Loading

            “அப்படி என்ன நடந்தது?” என சித்து கேட்க, “அதான் சொன்னேனே. அவன் மறுபடி மறுபடி பிரச்சனை பண்ணுனான். அதான் என் ஃப்ரண்ட் இங்க இருக்கா. அவகிட்ட கேட்டப்ப எதையும் யோசிக்காம கிளம்பி வான்னு சொன்னா. அதான் வந்துட்டேன். இங்க வந்து வேலை தேடும்போது, ஆஸ்பிட்டல்ல வேலை செய்ய முடியுமான்னு தோணுச்சு.

அதான் உங்க ஆபிஸ்ல வேகண்ட் இருக்கவும் சேர்ந்துட்டேன். கொஞ்ச நாள் எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா ஒரு வாரம் முன்னாடி அவனோட ஃப்ரண்ட் மூலமா நான் இங்க இருக்கறது அவனுக்கு தெரிஞ்சிடுச்சு. மறுபடி இங்க வந்தும் நான் இருக்கற ஏரியால்ல பிரச்சனை பண்ணான். ஆனா வீடு தெரியாம பார்த்துகிட்டேன்.

ஆனா அவன் எப்படியோ கண்டுபிடிச்சு இன்னைக்கு வீட்டுக்கே வந்து கேட்டுருக்காங்க. அதான் அகல்யா ஃபோன் பண்ணி அவங்க போனதும் நீ வா. எனக்கு சந்தேகமா இருக்குனு சொன்னா. அதான் ஆபிஸ்லயே இருந்தேன். அப்பறம் நீங்க கூட்டிட்டு வந்துட்டீங்க.” என்றாள் மகிழ்.

அவள் முழுதாக கூறி முடித்தும், சித்துவிற்கு ஏதோ ஒன்று விடுபடுவது போலவே இருக்க, இருந்தாலும் அவளை மேற்கொண்டு கேட்டு சிரமப்படுத்த வேண்டாம் என விட்டுவிட்டான். “சரி விடு. அவன் என்ன பண்றானு பார்க்கலாம். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” என்றவன் வெளியே வந்து கவினுக்கு அழைப்பு விடுத்தான்.

கவினோ ஸ்ரேயாவின் வீட்டில் இருந்தான். அலுவலகத்தில் இருந்து ஸ்ரேயா கிளம்பும் போது, அவள் வண்டியில் ஏறிய கவின் “வண்டியை அந்த கோவிலுக்கு விடு.” என ஒரு கோவிலின் பெயரை கூற அவளும் மறுக்காமல் வண்டியை செலுத்தினாள். ஏனோ சித்து கோபமாக சென்றது ஒரு மாதிரி இருக்க அமைதியாகவே வந்தாள்.

கோவிலுக்கு சென்றதும் அவளை முன்னே அனுப்பியவன் சில பொருட்களை வாங்கி கொண்டு பின்னாலே சென்றான். குளக்கரையில் அவளோடு அமர்ந்தவன், “ஸ்ரேயா. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டதும் மகிழ்ந்தவள் “ம்ம்” என்றாள்.

“சரி வா” என அழைத்து வந்து சன்னதியின் முன் நின்று கவின் தாலி கட்ட போக பதறிப்போய் இரு அடி பின்னே நகர்ந்தாள் ஸ்ரேயா. “என்னாச்சு ஸ்ரேயா. நீதானே ஓகே சொன்ன. இப்ப என்ன பின்னாடி நகர்ற.” என வெகு இயல்பாக கேட்க, “நீ என்ன பண்ற கவின்? முதல்ல அதை உள்ள வை.” என்ற ஸ்ரேயா மீண்டும் குளக்கரைக்கு சென்றாள்.

ஆனால் அதற்குள்ளேயே கவின் தாலியோடு நிற்பதை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்து யாருக்கோ அனுப்பிவிட்டு மறைந்தது ஒரு உருவம். “ஏய். என்ன விளையாடுறீயா?” என கவின் கோபமாக கேட்க, “நீதான் கவின் விளையாடுற எதுக்கு இப்படில்லாம் பண்ற? அப்பாம்மாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சியா?” எனக் கேட்டாள் ஸ்ரேயா.

“என்ன நினைக்க போறாங்க. நாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு தானே சொல்லி வைச்சிருக்க. அப்பறம் என்ன?” என்றான் கவின். ஸ்ரேயா, “அதுக்காக அவங்க இல்லாம பண்ணிக்கனுமா?” என்க, “இதுல என்ன தப்பு. நீ என்ன லவ் பண்ற. நான் உனக்கு கிடைக்கறது தானே முக்கியம். நாளைக்கே என் மனசு மாறிட்டா என்ன பண்ணுவ?” என்றான் கவின்.

“நீ மனசு மாறறதுக்காகலாம் என் அப்பாம்மாவை கஷ்டப்படுத்த முடியாது. நீ என்ன கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா அதுக்காக இப்படி யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா பண்றதுக்குலாம் எனக்கு விருப்பமே இல்ல. இதெல்லாம் நல்ல நாள் பார்த்து நல்ல நேரத்துல தான் பண்ணனும்.” என ஏதேதோ பேசிக் கொண்டு சென்றாள் ஸ்ரேயா.

சிரித்தவாறே அவளை பார்த்திருந்தான் கவின். “நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ ஏண்டா சிரிக்கற?” எனக் கேட்டாள் ஸ்ரேயா. “ஆமா நீ என்னவோ என்ன லவ் பண்றதா சொல்லிட்டு இருந்த. இப்ப என்னவோ கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு நினைச்சேனு சொல்ற. நிஜமா நீ என்ன லவ் பண்றனு நினைக்கற.” எனக் கேட்டான் கவின்.

அப்போது தான் ஸ்ரேயாவும் யோசித்து பார்த்தாள். ஸ்ரேயாவிற்கு கவினை மிகவும் பிடிக்கும். அவன் அவளுக்கு நல்ல தோழன். வீட்டில் திருமண பேச்சை எடுத்ததில் இருந்துதான் இந்த எண்ணம் வந்தது. அவளது தோழிகள் எல்லாரும் திருமணமானால் இப்படி ஆகிவிடும் அப்படி ஆகிவிடும் என பயமுறுத்த திருமணத்தை பற்றிய ஒரு பயம் வந்தது.

நன்றாக புரிந்து கொண்டவர்களை திருமணம் செய்து கொண்டால்தான் நல்லது என தோழிகள் போதனை செய்ய அப்போதிருந்து தான் கவினை அப்படி நினைத்திருந்தாள். ஆனால் அதற்கு பிறகு கூட அவனை காதலித்தாளா என்பது கேள்விக்குறியே. இந்த குழப்பத்தை முன்பே கவினிடம் கூறி இருந்தால் அவன் உதவி செய்திருப்பான்.

இவளோ எடுத்ததும் காதலிக்கிறேன் என கூறவும் அவன் கோபத்தில் கத்தி விட்டான். கவின், “இது மாதிரி எண்ணம் எல்லாம் எப்போ உனக்கு வந்தது ஸ்ரேயா. நாம நல்ல ஃப்ரண்ட்ஸ். அப்படி இருக்கும் போது உன்னை மனைவியா என்னால கற்பனை கூட பண்ண முடியல. வீட்ல உன்னை கம்பெல் பண்ணியா கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க..

வீட்ல பார்க்கிற மாப்பிள்ளையோட பேசி பழகி பிடிச்சிருந்தா பண்ணிக்கோ. இல்லனா வெயிட் பண்ணு. கண்டிப்பா உனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தர் கிடைப்பாங்க. அப்ப உனக்கு பிடிக்கலயானு கேட்காத. உன் மேல எப்பவும் எனக்கு பாசம் இருக்கு. ஆனா காதல் வேற பீலிங். பொறுமையா யோசிச்சு டிஸைட் பண்ணு.” என்றான்.

அவளும் தலையாட்ட வீட்டிற்கு கிளம்பினர். அங்கு சென்றதும் அவளது பெற்றோர்களிடமும் நடந்ததை விளக்க, அவர்களுக்கு கவின் மீது ஒரு நன்மதிப்பு வந்தது. ஸ்ரேயா அறைக்கு சென்றதும், “ஓகே ஆன்ட்டி. அப்ப நான் கிளம்பறேன்.” என்க, “ஏன் கவின். ஸ்ரேயா சொல்ற மாதிரி நீயே அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்ல. அவளை நீ பொறுப்பா பார்த்துப்ப.” என்றார் அவளது அன்னை.

“ஆன்ட்டி நீங்க வேற சும்மா இருங்க. இப்பதான் அவளை பேசி சரி கட்டியிருக்கேன். நீங்க ஆரம்பிக்காதீங்க.” என்றவன், தணிந்த குரலில், “அந்த பிசாசை வைச்சுல்லாம் என்னால சமாளிக்க முடியாது. யாராவது ஒரு தியாகியை பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சர்லாம்.” என்றான் கவின்.

“ஹேய். எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி சொல்லுவ.” என அவர் விளையாட்டாக கேட்க, “உங்களுக்கு தானே அவளை பத்தி முழுசா தெரியும் ஆன்ட்டி அதான்.” எனும்போதே உள்ளிருந்து ஒரு பந்து பறந்து வந்தது.

“டேய். என்ன பார்த்தா உனக்கு பிசாசு மாதிரி இருக்கா?” எனக் கேட்டவாறே தலை விரி கோலமாக வந்தாள் ஸ்ரேயா. கவின், “ஆன்ட்டி இப்ப கன்பார்மா.” என்க, அப்போது அவனது அலைபேசி ஒலித்தது. “சித்து கூப்டுட்டான். பாய் பிசாசு.” என்ற கவின் வெளியே வந்து அழைப்பை ஏற்க, அவன் பின்னே வந்தவளை அவளது அன்னை தடுத்து நிறுத்தினார்.

“சொல்லு மச்சி. தோ கிளம்பிட்டேன்” என்றான் கவின். “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு மச்சி. வர்ற வழியில.” என சித்து கூற, இவனும் கேட்டுக் கொண்டு சரியென்றான். அங்கு வீட்டில் மகிழ், “ஓகே சித்து. நான் கிளம்பறேன். எப்படியும் அவனுங்க கிளம்பியிருப்பானுங்க.’ என்க, சித்துவோ “இரு போகலாம். என்ன அவசரம். எனக்கு ஏதாவது சமைச்சு தரீயா? பசிக்குது.” எனக் கேட்டான்.

‘அபிக்கு நல்லா சமைக்க தெரியுமே. அப்பறம் ஏன் நம்பள சமைக்க சொல்றாங்க.’ என மகிழ் குழம்பினாலும் அவன் பசிக்குது என்றதில் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் நுழைந்தாள் மகிழ். அறை வாசலில் நின்று, அவள் சமைப்பதை கவனிப்பது போல பாவனை செய்து கொண்டு அவளை ரசித்து கொண்டிருந்தான் சித்து.

                சென்னையில் மதிய உணவு நேரத்தில் மகி வழக்கம் போல சாப்பிட்டு கொண்டே, “சூப்பர். அம்மா கையில ஏதோ இருக்கு. இந்த பச்சைபயிர் சாம்பாரும், அதுக்கு தொட்டுக்க கோவக்காய் பொரியலும் அற்புதம் போ. நீயும் கொஞ்சம் போட்டுக்கோ.” என அதிசயமாக ஆகாஷிடம் நீட்ட அவனோ சாப்பிடாமல் உணவை அளைந்து கொண்டிருந்தான்.

“ஹேய் ஆகாஷ். என்னாச்சு உனக்கு? ஏன் சாப்பிடலயா?” என மகி கேட்க, “ச்ச் பசிக்கல.” என பதில் கொடுத்தான் ஆகாஷ். “பசிக்கலன்னா என்ன கொஞ்சமா சாப்பிடு. ஆமா உங்கம்மா வராங்கன்னு சொன்னல்ல. வந்துட்டாங்களா. அப்பறம் இன்னைக்கும் கேண்டீன்ல சாப்பிடுற.” எனக் கேட்டாள் மகி.

“நேத்து நைட் வந்தாங்க. காலைல கிளம்பி போயிட்டாங்க. எப்பவும் அப்படிதான்.” என்றான் ஆகாஷ். “ஓ அதான் ஒரு மாதிரி இருக்கியா. இட்ஸ் ஓகே. அவங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்திருக்கும். விடு. நெக்ஸ்ட் டைம் வரும்போது ஒரு ரெண்டு நாள் இருக்கற மாதிரி வாங்கன்னு சொல்லிடலாம் சரியா. சாப்பிடு.” என்றாள் மகி.

“ஆமாமா ரொம்ப முக்கியமான வேலை. அவங்க பொண்ணை கிரிக்கெட் பார்க்க கூட்டிட்டு போகனும்ல. நீ சொன்னாலும் இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு அவங்க குடும்பம்தான் முக்கியம். நேத்து பணம் குடுக்க வந்தாங்க.  வேலை முடிஞ்சது.. போயிட்டாங்க.” என்றான் ஆகாஷ் விட்டேத்தியாக.

“ஹேய் ஆகாஷ் உனக்கு சிஸ்டர் இருக்காங்களா சொல்லவே இல்ல.” என மகி கேட்கவும், “யார் சொன்னா. எனக்கு அப்படில்லாம் யாரும் கிடையாது.” என்றான் ஆகாஷ் கோபமாக. மகி, “அதான் இப்ப சொன்னியே. ஏதோ உங்க அம்மாக்கு பொண்ணுதான் முக்கியம்னு. தங்கச்சி மேல பாசமா இருக்கறதுக்காக அம்மா மேல கோபப்படுவாங்களா?” என்றாள்.

அவள் அக்கறையில் தான் கேட்கிறாள் என புரிந்த ஆகாஷ், “உனக்கு புரியல மகி. எனக்கு யாரும் தங்கச்சி இல்ல. எங்கம்மாக்கு தான் அவ பொண்ணு. உனக்கு தெரியுமா? எங்கப்பாவுக்கும் இது மாதிரி ஒரு பையன் இருக்கான். அவங்க ரெண்டு பேரும் டைவர்ஸி.

இரண்டு பேரும் தனித்தனியா ஒரு குடும்பத்துல செட் ஆகிட்டாங்க. ஆனா நான்தான் எந்த குடும்பம்னு தெரியல.” என லேசான புன்னகையோடு உரைத்தாலும் அவன் வார்த்தைகளில் வலி நிறைந்திருந்தது.

அதைக் கேட்டு அதிர்ந்து போய் அவனை பார்த்தவள் ஆதரவாக அவனது கரங்களை பற்றி, “ஆகாஷ் கண்ட்ரோல் யுவர்செல்ப். சாரி. நாம அப்பறமா பேசலாம்.” என்ற மகி இடைவேளை நேரம் முடியவும் அவளது இடத்திற்கு வந்தாள்.

இருந்தும் அவளால் அவன் கூறியதில் இருந்து வெளிவர முடியவில்லை. சாயங்காலம் அவனிடம் பேச வேண்டும் என நினைத்தவள் வேலைகளை தொடர வேலை நேரம் முடிந்து அவனிடம் பேசியவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் அவன் கூறியதை கேட்டு.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்