
காதலொன்று கண்டேன்!
தேடல் 39
வந்து விட்டான்…
வந்து விட்டான்…
என அவள் மனம் கூக்ககுரலிட அந்த மகிழ்வு,அவள் விழிகளில் அப்பட்டமாய் படம் விரிக்க,நேசத்தின் சின்னங்கள் உள்ளுக்குள் வியாபித்து நொடி நேர நிகழ்வை பூகம்பமாய் மாற்றி,நெகிழ்வின் பிரளயத்தை வெடிக்கச் செய்தது.
விழிகளில் கட்டிய கண்ணீருடன்,அவனின் அருகே சென்றாள்.பொய்யாகப் போகும் மகிழ்வில் முகம் விகசித்தது. அவளின் ஒவ்வொரு செயலிலும் தனக்கான காதலைக் கண்டவனின்,இதயம் சிதறிப் போக அவளுக்காகவே அனைத்தையும் மறைத்துக் கொண்டான்,பையன்.
அவன் சொன்னால்,அவனுடன் எப்படியும் கை கோர்த்து அவள் வாழ்வையும் பாழாக்கிக் கொள்வாள் என்று அவனுக்கு நன்கு தெரியும்.அது தானே இந்த நாடகம்.
சில நேசங்கள் அப்படித் தான்.அவறுக்கு ஒரு போதும் தன்னைப் பற்றி யோசிக்கத் தெரியாது.அவளுக்கான அவனின் நேசத்தைப் போல,சில நேசங்கள் அப்படித் தான்.
“நான் எதுக்கு வந்தேன்னா.. இன்னைக்கு உனக்கு கல்யாணம் அதான் சரியா.. சத்தியமா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. அத நம்பு ஃபர்ஸ்டு.. இப்போ போய் அவன கட்டிக்கோ..நீ கூப்பிட்டதுக்காக நான் ஒன்னும் வர்ல..நீ கூப்பிட்டு நான் வர்ற அளவு நீ எனக்கு முக்கியமான ஆளும் இல்ல..
“நான் வரலன்னா நீ கண்டிப்பா முழு மனசா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டன்னு தோணுச்சு..அன்னிக்கிம் உன் ஃப்ரெண்டு சொன்னா..
என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை பாழாக கூடாதுன்னு நான் நினைக்கிறேன்..நீ கல்யாணம் பண்ணாம என்னையும் சுத்தல்ல விடாம தயவு செஞ்சு தாலியை வாங்கிக்கோ.. என்னயும்,என் பொண்டாட்டி பிள்ளைகள் கூட நிம்மதியா வாழ விடு.. என் பொண்டாட்டி கூட என் தலய அரிச்சுக்கிட்டே இருக்கா உன்ன பத்தி பேசி பேசி உன்னால வாழ்க்கை பாழாகுறதா சொல்லி..”
” இதுதான் நம்ம லாஸ்ட்டா மீட் பண்ண போறதா இருக்கும்..” என்று கூறுகையிலேயே, அவன் மனம் சுருக்கின்றது.உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு என மனம் நினைத்தாலும்,அப்படி இருக்க வேண்டும் என்றே வேண்டிக் கொண்டது காதல் கொண்ட நெஞ்சம்.
“அப்றம் எந்த காரணத்துக்காகவும் உன்ன மீட் பண்ண வேண்டிய தேவ எனக்கு வராது…அது மாதிரி என்னை மீட் பண்ண வேண்டி வந்தாலும் தயவு செஞ்சு என்ன பாக்க வராத..நீ யாரோ நா யாரோ உனக்கு கல்யாணமாகப் போகுது..எனக்கு கல்யாணமாகிருச்சு.. நமக்குள்ள எந்த சம்பந்தமும் இல்லை தப்பித்தவறி ஏதாச்சும் உன் மனசுல என்னால சலனம் உண்டாகி இருந்தா தயவு செய்து மன்னிச்சோக்கோ தாயே.. எனவே ஹேப்பி மேரீட் லைஃப்”
உடைய முயன்ற மனதை மொத்தமாய் அடக்கி,
அவளிடம் பாராமுகம் காட்டி விட்டு வெளியேறிட,அவனின் முதுகை வெறித்தது, அவளின் பார்வை.
அவள் விழிகளில் கண்ணீர்.நூலிழை நம்பிக்கையையும் மொத்தமாய் உடைத்துச் சென்று விட,கலங்கிய விழிகளை சிமிட்டியவளோ,மாலையை சரி செய்து கொள்ள அவ்விடம் வந்தான்,டாக்டர்.
“கெட் ரெடி டூ பீ மை வைஃப்..”அழுத்தமான வார்த்தைகளில் அவள் மீதான உரிமை படர்ந்து விரிந்தது.
மனமுருக சாமி சன்னிதியில் வேண்டிக் கொண்ட மருதநாயகத்துக்கு சில விடயங்கள் தெரியும்.அந்த இரகசியங்களை தனக்குள் மட்டுமே புதைத்தி விரும்பினார்,அவர்.அவருடன் அது அடங்கிடட்டும்.
பையன் தான்,பரிமளாவுக்கும் அவரின் முதல் கணவருக்குமான பிள்ளை என்றோ,அது தெரிந்து தான் அவனை தன் மகளுக்கு கட்டிக் கொடுக்க விரும்பினார் என்றோ,அவர் யாரிடமும் தெரிவிக்கப் போவதில்லை.
கண்டவுடன் அடையாளம் தெரிந்திட,பையன் தாயினதோ தந்தையினதோ சாயலைக் கொண்டிராதது நன்மைக்கே என எண்ணிக் கொண்டிருந்தார்.அதனால் தானே,இரு தடவை கண்டும் கூட பரிமளா அவனை அடையாளம் கண்டிடாது இருந்தது.
அவனின் குடும்பம் பற்றிய விபரத்தை கூட,தனக்குள் மட்டுமே வைத்துக் கொண்டது,பரிமளா கலகம் செய்து விடுவாரோ என்கின்ற பயத்தில் தான்.திருமணம் வரை அதை இரகசியமாய் வைத்திருக்க நினைத்தவருக்கு அதற்கு தேவையில்லாமலே போயிற்று.
கோயிலை விட்டு வெளியேறுகையில் பரிமளாவைக் கண்ட பையனின் இதழ்களில் கசந்த முறுவல்.கூடவே சித்தார்த்தும் வர,அன்றைய பேரூந்து நினைவு நிழலாய்.
தனக்கு உரித்தவர்களை எல்லாம்,அவனுக்கு விட்டுக் கொடுப்பதே விதி போலும்.ஏனோ வலித்தது.
இங்கோ,
பையனைத் தேடி அவனின் வீட்டுக்கு வந்தான்,தோழன். நேற்று இரவு ஏழு மணி போல் தாயாரை மருத்துவமனையில் அனுமதித்திருக்க, அதற்கு அவன் செல்ல வேண்டிய கட்டாயம்.
பையனை தனியாக விட்டுச் செல்ல மனம் இடம் கொடுக்கா விடினும்,வேறு வழியும் இருக்கவில்லை.
பையனின் பிரத்தியே காரியதரிசியை அழைத்து,பையனுடன் சென்று தங்கச் சொல்லிவிட்டு தான் கிளம்பிச் சென்றதே.
வீடு பூட்டப்டிருக்க தட்டிப் பார்த்தான்.சத்தமே இல்லை.வெளியே சிட் அவுட்டில் மேசையும் அதன்மேல் பையனின் அலைபேசியும் இருக்க,எதை எடுத்தவனின் விழிகள் இடுங்கின.
லாக் உடைத்து வைக்கப்பட்டிருக்க யோசனையுடன் எடுத்துப் பார்த்தான்,தோழன்.
ஏனோ விரல்களில் நடுக்கம்.
“சத்யா நீ சொன்னது சரிதான்..அப்பா இசை நீ இல்லனா சத்தியமா நானும் இல்லை.. எனக்கொரு வகையில் நிம்மதி தான் அப்பா எனக்கு முன்னாடி போய் சேர்ந்தது.. இல்லன்னா நான் போனதுக்கு அப்புறம் அவர் எப்படி இருப்பார் என்று யோசிச்சு யோசிச்சு எனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கும்..முன்ன எல்லாம் அப்டி தான்..”
“என்னால அவரில்லாம ஒரு நிமிஷம் கூட யோசிச்சு பார்க்க முடியல இப்போ கூட..அந்த வலி அவருக்கு இல்லன்னு சந்தோஷம் மட்டும்தான் பட முடியுது..அதுவும் இல்லாம சீக்கிரம் அவர் கிட்ட நானும் போயிருவேன் தானே அப்புறம் எதுக்கு நான் பீல் பண்றது..”
” எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் சத்யா.. என்னோட கூட பொறந்த அண்ணன் தம்பி மாதிரி.. உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.. எனக்கு உன்ன பத்தி தெரிஞ்சத விட உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும்..”
” நான் உன்கிட்ட கோபப்பட்டு கத்தி இருக்கேன்.. சண்டை போட்டு இருக்கேன்.. எல்லாம் உன் மேல இருக்கிற உரிமைனால தான்..அது உன்ன ஹர்ட் பண்ணி இருக்குமா தெரியல.. அப்ப எல்லாம் சாரி கேக்கறதுக்கு தோணல.. ஆனா இப்ப தோணுது ரொம்ப சாரி மச்சான்..எப்பவுமே கடவுள் எனக்கு எல்லாத்தையும் தரலனாலும் தர்ரது எல்லாமே பொக்கிஷம்தான்.. அப்பா அடுத்தது நீ.. அதுக்கப்புறம் இசை.. மூணு பேருமே யாராலும் ரிப்ளை பண்ண முடியாத இடத்தை என் வாழ்க்கையில கொடுத்தவங்க”
“இதுக்கப்புறம் நாம மீட் பண்ணுவோமா என்னன்னு தெரியாது.. நான் இங்க இருந்தா என்ன பத்தி யோசிச்சு உன் வாழ்க்கைய பார்க்காமலே இருப்ப.. கவலைப்படாத தற்கொலை செய்யவெல்லாம் மாட்டேன் நா”
“இருக்கிறவரை எல்லாத்தையும் நினைச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு போய்ருவேன்.. சப்போஸ் நான் செத்துட்டேனு ஏதாச்சும் தகவல் வந்தா என்ன கண்டிப்பா வந்து பாரு.. நான் தான் சொல்ல சொல்லி இருப்பேன்.. என்னோட சொத்து எல்லாத்தையும் திருப்பி கொடுத்துடு தந்தவங்க கிட்டவே.. அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் வேணாம்..”
“இது கடவுள் எனக்கு விதிச்ச வாழ்க்க..என்னோட விதி இது தான்..யாரலயும் அத மாத்த முடியாது..அத நெனச்சி நீ ஃபீல் பண்ணாத..என்ன ஒன்னு தனியா இருக்கும்..வீட்டுக்கு போனா வீடு இருட்டா இருக்கும்..சத்தமே இருக்காது..போகப் போற சுடுகாட்டுக்கு இப்போவே ப்ராக்டிஸ் எடுத்துக்குறேன்னு தேத்திப்பேன்டா..சாவு வாழ்க்க அவ்ளோ தான் மச்சி..எதுவும் நம்ம கைல இல்ல..”
“நாளைக்கு உனக்கு ஒரு பையன் பொறந்தா கண்டிப்பா என் பேர வை.. எப்படியாச்சும் உன் பக்கத்துல நான் இருக்குற மாதிரி நினைச்சுக்கோ.. என்ன விட நீ ரொம்ப கஷ்டப்படுவன்னு நினைக்கிறேன்.. ஆனாலும் சாரி மச்சான் இதை விட்டா எனக்கு வேற வழியும் தெரியல.. எப்பவும் நீதான் என் பெஸ்ட் பிரண்டு அது என்ன நடந்தாலும் மாத்த முடியாதது.. எப்பயாச்சும் என்ன பத்தி ஞாபகம் வந்ததா கவல எல்லாம் படாத.. எங்கிருந்தாலும் நான் சந்தோஷமா தான் இருப்பேன்.. உனக்காக வேண்டிக்கறேன்.. இதுக்கு அப்புறம் என்ன தேடி உன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக்காத”
“நீ கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு தான் நான் போய் இருக்கேன்.. அதுதான் இந்த போன கூட இங்க விட்டு போறேன்..புரியுது தானே உனக்கு..இதுக்கு அப்புறம் எதுவும் இல்லை கல்யாணம் பண்ணி புள்ள குட்டி ஓட சந்தோஷமா வாழு” என்க,தோழனின் கன்னத்தில் கண்ணீர்.
அப்படியே அவனுக்கு கூற வேண்டியதை தட்டச்சு செய்து வைத்திருக்க,ஆத்திரம் அடங்க மறுத்தது.தலையில் கை வைத்துக் கொண்டு அவ்விடத்தில் அமர்ந்து விட்டான்,நிலைகுழைந்து.
கோயிலின் வெளியே நின்று இருந்தால் வாத்தியங்கள் முழங்கும் சத்தம் தெளிவாய் கேட்டது. அவனுக்கோ,அவள் இன்னொருத்தனுக்கு சொந்தமாகிவிட்டாள் என்கின்ற எண்ணமே மனதை துண்டாக்கிட,இதழ் குவித்து ஊதிக் கொண்டான்.
விழிகளில் தன்னால் நீர் சேர்ந்திட,அதை சிமிட்டி அடக்கிக் கொண்டு நடந்தான்.
ஆனாலும் அவன் செய்தது தானே.அதில் என்ன மாற்றம் கொண்டு வந்திட முடியும் இப்போது..?
அவனுக்கென்று இருந்தவர்கள் எல்லோருய் அவனை விட்டு விட்டு வெகு தூரம் சென்று விட்டார்கள்.அவனே விலகி வந்து விட்டான்.இனி அவனுக்கென்று யாரும் இருக்கப் போவதுமில்லை.எ
அவனும் யாரையும் தேட போவதுமில்லை.
அவனையும் யாரும் தேடப்போவதுமில்லை. அவனின் மரணச் செய்து கொடுத்த தோழனே தவிர யாரையும் வந்தடைய போவதுமில்லை.வந்தடைந்தாலும்,யாரோ ஒருவனாக பரிதாபம் மட்டுமே படுவார்கள்.
அவனுக்காக அவன் எதையும் செய்ததில்லை. அவளுக்காக அவன் செய்தது எதுவும் அவருக்குத் தெரியப்போவதுமில்லை.அப்படித் தெரிந்தால்,அது அவளை விட அவனுக்குத் தான் வலிக்கும்.
நேற்றிரவு ஆர்னம் வர முன்பு,வாந்தி எடுத்து தலை சுற்றலுடன் தானே தரையைத் துடைக்கையில் அவனுக்கு புரிந்தது,இனி அவன் வாழப் போகும் வாழ்க்கையின் வலி.
முயன்று தன்னை தேற்றிக் கொண்டான்.யதார்த்த்தை ஏற்கப் பழகிக் கொண்டான்.அவளின் பின் அவனுக்கென்று யாரும் இல்லை என மனதில் பதிய வைத்துக் கொண்டான்.
மழை வலுக்க தொடங்கியது மெல்ல மெல்ல அவனின் நடை தளர்ந்தது.
கோயிலுக்கு பின்னிருக்கும் ஆள் அறவமற்ற வீதியில் நடந்தான்.நடந்து வந்து,எங்கு செல்வதென்று பார்த்திடாமல் பேரூந்து ஒன்றில் ஏறிக் கொண்டான்.
பயணமே எதற்கென்று தெரியாமல்,எங்கென்று புரியாமல் இருக்க,பாதைகளின் போக்கு தெரிந்தது என்னவாகிடுமாம்..?
இமைகளை சிமிட்டி கண்ணீரை அடக்கிக் கொண்டவன், பாக்கெட்டிலிருந்து தன் பர்ஸை எடுக்க, அவனின் தாயுமானவரினதும் அவளினதும் நிழல்.
அதைக் கண்டதும் மெல்லிய புன்னகை அவன் இதழில் தோன்றிற்று. அந்த புன்னகையின் அர்த்தம் என்னவென்று அவனிடம் தான் கேட்க வேண்டும்.
இனி, அவனின் வாழ்க்கை எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை. அதன் போக்கு என்னவென்று அவனுக்கு புரியவில்லை.
யார் வருவார்கள் யார் இருப்பார்கள் எதுவும் தெரியாது.அவன் தனி மரம்,அந்த உண்மை மட்டும் நெஞ்சை சுட்டது.
இனியும் ஒரு காதல்!
அவனால் நினைத்துப் பார்த்திட இயலாது.அவன் காதல்,எப்போதும் அது அவளுக்குத் தான்.அவளுக்கு மட்டுமே தான்.
அவள் வேறு வாழ்வை பார்த்துச் சென்று இருந்தாலும்,அவளுக்கான அவன் காதல் மாறப் போவதில்லை.ஆயுள் தீரும் வரை,அவனின் ஆயுள் ரேகை அவள் தான்.
அவள் காதல் அவனை ஆற்றியிருக்கும் தான்,அவளின் வாழ்வை இல்லாது செய்து விட்டு அந்த ஆறுதல் அவனுக்கு வேண்டாம்.அவளின் அக்கறை அவன் வாழ்வை மாற்றியிருக்கும் தான்.அவளுக்கு நிச்சயமில்லா வாழ்வை தந்து விட்டு,அந்த மாறுதல் அவனுக்கு வேண்டாம்.
விரல் கோர்ப்பது மட்டுமல்ல,விலகி நிற்பதும் காதல் தான்.
என்னென்னவோ ஆயிற்று.யாரையும் குறை கூற முடியாது. அவனின் விதி இப்படித்தான் என்று தனக்குத்தானே கூறியும் கொண்டான்.
மீளவும் ஒரு ஜென்மம் இருந்தால்,அவளுக்கு மகனாக தான் பிறக்க வேண்டும் என்கின்ற ஆசை.அவர் தாயுமானவர் அவனின் மகனாக பிறக்க வேண்டும் என்கின்ற பேராசை.
மரணத்தை நோக்கி அவன் பாதை தொடர, இனி அவனின் நிகழ் மொத்தமும் அவள் நினைவுகள் வசம்.
அந்த நினைவுகளே அவனுக்கு துணை. அந்த நினைவுகளே அவன் நிகழை உயிர்ப்பிக்கும்,அவனை வாழ வைக்கும். அவனை ஜீவிக்க செய்யும்.அவனின் புன்னகையில் வலியுடன் கலந்திருக்கும்.
மௌனமான காதல் அவனது.வார்த்தைகளால் உரைக்க முடியாது என்று தான் மௌனமாகவே அடங்கிப் போனது போலும்.
இனியும் அவன் காதல் காலம் முழுவதும் தேடும்,தொலைத்த அவளையும் தொலைக்காத அவனையும்.
அவள் வாழ்வில் அவனுக்கானே தேடலைப் போலவே,அவன் காதலும் கனவாகிப் போனது.
🎶கனவே உனை வந்து சேர
நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்..🎶
🎶மரணம் நெருங்கிடும் போதும்,
உன் நினைவினில் வாழ்ந்திடுவேனே..🎶
🎶மறு ஜென்மம் எடுத்தால் கூட,
உயிரே உன் கரம் பிடிப்பேனே..🎶
🎶உன் கால் தடம் நான் தொடர்வேனே,
அன்பே…அன்பே…🎶
சிறிது நேரத்தின் பின்னர் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.தூக்கம் விழித்து கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்து வந்த ஆர்னவ்வின் கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டான்,சத்யா.
அறை வாங்கியவனுக்கு அதன் பின்னரே,நிலமை உரைத்திட,படபக்கும் நெஞ்சுடன் பையனின் அறைக் கதவை திறக்க,அதுவும் திறந்து கொண்டது.
அறையில் அவன் இல்லை.நொருங்கி விட்டனர்,இருவரும்.
“ஆரீஈஈஈஈஈஈ” என சிகையை நெறித்தவாறே கத்தியவனோ,திறந்திருந்த ட்ராயரில் குவிந்திருந்த ஜிமிக்கிகளை கண்டு அழுதே விட்டான்,ஆர்னவ்வின் தோள் சாய்ந்து.
“பிரிஞ்சி போறதுக்கு தானாடா இவ்ளோ லவ் பண்ண..?” மானசீகமாய் அரற்றியவாறே,முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
கீழே காகிதமொன்று விழுந்திருக்க,அதை எடுக்க முயல்கையில் கட்டிலின் கீழே இருந்தது,அவனின் நாட்குறிப்பு.
பேனையுடன் இருந்த பக்கத்தை புரட்டினான்.என்றோ,அவன் எழுதிய கவிதை.அவளுக்கு சென்று சேர்ந்த மாயம் தெரியவில்லை.இறுதி வரி மட்டும்,புதிய மையுடன் மின்னியது.
“அதிகாரத்தின் அர்த்தங்கள் எல்லாம் அவளை அகராதியாக்க..ஜீவனின் தேடல் முழுவதும் அவளில் மோட்சம் கேட்க…அவள் மேல் நானும் காதல் கொண்டேன்! அவளில் நானும் காதல் கண்டேன்”
இங்கோ,
அவள் விழிகள் கண்ணீரில் குளித்திருந்தன.
காதல் தேடும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Enna solla but vera level ♥️ eagerly waiting for next episode 😊
சாகும் போதாவது கடைசியா அவளைப் பார்ப்பானா?