
திருப்பம்-12
‘எப்படி இருக்கு தெரியுமா? நா.. நான் கேட்டேனா? நீயா கொடுத்த. இப்ப நீயே எடுத்துக்கப் பாக்குற. இது நியாயமா? வலிக்குது. சந்தனம் குடுத்த திரிவக்ரா பாட்டியோட கூன் முதுக மறையவச்ச மாதிரி என் அப்பாவோட கோபத்தையும் மறைய வைக்க மாட்டியா?’ என்று உள்ளே குழந்தையாய் எழுந்தருளியிருக்கும் கண்ணனிடம் குழந்தைப் போல் சண்டையிட்டாள்.
‘எடுத்துப்பியா என்கிட்டருந்து அவர? நான் தரமாட்டேன். எ..என்னை.. அவர் என்னை எப்படி புரிஞ்சுக்குறார்னு பார்த்தத் தானே? அப்பா ஆயிரம் பேரை நிறுத்தலாம். ஆனா என் ஆசை புரிஞ்சு, என் பயம் அறிஞ்சு, எனக்காக அவங்க லெட்டர் அனுப்பிடுவாங்களா? அனுப்பினாலும்தான் இவரைப்போல என்னை வெறும் காகித வார்த்தைகளால் உணர்ந்துட முடியுமா?’ என்று மனதோடு இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தவளுக்கு மெல்லிய விசும்பல் எழுந்தது.
இதழ் கடித்து அடக்கினாள்.
‘ப்ளீஸ். எனக்கு இந்த சோகத்தைக் கொடுத்துடாத. என்னால இதை தாங்கவே முடியலை. ஒரு நாளுக்கே செத்துடுவேன் போல இருக்கு. என்னால இதை தாங்கவே முடியலை. ப்ளீஸ். எனக்கு உதவி பண்ணு. இதை சரி செய்’ என்று வேண்டிக் கொண்டு சங்கமித்ரா கண் திறக்க, அவளுக்கு எதிரே, அவள் மனதை கொள்ளை கொண்ட கண்ணன் நின்றிருந்தான்.
நம்ப இயலவில்லை. ‘கோவில்ல தானே இருக்கேன்?’ என்று பக்கவாட்டாய் அவள் திரும்பிப் பார்க்க, சந்நிதியினுள் அந்த மாயக் கண்ணன் கள்ளமில்லா புன்னகையுடன் நின்றிருந்தான்.
மீண்டும் பாவை தனக்கு முன்னே நோக்க, வேதனையை மறைக்கும் அழுத்தமான விழிகளுடன் அவள் மனதை கொள்ளை கொண்ட மன்னன் நின்றிருந்தான்.
அப்பட்டமான ஆச்சரியத்தைத் காட்டிய அவள் பால் முகத்தை அந்த வேதனையிலும் ரசிக்கவே செய்தன, அவன் விழிகள்.
கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மணியடிக்கும் சப்தம் ஒன்று பலமாய் கேட்க, திடுக்கிட்டு சுயம் அடைந்தவள் சந்நிதியைக் கண்டாள்.
அவள் எப்போதும் வரும் வாடிக்கையான பக்தை என்பதால் ஐயருக்கு அவளைத் தெரிந்தே இருந்தது. ஆனால் இன்று ஏதோ மன பாரத்துடன் வந்து நின்று அவள் கண்ணீர் வடிப்பதால் அவரும் அமைதியாக உள்ளே சென்று அப்போதே திரும்பியிருந்தார்.
“எதுவும் வருத்தப்படாதமா கொழந்த. அந்த பகவான் இருக்கான். அந்த கள்ளமில்லாத கண்ணன் உனக்கு நல்லது மட்டுந்தான் பண்ணுவான். அவனுக்கு அவன் பக்தா அழுதா மனசு தாங்காதுமா” என்று அவ் ஐயர் கூற,
சொல்ல இயலாத நிம்மதியை அந்த வார்த்தைகள் கொடுத்தது.
கரம் கூப்பித் தனக்கான குங்குமத்தை வாங்கிக் கொண்டு, நன்றி கூறினாள்.
ஐயர் திரும்பி வளவனிடம் நீட்ட, அவன் வாங்க மறுத்துவிட்டான். பார்வை எல்லாம் பாவை மேல்தான்.
அவன் வாங்காததன் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. அவள் கடிதம். அதில் அவள் எழுதிய வார்த்தைகள். ‘பிரகாரம் சுற்றும்போது வந்து வச்சுவிடுவேன்னு சொன்னல்ல?’ என்ற கேள்வியை அவன் விழிகள் தாங்கி நிற்க, மீண்டும் அவள் கண்கள் உடைப்பெடுத்தது.
கண்ணனைத் தரிசித்துவிட்டு அவள் பட்டென நகர்ந்து விட,
ஐந்தடி இடைவெளியில் அழுத்தமான அடிகளோடு அவளைப் பின் தொடர்ந்தான்.
மிக மிக மென்மையாய், மெதுவாய் அடி வைத்தவள் முழு பிராகத்தை சுற்றி முடிக்க எத்தனை மெதுவாக இயலுமோ அத்தனை மெதுவாக சென்றாள்.
‘நான் ஆசையா எழுதின வரிகள் இப்படியான ஒரு சூழல்ல தான் நெனவா நடக்கனுமா?’ என்று வருத்தம் கொண்டவள், லேசாய் திரும்பிப் பார்க்க, அவளைப் பார்த்தபடிதான் நடந்து வந்துக் கொண்டிருந்தான்.
‘பிடிச்சிருக்கா?’ என்று அவனைப் பார்த்த நொடி அவள் மனமே அவளிடம் கேள்வி கேட்டது.
‘பிடிச்சிருக்குதான் ஆனா முடியலையே’ என்று மறுகியவள், பிரகாரம் சுற்றி முடித்திட, மீண்டும் அடுத்த சுற்று சுற்றினாள்.
இப்படியே மூன்று முறை சுற்றிவிட்டாள். அவனும் சளிக்காமல் அவள் பின்னோடே சுற்றினான்.
நான்காம் சுற்று பாதியைக் கடந்தவள் அப்படியே நின்றுவிட, அவனும் நின்றிருந்தான். கண்களை அழுந்த மூடித் திறந்த சங்கமித்ரா, நுரையீரலை நிறைக்குமளவு காற்றை இழுத்து சுவாசித்துவிட்டுத் திரும்ப, கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அழுத்தமாய் அவளைப் பார்த்து நின்றான்.
அவன் பார்வையின் வீச்சைத் தாங்க இயலவில்லை அவளால். தனது கைப்பையைத் திறந்தவள் அதிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தாள். அங்கே சுவர் திண்டில் அதை வைத்தவள் விறுவிறுவென அவன் அருகே சென்று குங்குமத்தை அவனுக்கு வைத்துவிட்டு, கண்ணீர் கறைபுரண்டு ஓட, எழுந்த கேவல் ஒலியை அடக்கிக் கொண்டு ஓடாத குறையாய் நகர்ந்து சென்றாள்.
செல்பவளையே ஆழ்ந்த பார்வைப் பார்த்து நின்றவன், சுவரில் சிறகடிக்கும் அவள் கடிதத்தின் அருகே சென்றான்.
பிரித்ததும் எப்போதும் போல் சங்குப்பூ இடம்பெற்றிருந்தது. ஆனால் கொஞ்சம் வாடி வதங்கிய பூவாக வைத்திருந்தாள்.
அப்பூவைத் தன் உள்ளங்கையில் கசக்கிப் பிடித்துக் கொண்டவன், கடிதத்தைப் பிரிக்க, கண்ணீர்த் துளியின் தடங்கள் அக்காகிதத்தில் தெரிந்தது.
என்னென்னவோ எழுதத் துடித்தவளது வார்த்தைகளையெல்லாம் அக்கண்ணீர் உணர்த்திட, ‘விட்றாதீங்க’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அந்த முழு காகிதத்தின் உச்சியோரத்தில் இருந்தது.
நெஞ்சோடு பொத்திக் கொண்டான்.
அவள் கண்ணீர் தடங்கள் அவன் சட்டையை நனைத்து நெஞ்சம் ஊடுறுவியதாய் அவன் உள்ளம் தகித்தது.
‘விட்டுடுவேனாடி உன்ன?’ என்று மனதோடு கேட்டுக் கொண்டவன், ஒரு முடிவெடுத்தோனாய் வெளியேறினான்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த சங்கமித்ரா அமைதியாக அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
கூடத்து நீள்விருக்கையில் தலை சாய்த்து குழப்பமான மனநிலையோடு அமர்ந்திருந்த சச்சிதானந்தம் அருகே வந்தமர்ந்த தாட்சாயணி, “என்னங்க” என்க,
பெரியவர் மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தார்.
“கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நடந்தது அவங்க பேசினதுலாம் கொஞ்சம் அதிகப்படி தான். நம்ம மாப்பிள்ளைக்கு மரியாதைத் தரக்கூடாதுனு அவங்க பேசினது தப்புதான். ஆனா அதுக்காக கல்யாணத்த நிறுத்தியே ஆகனுமா?” என்று தாட்சாயணி கேட்க,
“நம்ம மாப்பிள்ளைய பேசினாங்கனு மட்டுமில்ல தாட்சா. அந்தம்மா கோபத்தைப் பார்த்தியா? எல்லா இடத்திலும் தனக்கான முன்னுரிமை கேட்டு சண்டை போடும் ஒருத்தங்க வீட்டில் மருமகளை எப்படி நடத்துவாங்கனு யோசிச்சுப் பாரு. இத்தனைக்குப் பிறகு நம்ம பொண்ணு அங்க போனா, என் மகனுக்கு மரியாத குடுக்காத வீட்டுல வளந்தவ தானே நீனு அவள கஷ்டப்படுத்திட மாட்டாங்களா?” என்று கேட்டார்.
நியாயமானக் கேள்வியாகத்தான் பட்டது அவருக்கு. ஆனால் மகளின் வேதனைக்கு முன் இந்த நியாய, அநியாயங்களையெல்லாம் யோசிக்க முடியவில்லை அவராள்.
“நான் சொல்றேன்னு நினைக்காதீங்க. நம்ம கல்யாணமெல்லாம் எப்படி நடந்தது. உப்பு புளிக்கெல்லாம் சண்டை வந்தது தானே? நான் உங்களைக் கட்டிகிட்டு சந்தோஷமா இல்லையா? பொண்ணுக்குப் போற வீட்ல புருஷனத்தான்டி மத்த உறவுகளோட அனுசரனை முக்கியம் தான். அதுக்காக இருக்குற அத்தனை உறவுமே அனுசரனையா இருக்கனும்னு ஆசைப்பட்டா அது பேராசையாயிடாதா? இப்ப வர அவங்க மட்டும் தான் நம்மகிட்ட சண்டை போட்டதெல்லாம். அவங்க வீட்டு மத்த ஆட்கள் யாருமே இதுபற்றி பேசலையே?” என்று தாட்சாயணி கேட்க,
சச்சிதானந்தம் குழப்பமாய் விழித்தார்.
அந்த நேரம் பார்த்து, அவிநாஷ் உள்ளேவர, “வாங்க மாப்பிள்ளை” என்று இருவரும் எழுந்து நின்றனர்.
“என்ன முடிவு எடுத்துருக்கீங்க மாமா” என்று கேட்டபடி அவன் அமர,
சச்சிதானந்தம் யோசனையாய் இரு விரல் கொண்டு நெற்றியை வருடிக் கொண்டார்.
“மாமா நம்ம பாப்பா வாழ்க்கை. இவர்தான்னு முடிவு பண்ணி அவளுக்கு ஒருத்தர காட்டிட்டு, இல்லைனு சொன்னா சட்டுனு அவளாலயும்தான் எப்படி கடந்துவர முடியும்? பாப்பா முகத்தை கவனிச்சு பார்த்தீங்களா நீங்க?” என்று அவிநாஷ் கேட்க,
சச்சிதானந்தம் அப்போதே மகளின் உணர்வற்ற முகத்தை மனதில் நிலைநிறுத்தினார்.
“அவ அப்பா, நீங்கக் காட்டி இவன்தான்னு சொல்றவன் தான் தனக்கு எல்லாம்னு இருந்தவ. வெளிய சொல்லிக்கலைனாலும் இயல்பா மனசுக்குள்ள வர கனவெல்லாம் ஒருத்தனோட சேர்ந்து கண்டுட்டு இப்ப அந்த இடத்துக்கு வேற ஆள நிறுத்தப்போறதா நீங்க சொன்னா அவளால எப்படி மாத்திக்க முடியும்?” என்று அவிநாஷ் கேட்க,
“அதுக்காக அவங்கள ஏத்துக்க சொல்றீங்களா மாப்ள?” என்றார்.
“ஏத்துக்கோங்க மாமா. தப்பென்ன இருக்கு? உங்க மக வாழ்க்கை முக்கியமில்லையா உங்களுக்கு? உங்களுக்கு எப்படியோ மாமா. ஆனா எனக்கு என் பாப்பா வாழ்க்கை தான் முக்கியம்” என்று அவன் கூற, வாசல் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.
தாட்சாயணி சென்று கதவைத் திறக்க, அமைதியான மற்றும் எளிமையான தோற்றத்துடன் சுயம்புலிங்கமும், அவர் அருகே அழுத்தமான முகத்துடன் திருமாவளவனும் நின்றிருந்தனர்.
தாட்சாயணி திகைத்துப் பார்த்ததெல்லாம் இரு விநாடிகள் தான்.
“வாங்க சம்மந்தி. வாங்க மாப்பிள்ளை” என்று கூறியவர் வழிவிட, இருவருமாக உள்ளே நுழைந்தனர்.
வந்தவர்களைக் கண்டு அதிர்வாய் சச்சிதானந்தம் எழ, ஏதோ ஒரு நல்லது நிகழப் போவதை உணர்ந்து ஆனந்தமாய் அவிநாஷ் எழுந்தான்.
தோளில் போட்டிருக்கும் துண்டை சரிபார்த்த சுயம்புலிங்கம், கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைக்க, தானும் வணக்கம் வைத்த சச்சிதானந்தம், “உட்காருங்க” என்று கூறினார்.
பெரியவர்கள் இருவரும் எதிரெதிரே அமர, அவிநாஷும் வளவனும் நின்றுகொண்டனர்.
வளவனின் பார்வை மங்கையவள் அறையைத்தான் நொடிக்கொருமுறை தொட்டுக் கொண்டிருந்தது.
ஒரு ஆழ்ந்த அமைதியை பெருமூச்சுவிட்டுக் களைத்த சுயம்புலிங்கம், “என்னைய மன்னிசுடுக சம்மந்தி” என்று கூற,
சச்சிதானந்தம் அவரை வியப்பாய் பார்த்தார்.
அவிநாஷைப் பார்த்து, “நீயலும் மன்னிசுடுவ மக்கா. என் சம்சாரம், புள்ளையனு வந்துபுட்டா இப்படித்தேம். அந்த வேகத்துலதான் பேசிபுட்டாவ. நேத்தே பேசுவோமானுதேம் பாத்தேம். எல்லாருமே கோபமாதேம் இருந்துருப்பீய. அதேம் ஆறப்போட்டு பேசுவம்னு இன்னிக்கு வரேம்” என்று அவர் கூற,
அவிநாஷ் சச்சிதானந்தத்தை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்தான்.
“எனக்கும் ரெண்டு மருமவேன் இருக்காவ. இந்தா இன்னொரு மோளேயும் வச்சுருக்கேம். எனக்கு எம் மருமவேன் எல்லாமே ஒசத்திதேம். அப்படியிருக்க என்னைய யாரும் இப்படி கேட்டுகிட்டாலும் கோவம் வாரத்தேம் செய்யும். ஒரே வெப்றாளமா (மனப்புழுக்கமா) போச்சு” என்று சுயம்புலிங்கம் கூற,
சச்சிதானந்தத்திற்கு என்ன பதிலாற்றுவது என்றே புரியவில்லை.
தன் மகனைப் பார்த்த சுயம்புலிங்கம், “எம்மோனே கோபமெல்லாம் பட்டு பாத்தது இல்ல சம்மந்தி. எப்போதாவதுதேம் வரும். ஆனா வார கோவத்துக்கு அர்த்தம் இருக்கும். இந்த ஒடக்குத் தெரிஞ்சு கோபப்பட்டதோட அவேம் கண்ணுல வேதனைய பாத்தேம். எம்புள்ளைக்கு எது சரினு புரிஞ்சுது” என்று கூறி அவரைப் பார்த்து, “ஏம் மக்கா ஏதும் பேசமாட்டிக்கீய? கோபம் போலியாக்கும்? நான் என் சம்சாரத்த வேணுமின்னா அந்த தம்பிகிட்ட மன்னிப்பு கேக்க சொல்லுதேம்” என்று கூற, “அய்யோ பெரியப்பா” என்று அவிநாஷ் பதறினான்.
“ஏம்லே பதறுரவ? தப்பு செஞ்சா ஆரும் மன்னிப்புக் கேக்குறதுதேம். வயசென்னருக்கு அதுல?” என்று அவர் கூற,
“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு பெரியப்பா” என்று கனிவான புன்னகையுடன் கூறினான்.
அதில் சிரித்துக் கொண்டவர் சச்சிதானந்தத்தைப் பார்க்க, அவர் முகத்தில் குழப்ப ரேகைகள் தாண்டவமாடியது.
“மாமா” என்று அவிநாஷ் அவர் தோள் தொட, மருமகன் கரத்ததை அழுந்தத் தட்டிக் கொடுத்தபடி நிமிர்ந்து அமர்ந்தார்.
கண்கள் சிவக்க அமைதியும் அழுத்தமுமாய் நின்றிருந்த வளவன் விழிகள், அவள் அறைவிட்டு வெளியே வந்துவிட மாட்டாளா? என்பதிலேயே படிந்திருந்தது.
அவன் உள்ளம் அவள் அகம் சென்றடைந்ததோ என்னவோ? தற்செயலாகக் கதவைத் திறந்துக் கொண்டு வந்த பாவையவள், கூடத்தில் நிற்பவனை அதிர்வாகக் கண்டாள்.
சச்சிதானந்தம் மற்றும் அவிநாஷ் அவளுக்கு புறம் காட்டி நிற்க, அவளவனும் சுயம்புலிங்கமும் அவள் முகம் பார்க்கும்படி இருந்தனர்.
வெளிப்படையான அதிர்ச்சியோடு நெஞ்சை நீவிக் கொண்டவள் விழிகள் நொடியில் தழும்பியது.
சட்டெனத் திரும்பிக் கொண்டாள்.
ஏறி இறங்கும் நெஞ்சாங்கூட்டை அழுத்தி சமன் செய்தவள், தன் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டுத் திரும்ப, அவளைப் பார்த்த சுயம்புலிங்கம், “மக்ளே வாமா” என்றார்.
அவள் பெற்றோரும் அத்தானும் அவளைத் திரும்பிப் பார்க்க, சிரம் தாழ்த்தியபடி அவ்விடம் வந்து நின்றாள்.
இதழ் கடித்து சிரம் தாழ்த்தி அவள் நின்றிருந்த கோலம், சுயம்புலிங்கத்திற்கு அவள் தவிப்பை உணர்த்தியது. முதலில் தன் மகனுக்காக, ‘இவதான்யா என் மருமவ’ என்று முடிவெடுத்திருந்தவர் தற்போது அவளுக்காக அம்முடிவை எடுத்திருந்தார்.
“சம்மந்தி, எம்மூட்டு மவாலட்சுமிய பறிச்சுகிடாதீய” என்று சுயம்புலிங்கம் கூற,
சச்சிதானந்தம் பதறித்தான் போனார்.
நல் மனிதர், பெரிய குடும்பம், குணமான மனிதர் என்று அவர் கேட்டதற்கு சான்றாய், எத்தனை பொறுமையாக வந்து தங்கள் பக்கம் விளக்கி, மனைவியையும் சபையில் விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றார், என்று வியப்பாகத்தான் இருந்தது சச்சிதானந்தத்திற்கு. காற்றில் வைத்தக் கற்பூரத்தைப் போல் மெல்ல மெல்ல அவர் கோபம் கரைய, “என்னையும் மன்னிச்சுடுங்க சம்மந்தி” என்று கூறினார்.
நடுநடுங்கும் கரங்களுக்கு பிடிமானம் இல்லாமல் அவிநாஷின் கைச்சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் முதுகில் மறைந்து நின்றாள் பெண்.
அவிநாஷ் அவளை புன்னகையாய் பார்த்துத் தோளில் தட்டிக் கொடுத்து முன்னே நிறுத்த முயற்சிக்க, ம்ஹும் வருவேனா என்று பின்னே நின்றுகொண்டாள்.
திருமாவளவனுக்கும் நெஞ்சம் குளிர்ந்து போனது.
“நானும் கொஞ்சம் கோவப்படுட்டேன்” என்று சச்சிதானந்தம் கூற,
“சரியான முறையான வெசயத்துக்கு கோவம் தேவதான? போவுது விடுங்க. இனி ஆற காரியத்தப் பாப்போம்” என்று கூறினார்.
சச்சிதானந்தம் புன்னகையாய் வளவனை நோக்க, கரம் கூப்பியவன் மனமார, “ரொம்ப நன்றிங்க மாமா” என்றான்.
அவனது செயல் அவரை வெகுவாய் சங்கடப்படுத்தியது.
“என்ன மாப்ள நீங்க?” என்று அவர் எழ,
அவிநாஷ் மச்சினியை நகர்த்திவிட்டு அவன் அருகே சென்று தோள் தட்டினான்.
“மன்னிச்சுடுவ அண்ணே” என்று வளவன் கூற,
“அட என்னய்யா நீ?” என்ற அவிநாஷ் அவனை ஆறத்தழுவிக் கொண்டான்.
அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட வளவன், “தேங்ஸ் ண்ணே” என்று மெல்லிய குரலில் கூறினான்.
அவிநாஷ் அவனைப் புரியாமல் பார்க்க, “எங்களுக்காவ நீங்க நிக்குதீயனு உள்ள வரும்போதே புரிஞ்சுட்டு. அதுக்குதான்” என்று கூறினான்.
புன்னகையாய் அவன் தோள் தட்டி, “என் மூத்த புள்ள அவ. அவ ஆசை அழிய நான் ஆளாவேனா?” என்க,
“மகாராணியாட்டம் பாத்துக்குதேம்” என்று கூறினான்.
மெல்லியக் குரலில் என்றாலும் அவன் கடைசியாக சொன்ன வாக்கியம் அனைவருக்குமே கேட்டது.
தந்தையாய் சச்சிதானந்தத்திற்கு நெஞ்சம் நிறைந்தது.
தாட்சாயணி மனம் நிறைந்துத் தன் மகளைக் காண, அவள் இன்பக்கண்ணீர் சிந்திய வண்ணம் நின்றுகொண்டிருந்தாள்.
அவளால் அவள் நிலையை சொல்லில் வடித்திட இயலாது. அத்தனை ஆனந்தமாக இருந்தது. எங்கே தன் நேசம் தன் கைமீறிப் போய்விடுமோ? என்ற அச்சத்தில் அவள் துடித்தத் துடிப்பு, இதயத்தின் அணுக்களில் எல்லாம் அமிலத்தை ஊற்றியிருந்தது. தற்போது சந்தனத்தை பன்னீரில் குழைத்துப் பூசியதைப் போல் குளிர்ந்து போனது அவள் அகம்.
பெரியவர்கள் மற்ற விடயம் பேசிக் கொள்ள, தாட்சாயணி மகளை அழைத்துக் கொண்டு சமையலறை சென்று, இரவு உணவைத் தயாரித்தார். தனியாகக் கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு மீதி சட்னியில் கூட இரண்டு பச்சை மிளகாயை அவள் போட, “காந்தப்போகுது சங்கு. என்ன வேலைப் பாக்குற?” என்று தாட்சாயணி அதட்டினார்.
“அவங்க வீட்ல எல்லாரும் காரமாதான் சாப்பிடுவாங்கம்மா” என்று ஏதோ நினைவில் கூறிவிட்டு பதறிப்போய் அன்னையைப் பார்த்தவள், “அ..அது கார்த்தி அக்கா ஹோட்டல்ல வச்சு சொன்னாங்க” என்று கூற,
“ஓ” என்றதோடு நிறுத்திக் கொண்டார்.
பொழுது கழிய, அனைவருமாக இரவு உணவையும் முடித்துக் கொண்டனர்.
அவன் பார்க்காத நேரமெல்லாம் தன் வண்டெனும் விழிகளால் அவன் முகம் துளைப்பவள், அவன் ஏறிட்டாள் எங்கோ பார்ப்பதைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள்.
மகன் மற்றும் மருமகளின் தவிப்பைப் புரிந்துகொண்ட சுயம்புலிங்கம், “பிரச்சினைல புள்ளையலுக்கு ஏதும் மனத்தாங்கலிருக்கப்போவுது. நாலு வார்த்த பேசியட்டு” என்று கூற,
மறுப்புக் கூறாத சச்சிதானந்தம், மகளைப் பார்த்தார்.
எதிர்ப்பார்ப்பு சுமந்திருந்தது அவள் விழிகள். அப்போதுதான் மகளைக் குறித்துத் தான் யோசிக்காதிருந்துவிட்டோமோ என்ற வருத்தம் அவரை வதைத்தது.
மெல்ல தலையசைத்து அவர் சம்மதம் கூற,
இருவருமாக வெளியே, திண்ணைக்கு வந்தனர்.
எதுவும் பேசாது கம்பிகளில் சாய்ந்து கரத்தை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அவன் நிற்க,
அவன் முன் சிரம் தாழ்த்தியபடி அவள் நின்றிருந்தாள்.
“எதும் பேசமாட்டீயலோ?” என்று அவன் கேட்க,
“சாரி” என்றாள்.
“என்னயப்பாத்து பேசத்தான?” என்று அவன் கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்து, “சாரி” என்றாள்.
“எனக்கு என் மித்து நெலம புரியும்” என்று அவன் கூற,
கண்ணீரோடு இதழ் கடித்த வண்ணம் தலை கவிழ்ந்தாள்.
“சங்கடமாருந்தாலும் பரவால. மன்னிச்சுக்க” என்றவன் அவளை இழுத்துத் தன்னுள் பொத்திக் கொண்டு இறுக அணைக்க, முதலில் அதிர்ந்து விழித்தவள், அவன் கைச்சிறையில் உணர்ந்த பாதுகாப்பிலும் இதத்திலும் மனம் நெகிழ்ந்து நின்றாள்.
கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. நடுநடுங்கும் கரத்துடன் தானும் அவனை அணைத்தேவிட்டாள்.
தான் அரவணைக்கும் போது அடையாத சுகந்தத்தை அவள் அணைக்கும் போது உணர்ந்தான். உடல் சிலிர்த்து அடங்க அவளை மேலும் தன் மார்பில் புதைத்தவன், “விட்டுடுவேனா உன்னய?” என்று கேட்டான்.
அவளிடம் மெல்லிய கேவல் ஒலி எழுந்தது. கடினப்பட்டு அடக்கினாள்.
“அழுவய அடக்காத” என்று அழுத்தமாய் அவன் மொழிய,
“உ..உள்ள சத்தம் கேட்கும்” என்றாள்.
“ப்ச்” என்று கோபம் கொண்டவன் அவள் முகம் நிமிர்ந்தி, “அம்புட்டுக்கு பயமா?” என்று கேட்க,
“புரிஞ்சும் கேட்குறீங்களே” என்றாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன், அவள் முதுகை ஆதரவாய் தட்டிக் கொடுக்க, “அப்பாக்கு எங்க மேல கொள்ள பாசம். ஆனா சில விஷயங்களில் அவங்க எண்ணம் எங்களுக்கு முரண்பட்டு இருக்கும் தானே?” என்று கூறினாள்.
“மாமாவ நான் தப்பாவே நெனக்கல” என்று அவள் எதற்காக அவ்வரிகளைக் கூறினாள் என்று புரிந்தோனாய் தக்க பதில் கொடுத்தான்.
அவளிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு.
சில நிமிடங்கள் அப்படியே நகர, “யாரும் வந்து பாத்துட்டாவனா என்ன பண்ணுவ?” என்று குறும்பு குரலில் கேட்டான்.
அந்த நொடிதான் அவனோடு ஒட்டிக் கொண்டு கட்டியணைத்து நிற்பதை உரைக்கப் பெற்று பயந்து விலகினாள்.
வேதனையில் கலங்கி சிவந்திருந்த முகம், தற்போது அச்சத்திலும் நாணத்திலும் சிவந்து போயின.
“அம்புட்டுக்கு வெறையலா புள்ள?” என்று அவன் சிரிப்பாகக் கேட்க,
“கேலி பண்ணாதீங்க” என்றாள்.
மென்மையாய் புன்னகைத்துக் கொண்டவன், அவளோடு உள்ளே செல்ல, பெரியோர் இருவரும் பேசி சில முடிவுகளை எடுத்திருந்தனர்.
வளவன் உள்ளே நுழையவும் அவனையும் அமர்த்திக் கொண்ட சுயம்புலிங்கம், “கல்யாணத்துல ஒரு சின்ன மாறுதல்யா” என்று கூற,
‘என்ன?’ என்பதைப் போல் பார்த்தான்.
“நிச்சயத்துக்குக் குறிச்சதுக்கு அடுத்த நாளே ஒரு முகூர்த்தம் வருது. தள்ளிப்போடாம அந்த முகூர்த்தத்துலயே கல்யாணத்த வச்சுபுடுவோம்” என்று சுயம்புலிங்கம் கூற,
“எதுக்குப்பா செய்யன (அவசரமாக) செய்தீய?” என்று அதிர்வாய் கேட்டான்.
மூன்று மாத அவகாசம் ஒரே மாதமகா மாறியிருந்தது. தன்னவளின் காதலுக்கான ஆசைக்கு நேரம் குறைந்துவிட்டதே என்ற எண்ணம் அவனுக்கு.
“ஏற்கனவே ஒரு ஒடக்காயிபோச்சுது வளவா. திரும்ப மூனு மாசத்துக்கு என்னவோ ஏதோனு தயங்கித் தயங்கி நவரோனும். அவிய பொண்ண பெத்தவிய. சங்கடத்த கொடுக்க வேணாமே” என்று சுயம்புலிங்கம் கூற,
வளவன் சங்கமித்ராவைப் பார்த்தான்.
‘அய்யோ என்ன என்னைப் பாக்குறாரு’ என்று பயந்து அவள் தலைகவிழ, ‘சரியான பயப்பத்தி’ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “சரிங்கய்யா” என்றான்.
சங்கமித்ராவிற்கு ஒரு மாதத்திலேயேவா என்று கொஞ்சம் அச்சமும் ஏக்கமும் எழத்தான் செய்தது. அதற்காக பெரிதாக வருத்தமெல்லாம் இல்லை. அவள் முகம் காட்டும் பொழிவே அவள் அகம் உணர்த்திட, மேலும் தடை செய்யாமல் திருமாவளவன் ஒப்புக்கொண்டான்.
பேசி அனைத்தையும் சரிசெய்த திருப்தியுடன் அனைவரும் வெளியேற, சட்டென நினைவு பெற்றோனாய் தனது சட்டைப் பையிலிருந்த கடிதத்தை யாரும் அறியா வண்ணம் அவிநாஷின் கையில் கொடுத்திருந்தான் வளவன்.
அவிநாஷ் நக்கல் சிரிப்போடு அவனை நோக்க, கண்கள் சுருக்கி அவனை அணைத்துக் கொண்டவன், “ப்ளீஸ் அண்ணே” என்றுவிட்டு விலகினான்.
சுயம்புலிங்கத்தை அழைத்துக் கொண்டு வளவன் புறப்பட்டு விட, அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
பரிவாய் மகளின் தலை வருடிய சச்சிதானந்தத்தின் பார்வை அவளிடம் சொல்ல முடியாத மன்னிப்பைக் கூறியது. புன்னகையாய் தந்தையை அவள் அணைத்துக்கொள்ள, அவள் முதுகை தட்டிக் கொடுத்து விலகினார்.
சில நிமிடங்களில் அவிநாஷ் புறப்படவிருக்க, அவனை வழியனுப்ப வெளியே வந்த சங்கமித்ரா, “தேங்ஸ் அத்தான்” என்றாள்.
“எதுக்காம்?” என்று கேலி பாவனையில் அவன் கேட்க,
அழகாய் சிரித்தவள், “ப்ராமஸ நிறைவேத்திட்டீங்கள்ல?” என்றாள்.
நெஞ்சம் நிறைய புன்னகைத்தவன் அவள் தலைவருடி, தனது சட்டைப் பையிலிருந்து அந்தக் கடிதத்தை நீட்டினான்.
அதையும் அவனையும் அதிர்ந்து பார்த்தவளுக்கு நொடியில் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
“அ.. அத்தான்” என்று அவள் தயங்க,
“உன் அவங்க தான் தந்தாங்க” என்று புன்னகையாய் கூறினான்.
‘வெளிய வந்து கட்டிபுடிச்சுட்டு நின்னப்ப இதைக் குடுக்கனும்னு தோனலயா இவருக்கு? அத்தான் கிட்டப் போய் குடுத்துருக்காங்க’ என்று உள்ளுக்குள் சிணுங்கியவள் அதை வாங்கிக் கொள்ள, புன்னகைத்துவிட்டுச் சென்றான்.
கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றவள் அக்கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள்.
‘அன்புள்ள மித்துக்கு,
கோவில்ல வச்சு குங்குமம் வக்காம போயிடுவியோனு பயந்துடேம் மித்து. அப்படி அழுறியேடி. எம்புட்டு கஷ்டமாருந்துச்சு தெரியுமா? விட்டா சாமிகூட சண்ட போட்டுபுடுவ போல? என்னையத்தான வேண்டிகிட்ட?’ என்று வாசித்தவளுக்கு மென்மையான புன்னகை தோன்றியது.
‘வேற யார வேண்டிக்கப் போறேன்?’ என்று மனதோடு சொல்லிக் கொண்டு அவள் தொடர,
‘அள்ளி அணைக்கனும்போலனு வந்துது. இம்புட்டுக்காடி பதிஞ்சுபுட்ட?’ என்று எழுதியிருந்தான்.
‘எனக்கும் அதே சந்தேகம்தான்’ என்று சிரித்துக் கொண்டவள் கடிதத்தில் பார்வையை ஓட்ட,
‘அந்த கோவிலுக்கு தான வெள்ளிக்கெழமதோரும் வருவ?’ என்று எழுதியிருந்தான்.
‘இனிமே அவரும் வருவாரோ?’ என்று உள்ளுக்குள் குதூகலித்தவள், “ச்ச ஒரு மாசம் தான் இருக்கே. நாலு வாரம் தான். அதுலயும் கடைசி வாரம் அம்மா வெளிய அனுப்ப மாட்டாங்க” என்று வருத்தம் கொண்டாள்.
‘உன்னைய விட்டுடுவேனாடி? லெட்டர்ல உன் கண்ணீர் தடத்த பாக்கையில என்ன மாதிரி இருந்துச்சு தெரியுமா? எதுவும் யோசிக்காத மித்ரா. எல்லாம் சரியாப்போவும். இந்த லெட்டர நீ படிக்கையில அம்புட்டும் சரியாயிருக்கும். நிம்மதியா தூங்கு. நான் ஒனக்குதேம். எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்ல வேணாம். ஆனா விசாரிச்சுக்குறேம்’ என்றதோடு கடிதம் நிறைவடைய, அதை மார்போடு பொத்திக் கொண்டவள் நிம்மதியான புன்னகையோடு தலை சாய்த்தாள்.

