Loading

இருளகன்று விடியல் பிரவசிக்க இரவெல்லாம் வலியென இருந்த மனதுக்கு விடியலைக்  கண்டதும் புது உற்சாகம்.

காலையில் நேரமாக எழுந்தவள் மருமகளாக வீட்டில் தன் பணியை செய்ய ஆரம்பித்தாள். 

சமையலறையை தன் வசம் கொண்டவளைச் செல்லமாகக் கடிந்த படி உள்ளே வந்தார் ஆரோக்யா.

“கொஞ்ச நேரம் மகனோட தூங்கினா தான் என்ன?? நான் பார்க்க மாட்டேனா?”என அவளுடன் சமையல் வேலையில் பங்குக் கொண்டவரைத் தடுத்து கையில் காஃபி கப்புடன் வம்படியாக வெளியே அனுப்பி வைத்தாள் ஜெஸி.

காலை உணவையும் மகனுக்காக மதிய உணவையும் சேர்த்து சமைத்து கொண்டிருந்தாள்.

வெளியே ஆரோக்யா , ஜாக்கிங் சென்று வந்த தன் கணவன் ஆப்ரஹாமிடன் மருமகளைச் செல்லமாக வத்தி வைத்து கொண்டிருந்தார்.

அத்தை வத்தி  வைப்பதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தவள் மாமனாருக்காக காஃபி கலந்து  வந்து அவரிடம் கொடுத்தாள்.

கையில் வாங்கி கொண்டவர் பருகியடி”நீயேன்டா இதெல்லாம் செய்ற ? வேலைக்குப் போற நீ வீட்டு வேலையும் பார்க்கணுமா?? நாங்க என்னடா இங்க நெட்டியா முறிக்கிறோம், சும்மா தான வீட்ல இருக்கோம் நாங்க பாக்க மாட்டோமா??? ஏன்டா கஷ்டப்படுற? எங்களுக்கு என்ன அவ்வளவு வயஸா ஆகிடுச்சி, உட்கார்ந்து ஓய்வெடுக்க?” என அக்கறையோடு கேட்டவரை முறுவலோடு ஏறிட்டவள் ” உங்க வயசுக்கே நீங்க எங்களுக்கு ஓய்வு தேவையானு கேக்குறீங்க???? அப்போ என் வயசுக்கு நான் ஒய்வெடுத்தா நல்லா இருக்குமா சொல்லுங்க… இதை நான் கடமைக்கு செய்யல மாமா !! இஷ்டப்பட்டு தான் செய்றேன் எனக்கு அலுப்பு தெரியல !!! ” என்று தன் பக்க விளக்கம் கொடுத்தாள்.

“உங்க மருமக கிட்டப் பேசி உங்களால ஜெயிக்கவே முடியாது” என்று எழுந்தவர் “மீதி வேலய நான் பார்த்துகிறேன். நீ போய் பேரனை கிளப்புமா”என்று ஆரோக்யா சமையலறைக்குள் புகுந்து கொள்ள, தன் மகனைத் தேடி அறைக்குள் சென்றாள்.

ஒரு பக்கமாகப் படுத்திருந்தவன் பாதி உறக்கத்தில் கைகளைக் கொண்டு தன் தாயைத் தேடினான். “மா…மா…..” என முணங்கிய படி கிடந்தவன்

“ஜெஸி… ஜெஸி…” என  உறக்கத்தில் தன்னை தேடும் ஆரோனை நினைவு படுத்தினான்.

“ஜெஸி”என அவள் பெயரைத் துதிப் போல எந்நேரமும் சொல்லிக் கொண்டே இருப்பான். அவளுக்கே அவள் பெயர் சலித்து போய்விடும் அவனது அழைப்பில். ஆனால் அவனுக்கோ  திகட்டாத இனிப்பின் உச்சமாய் இனித்திடும் அவளது பெயர்.

“ஜெஸி” என்ற ஒற்றை அழைப்பை வைத்தே மன்னவனின் மனதிலுள்ளதை அறிந்திடுவாள். அவளது விழிமொழியே போதும் அவள் கூற வரும் யாவையும் அறிந்து கொள்வான் அவன்.

இருவருக்குள்ளும் நிறைந்த காதல் இருவரையும் ஆள, இருவரது மனமும் மெய்யும் சர்ப்பம் போல பின்னி பிணைந்து யாவையும் பரிமாறிக் கொண்டு வாழும் ஆதர்ச தம்பதியர்களாக  ஆரோன் சைஜூவும் ஜெஸி எமிரா ஆரோனும் மூன்று மாதத்திற்கு முன்பு வரை அவ்வாறு வாழ்ந்திருந்தனர்.

ஆனால் விதி  அவர்களது  வாழ்வில் வில்லனாய் வந்து விளையாடி அக்கஞ்சுகனின் உயிரை காலனின் கயிறுக்குப் பரிசாக்கி விட்டது. ஆரோன் இறந்து மூன்று மாதங்கள் முடிந்து விட்டது.

ஆரோன் சைஜூ, ஆப்ரஹாம் , ஆரோக்யா தம்பதியரின்  ஒரே பையன். ஆப்ரஹாம் ஒரு  முன்னாள் ராணுவ அதிகாரி.  தன் மகன் வளரும் வரை  ராணுவத்தில் இருந்தவர் பின் வாலண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கி கொண்டு குடும்பத்துடன்  இருந்து கொண்டவர், செக்யூருட்டி  சர்வீஸ் தொழிலை ஆரம்பித்தார். 

வேலைக்குக் கேட்டு வந்த  இளைஞர்கள் சில முதியோர்கள் , ராணுவத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு வேலை கொடுத்து, அதில் மூன்று  மாதம் பயிற்சி வைத்து தேற்றி அவர்களை,

பாதுகாப்புக்காக தங்களை அணுகும் அரசியல் பிரமுகர்களின் வீடுகளுக்கும், நடிகர் , நடிகைகளின் வீடுகளுக்கும் பணக்காரர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைப்பார்.

மேற்கொண்டு தனியாக தனக்கு மெய்க்காப்பாளன் வேண்டும் கேட்போருக்கும் அனுப்பி வைக்கும் வேலையைத்  தான் செய்து வருகிறார் ஆப்ரஹாம். முதலில் தந்தையை போல ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசை கொண்ட ஆரோன், ராணுவத்திற்குள் நுழைய வேண்டிய அத்தனை பயிற்சிகளிலும் தேர்வாகத் தான் செய்தான்.  ஆரோக்யாவின் கண்ணீர் மற்றும் பிடிவாதம் அவனைப் போக விடாமல் செய்து விட்டது.

ஆனாலும் அவனுக்குள் இருக்கும் ராணுவ வேட்கை அடங்காமல்  துடித்து கொண்டிருக்க,  தந்தையாய் மகனை புரிந்து கொண்டவர், அவனை தன் தொழிலில் சேர்த்துக் கொண்டார்.

ராணுவம் செல்லும் ஆசையில் பொறியியல் எடுக்காமல்  பி.எஸ் .சி சைக்காலஜி எடுத்து படித்திருந்தான்.  அவனை போல ராணுவ லட்சியங்களைக் கொண்ட நால்வர் அவனோடு இணைந்தனர்.

ஆரோன்,  எட்வார்டு , நிவாஸ் , ஜெஸி, ரெக்ஸ்லின் என ஐவரும் நண்பராக இணைந்தனர்.  பி. எஸ் .சியில் தொடங்கிய நட்பு இன்றுவரை தொடர்கிறது. 

இந்த ஐவரின் ராணுவ கனவுகள் ஏதோ  ஒரு விதத்தில்  தடைப்பட்டு போக, அந்த ஐவரும் ஆப்ரஹாம் நடத்தி வரும்  செக்யூருட்டி சர்வீஸில் சேர்ந்து விட்டு ஐந்து படைகளாக பிரிந்து கொண்டு அவர்களுக்கு ட்ரையிங் கொடுப்பது இல்லாமல் அந்த ஐவரும் மெய்காப்பாளாராகவும் சென்றனர்.

எட்வார்டும் ஆரோனும்  சிறு வயத்திலிருந்தே நண்பர்கள் அவர்களது தந்தைகளை போல். நிவாஸ் , ஜெஸி, ரெக்ஸ்ளலின் மூவரும் அனாதை ஆசரமத்தில் வளரந்தவர்கள்… எல்லாம் ஸ்பான்சர்கள் மூலம் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரி வரை வந்தனர். அவர்களை மீண்டும் ஸ்பான்சர்களே படிக்க வைத்தனர். 

கல்லூரியில், முதல் நாள் ஜெஸியைப் பார்த்த நொடியிலே காதலில் விழுந்து விட்டான் ஆரோன். ஆனால் அவளோ அவனது காதலை ஏற்றுக்கொண்டது   எம்.எஸ் சியில் தான்.  கெஞ்சிக் கூத்தாடி  மூன்று வருடம் அவள் காதல் வரம் வேண்டி ஒற்றைக் காலில் தவமிருக்க, மூன்று வருடங்களுக்கு பின் தான் அவள் வரமே அளித்தாள்.

ஆனால் எட்வார்டுக்கும்  நிவாஸ்க்கும் காதல் தவக்காலம் ஆறு மாசம் தான் .. ரெக்ஸ்லினும் ஷர்மியும் உடனே ஏற்றுக் கொண்டனர்.  அதனாலே பல நாள் ஆரோனின் வசைவுக்களுக்கு  பலியானாள் ஜெஸி. மூன்றாண்டுகள் கழித்து  தன் காதல் சொல்லி அவனை திணற வைத்தாள்.

படிப்பை  முடித்து கொண்டு மூன்று வருடம் வேலை செய்தவர்கள், பின் அவரவர் தங்கள் இணையுடன் திருமணப்பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

ஜெஸியும் ரெக்ஸ்லின் ஷர்மீ வீட்டையாள, மூன்று சிங்கங்களும் மெய்க்காப்பாளர் பணிக்குச் சென்றனர். 

அடுத்தடுத்து நாட்கள் வீட்டில் விஷேங்களே ஜெஸி , ஷர்மீ , ரெக்ஸ்லின் கருவுற்றனர்.  ஜெஸி, ஷர்மீ,  ஆண் குழந்தையையும் ரெக்ஸ்லின் பெண் குழந்தையையும் பெற்றெடுத்தனர். ஒட்டு மொத்த குடும்பமும் ஆரோனின் இறப்பு வரைக்கும்  மகிழ்ச்சியாக இருந்தது. 

அரசியலின் முக்கிய பிரமுகரான பிரகதீஸ்வருக்கு ஆரோனும் நிவாஸூம் மெய்க்காப்பாளராகவும் வீரமதிக்கு எட்வார்டும் மெய்க்காப்பாளனாகச் சேர்ந்தனர்.

நன்றாகச் சென்று கொண்டிருந்த அவர்களது நாட்கள் அன்று அடித்த புயலால் மாறிப் போனது.

பிரகத்தீஸ்வருக்கும் அவர் கட்சியிலுள்ள பிரமுகர் ஒருவருக்கும் நடந்த துப்பாக்கி போரில் இருவரும் இறந்திட, அந்த யுத்தத்தில் ஆரோனின் உயிரும் தீக்கு பலியானது.

பிரகத்தீஸ்வரரை பழிவாங்க துடித்த நபர்கள் அவரை கொன்றதும் இல்லாமல் கொன்றதுக்கான தடையங்களை அழிக்க வீட்டை எரித்து விட்டு சென்றனர். வீட்டோடு எரிந்து போன உயிர்களில் ஆரோனும் ஒன்று என்று அவனது  கழுத்தில் இருந்த அடையாளத்தை வைத்து தெரியப்படுத்தினர்.

கணவனின் இறப்பு விபத்து என்று எண்ணியிருந்தளுக்கு அவன் கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் அவனது இறப்பு விபத்தல்ல கொலை என்று தெரிய வந்தது. அவன் குறிப்பிட்ட நபரை பழிவாங்கும் எண்ணத்தில் தன் வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள்.

உயிரவனின் உயிரைப் பறித்தவர்களின் உயிரை  வாங்கிட காத்திருக்கிறாள் காதல் மெய்க்காப்பா(ளி)ளர்.

உறங்கிக் கொண்டிருந்த மகனின் கன்னத்தில் உதடுகள் பதிய முத்தம் வைத்தவள்” டெனி ! அம்மா இங்க தான் இருக்கேன் கண்ண திறங்க…” எனக் கொஞ்சியபடி அவனை எழுப்பினாள்.

தன் மொட்டு இமைகளை மெல்லத் திறந்து, இதழ்கள் இரண்டும் மலர அழகானச் சிரிப்பை உதிர்த்தான்.

“குட் மார்னிங் டெனி!” என்றதும் தாயின் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டான். 

அவனை அப்படியே தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று காலைக் கடன்களைச் செய்ய வைத்து விட்டு வந்தவள், அவனுடன் பல கதைகளைப் பேசியபடி பள்ளிக்குச் செல்ல அவனைத் தயாராக்கினாள்.

பின் இருவரும் புகைப்படத்திலிருக்கும் கர்த்தரை நோக்கி கைகளைக் கோர்த்து இரண்டு நிமிடம் கண்களை மூடித் தொழுது விட்டு வந்தனர் .

அவனுக்கென காலை உணவும் மதிய உணவும் தயாராக இருந்திட,  டெனியை மேசையில் அமர வைத்து ஊட்டி விட்டு தானும் உண்டு பெரியவர்கள் இருவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

அவனை தன் காரின் முன் சீட்டில் அமர வைத்து சீட்டு பெல்ட் போட்டு விட்டவள் தானும் அமர்ந்து வண்டியை எடுத்தாள்.

சாலையில் கார் வழுக்கிக் கொண்டு செல்ல, உள்ளே அவன், ரைம்ஸில் ஆரம்பித்து சினிமா பாடல்கள் வரை பாடிக் கொண்டே வந்தான். 

பாடலைப் பாடிய படி வந்தவன் ஜெஸியையும் “மா… பாடு!! மா… பாடு!!!” என தன்னுடன் அவளையும் பாட அழைத்தான். அவளும் அவனுடன் பாடிக் கொண்டே காரை ஓட்டினாள்.

“பொன்னி அதி பாக்கணுமே !”அவன் பாட, “தீயாரி எசமாரி”என அவள் பாடினாள்.

“காத்த போல” 

“தீயாரி எசமாரி”

“கன்னி ……. காணுமே!” பாதி வார்த்தை முழுங்கிய படி அவன் பாட, சிரித்து கொண்டே அவளும்”தீயாரி எசமாரி”என்றாள்.

அடுத்து வரி அவனுக்குத் தெரியவில்லை திரு திருவென முழிக்க அதனைக் கண்டு பக்கென்று சிரித்தவள், அவன் விட்ட இடத்திலிருந்து இவள் பாட,  இவனும் அவளுடனே வாய்க்குள் வாராத வார்த்தைகளை அறைகுறையாக பாடிய படி வந்தான்.

கார் பள்ளியை வந்தடைந்தது. காரை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மகனைக் கைப்பிடித்து அழைத்து வந்தாள் 

மாணவர்கள் சிலர் பொதி சுமையத் தூக்கிக் கொண்டு நடந்தனர். பள்ளி வளாகத்தில் நுழையும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பார்த்த படி நின்றிருந்தார் ஃபாதர் ஜான் மேத்யூ.

மகனுக்குப் பள்ளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைச் சொல்லிக் கொண்டு ஃபாதரின் அருகே வந்தவள்”குட் மார்னிங் ஃபாதர்”என்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்க தலையைத் தாழ்த்தினாள். 

அவரும் நெற்றியில் சிலுவையிட்டு ” காட் பிளஸ் யூ” என்றார். மகனையும் பிளஸ் வாங்க வைத்தவள் அவனை உள்ள அழைத்துக் கொண்டு வகுப்பறையில் விட்டு வெளிய வர பாஃதர் அவளை அழைத்தார்.

“வேலைக்குப் போறதா கேள்விப்பட்டேன் ஜெஸிமா”

“எஸ் ஃபாதர் நேத்துல இருந்து தான் போறேன். வீரமதி மேமோட சன்னுக்கு  நான் தான் பாடிகார்டா இருக்கேன் ஃபாதர்”என்றாள்.

“மறுபடியும் அங்கேயா ! வேற இடம் வேற வேலைக்கு கூட போயிருக்கலாமே ஜெஸி. இழப்ப மறக்கத்தான வேலைக்குப் போற, அந்த இழப்ப நியாபகப்படுத்தற இடத்துக்கே வேலைக்கு போனால் எப்படி  ஜெஸிமா மறப்ப?”எனக் அவர் கேட்டதும் விரக்தியில் சிரித்தவள்

“அப்படி பார்த்தால் நான் என் வீட்லையும் இருக்க முடியாதே ஃபாதர். ஆரோவ அவ்வளவு சீக்கிரம் மறந்திடுவேனா !!! அது நான் இறந்ததுக்கு சமம் இல்லையா ஃபாதர்? அவன் வெறும் நினைவா இருந்தா மறந்திடலாம் . என் உயிரா, உணர்வா உடலா இருக்கும் போது எப்படி ஃபாதர்? எங்க போனாலும் அவன் நினைப்பு முதல்ல வந்து ஆக்கிரமிச்சிடுது. அதைக் கடக்க நினைக்கல, அதோட வாழ பழக நினைக்கிறேன் ஃபாதர்”என்றாள்.

“ஆரோனை மறக்க வேண்டாம்… கடந்து வா ! உனக்கான வாழ்க்கை உனக்காக காத்திட்டு இருக்கு ஜெஸி. நீ வாழ வேண்டாமா???”

“ஆரோனுக்கு , அடுத்து ஒரு வாழ்க்கைனா அது டெனி தான். டெனியை வளர்த்துக்கிட்டு ஆரோனோட நினைப்புல வாழறதே போதும் ஃபாதர்”

“இது உன் முடிவு. ஆனா கர்த்தரோட முடிவு என்னவோ?? எப்பையும் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் மகளே !”  என்று  தலையில் கை வைத்து ஆசீர்வதிக்க , அதனைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து நடந்தாள்.

***

தன் முன்னே நின்ற அடியாட்களை வெறுப்புடன் பார்த்த படி அமர்ந்திருந்தார் வீரமதி. 

அவரது கோபத்தை தாளமுடியாமல் அவர் முன் தலை குனிந்து படி நின்றிருந்தனர் அடியாட்கள் அனைவரும்.

டிரைவர் காசி அண்ணனுக்கு துருவனை அடித்த நபர்கள் யாரென்று தெரியும் என்பதால், ஒவ்வொரு ஊரில் உள்ள அடியாட்களின் ரவுடிகளின் புகைப்படங்களை சேகரித்து அவரிடம் காட்டி யாரென்று கண்டுப்பிடிக்க முயன்றனர். 

சிறு புழுவை வைத்து கடலில் மீன் பிடிப்பது போல இருந்தது. இருந்தும் வேறு வழியில்லாமல் அதை செய்து கொண்டிருந்தனர்.  

அருகே வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராவில் துருவன் அடிவாங்கிய நிகழ்வு பதிந்திருந்தது.

அதில் ஒருவனின் முகம் மட்டும் அறைகுறையாகத் தெரியா அதை வைத்தும் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்கின்றனர். 

“கொடுத்த காசுக்கு ஊர் சுத்தி பாத்தாச்சா???  மூணுவேள சோறு, சுத்த காரு, அதுக்கு பெட்ரோலு, தங்க சொகுசான இடம்  போதுமா இல்ல இன்னும் வேணுமா??? என்னங்கடா போதுமா?? ” என கத்த, 

அனுஜபகுவனா உடலை கொண்ட அந்த அடியாட்களும் பயந்து நடுங்கினார்கள். “தடிமாடுகளா கொடுத்த காசுக்கு உடம்ப வளர்த்தா போதுமா, வேலையும் கொஞ்சம் பாக்கணும்டா ! பத்து நாள் ஆச்சு இன்னும் அவனுங்கள கண்டு பிடிக்கிறீங்க நீங்க… சொன்ன வேலைய தான் செய்றீங்களா???  இல்ல பொண்ணும் பொருளுமா வச்சி கூத்தடிக்கிறீங்களா??? பதில் சொல்லுங்கடா” என் வீடே அதிர கத்தினார். 

வீரமதி பின்னே நின்ற எட்வர்டும் எதிரே  நின்றிருந்த அடியாட்களை சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

“அம்மா போட்டோ இல்லாம தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்கு… காசி அண்ணே மட்டும் தான் அவனுங்கள பாத்திருக்காரு. நாங்களும் ஒரு ஒரு ஊரா போய் அங்க இருக்க எல்லா ரவுடிகங்க அடியாளுங்க போட்டோ எல்லாம் சேகரிச்சி அவர் கிட்ட காட்டினு தான் மா இருக்கோம். அந்த நாதாரிங்க சிக்க மாட்டிக்கிறானுங்க…  

அந்த கசுமாலங்க போட்டோ மட்டும் இப்ப கையில் இருந்த எல்லா ஊர்ல இருக்க நம்மாட்களுக்கு அனுப்பித் தேடச் சொல்லிக் கண்டுபிடிச்சி சூப் வச்சிருப்போம் மா…போட்டோ இல்லாம மா நாளு இழுக்குது” என தலையைச் சொரிந்தவாரே  சொன்னான் அவன்.

“அந்த சிசிடிவி கேமிரா மூலமாக  ஒருத்தனோட முகம் கிடைச்சதா சொன்னீங்க, அவனை வச்சி கண்டு பிடிக்க முடியலையா???”

“இல்லங்கமா !! அந்த கேமிரால பாதி முகம் தான் தெரிஞ்சது அதை வச்சி ஒன்னும் பண்ண முடியல  !!!”குரலை தாழ்ந்தினான் ஒருவன் அவரது முறைப்பில்.

சரியாக ஜெஸியும் உள்ளே நுழைந்தாள். அவளுக்கு அவர்கள் பேசுவது நன்றாகக் கேட்டது. அவர்களது பேச்சைக் கேட்டபடி  வீரமதியை நெருங்கினாள். 

“இன்னும் ஒரு மாசம் இல்ல ரெண்டு மாசம் வேணா எடுத்துக்கங்க. ஆனா இங்க வந்தா என் புள்ளைய அடிச்சவனோட தான் வரணும். இல்ல, இங்க இருக்க ஒவ்வொருத்தனையும் கண்டதுண்டமா வெட்டிப் போடச் சொல்லிடுவேன். போங்க…” என கர்ஜித்தாள்.

அவர்கள் பயத்தோடு அங்கிருந்து நகன்றனர். செல்லும் அடியாட்களை கேலியாகப் பார்த்தவள், திரும்பி எட்வர்ட்டையும் அப்படியே பார்த்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவரை அர்த்தம் பொதிந்தப் பார்வையோடு பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். 

வீரமதி, தன் அருகே வந்து நின்ற ஜெஸியைப் பார்க்கச் சட்டென முகத்தை மாற்றியவள் அவரை நோக்கி “குட் மார்னிங் மேம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

நேரமாக எழுந்த துருவனோ வெற்றுடம்போடு வியர்வை வழிய, பட்டு புல் தரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

இரண்டு கிலோ மீட்டர் இடைவெளி விட்டு அவனையும் சுற்றும் முற்றும் பார்த்த படியும் நின்றிருந்தாள் தன்யா.

உடற்பயிற்சி செய்து முடித்தவன் தன்யா அருகே வந்து “ஹாய்!!” என்றான். அவளும்” ஹாய்”என்றாள் கொஞ்சம் தயங்கி.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க??? ஏன் இந்த ப்ரோஃபஷன சூஸ் பண்ணிங்க?? நீங்க மாடலிங் போயிருந்தா நீங்க தான் டாப் ஒன்னு மாடல், ஏன் நடிக்க போயிருந்தா இன்னைக்கி இருக்க ட்ரெண்டுக்கு  நீங்க தான் கனவு கன்னி… உங்க வேல்யூ உங்களுக்கு   தெரியலையா, இல்லை யாரும் சொல்லலியா?? போயும் போயும் பாடிகார்ட்டா வெயிலையும் மழையிலையும் நனைஞ்சு உங்க அழக ஏன் கெடுத்துக்கிறீங்க??? வேற நல்ல ப்ரோஃபஷன சூஸ் பண்ணிருக்க கூடாதா???”அவள் அழகில் அக்கறை படுவது போல அவளுடன் கடலைப் போட ஆரம்பித்தான் .

அவன் நின்ற தோரணையில் சங்கோஜம் கொண்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாது அவனுக்கு பதில் தந்தாள் தன்யா

“எனக்கு போலீஸ் ஆகணும்ன்றது தான் என் லட்சியம். மக்கள் உயிரை காப்பாத்தணும் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டு பட்டு தவறுகள் நடக்கறத குறைக்கனும் பெண்கள்ல பாதுகாக்கணும்னு போலீஸ் ஆனா இதெல்லாம் செய்யணும் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் என்னால முடியல. மனசுடைஞ்சு போனேன். வாழவே தகுதி இல்லன்னு நினைச்சேன்.  மேம் தான் என் கிட்ட  பாடிகார்டா ஜாயின் பண்ணிக்கிறீயானு கேட்டாங்க நானும் சரினு ஜாயின் பண்ணிட்டேன். என்னோட பிக்கஸ்ட் இன்ஸ்பிரேஷன் ஜெஸி மேம். வாழ்க்கையே வேணாம் வெறுத்த எனக்கு வாழ கத்துக் கொடுத்தவங்க தான் அவங்க. அவங்க கிட்ட நான் நிறைய கத்துக் கிட்டேன். ஒருத்தரோட உயிர காப்பாத்தற அளவுக்கு தைரியமான  பொண்ணா இருக்க காரணம் ஜெஸி மேம் தான்”என்று அவள் புகழ் பாட, 

அதில் காதை குடைந்தவன் ‘ப்பா !! கொடுத்த சம்பளத்துக்கு மேல கூவுறாளே !! எல்லாம் அவளோட ட்ராயினிங்கா தான் இருக்கும்.  இருடி உன் வாயடைக்கிறேன். அவளையா புகழற !! இரு இதுக்கு எப்படி பதில் சொல்றனு பார்க்கிறேன்’ என தனக்குள்ளே சொல்லில் கொண்டவன்,

“சரி !! நான் ஒரு குவஸ்டிங் கேட்குறேன் பதில் சொல்வீங்களா???” என நக்கலாக கேட்டான். அவன் எடக்கு மடக்காகக் கேட்க போகிறான் என்று அறியாமல் ஆர்வமாகக் கேட்டாள். 

“கேளுங்க…”என்றாள்.

“ஒருத்தன் உங்களை அட்டாக் பண்ண வர்றான் அதுவும் உங்க மார்ப தொட வர்றான் வச்சிப்போமே நீங்க உங்க மார்ப மறைப்பீங்களா ??? இல்ல எதிர்த்து சண்டைப் போடுவீங்களா?? இல்ல உங்க மார்ப தொட்டுட்டானே வச்சிப்போம் கூனிக் குறுகிப் போவீங்களா? எதிர்த்து சண்டைப் போடுவீங்களா???”எனச் சாதாரணமாக கேட்பது போல வக்கிரத்தை உள்ளே வைத்துக் கேட்டான்.

 தன்யாவோ தான் முகத்தை சுழித்தவள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்க,

காதில் விழுந்த அக்கேள்விக்குப் பதில் சொல்ல, அசட்டையாக அவன் முன்னே வந்து நின்ற ஜெஸி”என்ன தன்யா பதில் சொல்லி வேண்டியது தானே ! நான் என்ன சொல்லிக் கொடுத்தேன். பெண்ணோட மார்ப தொட வந்தாலோ மார்ப தொட்டுட்டாலோ பயப்படாம எதிர இருக்கறவனோட உயிர் நாடில உதைச்சு உயிர எடுக்கணும் சொல்லி தந்ததை மறந்துட்டீயா???” என்றதும் அவனுக்கு பக்கென்றானது. சட்டென கால்கள் இரண்டையும் குறுகிக் கொண்டான். 

இருவருக்கும் அவனைப் பார்க்கச் சிரிப்பு தான் வந்தது. வந்தச் சிரிப்பை மறைத்த வண்ணம், “மிஸ்டர் நைதுருவன், இன்னைக்கி எங்கயாவது நீங்க வெளிய போகணுமா?? “என்று கேட்க, அவனோ “இல்லை” என்று தலையை அசைத்து விட்டுச் ஓடியே போய் விட்டான். 

அவன் சென்றதும் தன்யா புறம் திரும்பியவள் “இந்த மாதிரி நாயெல்லாம் இன்னும் மோசமா’லாம் கேட்கும் , பேசும்.  அதுக்கு தயங்கியோ முகத்தது சுழித்தோ நம்ம வீக்கேன்ஸ் என்னனு காட்டிடக் கூடாது முகத்துக்கு நேரா, பதிலடி கொடுக்கணும் புரிஞ்சதா???” என்றாள்.

அவளும் தலையை ஆட்டி “புரிஞ்சது மேம்”என்றாள்.  இருவரும் உள்ளே சென்றனர். இரவு வரை வழக்கம் போல வீடே கதியென இருந்தான்.

அவளுக்கென ஒதுக்கப் பட்ட அறையில் அவள் இருந்தாள். இரவு வரை அவளுக்கு எந்த வேலையும் இல்லை.  சலிப்பாகச் சென்றது அந்த நாள். 

அவனும் அறையிலிருந்து அன்று முழுக்க அவளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பல  திட்டங்களைப் போட்டு கொண்டிருந்தான்.

இரவு அவள் கிளம்பும் நேரம் வர, வீரமதியிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப இருந்தவளை தடுத்தது அவனது குரல். 

“எங்க கிளம்பிட்டீங்க மிஸ் ஜெஸி??? நான் பார்ட்டி போகணும் வாங்க போலாம்”என்றபடி இறங்கி வந்தான்.

“பார்ட்டியா??  காலையில கேட்டதுக்கு நீங்க எதுவும் சொல்லலையே  இப்போ வந்த பார்ட்டிக்கு போகணும் சொல்றீங்க அதுவும் அன்டைம்ல???” 

“ஹலோ !!  நான் எந்த டைம்க்கு கூப்பிட்டாலும் நீங்க வரணும்…”என அவளை ஒரு மாதிரி பார்த்து இரு பொருள் படுவது போல சொன்னவன்”ஏன்னா நீங்க  எனக்கு பாடிகார்ட்.  ஏன் எதுக்கு கேக்க எனக்கு நீங்க பாஸ் இல்ல. சோ நான் பார்ட்டிக்கு போகணும் வர்றீங்களா?? இல்ல நான் மட்டும் போகட்டுமா??”எனக் கேட்டு தன் தாயைப் பார்க்க, ஜெஸியும் வீரமதியைத் தான் பார்த்தாள். பாவம் அவர் தான் யார் பக்கம் பேசுவதென்று தெரியாமல் குழம்பி நின்றார்

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்