என் ஜீவன் ஏங்குதே – 17

Loading

அத்தியாயம் – 17

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய விக்ராந்தை, நித்திலா ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக்கொண்டாள். தந்தை லட்சுமணனின் அதிரடி உத்தரவால், ஒரு வாரம் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கினான் விக்ராந்த். அந்த ஏழு நாட்களும் நித்திலா அவனது நிழலாகவே மாறிப்போனாள்.

​அவனது உடல்நிலை மீது அவளுக்கு இருந்த அக்கறையில், முதல் மூன்று நாட்கள் அவனுக்குத் தேவையான மூன்று வேளை உணவையும் அவனது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தாள். வெளியே தலைகாட்டக் கூட அவனை அனுமதிக்கவில்லை.

​நான்காம் நாள் விக்ராந்தால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “பேபி… ரூம் உள்ளேயே அடைஞ்சு கிடந்தா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு! கொஞ்சம் இரக்கம் காட்டு பேபி,” என அவன் குழந்தையாய் கெஞ்சினான்.

அவனது கெஞ்சலில் உருகியவள், “சரி… ஆனா வீட்டை விட்டு வெளியே எங்கும் போகக்கூடாது” என்ற கண்டிப்பான நிபந்தனையுடன் அவனை அறையை விட்டு வெளியே வர அனுமதித்தாள்.

நாட்கள் நதியாய் ஓடின. விக்ராந்த் – நித்திலா திருமண வாழ்க்கை இரண்டு மாதங்களைக் கடந்திருந்தது. விக்ராந்த் இப்போது முழுமையாகத் தேறி, மீண்டும் தனது அலுவலகப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அந்த ‘ஆறு மாத ஒப்பந்தம்’ ஒரு ஓரத்தில் மறைந்து, காதல் மட்டுமே பிரதானமாக இருந்தது.

அன்று நித்திலா தன் காலை கடன்களை எல்லாம் முடித்து விட்டு, காலை உணவுகளை சமைப்பதற்காக சமையலறை நோக்கி சென்றாள்,… அவள் இந்த வீட்டிற்கு வந்த நாள் முதல் சுமித்ரா தான் அவளுக்கு முன்னே அங்கு ஆஜராகிருப்பாள், ஆனால் அன்றோ சுமித்ரா இன்னும் வராததை நினைத்துக் கொண்டே வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பானங்களை தயார் செய்தாள்,….

சற்று நேரத்தில் எல்லாம், பாட்டி, அன்னம், ஊர்மிளா என அனைவரும் வந்திருக்க, அவர்களுக்கு வேண்டிய பானத்தை கொடுத்து முடித்தவள், சுமித்ராவை இன்னும் காணாததால் என்ன ஏதென்று பார்த்து விட்டு வந்துவிடலாம் என அவள் அறை நோக்கி நடந்தாள்…..

அறைக்கதவை தட்ட போனவள் காதில் வித்தார்த்தின் பேச்சு சத்தம் விழ, தட்டாமல் அப்படியே நிறுத்தினாள்….

“இன்னும் எவ்வளவு  நேரத்துக்கு தான் சுமி இப்டியே அழுதுட்டு இருக்க போற, தயவு செஞ்சு அழறதை நிறுத்துமா” வித்தார்த்தின் குரலில் அத்தனை வேதனை.

சுமித்ரா விம்மி விம்மி அழுதபடி..
“என்னால முடியலங்க,…. இந்த மாதம் நாள் ரொம்ப தள்ளி போச்சு, கடவுள் என் மேல கருணை காட்டிட்டாருன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன், ஆனா இந்த தடவையும் ஏமாற்றம் தான் கிடைக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லைங்க” என்றாள்…

“உன் நிலமை எனக்கு புரியுதுமா, அதுக்காக இப்படியே அழுதுட்டு இருந்தா உன் உடம்பு என்னத்துக்கு ஆகும் சொல்லு, என்னால உன்னை இப்படி பார்க்க முடியல சுமி, தயவு செஞ்சு அழாதமா” என்றான் கெஞ்சல் குரலில்,….

“என்னால உங்களுக்கு ஒரு குழந்தையை கூட பெத்து கொடுக்க முடியலை, அதை நினைச்சா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” மேலும் மேலும் புலம்பியபடி அழுதாள்….

“நான் உன்கிட்ட குழந்தை கேட்டேனா, எனக்கு நீ மட்டுமே போதும்மா, நீயே எனக்கு ஒரு குழந்தை தான், மறுபடியும் எதுக்கு எனக்கு இன்னொரு குழந்தை, உன்கிட்ட ஆயிரம் தடவை சொல்லிட்டேன், ஆனா நீ இதையே தான் பிடிச்சிக்கிட்டு தொங்குற” என்றான் வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும்……

“எப்படிங்க,… ஒரு குழந்தை பிறப்புல தான் ஒரு ஆணும் பெண்ணும் பூர்த்தியடையிறதா சொல்லுவாங்க, அப்படி இருக்க நமக்கு மட்டும் குழந்தை வரலன்னா என்னங்க அர்த்தம், பல டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணியாச்சு, எல்லாம் பாசிடிவ்வா தான் வருது, ஆனா குழந்தை மட்டும் வர மாட்டேங்கிதே, ஏங்க அந்த கடவுள்க்கு நம்ம மேல இரக்கமே இல்ல” என்றாள்

“ஏன்னா அந்த கடவுள் நாம ரெண்டு பேரும் இன்னும் கொஞ்ச நாளைக்கு குழந்தைங்க தொல்லை இல்லாம சந்தோஷமா இருக்கணும்னு ஆசை படுறாரு, அதான் நமக்கு பொறுமையா குழந்தை பாக்கியத்தை கொடுக்கலாம்னு நினைச்சிருகாரு, ஆனா இது புரியாம நீ தான் எப்போ பாரு அழுதுட்டு இருக்க” என்றான் அவளது அழுகை இதோட நின்றிடாதா என்ற எண்ணத்தில்,…

“உங்களுக்கு குழந்தைன்னா தொல்லையா, இன்னொரு தடவை இப்படி சொன்னீங்க, அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்” என்றாள் அவனை முறைத்தபடி,…

“ம்ம்ம் ஆமா,.. பின்ன நாளைக்கே நமக்கு ஒரு பையன் பிறந்துடான்னா, அவனை வச்சுக்கிட்டு நாம ரொமாண்ஸ் பண்ண முடியும்மா, சொல்லு” அவன் கேட்க…. “குழந்தை வந்துடான்னா என்ன ரொமண்ஸ் வேண்டி கிடக்கு உங்களுக்கு” என்றாள் சிறு அதட்டலுடன்,…

“அடிப்பாவி,… உனக்கு இந்த நினைப்பு வேற இருக்கா” என்று பாவமாக கேட்க, கணவனின் முகத்தை கண்டு அவளும் மெல்ல புன்னகைத்தவள், அதன் பிறகு அவனது குறும்பு பேச்சில் ஈர்க்கப்பட்டு தன் துக்கத்தை மறந்தாள்..

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நித்திலாவின் கண்கள் கலங்கின, அந்த நேரம்… “என்ன பேபி ஒட்டு கேட்டு முடிச்சாச்சா” திடீரென்று தன் பின்புறம் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் நித்திலா,….

“நீங்களா… நீங்க எப்போ வந்தீங்க” தன் முன்னே நின்ற விக்ராந்திடம் நித்திலா வினவ,… “ரொம்ப நேரமா என் அண்ணன்காரன் ரூம் கிட்ட நிற்க்கிறதை பார்த்தேன், ஏன் நம்ம பேபி இங்க நிற்க்கிறான்னு புரியாம வந்து பார்த்தா, இங்க என் பேபி ரெண்டு பேரோட வாழ்க்கை ரகசியத்தை ஒட்டி கேட்டுகிட்டு இருக்கா” விக்ராந்த் கிண்டலடித்தான்,..

“நான் எந்த ரகசியத்தையும் ஒட்டு கேட்கலை, அக்காவை பார்க்க வந்தேன், தற்செயலா அக்காவும் மாமாவும் பேசிகிட்டது காதுல விழுந்துச்சு, அதான் அப்படியே நின்னுட்டேன்” என்றாள் சமாளிப்பாய்,…

“ஓகே பேபி,…  என்ன ஒட்டுக்கேட்ட என்கிட்டயும் சொல்லு” அவன் கண்கள் மின்ன கேட்க,… “ச்சீ நீங்க நினைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்லை, அக்கா குழந்தை விஷயத்தை பத்தி மாமா கிட்ட அழுதுட்டு இருந்தாங்க, அவ்வளவு தான்” என்றாள் நித்திலா,….

“ம்ம்ம்” என்று முணங்கிவிட்டு அவன் அறை நோக்கி செல்ல,… “உலகத்துல எத்தனையோ பேர் குழந்தைக்காக தவம் கிடந்து தவிக்கிறாங்க, ஆனா சில பேர் குழந்தையே வேண்டாம்னு ஒதுக்கி வைக்கிறாங்க” அவள் தன்னை தான் குத்தி காட்டுகிறாள் என புரிந்தவன் திரும்பி அவளை பார்த்தான்….

“நீ யாரை சொல்ற பேபி” நெற்றி சுருங்க அவன் கேட்க… “ம்ம்ம்..உங்களை தான்” என்றாள் வெடுக்கென்று….

“நான் உன் நல்லதுக்காக தான் பேபி அப்படி நடந்துகிறேன்” அவள் எதை பற்றி சொல்கிறாள் என்பது புரிந்த விக்ராந்த் சொல்ல,…. “ஆறு மாசத்துக்கு அப்புறம் என்னை விரட்டி விடனும்னு நினைக்கிறீங்களே அது உங்களுக்கு தப்புன்னு தோணாம சரின்னு தோணுது, ஆனா இதுல மட்டும் எனக்கு நல்லது எது கெட்டது எதுன்னு பார்க்கிறீங்களே, சத்தியமா நீங்க எப்படி பட்டவருன்னு என்னால புரிஞ்சிக்கவே முடியல” என்றாள் ஆவேஷமாய்,..

​விக்ராந்த் சில நொடிகள் அவளை மௌனமாகப் பார்த்தவன்,.. “இப்போ ஏன் பேபி கோவப்படுற,… இப்போ என்ன உனக்கு குழந்தை வேணும் அவ்வளவு தானே, ஓகே இனி நான் அதுக்கு தடங்கல் வர மாதிரி எதுவும் நடந்துக்க மாட்டேன், நீயே இவ்வளவு தைரியமா பேசும் போது நான் ஏன் இதை நினைச்சு கவலை படனும், இனி உன் விருப்பப்படியே பண்ணலாம்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டான் விக்ராந்த்,…

நித்திலாவிற்கு மனதில் இருந்த ஒரு உறுத்தல் விடுபட்டது போல் இருந்தது…. ஆனால் தான் எடுத்த இந்த முடிவு சரி தானா? என்ற குழப்பமும் எழ, அந்த குழப்பத்துடனே தன் வேலையை பார்க்க சென்றாள்….

******

“அத்தை சுமி அக்காவை ரொம்ப நேரமாவே காணோமே, எங்கே வெளியே எங்கேயும் போயிருக்காங்களா?” என்றாள் நித்திலா ஊர்மிளாவிடம்,….

“இல்லடா,… சுமி ஒரு பெரிய தொல்லையை சமாளிச்சிக்கிட்டு இருக்கா” ஊர்மிளா சொல்ல, நித்திலா குழப்பமாக பார்த்தாள்,…

“இதுக்கு மேல நீயே  தெரிஞ்சிக்கோடா, இனியா ரூம்ல தான் ரெண்டு பேரும் இருக்காங்க  போ” ஊர்மிளா சொல்லிவிட்டு நகர,… நித்திலா குழப்பம் நீங்காமலேயே இனியாவின் அறை நோக்கி நடந்தாள்,…

இனியாவின் அறைக்குள் நுழைந்த  நித்திலா அங்கு கண்ட காட்சி அவள் கண்களை விரிய செய்தது,… இனியா கையில் புத்தகத்துடன் பாவமான முகத்துடன் அமர்ந்திருக்க, சுமி கையில் ஒரு கம்பு குச்சியை வைத்து இனியா புஜத்தில் அடித்துக் கொண்டிருந்தாள்,…

“அய்யோ… என்னக்கா பண்ணுறீங்க” நித்திலா சற்று காட்டமாக கேட்டபடி உள்ளே நுழைய,…”அண்ணி காப்பாத்துங்க, சுமி அண்ணி என்னை கொடுமை படுத்துறாங்க” என்றாள் இனியா அழாத குறையாக….

“என்னது” என நித்திலா விழிக்க,…”அண்ணி,… நீங்களாச்சும் எனக்கு சப்போர்ட் பண்ணுங்களேன், ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என அவள் கரத்தை பற்றிக்கொண்டு கெஞ்ச,…”சரி சரி,… நான் எப்போதுமே உனக்கு தான் சப்போர்ட், இங்க என்ன நடக்குது அதை முதல்ல சொல்லு” நித்திலா கேட்க, அவள் கண்களை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டு அதோடு வாயை மூடிக்கொண்டாள்…

“அதான் உன் அண்ணி கேட்கிறால்ல சொல்லுங்க மேடம்” சுமித்ரா இனியாவை அதட்ட, அவள் அமைதியாக விழிகளை உருட்டிக் கொண்டே நின்றாள்,…

“அக்கா… என்ன நடக்குது இங்க? நீங்களாச்சும் சொல்லுங்க” நித்திலா சுமியிடமே கேட்க,…”ம்ம்ம்… உன்னோட நாத்தனாருக்கு எக்ஸாம், ஸோ அதுக்காக தான் மேடமை படிக்க வைக்க போராடிக்கிட்டு இருக்கேன்” என்றாள் சுமித்ரா,…

“அவளுக்கு எக்ஸாம்னா, அவளே தானே படிச்சிகனும், நீங்க ஏன்க்கா போராடனும்” நித்திலா புரியாமல் வினவ,… “உனக்கு இனியாவை பத்தி தெரியாதுல நித்தி, உட்காரு சொல்றேன்” என்றவள் அவளிடம் இனியாவின் கதையை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்….

“மேடம்க்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்,… சின்ன வயசுல இருந்தே புக்கை பிரிச்சு படிக்க ஆரம்பிச்சாலே ஆட்டோமேட்டிக்கா கண்கள் சொருகி தூக்கம் வந்துடும், சின்ன மாமாவும் அதட்டி ஒடுக்கி என்னலாமோ செஞ்சி பாரத்துடாங்க ம்ம்ஹும் இவளோட இந்த குணத்தை மாத்தவே முடியல, ஸ்கூல்ல டீச்சர் பாடம் நடத்துனாலும் தூங்க ஆரம்பிச்சுடுவாளாம், டியூசன்க்கு போனாலும் தூங்க ஆரம்பிச்சிடுவாளாம், இவளை இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாதுன்னு சின்ன மாமா இவ படிச்சு கிழிச்ச வரைக்கும் போதும்னு மூணாம் கிளாஸ்லேயே ஸ்கூலை விட்டு நீக்கிட முடிவு பண்ணிட்டாராம், ஆனா வீட்ல இருக்க மத்தவங்களுக்கு அதுல உடன்பாடு இல்லை,…

என் தங்கச்சியை நாங்க பார்த்துகிறோம்னு இவளோட ரெண்டு அண்ணனுங்களும் இவளை பொறுப்பேத்திருக்காங்க, கிளாஸ்ல ஃபர்ஸ்ட்  வரலன்னாலும் அவங்களால முடிந்த வரை முயற்சி பண்ணி, இவ தலையில தட்டி தட்டி படிக்க வச்சதுக்கு ஏதோ ஃபெயில் ஆகாம மார்க் எடுத்துருக்கா,… அதுக்கு பிறகு படிப்புல ஒரு பிடிப்பு வந்து அவளும் நல்லா தான் படிக்க ஆரம்பிச்சிருக்கா,  அப்புறம் அவ அண்ணனுங்க அவங்களோட படிப்புக்காக வெளிநாட்டுக்கு போயிட்டாங்க போல, இதோட  பிளஸ் டூ வரைக்கும் ஓரளவு படித்து  முட்டி மோதி வந்து சேர்ந்துடாங்க மேடம், பிளஸ் டூ பாடம் அவங்க நினைச்சதை விட கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்கு, மறுபடியும் புக்கை கையில எடுத்தா தூங்குற நிலைக்கு வந்துட்டாங்க, அப்போ அவங்க அண்ணனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து இவளை படிக்க வைக்க படாத பாடுபட்டு போயிட்டாங்க, அப்போ தான் நான் இந்த வீட்டுக்கு வந்த புதுசு, இவளால அவங்க ரெண்டு பேரும் பட்ட பாட்டை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது, எப்படியோ அரியர்ஸ் எதுவும் வைக்காம மேடம் காலேஜ்ல அடி எடுத்து வச்சிட்டாங்க, எக்ஸாம் வந்தா மட்டும் அண்ணனுங்க தன் வேலையை ஒதுக்கி இவளுக்கு பாடம் சொல்லி கொடுக்க வருவாங்க,

ஆனா இந்த தடவை என் வீட்டுக்காரர் என்னை மாட்டி விட்டுடுடாரு, காலைல இருந்து இவளால நான் நொந்து நூடில்ஸ் ஆகிட்டு இருக்கேன், சின்ன குழந்தையை அடிக்கிற மாதிரி கம்பு குச்சியை வச்சுலாம் அடிச்சி பார்த்துட்டேன், ம்ம்ஹும்… ஒன்னு கண்ணு சொறுவிக்கிட்டு போகுது, இல்லன்னா வாய் வலிக்க ரிவிஷன் பண்ணிட்டு, ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்ல சொன்னா, பதில் சொல்லாம முட்டை கண்ணை வச்சிக்கிட்டு உருட்டி உருட்டி காட்டுறா,” சுமி சொல்லிமுடிக்க, சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் நித்திலா, இனியா அவளை பாவமாக பார்த்தாள்….

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
32
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அழகான குடும்பம் … அழகா போகுது கதை … இன்னும் 4 மாசம் இருக்கா … அதுக்கு அடுத்து விக்ராந்த் முடிவு என்னவா இருக்கும் … விக்ராந்த் பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு ஒரு டவுட் வருது … பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும்னு …

  2. குழந்தை இல்லை என்று ஏங்குபவர்கள் பலர் இருக்க, அதனை வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர் தான்.

    அவன் தான் ஆறு மாசத்துக்கு நல்லது செய்வேன்னு சொல்லிட்டானே. அவன் கிட்ட போய் குழந்தைய பத்தி பேசி அவளுக்கு அவளே ஆப்பு வெச்சுக்கிறா.

    புக் கைல எடுத்தா தூக்கம் வர வியாதியா இனியாக்கு 🤣🤣 பாவம் சின்னபொண்ணு