
அத்தியாயம் 44
அவனே கேட்டதாலோ என்னவோ, ஹாபிட் ஹவுஸையும் விரைவில் முடிக்க வேகம் காட்டினாள்.
இப்போதைக்கு ஒன்றை மட்டும் முழுமையாகக் கட்டி முடிக்க ஏற்பாடு செய்தவள், லான்சிங் அன்று இங்கு அழைத்து வந்து சர்ப்ரைஸ் தந்து விட வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டாள்.
இந்த இடைப்பட்ட நாள்களில், பிரணீத் அன்விதாவின் உலகம் வெகு சுவாரஸ்யமாகக் கழிந்தது.
அமையாவுக்கு விடுமுறை என்பதால், வீடே களேபரமாகத் தான் இருக்கும்.
பிரணீத்தின் அலுவலகத்திற்கே அன்விதாவை அழைத்துச் சென்றான். அவர்கள் சென்னையிலேயே ஒரு ப்ராஜெக்ட்டில் இறங்கியுள்ளதால், அதனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அன்விதாவிடமே விட்டிருந்தான்.
அதுவும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ப்ராஜக்ட் தான். இம்முறை இவர்கள் அதனைச் சொந்தமாக உருவாக்கியதில், “ஹே… நீங்க எப்ப இருந்து ஆர்கிடெக் தொழிலை விட்டுட்டு டூரிசம்க்கு வர ஆரம்பிச்சீங்க?” எனக் கிண்டல் செய்ததில் அவன் சிரித்தான்.
“டாப் சீக்ரட். யார்கிட்டயும் உளறிடாத.” எனக் கண்ணை உருட்டினான்.
அமையா குமரன், அமுதினியிடமே நன்கு ஒட்டிக் கொள்ள, சில நேரங்களில் அவளையும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வருவர்.
அலுவலகம் செல்லும்போது, ப்ரணீத்திற்காகச் சட்டையை அயன் செய்து அவள் வைத்திருக்க, அவனோ அதனைப் போட்டுக் கொண்டு சில நேரம் அமையாவிடம் உருண்டு பிரண்டு விளையாடி மனையாளின் முறைப்பைப் பரிசாகப் பெறுவான்.
“ஆபிஸ் போகும்போது இப்படித் தான் போவியா ப்ரணீ… பாரு சட்டை மறுபடியும் கசங்கிப் போச்சு.” எனத் திட்டிட அமையாவும், “ஆமா ப்ரணீ, பாரு சட்டை கசங்கிப் போச்சு…” என வாயைப் பொத்திச் சிரிப்பாள்.
அன்விதா அவனைக் கண்டமேனிக்கு அழைப்பதைக் கண்டு அமையாவும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீது இருக்கும் மரியாதையைக் காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் விளையாட வரவில்லை என்றால், “ப்ரணீ… ஒழுங்கா விளையாடவா, அடி வாங்குவ…” என அன்விதா போலவே மிரட்டுவது அவனுக்கு அத்தனை ரசனையாக இருக்கும்.
அன்விதா தான் கண்டிப்பாள்.
“அமையா… பெரியவங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது.” என்று.
ஆனால், ப்ரணீத் இடையில் புகுந்து, “அவளுக்கு எப்படிப் பிடிக்குதோ கூப்பிடட்டும். விடேன் சிட்டு.” என்று முட்டுக் கொடுப்பான்.
அதனாலேயே அமையாவின் முன்பு, அவனைப் பேர் சொல்லி ஒருமையில் அழைப்பதைத் தவிர்த்து வந்தாள். அதையும் மீறிச் சில நேரம் வாய் தவறி வந்து விடுவதும் உண்டு.
அது ப்ரணீத்திற்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவன் எதுவும் சொல்வதில்லை.
ஆனாலும் அமையாவின் குறும்பு குறைந்த பாடில்லை. “ப்ரணீ… இன்னைக்கு எனக்கு சாக்லேட் வாங்கிக் குடு…” என ஆரம்பித்து, இரவு தலையணைச் சண்டை வரை அவனுடன் முரண்டு பிடிப்பாள்.
“அமையா, எத்தனைத் தடவை சொல்றது உனக்கு? சித்தப்பாவைப் பேர் சொல்லிக் கூப்பிடாதன்னு. ஒழுங்கா மரியாதையா பேசு.” என்றதும் அவள் முகம் சுருங்கிப் போனது.
“ப்ச் சிட்டு… இப்ப எதுக்கு அவளைத் திட்டுற? என்கிட்ட தான பேசுறா.”
“இதே மாதிரி தான் மத்தவங்ககிட்டயும் மரியாதை இல்லாமல் பேசத் தோனும்.”
“அப்படி எல்லாம் இல்ல. அவள் என்கூட உரிமையா பழகுறா… சித்தப்பாவுக்குப் பேர் சொல்லிக் கூப்புடுறது பெட்டர்…” என்று விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்.
அமையா, தாத்தா பாட்டியிடம் ஓடி விட, அவனை அமைதியாகப் பார்த்த அன்விதா பதில் பேசாது நகர முற்பட்டதில், அவள் கையைப் பிடித்தான் பிரணீத்.
“கையை விடு…”
“அவள் என்கிட்ட ப்ரீயா பழகுறதே பெருசு. நீ இது பண்ணாத அது பண்ணாதன்னு தடை போட்டா… எப்படி சிட்டு?”
“அதுக்காக? பசங்களுக்கு நம்ம தான் மரியாதையைச் சொல்லித் தரணும்.”
“நான் அவள்கூட ப்ரெண்ட்லியா இருக்கேன். சோ, அவள் என்கூட கம்பர்டபிளா இருக்கா. எப்படிக் கூப்பிட்டா என்ன சிட்டு… அவள் என்னை வேறாளா பார்க்காம இருந்தாலே போதும்.”
அவனை அழுத்தமாகப் பார்த்தவள், “அப்படிப் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது ப்ரணீ… உன் உறவுக்குனு ஒரு மரியாதை இருக்கு. அதை அவள் குடுத்துத் தான் ஆகணும். என் அப்பா, அம்மாகிட்டயே உனக்காக மரியாதை எதிர்பார்த்தவ நான். என் பொண்ணு உன்னை ஏதோ டாய்ஸ் மாதிரி நடத்துறதைப் பார்த்துட்டு இருக்க முடியாது…” என்று பல்லைக் கடித்துக் கூறிட, அவன் தான் ஒரு கணம் அசையாது நின்றான்.
அவன் பார்வை தன்மீது படிவதை உணர்ந்து நகரப் போனவளை அவனது பிடி விடவில்லை.
அதில் அவனை நிமிர்ந்து பார்த்திட, அவனோ அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
தினமும் நேரம் அமையும் போதெல்லாம் முத்தமிடுவது வழக்கம் தான். அன்விதா அதனை ரசித்தாலும் அமைதியாக வாங்கிக் கொண்டு சென்று விடுவாள்.
இன்றும் கன்னம் சிவந்தவள், தலையைத் தரையில் புதைத்துக் கொண்டு விலக முற்பட, அப்போதும் அவன் விடவில்லை.
அதில் மீண்டும் நிமிர்ந்து பார்த்தவளின் கண்ணிமைகளில் முத்தம் வைத்தவன், முடித்திட மனமின்றி முகத்தினை வட்டமடித்தான்.
திணறிப் போனதென்னவோ அன்விதா தான். அவள் இதழ்களை நாட முயலும் போதே அமையா மீண்டும் அறைக்குள் வர, சட்டென இருவரும் விலகினர்.
பிரணீத் பின்னந்தலையைக் கோதிக் கொண்டு சின்னப் புன்னகை தவழ வெளியில் சென்றிட, அன்விதாவின் இதயம் தான் தாறுமாறாகத் துடித்தது.
நெற்றியில் வியர்வை அரும்புகள் பூத்ததில், முந்தானையால் துடைத்துக் கொண்டவளுக்கு ஒருவித கனவு நிலை.
அதன்பிறகு, அவனும் அமையாவிடம் என்னதான் விளையாடினாலும் சற்றே முதிர்ச்சியாக, அதே சமயம் கண்டிப்பாகவும் நடந்து கொள்ள, அவளும் சமத்தாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்வாள்.
ஆனால், சித்தப்பா என்றும் ப்ரணீ என்றும் மாறி மாறி மனநிலைக்கு ஏற்றவாறு அழைப்பதை மட்டும் அவன் தடுக்கவில்லை.
“அவளுக்கு எப்படிப் பிடிச்சுருக்கோ அப்படிக் கூப்பிடட்டும். இதுல மட்டும் அவளை ரொம்ப மரியாதை குடுக்கச் சொல்லி போர்ஸ் பண்ணாத சிட்டு…” எனக் கெஞ்சலாகக் கேட்பதில் அன்விதாவும் உள்ளுக்குள் ரசித்துக் கொள்வாள்.
இந்நிலையில் தான், “ப்ரணீ… கிளாம்பிங் லாஞ்சுக்கு அகா நம்மளையும் வரச் சொல்றா…” என்றதும் அவன் சற்றுச் சிந்தித்தான்.
அவ்வப்பொழுது விஷ்ணுவைக் கேட்பதை வழக்கமாக்கி வைத்திருந்தாள் அமையா. இதில் ஊருக்குச் சென்றால் அவனைத் தேடுவாளோ என்ற சிறு பயம் அவனுக்கு முளைக்க, “போகணுமா சிட்டு?” எனக் கேட்டான் தவிப்பாக.
அவன் தவிப்புத் தெளிவாகப் புரிய, “அமையா விஷ்ணுவைக் கேட்பான்னு பயப்படுறியா? அவள் கேட்பா. ஆனா அவன் இல்லைன்னு சொல்லிட்டா சரியாகிடுவா…” என்றதில், “ஆனா மனசுக்குள்ள கஷ்டப்படுவா தான?” பிரணீத்தின் முகம் வாடியது.
“கண்டிப்பா. அவளால வெளிப்படையா கேட்க முடியல. ஸ்கூலுக்குப் போக ஸ்டார்ட் பண்ணும்போது ஆட்டோமேட்டிக்கா அவளைச் சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க ஸ்டார்ட் பண்ணிடுவா… கஷ்டப்படாம பார்த்துக்கத் தான உன்கூட இருக்கோம்…” அன்விதா நகத்தை ஆராய்ந்தபடி கூற, அவனிடம் புன்சிரிப்பு.
“கஷ்ட்ட்ட்ட்டப்படாம பார்த்துக்கத் தான் நானும் ட்ரை பண்றேன்…” மெத்தையில் அமர்ந்திருந்தவளின் அருகில் தானும் அமர்ந்தவன், அவள் தோள்மீது கைபோட்டுக் கொள்ள, அவனது மாடுலேஷனில் புன்னகை மலர்ந்தது அவளுக்கு.
அவன் கையை எடுத்து விட முயன்றவள், “லேட்டாச்சு ப்ரணீ. இன்னைக்கு ஒரு பிரசன்டேஷன் இருக்கு.” என எழ முயல, “ஆனாலும், உன் டெடிகேஷன் பார்த்துப் புல்லரிக்குது சிட்டு. என்னை விட ஓவர் டைம் பார்க்குற… அவ்ளோ ஸ்ட்ரெஸ்ஸா?” எனக் கேட்டான் இயல்பாகவே.
“அப்படி எல்லாம் இல்ல ப்ரணீ… ரொம்ப வருஷம் தூசி படிஞ்சு போன மூளையைத் தட்டி எழுப்புறேனா, அது சில நேரம் நிக்காம ஓடுது. பிடிச்சு நிறுத்துனா முரண்டு பண்ணுது. கண்டதை யோசிக்குது. அதான்…” என நிறுத்தியவளின் கரம் பிடித்தான்.
“நான் ஒரு சொலியூஷன் சொல்லட்டா?”
அவனது கேள்வியில் புருவம் சுருக்கினாள்.
“என்னது?”
“அப்படி மூளை ஓவர்ப்ளோ ஆகும்போது, என்னை வந்து ஹக் பண்ணிக்கோ…” வெகு தீவிரமாகக் கூறியவனைக் கண்டு விழித்தாள்.
“உனக்கு ஆக்வர்டா இருந்தா, ஜஸ்ட் என் முன்னாடி வந்து நில்லு. நான் ஹக் பண்ணிக்கிறேன்… அப்புறம் மூளை உன் பேச்சைக் கேக்கும் சிட்டு…” என்றவனின் குரலில் நிச்சயம் சீண்டல் இல்லை.
“ட்ரஸ்ட் மீ! இட் வில் ஒர்க்…” என்றதில் அவளுக்குத் தான் மீண்டும் நெஞ்சம் படபடவென அடித்தது.
“ட்ரை பண்ணுவியா சிட்டு?” அவன் அவள் உயரத்திற்குக் குனிந்து கேட்க, “ம்ம்…” எனத் தலையசைத்தவள் அவன் முகம் பார்க்க இயலாமல் அங்கிருந்து ஓடி விட்டாள்.
————–
கிளாம்பிங் லான்ச் அன்று காலை, அகமொழி பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.
வீட்டில் அனைவருமே வருவதாக இருக்க, அவர்களும் கிளம்பினர்.
குளித்து முடித்து வந்த அகமொழிக்குச் சட்டென ஒரு யோசனை உதயமாக, “அகன்… நம்ம டீவின்னிங் பண்ண வாங்குன ட்ரெஸ் போடலாமா?” எனக் கேட்டாள்.
“ம்ம் இடால்லோ!” எழுந்ததில் இருந்தே அவளது பரபரப்பை ஓரக்கண்ணில் ரசித்தவன், எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
“எனிக்கு ரிசார்ட்டில் ஒரு செறிய ஒர்க். முடிச்சுட்டு ஜாயின் செய்றேன்… நீ பர்ஸ்ட் போ!” என்றதும், “ஓகே, பட் சீக்கிரம் வந்துடுவல்ல?” எனக் கேட்டதில், அவள் இடையைப் பிடித்து அருகில் இழுத்தவன், “சீக்கிரம் வந்தால் எந்து கிட்டும்?(என்ன கிடைக்கும்)” என்றான் குறும்பாக.
“ம்ம்… வாங்கி வச்ச ஸ்நாக்ஸ்ல எக்ஸ்ட்ரா ஒரு பிளேட் கிடைக்கும், அவ்ளோ தான்.” என முழங்கையால் அவன் நெஞ்சில் இடித்தாள்.
“இதெல்லாம் டூ மச்டி காந்தாரி. வேகம் வந்தால், ஹில் டாப் வியூவில் நிந்து கிஸ் செய்யனம். டீல்?”
அர்ஜித் அவளது கன்னத்தில் இதழ்களால் வருடியபடி கேட்க,
“நம்ம என்ன ஹனிமூன் போறோம்னு நினைச்சியா? எல்லாரும் வர்றாங்க அகன்…” என்று நெளிந்தாள்.
“அது நிண்டெ பிரச்சினை…”
“வர வர ரொம்பப் பண்றடா மலையாளி… போய் கிளம்பு போ!” என்று குளியலறைக்குள் தள்ளி விட்டவளுக்கு வெட்க நகை அரும்பியது.
இருவரும் ஒன்றாக வாங்கிய டீ-ஷர்ட் ப்ளேசையே அணிந்தவள், அவனும் கிளம்பி வரும் வரை காத்திருந்தாள்.
ஒன்றாக அணிந்தபின் இருவரும் சில செல்பிகளை எடுத்து விட்டிருக்க, தனது வாட்சப் ஸ்டேட்டஸிலும் அதனைப் பதிய வைத்து விட்டே கீழிறங்கினாள்.
வசந்தி, “சுஜாம்மா… நீங்க போய் கிளம்புங்க. அனு வந்தா நான் காபி கொடுக்குறேன்…” எனும்போதே அனகா, “அம்மே காபி…” எனக் கீழே வர, “இவளுக்கு எல்லாற்றினும் நம்மள் தன்னே வரணம் வசந்திமா…” எனச் சலித்துக் கொண்டார்.
அனகாவோ, சுஜாதாவின் முறைப்பை எல்லாம் கண்டுகொள்ளாது, “அம்மே, வேணி, ஏடத்தி, ப்ரணீ எல்லாரும் நைட் வந்திட்டுண்டு. ஹோட்டலில் தங்கி இரிக்குந்து.” என்றதும் சுஜாதாவின் முகம் மாறிப்போனது.
“இவிடே வராமாயிருந்தில்லே…(வந்துருக்கலாம்ல)”
வசந்தி, “அன்விக்கும் சங்கடமா இருக்கும்ல…” என்றதுமே பெருமூச்சு விட்டவர், அவர்களைப் பார்க்கும் ஆசைக்காகவேனும் வேக வேகமாகக் கிளம்பினார்.
அந்நேரம் அகமொழி கீழிறங்கி வர அவளை விழி விரித்துப் பார்த்து அனகா,
“அட ஏடத்தி… நிங்கள் எத்னிக் வியர்லு இரிக்குமெந்து விசாரிச்சு (இருப்பீங்கன்னு நினைச்சு), ஞான் சேரி எல்லாம் வியர் செய்திரிக்குனு. நிங்கள் எந்தா அல்ட்ரா மாடர்னாய் வந்திரிக்கனது?” எனக் கிண்டல் செய்ய,
வசந்தியும், “அட்லீஸ்ட் சுடிதாராச்சும் போடலாம்ல. கல்யாணம் ஆகியும் என்னடி ட்ரெஸ் இது?” எனக் கடிந்து கொண்டதில் அவள் திருதிருவென விழித்தாள். சுஜாதாவும் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு, பின் மாடியைப் பார்த்தவர் மெல்ல முறுவலித்தார்.
அவளைப் போலவே அர்ஜித் அகனும் உடை அணிந்திருந்ததில், அனகா வாயைப் பிளந்தாள்.
“பாருடா… நீ எப்போ இருந்து இங்கனே ட்ரெண்டியாய் ட்ரெஸ் இடான் ஸ்டார்ட் செய்தது அர்ஜி… இரிக்கினெடா, இதினாயிட்டே ஞானும் வேகம் கல்யாணம் கழிக்காம் (இருங்கடா இதுக்காகவே நானும் சீக்கிரமா கல்யாணம் பண்றேன்.)” என நொடித்துக் கொண்டாள்.
அகமொழி தான் அசடு வழிந்தாள்.
“இந்த ட்ரெஸ் உன் அண்ணன் தான் செலக்ட் பண்ணாரு. இன்னைக்கு இதான் போடணும்னு சொல்லி ஒரே டார்ச்சர்!” என்று நெளிய, பெரியவர்கள் நமுட்டு நகையுடன் நகர்ந்து கொண்டனர்.
“ஞான் எப்போடி டார்ச்சர் செய்தது?” அர்ஜித் முறைத்ததில், நாக்கைத் துருத்தி அழகு காட்டி விட்டு ஓடினாள்.
“காந்தாரி!” பல்லைக் கடித்து, தன்னை ஒரு மாதிரியாகப் பார்த்த கோபால கிருஷ்ணனையும், பாஸ்கரையும் சிரித்துச் சமாளித்து விட்டு ரிசார்ட்டிற்குச் சென்றான்.
இப்போதைக்கு விஷ்ணுவின் தொழிலையும் அர்ஜித் அகன் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். சில வேலைகளை முடித்து விட்டு, வெளியாள்களிடம் கொடுத்து விடும் எண்ணம்.
அந்த ரிஸார்ட்டினுள், அன்விதாவும் வரமுடியாது என்று திட்டவட்டமாக உரைத்து விட்டாள்.
இப்போதும் கூட வேறொரு ரிசார்ட்டில் தான் தங்கி இருக்கின்றனர்.
அர்ஜித், ரிஸார்ட்டினுள் நுழையும் போதே, நயனா அழுது சிவந்த விழிகளுடன் அங்கு நின்றிருந்தாள்.
“சாரே… ப்ளீஸ்!” அவன் பின்னே வர, அவனோ அப்படி ஒருத்தி தன் அருகில் இருப்பதைக் கூடக் கண்டு கொள்ளவில்லை.
“நின்னை ஆல்ரெடி பயர் செய்தல்லோ. இனியும் எந்தினு இவிடே இரிக்கனது? பயர் செய்தது போறே? விஷ்ணுவிண்டெ கூடே ஜெயிலுக்குப் போவனோ?” என அர்த்தப் பார்வை பார்த்தான்.
அவளுக்கோ மீண்டும் கண்ணில் நீர் துளிர்த்தது. வேலையை விட்டுத் தூக்கியதோடு, பிளாக் மார்க்கை அல்லவா அவளது சான்றிதழ்களில் பதிவிட்டு இருக்கிறான். அவளது எதிர்காலமே கேள்விக் குறியாகி விடுமே!
“சார் ப்ளீஸ்… என்னோடு ஷெமிக்கு! (மன்னிச்சுடுங்க.) ஞான் செய்தது தெற்று தன்னே.” என்றதெல்லாம் அவன் காதிலேயே விழவில்லை. தனது அலுவல் அறையை அறைந்து அடைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்.
நயனா இனி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போக, “நயனா, வா… வெளில வா…” என்று அவளை இழுத்துச் சென்றாள் அவளது தோழி ரேஷ்மா. இருவரும் மலையாளத்தில் உரையாடினர்.
“என்னடி செஞ்சுட்டு இருக்க. நீ செஞ்ச வேலைக்கு அவர் உன்னை சும்மா விடுறதே பெருசு. ஏற்கெனவே, விஷ்ணு சார் கூட இருந்ததுலாம் யார் யார்னு பார்த்துக் கேள்வி கேட்டுக் குடைஞ்சுட்டாரு. நீ முதல்ல இங்க இருந்து போ…” என்று பதற்றமாகப் பேசினாள்.
“விஷ்ணு தான நம்மளை போர்ஸ் பண்ணுனான். ரூம்க்கு வரலைனா வேலை இல்லைன்னு சொன்னான். நம்ம என்ன பண்ண முடியும். அன்னைக்குலாம் எவ்ளோ வலி தெரியுமா. காட்டு மிராண்டி மாதிரி நடந்துக்கிட்டான்… ” நயனா புலம்பித் தீர்க்க,
“அதெல்லாம் சரி தான்டி. அவனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களை விசாரிச்சு, அவங்களை எல்லாம் வேலையை விட்டுத் தூக்கலயே இவரு. விஷ்ணு பண்ண தப்புக்காக எங்ககிட்ட அவரே மன்னிப்பும் கேட்டு, சொந்த அண்ணனுக்கே தண்டனை வாங்கிக் குடுத்து இருக்காரு. அது மட்டும் இல்ல, வேலையை பெர்மனண்ட் செஞ்சு, எந்த ஹெல்ப்பா இருந்தாலும் கேட்கச் சொல்லிருக்காரு. இடைல நீ செஞ்ச வேலை தான் அவரைக் கோபப்படுத்தி இருக்கு.” என்றாள் முறைப்பாக.
“எப்படியும் மானம் போச்சு. விஷ்ணுவை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். உண்மை தான். அவன் வேலையா வெளியூர் போன நேரத்துல அர்ஜித் சார் வந்தாரு. எலிஜிபிள் பேச்சுலர். விஷ்ணு பின்னாடி போறதுக்கு இவன் பின்னாடி போகலாம்னு நினைச்சேன். எப்படியும் விஷ்ணு மாதிரி இவனும் நம்மளை நைட்டு கூப்பிடுவான்னு எதிர்பார்த்து தான் பகல்ல அவன் கிட்ட போய் வழிஞ்சுட்டு நின்னேன்.
ஆனா, அவன் கல்லு மாதிரி அசையவே இல்ல. அப்ப தான், இன்ப்ளூயன்சர் ஒருத்தன் காசை குடுத்து இந்த எம். டி பத்தி சொல்ல சொன்னாரு. மேனேஜர் ஜெகன் எம்டி பேரா அர்ஜித் சார் பேர் ரிவியூல வந்தது தெரியவும், விஷ்ணு சார் பத்தி தெரியக்கூடாதுன்னு, அதை மாத்த விடாம என்னையும் இன்ப்ளூயன்சர்ட்ட அர்ஜித் சார் தான் தப்பா நடந்துட்டாருன்னு சொல்ல சொன்னான்.
இதுல கண்டிப்பா என் பேர் வராதுன்னு சொன்னதுல தான் நானும் ஒத்துக்கிட்டேன். இதுனால அர்ஜித் சாரோட நிச்சயம் நிக்கும்னு நினைச்சேன். ஆனா, கல்யாணமே ஆகும்னு நினைக்கல. நான் ஒரு பிளான் போட்டா, அந்த அகமொழி இடைல வந்து நின்னு எல்லாத்தையும் கெடுத்துட்டா. அவளை அன்னைக்கு ரிசார்ட்ல பார்த்ததுமே ஏதாச்சு செய்யணும்னு தோணுச்சு. அதான், அர்ஜித் சார் பத்தி தப்பா சொன்னேன். நான் நினைச்ச மாதிரி ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க. அதுக்கு இடைல அவரை கரைச்சுடலாம்னு நினைச்சா, என்னை பக்கத்துல கூட வர விடல. பெரிய உத்தம புத்திரன்னு நினைப்பு… இவனுங்களால இப்ப மானமும் போய், வேலையும் போய்ருச்சு” எனக் கொட்டித் தீர்க்க, ரேஷ்மா அவளை அதிருப்தியாகப் பார்த்தாள்.
“நீ செஞ்சது தப்புன்னு உனக்குப் புரியலையா நயனா… எப்படியோ போ. இதுக்கு மேல உங்கிட்ட பேசிட்டு இருந்ததை சார் பார்த்தா, என்னையும் வேலையை விட்டுத் தூக்கிடுவாரு… ஒழுங்கா கிளம்பிடு.” என்று எரிச்சலுடன் அங்கிருந்து நகன்றாள்.
இங்கோ, அனைவரும் கிளாம்பிங்கில் சூழ்ந்தனர்.
“ஹாய் அன்வி…” என அவளை அகமொழி கட்டிக் கொண்டதோடு, குடும்பத்தினருக்கும் அன்விதா, அமையாவைக் கண்டு கண்கள் பனித்தன.
“நந்தாய் இரிக்குனில்லே அன்வி…(நல்லா இருக்க தான அன்வி)” கல்யாணி அவள் தலையைக் கோதிக் கேட்க, “ரொம்ப நல்லாருக்கேன் முத்தச்சி!” என்றவளின் புன்னகையே நிம்மதியைக் கொடுத்தது.
அமையாவிற்கு அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்தது மிகவும் மகிழ்வாக இருந்தது போலும்.
“அமையாக்குட்டி, அத்தையை மறந்துட்ட பார்த்தியா?” ரூஹி போலியாகக் கோபித்துக் கொள்ள, ரிஷான் “மறக்கக் கூடிய மூஞ்சியா இதெல்லாம்…” என வாரினான்.
அவனை முறைத்தவள், பதில் பேசாது அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள்.
தினமும் இது கண்ணாமூச்சி ஆட்டமாகத் தொடர்ந்தது.
ரிஷான் அவளுடன் இயல்பாகப் பேச முற்பட, ரூஹி அவனைத் தவிர்த்தாள்.
இன்றும், அனைவரின் முன்பும் அவள் முகத்தைத் திருப்பி விட்டுச் சென்றது அவனுக்குக் கோபத்தை வரவழைத்து இருந்தது.
அனைவருக்கும் சுவீட்ஸ் எடுக்க கிளாம்பிங் அறைக்குச் சென்றவளின் பின்னே தானும் சென்றவன், “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க ரூஹி. என்னமோ நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்லி டார்ச்சர் செஞ்ச மாதிரி பிஹேவ் பண்ற?” எனக் கொதித்தான்.
அவனை அமைதியாக ஏறிட்டவள், “நான் ப்ரொபோஸ் பண்ணேன். நீ நோ சொன்ன. அவ்ளோ தான்… அதுக்கு மேல எந்த பீலிங்ஸும் இல்லாத மாதிரி உங்கிட்ட நார்மலா என்னால பேச முடியாது. நீ வேணும்னா எது நடந்தாலும் நடக்காத மாதிரி நடிச்சுக்கோ. நான் ஏன் நடிக்கணும்?” என்றாள் குத்தலாக.
“உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் நோ சொல்லல ரூஹி… என்னால நீ ஹர்ட் ஆகக் கூடாதுன்னு தான்…”
“இப்ப ஹர்ட் ஆகலையா? இப்ப ரொம்பக் குளுகுளுனு இருக்கா? என்மேல பீலிங்ஸ் இல்லன்னு சொல்லு… நான் என் மனசை மாத்த முயற்சி பண்றேன். ஆனா, அவள்கூட நடந்த மாதிரி என்கூடவும் ரிலேஷன்ஷிப் பிரேக் ஆகிடுவன்னு ஏன் பயப்படுற ரிஷு? ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ, என்ன தான் நமக்கு ஒருத்தரைப் பிடிச்சாலும், எந்தச் சூழ்நிலைலயும் அவங்களுக்காக நிக்கிற பிடிவாதம் எல்லா ரிலேஷன்ஷிப்க்கும் வராது ரிஷு.
நீ எனக்காக நின்னது தான் எனக்கு வேணும். இனிமேலும், எனக்காக எப்பவும் நிப்பன்ற நம்பிக்கைல தான் உன் மேல எனக்கு லவ் வந்துச்சு. இப்ப நீ வேணாம்னு சொன்னதும், அட்லீஸ்ட் நீ என் பிரெண்டாவாவது இருன்னு என்னால சாதாரணமா இருக்க முடியல. ப்ளீஸ், என் பீலிங்ஸையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ. என்னை விட்டு விலகியாவது இரு.” என்றதில் அவனுக்கு இதயத்தில் பலத்த அடி.
அவள் கையைப் பிடித்து விட்டவன், “ப்ளீஸ் ரூஹி. எனக்குக் கஷ்டமா இருக்கு. உன் பீலிங்ஸைப் புரிஞ்சுக்கலைன்னு சொல்லாத. புரிஞ்சதுனால தான், என்னால நீ ஹர்ட் ஆகிடக் கூடாதுன்னு யோசிக்கிறேன். எனக்குக் கொஞ்சம் டைம் குடு. அர்ஜி ப்ரோ சொன்ன மாதிரி, உனக்கு மெச்சூரிட்டி தேவைப்படுதோ இல்லையோ எனக்குத் தேவைப்படுது ரூஹி…
அவளுக்கு ஆறு மாசமா காதல்னு ஒரு நம்பிக்கையைக் குடுத்துட்டு, ஒரு பிரச்சினை வந்ததும் என்ன ஏதுன்னு விசாரிக்காம என் அப்பா பேச்சுக்குப் பயந்த மாதிரி, பியூச்சர்ல உனக்கும் நடக்கக் கூடாது. அப்படி நடந்தா நிஜமா இது மாதிரி என்னால சாதாரணமா இருக்க முடியாது. கொஞ்சம் என் மனநிலையையும் கன்சிடர் பண்ணு. இது வேணாம், வேணும்னு பேச்சுக்கு நான் வரல. எனக்காகக் கொஞ்சம் வெய்ட் பண்ணுனு தான் சொல்றேன். ஒருவேளை வெயிட்டிங் பீரியட்ல, உனக்கு என்மேல இருக்குறது வெறும் க்ரஷ் தான்னு கூடத் தோணலாம்ல…” என்றவனைத் தீயாக முறைத்தாள்.
“முறைக்காத ரூஹி. யார்மேல என்ன பீலிங்ஸ் இருக்கு, இருந்துச்சுனு இப்ப எனக்கு ரொம்பவே குழப்பமா இருக்கு. நியாயமா நீ சொன்ன மாதிரி, நீ ப்ரொபோஸ் பண்ணப்ப உன் மேல பீலிங்ஸ் இல்லைன்னு தான நான் மறுத்திருக்கணும். ஏன் மறுக்கல? எனக்கே புரியல ரூஹி. உன்னால திரும்ப என்கிட்ட ப்ரெண்டா இயல்பா பழக முடியலை தான், புரியுது. அதே நேரம் உன்கூட இருக்குற ப்ரெண்ட்ஷிப்பை நான் இழக்கவும் தயாரா இல்ல. நீயே இதுக்கு ஒரு முடிவு சொல்லு.” என்று கண் கலங்க நின்றான்.
அவனையே திகைப்பாகப் பார்த்த ரூஹிக்கும் வருத்தம் மேலோங்கியது.
சற்றே சிந்தித்தவள், “சரி, நீ டைம் எடுத்துக்கோ. அதுவரை நம்ம இது பத்திப் பேசிக்க வேணாம். நானும் உன்னை எம்பாரஸ் பண்ண விரும்பல. பட், ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ ரிஷு. ஐ ட்ரூலி லவ் யூ! அதுல எந்த மாற்றமும் இல்ல. இருக்காது.” என்றவளைக் கண்ணிமைக்காது பார்த்தான்.
பிரணீத் ரிசப்ஷனில், உணவு உண்டபடியே சர்வ சாதாரணமாகத் தன்னைக் காதலிப்பதாகக் கூறும்போது, அவனுக்கு ஏதோ விளையாடுகிறாள் என்றே தோன்றியது. அதன்பிறகும் கூட மனம் லேசாய் ஆட்டம் கண்டாலும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
இப்போதோ நிஜ மன அதிர்வையும், கூடவே ஒரு சிறு பரவசத்தையும் உணர்கிறான்.
“தேங்க்ஸ் பார் தி கான்ட்ரிபியூஷன்” எனக் கண் சிமிட்டிட, ரூஹிக்கு அவளையும் அறியாது சிறு புன்னகை பரவியது. அவனுக்கும் தான்!
“சுவீட் எடுக்கப் போறேன்னு போன பக்கீஸ் எங்க, ஆளையே காணோம்?” எனத் தேடிக் கொண்டிருந்த அகமொழியிடம், “எங்க என் நண்பனைக் காணோம்.” எனக் கேட்டான் பிரணீத்.
“உங்க ப்ரெண்டுக்கு ஒரு டீ டிகாஷனே இல்ல ப்ரோ” எனும்போதே கேசவ நாயர் தூரத்தில் கை காட்டி எதுவோ பேசிக் கொண்டிருந்தார் குமரனிடம்.
பாஸ்கருக்கு வெகு நேரம் நிற்க முடியவில்லை என்பதால், அவரை ஒரு அறையில் இருக்க வைத்திருந்தாள். அவருக்கு உதவியாக வசந்தியும் சென்றிருக்க, கேசவ நாயரின் புறம் கவனம் திரும்பியது அகமொழிக்கு.
“நம்ம அங்க வரைக்கும் ஸ்பைசஸ் எஸ்டேட் போட்டிருந்தோம் குமரா… அப்புறம் பசங்க வளர்ந்து அதை வேற வேற பிஸினஸா மாத்திட்டாங்க.”
“இது நல்ல வியூ பாயிண்டா இருக்கேப்பா…” தற்போது நிற்கும் இடத்தைப் பற்றி குமரன் கூறியதில், “அதே… விஷ்ணு ரிசார்ட் வச்சிருந்த இடத்தை அவனுக்குப் பிரிச்சுக் குடுத்தப்போ, அர்ஜிக்கும் கொடுக்கணும்னு அவன்கிட்ட அபிப்ராயம் கேட்டோம். அவன் அப்போதைக்கு எதுவும் வேணாம்னு சொல்லிட்டான்.
அப்புறம் இப்ப கொஞ்ச மாசம் முன்னாடி தான், அவனே நேர்ல வந்து இந்த இடத்தைப் பார்த்து எனக்கு இந்த இடம் வேணும்னு கேட்டான்.
பட்சே இவிட எஸ்டேட் எல்லாம் வைக்க முடியாதேன்னு சொன்னேன். அப்படியும் ஞான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு அவன் பேர்ல வாங்குனான். என்ன பண்ணப் போறானோன்னு நினச்சேன்…” என அவர் பேசிக் கொண்டே செல்ல, அகமொழி திக்கும் திசையும் புரியாதவளாக நின்றாள்.
பிரணீத் மட்டுமன்றி, அன்விதாவும் கூட இதில் திகைத்து தான் நின்றிருந்தனர்.
அகமொழி முகம் இறுக பிரணீத்தைக் குற்றப் பார்வை வீச, “ஐயோ அகா… இது அவன் இடம்னு சத்தியமா எனக்குத் தெரியாது. விஷ்ணு மூலமா உனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்குப் பணம் குடுக்க வைக்கணும்னு சொன்னான். அதோட உங்க அப்பாவும் ஏதோ இடம் வாங்கிருக்காரு, அங்க உனக்கு கிளாம்பிங் வைக்க எல்லா ஏற்பாடும் பண்ணனும்னு சொல்லி, எங்க கன்ஸ்ட்ரக்ஷன் ஆளுங்களையே அனுப்பி வச்சோம்.” என்று அடுத்த உண்மையை உளறி விட்டுத் திருவிழாவில் காணாமல் போன சிறுவன் போல விழித்தான்.
“ப்ரணீ…” என அவன் காலை மிதித்த அன்விதா தான், “என்னடா, கன்பெஸ் பண்ணிட்டு இருக்க?” எனப் பல்லைக் கடித்தாள்.
“ம்ம், அனுப்பி வச்சு?” அகமொழி புருவம் நெறித்துக் கேட்டு விட்டு அன்விதாவைக் கூர்ந்து பார்த்திட, அவளுக்கு உள்ளம் சில்லிட்டது.
“இல்ல அகா… நீ பேங்க் லோன் போக வேணாம்னு எக்ஸ்ட்ரா பணத்துக்கு நான் ரெடி பண்ணதா சொல்லச் சொல்லி அர்ஜியே பணம் குடுத்தாரு. நீ அதையும் வாங்கலைனு சொன்னதும் பேங்க் லோனுக்காக மேனேஜர்கிட்ட பேசி, லோன் இல்லாம அவரே பெர்சனலா அனுப்பி விடுற மாறி…” என உளறத் தொடங்க, இப்போது பிரணீத் அன்விதாவின் காலை மிதித்தான்.
“அடிப்பாவி, இப்ப நீ தான் கன்பெஸ் பண்ணிட்டு இருக்க…” என்றான் கடுப்பாக.
இந்நிலையில் ரிஷானும் ரூஹியும் ஒன்றாக அங்கு வந்ததில், அவர்களைக் கண்ணைச் சுருக்கிப் பார்த்தவள், “ஹாபிட் ஹவுஸ்க்கு கோட் குடுத்தது யாரு?” என்றாள் சலனமின்றி.
ரிஷான் பேயாக விழித்தான்.
“டேய், பொய் சொல்லி இன்னும் கொஞ்சம் க்ரைம் லிஸ்ட் ஏத்திக்காத.” பிரணீத் முணுமுணுக்க, அவனோ வெளிறி “நான் எவ்வளவோ சொன்னேன் அகா. வேணாம்னு… ப்ரோ தான், கம்மியான கொட்டேஷன் குடுத்து, அதை உன்னை நம்ப வைக்கச் சொன்னாரு…” என்றதும் ரூஹி, “ஆமா அகா, அப்படி நீ நம்பலைன்னா எங்களைத் தலைகீழா தொங்க வச்சு அடிப்பேன்னு சொன்னாரு.” என்றாள் பரிதாபமாக.
“அப்பாட்ட பேசிட்டு வந்து வச்சுக்குறேன் உங்களை…” என்றவள் விறுவிறுவெனப் பாஸ்கரைப் பார்க்கச் சென்றாள்.
அவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரின் முன் புயலாக நின்றவளை அவர் புரியாது பார்த்தார்.
அவளுடன் இரு ஜோடிகளும் பதற்றமாக வந்தனர்.
“உண்மையைச் சொல்லுங்க. விஷ்ணு அவன் ஏமாத்தி வாங்குன இடத்துக்குப் பணம் குடுத்தானா?” எனக் கூர்மையாகக் கேட்க,
பிரணீத், “அவன் குடுத்துட்டதா தான் அர்ஜி சொன்னான்.” என்றதில், கையைக் காட்டி நிறுத்தியவள், இன்னும் தந்தையை அழுத்தமாகப் பார்த்திருந்தாள்.
பாஸ்கர் தடுமாறிப் பின் விழி தாழ்த்தி, “இல்ல, விஷ்ணு எந்தப் பணமும் கொடுக்கல.” என்றதில் அகமொழி எவ்வித உணர்வும் இன்றி நிற்க, மற்றவர்களோ இதனை எதிர்பாராது திகைத்தனர்.
“நீ வீட்டுக்கு வந்தப்புறம், விஷ்ணுகிட்ட நியாயம் கேட்க நான் ரிஸார்ட்டுக்குப் போனேன், உண்மை தான்.
ஆனால் விஷ்ணு அங்க இல்ல. மாப்பிள்ளை தான், அவன் ஏமாத்தி வாங்குன இடத்துக்கும் அதுல நீ கிளாம்பிங்காக செலவு செஞ்சிருந்ததுக்கும் சேர்த்துப் பணம் கொடுத்தாரு. நான் முதல்ல வாங்கல. அப்போ எனக்கும் அவர் மேல கோபம் இருந்துச்சே.
அவரு தான், உங்க வீண் பிடிவாதத்துக்காக அவளோட கேரியரை ஸ்பாயில் பண்ணாதீங்க. இது ஒன்னும் சும்மா தரல. உங்க இடத்தோட மதிப்புக்குத் தான் தர்றேன்னு சொன்னாரு. எனக்கும், நம்ம உழைப்பு ஏன் வீண் போகணும்னு வாங்கிக்கிட்டேன். உடனே, இன்னொரு இடமும் இருக்கு. இது லீகலா உன் பேர்ல மாத்தப்பட்ட இடம்னு ஒரு பத்திரம் கொடுத்தாரு.
நான் வேணாம்னு மறுத்தேன். ஆனால் அவர் பிடிவாதமா இருக்கவும், உனக்கும் இடம் தேவைப்பட்டுச்சேன்னு, எனக்கு அவர் கொடுத்த பணத்துல இருந்து அந்த இடத்தோட மதிப்பு என்னன்னு கேட்டு அதுக்கான பணத்தை வாங்கிக்கிட்டா, நானும் பத்திரத்தை வாங்கிக்கிறேன்னு சொன்னேன். நீ எதுவும் சங்கடமா நினைச்சுடக் கூடாதே. பின்னாடி பிரச்சினையும் வரக்கூடாதுன்னு தான். மாப்பிள்ளை சரின்னு பணம் வாங்கிக்கிட்டாரு. ஆனா விஷ்ணு தான் பணம் குடுத்ததா தான் சொல்லணும்னு சொல்லிட்டதுனால, என்னாலயும் உங்கிட்ட உண்மையைச் சொல்ல முடியல…” என்றார் பரிதாபமாக.
அகமொழி ஒன்றுமே பேசவில்லை. அமைதியாக வெளியில் வந்து விட்டாள். அவள் என்னதான் நினைக்கிறாள் என்று யாருக்கும் புரியவும் இல்லை.
“அநேகமா இந்த பிஸினஸையும் நம்ம இழுத்து மூடணும்னு தான் நினைக்கிறேன்.” ரிஷான் ரூஹியிடம் முணுமுணுத்திட, “சும்மா இருடா!” எனக் கடிந்தவள், “அகா…” எனப் பேசத் தொடங்கும் போதே, “ஹாய் கைஸ்… லேட் இல்லால்லோ, கரெக்ட் டைம் அல்லே?” எனக் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி அங்கு வந்தான் அர்ஜித் அகன்.
“ச்சே ச்சே… சரியான நேரத்துக்குச் சரியா வந்து நிக்கற மச்சான்…” என்ற பிரணீத் இருவரது உடையையும் பார்த்தான்.
“உலகத்திலேயே பொண்டாட்டிகிட்ட அடி வாங்க இவ்ளோ டிப் டாப்பா வர்ற புருஷனை இப்ப தான் பார்க்கிறோம். இல்ல மச்சான்…” என ரிஷான் பிரணீத்திற்கு ஹைபை கொடுக்க, “அப்சல்யூட்டலி” என்றான் பிரணீத்.
அர்ஜித் புரியாது நின்றான். “எந்து பற்றி?(என்னாச்சு) மொழி… பங்க்ஷன் ஸ்டார்ட் செய்யாமல்லே?” எனக் கேட்டதும், “ஓ… பண்ணிடலாம். ஆனா ரிப்பனுக்குப் பதிலா உங்களைத் தான் கட் பண்ணனும், பரவாயில்லையா?” என அன்விதா பாவமாகக் கூறியதில் அவனுக்குள் அலாரம் அடித்தது.
அகமொழி அவனைச் சலனமற்றுப் பார்த்து விட்டு, அங்கேயே சற்றுத் தள்ளி மலை உச்சிக்குச் சென்று அங்குப் போடப்பட்டிருந்த கைப்பிடிக் கம்பியைப் பிடித்து நின்றாள்.
அர்ஜித் அகனோ, அவள் பின்னேயே சென்று “காந்தாரி… எந்து செய்திட்டு இரிக்கன? எந்து பற்றி…(என்னாச்சு)” எனக் கேட்க, அவன் சட்டைக் காலரை இழுத்துப் பிடித்து அவனது இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள்.
இதனை எதிர்பாராத அர்ஜித் ஒரு கணம் விழிகளை அகல விரித்து விட்டுப் பின், தானும் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்துப் பிரிந்தவன்,
“ஒரு பேச்சினு வேகமா வந்தால் முத்தம் கொடுக்கான் பரஞ்சு…. செரிக்கும் ஒரு சுவீட் சர்ப்ரைஸ் கிட்டுமெந்து விசாரிச்சில்லா காந்தாரி…(நிஜமாவே ஒரு சுவீட் சர்ப்ரைஸ் கிடைக்கும்னு நினைக்கல காந்தாரி…)” என உதட்டில் மிச்சமிருந்த அவளது ஈரத்தை ரசனையுடன் துடைத்தபடி அவளைப் பார்த்தான்.
அதில் தானாய் கன்னம் சிவக்க, விழிகளும் சிவந்தது அவளுக்கு.
“ஏன் அகன்? எதுக்காக இதெல்லாம்? நிஜமா இந்த பிஸினஸுக்காகவும், காசுக்காகவும் நான் உன்னை… உன்னை லவ் பண்ணல அகன்…” என்றவளுக்குத் தவிப்பாக இருந்தது.
அவன் விழி இடுங்க அவளை ஏறிட்டான்.
“பிசினஸ், பணம், இதெல்லாம் தாண்டி இது நிண்டெ ஸ்வப்னம் அல்லே (கனவு தான) காந்தாரி…
என்டே வைஃபோட ஸ்வப்னத்தை ஞான் நிறைவேற்ற முயற்சி செய்ய கூடாதா? இதொக்கே செய்து நின்னை இம்ப்ரெஸ் செய்யான் ஞான் ட்ரை செய்தில்லா. எனிக்கு அதிண்டெ ஆவஸ்யமும் இல்ல.(இதெல்லாம் செஞ்சு உன்னை இம்ப்ரெஸ் பண்ண நான் ட்ரை பண்ணல. எனக்கு அந்த அவசியமும் இல்ல. )”
“அப்படி சொல்லல அகன். என்னால நீ ஏன் நஷ்டப்படணும்? கொஞ்ச நஞ்சம் இல்ல. இத்தனை லட்சம்… அதுவும் உன் பேர்ல குடுத்த இடத்தை எனக்காக ஏன்? அகன்… அதுக்கு விஷ்ணு என்கிட்ட இருந்து வாங்குன இடத்தையே எனக்குத் திருப்பி வாங்கிக் குடுத்திருக்கலாம் தான. உனக்கும் இவ்ளோ நஷ்டம் இல்லைல. அவன் செஞ்ச தப்புக்கு, நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சதை எல்லாம் இப்படி வீணாக்கனுமா?”
“மனஸிலாயில்லா. நீ என்டெ வைஃப்… நினக்காயி ஞான் செலவு செய்தால் அது வீண் செலவோ?” அர்ஜித்தின் முகம் சூடாக,
“ப்ச், நீ செலவு பண்றதை நான் சொல்லல. ஆனா இது… இவ்ளோ ஏன்? நான் உங்கிட்ட இதெல்லாம் செய்யணும்னு எதிர்பார்க்கல அகன்…” அவளுக்கு மனமே அழுத்தியது. வார்த்தைகளும் தடுமாறியது.
“நீ பிரதீக்ஷில்லாந்து எனிக்கு அறயாம். என்னோடு ஏது ஹெல்ப்பும் சோதிக்கில்லாந்தும் எனிக்கு அறயாம். அதினு ஈகோன்னு எல்லாம் ஞான் பேர் வைக்கில்லா மொழி. பொதுவாய் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டாவும். அவருடே தொழிலோ, வேலையோ எதுவாய் இருந்தாலும் அவருடே சொந்தம் முயற்சியிலே, அவருடே சொந்த உழைப்பிலே செய்தால் மாத்திரமே அது அவருக்கு மனநிறைவைத் தருல்லு… நீயும் அங்கனே ஒரு கேட்டகரி தன்னே. (நீ எதிர்பார்க்க மாட்டன்னு எனக்குத் தெரியும். என்கிட்ட இருந்து எந்த ஹெல்பும் கேட்க மாட்டன்னும் எனக்குத் தெரியும். அதுக்கு ஈகோன்னு எல்லாம் நான் பேர் வைக்க மாட்டேன் மொழி. பொதுவா சிலருக்கு ஒரு பழக்கம் இருக்கும். அவங்களோட தொழிலோ வேலையோ எதுவா இருந்தாலும் அவங்களோட சொந்த முயற்சில, அவங்களோட சொந்த உழைப்புல செஞ்சா மட்டும் தான் அது அவங்களுக்கு மனநிறைவைத் தரும். நீயும் அப்படி ஒரு கேட்டகரி தான்.)
நிண்டெ மொத்த லைஃப்லயும் பேரண்ட்ஸ், பேமிலி, லவ்னு டிபெண்டன்டாய் இருந்தாலும், கேரியர்னு வரும்போ நீ தீர்ச்சயாயும் அதில் நிண்டெ ஹண்ட்ரட் பெர்சன்ட் தன்னே தேடுல்லு. எனிக்கு மனஸிலாவுந்து. நின்னை ஆக்வார்டாய் பீல் செய்யான் வைக்கணம்னு ஞான் இதெல்லாம் செய்தில்லா.
ஒந்து மனஸிலாக்கிக்கோ. இதெல்லாம் நின்னாலே உருவாக்கான் பற்றில்லாந்து ஞான் இதை செய்தில்லா. நீ ஆல்ரெடி உருவாக்கி வச்சது எல்லாம் வீணாயதினு விஷ்ணு காரணமெங்கில், இன்டைரக்ட்டாய் ஞானும் ஒரு காரணம். அது கொண்டானு ஞானே அதை உருவாக்கித் தரணும்னு விசாரிச்சது.(உன் மொத்த லைஃப்லையும் பேரண்ட்ஸ், பேமிலி, லவ்னு டிபெண்டன்டா இருந்தாலும், கேரியர்னு வரும்போது நீ கண்டிப்பா அதுல உன்னோட ஹண்ட்ரட் பெர்சன்ட் தான் தேடுவ. எனக்குப் புரியுது. உன்னை ஆக்வார்டா பீல் பண்ண வைக்கணும்னு நான் இதெல்லாம் செய்யல. ஒன்னு புருஞ்சுக்கோ. இதெல்லாம் உன்னால உருவாக்க முடியாதுன்னு நான் இதை செய்யல. நீ ஆல்ரெடி உருவாக்கி வச்சது எல்லாம் வீணானதுக்கு விஷ்ணு காரணம்னா இன்டைரக்ட்டா நானும் ஒரு காரணம். அதுனால தான் நானே அதை உருவாக்கித் தரணும்னு நினைச்சேன்)
விஷ்ணுவினு அச்சன் எழுதிக் கொடுத்த பத்திரத்தை வச்சு கேஸ் இட்டால் வருஷக்கணக்காய் இழுக்கும். அன்விக்கு டைவர்ஸ் கிடைக்கனது ஆனு அப்போ எனிக்கு வளரே முக்கியமாய விஷயமாய் பட்டது. அப்போ இதை இழுத்தால் அவன் கேஸை வேற சைடு கொண்டு போகும். அது கொண்டானு, அப்போல் ஆ ஸ்தலம் பற்றி ஞான் மைண்ட் செய்தில்லா. (விஷ்ணுக்கு அச்சன் எழுதி குடுத்த பத்திரத்தை வச்சு கேஸ் போட்டா வருஷக்கணக்கா இழுக்கும். அன்விக்கு டைவர்ஸ் கிடைக்குறது தான் அப்போ எனக்கு ரொம்ப முக்கியமான விஷயமா பட்டுச்சு. அப்போ இதை இழுத்தா அவன் கேஸை வேற பக்கம் கொண்டு போயிடுவான். அதனால தான், அப்போதைக்கு அந்த இடத்தை பத்தி நான் அலட்டிக்கல.)
அது மட்டும் இல்லா, அவன் என்டெ மேலே இரிக்கன தேஷ்யத்திலும் நின்னை ஜெயிச்சுட்டேன்னு ப்ரூவ் செய்யானும் இடைப்பட்ட மாசத்தில் அதில் கட்டடம் எழுப்பி இருந்து. எப்பளும் அவனுக்கு ரிசார்ட் பிளான் எல்லாம் ஞான் தன்னே கொடுக்கும். ஈ பிராவஸ்யம் அவன் வேற பில்டர் வச்சு செஞ்து. (அது மட்டும் இல்ல, அவன் என் மேல இருக்குற கோபத்துலயும் உன்னை ஜெயிச்சுட்டேன்னு ப்ரூவ் பண்ணவும் இடைப்பட்ட மாசத்துல அதுல கட்டடம் எழுப்பி இருந்தான். எப்பவும் அவனுக்கு ரிசார்ட் பிளான் எல்லாம் நான் தான் குடுப்பேன். இந்த தடவை அவன் வேற பில்டர் வச்சு செஞ்சான். )
ஞான் வேணமெந்தே தன்னே அமைதியாய் இருந்தது. நீ ஆ இடத்தில் மழை வெள்ளம் வராதே இரிக்கான், இடத்தை சரியாய் பதப்படுத்தி இருந்து. பொதுவாய் சில கன்ஸ்ட்ரக்ஷன்காரர் இதெல்லாம் எக்ஸ்ப்ளெய்ன் செய்யில்லா. ஆர்கிடெக்கு மாத்திரமே தெரிஞ்ச சில மைனியூட் விஷயங்கள் உண்டு மொழி. அது வச்சானு, ஹில் ஸ்டேஷனில் நம்ம க்ளையண்ட்ஸ் கேக்கன இடத்தில் பில்டிங் கெட்டான் பற்றுமோ? பற்றில்லே… ஏது மாதிரி கட்டியால் இயற்கை சீற்றத்திலு ப்ராப்ளம் வராதெந்து தெள்ளந்தெளிவாய் பிளான் செய்திட்டானு ஞான் எல்லாம் ஸ்டார்ட் செய்யுள்ளு. அதுகொண்டு ஹில் ஸ்டேஷனைப் பொறுத்தவரை நம்மள்டே கன்ஸ்ட்ரக்ஷன்குனு தனி பிராண்ட் உண்டு.(நான் வேணும்னே தான் அமைதியா இருந்தேன். நீ அந்த இடத்துல மழை வெள்ளம் வராம இருக்க, இடத்தை சரியா பதப்படுத்தி இருந்த. பொதுவா சில கன்ஸ்ட்ரக்ஷன்காரங்க இதெல்லாம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ண மாட்டாங்க. ஆர்கிடெக்கு மட்டுமே தெரிஞ்ச சில மைனியூட் விஷயங்கள் இருக்கு மொழி. அது வச்சு தான், ஹில் ஸ்டேஷன்ல நம்ம க்ளையண்ட்ஸ் கேக்குற இடத்துல பில்டிங் கட்ட முடியுமா? முடியாதா… என்ன மாதிரி கட்டுனா இயற்கை சீற்றமால ப்ராப்லம் வராதுன்னு தெள்ளந்தெளிவா பிளான் பண்ணிட்டு தான் நான் எல்லாம் ஸ்டார்ட் பண்ணுவேன். அதுனால தான் ஹில் ஸ்டேஷனை பொறுத்தவரை நம்ம கன்ஸ்ட்ரக்ஷன்குனு தனி பிராண்ட் இருக்கு.)
பட்சே விஷ்ணு, ஏதோ லோக்கல் பில்டர்ட்ட கொடுத்து வளரே ஷார்ட் டைம்ல கோடிக்கணக்குல இன்வெஸ்ட் செய்திருந்தான். அந்த பில்டரும் ஏது முன்னேற்பாடும் இல்லாதே கட்டடம் ஸ்டார்ட் செய்து. விஷ்ணு ஜெயிலுக்குப் போயி ஒரே வாரத்தில் மழை வந்து ஆ பில்டிங் வெள்ளத்தில் நிறைஞ்சு போய் நிந்து. அதுல லாஸ் ஆனதிலானு பேனிக் ஆகி, பெயில் எடுக்கான் கூடி அவனு ஆ டைம்ல பைனான்ஸ் இல்லை. (ஆனா விஷ்ணு ஏதோ லோக்கல் பில்டர்ட்ட குடுத்து ரொம்ப ஷார்ட் டைம்ல கோடிக்கணக்குல இன்வெஸ்ட் பண்ணிருந்தான். அந்த பில்டரும் எந்த முன்னேற்பாடும் இல்லாம கட்டடம் ஸ்டார்ட் பண்ணியாச்சு. விஷ்ணு ஜெயிலுக்குப் போய் ஒரே வாரத்துல மழை வந்து அந்த பில்டிங் வெள்ளத்துல நிறைஞ்சு போய் நின்னுச்சு. அதுல லாஸ் ஆனதுல தான் பேனிக் ஆகி, பெயில் எடுக்க கூட அவனுக்கு அந்த டைம்ல பைனான்ஸ் இல்லை.)
அது அவனோடே அழிஞ்சு போகட்டுமெந்து தன்னே, வளரே நோக்கி நோக்கி ஈ ஸ்தலத்தை (இடத்தை) ஞான் சூஸ் பண்ணி குடுத்தேன். நினக்கும் பிடிக்கும்னு ஒரு விஸ்வாசம் (நம்பிக்கை) இருந்துச்சு. எவ்ளோ சீக்கிரம் நின்னுடே பிசினஸ் ஸ்டார்ட் ஆகுந்தோ, அத்தர வேகம் நீயும் எனிக்குப் பழைய காந்தாரியாய் கிட்டுமெந்தானு…” எனும்போதே அவன் நெஞ்சில் இறுகப் புதைந்திருந்தாள் அகமொழி.
எத்தனைப் புரிதல் அவனிடம்… அவனிடமிருந்து உதவி கேட்காததற்கு ஈகோ காரணமல்ல என்று தன்னை முற்றும் முழுதாய் புரிந்து கூறும்போதே, அவளது மொத்தக் குழப்பமும் பனிக்காற்றோடு கலைந்து போய் விட்டதே!
அவளைத் தானும் இறுக்கி அணைத்தவன், “மொழி… தேஷ்யம் (கோபம்) இல்லால்லோ?” எனக் கேட்டான் அவன் கழுத்தில் முகம் புதைத்து.
“ம்ம்ஹும்…” வேகமாகத் தலையாட்டியவள், “என்னைக் கொல்லுற மிஸ்டர் மலையாளி. என் அகத்துக்குள்ள எவ்ளோ தான் டீப்பா இறங்குவ… முடியல. மூச்சு முட்டுது.” எனும்போதே அவனது இறுக்கம் இன்னும் அதிகரித்தது.
“மூச்சு முட்டி நிண்டெ மூச்சு என்டெ மூச்சினுள்ளே அடங்கன வரை காதலிக்கும் காந்தாரி…” என்றான் ரசித்து.
அதில் கண்ணில் நீர் நிறைய, அதனை அடக்கிக்கொண்டு நிமிர்ந்தவள், “உண்மையைச் சொல்லு… லவ் அட் பர்ஸ்ட் சைட் தான?” எனக் குறும்பாகக் கேட்க, “நோ சான்ஸ்!” என நாக்கைத் துருத்தியதில் கடியாகி, அவனை அடிக்கத் துரத்திய அகமொழியிடம் இருந்து தப்பித்து ஓடினான் அர்ஜித் அகன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
87
+1
+1
1

