Loading

            மகிழ் அப்படி கேட்டதும் இசைக்கு ஒன்றுமே புரியவில்லை. “அப்படி எல்லாம் இல்லக்கா. ஏன் இப்படி கேட்கிற?” என இசை கேட்க, “இல்ல என்கிட்ட எதுவுமே கேட்க மாட்டாங்க. ஆனா இப்ப கேட்டு கேட்டு பண்றாங்கன்னு. கொஞ்ச நாள் அப்படிதான் இருக்கும். அப்பறம் நார்மல் ஆகிடுவாங்க” என மகிழ் கூறியதும் தான் இசைக்கு எதைப்பற்றி பேசுகிறாள் என்றே தெரிந்தது.

இசை, “அடக்கடவுளே. உனக்கு யாரு இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி தராங்க?” என சலித்துக் கொண்டபடி அவளது அருகில் அமர்ந்தவள், “உன்னை வா, போனு கூப்பிடலாம்ல.” எனக் கேட்டாள். “உனக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்பிடு” என மகிழ் கூறவும்,

“அப்ப ஓகே. அம்மா என்னை விட உனக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுத்தாலும் நான் ஒன்னும் சொல்லமாட்டேன். ஏன்னா நான் இத்தனை வருஷமா இது எல்லாமே அனுபவிச்சிருக்கேன். ஆனா நீ அப்படி இல்ல. பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்ப.

நான் சும்மா மாம்ஸ்கிட்ட அப்படி விளையாட்டுக்கு சொன்னேன். ஏன்னா இப்பதான் பர்ஸ்ட் டைம் பார்க்கிறோம். இவ்வளவு லிமிட்ல தான் பேசனும்லாம் எனக்கு தெரியாதுக்கா. நார்மலாவே நான் கொஞ்சம் அப்படிதான். அதுவும் உன்கிட்ட அன்னியமா எதுவுமே பீல் ஆகல.

எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்லையே ரொம்ப கஷ்டமாலாம் இருந்திருக்கு. ஆனா இனிமே அப்படி இல்ல. உன்னை பார்த்ததுல நீ வீட்டுக்கு வந்ததுல. எல்லாமே எனக்கு ஹேப்பிதான் அக்கா” என அழுத்தமாக கூற, அவளது அன்பில் கரைந்து போன மகிழ் அவளை கட்டிக் கொண்டு கண்ணீரை உகுத்தாள்.

“அய்யோ அக்கா, என்ன இப்படி நீ அழுமூஞ்சியா இருக்க. எனக்கு என்கூட நல்லா சண்டை போடற மாதிரி, செல்லம் கொஞ்சற மாதிரி அக்காதான் வேணும்” என அவளை விலக்கிவிட்டு இசை கூற, “சொல்லிட்டல்ல. நாளைல இருந்து பாரு” என்ற மகிழ், “சரி படுக்கலாமா?” என்க, சரியென்று இசையும் படுத்தாலும், இரவு முழுவதும் இருவரின் வாயும் ஓயவில்லை.

ஏதேதோ கதைகள் பேசி, விடியும் பொழுதில் தான் உறங்கவே ஆரம்பித்தனர். எனினும் அதிகாலையில் எழுந்து பழகிவிட்ட மகிழுக்கு சீக்கிரமாகவே விழிப்பு தட்டிவிட, எழுந்து பல்துலக்கி,முகம் கழுவி வெளியே வர, அவளது அன்னை தேநீர் போட்டுக் கொண்டிருந்தார்.

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்ல. இராத்திரி நல்லா தூங்கினியா?” எனக் கேட்டார் மீனாட்சி.

மகிழ், “ம்ம். முழிப்பு வந்துருச்சும்மா. அப்பா எங்க?” எனக் கேட்க, “பின்பக்கம் இருப்பாங்க. நீ என்ன குடிப்ப காலைல.” என மீனாட்சி கேட்க, “எதுனாலும் ஓகேம்மா” என்றவள் பின்பக்கம் வந்து பார்க்க, அவளது தந்தை தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

மகிழ், “உங்களுக்கு டைம் இருக்குமாப்பா. பேசாம ஆள் வச்சு பார்த்துக்கலாம்ல” எனக் கேட்டாள். அவர் சிரித்துக் கொண்டே, “இதெல்லாம் ஓய்வு நேரத்துலயும், உடற்பயிற்சிக்காக செய்யறதுமா. இதுக்கும் நேரம் இல்லனு சொன்னா அப்பறம் உடல் இயக்கமே இல்லனு நாயை கூட்டிட்டு வாங்கிங் போக சொல்லிடுவீங்களே உன்னை மாதிரி டாக்டருங்கலாம்” என்றார்.

“அதுவும் சரிதான்ப்பா. வாங்க டீ குடிக்கலாம்” என மகிழ் அழைக்க, “நீ போப்பா. நான் இதோ வரேன்” எனவும் உள்ளே வந்தாள். அங்கே அவளது தாயோ, “ஏய் இந்தாடி. இப்ப எழுந்து வரீயா. இல்ல நான் உள்ள வரனுமா?” என சத்தமிட்டு கொண்டிருக்க, “என்னாச்சும்மா” என்றாள் மகிழ்.

“மணியை பாரு. இன்னும் எழுந்துக்கவே இல்ல. அப்பறம் நேரமாச்சுனு பறப்பா” என அலுத்துக் கொண்டார் அவர். “சின்ன பொண்ணுதானே தூங்கட்டும் விடுங்க.” என தங்கைக்கு பரிந்து பேசினாள் மகிழ்.

சற்று நேரத்தில் கண் முழித்த இசை, அவளுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டிருக்க, யோசனையோடு எழுந்து பிரஷ் செய்து வரும்போது அவளுக்கு தேநீர் ஆற்றி கொண்டு வந்தாள் மகிழ். “குடுச்சிட்டு, சீக்கிரம் குளிச்சிட்டு வா. டைம் ஆச்சுல்ல.” எனவும் தலையாட்டியவள் அவ்வாறே செய்தாள்.

குளித்து தயாராகி வர, அவளுக்கு தேவையான லன்ச் பேக்கில் இருந்து எல்லாம் எடுத்து வைக்கப்பட்டிருக்க, “சீக்கிரம் சாப்பிடு” என அவளுக்கு பரிமாறினாள் மகிழ். தோசையோடு டைனிங் ஹாலுக்கு வந்த தனது அன்னையிடம் இசை, “ஏம்மா. நான் வேற ஏதாவது வீட்ல இருக்கனா? காலைல இருந்து நடக்கறதெல்லாம் பார்த்தா எனக்கு தலை சுத்துது” என்றாள்.

“ம்ம். சுத்தும் சுத்தும். நான் சொன்னேன்ல இவளுக்கு லாம் எதுவும் செய்யவே கூடாதுனு. உங்க அக்காதான் இதெல்லாம் பண்ணா. நாளைல இருந்து சீக்கிரம் எழுந்து பழகு. அவளும் வேலைக்கு போனா என்ன பண்ணுவ” எனக் கேட்க, “அது போறப்ப பார்த்துக்கலாம். இப்ப இதை என்ஜாய் பண்ண போறேன். தேங்க்யூ அக்கா. யூ ஆர் சோ ஸ்வீட்” என கன்னத்தில் முத்தமும் பதித்தாள் இசை.

மகிழ், “ஆமாம்மா. விடுங்க அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கட்டும். நானும் கொஞ்ச நாள் வேலைக்கு போக வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்க. “உன்னை வேலைக்குலாம் போக சொல்லலமா. வீட்ல இருக்கனும்னா தாராளமா இரு” என மீனாட்சி கூறிவிட, “இருந்தாலும் படிச்ச படிப்பு வீணா போய்ட கூடாது. கொஞ்ச நாள் வீட்ல இருந்துட்டு அப்பறம் நல்ல இடமா பார்த்து வேலைக்கு போலாம்லம்மா” என்றார் குணசேகரன்.

“அதெல்லாம் பொறுமையா போகலாம்ப்பா. முதல்ல பேமிலி, ஊர் எல்லாம் நல்லா செட் ஆகட்டும். ஓகே பாய். நான் கிளம்பறேன்” என பதில் கூறிவிட்டு இசை கிளம்பிவிட, சற்று நேரத்திலே குணசேகரனும் கிளம்பினார்.

அதற்கு பின் மகிழ் அன்னையோடு பொழுதை கழிக்க, அன்று முழுவதும் சித்து அவளுக்கு அழைக்காதது கூட பெரிதாக தெரியவில்லை அவளுக்கு. ஆகாஷின் வீட்டிலோ, காலையில் நேரமாகவே எழுந்து ஆகாஷ் பணிக்கு கிளம்பி கொண்டிருக்க, சித்து நன்கு உறங்கி கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டு உறக்கம் களைந்தவன், ஆகாஷை இருக்க சொல்லிவிட்டு அவனே சென்று கதவை திறந்தான். அவன் எதிர்பார்த்தபடி கார்முகிலன்தான் நின்றிருந்தான்.

சித்துவை கண்டதும் ஆச்சர்யப்பட்டவன், அதை முகத்திலும் காட்டியபடியே உள்ளே வந்தவன், “ஆகாஷ் சித்தார்த் இங்கதான் இருக்கார்னு நீ சொல்லவே இல்ல” என்றான்.

அதற்கு சித்து, “அது சார்தான் என்ன ரொம்ப நாளா பார்க்கனும்னு ஆசைப்பட்டீங்களாமே அதான் உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லாம வர சொன்னேன்” என்றான்.

முகிலன், “ஆமா. ஆனா நிஜமாலுமே சர்ப்ரைஸ்தான்” என்றபடி சோபாவில் அமர, சித்து சென்று தயாராகி வந்தவன், “ஓகே ஆகாஷ். உனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகுதுல. கிளம்பலாம். நான் முகிலோட ஜாயின் பண்ணிக்கறேன்.” எனவும், சரியென்று கிளம்பினர் மூவரும்.

ஆகாஷ் அலுவலகம் சென்றதும் இசையை தேட அவள் சந்துருவின் அறையில் இருந்தாள். “இன்னைக்கு லீவ் கேட்பன்னு நினைச்சேன். ஆனா ஆபிஸ் வந்துட்ட” என சந்துரு கேட்க, “நான் ஏன் லீவ் போடனும். சொல்லபோனா இனிமேல் பர்மிஷன் கூட போட மாட்டேனு நினைக்கறேன் சார். அக்கா அவ்ளோ ஹெல்ப் பண்றாங்க” என்றாள் இசை பெருமையாக.

“ஓ அப்படி அப்ப உனக்கு வேலை செய்ய இன்னொரு ஆள் சிக்கிட்டாங்க” என்றான் சந்துரு.

இசை, “அப்படியும் வச்சுக்கலாம். சரி இந்தாங்க சாப்பாடு” என கொடுத்துவிட்டு அவள் கிளம்ப, “ஒரு நிமிஷம். உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்னு நினைச்சேன். ஒரு முடிவு பண்ணியிருந்தேன். இது ஆன்ட்டிகிட்டதான் பேசனும். ஆனா இப்ப இது சரிவருமான்னு குழப்பமா இருக்கு. அதான் உன்கிட்ட சொல்லலாம்னு” என இழுத்தான் சந்துரு.

“பரவால்ல சொல்லுங்க. என்ன விசயம்?” என இசை கேட்க, “இல்ல நம்ப கம்பெனியோட கேட்டரிங் காண்ட்ராக்டை ஆன்ட்டிக்கு குடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா இப்ப நாம சொந்தகாரங்க ஆகப் போறோம். அப்படி இருக்கப்ப அது தப்பா போய்டும்ல” என்றான் யோசனையாக.

“நாம எப்படி சொந்தகாரங்க ஆவோம்” என புரியாமல் இசை கேட்க, “உங்க அக்காவும், என் அண்ணனும் கல்யாணம் பண்ணா நாம சொந்தக்காரங்கதானே” என்றான் சந்துரு.

“ஓ நீங்க அப்படி வரீங்க. ஆனா எனக்கு தெரிஞ்ச வரை அவ்வளவு ஈசியா இந்த கல்யாணம் நடக்கும்னு நம்பிக்கை இல்ல” என்றாள் இசை யோசனையாக. “ஏன் அப்படி சொல்ற. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றதுதான் எல்லாருக்குமே தெரிஞ்சிருச்சே. அப்பறம் என்ன?” என்றான் சந்துரு.

இசை, “ஆமா. தெரியும். ஆனா யாராவது அதுக்கு ரியாக்ட் பண்ணாங்களா? எனக்கு தெரிஞ்சு உங்க பேமிலில கொஞ்சம் பிராப்ளம் இருக்கு. அப்பாவோ உங்க வீட்ல கலந்து பேசி எல்லாருக்கும் சம்மதம்னாதான் மேற்கொண்டு யோசிப்பாங்க. அதான்.” என யோசிக்க, சந்துருவோ, “சோ எங்களை மாதிரி பிரச்சனைல்லாம் இல்லாத வீடா பார்த்து தான் நீங்க கல்யாணம் பண்ணுவீங்க. அப்படிதானே” என்றான் கோபமாக.

“நான் அப்படி சொல்லல. அப்பா” என்றவளை கைநீட்டி தடுத்தவன், “யார் தடுத்தாலும் அது உன் அப்பாவா இருந்தாலும், எங்க அண்ணன் ஆசப்பட்டபடி அவங்க கல்யாணம் நடக்கும். நான் நடத்தி காட்டுவேன். நீ கிளம்பலாம்” என அறை வாசலை காட்ட, இசையும் வேகமாக, ‘இப்ப நான் என்ன. அவங்க கல்யாணம் நடக்க கூடாதுனா சொன்னேன்’ என யோசித்தபடியே வெளியே வந்தாள்.

அவளை கண்ட ஆகாஷ், “காலையிலே அப்படி என்ன யோசனை?” எனக்கேட்க, “ம்ம் பிரிட்டிஷ் மாளிகையை எப்படி வாங்கறதுனு யோசிச்சிட்டு இருந்தேன். போ போய் வேலையை பாரு” என அவனிடம் கடுப்படித்து விட்டு சென்றாள் இசை. ஆகாஷோ அதைக் கேட்டு சிரித்தபடியே சென்றுவிட்டான்.

சித்துவை அழைத்துக் கொண்டு ஹோட்டல் ரூமிற்கு அழைத்து வந்த முகிலனோ அவனை கேள்வி கேட்டே துளைத்து விட்டான். “உன் ஃபோன் என்னாச்சு, ஏன் நீ காண்டாக்ட்ல இல்ல, நீ சென்னையை விட்டு ஏன் போன, மறுபடி ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டுக் கொண்டே இருக்க, பொறுமையிழந்த சித்து, “கொஞ்சம் மூச்சு விடு. ஏதாவது ஆகிடபோகுது” என்றான்.

“அதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன ஏன் தேடுன. அதை முதல்ல சொல்லு.” எனக் கேட்டான் சித்து. முகிலன், “நான் சும்மாதான் உன்னை பார்த்து பேசி நாளாச்சுனு” என மழுப்ப, “பொய். என்கிட்ட வேலை இல்லனா இவ்வளவு நாள் என்ன தேட வேண்டிய அவசியம் உனக்கு இல்ல. அஃப்கோர்ஸ் நாம ஃப்ரண்ட்ஸ்தான். ஆனா கொஞ்ச நாள் பழக்கத்துல அப்படி ஒன்னும் குளோஸ் ஆகிடல. சோ உண்மையை சொன்னா நல்லது” என்றான் கூர்மையாக.

“லாஸ்ட் ஒன் இயர் உன்கூட காண்டாக்ட் இல்ல. ஆனா அப்பதான் எனக்கு வேலை கிடைச்சது. நான் எதிர்பார்த்ததை விட பெரிய போஸ்டிங் தெரியுமா. ஆறு மாசம் முன்னாடி ஒரு பெரிய விசயம் நடந்தது. அப்பதான் உன்னோட உதவி தேவைப்பட்டது. அந்த ஒரு வாரத்துல ஓரளவு உன்னை பத்தி நீ சொல்லியிருந்த. அதனால உன்னை பார்த்தா என் வேலை சீக்கிரமா முடியும்னு தோணுச்சு” என்றான் முகிலன்.

“சூப்பர். வேலை கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள். ஆனா உன் வேலைக்கு என்னால என்ன உதவி பண்ண முடியும். அப்படி என்ன இருக்கு என்கிட்ட?” என சித்து கேட்க, “இருக்கு. உன்னோட பரம்பரை சொத்து. உங்க பாட்டி வீடு. அது எனக்கு வேணும்” என முகிலன் கூற, “அதை யாருக்கும் நான் தரமாட்டேனு உனக்கு தெரியாதா?” என்றான் சித்து.

“ஆனா எனக்கு அது கண்டிப்பா வேணும். நீ மாட்டேனு சொல்லக் கூடாது” என்றான் முகிலன் உறுதியாக. “அதை சொல்ல நீ யாருடா?” என்ற சித்துவின் கைகள் அவன் சட்டையை பிடிக்க, விழிகளோ ஆத்திரத்தில் சிவந்தன.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்