் என் அப்பா வீட்டுக்கு வரக் கூடாது” எனக்கூற,
“தாரா! ஏன் தாரா இப்படி பண்ற. நான் பண்ணது தப்பு தான் ஒத்துக்கிறேன். ஆனா தப்புனு உணராம உன்னைக் கஷ்டப்படுத்தும்போது கூட என் கூடவே இருந்த.. இப்போ ஏன் இப்படி என்னைப் பிரிச்சு வைக்கிற?”
“போதும் அப்பாவுக்கு இது இரண்டாவது அட்டாக் இனி ஒருதடவை அவரால அத தாங்க முடியாது. எப்படி வலிக்கும்னு அதோட வலி தெரிஞ்சவங்களுக்கு தான் புரியும். உங்க கூட இருந்தா கூடிய சீக்கிரமே அடுத்த அட்டாக்க உங்கம்மா வர வச்சிடுவாங்க. எனக்கு என் அப்பா இன்னும் கொஞ்ச நாள் வேணும்” எனக் காரணத்தை அன்பு மேல் போட்டாளே தவிற அன்புவுக்காகவும் அவள் அந்த முடிவை எடுக்கவில்லை.
“தாரா! இனி அப்படி நடக்காது தாரா. அவங்க இனி அன்பு மாமாக்கிட்ட கூட வர முடியாத அளவு பார்த்துக்கிறேன். முன்னாடி எனக்குத் தெரியாம தான் எல்லா தப்பும் நடந்திருக்கு இனி அப்படி நடக்காது தாரா நான் பார்த்துக்கிறேன்”
“எப்படி.. தூத்துக்குடில இருக்க போறவருக்கு இங்க எந்த நிமிஷம் என்ன நடக்கும்னு எப்படி தெரியும்? எப்படி பார்த்துக்க முடியும்? எல்லாம் வாய் வார்த்தைக்குச் சரியா வரும் ஆனா நடை முறைக்குச் சரிவராது. உங்கம்மா எந்நேரம் என்ன பண்ணுவாங்கனு எங்களால உயிர கையில புடிச்சிக்கிட்டு இருக்க முடியாது. நீங்க உங்க அம்மா, அப்பா கூட இருங்க நான் என் அம்மா, அப்பா கூட நிம்மதியா இருக்கேன்”
“அம்மா தான் பிரச்சனைனா அவங்கள எப்படி ஹேண்டில் பண்ணனும்னு எனக்குத் தெரியும் தாரா. அவங்களால நம்ம நிறைய இழந்துட்டோம். இனியும் அவங்களுக்காகப் பார்த்து நம்மோட வாழ்க்கைய இழக்க கூடாது”
“இல்ல என்னால முடியாது. இனி உங்க கூட இருக்க முடியாது தயவுசெஞ்சு போயிடுங்க.. என்னை விட்டுடுங்க..” எனக் கையெடுத்து கும்பிட்டாள்.
“இல்ல தாரா என்னால முடியாது. அப்படி ஈஸியா என்னால உன்னை விட்டுட்டு போக முடியாது. நீ தாண்டி என் உலகம் நீ இல்லாம என்னால எப்படி இருக்க முடியும்னு நினைக்கிற?”
“இப்பவும் கூட உங்க சுயநலம் தான் உங்களுக்கு முக்கியம். உங்களால என்ன விட்டுடுட்டு இருக்க முடியாதுன்றதால நான் எப்பவும் உங்க கூட இருக்கனும்னு நினைக்கிறீங்களே என் மனசுல என்ன இருக்குனு தெரியுமா? அத பத்தி யோசிச்சாவது பார்த்தீங்களா?”
“இப்போ என்ன தான் சொல்ல வர?” என்றான் அழுத்தமாக.
“எனக்கு நீங்க வேண்டாம் இனி என்னைப் பார்க்கனு என் வீட்டுக்கு வரக் கூடாது. நமக்கு நடுவுல ஒன்னுமே இல்ல. எனக்கு டிவோர்ஸ் வேணும்” எனக்கேட்க, அவனுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது.
‘எதற்கு எதைச் சம்பந்தப்படுத்தி இப்படி செய்கிறாள். மாமா உடல்நிலையும், என் குடும்பமும் தான் காரணம்னா அத எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியாதா? எனக்கு இவ்விஷயமெல்லாம் தெரியாம இருந்ததால தான இப்படி எல்லாம் நடந்து போச்சு.
நான் தான் இனி அப்படி நடக்காதுனு சொல்றேன் ஆனாலும் இப்படி பிடிவாதவாதமா நின்ன என்ன பண்ண? அதுவும் இப்ப உள்ள உடல்நிலைக்கு அவளிடம் கோபத்கைக் காட்டவும் முடியல.. இவ மனசுல என்ன தான் இருக்கு’ என நினைத்தவனை கலைத்தது அன்புவின் குரல்.
“ரெடியாச்சா.. போலாமா” என அன்பு கேட்டுக்கொண்டே வந்தவர் மதுவின் தலையில் மெல்லமே தடவிக்கொடுக்க, “அப்பா” என அவரை அணைத்துக் கொண்டாள்.
ஈகை “எல்லாம் எடுத்துட்டியா சித்து”
“ஹான் அத்தை. எடுத்துட்டேன்”
“சரி அப்போ வாங்க கிளம்பலாம்” எனக்கூறி இரண்டு கைகளிலும் பொருட்களை அள்ளிக் கொண்டு செல்ல, அவனும் மீதமிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவர் பின்னாலே செல்ல, அன்புவும், மதுவும் பின்னால் மெதுவாக வந்தனர்.
காரில் அனைத்தையும் வைத்தவன், அதில் ஏறாமல் தனியே நிற்க,
“சித்தார்த்து கார்ல ஏறுப்பா கிளம்பலாம்” எனக்கூற, அதில் ஏறாமல் மதுவையே பார்க்க,
“என்னப்பா ஏறு.. ஏன் மதுவ பார்க்குற? மது என்னம்மா என்ன சொன்ன எதும் பிரச்சனையா உங்களுக்குள்ள?” எனப் பதட்டமாகக் கேட்க, தகப்பனின் பதட்டம் நல்லதிற்கில்லை எனப்புரிந்தவள்,
“என்னத்துக்கு என்னை வெறிச்சு பார்க்குறீங்க? என் முகத்துல என்ன இருக்கு? பாருங்க அப்பா பயப்படுறாங்க? எங்க விளையாடனும்னே தெரியாதா உங்களுக்கு? ஏறுங்க வண்டில” என ஒன்றுமே நடக்காதது போலப் பேச அவன் தான் குழம்பிப்போனான்.
நல்லபடியாக அனைவரும் வீட்டிற்கு வர, அந்த வீட்டைப் பார்த்ததும் அவனுக்கு நெஞ்சு அடைத்தது. அவ்வீடு அவனுக்கு எத்தனை முக்கியமான இடம். இன்பம், மகிழ்ச்சி, சந்தோஷம், காதல் என எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த வீடல்லவா! தயங்கி தயங்கி அவ்வீட்டிற்குள் வந்தான். அவனைத் தனியாகத் தள்ளிக்கொண்டு சென்றவளோ,
“அப்பா முன்னாடி ஏன் அப்படி பண்றீங்க?” என்றாள் கடுப்பாக,
“நீ தான வர வேண்டாம்னு சொன்ன?” எனக்கூற, தலையில் கைவைத்து அமர்ந்தவள், பல யோசனைக்குப் பின்,
“உங்களுக்கு எப்ப டியூட்டி ஜாயின்?”
“நாளைக்கு”
“நல்லாதா போச்சு. அப்பாக்கிட்ட ஜாயினிங் லெட்டரைக் காட்டி வேலைக்குப் போற மாதிரி இப்போவே கிளம்பிடுங்க. இனி இங்க வரவே கூடாது. இங்க நான் சமாளிச்சுக்கிறேன். டிவோர்ஸ்க்கு ஃபைல் பண்ணிடுங்க ஆது கடை அட்ரெஸ் வச்சி கேஸ் ஃபைல் பண்ணுங்க” எனக்கூற கடுப்பானவன்,
“இப்போ என்ன நான் போகனும் அவ்ளோ தான. நான் போறேன். கேஸ்ஸூம் போட முடியாது டைவர்ஸ்ஸூம் குடுக்க முடியாது. உன்னால ஆனமட்டும் பார்த்துக்கோ போடி” எனக் கடுப்பாகக் கூறிசென்றவன் ஒரு மாதம் கழித்து இன்று தான் மீண்டும் திரும்ப வந்திருக்கிறான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 36
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 38
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Sprrr waiting for next episode 😊
மிக்க நன்றி😍
தருண் ஒரு சாக்கிக்கு என்னமா plan செய்யறான். அகிமாக்கு தெரியாம இவன் சாப்பிடுவானாம் அப்பத்தாக்கு தெரியாம அத்தை சாப்பிடணுமாம்.
மது சித்தார்த்தை பிரியும் முடிவை எதனால் எடுத்தால். அன்பின் உடல் நிலையும் காரணம் இல்லை. அவனின் குடும்பமும் காரணம் இல்லை என்றால் என்னவாக இருக்கும்.
அன்பு முன் நன்றாய் இருப்பது போல் காட்டிக்கொள்கிறாள் பிறகு விவாகரத்தும் கேட்கிறாள்.
இப்பொழுது இல்லையென்றாலும் பின்னர் தெரிய வந்துதானே தீரும்.
சித்தார்த் அவளின் ஆசைக்காக படித்து, வேலையில் சேர்ந்து என இப்பொழுது அவளின் வேண்டுதலுக்காகவே பிரிந்து இருந்திருக்கின்றான்.
மிக்க நன்றி😍
சித்து கொஞ்சம் அழட்டும்.பரவாயில்ல.
பாவம் அவன்😞