Loading

அத்தியாயம் 45

கிளாம்பிங் லாஞ்சிங் நன்முறையில் முடிய, பெரியவர்கள் வீட்டிற்குச் சென்றதும் இளையவர்கள் மட்டும் இன்னும் அங்குக் கூடி இருந்தனர்.

தனித் தனியாக பலவித புகைப்படங்களும் எடுத்திட அகமொழி மணியைப் பார்த்து விட்டு, “புக் பண்ணவங்க செக்கின் பண்ண வருவாங்க ரூஹி. ரூம் செர்விஸ் எங்க?” என வினவிட, பிரணீத் “க்ளீனா தான இருக்கு. போதும்.” என்றான்.

அவள் அவனை ஒரு மார்க்கமாகப் பார்க்க, ரிஷான் தான் “அகா… இன்னைக்கு நாலு கிளாம்பிங்கையும் ப்ரோ தான் புக் பண்ணிருக்காரு… நாளைல இருந்து தான் வேற கஸ்டமர்ஸ் வர்றாங்க.” என்றான் நகைத்து.

“ஹான்? ஆனா ப்ரோ, ஹனிமூன் போறவங்களே ஒன்னு தான் புக் பண்றாங்க. நீங்க ஏன் நாலு…” என்று நக்கலாகக் கேட்க,

“ஒரு பிரைவசிக்கு தான்” என்றான் நமுட்டு நகையுடன். அவன் பார்வை வேறு அன்விதாவின் புறம் நகர, அவளுக்கும் இது புதுச் செய்தி தான்.

“நம்ம இன்னைக்கு ஈவ்னிங் ஊருக்குப் போகணும்னு சொன்ன? அப்போ அது பொய்யா?” எனக் கண்ணை உருட்டினாள்.

“ஊருக்கு அப்பா, அம்மா தான் போறாங்க…” என்றவனின் ரசனைப் பார்வை அவளுள் சிறு பதற்றத்தைக் கொடுத்தது.

“சரி சரி… அப்போ நீங்க இங்க போங்க…” என்றவள் அர்ஜித் அகனைக் கைப்பிடித்து முடித்து வைத்திருந்த ஒரு ஹாபிட் ஹவுஸிற்கு அழைத்துச் சென்றாள்.

“இது எப்போ வேலை முடியும்டி?”

“இன்னும் ஒரு மாசம் ஆகும் போல…”

“ம்ம்…” என்றபடி அவள் அழைத்த ஹாபிட் ஹவுசினுள் நுழைந்தவனின் விழிகள் விரிந்தது.

குகை போலான அறைக்குள் அவள் செய்திருந்த இன்டீரியரும், அலங்காரங்களும் கண்ணைப் பறித்தது. மெத்தையில் இரு வாத்துகள் முத்தமிடுவது போலவும், பூக்களால் மெத்தை விரிப்புகள் அலங்கரித்ததில் அவன் விழி உயர்ந்தது.

அதற்குப் பின்புறம் சிறு தோட்டம் போல அமைத்தவள், அங்கும் மெழுகுவர்த்திகளை ஆங்காங்கே பதிய வைத்தாள்.

“கேண்டில் லைட் டின்னர்க்கு யூஸ் ஆகும்…” அவள் கண் சிமிட்ட, “வளரே பங்கியாயிட்டு உண்டு (அழகா இருக்கு) காந்தாரி… பட்சே இதெல்லாம் இங்கனே அட்டாச் செய்திருக்க. ஒருசமயம் ப்ரெண்ட்ஸாய் வந்தால் இதெல்லாம் வேஸ்ட் அல்லே?” என்றான் குழப்பமாக.

“ஹலோ மிஸ்டர் மலையாளி, பெட் டெக்கரேஷன், கேண்டில் லைட் டின்னர் எல்லாம் கேட்டலாக்ல உண்டு. ஆனா யாராச்சும் கேட்டா தான் எக்ஸ்ட்ரா காஸ்ட்ல ஆட் ஆகும்… இதெல்லாம் நான் நமக்கு செஞ்சேன்…” என உள்ளே போன குரலில் ப்ளேஸின் நுனியைச் சுரண்டினாள்.

“நமக்கா?” அவன் சிறு வியப்புடன் கேட்க,

“ம்ம்… நீ தான் கிளாம்பிங் புக் பண்ணலாம்னு சொன்னீல்ல. இந்த லூசு ப்ரோ இன்னைக்கு புக் பண்ணதை நான் கவனிக்கல. நீ கேட்டியேன்னு இந்த ஒரு ஹவுஸை மட்டும் வேக வேகமா ரெடி பண்ணேன்.” எனும்போதே அவன் அருகில் வந்திருக்க, அவனது சட்டை பட்டனைத் திருகத் தொடங்கினாள்.

“அதானோ ஒரு ஆழ்ச்சயாய் (வாரமா) முழு மூச்சாய் இவிடே இருந்துவோ?” அவனிடம் ரசனை அதிகரிக்க,

“ம்ம்! உனக்கு சர்ப்ரைஸ் பண்ண தான்… ஆனா நீ எனக்குப் பெரிய சர்ப்ரைஸா பண்ணிட்டப்பா…” என்றாள் உதட்டைக் குவித்து.

அதில் மந்தகாசப் புன்னகை அவனிடம்.

“அப்போ எந்தினு (எதுக்கு) ஈ டெக்கரேஷனை வேஸ்ட் செய்யனும்… ம்ம்ம்?” என அவள் இதழ்களை நாட முயல, “டேய்… பட்டப் பகல்லயா? ட்ரெஸ் கூட எடுத்துட்டு வரல. ஈவ்னிங் திரும்ப வரலாம்…” என்று அவனது தாபத்திற்கு அணை போட,

“இதெல்லாம் சீட்டிங்காடி… அப்போ நீ என்னை ஈவினிங் ஆனு இவிடே கூட்டி வந்திரிக்கணம். மனுஷனை சூடேற்றி விட்டு…” எனச் செல்லமாக அவள் கன்னத்தைக் கடித்து வைத்தான்.

இங்கோ, அமையாவுடன் ரிஷானும், ரூஹியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

“ரிஷு மாமா… அன்னைக்கு மாதிரி படத்துக்குப் போகலாமா?” அமையா கேட்டிருக்க, “குட்டீஸ் படம் எதுவும் இல்லையே அமையா…” என்றவன் அலைபேசியில் தேடினான்.

“ஹே! அனிமேஷன் படம் ஒன்னு வந்துருக்குடா. ஆனா டிக்கட் இருக்கான்னு தெரியல. நான் செக் பண்றேன்.” என ரூஹியும் சோதித்து விட்டு, “ஏழு மணிக்கு மேல இருக்கு, போலாமா?” எனக் கேட்டாள் உற்சாகமாக.

“ஓ போலாமே.” அமையாவும் துள்ளிட, ரிஷான் “அப்போ எல்லாரும் வர்றாங்களான்னு கேட்கலாம்.” என நகரப் போனதில் அவன் தலையில் பட்டென அடித்தாள் ரூஹி.

“டேய் பைத்தியம்… அவங்களுக்கு ஸ்பேஸ் குடுக்க தான், அகாவே இவளை வெளில கூட்டிட்டுப் போகச் சொல்லிருந்தா… இதுல நீ அவள் ஸ்பேஸைக் கெடுக்குறன்னு தெரிஞ்சுது, உன்ன மலைல இருந்து உருட்டி விட்டுடுவா…” என்றதில் ரிஷான் அசடு வழிந்தான்.

அமையா ப்ரணீத்திடம் ஓடி வந்து, “சித்தப்பா… நான் ரிஷு மாமா, அத்தையோட படத்துக்குப் போகட்டா” எனக் குதித்தாள்.

“நானு?” பிரணீத் கேட்டதில், ரிஷான் தலையில் அடித்துக் கொண்டான்.

“இவங்களுக்கு ஸ்பேஸ் தரச் சொல்லித் தான் என்னை அடிச்சியாடி!” ரிஷான் ரூஹியை முறைக்க, அவளோ அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.

“அன்வி, நம்மளும் போலாமா?” எனக் கேட்டு விட்டுப் பின், “உனக்கு தான் தியேட்டர் சவுண்ட் ஒத்துக்காதுல… அப்போ நான் கூடப் போயிட்டு வரட்டா?” எனக் கேட்டான்.

ரிஷு தான், “யப்பா மச்சான், நாங்க இதுக்கு முன்னாடியே அமையாவைத் தனியா வெளில கூட்டிட்டுப் போயிருக்கோம். உங்களை இங்க யாரும் கூப்பிடவே இல்ல. லன்ச்கு வெளில போறோம். ஃபன் சிட்டில விளையாடிட்டு அப்படியே மூவி போயிட்டு வர்றோம். இன்னைக்கு எங்க அவுட்டிங். யாரும் இடைல வரக்கூடாது.” என்று திட்டவட்டமாகக் கூறி விட, அவளும் ரிஷானின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“ஆனா நீ நல்லா ஐஸ் வைக்கிற குட்டிச்சிட்டு. ஊர்ல இருந்தவரை, என்னை தாஜா பண்ணிட்டு, இங்க அப்படியே மாறிட்டீல?” என முறைக்க, அமையா வாயைப் பொத்திச் சிரித்தாள்.

“ப்ளீஸ்ஸ் ப்ரணீ…” அவள் மூக்கைச் சுருக்கியதில் “சரி சேட்டை பண்ணாம போயிட்டு வரணும். ஓகே வா?” என அவன் அனுமதி குடுக்க, அவள் இன்னுமாகக் குதித்தாள்.

“என்கிட்ட பெர்மிஷன் கேட்க வேணாமா?” அன்விதா கையைக் கட்டிக் கொண்டு கேட்க, “நீங்க தான ப்ரணீ சித்தப்பா என்ன சொன்னாலும் சமத்தா கேட்கணும்னு சொன்னீங்க.” எனத் தலையாட்டியதில், “வாலு…” என்று அவள் கன்னம் கிள்ளினாள் அன்விதா.

நேராக வந்து ப்ரணீத்திடம் சொல்லி, அவள் அனுமதி கேட்ட விதம் இருவரையும் நெகிழ்த்தியது.

ரிஷானும், ரூஹியும் அமையாவை அழைத்துக் கொண்டு சென்று விட, சுற்றியும் இருந்த இதமான அமைதி ப்ரணீத்தையும், அன்விதாவையும் இன்னுமாக இதப்படுத்தியது.

“இந்த இடம் நல்லாருக்குல்ல ப்ரணீ…” கிளாம்பிங் மாடி அறையில் இருந்த கண்ணாடி சாளரம் வழியே தெரிந்த பனித்துகள்களை ரசித்தாள்.

அவனோ அவளை ரசித்தபடி, “ம்ம்ம்” என்றான்.

அன்விதா இன்னும் கண்களை வெளியில் பதித்திருக்க, “எனக்கு இப்படி புது இடத்துல புது டூரிஸ்ட் ஸ்பாட்டுக்குப் போக ரொம்பப் பிடிக்கும் ப்ரணீ… தெரியும்ல…” என்றாள்.

அதற்கும், “ம்ம்” என்றான்.

“நான் டூரிசம் படிச்சதே அது மேல இருக்குற ஈடுபாடுனால தான்…”

“ம்ம்! தெரியாதது ஏதாவது சொல்றீங்களா மேடம்” அவனிடம் சின்னக் கேலி.

அதில் அவனைத் திரும்பிப் பார்த்து முறுவலித்தவள், மெல்ல அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

அது அவனுக்கும் வியப்பையும், முறுவலையும் கொடுக்க, அவள் தலையில் தன் தலையைச் சாய்த்தான்.

அவளோ, “தெரியாததைச் சொல்லட்டா? விஷ்ணு கூட இந்த மாதிரி இடத்துக்கு வரணும்னு நினைச்சாலே பயமா இருக்கும். இப்ப எப்படா இங்க வந்து இந்த அழகை ரசிக்கலாம்னு ரெண்டு நாளா ஒரு வித ஆர்வம்.

ஆனாலும், ஒரு சின்னக் குற்ற உணர்ச்சி ப்ரணீ… அவன் எதிர்பார்த்த வைஃபா நான் இல்லாம போனதுனால தான், அவன் இப்படி ஆகிட்டானோன்னு. இப்ப வரைக்கும் அவன்கிட்ட சின்னக் குற்ற உணர்ச்சி கூட இல்லாததை யோசிக்கும்போது, நாள் ஆக ஆக, நான் தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேனோ? நான் கொஞ்சம் புரிஞ்சு நடந்திருக்கணுமோன்னு என்னன்னவோ தோணுது. எனக்கு அவனைப் பத்தி யோசிக்கிறது கூடப் பிடிக்கல ப்ரணீ… ஆனா, நடந்து முடிஞ்சதுல என் தப்பு தான் என்னன்னு யோசிச்சு யோசிச்சு, சில நேரம் தலை வலிக்குது. சில நேரம் என் மூளை என்னையவே குற்றம் சொல்லுது. எனக்கு இதுல இருந்து எப்படி வெளில வர்றதுன்னு தெரியல ப்ரணீ…” என்றவளுக்கு வேதனை அரித்தது.

அவனோ தலையை நிமிர்த்தவில்லை. சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

“என்னை நம்புற தான சிட்டு?”

அவன் கேள்வியில் நிமிர்ந்தவள், “என்ன பேசுற?” என்றாள் முறைப்பாக.

அவனோ விடாமல், அவள் கண்ணைப் பார்த்து “என்னை நம்புற தான? உன்னை ஹர்ட் பண்ணிட மாட்டேன்னு…” எனக் கேட்டான் தீவிரமாக.

“உன்னால என்னை ஹர்ட் பண்ணும்னு நினைக்கக் கூட முடியாது ப்ரணீ”

அவளது கூற்றில் நிம்மதி எழ, எழுந்து கண்ணாடி ஜன்னலின் திரைச் சீலைகளை மூடியவன், “உன் குழப்பத்துல இருந்து உன்னை வெளிய கொண்டு வர என்கிட்ட வழி இருக்கு. வெளில வர நீ சம்மதிச்சா… என்னை நம்பி உன்னைக் குடு சிட்டு!” என்றான்.

அதில் திகைத்தவளுக்கு ஒரு கணம் வார்த்தையே வரவில்லை.

இன்னும் இதற்குத் தயாராகி விட்டாளா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவனது அழுத்தமும், அவளது பதிலுக்காக அவன் எதிர்பார்த்து நின்ற கோலமும் அவளைச் சுட்டது.

ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள், விழி தாழ்த்தி, “ம்ம்” எனத் தலையாட்ட, அதன்பிறகு நிகழ்ந்தவைகள் எல்லாம் இனிய கனவு போன்றவை.

அவனுக்காக ஒப்புக் கொண்டவள் தான். அவன் கொடுத்த மென்மை முத்தங்களில் முற்றிலும் சுயமிழந்து போனாள்.

குழப்பத்தில் ஏற்பட்ட கூடல் தான். ஆனால், அழகாய் அவள் குழப்பங்களைத் தெளிவு செய்தது.

மனத்திற்குப் பிடித்த ஒருவன் தன்னைக் கட்டிலில் மகாராணியாய் உணர வைக்கும் தருணம், அவளது உடலும் மனமும் அவனுக்கு அடிமையாகி அவனது விருப்பத்திற்கு வளைந்து விடும் என்ற உண்மையை உணர்த்தியது பிரணீத்தின் மெல்லிய தீண்டல்கள்.

காதலும், காமமும் போட்டி போடும் தாம்பத்யத்தில் இருக்கும் சுவைதனை முதன்முறை அறிகிறாள்.

தன்னுள் அவன் உயிர் நிறையும் நேரம், உலகை வென்ற உணர்ச்சியில் விழியோரம் நீர்த்துளி படர்ந்தது அவளுக்கு.

கூடலின் முடிவில் அவளை இறுக்கி அணைத்துத் தனது நெஞ்சில் அடைகாத்துக் கொண்ட பிரணீத்தின் இதழ்களிலும், அவளது ஒத்துழைப்பு உணர்ந்து நிறைவான நகை.

“இப்பக் குழப்பம் தீர்ந்துச்சா சிட்டு?”

அவனது கேள்வியில் மெல்ல எழுந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தவள், “தேங்க்ஸ் ப்ரணீ…” என உள்ளம் உருகக் கூற, “உன் தேங்க்ஸ் வேணாம்… அதுக்குப் பதிலா…” எனக் குறும்புடன் அவளை இறுக்கி அணைக்க, அங்கு இரு உயிர்களின் மறுஜனனம் அழகாய் நிகழ்ந்தது.

———-

“ஆஆ… விடுடா!” அகமொழி தன்னைக் கடித்தவனைத் தள்ளி விட,

“டெக்கரேஷன்க்கு நியாயம் செய்யணம் காந்தாரி. நைட்டு இருட்டிப் போகும் அல்லோ?” என மீசை உரச அவளைக் குறுகுறுக்க வைக்க, “அப்போ ஒரு கண்டிஷன்!” என்று நிறுத்தினாள்.

“என்ன?” என அவன் பார்க்க, “லவ் அட் பர்ஸ்ட் சைட் தான்னு உண்மையை ஒத்துக்கோ!” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டாள்.

“நோ’டி. ஜஸ்ட் உன்னைப் பார்த்தேன். அவ்ளோ தன்னே…” அவன் வெகு தன்னடக்கமாகக் கூற, “ம்ம்ஹும், பொய் சொல்றடா மலையாளி…” அவளது சிணுங்கல்களை எல்லாம் பொருட்படுத்தாது அவளைக் கையில் அள்ளியவன், “நின்னைக் கண்டதும் லவ் பொங்கி வழிஞ்ஞிதில்லா தான்… பட், இப்போ ஓவர்ப்ளோ ஆகுன்னு!” என்றவன், திகட்டத் திகட்டக் காதலைக் காட்டி இருந்தான்.

———-

சில மாதங்களுக்குப் பிறகு…

“நீங்க ஒழுங்கா க்ளீன் பண்ணலைன்னு ஒரு கஸ்டமர் ரெவியூ போட்டிருக்காங்க. உங்க வேலையை ஒழுங்கா பார்க்கலைன்னா அடுத்த மாசம் சம்பளத்தைத் தான் கட் பண்ணுவேன்.” என்று வேலையாளிடம் பொருமிக் கொண்டிருந்தாள் ரூஹி.

ரிஷான் வந்தவன், அவனும் தனது பங்கிற்கு வேலையாளைக் கண்டித்து அனுப்பினான்.

“வேற ஆள் கூடப் பார்க்கலாம் ரிஷு. இவன் எப்பப் பார்த்தாலும் போன் தான் பேசுறான்.”

“ம்ம், வேகன்ஸி குடுத்திருக்கோம்ல. ஆள் வரட்டும், பார்க்கலாம்.” என வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூழ்கினர்.

ஆனாலும் அவ்வப்பொழுது, இருவரின் பார்வையும் ஒருவர் அறியாது மற்றவரை ரகசியமாகத் தழுவும். ரிஷானும் இப்போதெல்லாம் அதிகம் பக்குவப்பட்டிருந்தான்.

அவனது தந்தை மிரட்டினாலும், அடிக்க வந்தாலும், பயப்படாமல் நிதானமாகப் புரிய வைக்கும் மனதைரியம் வந்திருந்தது.

அந்த மனப்பக்குவம் கூட, ரூஹி தனது வாழ்க்கையில் வரும்போது அவளை எவ்விதத்திலும் காயப்படுத்தி விடக்கூடாது என்ற தீர்மானத்தில் வந்த முதிர்ச்சி தான்.

அப்போதே புரிந்து கொண்டான், தனது மனத்தில் அவள் எத்தகைய ஆழமான அன்பாக இறங்கி இருக்கிறாளென்று.

ஆகினும் அவளிடம் மனத்தைப் பகிரவில்லை. பகிரவும் தேவை இல்லை என்பது போல, இருவருக்குள்ளும் புரிதல் அதிகம் வளர்ந்திருந்தது.

காதலைக் கூறி, உறவினை ஏற்படுத்தி உருவாகும் புரிதல் விட, சொல்லாத உணர்வுகளின் புரிதல் இருவருக்குமே தேவைப்பட, அமைதியாக இந்தக் காதலை ரசித்துத் தங்களது கேரியரிலும் கவனம் செலுத்தினர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது அர்ஜித் அகனின் கார்.

“இப்ப எதுக்கு நம்ம திடீர்னு சென்னைக்கு வந்திருக்கோம் அகன். வேணி கல்யாணம் கூட அடுத்த மாசம் தான?” அகமொழி கேள்வி கேட்டுப் படுத்தினாள்.

“ஒந்து மிண்டாதிரிக்கடி பரயாம்…(அமைதியா இருடி. சொல்றேன்)” என்றவன் நேராகக் கடற்கரைக்குச் செல்ல, அங்கு ஏற்கெனவே ப்ரணீத்தும் அன்விதாவும் நின்றிருந்தனர்.

அன்விதாவின் மேடிட்ட வயிறு ஐந்து மாதக் கருவைச் சுமந்திருந்தது.

இளநீர் வாங்கிய பிரணீத், அதைக் கூட அவளைத் தூக்க விட மறுத்து, தானே பிடித்துக் குடிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

“போதும் ப்ரணீ…” அவள் கெஞ்சலாகக் கூற,

“ம்ம்ஹும், முழுசா காலி பண்ணு சிட்டு… அப்ப தான் இந்த வெயிலுக்குத் தாங்கும்.” என்றதில்,

“ஏற்கெனவே வர்ற வழி எல்லாம் நாலு தடவை ரெஸ்ட் ரூமுக்கு நிறுத்தியாச்சு. இனி வீட்டுக்குப் போறப்ப பத்துத் தடவை நிறுத்தணும் ப்ரணீ…” என்றாள் உதட்டைச் சுளித்து.

“அதெல்லாம் பரவாயில்ல, நிறுத்திக்கலாம். என் செல்லச் சிட்டுல… குடி!” எனக் கொஞ்சிக் குடிக்க வைக்க, அவளுக்குத் தான் அவனைக் கெஞ்சிக் கொஞ்ச வைக்கவே இன்னும் வேண்டாமென மறுத்து நடிக்கவே தோன்றியது.

அவளே எதிர்பாராத, அவளே கனவு காணாத ஒரு அழகியலைக் கொடுத்திருந்தான் பிரணீத்.

அவள் கருவுற்ற போதும், “உனக்கு ஓகேவா சிட்டு. அமையா அக்செப்ட் பண்ணிப்பாளா? இதைப் பத்தி யோசிச்சுருக்கணுமோ?” எனச் சிறுவன் போல விழித்தவனைக் கண்டு சிரிப்பே வந்தது.

“எனக்கு இந்தக் குழந்தை வேணும் ப்ரணீ… அப்படியே உன்னை மாதிரி வேணும்…” என்று அவன் நாடி பிடித்துக் கூற,

“எனக்கும் வேணும் தான். எவ்ளோ ஹேப்பி தெரியுமா… விட்டா நான் கத்தி ஊரைக் கூட்டிடுவேன். பட் அமையா?” என அவன் பயந்ததற்கு மாறாக, அமையா பள்ளிக் கூடத்திற்குச் சென்று தனது தம்பிப் பாப்பா வரப்போவதாக அறிவித்தே விட்டாள்.

ப்ரணீத்தையும், அன்விதாவையும் சின்னச் சிரிப்புடன் ரசித்தபடியே அர்ஜித் அகனும் அகமொழியும் காரை விட்டு இறங்கினர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொள்ள, பிரணீத் இவர்கள் வரவைக் கூட உணரவில்லை.

அவன் முதுகில் அர்ஜித் தட்டியதும் தான் திரும்பியவன், “வாங்க வாங்க… இப்ப தான் உங்களுக்கு ஊருக்கு வழி தெரிஞ்சுதா?” என இருவரையும் முறைத்தான்.

“ஆமா ப்ரோ, மேப் அப்டேட் பண்ணாம விட்டுட்டோமா… சோ எங்களுக்கு வழி காட்டல.” எனத் தீவிரமாகக் கலாய்த்த அகமொழியை மூச்சு முட்ட முறைத்தான்.

அர்ஜித் தான் நமுட்டு நகையுடன், “ஆவஸ்யமானோ இது?(தேவையா இது?)” என்றிட, அன்விதா “வீட்டுக்கு வந்திருக்கலாம்ல அர்ஜி. அமையா உங்களைக் கேட்பா…” என்றாள் குறையாக.

“ரெண்டு பேரும் ஒர்க் விட்டுட்டு வந்ததாணு அன்வி. நாளைக்கு ஞங்ஙள் போகணம்… அதானு, வேணி மேரேஜ் உண்டல்லோ. அதுக்கு, ஒரு வாரம் இவிடே தானே… ஓகே தானே?” என்றதில் அவளும் புன்னகைத்தாள்.

“என் குட்டிப் பையன் என்ன சொல்றான்?” அகமொழி அன்விதாவின் வயிற்றில் கை வைத்துக் கேட்க, “நீயும் அமையாவும் பையன்னு முடிவே பண்ணிட்டீங்களா?” என சிரித்தாள்.

“ஆமா, எங்களுக்குத் தம்பிப் பாப்பா தான் வேணும்…” என அகமொழி கண் சிமிட்ட, “சரி நீ வா…” என்று அர்ஜித் அவளை இழுத்துச் சென்றான்.

அவளோ, “இருடா. எதுக்கு இப்படி இழுக்கிற. டயர்டா இருக்கு.” என்றதில், அவளுடன் மெல்ல நடந்தவன், “இந்தலே நைட்டு ஒண்ணுமே செய்தில்லால்லோ காந்தாரி… ஞான் குட் பாயாய் அல்லே இருந்தது.” என்றான் குறும்புடன்.

“நீ குட் பாயா இருக்குறதே அதிசயம் தான்…” அவன் கன்னத்தில் குத்தியவள், “ஒரு வாரமா கொஞ்சம் ஒர்க் ஜாஸ்தி. இப்ப டிராவல் வேறல்ல… அதான் போல! இதுல பீச்ல வேற நடக்க விடுற…” எனும்போதே அவளைத் தூக்கி இருந்தான்.

“ஐயோ மலையாளி, என்னடா பண்ற? ப்ரோலாம் இருக்காங்க, இறக்கி விடு.” அவள் நெளிய,

“அப்படியே இவள் எனக்காக டீசன்ஸி பார்க்குற ஆளு தான் பாரு.” என அன்விதாவிடம் நொடித்தான் பிரணீத்.

அன்விதா தான் சிரிப்பை அடக்கிக் கொண்டு நடக்க, அர்ஜித் அவளது கத்தலை எல்லாம் காதில் வாங்கவே இல்லை.

“நீ அல்லே டயர்டாய் இரிக்குனு எந்து பரஞ்சது? இதோ வந்து…” எனக் கடலோரம் போடப்பட்டிருந்த பீச் ‘பாட்’ (பீச் ஹவுஸ் போலான அமைப்பு) அழைத்துச் சென்றான்.

“ஹே இங்க இதெல்லாம் இருக்கா?” அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அகமொழி கூற,

“ம்ம்… இப்ப தன்னே முளைச்சு வந்தது.” என்றவன் அவளை இறக்கி விட்டு, கத்தரிக்கோலைக் கொடுத்து “கட் செய்யு” என்றான்.

அப்போது தான் புதிதாய் மூன்று பாட்’கள் கிளாம்பிங் போன்று தனித் தனியாக வளர்ந்து நிற்பதை வியப்பாகப் பார்த்தவள், அங்கு ரிப்பனும் கட்டப்பட்டிருந்ததில், “இங்க எதுக்கு அகன்?” எனப் புரியாமல் விழித்தாள்.

“நிண்டெ புது பிசினஸ் அல்லே. நீ தன்னே ரிப்பன் கட் செய்யனம்.” என்றதில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சொல்ற அகன்?” அவளுக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

“நீ கொடுத்த ஐடியா தன்னடி இது. நின் ஐடியாவை ஞான் எக்சிகியூட் செய்து. ஹவ் இஸ் இட்?” எனக் கண் சிமிட்டியவனைத் திகைப்பாகப் பார்த்தாள்.

“இது முழுக்க முழுக்க உனக்கும், அன்விக்காகவும் தான். அன்வி இங்க நேரடியா ஹேண்டில் பண்ணுவா… நீ ஆன்லைன்ல அவளுக்கு சப்போர்ட் குடுத்துக்கோ. ம்ம்?” என்றதில் அகமொழிக்குப் பேச்சே வரவில்லை.

அவன் ரசித்துக் கட்டி இருந்த பாட்’இல் தனது பார்வையைப் பதித்து விட்டு மீண்டும் இருவரும் விமான நிலையம் நோக்கிச் சென்றனர்.

அவளது அமைதி உறுத்த, “எந்தாடி மிண்டாதே இரிக்கன, இஷ்டமாயில்லே?(என்னடி அமைதியா இருக்க. பிடிக்கலையா)” எனக் கேட்டான் அர்ஜித்.

அவள் எதுவும் சொல்லாமல் விட்டதும், “எல்லாரையும் விளிச்சு(கூப்பிட்டு) லான்ச் செய்யனம்னு தான் விசாரிச்சேன்(நினைச்சேன்). பட் நெக்ஸ்ட் மந்த் வேற வேணி மேரேஜ்க்கு எல்லாரும் வரணம். சோ அப்போ கண்டோட்டே (பார்த்துக்கட்டும்னு) தான் கூட்டிட்டு வந்தில்லா. ஓய் காந்தாரி, என்னாடி மிண்டாதே (அமைதியா) வரனது?” அவன் காரை நிறுத்தி இருந்தான்.

“நான் அந்த ஐடியா சொல்லும்போது நீ என்னை லவ் பண்ணவே இல்லை தான? அப்பறம் ஏன் நான் சொன்னதெல்லாம் கேட்ட? அத நீ எந்த அளவு டீப்பா கேட்டுருந்தா உன்னால அதையே பண்ணிருக்க முடியும் என்றவளுக்கு இப்போதும் மூச்சு முட்டியது.

“அப்ப ஞான் லவ் பண்ணவே இல்லைன்னு ஞான் சொல்லவே இல்லையே காந்தாரி!” அவனிடம் சில்மிஷம் நிறைந்திருக்க, மெல்லப் புன்னகைத்தாள்.

“பாட்’ ரொம்ப அழகா இருந்துச்சு அகன். லவ் இட்.”

“அதை மட்டும் தானோ?”

“ம்ம்ஹும் இந்த அகனையும் சேர்த்து ரொம்ப ரொம்ப ரொம்ப லவ்வ்வ்வ்…” என அழுத்த முத்தமிட, அர்ஜித் அகன் தலையாட்டிச் சிரித்துக் கொண்டான்.

வசந்தியையும் பாஸ்கரையும் அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே வீடு பார்த்து வைத்து விட்டனர். அது தான் அவர்களுக்கும் நிம்மதி கொடுத்தாலும் வசந்தி வெகு நேரம் சுஜாதாவுடன் தான் நேரம் கழிப்பார்.

அடிமாலிக்கு வந்து இறங்கியதில் இருந்தே அதிகம் சோர்ந்து போன அகமொழிக்கு அதன்பிறகே தான் கருவுற்றிருப்பது தெரிந்தது.

“அகன்… அகன்ன்ன்ன்ன்ன்” மகிழ்வு தாளாது அப்போது தான் வேலைக்கு கிளம்பியவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“எந்தாடி?”

“குட்டி அகன் வரப்போறான் தெரியுமா. உன்னை மாதிரியே கியூட்டா கன்னத்துல மச்சத்தோட” என அவள் எவ்வித ஒப்பனையும் வெட்க நெளிவுமின்றி ஒப்பித்து விட, ஒரு கணம் புருவம் சுருக்கியவன் அதன்பிறகே புரிந்து விழி விரித்தான்.

“வாவ்! இரு ஞான் வரோம்…” என்றதும் அவன் வரவிற்காக காத்திருந்தவளை ஏமாற்றாது உடனே வந்து விட்டான்.

“அகன்…” அவனைக் கண்டதும் கட்டிக்கொண்டவளின் மகிழ்வு அவனையும் தாக்கியது.

“ஹே சத்யமானோ?”

“ம்ம்ம்” அவள் தலையாட்டியதும், “அப்போ குட்டி காந்தாரி தான்…” என்றான் ஆர்வமாக.

“ஹான் நோ… நோ அவள் மறுக்க, அவனும் மறுக்க இறுதியில் முத்தத்தில் சமாதானம் செய்து கொண்டனர்.

மாதங்கள் தெளிந்த நீரோடையாகக் கழிய, அன்விதாவிற்கு அமையாவின் ஆசைப்படியே தம்பியே பிறந்திருந்தான்.

அகமொழி நிறைமாதமாக இருக்க, சோபாவில் கால் நீட்டி அமர்ந்திருந்தவளின் காலைப் பிடித்துக் கொண்டிருந்தான் அர்ஜித் அகன்.

எப்படி இருந்த மனுஷன் என வருத்தப்பட்டபடி ரிஷானும் ரூஹியும் அவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து உண்ண,

வசந்தி கொடுத்த ஆறாவது தோசையைக் காலி செய்து கொண்டிருந்த அகமொழிக்கு சட்டென சிரிப்பு வந்தது.

“எந்தாடி சிரிக்கனது?” அர்ஜித் நிமிர்ந்து கேட்க,

“இல்ல… நமக்கு மேரேஜ் ஆன டைம்ல. என் காலை பிடிச்சு விட ஈகோ பிடித்து ஏதோ வில்லத்தனமா டயலாக் பேசுனியே. இப்ப பாரு… என் கால்ல தான் விழுக வேண்டியதா போச்சு. வாழ்க்கை ஒரு வட்டம்டா பௌ பௌ” என விரலை நீட்டி அழகு காட்ட, ரிஷானும் ரூஹியும் சிரிப்பை அடக்க கடினப்பட்டனர்.

“இவளை…” பல்லைக்கடித்த அர்ஜித் பின் நக்கல் நகையுடன், “நமக்கு மேரேஜ் ஆய டைமில் என்டே முதுகுல இருந்த மச்சத்திலு கிஸ் தரான்னு மூச்சுக்கு மூந்நூறு தடவை சோதிச்சிருக்கில்லே(கேட்டிருக்கேன் )… அப்போ எல்லாம் ஈகோ பிடிச்சு நீ தரவே மாட்டா! இப்போ ஈ மச்சத்தை தேடி தேடி அலஞ்ஞு கிஸ் கொடுக்கேண்டிய நிலைமை வந்துபோயி பாத்தியா… ஜீவிதம் (வாழ்க்கை) ஒரு வட்டமாண் காந்தாரி… பௌ பௌ!” என அவள் மானத்தை வாங்கி இருக்க,

ரிஷான் தட்டை வைத்து விட்டு, “உங்ககூட எல்லாம் சாப்பிட வந்தேன்ல. என்னை சொல்லனும்…” எனக் கையெடுத்துக் கும்பிட்டான்.

ரூஹி விழுந்து விழுந்து சிரிக்க, அகமொழி அகன் மீது தலையணையைத் தூக்கி எறிந்தாள்.

அர்ஜித் கீழுதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க, சிறிது நேரத்தில் அகமொழியின் முகமே மாறிப்போனது.

“வயிறு வலிக்குது அகன்” அவள் கலவரத்துடன் கூறியதில் குடும்பமே அலெர்ட் ஆனது.

அவசரமாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் அர்ஜித்.

நேரம் செல்ல செல்ல வலியின் தீவிரம் அதிகரிக்க, “அகன் ரொம்ப வலிக்குது” என அழுதிட, “இப்போ ஹாஸ்பிட்டல் வந்துடும்டி… கொஞ்சம் க்ஷமிச்சோ (பொறுத்துக்கோ)!” என்றான் தவிப்பாக.

ரிஷான் தான் காரை ஓட்டிக்கொண்டிருக்க, ரூஹி பதற்றமாக முன்னால் அமர்ந்திருந்தாள்.

அகமொழியோ “ஐயோ அம்மா…” எனக் கத்தி விட்டு, “சரி இந்த செண்டிமெண்ட் நிறைஞ்ச சிச்சுவேஷன்லயாவது உண்மையை ஒத்துக்கோ மலையாளி” என்றாள்.

அவனோ பரிதவிப்பில் “என்.. எந்தாடி” எனப் பதற்றமாகக் கேட்க,

“லவ் அட் பர்ஸ்ட் சைட் தான?” என்றாள் உதட்டைப் பிதுக்கி.

அதற்குள் மருத்துவமனை வந்திருக்க, “சொல்லுடா” என அவன் சட்டையைப் பிடித்து கேட்டாள்.

“ஒரு மண்ணும் இல்லா! ‘லவ் அட் பர்ஸ்ட் சைட்’ஆக்கும்ல… நின்டே செண்டிமெண்ட் சீனை லேபர் வார்டில் போயி ஓட்டு!” என நாக்கைத் துருக்கியவனைத் தீயாக முறைத்தாள்.

“ச்சே கல்நெஞ்சக்காரன்… இதுக்காகவே குட்டி அகன் தான் வருவான் பாரு…”

“ம்ம்ஹும் குட்டி காந்தாரி” என அவளுடன் மல்லுக்கட்டினான்.

ஆனாலும் அவன் விழிகளில் தெரிந்த பயமும் பதற்றமும் புரிந்திட அவன் கைகளை மெல்ல அழுத்தினாள்.

அவனும் தான்!

“வளர பெயின் ஆனோ மொழி…பயமா இருக்குடி சீக்கிரம் வந்துடு…” இறுதியாய் அவளை உள்ளே அழைத்துச் செல்லும்போது அதீத இதயத்துடிப்புடன் கூறியவன், அவள் வலியில் துடிப்பதில் தானும் துடித்தான்.

பின் என்ன நினைத்தானோ, அவனும் உள்ளே புகுந்து, “”‘லவ் அட் பர்ஸ்ட் சைட்’ தானெந்து நின்னைக் கழப்பிசான் (ஏமாற்ற) ஞான் ஆக்ரஹிச்சில்லா… பக்ஷே, அதுக்கு அப்பறம் கண்ட எல்லா நோக்கத்திலும்… ‘லவ் அட் எவெரி சைட்’! அது மாத்ரம் ஞான் தீர்ச்சயாயும் பரயும்… லவ் யூ அ லாட் காந்தாரி!”(லவ் அட் பர்ஸ்ட் சைட் தான்னு உன்னை ஏமாத்த விரும்பல. ஆனா, அதுக்கு அப்பறம் பார்த்த எல்லா பார்வையிலயும், லவ் அட் எவெரி சைட். அது மட்டும் கண்டிப்பா சொல்லுவேன். லவ் யூ அ லாட் காந்தாரி)” என்றதில், அத்தனை வலியிலும் அவள் இதழ்கள் விரிந்தது.

“அவ அவ இங்க வலில இருக்கா. உனக்கு செண்டிமெண்ட் டயலாக் கேக்குதுல… ஐயோ அம்மா லவ் அட் பர்ஸ்ட் சைட் தான். இவன் என்னை ஏமாத்துறான்” எனக் கத்திட, அவன் சட்டென சிரித்து விட்டான்.

லேபர் வார்டை கலவர வார்டாக மாற்றியவர்களை மருத்துவர்கள் தான் விசித்திரமாகப் பார்த்தனர்.

இருவரையும் அதிகம் சோதிக்காது, அர்ஜித் அகனின் ஆசைப்படி குட்டிக் காந்தாரியே பிறந்திருந்தாள்.

மகளைக் கையில் ஏந்திய தருணத்தில் சிலிர்த்துப் போனவனை, அரை மயக்கத்திலும் முறைத்தாள் அகமொழி.

“நான் பெத்தது கூட என் பேச்சை கேட்காதுல…” என்றாலும் அவளுக்கும் அதீத சந்தோஷமே.

“ஐ ஆம் வின். பௌ பௌ!” அவளைப் போலவே விரலை நீட்டி மூக்கைச் சுருக்கிய அர்ஜித் அகனை விழி இடுங்க பார்த்தவள்,

“நெக்ஸ்ட் டைம் நான் வின் பண்ணுவேன்…” என நொடித்துக் கொண்டதில், அர்ஜித் நளினப்புன்னகை பூத்தான்.

“ஐ ஆம் வெயிட்டிங்…” என்று அவளிடம் குனிந்து கிண்டலாகக் கூறியதன் மாறாக, அவள் நெற்றியில் அழுத்த இதழ் பதித்தான்.

அவ்வொற்றை முத்தம் அவனது நடுக்கத்தையும் தவிப்பையும் ஒன்றாக காட்ட, அதில் முறுவலித்தவள், “இங்க வா…” என்று அவனைப் பக்கம் வரவழைத்து, அவனது கன்னத்தின் மச்சத்தில் முத்தமிட்டாள்.

அவனைப் போலவே குட்டிக் காந்தாரிக்கும் கன்னத்தில் குட்டி மச்சம் வீற்றிருக்க, இருவரிடமும் வெட்கப்புன்னகை மலர்ந்தது.

குட்டி மழலையின் குரலில் இனியும் இதே போல வெளியில் ஈகோவும் உள்ளுக்குள் காதலுமாக கரைந்திட வாழ்த்தி விடைபெறுவோம்..

முற்றும்
அகன் வசமானாள் அகமொழி!

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 89

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
83
+1
2
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்