Loading

மணி பன்னிரண்டை நெருங்கி இருந்தது.

கீழே அமையாவின் சிரிப்பு சத்தம் அதிகமாகக் கேட்க, மீண்டும் குளித்து விட்டு வந்த அகமொழி இன்னும் படுக்கையில் இருந்து எழ மனமின்றி காலை ஆட்டிக்கொண்டு படுத்திருந்த அர்ஜித் அகன் மீது தலையணையைத் தூக்கி எறிந்தாள்.

“லன்சையும் அன்வியை கொண்டு வர சொன்னா, யாருக்கு புதுசா கல்யாணம் ஆகிருக்குன்னு எல்லாரும் கன்பியூஸ் ஆகிடுவாங்கடா…” எனச் சிணுங்கினாள்.

“நீ இன்னும் புதுப் பெண்ணு தன்னே காந்தாரி…” சில்மிஷமாகக் கண் சிமிட்டியதில், “போடா…” என வெட்கம் பெருக, காலைத் தரையில் உதைத்ததில், “நீ போடி…” என்று அவளைப் பிடித்து இழுத்தான்.

“ம்ம்ஹும்… ஒழுங்கா போய் குளி. மானமே போக போகுது உன்னால…” அவள் கெஞ்சலாகக் கூற,

“ஆல்ரெடி நீ மானம் வாங்கியாச்சே… இனி புதுசாய் போகான் எந்தா இரிக்குன்னு?” என புருவம் உயர்த்தினான்.

“நீ பேசி பேசி என்னை இன்னொரு தடவ குளிக்க வைக்காத சாமி…”

“அதானு ஞான் பரஞ்சது… கொஞ்சம் க்ஷமையோடே சேர்த்துக் குளிச்சாளாம்னு…(கொஞ்சம் வெயிட் செஞ்சு சேர்த்துக் குளிச்சுக்கலாம்னு)” விஷமம் மின்னும் பார்வையில் அவளைக் கலங்கடித்ததில், கொள்ளை வெட்கம் அள்ளிச் சென்றது.

“ம்ம் நீ வேணும்னா இன்னும் ரெண்டு நாளைக்கு சேர்த்து வச்சு குளிச்சுக்கோ…” என்றவளுக்கு சிரிப்பும் ஒருங்கே தோன்றிட, “மச் பெட்டர்…” என மூக்கைச் சுருக்கினான்.

“கருமும் கருமம்…” எனத் தலையில் அடித்துக்கொண்டு கீழிறங்கி வந்தவளுக்கு யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்ற வேண்டுதல் வேறு.

குமரன் ஹாலில் அமர்ந்திருக்க, அவரைக் கண்டதும் நெளிந்தபடி புன்னகைத்தவள், அடுக்களையை எட்டிப் பார்த்தாள்.

அமுதினியுடன் சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் அன்விதா.

“ஆனாலும் உன் பொறுப்பு கண்டு புல்லரிக்குது புதுப்பொண்ணே…” என்று அவள் கிண்டல் செய்யத் தொடங்கும் முன், அகமொழி அந்த வேலையைக் கையில் எடுத்திருந்தாள்.

அமுதினி தான், “நானும் சொல்லிட்டேன் அகா. கல்யாணம் ஆன மறுநாளே கிட்சன்ல வந்து நிக்காதன்னு… கேட்க மாட்டுறா…” எனக் குறைபட,

“நான் இந்த வீட்டுக்கு தான் புதுசு அத்தை. உங்களுக்கு இல்ல…” என்றதில், “இப்படி பேசி என் வாயை அடைச்சுடு…” என சிரித்துக்கொண்டார்.

அகமொழியின் புறம் திரும்பியவள், “லஞ்சும் நான் மேல தான் கொண்டு வரணும்னு நினைச்சேன்…” எனக் கண்சிமிட்ட, சிவந்த கன்னத்தை அடக்கியவள், “நாங்க எப்ப ப்ரேக்பாஸ்ட் ரூம்கு கொண்டு வர்றதாம்?” எனக் குறும்பாகக் கேட்டாள் அகமொழி.

“ஹே…” என அவளை மெல்லமாக அடித்தவளுக்கு, அமுதினி முன்பு தன்னைக் கோர்த்து விடுவதில் படபடப்பு எழுந்தது.

அவர் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை என்றாலும், அவரது மகனின் வாழ்வு எந்த தடையுமின்றி நிறைவாக இருக்க வேண்டுமென்ற ஆசை அவருக்கும் இருக்கும் எனப் புரிந்தது தான்.

அன்விதாவை கலாய்த்து விட்டு திருப்தியுடன், கார் பார்க்கிங்கில் நின்று ஷட்டில் காக் விளையாடிக்கொண்டிருந்த பிரணீத், ரிஷானை நோக்கி வந்தாள்.

அமையா வேணியுடன் அமர்ந்து அவர்கள் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்க, ரிஷான் தான், “நீ இன்னும் ஊருக்குப் போகலையா… ரோஷம் உள்ளவள்னு நினைச்சேன்…” என்று கிண்டலடித்தான்.

“உன் கூட ப்ரெண்டா இருந்தா ரோஷம் எப்படிடா வரும்… அமையாக்குட்டி…” என அவளைக் கொஞ்சியவளை பிரணீத் சிரிப்பை அடக்கிக்கொண்டு நக்கலாகப் பார்த்தான்.

“ஏதோ லான்ச் இருக்குன்னு சொன்ன மாதிரி இருந்துச்சே…” அகமொழிக்கு ஐயோ என இருந்தது.

ரிஷானோ, “ஹா ஹா அவள் அமையாக்கு தம்பி பாப்பா லான்ச் பண்றதை பத்தி சொல்லிருப்பா இல்ல அகா…” என வாரியதில், “ச்சே… குடும்பமா இது. இண்டீசன்ட் பெலோஸ்…” என போலி முறைப்பை பரிசாகக் கொடுத்தாள்.

“இந்த அம்மா எப்போ டீசன்ஸில பொரண்டுச்சு மச்சான்?” பிரணீத் வெகு சந்தேகமாக ரிஷானிடம் கேட்க, “அது தான் மச்சான் எனக்கும் தெரியல…” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“டேய் பட்டர்… நீ ஊர் சுத்திப் பார்க்கணும்னு தான இங்க இருந்த. இந்த இத்துப்போன ஷட்டில் விளையாட தான் நேத்து நான் கூப்புட்டப்ப வராம இருந்தியா…” என்றதில், வேணியும் அமையாவும் சிரித்தனர்.

மாடியில் இருந்து அர்ஜித் அகன் இறங்கும் அரவம் கேட்டதுமே லேசாய் பின்னால் சாய்ந்து அவனைப் பார்வையால் விழுங்கிக் கொள்ள, அவனும் அவளைக் கண்டு கண்ணடித்தான்.

“ப்ரோ… வாங்க ஒரு செட் போடலாம்…” ரிஷான் அழைத்ததில், “இவன் எதுக்கு வந்தோம்னே மறந்துட்டு முழு நேர பிளேயராவே மாறிட்டான் வேணி…” என அவள் அருகில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள்.

ஷட்டில் பேட்டை கையில் வாங்கியவன், அகமொழியைப் பார்த்து நீ வர்றியா என்பது போல பார்க்க, அவளோ கண்ணைச் சுருக்கி சோர்வாக மறுத்தாள்.

அதில் புரிந்தவன் போல, பெயருக்கு ஒரு செட் விளையாடி விட்டு அகமொழியின் அருகிலேயே சென்று அமர்ந்து கொள்ள, ப்ரணீத்தும் ரிஷானும் அவர்களது விழிமொழிகளை கண்டும் காணாதது போல இருந்து கொண்டனர். கூடவே ஒரு நமுட்டுச் சிரிப்பும்.

அமையா தான், “சித்தப்பா…” என அவன் மடியில் அமர்ந்து கொள்ள, “அமையா பேபி… நினக்கு ஈ வீடு பிடித்தோ?” எனக் கேட்டான் மென்மையாக.

“ம்ம்ம்ம்… நானும் ப்ரணீ சித்தப்பாவும் நைட்டு பில்லோ பைட் பண்ணுனோமே… அப்பறம் தாத்தா எனக்கு பசில்ஸ் வாங்கித் தந்தாங்க. வேணி அத்தை, என்னை ஸ்கூட்டில ரவுண்ட் கூட்டிட்டுப் போனாங்களே. அப்பறம் சித்தப்பா என்னைப் புது ஸ்கூல் கூட்டிட்டுப் போவாங்களாம். அங்க எனக்கு நிறைய டாய்ஸ் இருக்குமாம்…” எனத் துள்ளி குதித்தாள்.

“சூப்பர்… புது ஸ்கூலில் போயினால் நன்னாய் படிக்கணம்… குட் கேர்ளாய் இரிக்கணம்… ஓகேவா?” என அறிவுரை கூற, “ம்ம்ம்…” எனத் தலையாட்டினாள்.

“சித்தப்பா உன்னை மன்த்லி ஒன்ஸ் பார்க்க ஓடி வந்துடுவேன் ஓகேவா?”

இதற்கு பதில் அளிக்காது, “நீங்க எங்க போறீங்க? அமையா கூட தான இருப்பீங்க. சுஜா பாட்டி ஊருக்குப் போயிட்டு ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்க…” எனப் புருவம் சுருக்கியதும் அர்ஜித்தின் முகமே கலங்கிப்போனது.

எங்க போறீங்க எனக் கேட்டு கேட்டு தன்னை சங்கடப்படுத்திய பேத்திக்கு அப்போதைக்கு ஒரு பதில் கொடுத்திருந்தார் சுஜாதா.

பிரணீத் சட்டென விளையாட்டை நிறுத்தி இருக்க, அர்ஜித் தன்னை சமன்படுத்திக்கொண்டு,

“இவிடே வளரே ஹாட்டாய் இரிக்குன்னல்லோ (ஹாட்டா இருக்குல்ல) அமையா பேபி. சோ, பாட்டி, தாத்தா எல்லாரும் ஊரில் இரிக்கும்… நீ ஸ்கூல் லீவ் விட்டால் அவிடே வரும். சித்தப்பாக்கு ஒர்க் உண்டல்லோ… சோ, ஞான் ஒர்க் முடிச்சுட்டு வந்துடுவேனு… செரி தன்னே?” என்றதில், அவள் முகம் சோகமாகி விட்டது.

பொதுவாக குடும்பத்துடன் வெளியில் செல்லும்போதெல்லாம் விஷ்ணுவை விட அதிகம் அவளுடன் வருவது அர்ஜித் தான்.

அடிமாலியில் இருக்கும்போதும், அர்ஜித்தைப் பார்த்து அவனுடன் ஒரு நாள் முழுக்க இருந்து விடுவாள். அதனாலேயே அகமொழியின் வீட்டில் இருக்கும்போது அவளுக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை.

இப்போது அவளுக்கு நன்கு பரிட்சயமான அர்ஜித், தன்னை இங்கு தனியே விட்டுச் செல்லப் போகிறான் என்றதும் அமையாவிற்கு சின்னப் பயம் தோன்றியது.

“ப்ரணீ சித்தப்பா நின்டே கூடே இரிக்கும் அமையா… அவன் நின்னே சூப்பராய் நோக்கிக்கொள்ளும்…” அர்ஜித்தின் கூற்றில், “ப்ரணீ சித்தப்பாவும் இருக்கட்டும். நீங்களும் இருங்க… இல்லன்னா என்னை ஊருக்கு கூட்டிட்டுப் போங்க. அச்சனும் என்னை பார்க்கவே இல்ல…” என உர்ரென்ற முகத்துடன் கூற, அவனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

விஷ்ணுவின் பேச்சை கத்தரித்தவன், “ஊரில் இரிக்கும்போதும் சித்தப்பா ஒர்க் காரியமாய் வெளியூர் போகும் அல்லே… அதே போலே போயிட்டு வந்துடுவேன்… அவ்ளோதான்!” என்றதும் சற்று ஆசுவாசமானவள், “அப்போ வேலை முடிச்சு வந்துடுவீங்களா?” என மீண்டும் கேட்டுக்கொண்டாள்.

“ஆமே என்டே செல்ல மோளே… சித்தப்பாக்கு ஒரு போன் செய்தால் உடனே ஓடி வந்துடுவேனு…”

“அப்ப ஓகே…” என மீண்டும் இயல்பிற்கு மாறி, ப்ரணீத்திடம் ஓடினாள்.

அவனும் வலியை அடக்கிக்கொண்டு அவளைத் தூக்கிட, “சித்தப்பா, அர்ஜி சித்தப்பா வேலை முடிச்சு வந்துடுவாங்களாம். அமையா குட் கேர்ளா இருப்பேன்… நம்ம சாக்லேட் சாப்பிடலாமா?” எனக் கண்ணை உருட்டித் திருட்டுத்தனமாகக் கேட்டதில், அவன் முயன்று முறுவலித்து, “அம்மாக்கு தெரிஞ்சா அடிப்பா…” என்றான் இயல்பு தொனியில்.

அர்ஜித் அகனால் அங்கு இருக்கவே இயலவில்லை. நிமிர்ந்து பாராது மாடிக்குச் சென்று விட்டான். அகமொழிக்கு அவனது வலி நிறைந்த வதனம் கண்டு உள்ளம் வெதும்பியது. அதில் அவன் பின்னேயே செல்ல,

பார்ப்பவர்களுக்கு தான் அவர்களின் உணர்வுப் போராட்டம் வெகு வலியைத் தந்தது.

அன்விதா அடுப்பு மேடையில் கையூன்றி பாரமான இதயத்தை ஆழ்ந்த மூச்செடுத்து சரி செய்தாள்.

அமையாவிற்கு பிரணீத்தின் மீது அதிக அன்பிருக்கிறது. ஆனால், அவனைத் தந்தையாக அவள் ஏற்க தொடங்கும்போது தான், விஷ்ணுவையும் தந்தை ஸ்தானத்தில் இருந்து மறக்க தொடங்குவாள். உடனே எதுவும் மாறாது எனப் புரிந்தது. மாறும் வரை சில வலிகளைக் கடந்தே ஆக வேண்டுமென தீர்க்கமாக முடிவு எடுத்துக் கொண்டவள், இயல்பாகவே வாசலுக்குச் சென்றாள்.

“யாருக்கு சாக்லேட் வேணும்?” என முறைப்புடன் அமையாவைப் பார்க்க, அவள் திருதிருவென விழித்தாள்.

“ப்ரணீ… அவளுக்கு சாக்லேட் குடுத்த உனக்கு தான் அடி விழும்…” என அவனை விரல் நீட்டி எச்சரிக்க, அவளது முயற்சி புரிந்தவன் நொடியில் தன்னையும் சமன்படுத்திக்கொண்டு, “பாரு குட்டிச்சிட்டு… அம்மா திட்டுறா…” என உதட்டைப் பிதுக்கினான்.

“நோ, சித்தப்பாவை அடிக்க கூடாது. மிஸ்ட்ட சொல்லி கொடுத்துடுவேன்…” என அவளை போலவே பிரணீத்தைக் கட்டிக்கொண்டு தானும் மிரட்டியதில், “சொல்லிக்கோ… எனக்கு என்ன பயமா?” என இடுப்பில் கையூன்றினாள்.

“சித்தப்பா பாவம் தான. அடிச்சா வலிக்கும்…” என்று பிரணீத் போலியாய் கண்ணைக் கசக்க, சிரிப்பை அடக்கிய அன்விதா, “அப்போ சாக்லேட் சாப்பிட கூடாது ஓகேவா?” என்றதில் இருவரும் வேகமாக தலையசைத்தனர்.

நிலையை இயல்பாக்கியதில், மற்றவர்களுக்கும் சிறு ஆசுவாசம்.

“ரிஷு மாமா… விளையாடுங்க…” என்று மீண்டும் அமையா ஊக்கப்படுத்த, சங்கடமாக நின்றிருந்தவன் அவளுக்காக விளையாட, இருவரிடமும் முன்பிருந்த வேகம் இல்லை.

பின் அமையாவே எதுவோ நினைவு வந்தவளாக, பிரணீத்தின் சட்டையைப் பிடித்து இழுத்தாள்.

“சித்தப்பா… இனி டெய்லி நீங்க என் கூட விளையாடி தான் தூங்குவீங்களா?” எனக் கேட்க,

அவன் மெலிதாய் முறுவலித்தான்.

“எஸ். தூங்குறப்ப மட்டும் இல்ல. எப்பவும் உங்க கூடவே தான் இருப்பேன்.”

“அப்போ நீங்க அச்சன் மாதிரி அம்மாவை அடிக்க மாட்டீங்க தான? கோபப்பட்டு கத்த மாட்டீங்க தான?” சரளமாக கேட்டிருக்க, ப்ரணீத்துடன் இணைந்து, அடுக்களைக்குள் புகுந்த அன்விதாவும் அதிர்ந்து விட்டாள்.

விஷ்ணு அன்விதாவை அடித்தது அவள் மனதில் வடுவாய் பதிந்திருக்கிறது.

பிரணீத் கண்கள் கலங்க, “உன் அம்மான்னா எனக்கு உயிர் அமையா. அவள் மேல சின்னக் கீறல் கூட விழாம பார்த்துப்பேன். என் சிட்டுவையும் குட்டிச் சிட்டுவையும் எப்பவும் ஹர்ட் பண்ண மாட்டேன். ப்ராமிஸ்…” என அவள் கைப்பிடித்துக் கூற, அவன் கூறியது புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அவள் முகத்தில் சிறு தெளிவு.

மெத்தை மீது தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் அர்ஜித் அகன்.

கண்களில் நீர் திரண்டிருந்தது.

அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் இது சாதாரண இழப்பில்லை தானே!

இனி அமையாவும் அன்விதாவும் அவனது குடும்பத்தில் இணைந்தவர்கள் கிடையாது என்ற உண்மையை அவனாலேயே ஏற்க இயலாத போது, வீட்டுப் பெரியவர்கள் எப்படி இதை ஜீரணிக்கிறார்களோ என்ற வேதனை அதிகரித்தது.

அவன் அமர்ந்திருந்த கோலம் அகமொழிக்கு கடும் மனவருத்தத்தைக் கொடுக்க, அவனது அருகில் அமர்ந்து தோளைத் தொட்டவள், “அகன்…” என அழைக்க, “ம்ம்…” என்றான்.

“அமையா இதைக் கடந்து வந்துடுவா. கடக்க வேண்டியது நம்ம தான்…” அவள் மெதுவாகக் கூற, சிவந்த விழிகளுடன் அவளைப் பார்த்தான்.

அவன் முகத்தைப் பிடித்து அவளது தோளில் சாய்த்துக் கொண்டவள், “நீ இன்னும் அமையாவை விஷ்ணுவோட பொண்ணா பாக்குற அகன். அதான் வலிக்குது!” என்றதில்,

“இத்ர நாளும் வீட்டில் அவள் இல்லைங்கிலும், அப்போ அப்போ கண்டதினால் பெருசாய் ஒன்னும் தோன்னிதில்லா… இப்போ… ஒரு மாதிரி கஷ்டமாய் இரிக்குன்னு மொழி…(இவளோ நாளும் அவள் வீட்டில் இல்லைன்னாலும் அப்போ அப்போ பார்த்ததுனால பெருசா தெரியல. இப்ப கஷ்டமா இருக்கு மொழி)” என தனது அழுத்தத்தை எல்லாம், நெற்றி வழியே அவள் தோள்மீது பதித்தான்.

“இட்ஸ் ஓகே அகன். எல்லாம் சரியாகிடும். நீயே இப்படி பீல் பண்ணுனா, வீட்ல இருக்குறவங்களை நார்மல்கு கொண்டு வர முடியாது…”

“ம்ம்ம்… ஐ ஆம் ஓகே…”

“ஓகே’னு வாயில சொன்னா போதாது. வா… எந்திரி. அவளைக் கூட்டிட்டு எல்லாரும் வெளில போயிட்டு வரலாம். அவள் கேட்டதுக்காக இன்னைக்கு இருந்துட்டு நாளைக்கு கிளம்பலாம். ஒருத்தன் செஞ்ச தப்புக்காக எல்லாரும் வலி அனுபவிக்க வேணாம் அகன்.”

“அவள் ஏங்கிடுவாளா மொழி?” அவனிடமே அதிக ஏக்கம்.

“அதெல்லாம் அவள் ஜம்முன்னு இங்க செட் ஆகிடுவா. கொஞ்ச நாள்ல, இது அவள் குடும்பம் ஆகிடும். நீ ஏங்காம இருந்தா சரி தான். என் செல்லப் புருஷன்ல. பீல் பண்ணாத அகன். எவெரிதிங் வில் பி ஹீலிங்…” என அவன் நெற்றியில் முத்தமிட, மெல்ல நிதானமுற்றான்.

பின் மீண்டும் அவரவர் இயல்பாகி விளையாட்டைத் தொடங்கினர்.

“அக்கா… நீங்களும் வாங்க…” ரிஷான் அன்விதாவை வற்புறுத்தி அழைத்தான்.

“அவள் வேணாம். பேசாம இரு…” பிரணீத் மறுக்க,

“ஏன்? அக்கா நீங்களும் வாங்க…” என்று அடம்பிடித்தான்.

“அப்போ உன் அக்கா கூட நீயே விளையாடு…” என பேட்டை அன்விதாவிடம் கொடுத்து விட்டு அவனும் அகன் அகமொழியோடு பார்வையாளராக அமர, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்த ரிஷான் அன்விதாவுடன் விளையாடத் தொடங்கினான்.

ஒரு சர்வீஸ் கூட அவனால் அடிக்க இயலவில்லை. குனிந்து குனிந்து காக் எடுத்து சோர்வாகி விட்டவன், “யக்கா… என்ன விட்டுருக்கா! தெரியாம உன்னைக் கூப்பிட்டுட்டேன்…” எனக் கையெடுத்துக் கும்பிட, பிரணீத் வாயைப் பொத்தி சிரித்தான்.

“அதுக்கு தான் சொன்னேன் அவளை கூப்பிடாதன்னு. அவள் பிளேயர்டா…” என்றதில், “வாவ்… அப்படியா?” என வியப்பாகக் கேட்டாள் அகமொழி.

“ஸ்கூல் டேஸ்ல விளையாடுனது தான் அகா. இப்ப டச் விட்டுருச்சு…” அன்விதா கூறியதில், “டச் விட்டதுக்கே இப்படியா?” என ரிஷான் முறைத்ததில் அன்விதா வாயைப் பொத்தி சிரித்தாள். அர்ஜித் தான் அன்விதாவை அமைதியாகப் பார்த்தான். பலமுறை அவள் முறுவலைப் பார்த்திருக்கிறான். அதில் ஒரு நிறைவை இன்றே உணர்கிறான். அது அவனுக்கும் நிறைவைக் கொடுத்தது.

அகமொழி தான் நினைவு வந்தவளாக, “ஆமா ரூஹி எங்க?” என வினவ, ரிஷானின் முகம் மாறியது.

“அவள் வேணி ரூம்ல தான் தூங்குனா…” ரிஷான் கூறியதில், வேணியும் “நான் காலைல எந்திரிக்கும் போதே அவங்க ரூம்ல இல்லையே அண்ணா…” என்றாள்.

அன்விதாவும், “அவள் காலைல இருந்தே வீட்ல இல்ல அகா. கால் பண்ணதுக்கும் வெளில போயிருக்கேன்னு சொன்னா…” என்றதில், “அவள் மட்டும் தனியா எங்க போனா? நீ கூட போக வேண்டியது தான…” என ரிஷானைக் கண்டித்தாள் அகமொழி.

“அவள் போனதே எனக்குத் தெரியாது…” ரிஷான் முணுமுணுக்க, அகமொழி ரூஹிக்கே அழைத்தாள்.

“எங்கடி இருக்க?”

“இங்க பீச்ல தான்.”

“அறிவு கெட்டவளே… இது என்ன அடிமாலின்னு நினைச்சியா? உச்சி வெயில்ல பீச்சுக்கு போயிருக்க. கிளம்பி வா…” என அதட்ட, “ம்ம்…” என அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

பின் அனைவரும் அமர்ந்து அரட்டை அடிக்கத் தொடங்க, ரிஷான் மட்டும் வாசலையே தவிப்பாகப் பார்த்திருந்தான்.

அவள் அறையில் இருப்பதாக அல்லவா நினைத்திருந்தான்.

சிறிது நேரத்தில், தலை கலைந்து முகம் கறுத்து வந்த ரூஹி அனைவரையும் வாசலில் எதிர்பாராமல் திகைத்தாள்.

அகமொழியும் அவளைக் கண்டு திகைத்து, “நீ என்னடி இப்டி வந்து நிக்கிற?” என்றிட,

“அது… சன்ரைஸ் பார்க்க போனேன். அப்படியே அங்கேயே இருந்துட்டேன்…” என்றதில், “ஏதாவது சாப்பிட்டியா இல்லையா?” என அன்விதா கண்டித்து, அவளுக்கு பழச்சாறு கலக்கச் சென்றாள்.

ரிஷான், அவளைப் பாராமல் பேட்டை ஆராய்ந்தபடி இருக்க, அகமொழி இருவரையும் கவனித்து, “என்ன பிரச்சினை உங்க ரெண்டு பேருக்கும்?” என வினவ, “பிரச்சினை எதுவும் இல்லையே…” என்றனர் இருவரும் ஒன்றாக.

“ப்ச், அப்பறம் ஏன் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கீங்க? டேய் என்னடா பண்ணி தொலைச்ச?” அகமொழி ரிஷானை அடிக்க, “நான் ஒன்னுமே பண்ணல… நான் பாட்டுக்கு செவனேனு தான் இருக்கேன். சும்மா இருக்குறவன் கூட பிரச்சினை பண்றது அவள் தான்…” என்றதும் ரூஹி நிமிர்ந்து அவனைத் தீயாக முறைக்க, ரிஷான் விழிகளைத் திருப்பிக் கொண்டான்.

“பார்த்துடா. பழக்க தோஷத்துல பழி வாங்கிட போறா…” அகமொழி கிண்டல் செய்ததில்,

“ஆல்ரெடி செஞ்ச வரைக்கும் போதும்மா…” எனக் கூறும்போதே, ரூஹிக்கு சுருக்கென வைத்தது.

அவனது நிச்சயம் நின்றது அவளால் தான் எனக் குத்திக் காட்டுகிறானோ என்ற கோபத்தில் வெடுக்கென எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

“டேய் மச்சான் என்ன ஆச்சு?” என பிரணீத் வினவ, ரிஷானும் அவளது கோபத்தை எதிர்பாராது திகைத்து முகம் கன்றினான்.

“நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு கோச்சுட்டுப் போறா…” என்றவனை அகமொழி அழுத்தமாகப் பார்க்க, அதில் ரிஷான் தலையைக் குனிந்து, “அவள் ப்ரொபோஸ் பண்ணுனா…” என்றான் அமைதியாக.

அதில் அர்ஜித்தும் ப்ரணீத்தும் அர்த்தமாகப் பார்த்துக்கொள்ள, அகமொழி தான், “என்ன ப்ரொபோசல்?” என ஏதோ வியாபார நிமித்த ப்ரொபசல் என்று நினைத்துக் கேட்க, மூவரும் ஒன்றாக தலையில் அடித்ததில் விழித்தாள்.

“லவ் ப்ரொபோசல்!” ரிஷான் கடுப்பாக கூற, “பாருடா…” என அகமொழி வியந்தாள்.

“சரி… அதுக்கு நீ என்ன சொன்ன?”

“நான் என்ன சொல்ல? நோ தான் சொன்னேன்…”

“ஏன்?”

“ப்ச், போதும் அகா. ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்பை சொதப்பிட்டேன். இப்ப அவள்கூட இருக்குற ப்ரெண்ட்ஷிப்பும் போகணுமா. இப்ப கூட என் அப்பாகிட்ட சண்டை போட்டு தான் நான் மறுபடியும் அடிமாலிக்கே வந்தேன். அவங்களை எல்லாம் எனக்கு சமாளிக்க தெம்பில்லை. அவங்க பார்க்குற பொண்ணையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்ப தான் அவங்க என்னையும் நிம்மதியா விடுவாங்க. வர்றவளையும் நிம்மதியா விடுவாங்க. இது எல்லாத்துக்கும் மேல, எனக்கும் அவளுக்கும் இருக்குற நட்பை நான் கெடுக்க விரும்பல.”

“ஆக்சுவலி நல்ல முடிவு தான்…” மூச்சு வாங்க பேசியவனிடம் வெகு இயல்பாகக் கூறிய அகமொழியை முறைப்பாகப் பார்த்தவன், பின் சோர்ந்து தலையைத் தாழ்த்திக் கொள்ள,

“நிஜமா உன் வீட்ல எல்லாம் அவங்களுக்குப் பிடிக்காத, செட் ஆகாத பொண்ணை கூட்டிட்டுப் போய் இருக்க வைக்க முடியாது. நீ எடுத்த முடிவு சரி தான். ஆனா, உன்னால மேனேஜ் பண்ண முடியும்னா, ரூஹியையும் நீ கன்சிடர் பண்ணலாம்… அதுசரி அவளுக்கு என்ன திடீர் லவ்வு?”

“உங்களுக்குலாம் பதினைஞ்சு நாள்ல லவ் வந்த மாதிரி, அவளுக்கு இந்த ஒரு மாசத்துல லவ் வந்துடுச்சாம்…” என நொடித்தான்.

“வரட்டும் வரட்டும். அவளுக்கு ஏன் இந்த விபரீத முடிவுன்னு தெரியல…” எனப் பரிதாபம் கொண்டவளை ரிஷான் உணர்வின்றி பார்த்தான்.

அதில், “டேய் உன்னை லவ் பண்றதை சொல்லலைடா. உன் வீட்ல இருக்குறவங்க தொண தொண கேசு. என்னையவே கேள்வி கேட்டு ரவுண்ட் கட்டுனாங்க. அவளை என்ன என்ன கேள்வி கேட்பாங்களோ அதான் சொன்னேன்…” என்றிட, “என்ன கேட்டாங்க?” என்று ரிஷான் புருவம் சுருக்கினான்.

அர்ஜித்தும் தான். “ஞான் வந்து பிரச்சினை செஞ்சதுலயா?” அவன் கேட்டதில்,

“அதாவது அகன், நீ வந்து பிரச்சனை பண்ணலைன்னா கூட இவங்க அத்தை அந்தக் கல்யாணத்தை நடத்த விட்டிருக்க மாட்டாங்க. சேட் ட்ரூத். ஆக்சுவலி, கமிட் ஆகிட்டோமேனு வேற வழி இல்லாம மூவ் பண்ணிட்டு இருந்தேன். தெய்வம் மாதிரி வந்து என்னைக் காப்பாத்துன…” என்றவளை ரிஷான் மட்டுமல்லாது அர்ஜித்தும் குழப்பமாகப் பார்த்தான்.

பிரணீத், “என்ன நீ புது கதை சொல்ற?” என வினவ,

“ப்ரோ… இவங்க அத்தைக்கு என்னை சுத்தமா பிடிக்கல. என்கிட்ட அஞ்சு நிமிஷம் பேசுனாங்க. அதோட இந்தக் கல்யாணம் வேணுமா வேணாமான்ற நிலைக்கு வந்துட்டாங்க. மெடிக்கல் செக்கப்ல கூட இவ்ளோ கேள்வி கேட்க மாட்டாங்க ப்ரோ.” என்றவள்,

“உனக்காக தான் அவங்களை மேனேஜ் பண்ணிக்கிட்டேன் ரிஷு. பட் அப்ப நிச்சயம் நடந்துருந்தாலும் கல்யாணம் நடந்துருக்காது. அப்படியே கல்யாணம் நடந்துருந்தாலும் கண்டிப்பா நமக்குள்ள சண்டை இழுத்து விட்டுருப்பாங்க. இல்லன்னா நானே பொங்கி எழுந்து போங்கடா வந்துருப்பேன்… இது நடந்துருக்க வாய்ப்பிருக்கு…” என்றதில் ரிஷான் வலியுடன் அவளைப் பார்த்தான்.

“என்ன கேட்டாங்க என் அத்தை?”

“அதெல்லாம் டூ பெர்சனல். விடு… அகன் வந்ததுல எங்கேஜ்மெண்ட் நின்னது எனக்கு அப்போ ரிலீஃப்பா தான் இருந்துச்சு. பட் நீ என்னை நம்பலைன்னு கஷ்டமா இருந்துச்சு. இட் வாஸ் ரியலி ஹர்ட் மீ. பட், எல்லாத்துக்கும் மேல நீ என் ப்ரெண்ட். ஒரு கட்டத்துல நீ நார்மல் ஆகி வருவன்னு தெரியும். சோ கொஞ்ச கொஞ்சமா அந்த பெயின் போய்டுச்சு. அதான் திரும்பி நீ வந்தப்ப எனக்கு கோபமும் இல்ல.”

ரிஷானின் விழிகளில் நீர் துளிர்த்தது. “அதான் சொன்னேன்… இந்தப் பிரச்சினையே வேணாம். என்னால நீ கஷ்டப்பட்டது போதாதா? அவளையும் சேர்த்து கஷ்டப்படுத்த வேணாம்னு தான்… அவளுக்கு நோ சொன்னேன். அதை அவ புரிஞ்சுக்க மாட்டுறா. அவளும் ஹர்ட் ஆனா நிஜமா என்னால டாலரேட் பண்ண முடியாது அகா…” எனக் கண்ணீர் கசிய கூறியவனைக் கண்டு அகமொழிக்கு வேதனை அதிகரித்தது.

தான் இன்னுமே சுய அலசல் செய்து விட்டு அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கலாம் என்ற சிறு குற்ற உணர்ச்சி அவளுள் உதயமாக, அவளது முக மாற்றத்தை நொடியில் கண்டுகொண்டான் மலையாளி.

அர்ஜித் இருக்கையில் இருந்து எழுந்து “ரூஹி…” என அழைத்தான்.

அவளும் அறைக்குள் கண்ணீரில் நனைந்தபடி ரிஷானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

அர்ஜித்தின் சத்தம் கேட்டதில், ரூஹி முகத்தை அழுந்தத் துடைத்து விட்டு வெளியில் வர, “ஆத்யம் நிங்ஙளுடே கேரியரில் கான்செண்ட்ரேட் செய்யி… எல்லா முடிவும் உடனே உடனே எடுக்கணம்னு அவசியமில்லை… கொஞ்ச நாள் கழிஞ்ஞால் நிங்ஙளுக்கே ஒரு மெச்சூரிட்டி வரும்… அப்போ எது சரியோ ஆ முடிவை எடுக்குன்னு…

எல்லாமே பேஸ் செய்யான் பற்றுன்னு இடத்திலு இரிக்கும்போல் மாத்ரமானு, நமக்குன்னு ஒரு லைஃப் பார்ட்னரை சூஸ் செய்யேண்டது!(எல்லாமே பேஸ் செய்ற இடத்துல இருக்கும் போது தான் நமக்குன்னு ஒரு லைஃப் பார்ட்னரை சூஸ் பண்ணனும்” இறுதியாய் ரிஷானுக்கும் ஒரு குட்டு வைத்தான்.

அது தன்னவளை அவன் காயப்படுத்தியதற்காக கொடுத்தது.

ரிஷான் வருத்தத்துடன் பேச வரும்போதே, “அதுகொண்டு லைஃபில் வந்த சின்ன சின்ன புரிதலில்லாமைக்கு ஒட்டு மொத்த ஜீவிதத்தையும் (வாழ்க்கையையும்) லூஸில் விடுறது முட்டாள்தனம் ரிஷான்… இவிடே யாரும் பெர்ஃபெக்ட் இல்லா… பெர்ஃபெக்ட் செய்யான் ஸ்ரமிக்காதது மாத்ரமானு தெற்று!(பெர்பக்ட் செய்ய முயற்சி செய்யாதது தான் தப்பு)” என்றிட,

ரூஹி, “நான் வெய்ட் பண்றேன் ப்ரோ. அவனுக்கு பேஸ் பண்ண சிட்டுவேஷன் வர்ற வரை…” என்றதில், ரிஷான் தன்னை நொந்தான்.

அகமொழியும், “ரொம்ப யோசிச்சு குழம்ப வேணாம் ரிஷு. அகன் சொன்ன மாதிரி இப்ப நமக்கு கேரியர் முக்கியம். ரெண்டு பேரும் தேவையில்லாம ஆர்கியூ செஞ்சு, மாறி மாறி புரிய வைக்க முயற்சி செய்யாதீங்க. சில விஷயம், சில உணர்வுகள் முயற்சி செய்யாம தானாவே புரியும். புரியனும்…” என்றதில் இருவரின் முகத்திலும் தீவிர சிந்தனை.

“டேய் இங்க பல வருசமா லவ் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆள் ஒருத்தன் இருக்கேன். நீங்க ஏதோ கொஞ்ச நாள், அதுவும் சண்டை மட்டுமே போட்டுட்டு இருந்துட்டு, ஏதோ வருஷக்கணக்கா லவ் பண்ண மாதிரி அட்வைஸை அள்ளி வீசுறீங்க…” என பிரணீத் வாயில் கை வைத்தான்.

அகமொழி அசட்டுச் சிரிப்பை உதிர்க்க,

“எக்ஸ்பீரியன்ஸ்கு வருஷ கணக்கு தேவை இல்ல ப்ரோ. சண்டை கணக்கு தான் வேணும்…” என அகமொழி குறும்பாகக் கூற, “இஸ் இட்… அப்போ வா சிட்டு சண்டை போடலாம்…” என்று அன்விதாவை அழைத்தான்.

அவளோ, “அர்ஜி, முதல்ல மெச்சூரிட்டி உங்க ப்ரெண்டுக்கு தான் வரணும். இன்னும் அமையாவோட சேர்ந்து சாக்லேட்டை திருடி சாப்பிட்டுட்டு இருக்கான்…” என அன்விதா புகார் செய்ததில் அங்கு சிரிப்பலை எழுந்தது.

பின், அமையா அன்விதாவிடம் இருந்து பிரியா விடை பெற்று நால்வரும் அடிமாலிக்கு வந்தனர்.

அகமொழி நேராக அவளது வீட்டிற்கு செல்ல சொன்னதில், “நம்ம வீட்டுக்கு போகாமோ மொழி?” என்றான் கண்ணை சுருக்கி.
அதில் சிரித்தவள், “நம்ம வீட்டுக்கு தான் போக போறோம். அதுக்காக உன் ட்ரெஸை போட்டுக்கவா?” எனக் கிண்டல் செய்ததில், “டிரஸ் எந்தினு? ஆவசியமில்லா அல்லோ…” என்றான் குறும்பாக.

“அச்சோ… போடா…” என வெட்கம் நிரம்பியது.

அகமொழியின் வீட்டிற்கு தானும் சென்றவனிடம், பாஸ்கர் மன்னிப்பு வேண்டினார்.

“தெற்று என்டே மேலே கூடி உண்டல்லோ அச்சா…(தப்பு என் மேலயும் இருக்கு)” என்றவன் இருவரிடமும் இயல்பாகப் பேச, அவர்களுக்கு மனதில் இருந்த பாரமே அகன்றது.

ஆனால், இத்தனை நாள்களும் கலகலவென இருந்த வீடு வெறிச்சோடிய வருத்தம் தான் இருவர் முகத்திலும்.

வசந்தி, “சுஜாம்மா நேத்து இங்க வந்தாங்க தம்பி. நடந்ததை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க. அகாவை வீட்டுக்கு அனுப்ப சொல்லிக் கேட்டாங்க. அவங்களை பார்க்க கஷ்டமா இருக்கு. ஒரே நேரத்தில பையன் மருமகள் பேத்தினு எல்லா உறவையும் இழக்குறது சாதாரணம் இல்லையே…” என்றதில்,

“ம்ம்… மொழி வந்து கழியாள்(மொழி வந்தா எல்லாரையும் சரி செஞ்சுடுவா), அவள் எல்லாரையும் சரி செய்திடும்!” வெகு இயல்பாக கூறியவனிடம் அவள் மீது அத்தனை நம்பிக்கை போலும்.

அவள் மீண்டும் வந்து விட்டால், அனைத்தும் சரியாகி விடுமென. துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளின் கைகள் ஒரு நொடி நின்று விட்டது. இதழ்களில் புன்னகையும், நெகிழ்வும் ஒருங்கே தோன்றியது.

“சுஜாம்மாவும் அதே தான் சொன்னாங்க. அகா வந்தா, வீட்டை கலகலப்பா வச்சுப்பான்னு…” வசந்தியும் பெருமையுடன் கூற, “அவள் மட்டும் தான் வரணும்னு அல்லா. நீங்களும் அச்சனும் குறைச்ச நாள் எங்களோட இருக்கலாமே…” என அழைத்தான்.

அதில் இருவரும் தடுமாற,

“அம்மாக்கு கூட, நிங்ஙளோடு சம்சாரிச்சால் கொஞ்சமாய் ஆறுதல் கிட்டும் அம்மே… அதானு விளிச்சது(கேட்டேன்). நிங்ஙள் வந்து இருந்தால் நன்னாயிருக்கும்…” என்றதில் பாஸ்கர் யோசனையில் ஆழ்ந்தார்.

வரவில்லை என்றால் அவ்வளவு தான். தனது மகள் ஆட்டமாக ஆடி விடுவாள். ஏற்கனவே, வேலையாள்களை வைத்துக் கொள்ளாததற்கே திட்டி விட்டாளே.

“நாங்க வரோம் மாப்பிள்ளை…” பாஸ்கர் உடனே சம்மதித்ததில் வசந்திக்கு வியப்பு தான்.

அகமொழி அர்ஜித் அகனை அர்த்தத்துடன் பார்த்து வைத்தாள்.

அவனது வீட்டாரை சமன் செய்ய அவன் அழைக்கவில்லை. தனியாகவே இருந்தவர்கள், சில நாள்களாக சிறு குழந்தையுடன் நேரத்தை செலவழித்து விட்டு பின் மீண்டும் தனிமையாக்கப் பட்டதில் இருந்து சற்று வெளியில் வரவே அழைத்திருக்கிறான் எனப் புரிந்தது.

அதில் சிறு புன்னகை அவளிடம்.

அகமொழி மீண்டும் புகுந்த வீட்டிற்கு செல்ல, அகன் சொன்னது போன்றே பேசி பேசியே ஒவ்வொருவரையும் கரைத்திருந்தாள். வசந்தியும் பாஸ்கரும் உடன் இருந்தது அவர்களது அத்தனை ஆறுதலாகவும் இருந்தது.

வசந்திக்கு அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் உரைக்க ஆசை தான். ஆனால், பெண்ணைக் கட்டி கொடுத்த வீடு. அவளும் அங்கு இல்லாததால் சங்கடப்பட்டே போகாமல் இருந்தார். ஆனால், கல்யாணியும் கேசவ நாயரும் வசந்தியை சொந்தப் பெண் போல நடத்த, வசந்திக்கு அத்தனை இதமாக இருந்தது இந்தப் புது உறவு.

பாஸ்கரும் கோபால கிருஷ்ணனுடன் அவ்வப்போது எஸ்டேட்டிற்கு செல்வதை வழக்கமாக்கி இருக்க, அனைவரும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

கிளாம்பிங் வேலைகள் கடைசி நேரத்தில் கொஞ்சம் இழுத்து விட, அவளும் வேலையில் மூழ்கினாள்.

பகலில் மட்டுமே. இரவு ஏழு மணிக்கு மணி அடித்தது போல இருவரும் வீட்டிற்கு வந்து விடுவர்.

அவனுக்குப் பிடித்த புடவையும் அணிந்து கொள்பவள், தினமும் அவனைக் கிறங்கடிக்கும் வேலையை மட்டுமே செவ்வனே செய்தாள்.

இதற்கிடையில் ஒரு நாள் காலையில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அர்ஜித் அகனிடம் தயக்கமாக பேசினாள் அகமொழி.

“அகன்…”

“ம்ம்…” அவன் கண்ணாடியில் இருந்து பார்வையைத் திருப்ப,

“அது… உங்கிட்ட ஒன்னு கேட்கணும்…” என்று ஆரம்பித்தாள்.

“என்னடி?”

“நெக்ஸ்ட் வீக் கிளாம்பிங் லான்ச். நீ… நீ வருவியா?” என வெகு தயக்கத்துடனே முடித்தாள்.

அந்த தொழிலினால் அல்லவோ இத்தனை பிரச்சினையும். இனி தொழில் ரீதியாக பேசிக்கொள்ளவே வேண்டாமென்று முடிவெடுத்த பின், அதனாலேயே அவனையும் அதிகம் பேசி விட்டதன்பின், தனது தொழில்ரீதியாக அவனிடம் பேச சிறு சங்கடம் இருந்தது அவளுக்கு.

ஆனாலும் அவனை லான்ச்சிற்கு அழைக்க மனம் உந்திட, கேட்டும் விட்டாள்.

கண்ணாடி வழியே அவளது தவிப்பை ரசித்தவன், “ஞான் இல்லாதேயோ? தீர்ச்சயாயும் (கண்டிப்பா) வராம்…” என்றான் கண்சிமிட்டி.

அதுவே அவளுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது போலும்.

“தேங்க்ஸ் அகன்…” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் துள்ளிக் குதித்து ஓட முயன்றவளின், கையைப் பிடித்தவன், “பட், ஒன் கண்டிஷன்!” என்றான்.

“என்ன?”

“பர்ஸ்ட் புக்கிங் நமக்கு மாத்ரமானு… ஹனிமூனுக்கு!” எனக் குறும்பு வழிய கூற, “அச்சோ… ஆல்ரெடி லான்ச் முடிஞ்சு ஒரு வாரம் நாலு கிளாம்ப்பும் புக் ஆகிடுச்சே. அன்வி தான், லான்ச்சிங் ஆபர்னு புக்கிங் ஓபன் பண்ண சொன்னா. ம்ம்ம்… ஹாபிட் ஹவுஸ் இன்னும் முடியலைல. அதுல பர்ஸ்ட் புக்கிங் நமக்கு தான் ஓகேவா?” முதலில் வருந்திப் பின் தீர்வும் அவளே கூற, “ம்ம்ம் ஓகே டீல்! பட், எனிக்கு ஆஃபர் ஒன்னும் இல்லையோ காந்தாரி?” என்றான் அர்த்தமாக.

“நானே ஆஃபர் தான் மிஸ்டர் மலையாளி…” குறும்பு கொப்பளித்ததில், அவனோ அவள் செவியில் இதழ்களால் வருடிக் கிசுகிசுக்க, தடதடவென தேகம் முழுக்க சிவந்து சிலிர்த்துப் போனது.

“போ… அகன்! பிளஷ்ஷா வருது…” என்று அவன் மீதே சாய்ந்து வெட்கத்தை மறைத்துக்கொள்ள, அவனிடம் ரசனைப் புன்னகை தவழ்ந்தது.

அகன் வசமாவாள்(வான்)
மேகா

அடுத்த பகுதி இறுதி அத்தியாயம் டியர்ஸ்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 116

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
117
+1
4
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அதுக்குள்ள final epi வந்துடுச்சா? Will miss both Agas😔…