Loading

          மகியும் மற்றவர்களும் மண்டபத்தை அடைய வாசலிலே நின்றிருந்த மகியின் பெற்றோரை முதலில் பார்த்தது ஆகாஷ்தான். “மகி அங்க பாரு” என அவளுக்கு காட்டியவன் வேகமாக அவர்களிடம் செல்ல மகி அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்து,  “என்னாச்சும்மா. நீங்க எப்படி இங்க?” என பரபரத்தாள்.

“அது வந்தும்மா. நீங்க வந்த பஸ் ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சுனு நியூஸ் வந்தது. கால் வேற போகல. அதான்.” என விவரம் சொன்னார் குணசேகரன். “அச்சோ அந்த பஸ்ல நாங்க வரவே இல்லையே. ஓசூர்ல திடீர்னு பிரேக்டவுன் ஆகிடுச்சு. அதுனால அதை திருப்பி அனுப்பிட்டு வேற ஏற்பாடு பண்ணிதான் வந்தோம்” என்றான் ஆகாஷ்.

மீனாட்சி, “நீங்க அந்த பஸ்ல வரலன்னு தெரியும்பா. இருந்தாலும் நேர்ல பார்த்துட்டா தேவலன்னு தோணுச்சு. அதான்.” எனவும், “சரி சரி. வந்ததுனால என்ன இப்ப. வாங்க உள்ள போய் பேசிக்கலாம்” என்ற சந்துரு உள்ளே நுழைய மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.

உள்ளே திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருக்க, அப்போதும் மகியை கண்டதும் புன்னகைத்தாள் ராகினி. இவளும் உரிமையாக மேடைக்கு செல்ல, “ஏண்டி நேத்தே வரல.” என அவள் கோபம் கொள்ள, “அது ஒரு ப்ராப்ளம் ஆகிடுச்சு. நான் அப்பறமா சொல்றேன். இப்ப நீ அவங்க சொல்றதை கேளு. ஐயர் என்ன முறைக்கிறார் பாரு.” என்ற மகி மாலையை சரிசெய்தது போல செய்துவிட்டு இறங்கி கீழே வந்தாள்.

அவளது பெற்றோருக்கு ஒருபுறம் ஆகாஷூம், மறுபுறம் சந்துருவும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டே நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்க இவள் சென்று சந்துருவிற்கு அருகில் அமர்ந்தாள். அதில் சந்துரு மனதிற்குள் மழையடிக்க அப்போது ஆகாஷ் ஏதோ கேட்க, “இல்ல இங்கதான் சேர் காலியா இருந்தது. பரவாயில்ல.” என்றதில் புஸ்ஸென்று ஆனது.

ஆனால் சந்துருவிற்கு அப்போது ஒன்று மட்டும் புரிந்தது. மகியின் அருகாமையை தனது மனம் விரும்புகிறது என. அவள் தந்தை பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவன், “மகி நீ இங்க உட்காரு. எனக்கு காத்தே வரல.” என்க, “இது ஏசி ஹால். இங்க ஃபேனே இல்ல. அப்பறம் எப்படி காத்து வரும்.” என்றாள் மகி.

அதில் முழித்த சந்துரு, “அது ஏசிக்கு நேரா இருந்தா வரும். நீ வா.” என அவளை நடுவில் அமரவைத்துவிட்டு, “நீங்க சொல்லுங்க அங்கிள்.” என கேட்பது போல மகியை நோட்டம் விட்டான். “மயில் தோகை போல அடர் கருநீலத்தில் அழகான புடவையணிந்து கூந்தலை தளர்வாக பின்னியிருந்தாள்.

சந்துருவின் பர்ஸை காலி செய்த மல்லிகை பூக்கள் அவள் கூந்தலில் மகிழ்வாக படர்ந்திருக்க அவளது மஞ்சள் நிற முகத்தில் சிறிதளவே செய்திருந்த ஒப்பனை அவளை பேரழகியாக காட்டி இருந்தது. அங்கிருந்து நடுநடுவே அவளது பெற்றோர்களிடம் பேசியது போதெல்லாம் காதுகளில் இருந்த ஜிமிக்கி தோடும் பேசியது.

குணசேகரன் ஏதோ அவனே கேட்க, அவர் பேசியதெல்லாம் அவன் காதில் விழுந்தால்தானே. “சந்துரு சார் உங்களைதான்.” என மகி அவனது கையை தொட்டதில் நினைவுக்கு வந்தவன், “ம்ம் சொல்லுங்க அங்கிள்” என்றான். “இல்ல கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பறதுதானா. இல்ல வேற ஏதும் வேலை இருக்கா?” எனக் கேட்டார் அவர்.

சந்துரு, “இன்னிக்கு சண்டே தானே சார். இங்க டைம் ஆகறதை பார்த்து முடிவு பண்ணிக்கலாம்.” எனும்போதே திருமண மந்திரம் ஓதினார் ஐயர். பிறகு அனைவரும் திருமணத்தை பார்த்து மகிழ்ந்து அட்சதை தூவ இனிதே ராகினி திருமதியானாள். அதன்பிறகு மற்ற சடங்குகள் நடக்கும் நேரத்தில் இவர்கள் உணவருந்த சென்றனர்.

ஆகாஷ் மீனாட்சியின் அருகே அமர்ந்து கொள்ள, அவர் பக்கத்தில் குணசேகரன் பிறகு மகியும் அமர, இடமில்லாததால் மகியின் அருகிலே அமர்ந்தான் சந்துரு. யாருக்கு தெரியும் அதுதான் அவனது எண்ணமும் கூடவோ என்னவோ. ஆனால் அதைக் கண்டு ஆகாஷ் லேசாக சிரித்து வைக்க, “ஏன் ஆகாஷ் சிரிக்கிற.” என்றான் சந்துரு.

“போக போக தெரியும். இந்த பூவின் வாசம் புரியும்.” என பாடல் வரிகளில் கிண்டல் செய்ய மகி,  “சாப்பிடும்போது என்ன பாட்டு. பேசாம சாப்பிடு” எனும்போதே பரிமாற ஆரம்பித்தனர். முதலில் தண்ணீர் வைத்துவிட்டு இனிப்புக்கு குலோப்ஜாமூன் வைக்க அடுத்த பதார்த்தம் வரும்முன்பே அதை காலி செய்திருந்தாள் மகி.

அதைக் கண்டதும், “உனக்கு ஜாமூன் பிடிக்குமா மகி. இந்தா எடுத்துக்கோ.” என அவனதையும் கொடுக்க மகி, “உங்களுக்கு” என்றவள் அவன் பரவாயில்லை எனக் கூறும் முன்பே அதை சாப்பிட்டிருந்தாள். இப்படியே இலையில் வைத்த வடை, அப்பளம், வத்தல் என இருவரது சைட்டிஷ்களையும் அவளே உண்டு முடித்தாள்.

சந்துருவோ அதையும் ரசித்துக் கொண்டிருக்க அதைக் கண்டு ஆகாஷோ, ‘நான்தான் அப்பவே சொன்னேன்ல.’ என அவன் அதிர்ச்சியாக பார்ப்பதாக எண்ணி சைகை காட்டினான். சந்துருவோ ‘நோ பிராப்ளம்’ என சைகையிலே கூற, அடுத்து வெஜிடபிள் பிரியாணி வந்தது.  சந்துரு, “எடுத்துக்கோ மகி.” என்க, அவளோ மறுப்பாக தலையாட்டினாள்.

“ஏன் பிடிக்காதா?” என சந்துரு கேட்க மகி, “அப்படியெல்லாம் இல்ல. சாப்பாட்டுல மட்டும் எனக்கு பிடிக்காத ஐட்டமே கிடையாது தெரியுமா?” எனவும், “அப்பறம் என்ன எடுத்து சாப்பிடு” என்றான் சந்துரு. அவனை அருகில் அழைத்தவள், அவனது காதோரம் ரகசியம் பேசுவது போல, “இந்த ஐட்டம்லாம் எவ்ளோ கேட்டாலும் குடுப்பாங்க. இந்த ஸ்வீட், ஸ்னாக்ஸ் தான் திரும்ப குடுக்க மாட்டாங்க.” என்று கூறி சிரித்தாள்.

சரியாக அப்போது பார்த்து அங்கு வந்தாள் சிந்து. தனது அண்ணனிடம் இவ்வளவு நெருக்கமாக பேசுவது யாராக இருக்கும் என்ற யோசனையோடே வந்தவள், “ஹாய் அண்ணா.” என்றபடியே அவன் தோளில் கை வைத்தாள். “ஹேய் சிந்து. இப்பதான் வந்தீயா சாப்பிட்டியா?” எனக் கேட்டான் சந்துரு.

“இல்லண்ணா இப்பதான் வந்தேன்.” என்றாள் சிந்து. பிறகு அவன் மகியையும் மற்றவர்களையும் அறிமுகம் செய்து வைக்க, முதல் பார்வையிலேயே மகிக்கு அவளை பிடித்து விட்டது. அங்கேயே அருகில் அமரவைத்து அவளுக்கும் பரிமாற சொல்லவும் அனைவரும் உணவருந்தி விட்டு வந்தனர்.

பிறகு சந்துரு, “ரிசப்ஷன் தொடங்கிடுச்சு. பரிசை கொடுத்திடலாமா?” எனக் கேட்க, சரி என்ற ஆகாஷ் நிறுவனத்தின் அலுவலர்கள் அனைவரையும் அழைக்க எல்லோரும் மொத்தமாக மேடைக்கு ஏற கூடவே ஒரு கேக்கையும் எடுத்துக் கொண்டு சென்றனர். இவர்கள் சார்பாக அதையும் வெட்டி கொண்டாடி விட்டு பரிசை அளித்தனர்.

அதில் ராகினி மிகவும் மகிழ்வுற அதிக நபர்கள் இருந்ததால் இரு தடவையாக புகைப்படம் எடுக்கப்பட்டது. முடிந்ததும் மற்றவர்கள் அனைவரும் இறங்க மகி தனது பெற்றோரை மேடைக்கு அழைத்து ராகினியை அறிமுகம் செய்தாள். பிறகு அவர்களும் சந்துரு, சிந்து, ஆகாஷோடு இணைந்து புகைப்படம் எடுத்தனர்.

அதே நேரம் சித்து, கவின் இருவரும் மண்டப வாசலில் நின்றிருக்க ஆட்டோவில் வந்து இறங்கினாள் மகிழ், அகல்யாவோடு. கவினை கண்டதும் அகல்யா, “ஹாய் சார். எப்படி இருக்கீங்க. நீங்களும் இங்க வரீங்கன்னு இவ சொல்லவே இல்ல.” என்றாள்.

கவின், “நல்லாயிருக்கேங்க.” என பதில் கொடுக்க மகிழ், “அகல் இவர்தான் அபி. உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல.” என சித்துவை காட்டினாள். “என்னது அபியா. அது இவரோட சிஸ்டர் தானே.” என கவினை காட்டி அவள் அதிர்ச்சியாக, “நான் எப்ப அபி என் கேர்ள் ஃப்ரண்ட்னு சொன்னேன்.” என்றாள் மகி குழப்பமாக.

அகல், “நீ ஃப்ரண்டுனு சொன்ன. ஆனா இவரு.”  என இழுக்க, “அட இருங்கங்க. இப்படிதான் எப்பவும் நீங்களே முடிவு பண்ணிட்டு பேசறீங்க. இது சித்தார்த் அபிமன்யூ. உங்க ஃப்ரண்டு வேலை செய்யற கம்பெனி எம்.டி. இனிமேல் இவனுக்கே உங்க ஃப்ரண்டுதான் எம்.டி. நான் இவனோட ஃப்ரண்ட் கவின்.” என்றான் கவின்.

“ஹேய் இவங்க என்ன சொல்றாங்க. அப்படீன்னா நீயும் இவரும் லவ் பண்றீங்களா? அதான் அவரு கூப்பிட்டதும் உடனே போய்ட்டியா?” என ஆச்சர்யப்பட, “நீங்க வேறங்க. நேத்துதான் உங்க ஃப்ரண்ட் எனக்கு ஓகேவே சொன்னா.” என்ற சித்து நேற்றைய நினைவிற்கு சென்றான்.

“இப்போது இல்லை இரு வருடங்களாக உன்னை காதலிக்கிறேன்” என சித்து கூறியதும் மற்ற இருவரும் அவனை அதிர்வாக பார்க்க, “ஆமா வதனி. நாம பர்ஸ்ட் டைம் மீட் பண்ணப்பவே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட. அப்ப நான் கொஞ்சம் அப்செட்டா இருந்ததால என்னால அதை உணர முடியல. ஆனா அந்த ஐந்து நாட்களும் நான் ரொம்ப நிம்மதியா இருந்தேன்.

அவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக்காம நீ பொறுமையா சிரிச்சிட்டே இருந்தது எனக்கு எவ்ளோ ஆறுதலா இருந்தது தெரியுமா? என் கஷ்டம் எல்லாம் ஒன்னுமே இல்லனு தோணுச்சு. அதுக்கு அப்பறம் அங்க இருந்து வந்ததுக்கு அப்பறம் உன் நினைவு தான் அதிகமா இருந்தது. ஆரம்பத்துல அடிக்கடி உனக்கு ஃபோன் பண்ணிட்டே இருப்பேன்.

ஆனா அப்பெல்லாம் நீ ரொம்ப சாதாரணமா பேசுவியா சரி கொஞ்ச நாள் கழிச்சு இதைப்பத்தி யோசிக்கலாம்னு விட்டுட்டேன். ஆனா அதுக்கப்பறம் நிறைய பிரச்சனை. நம்பர் மிஸ்ஸாகிடுச்சு. நேர்ல வரவும் நேரமே கிடைக்கல. ஆனா உன் நியாபகம் மட்டும் வராம இருந்ததில்லை. அப்பதான் திடீர்னு ஒருநாள் உன்னை இங்கயே பார்த்தேன்.

உன்ன ஃபாலோ பண்ணி வர டிரை பண்ணியும் மிஸ்ஸாகிட்ட. அப்பறம் நம்ப ஆபிஸ்லயே உன்னை பார்த்தேன். என்னால நம்பவே முடியல. நீயும் என்ன பார்த்ததும் அப்ப மாதிரியே அபின்னு கூப்பிடவும் அப்பவே முடிவு பண்ணிட்டேன் இந்த முறை உன்ன மிஸ் பண்ணாம மிஸஸ் ஆக்கிடனும்னு.” என்றான் சித்து.

“அடப்பாவி இதெல்லாம் என்கிட்ட கூட சொல்லவே இல்லையே மச்சி.” என்றான் கவின். “நீ கூடத்தான் உன் மனசுல என் தங்கச்சிதான் இருக்கானு இன்னமும் என்கிட்ட சொல்லல.” என்று அவனை வாரினான் சித்து. “என்னடா சொல்ற. அப்படில்லாம் இல்ல.” என்ற கவினிடம், “ஓ இல்லாமதான் சிந்து சௌம்யான்னு பாஸ்வேர்ட் வைச்சிருக்கானா வதனி.” என்றான் சித்து.

“அது யாரு.” என மகிழ் கேட்க, “சிந்து என்னோட சிஸ்டர். அவளோட முழுப்பேர் சிந்து சௌம்யா. சில பேருக்குதான் அவளோட ஃபுல் நேமும் தெரியும். அதை அப்படியே பாஸ்வேர்டா வைச்சிக்கிட்டு உன்னை மாதிரியே உங்க அண்ணனும் காதலை மறைக்கிறான்.” என்றான் சித்து. “நாங்க ஒன்னும் மறைக்கல. நேரம் வரும்போது கண்டிப்பா சொல்லுவோம். என்னண்ணா?” என்றாள் மகிழ்.

“ம்ம் ஆமா.” என தலையாட்டிய பின்பே என்ன சொன்னோம் என தெரிந்து அங்கிருந்து நழுவினான் கவின். அவன் சென்றதும் இவளும் நழுவ பார்க்க அவளது கைகளை பிடித்த சித்து, “இப்ப கூட நல்ல நேரம்தான்.. சொல்லலாமே.” என்க, “அது இது ஆபிஸ். இங்க வைச்சு இதெல்லாம் பேசக்கூடாது.” என்றாள் மகிழ்.

“சரி இங்க வேண்டாம். நாளைக்கு ரெடியா இரு. வெளியில போகலாம். ஆனா கண்டிப்பா சொல்ற.” என்க,  “நாளைக்குதான் மேரேஜ் இருக்குல்ல. நீங்க போகலயா? ஆக்சுவலி அதை பத்தி பேசதான் காலைல வந்தேன்.” என்றாள் மகிழ் அவனது கைகளை விலக்கிவிட்டு. “யாருக்கு?” என சித்து யோசிக்க, “அதான்பா தீபனுக்கு.” என மகிழ் எடுத்துக் கொடுக்க, “ம்ம் ஆமா. கண்டிப்பா போய்டலாம். அங்க போய்ட்டு வெளியில் போகலாம். ஓகே” என கண்ணடித்து அவளை அனுப்பி வைத்தான் சித்து.

அந்த நினைவில் இருந்தவனை மகிழ்தான் கலைத்து “லேட் ஆச்சு. வாங்க போகலாம்.” என உள்ளே அழைத்து சென்றாள். இவர்கள் மேடைக்கு செல்வதற்காக படிகளில் ஏற, அப்போது சந்துருவும் மற்றவர்களும் படிகளில் இறங்க வந்தனர். சித்துவை கண்டதும் சந்துருவோ அவனை எதிர்பாராமல் ஆனந்தமடைய ஆகாஷோ யோசனையில் ஆழ்ந்தான்.

ஆனால் மகியின் தாய், தந்தையை கண்டதும் மகிழின் இதழ்கள் “அம்மா.. அப்பா.” என சத்தமில்லாமல் முணுமுணுத்தது. அந்த முணுமுணுப்பும் அருகில் வந்து கொண்டிருந்த சித்துவின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்