Loading

காதல் 8

 

 

மூவருக்குமிடையே இருந்த மௌனத்தைக் கலைத்த ரஞ்சு, “ஹ்ம்ம், எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன்.” என்று மற்ற இருவருக்கும் பொதுவாக கூறிவிட்டு அவர்களின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

 

ஆனாலும், “பை ரஞ்சு.” என்ற குரல் அவளின் காதில் விழ, திரும்பாமலேயே அது சஞ்சயின் குரல் என்பதை அவளின் மனம் கண்டுகொண்டது. ‘ரஞ்சுவா!’ என்று திகைக்கவும் செய்தது.

 

முதல் நாள் போலவே இப்போதும் சஞ்சயின் நினைவே அவளை வியாபித்திருந்தது. வித்தியாசம் என்னவென்றால், முதல் நாள் அவனின் முறைப்பைக் கண்டு யோசித்திருந்தாள் என்றால், இன்று அவனின் சிரிப்பை எண்ணி மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறாள்.

 

அவள் அங்கிருந்து சென்ற நொடி சஞ்சீவ் சஞ்சயிடம், “எதுக்கு இங்க வந்த?” என்று வினவியிருந்தான்.

 

“ஹலோ பிரதர், நீ மட்டும் தான் ஜாக்கிங் பண்ணுவியா? ஏன் நாங்க பண்ண மாட்டோமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சஞ்சய்.

 

“ப்ச், ரஞ்சு கிட்ட எதுக்கு பேசுற?” என்று சஞ்சீவ் அடிக்குரலில் கேட்க, அவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், “என்ன சஞ்சு இப்படி கேட்டுட்ட? நேத்து என்னை அவளுக்கு இன்ட்ரோ கொடுத்தியே, அவளை எனக்கு இன்ட்ரோ கொடுத்தியா?” என்று விஷமமாக கேட்டு சஞ்சீவின் பிபியை மேலும் ஏற்றினான்.

 

சஞ்சீவ் ஏதோ கூறப் போக, அப்போது தான் அங்கு வந்த கோகுல், “ஹே சஞ்சு, இப்போ போச்சுல அந்த பொண்ணு கூட என்ன பேசிட்டு இருந்தீங்க?” என்று வினவினான்.

 

இரு சஞ்சுவும், ‘இவன் எதுக்கு அவளைப் பத்தி கேட்குறான்?’ என்ற ரீதியில் அவனைப் பார்க்க, கோகுலின் தலையில் அன்றைய நாளில் அண்ணன் தம்பி இருவரிடமும் திட்டு வாங்க வேண்டும் என்று கடவுள் எழுதியிருப்பார் போல, அவன் இருவரின் பார்வையையும் கவனிக்காமல், “சரியான லூசு போல அந்த பொண்ணு!” என்று கூறியதும், இருவருமே அவனை முறைத்துக் கொண்டு அந்த கல் மேஜையிலிருந்து எழுந்து நின்றனர்.

 

அப்போது தான் இருவரின் பாவனையையும் கண்ட கோகுல், ‘ஆத்தி இது என்ன ரெண்டு பேரும் என்னை இவ்ளோ பாசமா பார்க்குறாங்க? இப்போ நாம என்னத்த சொன்னோம்னு இப்படி முறைக்குறாங்க?’ என்று உஷாரானான் கோகுல்.

 

“அது இல்ல டா, நேத்து நான் வந்தப்போ, இந்த பொண்ணு உன் வீட்டுலயிருந்து வெளிய வந்துச்சா, அப்போ யாரை பா ர்த்துட்டு வந்துச்சுன்னு தெரியல. பேயறைஞ்ச மாதிரி தனியா புலம்பிட்டே வந்துச்சா…” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, சஞ்சயின் முகத்தில் கோபத்தின் அளவு கணிசமாகக் கூடிக் கொண்டிருந்தது.

 

‘அய்யயோ இப்பவும் சொதப்புறேன் போலயே. எதுக்கும் டாப்பிக்கை சேஞ் பண்ணுவோம்.’ என்று நினைத்த கோகுல், “எனக்கு தூக்கமா வருது. நான் இன்னொரு ரவுண்டு ஓடிட்டு வரேன்.” என்று விட்டால் போதுமென்று ஓடி விட்டான்.

 

கோகுல் சென்றதும் ஒரு பெருமூச்சுடன், “நீ எதுக்கு அவ கிட்ட நெருங்க முயற்சிக்கிறன்னு எனக்கு புரியுது. ஆனா, நீ நினைக்குறது நடக்காது சஞ்சய்.” என்று சஞ்சீவ் அழுத்தமாக கூற, “ஓஹ், நான் நினைக்கிறதெல்லாம் உனக்கு புரியுதா? அப்போ நான் எதுக்காக அப்படி பண்ண நினைக்கிறேன்னும் புரிஞ்சுருக்கணுமே.” என்று சற்று கிண்டலாகவே பதிலளித்தான் சஞ்சய்.

 

“என் லைஃப் நான் பார்த்துக்குவேன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்.” என்று சஞ்சீவ் கூற, “முன்னாடி பண்ண தப்பை, இன்னொரு தடவை பண்ண மாட்டேன்னு நானும் ஏற்கனவே சொல்லிட்டேன்.” என்றான் சஞ்சய்.

 

இருவரும் அவரவரின் முடிவிலிருந்து பின் வாங்குவதில்லை என்று முடிவெடுக்க, அந்த முடிவின் முக்கிய பாத்திரமாக இருக்கும் ரஞ்சுவிற்கு இதனால் என்ன பாதிப்பு உண்டாகுமோ!

 

****

 

குழப்பத்துடனே அறைக்கு வந்தவளை வரவேற்றது, சஞ்சுவின் உற்சாகக் குரலே. ஒரு நாள் ஓய்வே அவளிற்கு பழைய சுறுசுறுப்பை தந்திருக்க, எப்போதும் போல தர்ஷுவை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது உள்ளே நுழைந்த ரஞ்சுவைக் கண்டவள், “ஹோய் ரஞ்சு, என்ன இன்னைக்கு லேட்டு? உன் ஆளைப் பார்த்துட்டு வந்தியா?” என்று அவளை கலாய்க்க, ரஞ்சுவோ சஞ்சயின் நினைவில் இருந்ததால், சஞ்சு கேட்ட கேள்வியை உணராமல், ‘ஆம்’ என்று தலையசைத்திருந்தாள்.

 

அதில் அதிர்ந்த சஞ்சுவோ, “எதே ஆமாவா? அடியேய் தர்ஷு இங்க வந்து பாரு. இவ ஏதோ மந்திருச்சு விட்ட மாதிரியே இருக்கா.” என்று தர்ஷுவையும் துணைக்கு அழைத்தாள்.

 

தர்ஷுவும் அங்கு நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்ததால், ரஞ்சுவின் பதிலும் அவளிருக்கும் நிலையும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

 

ரஞ்சுவின் அருகே வந்தவள், “சஞ்சீவை பார்க்ல பார்த்தியா?” என்று வினவ, “அவங்க அண்ணாவை பார்த்தேன்.” என்று ஏதோ நினைவில் கூறினாள்.

 

“அவ்வ்வ், தம்பியை பார்க்க போய், அண்ணாவை பார்த்து ஸ்டான்னாகி வந்துருக்காளோ! ஹே ரஞ்சு, அப்போ என் ப்ரோவோட ப்ரோ தான் உன் ஆளா?” என்று உற்சாகமாக சஞ்சு வினவ, அவளை லேசாக அடித்த தர்ஷு, “ப்ச், சும்மா இரு சஞ்சு. அவளே ஏதோ குழப்பத்துல இருக்கா. நீ வேற!” என்று கூறிவிட்டு ரஞ்சுவை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தாள்.

 

அப்போது தான் சுயத்தை அடைந்த ரஞ்சு, மற்ற இருவரும் தன்னை வேற்று கிரகத்திலிருந்து வந்ததைப் போல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் தான் கூறியவை நிகழ்விற்கு வர சட்டென்று, “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.” என்று கூறினாள்.

 

“ஆஹான், நாங்க என்ன நினைச்சோம் மேடம்?” என்று கிண்டலாக சஞ்சு வினவ, தர்ஷுவும் இப்போது குறுகுறுப்புடன் ரஞ்சுவை நோக்கினாள்.

 

“அது… அது… ப்ச், இப்போ எதுக்கு வந்ததும் விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க? நகருங்க ரெண்டு பேரும்.” என்று அவர்களிடமிருந்து தப்பித்து உள்ளே செல்ல முற்பட, அதெல்லாம் அவர்களிடம் நடக்குமா?

 

அவளிடமிருந்து விஷயத்தைக் கறந்த பின்னர் தான் அறைக்குள்ளே அவளை விட்டனர்.

 

“என்னது ஃபர்ஸ்ட் முறைச்சான் அடுத்து சிரிச்சானா?” என்று சத்தமாகவே யோசித்த சஞ்சுவைக் கண்ட தர்ஷு, “மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடியுமோ!” என்று கண்ணடித்துக் கூறினாள்.

 

“ஹா அப்போ என் ப்ரோவோட நிலைமை?” என்று சஞ்சு சஞ்சீவை எண்ணிக் கூற, “உன் ப்ரோ என்னமோ இவளை லவ் பண்ற மாதிரி சொல்ற?” என்று தர்ஷுவும் அவள் பங்கிற்கு பேச, ரஞ்சு தான் இருவரையும் அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தாள்.

 

“இல்லன்னு வேற சொல்லுவியா? ரஞ்சு – சஞ்சு பேரு கூட எவ்ளோ பொருத்தமா இருக்கு?” என்று சஞ்சு கூற, “சஞ்சய்லயும் சஞ்சு இருக்கு!” என்று பதில் பேசினாள் தர்ஷு.

 

அதற்கு மேல் முடியாதவளாக, ‘ரெண்டு பேரும் எப்படியோ போய் தொலைங்க!’ என்று நினைத்த ரஞ்சு குளிக்க சென்று விட்டாள்.

 

“ஆமா, நீ ஏன் என் ப்ரோ மேல இவ்ளோ காண்டா இருக்க? அவரு ரஞ்சுவை லவ் பண்ணா என்ன?” என்று ஆராய்ச்சி பாவத்துடன் சஞ்சு வினவ, தர்ஷுவும் அதைத் தான் தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஆனால், அவள் மனம் தான் அவள் எதிர்பார்த்த பதிலை சொல்லவில்லை.

 

மனதோடு நடந்த ரகசிய உரையாடலை மறைத்துக் கொண்டு, “நான் எதுக்கு அவரு மேல காண்டா இருக்கணும்? நான் தான் முதலயே சொன்னேன்ல, அவரைப் பத்தி நமக்கு எதுவும் சரியா தெரியாது. அப்படி இருக்குறப்போ ரஞ்சுவோட ஃபியூச்சரையே அவரை நம்பி எப்படி ஒப்படைக்குறது?” என்று சஞ்சுவிடம் சமாளித்தாள்.

 

“இத்தனை நாள் பார்த்த என் ப்ரோவையே நம்ப முடியாதுன்னா, அவரோட ப்ரோவை மட்டும் எப்படி நம்புற?” என்று புருவம் உயர்த்தி வினவியவளைக் கண்ட தர்ஷு சிரித்துக் கொண்டே, “அது உன்னை வெறுப்பேத்த சொன்னேன்.” என்று கூற, தோழிகளிடையே அடிதடி சண்டை உருவானது. இதன் பயன், அவர்களின் தலையணை மூலைக்கு ஒன்றாக பறந்து போய் விழுந்தது.

 

இவர்களின் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த ரஞ்சு, “ஷ், உங்க ரெண்டு பேரையும் தனியா கொஞ்ச நேரம் விட முடியுதா? ஒழுங்கா ரூம்மை கிளீன் பண்ணிட்டு குளிக்க போங்க.” என்று கூற, இருவரும் ஆளுக்கு முதலாக அந்த இடத்தை விட்டு அகன்றனர். இவர்களைத் திட்டிக் கொண்டே ரஞ்சு தான் அறையை சுத்தப்படுத்தினாள்.

 

தோழிகள் இருவரும் விளையாட்டாக சண்டை போட்டது, உண்மையில் நடந்தால், யாருக்கு யார் சாதகமாக நிற்கக் கூடுமோ?

 

*****

 

ஊருக்கு ஒதுக்குப்புறமான குடவுன் போன்ற இடம்… படங்களில் காட்டுவது போல யாரையாவது கடத்தி வைத்திருக்கும் வில்லன்களின் இடம் போன்ற தோற்றத்தில் இருந்தது அந்த இடம். இதன் உரிமையாளரும் ஒருவிதத்தில் அத்தகைய செயல்களை செய்யக்கூடியவர் தான்.

 

“என்ன டா அந்த போனை ரொம்ப நேரமா நோண்டிட்டு இருக்க? படிச்சவன்னு வேலைக்கு வச்சா, அவ்ளோ சுறுசுறுப்பா இருக்க மாட்டிங்குறியே!” என்று தன் கட்டைக்குரலில் அங்கலாய்க்க, அதிலிருந்தே அக்கூட்டத்தின் தலைவன் அவன் என்று தெரிந்து கொள்ளலாம்.

 

‘இருய்யா, இந்த ஐ-போன்ல எதெது எங்க இருக்குன்னு பார்க்கவே லேட்டாகுது!’ என்று மனதிற்குள் புலம்பினான் அவன்.

 

வெளியில் சத்தம் வந்தாலே, யோசிக்காமல் தலையை வெட்டிவிடும் காட்டுமிராண்டி கூட்டத்தில் இருந்து கொண்டு, அவனால் தைரியமாக பேசிவிட முடியுமா என்ன?

 

ஒருவழியாக அந்த காணொளி அழைப்பை ஏற்படுத்தி அந்த தலைவனிடம் கொடுத்தான். ‘ஹும், அ, ஆ, இ, ஈ படிக்கத் தெரியாதவனுக்கு ஐ-போனு!’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான் அந்த முதுநிலை பட்டதாரி.

 

அலைபேசியில் தெரிந்த தன் உருவத்தை கண்டவர், தன் கறைபடிந்த பற்கள் தெரியுமாறு சிரித்து, “பார்க்க கம்பீரமா இருக்கேன்ல!” என்று மீசையை தடவிக் கொண்டார்.

 

‘க்கும், காண்டாமிருகம் மாதிரி இருந்துட்டு கம்பீரமா இருக்கானாம்!’ – வழக்கம் போல ‘மைண்ட் வாய்ஸில்’ பேசினான் அவன். அதற்குள் மறுபக்கம் அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளபட்டது.

 

“வணக்கம் சார்…” என்று இந்த தலைவன் அவனின் தலைவனுக்கு சலாம் போட்டான்.

 

அதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், “அங்க என்ன நிலவரம்?” என்று வினவினான் வில்லன்.

 

“சார், அந்த பையன் இப்போ இங்க தான் இருக்கான். அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டுல தான் இருக்காங்க.” என்று மிஸ்டர். காண்டாமிருகம் கூற, “ஃபூல் அது எனக்கு தெரியாதா? லைவ் கமெண்ட்ரி பண்ணவா நீ இருக்க? ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்கன்னா, ஏதோ பிளான் பண்றாங்கன்னு அர்த்தம்.” என்று திட்டினான் மறுமுனையில் இருந்தவன்.

 

“அவனுங்களுக்கு நீங்க தான் மறைமுகமா குறிவச்சு தாக்குறீங்கன்னு தெரியாது.” என்று அமைதியான குரலில் கூற, “தெரியாத வரைக்கும் தான் நம்ம சேஃபா அவனுங்களை டார்கெட் பண்ண முடியும். ஆனா, எப்படி இன்னும் என்னை கண்டுபிடிக்காம இருக்காங்கன்னு தான் எனக்கு டவுட்டா இருக்கு.” என்று யோசனையுடன் கூறினான் வில்லன்.

 

“நம்ம செய்கை அப்படி. யாருக்கும் சந்தேகம் வராது.” என்று அந்த காண்டாமிருகம் பெருமை பீற்றிக் கொள்ள, “கிழிச்ச, அவன் வேறெதோ குழப்பத்துல இருக்கான். அதான் நம்ம பக்கம் கவனம் திரும்பல.” என்றான் வில்லன்.

 

“நம்ம பசங்களும் சொன்னாங்க, அவனுக்கும் தம்பிகாரனுக்கும் ஏதோ சண்டை போல. கோவமா பேசிக்கிட்டதா சொன்னான்னுங்க.” என்ற தகவலைக் கூற, “இதுவும் பழசு தான். தம்பி கோச்சுக்கிட்டு தான் ஆஸ்திரேலியாலயிருந்து இந்தியா வந்ததே!” என்று பல்லைக் கடித்தான் வில்லன்.

 

இவர்களின் உரையாடலைக் கேட்ட அந்த படித்தவனிற்கு தான் சிரிப்பாக இருந்தது. பின்னே, தங்களையெல்லாம் அரற்றிக் கொண்டிருப்பவன் பம்மி பதுங்கினால் சிரிப்பு வரத்தானே செய்யும். எனினும், அதை வெளியே தெரியாதவாறு அடக்கிக் கொண்டான்.

 

தன் ஆட்கள் முன்னிலையிலேயே அவமானப்பட்டதால் அதை தகர்க்கும் பொருட்டு, “எனக்கு ஒரு ஐடியா தோணுது. அண்ணன் தம்பிக்குள்ள சண்டைன்னு சொல்றீங்க, அப்போ தம்பி கூட கூட்டு வச்சுக்கிட்டு அண்ணங்காரனை போட்டுத் தள்ளிடலாம்ல.” என்று தன் முழுத்திறமையை பயன்படுத்தி ‘புதிய’ திட்டம் ஒன்றைக் கூறினார் மிஸ்டர். காண்டாமிருகம்.

 

“இதெல்லாம் சரியா வராது. வெளிய இருந்து பார்க்க தான் ரெண்டு பேரும் அடிச்சுக்குற மாதிரி இருக்கும். ஆனா, ஒருத்தருக்கு ஏதாவதுன்னா இன்னொருத்தர் சும்மா இருக்க மாட்டாங்க.” என்று வில்லன் எச்சரிக்க, “அப்படி ஏதாவதுன்னா கையில மாட்டுன தம்பியை கொன்னுடலாம்.” என்று தன் திட்டத்தை செயல்படுத்திவிடும் நோக்கத்தில் கூறினார் காண்ட்ஸ்.

 

வில்லனின் முகத்தில் இப்போதும் திருப்தியில்லை. அப்போது மறுமுனையில் ஒலித்தது அந்த குரல்.

 

“ஓகே சொல்லு ரிஷி. ரெண்டு பேரும் சண்டை போட்டு பார்த்து ரொம்ப நாளாச்சு.” என்று பெண் குரல் மட்டும் கேட்டது.

 

அந்த பெண் குரலுக்கு வில்லனாகிய ரிஷியின் முடிவை மாற்றும் சக்தி இருந்தது போலும். அவன் அரைகுறையாக சம்மதித்தான்.

 

“ரெண்டுல ஒரு விக்கட் காலிங்கிற தகவலோட உங்களை மறுபடியும் சந்திக்கிறேன்.” என்று அந்த அழைப்பை துண்டித்தார் காண்ட்ஸ்.

 

அழைப்பை துண்டித்த மறுநிமிடம், தான் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்து, “எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே அவமானப்படுத்துவான்? இருக்கட்டும் இவனுக்கும் ஒரு நாள், நாள் குறிக்குறேன்.” என்று சற்று முன்னர் யாரிடம் பம்மி பதுங்கினானோ அவனையே கேட்க முடியாத அளவிற்கு திட்டித் தீர்த்தார்.

 

‘க்கும், ஆள் முன்னாடி எதுவும் பேசுறது இல்ல.’ என்று நக்கலாக நினைத்துக் கொண்டான் அந்த பட்டதாரி.

 

“ஹே உன் பேரு என்ன?” என்று அவன் வினவ, சட்டென்று தன்னை அழைப்பார் என்று எண்ணாததால், சற்று திணறியபடி, “லோ…லோகேஷ்…” என்றான்.

 

“ஹ்ம்ம் லோகு, நீ என்ன பண்ற, அந்த தம்பி நம்பரை உடனே கண்டுபிடிக்கிற.” என்று கூறிவிட்டு சென்றுவிட, அந்த லோகேஷ் தான், ‘கூப்பிடுறதை பாரு… லோகு.. கட்லான்னு!’ என்று முணுமுணுத்தப்படி தனக்கு இடப்பட்ட வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

 

*****

 

“என்னாது அடுத்த வாரம் ஒத்திவைக்க போறீங்களா? நோ நோ நோ நோ… ஐ’ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். எது வேணும்னாலும் சாப்பிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. சோ இன்னைக்கு லன்சுக்கு வரோம். நல்லா சாப்புடுறோம்.” என்று சஞ்சு அலைபேசியில் ராதா – கிருஷ்ணன் தம்பதியரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

சஞ்சுவிற்கு உடல்நிலை சரியில்லாததால், அவர்களின் ‘லன்ச்’சை அடுத்த வாரம் தள்ளிவைப்பதாகக் கூறியதற்கு தான் சஞ்சு அவர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாள்.

 

ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தி, அலைபேசியை வைத்துவிட்டு மற்ற இருவரையும் நோக்கி ஒரு பார்வை பார்க்க அவர்களோ, “அடுத்த வாரம் வர சொல்லி அவங்களே சொல்றாங்கல.” என்றனர்.

 

“ச்சு, அதுவரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது.” என்று தோளைக் குலுக்கி கொண்டாள்.

 

அப்போது ரஞ்சுவின் அலைபேசி தன் இருப்பை உணர்த்தியது. அதன் திரையில் இத்தனை மாதத்திற்குப் பின் அன்னையின் பெயர் ஒளிர, ஆச்சரிய ஆனந்தத்துடன் அழைப்பை ஏற்றாள்.

 

மகிழ்ச்சியான குரலில், “ஹலோ ம்மா.” என்று ரஞ்சு அழைக்க, அவளின் மகிழ்ச்சிக்கு அந்த பக்கத்திலிருந்து எந்த எதிர்வினையும் இல்லாது போக, மீண்டும் அன்னையை அழைத்தாள் ரஞ்சு.

 

“க்கும், உன்கிட்ட பேசணும். இப்போ கிளம்பி வா.” என்று கூறிவிட்டு அவளின் மறுமொழியைக் கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டார் அவளின் அன்னை.

 

ரஞ்சுவிற்கு தான் எதுவுமே புரியவில்லை. நீண்ட நாட்கள் அழைக்காத தாய் அழைத்ததில் மகிழ்வதா, இல்லை இயந்திர குரலில் அவர் கூறிய செய்தியை புரிந்து கொள்ள முடியாமல் குழம்புவதா?

 

அழைப்பை ஏற்கும்போது அவள் முகம் வெளிப்படுத்திய பாவனையிலிருந்து, இப்போது குழப்பத்துடன் இருப்பது வரை அனைத்தையும் கண்ட அவளின் தோழிகள், என்னவென்று விசாரிக்க, அலைபேசி உரையாடலை கூறினாள்.

 

“எதுக்கு இப்படி உடனே கிளம்பி வர சொல்லணும்? அதுவும் இப்போ சொல்லி இப்பயே கிளம்பணுமா?” என்று சஞ்சு ஆரம்பிக்க, தர்ஷுவிற்கு கூட கோபம் வந்தது.

 

“நாம அங்க போறப்போ, எங்கயாவது கிளம்பி போயிட வேண்டியது, இப்போ வர சொல்ல வேண்டியது!” என்றாள் தர்ஷ கடுப்பாக.

 

“இப்படி திடீர்ன்னு சொன்னா, எப்படி கிளம்புறதாம்? ச்சே, வரவர இவங்க உன் பேரண்ட்ஸ் தானான்னு டவுட் வருது!” என்று எரிச்சலில் சஞ்சு கூறிவிட, தர்ஷு தான் அவளை அடக்கி, ரஞ்சுவின் புறம் கண்களைக் காட்டினாள்.

 

ரஞ்சுவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தாயின் குரலிலிருந்த ஒட்டாத தன்மையை யோசிக்கும் போது, ஏனோ மிரட்சியாய் இருந்தது. மொத்த குடும்பத்தின் ஒதுக்கமும், மனம் வருந்தும் நிகழ்வுகள் நடக்கப்போவதை கட்டியம் கூற, எப்போதிலிருந்து இந்த ஒதுக்கம் என்று எண்ணிப் பார்க்க, பதில் தான் கிடைத்த பாடில்லை.

 

இந்த சிந்தனையில் இருந்ததால், மற்ற இருவரின் புலம்பல்கள் இவள் செவிக்குள் சென்றடையவில்லை.

 

அவளின் யோசனையைக் கலைப்பது போல, தர்ஷு அவளின் தோளைத் தொட, அதில் நிகழ்விற்கு வந்தவள் ஒரு முடிவுடன், “நான் ஊருக்கு கிளம்புறேன்.” என்றாள்.

 

அதைக் கேட்ட சஞ்சு, “என்ன ‘நீ’ன்னு சொல்ற? எல்லாரும் சேர்ந்து தான எப்பவும் போவோம்.” என்றாள்.

 

“இல்ல சஞ்சு, எதுக்கு உங்களுக்கும் அலைச்சல். நான் மட்டும் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன்.” என்றாள் ரஞ்சு. இறுதி வார்த்தைகளை அவள் அழுத்திக் கூறும்போதே அவள் ஏதோ முடிவெடுத்து விட்டாள் என்பதை உணர்ந்த தர்ஷுவும் சஞ்சுவிடம் கண்களாலேயே ‘எதுவும் மறுத்துக் கூறாதே’ என்று ஜாடை காட்டிவிட்டு, ரஞ்சு கிளம்புவதற்கு உதவினாள்.

 

ஒருவேளை, ரஞ்சுவிற்கு அங்கு நடக்கப்போவதை முன்னரே அறிந்திருந்தால், தர்ஷு சஞ்சுவை தடுத்திருக்க மாட்டாளோ?

 

*****

 

சஞ்சீவ், அவனின் அறையில் தீவிர சிந்தனையில் இருந்தான். சஞ்சயின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தனக்குள்ளேயே ஆலோசித்துக் கொண்டிருந்தான்.

 

முதல் நாள் பார்வையிலேயே எட்டி நிறுத்திய ரஞ்சுவிடம், அடுத்த நாள் சாதாரணமாக உரையாடியது அவனிற்கு சந்தேகத்தையே கொடுத்தது. அதுவே சொல்லாமல் சொல்லியது, அவனின் அடுத்த குறி ரஞ்சு தான் என்று.

 

ரஞ்சுவை அவனிடமிருந்து காக்க வேண்டுமென்றால், அவனை விரைவாக இங்கிருந்து கிளப்ப வேண்டும் என்று முடிவெடுத்தவன், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று யோசனையில் மூழ்கியிருந்தான்.

 

அப்போது அவனின் அலைபேசி ஒலியெழுப்பி, அவனின் சிந்தனையைக் கலைத்தது. பழக்கமில்லாத எண்ணிலிருந்து வந்த அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவன், ஏதோ தோன்ற அதை ஏற்றிருந்தான்.

 

அந்த முனையில் ஒரு கரகரப்பான குரல் கேட்டது. “தம்பி, உனக்கும் உங்க அண்ணனுக்கும் ஒத்துப்போகாதாமே. அதைப் பத்தி கொஞ்சம் பேசலாம். வரியா?” என்று மறுமுனையில் கூறப்பட, புருவம் சுருக்கி அந்த குரல் கூறியதை உள்வாங்கிக் கொண்டான்.

 

“என்ன தம்பி யோசிக்கிற? எதிரிக்கு எதிரி நண்பங்கிற முறைல, ஒரு நல்ல டீலிங்க்கு வருவோம். என்ன சொல்ற?” என்று மறுமுனையிலிருந்து கேள்வி வர, ஒரு பெருமூச்சுடன், “எங்க வரணும்?” என்று வினவினான்.

 

*****

 

“என்னங்கடா இவன் உடனே ஒத்துகிட்டான்? அந்த ஆளு என்னமோ, ஒருத்தருக்கு ஏதாவதுன்னா இன்னொருத்தர் உயிரே தருவாங்கங்கிற ரேஞ்சுக்கு பில்ட்-அப் கொடுத்தான். தம்பி என்னன்னா, அண்ணனை போட்டுத் தள்ள முதல் ஆளா டீலிங் பேச வரான். ம்ம்ம், நான் சொன்ன மாதிரி என் திட்டம் பலிக்கப் போகுது. ரெண்டுல ஒன்னை தூக்கிட்டு, என்னை அவமானப்படுத்துன அவன் முன்னாடி கெத்தா நிக்கணும்.” என்று கனவு காண ஆரம்பித்தார் மிஸ்டர். காண்டாமிருகம்.

 

இவரின் கனவு பலிக்குமா? சஞ்சீவ், சஞ்சய்க்கு எதிராக இவர்களுடன் கூட்டு சேர்வானா? ரஞ்சுவின் குடும்பம் அவளிற்கு வைத்திருக்கும் பூகம்பம் என்ன?

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்