Loading

பிறகு மருத்துவர் வந்து மீனாட்சி பாட்டியை மீண்டும் பரிசோதித்துவிட்டு,

 

“இப்போ பெட்டரா இருக்காங்க.. இருந்தாலும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.. டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போலாம்” என்று கூறிவிட பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர். கணபதியோ கேசவனிடம்,

 

“சம்மந்தி நீங்களும் எங்க கூட எங்க வீட்டுக்கு வாங்க.. ஆதினி முதல் தடவ எங்க வீட்டுக்கு வரா.. நீங்களும் வாங்க” என்று அழைக்க பின்பு அனைவரும் தூயவனின் வீட்டிற்கு சென்றனர். கணபதியின் காரில் பாட்டியோடு சேர்ந்து பெரியவர்கள் அனைவரும் ஏறிக்கொள்ள தூயவனின் காரில் இளசுகள் அனைவரும் ஏறினர். 

 

மாதவன், மாதவி மற்றும் சமருக்கு இவர்களின் திடீர் திருமணம் ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும் ஒருபுறம் மகிழ்ச்சியையும் கொடுத்தது. ஏனெனில் மித்ரா மீதான அவனது காதலுக்கு உத்திரவாதமில்லை என்று ஏற்கனவே வருத்தத்தில் இருந்தவர்கள் தானே.. இப்பொழுது ஆதினி போன்று நல்ல பெண் அவனுக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்விருக்காதா.. அதுமட்டுமல்லாமல் மாதவனுக்கு இருந்த குற்றவுணர்வும் நீங்கிற்று. மாதவன் மாதவியின் காதலுக்கும் இனி பிரச்சனை இல்லை.

 

இவ்வாறாக மாதவன், மாதவி சந்தோஷப்பட சமரோ இனிமேல் ஆதினியோடு அடிக்கடி கதம்பரியை பார்க்கலாம் என்று வேறொரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். மொத்தத்தில் தூயவன் மற்றும் ஆதினி இருவரை மட்டும் தவிர்த்து அனைவர்க்கும் மகிழ்ச்சியே. அரைமணி நேர பயணத்திற்கு பிறகு இரண்டு கார்களும் வீடு வந்து சேர்ந்தது. காரில் இருந்து இறங்கிய தூயவன் வேகமாக வீட்டினுள் செல்ல எத்தனிக்க,

 

“டேய் தூயவா நில்லு..” என்று அதிர்ந்தது பாட்டியின் குரல். 

 

“என்ன பாட்டி” என்றவன் சலிப்போடு நின்றான். ஆதினியைக் கரம்பற்றி அழைத்து வந்தவர் அவனோடு நிற்கவைத்து,

 

“கல்யாணம் ஆன ஜோடிங்க ஆலாத்தி எடுக்காம வீட்டுக்குள்ள போக கூடாது” என்றவர் இந்திராவுக்கு கண்ணசைக்க அவர் சென்று ஆலாத்திக் கலந்து எடுத்து வந்தார். ஆழத்தி சுற்றியதும் இந்திராவோ,

 

“வலது கால் எடுத்து வச்சு உள்ள போமா ஆதினி” என்க இருவரும் காலடி எடுத்துவைத்தனர் வீட்டினுள். வீடோ ஆடம்பரமாக இருந்தது. இவர்களுக்கு வசதி அதிகம் என்று ஆதினி கேள்விப்பட்டாள் தான். ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கேசவனும் அபிராமியும் கூட வியப்போடு பார்த்தனர். இத்தகைய வசதி படைத்தவர்கள் எப்படி இவ்வளவு பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார்கள் என்ற ஆச்சர்யமும் இருந்தது. பிறகு மணமக்கள் பூஜை அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

 

ஆதினி விளக்கேற்ற அனைவர்க்கும் மனது நிறைந்தது ஒருவனைத் தவிர்த்து. பிறகு கணபதி கேசவனுடன் அமர்ந்து பேச ஆரம்பிக்க இந்திரா வந்தவர்களுக்கு ஏதேனும் செய்துகொடுக்க சமயலறைக்கு சென்றுவிட மீனாட்சி பாட்டி அவரது அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட தூயவன் அவனது அறைக்கு விரைய அவனைத் தொடர்ந்து மாதவன், மாதவி மற்றும் சமர் சென்றுவிட ஆதினியும் அபிராமியும் மட்டும் நின்றனர். ஆதினியை வெளியில் இருக்கும் தோட்டத்திற்கு அழைத்து சென்ற அபிராமியோ பேச ஆரம்பித்தார். 

 

“எங்க மேல உனக்கேதும் கோவம் இருக்கா டி” என்றவரின் கண்கள் லேசாக கலங்கி இருந்தது. 

 

“கோபமா எதுக்கு மா” என்று வாய் ஆறுதலாக கூறினாலும் முகமோ சோகமாக காணப்பட்டது. 

 

“உன்னை கேட்காம சம்மதம் சொல்லிட்டோமோன்னு.. என்னால உன் நிலைமையை புரிஞ்சுக்க முடியுது டி.. மாதவன் தம்பி தான் உன் புருஷன்னு முதல்ல மனசுல நெனச்சு வச்சுருந்துருப்ப.. இப்போ திடிர்னு அவர் தம்பிய கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை ஆகிடுச்சு.. நீ நெனச்சா வேணாம் விருப்பமில்லன்னு சொல்லிருக்கலாம்.. ஆனா நீ உன் அப்பாக்காக யோசிச்சு சரின்னு சொல்லிட்ட.. சரி தான” என்று அவளின் மனதைப் படித்து கூற அவளோ,

 

“விடு மா.. முடிஞ்சதைப் பேசி என்ன ஆக போது.. என் மனசு இன்னும் நடந்த எதையும் ஏத்துக்கல இப்போவரை.. கொஞ்சம் டைம் எடுக்கும்.. என்னை கொஞ்ச நாளைக்கு என் போக்குல விட்ருங்க எதுவும் கேட்காம”

 

“என்ன டி இப்படி சொல்ற.. வாக்கப்பட்டு வந்தது பெரிய இடம்.. நீ அவங்களுக்கு ஏத்தமாதிரி கொஞ்சம் அனுசரிச்சு போய்க்கோ டி..” என்றவர் மேலும் அறிவுரைக் கூறுவர அவரைத் தடுத்தவள்,

 

“ம்மா.. இப்போ தான சொன்னேன்.. என்னை என் போக்குல விடுன்னு.. அதுக்குள்ள அட்வைஸ ஆரம்பிக்கிற.. நேத்து என் கழுத்துல தாலி ஏறுனதுல இருந்து இப்போவர ஏதாவது தப்பா நடந்துருக்கேன்னா.. இல்ல தான.. இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்க எனக்கு தெரியும்.. என்னால உனக்கும் அப்பாக்கும் கெட்ட பேரு வராது.. போதுமா” என்க அபிராமிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. மகளின் மனநிலையும் அவருக்கு புரிந்ததால் அதற்குமேல் எதுவும் பேசாமல் வீட்டினுள் செல்ல எத்தனிக்க ஆதினியோ,

 

“ம்ம்மா” என்று அழைக்க அவரும் அவளைப் பார்க்க அணைத்துக்கொண்டாள் தன் தாயை. அணைத்த கணத்தில் இருவருக்கும் கண்ணீர் பெருகியது. தன் தாயின் முகத்தைப் பற்றி நிமிர்த்தியவள்,  

 

“கவலைப்படாத மா.. நான் பாத்துக்குறேன்” என்று ஆறுதல் கூற அக்கணமே தன் மகளின் மீதான கவலைக் காற்றோடு பறந்து நம்பிக்கை பிறந்தது அந்த அன்னைக்கு. ஆதினி மற்றும் அபிராமியைக் காணாமல் தேடிய இந்திரா வெளியே வர ஒரு பெண்ணாக ஆதினி மற்றும் அபிராமியின் நிலை நன்றாகவே புரிந்தது. அருகில் சென்றவர்,

 

“என்ன சம்மந்தி.. என் மருமக என்ன சொல்றா” என்று கேட்க அவரது ‘என் மருமக’ எனும் கூற்றிலேயே அபிராமியின் மனது நிறைந்து காணப்பட்டது. 

 

“அதை உங்க மருமககிட்டயே கேட்டுக்கோங்க சம்மந்தி” என்றார் அபிராமி சிரித்தபடி. ஆதினியின் கரத்தைப் பற்றிய இந்திராவோ,

 

“ஒரு பொண்ணா உன் நிலைமை எனக்கு நல்லாவே புரியுது ஆதினி.. இங்க நீ எந்தவித தயக்கமும் இல்லாம உன் வீட்டுல இருக்குறது போலவே இருந்துக்கலாம் சரியா.. இங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்குறது மீனாட்சி அத்தை மட்டும் தான்.. ஆனா அவங்களும் இப்போ உன் கட்சி தான்.. அதனால நீ மனசை போட்டு கொழப்பிக்காம நிம்மதியா இரு..” என்றவர் அபிராமியிடம்,

 

“நீங்க தைரியமா இருங்க சம்மந்தி.. ஆதினிய நான் என் பொண்ணு மாதிரி பார்த்துக்கறேன்” என்று நம்பிக்கையளிக்க பெண்ணைப் பெற்றவருக்கு வேறென்ன வேண்டும் இதைவிட. கணபதியும் கேசவனும் கூட இது குறித்து தான் பேசிக்கொண்டிருந்தனர்.

 

“ஆதினி கொஞ்சம் செல்லமா வளர்ந்த பொண்ணு.. ஏதாவது தப்பு செஞ்சா நீங்க அவகிட்ட சொல்லி புரியவைங்க.. கண்டிப்பா புரிஞ்சு நடந்துப்பா” என்று கேசவன் தயக்கமாக கூற கணபதியோ,

 

“அட என்ன சம்மந்தி நீங்க.. ஆதினிய பார்த்தா எவ்ளோ தெளிவான பொண்ணு மாதிரி தெரியுது.. நீங்க தான்  தேவையில்லாம வருத்தப்படுறீங்க.. மாதவனைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னிங்க அதுக்கும் அவ சம்மதம் சொன்னா.. ஹாஸ்ப்பிட்டல்ல எல்லாம் தலைகீழா ஆன அப்புறம் நீங்க அவ கிட்ட சம்மதமான்னு கூட கேட்கல.. ஆனாலும் அவ மறுபேச்சு பேசாம வந்து தூயவனுக்கு கழுத்தை நீட்டுனா.. அதுலயே எனக்கு ஆதினியோட நல்ல குணம் புரிஞ்சுட்டு.. எங்களை நம்பி வந்த பொண்ண எங்க பொண்ணு மாதிரி பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு சம்மந்தி” என்று கூற மகிழ்ச்சியில் கேசவனின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. 

 

“இது போதும் சம்மந்தி எனக்கு.. இது போதும்” என்ற கேசவனுக்கு மனம் நிறைந்து காணப்பட்டது. 

 

பூஜையறையில் இருந்து நேராக தனதறைக்கு சென்ற தூயவன் குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி இலகுவான ஆடைக்கு மாறி வெளியே வர அவனது உடையே கூறியது இவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்றும் அடுத்து இவன் என்ன செய்ய போகிறான் என்றும். மாதவியோ,

 

“டேய் தூயவா.. இப்போ வேணாம் டா.. சொன்னா கேளு..” என்று அவனின் கரம் பற்ற அதனைத் தட்டிவிட்டவன் வெளியில் செல்ல எத்தனிக்க மாதவனோ,

 

“டேய் ப்ளீஸ் டா.. வந்தவங்க என்ன நினைப்பாங்க” என்க அதெல்லாம் அவன் காதில் விழவில்லை. சமரோ,

 

“மச்சான்” என்றபடி ஏதோ கூறுவர தூயவன் பார்த்த பார்வையில் அடங்கிவிட்டான். முறைத்தவனின் கால்கள் விறுவிறுவென்று சென்று நின்ற இடம் அவர்கள் வீட்டில் அவன் பிரத்யேகமாக உருவாக்கியிருந்த உடற்பயிற்சி அறை. கைகளில் பாக்சிங் கிளௌசை அணிந்தவன் பஞ்சிங் பேக்கை ஆதினியின் முகமென நினைத்தானோ என்னவோ தன் மொத்த கோபத்தையும் திரட்டி தாறுமாறாக குத்த ஆரம்பித்தான்.

 

“இவன் என்ன டா இப்படி ஆகிட்டான்.. இவன் இவ்ளோ கோபப்பட்டு பார்த்து ரொம்ப நாளாச்சே டா..” என்று மாதவி வருத்தமாக கூற,

 

“அதான் டி எனக்கும் பயமா இருக்கு.. நேத்து நடந்த எல்லாமே ஒரு கோயின்சிடென்ட்.. இவன் எதுக்கு இவ்ளோ கோபம் படுறான்.. ஒருவேளை மித்ராவை அவ்ளோ சீரியஸா லவ் பண்றானா..” என்று மாதவன் குழம்ப சமரோ,

 

“எனக்கு தெரிஞ்சு மித்ரா மேல அவனுக்கு இருக்குறது லவ் மாதிரி தெரியல.. அவனே அதை லவ்வுன்னு நெனச்சுட்டு இருக்குறான்.. இவன் இவ்ளோ பொங்க காரணம் ஆதினியை முதல் தடவ சந்திக்கும் போது ஏதோ நடந்துருக்கு.. அது என்னன்னு தான் தெரியல… பேசாம ஆதினியைக் கூப்பிட்டு கேட்ருவோமா” என்க மாதவனோ,

 

“இல்ல டா தம்பி.. அது சரிப்பட்டு வராது.. இப்போ அவ இருக்குற மைண்ட்செட்ல கேக்குறது நல்லா இருக்காது..” என்க மாதவியும் ஆமோதித்தாள். இவ்வாறாக இவர்கள் கலந்துரையாட கீழே இந்திராவோ,

 

“மேல தூயவன் ரூம் ரெண்டாவது ரூம் அங்க தான் அவனும் அவன் பிரண்ட்ஸும் இருப்பாங்க.. நீ போய் பேசிட்டு இரு ஆதினி” என்று கூற வேறு வழியின்றி மாடிக்கு வந்த ஆதினிக்கு தூயவன் பஞ்சிங் பேக்கைப் படுத்தும் பாடு கண்ணாடி கதவின் வழியே கண்ணில் பட அவளது மனக்கண்ணில் பஞ்சிங் பேக் தூயவனின் முகமாகவும் குத்திக்கொண்டிருந்த தூயவனின் பிம்பம் தனது பிம்பமாக தோன்ற மானசீகமாக அவனை வெளுத்து வாங்கினாள் ஆதினி. 

 

“சரியான உராங்குட்டான்… நான் செய்ய வேண்டியதெல்லாம் அவன் செஞ்சிட்டு இருக்கான்.. மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பு இவனுக்கு.. வந்ததும் வராததுமா என்மேல உள்ள கோவத்தை அதுல காமிக்குறான்.. தைரியம் இருந்தா என்கிட்ட காமிக்கட்டுமே.. அயோ இவன் பண்றதை எல்லாம் அப்பா அம்மா பார்த்தா வருத்தப்படுவங்களே” என்று வாய்விட்டு புலம்பியவள் நேரே கண்ணாடி கதவினைத் திறந்து கொண்டு அவனின் முன் சென்று நின்றாள். 

 

“என்ன சார் என்மேல இருக்குற கடுப்ப அதுமேல காட்டிட்டு இருக்குறீங்க போல..” என்றவள் நக்கலாக அவனைப் பார்க்க அவனுக்கோ எரிச்சலாக இருந்தது. அவளுக்கு பதிலேதும் கூறாமல் அதையும் பஞ்சிங் பேக் மீதே காண்பித்தான். 

 

“உன்ன தான் கேட்குறேன்.. ஆனா உனக்கே இது ஓவரா தெரியல.. நியாயப்படி கோபப்பட வேண்டியது நானு.. சும்மா சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்காத” என்க அதில் பொறுமையிழந்தவன்,

 

“இங்க பாரு.. செம காண்டுல இருக்கேன்.. கோபம் என் கண்ட்ரோல் மீறி போச்சுன்னா அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. ஒழுங்கா போய்டு..” என்று கடுமையாக சீறினான். அதில் சற்றும் அசராதவள்,

 

“நீ கோபத்துல இரு.. இல்ல கோவால இரு.. அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல.. என்னை பொறுத்தவரை என் அப்பா அம்மா நிம்மதியா இருக்கணும்.. உன் கோபத்தை என் அப்பா அம்மா கிளம்புன அப்புறம் காட்டிக்கோ.. ஐ டோன்ட் கேர்.. இப்போ கொஞ்சம் அடங்குறியா..” என்று மேலும் மேலும் எதிர்த்து பேச கிளௌசை கழட்டி எறிந்தவனின் கரமோ ஆதினியின் கழுத்தைப் பிடித்து சுவற்றில் சாய்த்தது.

 

“என்ன டி நானும் பார்த்துட்டே இருக்கேன்.. உன் இஷ்டத்துக்கு பேசிட்டே போற.. பிளான் பண்ணி தான எல்லாமே செஞ்சுருக்க.. இப்போ பெருசா இஷ்டமில்லாம கல்யாணம் பண்ண மாதிரி சீன் போடுற..” என்று கோபத்தீயோடு வார்த்தைகளைக் கடித்து துப்பினான். கழுத்தில் அவனது விரலின் இறுக்கம் வலித்தபோதும் சிறுவலியைக் கூட கண்களில் காட்ட விரும்பாதவள் அவனை சரிக்கு சமமாய் பார்த்து,

 

“சரி உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா நீ உங்க அப்பாகிட்ட சம்மதம் இல்லன்னு சொல்லிட்டு போயிருக்க வேண்டி தான.. ஏன் போகல.. அப்போ நீயும் என்னை பிளான் பண்ணி இஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட.. ரைட்..?” என்க அவனது பிடி இறுக பிறகு பெருமூச்சொன்றினை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன் தன் கையை எடுத்தான் அவள் கழுத்தில் இருந்து. தொண்டையை செறுமியபடி மீண்டும் தொடர்ந்தவள்,

 

“நீ எப்படி உங்க அப்பா பேச்சை தட்டமுடியாம இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னியோ அதே மாதிரி தான் நானும்.. உன்ன இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ண நீ ஒன்னு அவ்ளோ பெரிய அழகன் இல்ல…” என்று அவள் கூறிக்கொண்டிருக்க திடீரென இடையில் ஏதோ ஊர்வது போன்று தோன்ற குனிந்து பார்த்தவள் திகைத்தாள். அவனது வலிய கரம் தான் அவளின் இடையை வளைத்துக் கொண்டிருந்தது. சுவற்றில் சாய்ந்து நின்றவளை இழுத்து சுற்றி தன்னை சுவற்றின் மீது சாய்த்தவன் தன் மேல் அவளை சாய்த்து,

 

“தெரிஞ்சோ தெரியாமையோ நமக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சுட்டு.. இனிமே நீ தான் என் பொண்டாட்டி நான் தான் உன் புருஷன்.. கொஞ்ச நாள் டைம் எடுத்துட்டு நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணலாம்” என்று கூற அதில் அதிர்ந்தவள் குழப்பமாக ஏறிட்டாள் அவனை. நொடிப்பொழுதில் அவன் செய்த செய்கையையும் அவன் கூறிய வார்த்தைகளையும் எதிர்பாராதவள் பிரமித்து நின்றாள்.

 

ஆனால் அவனின் கண்களில் தேங்கி நிற்கும் வன்ம பார்வைக்கும் அவன் இதழ் உரைத்த வார்த்தைகளுக்கும் சற்றும் பொருத்தமில்லாமல் இருப்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது. அவள் யோசனையோடே அதிர்ந்து நிற்க சட்டென தன் கரத்தை அவளிடம் இருந்து விலக்கியவன் துண்டை எடுத்து தன் முகத்தைத் துடைத்தபடி எதுவும் நடவாதது போல் வெளியில் சென்றுவிட்டான்.

 

அவன் தொடுதலும் அவனது நெருக்கமும் பெண்ணவளின் இதயத்தில் அதிர்வை ஏற்படுத்த செய்வதறியாமல் செல்லும் அவனை வெறித்தபடி நின்றாள் ஆதினி. 

 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
14
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்