Loading

             இசையின் வீட்டில் சாயங்காலம் சிற்றுண்டி உண்ட பிறகு, ராகினியும் அவளது கணவனும் ராகினியின் பெற்றோரை பார்க்க வேண்டும் எனக் கூறி கிளம்பி சென்றுவிட, மகிழும், மீனாட்சியும் சமையலறையில் இருந்தனர்.

ஆகாஷ், குணசேகரனோடு இணைந்து தோட்டத்தில் இருக்க, இசையும், அகிலும் சித்துவிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சந்துருவிடம் சிந்து ஏதோ கூற அங்கு வந்த கவின், “என்ன அண்ணனும் தங்கச்சியும் ரகசியம் பேசறீங்க.” எனக் கேட்டான்.

“ம்ம். உன் கூட சேர்ந்து சேர்ந்து என் அண்ணனும் உன்னை மாதிரியே ஆகிட்டானு சொன்னேன்.” என்றாள் சிந்து. “வெரிகுட் சந்துரு. அப்படி தான் இருக்கனும்” என அவள் எதற்கு சொல்கிறாள் எனத் தெரியாமலே அவன் பாராட்ட, சிந்துவோ முறைத்தாள்.

“அண்ணா நீங்க வேற, அவ லவ் மேட்டரை சொல்றா” எனவும், அப்போதும் விடாமல், “அதான்டா சொல்றேன். எப்பவுமே நாம உஷாரா இருக்கனும். மாட்டிக்கிட்டா அவ்ளோதான்” என்றான் சந்துரு. “எவ்வளவு நாள் மாட்டிக்காமலே இருப்பனு பார்க்கறேன்” என்ற சிந்து, “சரி நம்ப கதையை விடு, இந்த அண்ணன் ஏன் இன்னும் சொல்லாமலே இருக்கு. அதான் கேட்டுகிட்டு இருந்தேன்” என்றாள்.

“அண்ணன்தான் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு சொல்லியிருக்காங்கள்ள, அதோட சொல்லி முடியாதுனு சொல்லிட்டா, அதை நினைச்சாலே பயமா இருக்கு” என்றான் சந்துரு. “சொல்லாமலே இதயம் முரளி மாதிரி லவ் பண்ண போறீயாண்ணா” என சிந்து கேட்க, “ஓ இங்கையும் லவ் மேட்டர்தான் ஓடுதா” என்றபடி வந்து அமர்ந்தாள் இசை.

அவளை எதிர்பாராமல் மூவரும் திருதிருவென முழிக்க, “சார், நீங்க லவ் பண்றீங்களா, ஒரு வார்த்தை என்கிட்ட சொன்னீங்களா? ஆமா பொண்ணு யாரு?” என அவள் கேட்கவும்தான் மூவருக்கும் மூச்சே வந்தது. “அதைத்தான்மா நானும் கேட்டுகிட்டு இருந்தேன். நீயே கேட்டு தெரிஞ்சுகிட்டு சொல்லு” என அங்கிருந்து நழுவினான் கவின்.

சிந்து, “கரெக்ட் டைம்க்கு வந்துருக்கீங்க, நீங்களே கேளுங்க இசை. தங்கச்சிகிட்ட எப்படி சொல்றதுனு அண்ணன் வெட்கப்படுது. நீங்கதான் அண்ணாவோட ஃப்ரண்டாச்சே. கேளுங்க” என்றபடி அவளும் அங்கிருந்து ஓடிவிட, சந்துரு, “அடப்பாவிகளா இப்படி கோர்த்துவிட்டுட்டீங்களே” என மெலிதாக முணுமுணுத்தபடி அவளை பார்த்து புன்னகைத்தான்.

“சொல்லுங்க சார். யாரை லவ் பண்றீங்க. உங்க கூட படிச்சவங்களா, இல்ல வேலை பார்க்கிற இடத்துல, அட அப்ப நம்ப ஆபிஸ்லயா?” எனக் கேட்டுக் கொண்டே போக, “எங்க இருந்தா என்ன. விடு” என்றான் சந்துரு. இசை, “சரி விடுங்க. பேர் என்ன பார்க்க எப்படி இருப்பாங்கன்னு சொல்லுங்க” என்றதற்கும் அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இதுக்கும் நோ ஆன்சரா. சரி ஓகே. எப்ப முதல்ல பார்த்தீங்க. எப்படி புரப்போஸ் பண்ணீங்க. உங்க லவ் ஸ்டோரியாவது சொல்லுங்க.” என்றாள் இசை. சந்துரு, “புரப்போஸா நான் லவ் பண்றதை இன்னும் அவகிட்ட சொல்லவே இல்லையே.” எனவும், “ஒன் சைட் லவ்வா, ஆமா ஏன் இன்னும் சொல்லல. ஏதாவது நல்ல நேரம் வரனும்னு வேண்டுதலா?” என்றாள் இசை.

“அப்படியெல்லாம் இல்ல. நான் சொல்லி அவ இதெல்லாம் ஒத்து வராதுனு சொல்லிட்டா. அதான் பயமா இருக்கு” என்றான் சந்துரு. “ஓ. ஆமா ஏன் முடியாதுனு சொல்வாங்க. அந்த பொண்ணுக்கு லவ் பிடிக்காது அந்த மாதிரியா?” என இவள் திருப்பிக் கேட்க, “அப்படியெல்லாம் தெரியல. ஆனா என்னை பிடிக்குமானு யோசனைதான்” என்றான் சந்துரு.

“அட என்ன சார் நீங்க. உங்களை போய் யாருக்காவது பிடிக்காம இருக்குமா? பார்க்க அழகா இருக்கீங்க. நல்லா படிச்சு நல்ல பிஸினஸ் வேற இருக்கு. கேரக்டரும் சூப்பர்தான். வேற என்ன ரீசன் இருக்கு உங்களை பிடிக்கலன்னு சொல்ல” என இசை எதார்த்தமாக கூற, “அப்ப நிஜமா நான் சொன்னா மறுக்க மாட்டானு சொல்ற. அப்ப சொல்லிடவா?” என ஆர்வமுடன் கேட்டான் சந்துரு.

இசை, “கண்டிப்பா உடனே சொல்லிடுங்க” எனவும், சந்துரு அவளிடம் ஏதோ கூற வர, கவினும், சிந்துவும் ஒரு புறம் மறைந்திருந்து இதைப்பார்த்துக் கொண்டிருக்க, சரியாக அந்நேரம் பார்த்து சித்து அங்கு வந்தான். அவனைக் கண்டதும், “சீக்கிரம் சொல்லிடறேன்” என அவளிடம் கூறிய சந்துரு, “வாங்கண்ணா, சும்மாதான் பேசிட்டு இருந்தோம்” என்றான்.

சித்து, “சரி சரி இன்னைக்கு நைட் நாங்க பெங்களூர் கிளம்பறோம்” என்றான் தம்பியிடம். “ஏன்ணா, நாளைக்கு இருந்துட்டு போகலாம்ல” என சந்துரு கூற, “ஆபிஸை பார்க்க வேண்டாமா?” எனக் கேட்கவும் அவன் தலையாட்ட, “ஆபிஸ் பத்தியெல்லாம் நீ ஏன்ணா கவலைப்படற, அதெல்லாம் கவின் பார்த்துக்குவான். நீ இரு. கவினுக்கும் எனக்கும் டிக்கெட் புக் பண்ணுண்ணா” என்றாள் சிந்து.

“அப்ப நான் எப்படி வரது. எனக்கும் சேர்த்து போடுங்க” என்றபடி வந்தாள் அகல். “ஆமா கேட்கனும்னு நினைச்சேன். நீ எங்க வேலை பார்க்கிற” என அவளிடம் சித்து கேட்க, “சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்ல தான்ணா” என்றாள் அவள். “ஓ அதோட பிரான்ச் சென்னைல கூட இருக்குல்ல. பேசாம இங்க டிரான்ஸ்பர் வாங்கிக்கோ” என யோசனை கூறினான் சித்து.

“ஏன் மாம்ஸ். டிரான்ஸ்பர் வாங்கனும். ரிசைன் பண்ணிட்டு நம்ப ஆபிஸ்ல கூட ஜாயின் பண்ணீக்கலாமே” என இசை கேட்க, “அகல் வேலை பார்க்கறது பெரிய கம்பெனி இசை. நாங்கள்ளாம் அதுக்கு பக்கத்துல கூட நிக்க முடியாது. நல்ல சம்பளத்தை விட்டுட்டு இங்க வர சொல்றது நியாயமா சொல்லு” எனவும், “அதுவும் சரிதான்” என்றாள் இசை.

“சம்பளம்லாம் பார்த்துக்கலாம். ஆனா நான் இருக்கிற பீல்ட்ல கொஞ்சம் நல்லா குரோத் இருக்கு. நெக்ஸ்ட் இயர் ஆன்சைட் கூட கிடைக்கும். அதான். அண்ணா சொல்ற மாதிரி வேண்ணா டிரான்ஸ்பர் கேட்டு பார்க்கலாம்” என்றாள் அகல்யா.

இப்படி சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க, சித்து தானும் கிளம்புவதாகவே கூறிவிட்டான். அதற்குள் இரவு உணவு தயாராக இருக்க, அனைவரும் உணவருந்தி முடித்ததும், சித்து, மகிழிடம் சற்று பேச வேண்டும் எனக் கூற,  மீனாட்சியும் சரியெனவும் இருவரும் அறைக்குள் சென்றனர்.

உள்ளே சென்றதும், “நீ என்னதான் யோசிக்கிற வதனி. எதுவா இருந்தாலும் நேரா சொல்லு” எனக் கேட்கவும், அவன் எதைப்பற்றி கேட்கிறான் என தெரியாமல் பார்க்க, “நம்பளைப்பத்தி” என்றான்.

“நம்பளைப்பத்தி யோசிக்க என்ன இருக்கு. எல்லாம் நல்லாத்தானே போய்ட்டு இருக்கு” என மகிழ் கேட்க, “அது பாட்டுக்கு போயிட்டு இருக்கு. உன் முடிவை இன்னும் நீ எனக்கு சொல்லல.” என்றான் சித்து. “அதான் எல்லாருமே ஒத்துக்கிட்டாச்சே. அப்பறம் என்ன யோசனை உங்களுக்கு” என மகிழ் கேட்டதில் முறைத்தான் அவளை.

“ஏய் மக்கு. எல்லாரும் ஒத்துக்கட்டும். நல்ல நாளா பார்த்து கல்யாணம் கூட நடக்கட்டும். ஆனா நீ ஏன் இன்னும் எனக்கு சரின்னு சொல்லாம இருக்கனு கேட்கறேன். இந்த விசயத்துல மட்டும் நீ பயங்கர அமைதியா இருக்கனு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?” என்றவன், அவள் பதில் பேசாமல் இருக்க, “ஒருவேளை நானாதான் கற்பனை பண்ணீக்கறனா? என்ன கல்யாணம் பண்ணீக்க உனக்கு இஷ்டமில்லையோ” என்றான் சித்து.

அவன் கண்களை பார்த்தவள் அதில் தவிப்பை உணர்ந்து அவனது முகத்தை ஏந்தி நெற்றியில் தனது இதழை ஒற்றியவள் பேசாமல் வெளியில் செல்ல, சித்து அவளது கைகளை பிடிக்கவும், “பிடிக்கலன்னு இல்ல அபி, என்னவோ என் மைண்ட் கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கு. என்னனு தெரியல. ரெக்கவர் ஆக கொஞ்சம் டைம் வேணும்” என்றாள் அவள்.

அவளது தோள்களில் கைவைத்து அவளை சிறை எடுத்தவன், “எதைப்பத்தியும் பயப்படாத, கவலைப்படாத, எல்லாமே சீக்கிரம் சரி ஆகிடும். அப்படி ஆகலன்னா இந்த மாமா எல்லாத்தையும் சரி பண்ணுவான். நீ சந்தோஷமா இருந்தா போதும். சரியா?” என்றவன் அவளைப் போலவே நெற்றியில் முத்தமிட இருவரும் வெளியே வந்தனர்.

பிறகு அனைவரிடமும் கூறிக் கொண்டு கிளம்ப சரியாக அந்த நேரம் பார்த்து சித்துவின் அலைபேசி ஒலித்தது. நிரஞ்சனியின் தந்தைதான் அழைக்க, அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்க அங்கிள்” என்றான். “நிருவை காணல சித்து” என அவர் கூற, அதிர்ந்தவன் உடனே சுதாரித்து, “என்ன அங்கிள் அடுத்த டிராமாவ பிளான் பண்ணீட்டாலா?” என சாதாரணமாக கேட்டான்.

“இல்ல சித்து, நான் அவளை திட்டி அடிச்சுட்டேன். அதுல கோவிச்சுக்கிட்டு அஞ்சு நாளா ரூம்க்கு உள்ளேயே இருந்தா. இப்ப கதவை திறக்கலயேன்னு பார்த்தா அவளை காணோம். கொஞ்சம் பயமா இருக்கு சித்து” என்றார் தவிப்பாக. “அஞ்சு நாளாவா? எப்படி கவனிக்காம விட்டீங்க அங்கிள். சரி எப்ப ரூமை திறந்தீங்க” எனக் கேட்டான் சித்து.

அவர், “சாயங்காலமே பார்த்துட்டோம். எதுக்கும் விளையாடறாளோன்னு நினைச்சு அவளோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் கால் பண்ணி பார்த்தேன். ஆனா யாருமே அவளை பார்க்கலன்னு சொல்றாங்க. அதான் ஒருவேளை உன்னைத்தேடி பெங்களூர் எதுவும் வந்திருப்பாளோன்னு உனக்கு பண்ணேன் சித்து” என்றார்.

“நான் பெங்களூர்ல இல்ல அங்கிள். சென்னைல தான் இருக்கேன். நான் விசாரிக்கிறேன். நீங்க பயப்படாம இருங்க” என்றபடி அழைப்பை துண்டிக்க, “என்னாச்சு மச்சி. யாரு பேசினாங்க” என கவின் கேட்கவும், “நிரஞ்சனியை காணோம்னு அவங்கப்பா ஃபோன் பண்றாருடா. இப்ப என்ன பண்றது. எங்க போயிருப்பா?” என யோசித்தான் சித்து.

“அவ எங்க போயிருப்பா, வழக்கம் போல ஏதாவது பிளான் பண்ணியிருப்பா” என கவின் கூறவும், “இல்லடா, சம்திங் இஸ் ஃபிஷி.” என்ற சித்து, “சந்துரு, நீ உங்கம்மாவுக்கு கால் பண்ணி பார்க்க வந்தாளான்னு கேளு” எனவும் அவனும் அன்னைக்கு அழைப்பு விடுத்தான்.

அவரோ அழைப்பை ஏற்று, மூன்று நாட்களுக்கு முன்பு தன்னை பார்க்க வந்ததாகவும், இந்த திருமணம் நடக்காது என கூறி அனுப்பியதாகவும் கூறினார்.

சந்துரு அதை அப்படியே கூற, “அப்ப வீட்ல இருந்து மூனு நாளைக்கு முன்னாடி அவளாத்தான் வந்திருக்கனும். ஆனா திரும்பி வீட்டுக்கு போகல. என்ன காரணமா இருக்கும்” என மீண்டும் யோசித்த சித்து நிரஞ்சனியின் தந்தைக்கு அழைத்து, “எப்படி வெளில போயிருக்கா?” எனக் கேட்க, அவரோ நடந்ததை அப்படியே கூறினார்.

“வெளில தாழ்ப்பாள் போடல, அப்பறம் ஏன் பால்கனி வழியா போகனும்” என மகிழ் கேட்கவும், “கரெக்ட், அவ சும்மா பயமுறுத்த தான் உள்ள இருந்திருக்கனும். அப்பதான் அவங்க கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்க. உள்ளையே இருக்கறதா காட்டிக்கிட்டு எதுக்கும் வேற ஐடியாவும் பண்ணலாம்னு வெளில வந்திருக்கலாம். ஆனா மறுபடி உள்ள போகல. அதான் என்ன நடந்ததுன்னு புரியல” என்றான் சித்து.

“அப்படித்தான் இருக்கனும்” என ஒவ்வொருவரும் ஒன்றை யோசித்தாலும் விடைதான் கிடைக்கவில்லை யாருக்கும். இந்த யோசனையில் டிக்கெட் புக் செய்திருப்பதை மறந்து போயிருந்தனர் அனைவரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்