Loading

காதல் மனசிலாயோ! 02

ஒரு பெண்ணின் முகம் அலங்காரத்தையும் கடந்து எப்பொழுது அழகாக காட்சியளிக்கும்…? மனம் மகிழ்ந்து உடல் சிலிர்த்து முகத்தில் பிரதிபலிக்கும் போது அழகு புலப்படும் அதற்கு  ஒப்பனை துணை மட்டுமே புரிந்துக் கொண்டு இருக்கும்.

ஆனால் இங்கு மீராவின் முகம் ஒப்பனை முடிந்து பளிச்சென்று இருந்தாலும், ஏனோ அழகு வெளிவர மறுத்தது, அது என்ன ஏனோ…?

காரணம் அனைவரும் அறிந்ததே! இன்னும் சற்று நேரத்தில் அவளை பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்ற வருத்தமே.

“மீரா!” என அழைத்தாள் ஜனனி.

“ம்ம்ம்!”

“திரும்பு இந்த பூவை வச்சுக்கோ”

“எதுக்கு மாமி இது எல்லாம் போதும், எனக்கு எதுமே புடிக்கலை”

“எனக்கும் தான் புடிக்கலை, படிக்குறப் பொண்ணை இப்படி வீம்பாக கல்யாணப் பந்தத்தில் தள்ளி விடுறது, என்ன செய்றது, யார் கிட்ட சொல்ல முடியும்” என புலம்பினாள் அவளும், சற்று தூரத்தில் அமர்ந்திருந்த பைரவி காதில் விழுமாறு.

“இப்ப என்ன கிணத்திலா தள்ளப் போறோம், கல்யாணம் தானே பண்ணி வைக்குறோம், எனக்கு பதினெட்டிலே முடிஞ்சுட்டு, அந்த மாதிரி இந்த குட்டிகளுக்கும் பண்ணி விட்டு இருந்தால் இன்னேரம் ஒருத்தி ஓடியிருக்க மாட்டாள்” என கண்ணீர் வழிய கூறினார் பைரவி.

“அத்தாச்சி! அவ  ஓடிப்போயிட்டானு இவளை பலியாடு மாதிரி நடத்துறீங்களே இது நல்லாவா இருக்கு”
என குரல் உயர்த்திக் கேட்டாள் ஜனனி.

“என்ன சத்தம் இங்க…?” என அசோக் நுழைந்ததும், ஜனனி கொஞ்சம் அடங்கினாள் யாரோ என்று, பிறகு கணவனை கண்டதும்”நீங்க தானா..?” என விட்ட இடத்தில் தொடங்கினாள்.

“சரி! நடந்ததை நானும் புரிஞ்சுக்குறேன் அதுக்காக இப்படி அவசரமா கல்யாணம் பண்ணனுமா.? கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாமுனு நீங்க தானே சித்தப்பா கிட்ட பேசனும், அவர் கிட்ட நாங்க  எல்லாம் பேச முடியுமா..?” என்றாள்.

அசோக்விற்கு என்னவென்று சொல்லாமலே புரிந்தமையால் அமைதியாக நின்றான்.

மீரா, மாமி தனக்காக பேசுற அன்பில் ஜனனியையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“இங்க பாரு ஜனனி, உன் சித்தப்பா என் கிட்ட மாப்பிள்ளை பாக்கவானு அனுமதி கேக்கலை, இல்ல பண்ணுவோமானு கலந்துப் பேசலை, மாப்பிள்ளை வீட்டில் இருந்து பொண்ணு பாக்க வராங்கனு உங்க முன்னாடி கூப்புட்டு தானே சேதியா சொன்னாரு, இதுல நான் போய் எங்குட்டு யோசிங்கனு சொல்ல முடியும், அதுவும்  இப்ப இருக்க நிலையில், இது தான் இவளோட தலையெழுத்துனு போக வேண்டியது தான்” என்றார் அவர் புடவையின் முந்தானையால் வாயினை அடைத்தப்படி.

“இப்ப எதுக்கு நீ அழுதுட்டு இருக்க அக்கா, அமைதியா இரு” என அதட்டினான் அசோக்.

“மாமா! நீங்களாச்சும் அப்பா கிட்ட பேசுங்களே ப்ளீஸ்” என மீரா கெஞ்சினாள்.

“நான் காலேஜ் போக பர்மிசன் கேட்க போனதுக்கு தான் இந்த அணுக்குண்டையே தூக்கிப் போட்டார் மாமா, இப்ப எதாச்சும் கேட்டா வேற எதாவது முடிவு எடுத்து அடுத்த முகூர்த்ததிலே கல்யாணமுனு சொல்லிடுவார்டா, என்ன பண்றது.?” என மீராவின் தலையை தடவி ஆறுதல் கூறினான்.

“எனக்கு கல்யாணம் பத்தி எல்லாம் ஐடியாவே இல்லை மாமா, இப்படி திடீருனு கல்யாணம் பண்ணி வச்சா என் லைஃப் அவ்ளோ தானா..? என் படிப்பு என்ன ஆகுறது…? மாமி! உங்களுக்கே தெரியுமுல நான் எவ்வளவு ஸ்கோர் வச்சு இருக்கேனு, அது எல்லாம்  வேஸ்ட்டா” என கட்டிலில் அமர்ந்து குமுறி அழுதாள்.

“மீரா! மீரா! அழுகையை நிறுத்து முதலில், சொல்றேன்ல கேளு” என ஜனனி சமாதானம் செய்தாலும், மீரா நிறுத்தவில்லை.

“ஏங்க! நீங்க எதும் பண்ண முடியாதா..? சித்தப்பா திட்டினாலும் பரவாயில்லை ஒரு தடவைப் பேசி பாருங்களே!” என கணவனை முறைத்தாள்.

மீராவும், ஜனனியும் நெருக்கமான தோழிகள் போன்று பழக கூடியவர்கள், ஜனனி திருமணம் ஆகி வந்த புதிதில் மீரா தான் வால் மாதிரி சுற்றி வருவாள் மாமி என்று, ரேகா பாசமாக பழகினாலும் முசுடு குணம் கொண்டவள்,  பட்டென்று பேசி மனதைக் காயப்படுத்திடுவாள், அதனால் மீரா மேல் ஜனனிக்கு பாசம் அதிகம்.

“நான் ஒன்னும் பண்ண முடியாது ஜனனி, மாமா பத்தி தெரிஞ்சே பேசுற, அதுவும் இப்ப அப்படியே நெருப்பு குழம்பாக இருக்கார் போய் பேசினால் போட்டு பொசிக்கி எடுத்துட்டு தான் அடுத்த வேலை, எல்லாம் அந்த ரேகாவால் வந்தது, அரசியல், ஆள் பலம் இருந்தும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை”

“இப்ப அவளை தேடி என்ன பண்ணப் போறீங்க..? ஓடிப்போனதை மாத்த முடியுமா.? அவளை கூட்டிட்டு வந்து வேற ஒருத்தனுக்கு கட்டி வச்சு அவன் வாழ்க்கையும் கெடுக்கவா..? போனவ அப்படியே போகட்டும்” என ஜனனி கோபமாக கூறினாள்.

“மாமா இருக்க கோபத்துக்கு அவளை கூட்டிட்டு வந்து கொன்னுடுவார் போல நீ வேற, அவ கிடைக்காமல் இருப்பதே மேல்” என்றான் மெல்ல அசோக்.

“என்னங்க சொல்றீங்க…?”

“ம்ம்ம்! அவருக்கு ஃபோன் மேல ஃபோன் முடியலை, பொண்ணை ஒழுங்கா வளர்க்கலைனு கேலிப் பேசுறானுங்க, அதுவும் அரசியலில் இவருக்கு கும்பிடு போட்டவன் எல்லாம் நக்கல் அடிக்குறானா, எப்டி ஏத்துக்க முடியும், அதான் விடாமல் தேடிட்டு இருக்கார்”

“ஏன் நீங்க தேடப் போகலையா.?”

“ம்ம்ம்! தேடிட்டு தான் இருக்கேன், என்ன செய்றது அக்கா மகள், மொத மொத பொறந்தவ, நான் தூக்கி கொஞ்சினப் பொண்ணு எங்கயோ நல்லா இருந்து தொலையட்டும்” என்றான் அசோக்.

பைரவி கண்களில் நீர் அருவியாக கொட்டியது.

“அது எல்லாம் சரிங்க, அவ நல்லா இருக்கட்டும் அவளால் மீரா வாழ்க்கை அழியனுமா..?”

“ஹேய்! நான் எப்போடி அப்படி சொன்னேன், ரெண்டும் எனக்கு ஒன்னு தான், நல்ல இடம் தான் மாப்பிள்ளை வீடு, பரம்பரை வசதி”

“ம்ம்ம்! இவ படிப்பை நிறுத்திட்டு அதுவும் இப்படி பத்தொன்பது ஆரம்பிச்ச வயசிலே பாவம் இல்லையா..? என்ன வசதி இருந்து என்ன புண்ணியம், படிப்பு வருமா..?” என கோபமாக கேட்டாள் ஜனனி.

“ஜனனி! என்ன பண்ண சொல்ற.? நம்ம ஒன்னும் பண்ண முடியாது, வேணுனா கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும்”

அதுவரை அனைத்தையும் கேட்டு அழுத்துட்டு இருந்த மீரா உடனே நிமிர்ந்து”மாமா! அது முடியுமா..?” என்றாள் ஆர்வமாக.

“ம்ம்ம்! உன்னை பொண்ணுப் பார்க்க வர மாப்பிள்ளை மனசு வச்சா முடியும் தானே”

“அப்ப அந்த மாப்பிள்ளை கிட்ட எனக்காக பேசுங்க மாமா”

“நானா…?”

“அப்புறம் வேற யாரு பேச முடியுமுங்க”

“ஜனனி! மாமாக்கு தெரிஞ்சா என்னைய முறைச்சே கொன்னுடுவார், மீரா  நீ வேணுனா பேசலாம்”

“நானா…? எப்படி மாமா..?”

“மாப்பிள்ளையும், பொண்ணும் பேச விடுவாங்கள, அப்ப நீ பர்மிசன் வாங்கிடு”

“தனியா பேச விடலைனா..?” எனக்  கேட்டாள் ஜனனி.

“அதை வேணா நான் சொல்றேன் எல்லாரு முன்னாடியும், பொண்ணு, மாப்பிள்ளை கொஞ்சம் தனியா பேசட்டுமுனு”

“ஏங்க முதலில் மாப்பிள்ளையை மீராக்கு பிடிக்கனுமே”

“மாமி! என்னைய படிக்க அலோவ் பண்ணினால் நான் கல்யாணம் பண்ணிக்குறேன் அவரையே” என்றாள் முகம் மலர.

“பாருடா! இதுவரை இல்லாத சிரிப்பு வந்துட்டு, எப்படியோ நீ சந்தோஷமா இருந்தால் போதுமுடா” என ஜனனி பாசமாக கைப்பிடித்து அழுத்தினாள்.

பைரவி அமைதியாக இருந்தார், ஏதோ நல்லது நடந்தால் சரியென்று.
……………

மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரக்காத்திருந்தார்கள் வீரனார் குடும்பம்.

“என்ன மாமா இவ்வளவு நேரமாகுது…?” என கொஞ்சம் அலுத்துக் கேட்டான் அசோக்.

“ம்ம்ம்! விருமா சாதரண ஆளில்லை அசோக், நம்ம எல்லாம் புதுப்பணக்காரர், அரசியலில் நெளிவு சுழிவோடு நம்ம பழம் தின்னுக் கொட்டைப் போட்டாலும், இவர் எல்லாம் சாதரணமாக கொட்டைகள் மேல் நடப்பவர், பயமே கிடையாது, பரம்பரை பணத்திமிரு ரொம்பவே கூடுதல், நம்ம மாதிரி ஆட்களை எல்லாம் கடைக்கண் பார்வையாலே ஒதுக்குவார், வளைஞ்சு கொடுக்காத மனுசன் இப்ப பொண்ணு எடுக்க வராருனா சும்மாவா..? எல்லாம் இங்க ஒருத்தி ஓடின மாதிரி அங்க ஒன்னு..”

“யாரு மாமா…?”

“அவரு பொண்ணு தான், ஆனால் அது வேற விதமான கதை, நமக்கு எதுக்கு அது. நம்மளும்  ஒரு பொண்ணு, ஒரு பையன் சொல்லியாச்சு, அங்கையுமே ரெண்டு பையன்கள் மட்டும் தானு சொல்லியாச்சு, மாப்பிள்ளை மூத்தவர், அப்படி தானே” என அருகில் இருந்தவரிடம் கேட்டார் வீரனார்.

“ஆமாங்கய்யா!” என மண்டையை ஆட்டினார் காலையில் விருமா அமர்ந்திருந்தவர்.

‘அய்யோ! மாப்பிள்ளை காலையிலே போதையில் இருந்தாரே, இப்ப எப்படி வரப் போறாரோ..?’ என நொந்தவர்,
‘ரெண்டுப் பக்கமும் நல்ல காசு கிடைக்குமுனு பேச ஆரம்பிச்சோம்  காசை விட இப்ப உயிர் மேல் பயம் வருதே’ என இருப்பக்கமும் பொதுவானவர் புலம்பினார் மனதில்.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது, கார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அனைவரும் இறங்கி வர, வீரனார், அசோக் சென்று வரவேற்றனர்.

விருமா, அவரின் மனைவி பிரேமா, இளைய பையன் சுந்தராஜன் என்கின்ற சுந்தர்  மற்றும் உறவினர்கள் நுழைந்தனர்.

“ஐயா! மாப்பிள்ளை தம்பி வரலையா…?” என அவசரமாக அந்த மனிதர் ஓடிப்போய் விருமாவிடம் கேட்டார் மெல்ல.

“ம்ம்ம்! வரான்” என முன்னே நடந்தார்.

‘அடக்கடவுளே! எந்த கோலத்தில் வராரோ’ என நிமிர்ந்தவர் மனதை மகிழ்விக்குமாறு வந்தான் சௌந்தர்.

வெள்ளை வேஷ்டி, மடக்கி விடப்பட்ட வெள்ளை சட்டை, கையில் வாட்ச், என மாப்பிள்ளை அம்சத்தோடு அழகனாக காட்சியளித்தான் அவருக்கு.

“தம்பி! வாங்க, வாங்க” என பற்களைக் காட்டி சிரித்து வரவேற்றார்.

அவனோ அவரை பெரிதாக கண்டுக்கொள்ளாமல் நுழைந்தான்.

வீரனார், விருமா பொதுவான முறையில் பேசிக் கொண்டனர் சற்று அடக்கி வாசித்தே, இருப்பக்கமும் மறந்து மருந்துக்கு கூட  முடிந்த விசயங்களை பேசிக் கொள்ளவில்லை.

“பொண்ணு வரச்சொல்லுங்க ஐயா” என்றார் அந்த இடைமனிதர்.

வீரனார் அசோக்கை பார்க்க, அவன் உள்ளே சென்று ஜனனியிடம் கூறி வந்தான்.

மீராவை அழைத்துக் கொண்டு ஜனனி வந்தாள்.

மீரா அனைவருக்கும் பொதுவான வணக்கத்தை வைத்து ஓரமாக நின்றாள்.

பிரேமா மீராவை அழைத்து அருகில் அமர வைத்து”நல்லா இருக்கீயாம்மா..?” எனக் கேட்கவும்,

“ம்ம்ம்!” என தலையை ஆட்டினாள்.

மற்றவர்கள் பேசிக் கொண்டு இருக்க, அசோக் சமயம் பார்த்தான் இருவரையும் பேச அனுப்புவதற்கு.

“அப்புறம் என்ன எல்லாருக்கும் புடிச்சா நிச்சயத்தைப் பற்றி பேசலாமே” என்றார் ஒருவர்.

அசோக் இது தான் சமயம் என்று, “அது…” என ஆரம்பிக்கப் போக,

சௌந்தர்”நான் பொண்ணுக் கிட்ட தனியா பேசனும்..?” என்றான்.

வீரனார் கேள்வியாகப் பார்க்க, அசோக்
மனமோ’ஹப்பாடா!’ என்றிருந்தது.

அதுவரை மாப்பிள்ளை யார் என்றே பார்க்காத மீரா, குரல் வந்த திசையைப் பார்த்தாள்.

விருமா”அதுக்கு என்ன போய் பேசிட்டு வா” என்றார் மகனிடம்.

வீரனார் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் அசோக்கிடம் கண் காட்டினார் அழைத்துச் செல் என்று.

“மீரா! வா” என அசோக் அழைக்கவும், எழுந்து சென்றாள்.

சௌந்தர் அவர்கள் பின்னே சென்றான்.

மாடியில் இருந்த பால்கனியை காட்டிவிட்டு அசோக் திரும்பி விட்டான்.

இருவரும் அமைதியாக நிற்க, சௌந்தர்
“உனக்கு இந்த கல்யாணத்தில், என்னை கல்யாணம் செய்வதில் சம்மதமா.?” எனக் கேட்டான் நேரடியாக முதல் பேச்சாக.

“ம்ம்ம்! ஆனா நானும் ஒன்னு கேக்கனும்..?” என்றாள் மீரா.

“என்ன.?”

“நான் இன்ஞ்சினியரிங் செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்கேன், அப்பா திடீருனு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டார், எனக்கு கல்யாணத்திற்கு பிறகும் கோர்ஸ் முடிக்க பர்மிசன் தரீங்களா..?” எனக் கேட்டாள், ஏதோ முன்னாடியே பழகியவன் போல், கொஞ்சம்  உரிமையாக.

அவள் பேசியதைக் கேட்டவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை, வேகமாக அனைவரும் இருக்குமிடத்திற்கு சென்று விட்டான்.

“என்னப்பா பேசியாச்சா…? பொண்ணுக்கு பொட்டு வச்சுடலாமா..?” எனக் கேட்டார் விருமா.

அவன் பதில் சொல்லாமல் செல்லவும், பின்னாடியே வந்த மீரா புரியாமல் ஜனனி அருகே சென்று நின்றாள்.

“ஒரு நிமிசம் அப்பா!” என்றவன் வீரனாரிடம்”உங்க பொண்ணுக்கு படிக்கனுமுனு ஆசை இருக்கு, அந்த ஆசையை நிறைவேத்துறது உங்க விருப்பம், நான் அதை கெடுக்க மாட்டேன், நம்ம போகலாமுப்பா” என்றான்.

அதை கேட்டதும் வீரனார் கண்கள் சிவந்து, மகளை திரும்பிப் பார்த்தார்.

அவளோ ஜனனி கையைப் பயத்தில் பிடித்திருந்தாள்.

“அது எல்லாம் ஒரு ஆசையும் இல்லை தம்பி, படிச்சது போதும் இனி படிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை, நீங்க பொண்ணுக்கு பொட்டு வச்சா நான் உங்களை சம்பந்தினு கூப்புடுவேன்” என்றார் வீரனார் விருமாவிடம்.

விருமா பிரேமாவை பார்த்தார், அவர் சம்மதம் கூறினார்.

அடுத்து மகனைப் பார்க்க, சௌந்தர்,
“மீரா! உனக்கு படிக்க தான் விருப்பமுனா உன்  அப்பா கிட்ட சொல்லிடு, இல்லை என்னைய கல்யாணம் பண்ண விருப்பமுனா முழு மனசா ஒத்துக்கனும், நாளைக்கு என் வீட்டிற்கு வந்து என் அப்பாக்காக பயந்து வந்தேன் கல்யாண வாழ்க்கையில் விருப்பமில்லை, என் கூட வாழ சிரமமா இருக்குனு சொன்னால் நான் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்,
உன் குடும்பத்து மேல் மொத்தமா கேஸ் போட்டு உன்னையும் சேர்த்து ஜெயிலுக்கு அனுப்பிடுவேன், விருப்பமுனா ஓகே சொல்லு, இல்லையா நோ சொல்லு, இது ஒன்னும் கட்டாய கல்யாணம் இல்லை, எனக்கும் அந்த அவசியமில்லை உன்னை எல்லாம் கட்டாய கல்யாணம் பண்ணனுமுனு” என முடித்தவனை, அனைவருமே மிரண்டுப் பார்த்தனர்.

அசோக்”மாமா! என்ன இது எல்லாம்..?” எனக் கேட்கவும்,

வீரனார் மகளை பார்த்தார்.

மீரா மனதில் ஓடியது இது தான்…

‘இவரை வேணானு சொன்னால் மட்டும் அப்பா படிக்க அனுப்ப போறார என்ன..? எப்படியும் அடுத்த மாப்பிள்ளை, அந்த மாப்பிள்ளை என்னைய படிக்க வைப்பாருனு என்ன உத்தரவாதம்…? அப்படியே படிக்க வைக்குறேனு சொல்லி அப்புறம் வீட்டிலே போட்டுவிட்டால் நான் என்ன கேஸா போட முடியும் என்னைய படிக்க வைக்குறேனு ஏமாத்திட்டாருனு, அதுக்கு இந்த மாப்பிள்ளையே பராவாயில்லை. படிக்க வைக்க முடியாதுனு சொல்லிட்டார், அதை தாண்டி கல்யாணம் பண்ணினா பொண்டாட்டியா வாழ சொல்றார் அவ்வளவு தானே, என்னைய கட்டாயப்படுத்தலையே, இப்ப என்ன செய்றது..? இந்த வீட்டில் அடுத்த மாப்பிள்ளையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது நரகம் தான். அதுக்கு..?’ என சௌந்தரை பார்த்தவள்,

“எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க முழுச்சம்மதம் தான்” என்றாள் தெளிவாக.

வீரனார் முகம் மலர்ந்தது, அசோக், ஜனனி, பைரவி மீராவையே பார்த்தனர்.

சேரா சௌந்தரை ஏதோ ஹீரோ போல் கவனித்தான், அவன் வயது அப்படி.

“அப்பா! எனக்கும் ஓகே தான்” என்ற மகனிடம், “சரிப்பா!” என மனைவியை கண் காட்டினார், பெண்ணிற்கு குங்குமம் வை என்று.

அவரும் எழுந்து வந்து மீராவிற்கு குங்குமம், பூ வைத்துச் சென்றார்.

காதல் மனசிலாயோ!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்