Loading

அத்தியாயம் 62

“ஐயோ போச்சு, போச்சு. நான் இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டுப் போட்ட என்னோட கோலம் எல்லாம் வீணாப் போச்சு இந்த மழையால. இப்ப பார்த்து தான் இந்த மழை வரணுமா என்ன.” புலம்பினாள் தேவகி.

“கோலம் தானே போச்சு. சில இடங்களில் இப்படித் திடீர்னு பெய்யுற மழையால் சில பேரோட வாழ்வாதாரமே பாதிக்கப்படுது. அதைக் கம்பேர் பண்ணும் போது இதெல்லாம் சாதாரண விஷயம் தான் விடு.” அசால்ட்டாகச் சொன்னாள் ஊர்மி.

“ஊர்மி கஷ்டப்பட்டுக் கோலம் போட்டது அவ. அது கலைஞ்சு போன விரக்தியில் ஏதோ பேசுறா, விடேன்.” லீலா சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் செல்வாவும், தெய்வாவும் வீட்டிற்குள் ஓடி வந்திருந்தனர்.

அவர்கள் தலை மறையவும், “தேவகி திடீர்னு எப்படி மழை வந்துச்சுன்னு கேட்டியே. இப்பத் தெரியுதா மழை வந்ததற்கான காரணம்.” ருக்கு ஜாடையாகச் சொல்ல,

“பார்த்தியா உன் பொண்டாட்டியை. நம்ம இரண்டு பேரும் சேர்ந்து வந்ததால் தான் மழை பெய்யுதாம்.” என்றான் செல்வா. ஆனால் அவன் இதழ்களில் இருந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று அவன் தான் சொல்ல வேண்டும்.

“சரி விடுறா உண்மையை தானே சொல்றாங்க. இதைப் போய் எதுக்கு பெருசா எடுத்துக்கிற.” தானும் சிரிப்புடன் ஏற்றக்கொண்டான் தெய்வா.

இவர்கள் சிரித்துப் பேசும் இந்த அற்புதக் காட்சியை கண்டும் காணாமலும் கிச்சனுக்குள் சென்ற லீலா, செல்வாவிற்கும், தெய்வாவிற்கும் ப்ளாஸ்கில் இருந்த டீயை இரண்டு கப்பில் ஊற்றி எடுத்துக்கொண்டு போய் அவர்களின் முன் வைத்தாள்.

“ம்ம்…. இதுதான் என் நிலைமை. டீயை எடுத்துக்கோங்கன்னு கூடச் சொல்ல முடியல அவங்களுக்கு.” வருத்தப்பட்ட படியே தனக்கான கோப்பையை எடுத்துக் கொண்டான் செல்வா.

“என் நிலைமைக்கு உன் நிலைமை ஓரளவு தேவலாம். நான் ஒருத்தன் வந்து இவ்வளவு நேரம் ஆகுது, என் பொண்டாட்டி என்னைக் கண்டுக்கிட்டாளாங்கன்னு பார்த்தியா?” தெய்வாவின் குரலில் உண்மையில் வருத்தம் தெரிந்தது.

“சரி விடு எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்.” வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லாமல், மனதில் இருந்து சொன்னான் செல்வா.

“எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.” என்ற தெய்வாவின்  குரலில் அளவுக்கு அதிகமான விரக்தி தெரிந்தது.

“நேத்து வரைக்கும் நீயும், நானும் இப்படி ஒன்னா உக்காந்து டீ குடிப்போம், பொறுமையா பேசுவோம் னு யாராவது சொல்லியிருந்தா அதை நம்பி இருப்பியா? இது நடக்கல, அதே மாதிரி எல்லாம் நமக்குச் சாதகமா ஒருநாள் நடக்கும்.” நம்பிக்கையாய் சொன்னான் செல்வா.

“ஏதோ சொல்ற பாப்போம்.” என்றபடி தெய்வா தனக்கான கோப்பையை எடுக்க, அண்ணன் தம்பி இருவருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் நேரம், பள்ளி செல்லும் அவசரத்தில் தேநீர் கோப்பையை மாற்றி எடுத்து, அதனால் ஆரம்பித்த சண்டையால் தெய்வா, செல்வாவின் மண்டையை உடைத்து நான்கு தையல் போட்ட சம்பவம் நினைவு வர சத்தமாகச் சிரித்துக்கொண்டனர்.

இதை ஏதோ உலக அதிசயம் போல் எட்டிப் பார்த்தாள் ஊர்மி. “சரி செல்வா, எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்.” சொல்லிவிட்டு நகன்றான் தெய்வா.

இருவருக்குமே அது முரணான உணர்வாக இருந்தது. இதுவரை இவ்வளவு உரிமை எடுத்துப் பேசிக் கொண்டதில்லை. வித்தியாசமாகவும் இருந்தது, ஏன் என்று புரியாத வகையில் மனதின் ஒரு ஓரம் இனிப்பாகவும் இருந்தது.

காலை ஒன்பது மணி அளவில் வடிவேலுவின் வீட்டிற்கு பெண்கள் பலர் ஒன்றாக வந்தனர். “புருஷன் பொண்டாட்டிக்குள்ள மொத்தமா நாலு பேர் வந்து படுக்கிற அளவுக்கு இடைவெளி இருக்கு. இந்த நேரத்தில் சுமங்கலி விரதம் ஒன்னுதான் கேடு.” கடுப்பாய் முணுமுணுத்தான் தெய்வா.

“தெய்வா அப்படி எல்லாம் பேசக்கூடாது. நீங்களும் போய் சீக்கிரமா ரெடி ஆகிட்டு வாங்க.” என்றார் வடிவேலு.

“நாங்க எதுக்கு, இது லேடீஸ் பங்ஷன் தானே.” மருத்துவமனைக்குத் தயாராகி நின்ற செல்வா கேட்டான்.

“ஒவ்வொன்னுக்கும் விளக்கம் சொன்னாத் தான் கேட்பீங்களா? போய் சொன்னதைச் செய்யுங்க டா. இன்னைக்கு சுமங்கலி பூஜை மட்டும் இல்ல, பூஜை முடிஞ்சதுக்கு அப்புறம் மருமகப் பொண்ணுங்களுக்கு தாலி பிடிச்சு கோர்க்கிற சம்பிரதாயம் இருக்கு.” அதட்டலாய் சொன்னார்.

“ஆனா இது கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலே பண்ணிடுவாங்களே.” இருக்கும் நிலைமை புரியாமல் கேள்வி கேட்டான் நாகா.

“எனக்கும் அந்த நினைப்பும், ஆசையும் இருக்கத்தான் செய்தது. ஆனா எங்க, என் பசங்க நீங்க தான் அதுக்கான வாய்ப்பை எனக்குக் கொடுக்கலையே. நடந்த சம்பவங்களில் நானும் இதை மறந்தே போயிட்டேன். நேத்து தான் லீலா வந்து பேசினா.

தாலி பிரிச்சுக் கோர்க்கிறதுக்கு முன்னாடி, இரண்டு முறை பெரிய சண்டை வந்திடுச்சு. பட்ட திருஷ்டி எல்லாம் போறதுக்காக ஒரு சுமங்கலி விரத பூஜை பண்ணினா நல்லா இருக்கும் னு சொல்லவும், நல்லது பண்றதுக்கு கசக்குமான்னு நானும் ஒத்துக்கிட்டேன்.” என நடந்ததை எடுத்துரைத்தார்.

“இந்தப் பூஜையில் நாங்களும் கட்டாயம் கலந்துக்கணும் தானே. அப்ப பூஜைக்கு ஏற்பாடு பண்ணும் போது எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமா இல்லையா?” நாகா போர்கொடி தூக்கினான்.

“உனக்கு மட்டும் ஏன் டா எப்பவும் புத்தி இப்படி கோக்கு மாக்காவே வேலை செய்யுது. பொண்ணுங்களுக்குத் தான் ஏகப்பட்ட பிரச்சனை. ஒரு பூஜைக்குத் தேதியை முடிவு பண்றதுக்கு முன்னாடி நிறைய விஷயங்களை பார்க்கணும். ஆம்பளைங்க உங்களுக்கு என்ன. வந்து பூஜையில் உட்காருங்கன்னு சொன்னா எப்ப வேணாலும் வந்து உட்காரப் போறீங்க.” அலட்சியமாகச் சொன்னார் வடிவேலு.

“ஏன் அந்த நாளில் எங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்தா? சும்மா சமாளிக்க நினைக்காதீங்.க. இதையே நாங்க செஞ்சா ஆணாதிக்கம் னு சொல்வீங்க. எங்களுக்கு நடந்தா மட்டும் கேள்வி கேட்கிறது கிடையாது. இங்க என்னைக்கும் ஆம்பிளைக்கு ஒரு நியாயம் பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம் தான்.” சத்தமாக முணுமுணுத்தான் நாகா.

“எப்பவோ ஒரு காலத்தில் யாரோ ஒரு பெரியவர் சொன்னாராம். மாதவிலக்கையும், குழந்தைப்பேற்றையும் ஆம்பளைங்ககிட்ட கொடுத்திருந்தா, இப்ப இருக்கிற ஜனத்தொகையில் பாதிதான் உலகத்தில் மிஞ்சி இருக்கும் னு. பொண்ணுங்களா இருக்கிறது கஷ்டம் டா. அவங்களுக்காக என்ன வேண்ணா செய்யலாம்.” அவர் என்னவோ சாதாரணமாகத் தான் சொன்னார். ஆனால் கேட்டுக்கொண்டிருந்த நாகாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நிறையப் பேர் இதை ஒரு பெரிய விஷயமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இயற்கை எல்லா உயிரினங்களையும் இப்படித்தான் படைச்சிருக்கு. அதுக்காக பொண்ணுங்க என்னவோ கடவுள் மாதிரிப் பேச வேண்டாம்.

ஆம்பளைக்கு கர்ப்பப்பை இருந்திருந்தா நாங்களும் குழந்தையைப் பெத்தெடுத்து இருப்போம். கண்ணுக்கு கண்ணா வளர்த்திருப்போம். அது மட்டும் இல்ல இப்பெல்லாம் குழந்தை பெத்துக்கிட்டா, தாய்ப்பால் கொடுத்தா அழகு குறைஞ்சிடும் னு நிறைய பொண்ணுங்க குடும்ப வாழ்க்கைக்கே ஒத்துவர மாட்டேங்கிறாங்க. ஆனா ஆம்பிளைங்களுக்கு அந்த ஒரு நிலைமை வந்தா அழகாவது மண்ணாவது குழந்தையோட ஆரோக்கியம் தான் முக்கியம் னு முடிவெடுத்திருப்போம்.” வீரவசனம் பேசினான்.

“டேய் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. உன்னை வைச்சு பிறரை எடைபோடக்கூடாது. அப்புறம் இன்னும் கொஞ்சநாளில் நிஜமாவே உனக்குக் குழந்தை பிறக்கப் போகுது. இப்ப ஏதாவது ஏடாகூடமா பேசி, அப்புறம் வாங்கிக்கட்டிக்காத.” செல்வா சொல்ல, அதன் உண்மை உரைத்தது போல் சட்டென்று அமைதியானான் நாகா. இதுவும் ஒரு விசித்திரமான நிகழ்வு தான்.

சுமங்கலி பூஜை ஆரம்பித்து நல்லபடியாகச் சென்று கொண்டிருந்தது. ஊர்மி மட்டும் கால்களை மடக்கி உட்கார முடியாமல் சற்று சங்கடப் பட்டுக் கொண்டிருந்தாள். மேடிட்டிருந்த வயிறு கஷ்டப்படுத்தியது.

அதைக் கவனித்து, “ஊர்மி வயித்தில் குழந்தைங்களை வைச்சிக்கிட்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு இதெல்லாம் பண்ண வேண்டிய அவசியம் என்ன. இதெல்லாம் பண்ணா தான், நான் ரொம்ப வருஷம் உயிரோடு இருப்பேனா என்ன. எதுவும் தேவை இல்ல எழுந்திரு. அப்புறம் நீ தான் ரொம்ப கஷ்ட படுவ.” என்றான் நாகா.

“எனக்கு ஒன்னும் இல்லங்க. கொஞ்சம் கால் வலிக்குது அவ்வளவுதான். பூஜை முடிஞ்சதுக்கு அப்புறம் ஒத்தடம் கொடுத்தா சரியாப் போயிடும். நீங்க அமைதியா இருங்க.” வழக்கத்திற்கு மாறாக அமைதியாகச் சொன்னாள்.

அவள் வலி தாங்குகிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தாலும் அதன் அளவு தெரியாததால், அவ்வப்போது வருவது போல் சாதாரண வலி தான் போல, என நாகாவும் அமைதியாக இருந்தான். அப்படி இல்லை என்பது ஊர்மிக்கு மட்டும் தான் தெரிந்தது.

பூஜை முடிந்து தாலி பிரித்து கோர்க்கும் நேரம் வர, பெண்கள் நால்வருக்கும் அருகே வந்து அமர்ந்தனர் ஆண்கள் நால்வரும். கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை பிரிக்கும் நேரம் பெண்களுக்கு என்னவோ போல் இருந்தது. அந்த உணர்வு கணவனின் கையால் தங்கத் தாலியோடு கூடிய தங்கச் சங்கிலியை ஏற்றுக்கொண்ட போது மறைந்து, கூடுதலாக மனம் குளிர்ந்து போனது.

பூஜை முடிந்ததும், தங்கள் அழைப்பை மதித்து வந்த பெண்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்து அனுப்பி வைக்கும் வேலையில் பெண்கள் மூவரும் இருக்க, டைனிங் ஹாலில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஊர்மிக்குத் திடீரென அடி வயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டது.

அதில் பயந்து போனாள் அவள். தன்னைத் தாண்டிச் செல்ல முயன்ற லீலாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “அக்கா எனக்கு வயிறு வலிக்கிது.” என்றபடி நிற்க முடியாமல் மடங்கி தரையில் அமரப் பார்த்தாள்.

அவளைத் தாங்கிப் பிடித்த லீலாவிற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “அக்கா ஏதாவது பண்ணுக்கா. ரொம்ப வலிக்குது, வலி தாங்க முடியல.” என்றவளின் கண்ணீர் தங்குதடையின்றி வழிய ஆரம்பித்தது.

“நான் என்ன பண்ணுவேன், எனக்கு ஒன்னும் தெரியலையே ஊர்மி.” பதறினாள் லீலா.

அக்கா என்கிற அழைப்புடன் ஊர்மி தரையில் அமர்ந்துவிட, சுதாரித்த லீலா, “ஒன்னும் இல்லடா அக்கா பக்கத்தில் தான் இருக்கேன். எல்லாம் சரியா போயிடும். நீ பயப்படாத, அமைதியா இருடா தங்கம்.” ஊர்மியை அணைத்துக்கொண்டு தேற்ற ஆரம்பித்த லீலாவின் தைரியம் உடைந்து அவள் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“ஊர்மி என்னாச்சு உனக்கு, என்னடி பண்ணுது.” பதறியபடி கேட்டான் நாகா. என் பின்னால் வா என்று சொல்லிவிட்டு தான் அறைக்குச் சென்று நெடுநேரம் ஆகியும் வராத மனைவியை அழைத்துப் போக வந்த நாகாவுக்கு மனைவியின் நிலை பயத்தைக் கொடுத்தது.

“என்னங்க, எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது. குழந்தைங்களுக்கு எதுவும் ஆகிடுமோன்னு பயமா இருக்கு. ஏதாவது பண்ணுங்க.” என்றபடி அவன் கரத்தைப் பிடித்துக்கொண்டு அழுதாள். ஒன்றும் புரியாமல் தலையைப் பிடித்த நாகாவிற்கு தமையன் நினைவு வர, வேகமாக அவன் அறைக்கு ஓடிச் சென்று செல்வாவை இழுத்து வந்தான்.

“செல்வா நீ டாக்டர் தானே. பாருடா என் பொண்டாட்டியை, என் கண்ணம்மா என்னென்னவோ சொல்லி அழுறா. ரொம்ப பயமா இருக்கு. ப்ளீஸ் அவளைக் காப்பாத்தி என்கிட்ட கொடுத்துடு.” என்றபடி அவன் கைகளைப் பிடித்து சொன்னான் நாகா.

நிலைமையைப் புரிந்துகொண்டான் செல்வா. “ஏய் இரு, பயப்படாதே பதற்றப்படாத. நான் பார்க்கிறேன். ஒன்னும் ஆகாது. நீ அவங்களைத் தூக்கிட்டு ரூமுக்குள்ள வா.” என்றுவிட்டு தன்னுடைய மெடிகிட்டை எடுத்து வர நினைத்த வேளையில் ருக்கு அதைக் கொண்டு வந்திருந்தாள்.

“எல்லாரும் வெளியில இருங்க. லீலா, நாகா நீங்க இரண்டு பேர் மட்டும் உள்ள வாங்க.” என்றுவிட்டு ஊர்மி இருந்த அறைக்குள் வந்தான் செல்வா.

அவளின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டுக்கொண்டே, “ஊர்மி ஒன்னும் பயம் இல்ல. கர்ப்பகாலத்தில் எல்லா பொண்ணுகளுக்கும் இந்த மாதிரி வலி வருவது சகஜம் தான். பயப்படாம எங்க வலிக்கிது, எப்படி வலிக்கிதுன்னு சொல்லுங்க.” என்க, வலிக்கு நடுவில் அவளும் வழிகாட்டினாள். மேலும் சில கேள்விகளைக் கேட்க பதில் சொல்ல முடியாமல் அக்காவைப் பார்த்தாள் அவள்.

“அமைதியா இருந்தா என்னடி அர்த்தம். கேட்கிறான் இல்ல, பதில் சொல்லு. அப்படி ஏதாவது உணர முடியுதா?” நாகா பதற்றமாய் கேட்க, இல்லை என்று தலையாட்டினாள் ஊர்மி.

அதன்பிறகு தான் செல்வாவின் முகம் தெளிந்தது. “ஊர்மிளா, நீங்க பயப்படுற மாதிரி ஒன்னுமே இல்ல. ரொம்ப நேரம் காலை மடக்கி உட்கார்ந்ததால் வயிற்றில் தசைப்பிடிப்பு உண்டாகி இருக்கும். அது பிரச்சனை இல்லை. ஆனா நீங்க பயந்ததில் பிபி அதிகமாகி இருக்கு. இது நல்லதுக்கு இல்ல. என் வார்த்தையை நம்புங்க. குழந்தைங்க நல்லா இருக்கு. நீங்க பயத்தை விடுத்து அமைதியா இருந்தீங்கன்னா வலி தானாக சரியாகிடும்.” என்க, மாமனின் வார்த்தைகளை தெய்வத்தின் வார்த்தைகளாக நம்பி தலையாட்டிய ஊர்மி கொஞ்சம் கொஞ்சமாக சமாதானமடைந்தாள். வலி குறையவில்லை என்றாலும் அழுகை முற்றிலுமாக நின்றது.

வலி குறைந்து, உறக்கம் வருவதற்காக ஊசி போட்டுவிட்ட செல்வா, “லீலா அவங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க வெளியில வாங்க. நாகா பக்கத்திலிருந்து பார்த்துக்கோ.” என்றவன் என்ன நினைத்தானே கிளம்பும் முன்னால், “ஒன்னுமில்ல பயப்படாத.” என்று தம்பியின் தோளில் தட்டிவிட்டுச் சென்றான்.

“செல்வா என்னாச்சுடா ஊர்மிக்கு.” வெளியே வந்தவனைப் பிடித்துக்கொண்டார் வடிவேல்.

“சாதாரண வலி தான் அப்பா. அவங்க வீட்டிலும் பெரியவங்கன்னு லேடிஸ் யாரும் இல்ல. நம்ம வீட்டிலும் யாரும் இல்ல. அதனால தான் எல்லோரும் ரொம்ப பயந்துட்டோம். நாகா படுத்திய பாட்டில் நானும் கொஞ்சம் பதற்றப்பட்டுட்டேன்.” என்றவன் மனைவி பக்கம் திருப்பி, “லீலா நாளையில் இருந்து அவங்களைக் கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ளேயே நடக்கச் சொல்லுங்க.” என்றுவிட்டு தன் அறைக்குள் சென்றான்.

வலி குறைந்து உறங்க ஆரம்பித்திருந்த ஊர்மியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நாகாவிற்கு, இதயத்தின் துடிப்பு மட்டும் இன்னும் சீராகாமலே இருந்தது. ஏசி குளிரிலும் சீராக வேர்த்து வடிய, தொடர்ந்து அதைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு அவள் அழுத அழுகை அவனை மிகவும் பயமுறுத்தி இருந்தது. கூடவே அவள் தன் வாழ்வில் எத்தனை முக்கியமானவள் என்பதையும் உணர்த்தி இருந்தது. மெதுவாக அவள் அருகில் படுத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, அணைத்தபடி படுத்துக்கொண்டான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
19
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நாகம் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கிறது இல்ல … இதுல இவரே பிள்ளை பெத்துருவாராம் … நல்லா அழட்டும்… என்ன எல்லாரும் அமைதியா நல்லவங்களா இருக்காங்க … சரியில்லையே …

    ஏன் பா ஒரு டீ காக மண்டையை உடைச்சுக்கிட்டீங்களா … உங்க வரலாறு இவ்ளோ மோசமா இருக்கு …