Loading

அகம்-43

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காது என்பதற்கேற்ப, அழகாய் புலர்ந்திருந்தது அந்தக் காலைப் பொழுது. இன்னுமே இருள் பிரியாத காலைப் பொழுதில், தனக்காக அழகர் தேர்ந்தெடுத்த அந்தப் புடவையில் அழகுப் பதுமையாய் ஜொலித்தாள் கருவிழி. ஒப்பனையின் உபயத்தில் முகம் பளபளத்தாலும், கண்களில் ஏனோ ஜீவனில்லை.
“மது! அழகரு கிளம்பிருச்சா?”
“ரொம்பத்தான் டி! இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் அழகரின் பக்கத்தில் தான் உட்கார போறடி! அதுக்குள்ளே இம்புட்டு அவசரம் ஆகாது தாயே!” மது சொல்லவும், இதழுக்கே எட்டாத புன்னகையைப் பதிலாய் தந்தாள் கருவிழி.

 

“மாப்பிள்ளை உனக்காக.வந்து காத்துட்டு இருக்காரம்! போதுமா? மூஞ்சியைத் தூக்காதேடி!” என்றவள்,

 

“அழகா இருக்கே விழி!” என்றபடியே தோழியின் முகம் வழித்து நெட்டி முறித்தாள்.

 

“ஏய் சும்மா இருடி!” மெல்லிய நாணத்தில் முகம் சிவந்தாள் பெண்.

 

“நிஜமா சந்தோஷமா இருக்குடி! ஃப்ரெண்ட்ஸ்ங்கிறதைத் தாண்டி, உனக்கு உறவா மாறி, இங்கே வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் டி! திருமணத்திற்குப் பிறகும் நம்ம ஃப்ரெண்ட்ஷிப் தொடருது..” மென்மையாய் தோழியை அணைத்து விடுவித்தாள் மது.

 

நிஜமாகவே மதுவின் நட்பு கருவிழிக்குக் கிடைத்த வரம் தான். துளி பொறாமையில்லாது, நமக்காக நல்லதை மட்டுமே யோசிக்கும் நட்பு வரம் தானே? மதுவின் சரியான வழிகாட்டல் மட்டும் இல்லாது போயிருந்தால், தனக்குத் தெரியாமலே ரோஹன் விரித்த வலையில் சிக்கி, என்றோ சின்னாபின்னமாகி போயிருப்பாள் கருவிழி. நட்பு அல்லது காதல் என்ற பெயரில், இனிக்க இனிக்க பேசிவிட்டு, ஒருவரின் இரகசியங்களை, இன்னொருவரிடம் கடைபரப்பும் ரோஹன் போன்ற மிகக் கேவலமான ஈனப் பிறவிகளிடம் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

“மதும்மா! பொண்ணை அழைச்சுட்டு வரச் சொல்றாங்க வா! வா!” அரசி அவசரப்படுத்த,

 

“இதோ அவ்வளவு தான்! மை மட்டும் போட்டுட்டால் எல்லாம் முடிஞ்சுடும்!” தோழியின் கண்களுக்கு மையிட்டு அலங்காரத்தை முடித்து வைத்தாள் மது.

 

திருமண நேரம் நெருங்க நெருங்க, மனதின் கலக்கம் அதிகரித்து, கண்களும் லேசாய்க் கலங்கியது கருவிழிக்கு.

 

“மை வச்சது கண்ணு கலங்குதா டி?” எனக் கேட்டபடியே டிஷ்யூவினால் கண்ணீரை மது ஒற்றியெடுக்க, உள்ளுக்குள் கதறித் துடித்துக் கொண்டிருந்த, மனதை அடக்கி, திருமண நிகழ்விற்கு தயாராய் எழுந்து நின்றாள் கருவிழி.

 

இருள் பிரியாத அதிகாலை வேளையிலேயே, அந்த மண்டம் முழுதும் கூட்டத்தால் நிரம்பி வழிய, மதுவும் அரசியும் கைப்பிடித்து அழைத்து வந்து சந்தண நிற பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்திருந்த அழகருக்கு வலப்பக்கமாய் கருவிழியை அமர வைக்க, கண்களில் கலக்கத்துடன் அவனை நிமிர்ந்து நோக்கினாள் பெண்.

 

யாரும் அறியா வண்ணம், அவள் கரம் பிடித்து அழுத்தம் வைத்தவன்,

“கலங்காதே டி! எல்லாம் நல்லதுக்கே! வருஷா வருஷமா கல்யாணம் கட்டிக்கப் போறோம்? கொஞ்சமாவது சிரிடி! உன் மூஞ்சியைப் பார்த்தால், என்னமோ கட்டாய தாலி கட்டற மாதிரியே தோணுது.!” அவள் காதோரம் சொன்னவனின் தோரணையில் இதழ் பிரித்துச் சிரித்தாள் கருவிழி.

 

“உன்னைப் பார்த்தப் பிறகுதேன் விழி முகத்தில் சிரிப்பே வருது! என்ன மாயம் மந்திரம் பண்ணின அழகரு?” பூங்கொடி விளையாட்டாய் கேட்க,

 

“அழகர் இல்லாமல் விழி அரை நிமிஷம் இருந்துக்கிட மாட்டா! அம்புட்டு பாசம் எம் மயன் மேலே.. எம் மயனும் அப்படித்தேன்.!” மருமகளுக்கும் மகனுக்கும் சேர்த்தே பேசினார் அரசி.

 

“அங்கே பார்த்தியா அரசி, உன்னைக் கட்டுனவருக்கும், என்னைக் கட்டினவருக்கும் மூஞ்சியில் அருளே இல்லை! என்னமோ பொம்பளப் பிள்ளையைக் கட்டிக் கொடுத்து, வீட்டை விட்டு அனுப்பற மாதிரி மூஞ்சியை மூணு முழத்துக்கு தூக்கி வச்சிருக்காக பாரேன்.?”

 

“அவங்களுக்கு வேற வேலை இல்லைக்கா! அவங்க அப்பாரு சொல்லியிருந்தா சிரிச்சுட்டு நின்னுருப்பாக! நம்ம அத்தை பொய் சொல்றாகன்னு இவங்களுக்கு ஒரு நெனைப்பு. பெரியவரு சபையில் வச்சு, கல்யாணம் வேணாமின்னு தானே சொன்னாரு! பத்தாக் குறைக்கு நான் என் மயனுக்காக பேசப் போய்த்தேன் பெரியவருக்கு மேலுக்கு முடியாமல் போச்சுன்னு இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு எண்ணம். அதேன் இப்படி மூஞ்சியைத் தூக்கிட்டு நிக்கிறாக! நின்னுட்டு போவட்டும்க்கா! ஏதோ கல்யாணத்துக்கு வந்தாகளேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.!” என அரசி சொல்வதை தலையசைத்து ஆமோதித்தார் பூங்கொடி.

 

“இந்தாரு கடல் கன்னி, இந்தச் சீலையில் நீ எம்புட்டு அழகா இருக்க தெரியுமா? அப்படியே ஜொலிக்கிற புள்ளை! அழகர் கல்யாணம் முடியட்டும், அடுத்து நம்ம கல்யாணம்தேன்!” கயலழகியின் தோளோடு தோளுரசி நின்றான் காத்தவராயன்.

 

“இந்தா உங்க, ரொமான்ஸையெல்லாம் அங்கிட்டு ஓரமா போய் வச்சுக்கிடுங்க! கல்யாணம் ஆகாத கன்னிப் பையன் நிக்கிறான்னு கொஞ்சமும் விவஸ்தையே இல்லை! பொண்ணு மாப்பிள்ளையையும் சேர்த்து மறைச்சுக்கிட்டு நிக்கிறீங்க!”என்றபடி பின்னால் வந்து நின்றான் வீரபத்ரன்.

 

“டேய்! நீயெல்லாம் பொடிப்பையன் டா! எங்களை மாதிரி ஜோடிப் புறாக்களை தொந்தரவு பண்ணாமல், நீ ஓரமாய் போய் நில்லு!” வீரபத்ரனின் சொல்லில் தன்னை விட்டு விலகி நின்ற கயலழகியை தன் கரத்தோடு இழுத்துப் பிணைத்துக் கொண்டான் காத்தவராயன்.

 

“விடுங்க! இம்புட்டு சனங்க மத்தியில் கையை பிடிச்சுட்டு நிக்கிறீக! சங்கடமா இருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு பேசிக்கிட்டே தானே இருக்கப் போறோம்! இப்போ விடுங்க!” காத்தவராயனிடமிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டு, அரசியின் அருகே சென்று நின்றுக் கொண்டாள் கயலழகி.

 

“போதுமா டா! ஒட்டுமொத்தக் குடும்பமும் என்னையவே டார்கெட் பண்ணுவீங்களா டா? கொஞ்சம் சந்தோஷமா இருந்திடக் கூடாது, நடுவில் புகுந்து படக்குன்னு அத்து விட்டுருவீக! நல்ல எண்ணம்டா!” காத்தவராயன் புலம்ப,

 

“நமக்குள்ளே இதெல்லாம் புதுசா என்ன மிஸ்டர்.காத்து!”

 

“ஆனால் உங்க குடும்பத்தில் வாக்கப்பட்டு வந்ததுக்கு என்னை வச்சு செய்றீங்கடா! எல்லாத்தையும் என் நண்பன் அழகருக்காக பொறுத்துக்கிறேன். ஆனால், நீயெல்லாம் கடைசி வரைக்குமே கன்னிப் பையனா தான்டா சுத்தப் போற!”

 

“அதெல்லாம் எங்களுக்கு, அஞ்சாறு கேர்ள் ப்ரெண்டு, ஏழெட்டு க்ரெஷ்ஷெல்லாம் இருக்கு. உங்களை மாதிரி ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணெல்லாம் நமக்கு ஒத்து வராது. நானெல்லாம் கோபியர் கொஞ்சும் ரமணா உங்களுக்குத் தெரியுமா?”

 

“ம்க்கும்! கோழி பிடிக்கிறவன் மாதிரி இருந்துக்கிட்டு, கோபியர் கொஞ்சும் ரமணாவாம்! இனிமேயாவது நம்பற மாதிரி பொய் சொல்லு! போ தம்பி! போ!”

 

“அசிங்கப்பட்டான் வீரபத்ரன்! நமக்கு தான் பொய் பேசவே தெரியலையோ? இன்னும் பயிற்சி வேண்டுமோ?” நெற்றியில் அறைந்துக் கொண்டு அவன் நிமிர்ந்துப் பார்க்க, மொத்தக் குடும்பமும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.

 

“அடேய்! எங்கிட்டு போனாலும் உங்க வாய் ஒருநேரம் ஓயாதா? கல்யாணம் முடியும் மட்டுமாவது கொஞ்சம் பேசாமல் இருங்களேன்டா!” எனச் சொன்னபடியே அரசி முறைக்கவும்,

 

“நோ மம்மி! நோ! இனி வாயைத் திறக்கலை! அதுக்காக இப்படி முறைச்சு பயமுறுத்தாதீங்க!” என வீரபத்ரன் சொல்லவும்,

 

“கிறுக்குப் பயலுக!” எனச் சிரித்துக் கொண்டார் அரசி.
ஒட்டுமொத்த குடும்பமும் அழகரையும், கருவிழியையும் சூழ்ந்திருக்க, கலகலப்பும், சந்தோஷமும் சபை முழுக்க நிறைந்திருக்க, மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருந்த மீனாட்சி சொக்கர் தாலியைக் கணவரின் கையோடு தன் கரத்தையும் சேர்த்து வைத்து இறைவனைக் கண்மூடி வேண்டினார் அங்கயற்கண்ணி. திடீரென ஏதோ தீச்சுட்ட உணர்வில் கண்திறந்து பார்த்தவர் அதிர்ந்து தான் போனார். சொக்கேசனின் கண்ணீலிருந்து வழிந்த ஒற்றைத் துளி கண்ணீர், தாலியில் விழுந்து அங்கயற்கண்ணியின் கரத்தைச் சுட்டது.

 

“நம்ம செஞ்ச பாவத்துக்கு நாம அனுபவிச்சுட்டுப் போவோம், வாழ வேண்டிய பிள்ளைங்க, நல்லா வாழணும்ன்னு நினைங்க! நல்லது நடக்கும் போது, இந்தக் கண்ணீர் நாடகமெல்லாம் வேணாம்!” என சொக்கேசனின் காதுக்குள் முணுமுணுத்தவர்,

 

“நெஞ்சு நிறைய நேசம் வச்சிருக்கிற எம் பிள்ளைகள் ரெண்டும், கண் நெறைஞ்சு, நீண்ட காலம் வாழணும். விதியையும் மீறி எம் பிள்ளைங்க கொண்ட நேசம்தேன் இந்தக் கல்யாணம் வரை கொண்டு வந்துருக்குன்னு நான் நம்பறேன். அந்த நேசமே அவங்களைப் பிரியாமல் வச்சிருக்கும். ஆத்தா மீனாட்சி உன்னை சாட்சியா எம் பக்கத்தில் நிறுத்தி இந்தக் கல்யாணத்திற்கு, என் கையால் தாலியெடுத்துக் கொடுக்கிறேன். அவங்களை வாழ வச்சிடு தாயே!” முணுமுணுப்பாய் வேண்டியவர், அழகரின் கரத்தில் தாலியைக் கொடுக்க,

 

“என் கண்ணைப் பாருடி கரு கரு..! என் கண்ணில் இருக்கிற ஆசையைப் பாரு! ஏழேழு ஜென்மம் வாழ்ந்தாலும் இந்த ஆசை தீராது டி! நூறு ஜென்மம் நாம சேர்ந்து வாழ்வோம் டி என் அழகு ஆள் மயக்கி!” எனக் கருவிழியின் கண்பார்த்துப் பேசியபடியே பொன்மஞ்சள் கயிற்றில் இறுக்கமாய் மூன்று முடிச்சிட்டு, அந்த ஈசன், சக்தியை தன் மறுபாதியாய் இணைத்துக் கொண்டதைப் போல, தன் சரிபாதியாய் கருவிழியைத் தன்னோடு இணைத்துக் கொண்டான் துடிவேல் அழகர்.

 

கண்ணில் நீர் பொங்க, அவனையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை தன் தோளோடு இறுக அணைத்து அவள் பிறை நெற்றியில் முத்தம் பதித்தான் அழகர். அவனின் வன்மையான உதடுகள் தன் நெற்றியில் கடத்திய வெப்பத்தில், தாமரை மலர் போன்ற அவளின் வதனம் செவ்வரளியாய்ச் சிவந்து போனது.

 

“உனக்குக் கூட வெட்கம் வருது டி கரு கரு!”
இன்னும் கொஞ்சம் அவளைச் சிவக்க வைத்து, அவள் வேறெதையுமே யோசிக்க விடாதபடி செய்தான் அழகர்.

 

 

அவனுக்குத் தெரியும், இதோ இந்த நொடி, வாழ்வில் திரும்ப வரப் போவதே இல்லை! இந்த நொடி அவர்களுக்கானது மட்டுமே. அந்த நொடியில் அவள் மனம் சஞ்சலப் படுவதை அவன் விரும்பவில்லை. அவளின் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் தான் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்க வேண்டுமென பேராசைக் கொண்டான் அந்தக் காதலன்.

 

அதை வெற்றிகரமாய் நடத்தியும் காட்டினான். அவள் அவனருகே வந்து அமர்ந்த நொடி முதல், இதோ இப்போது வரை, அவள் மனம் முழுதும் அவன் மட்டுமே.. அவளின் அகம் முழுதும் அழகனின் ஆட்சி மட்டுமே..!

*******

“நல்லா சாமியை வேண்டிக்கிட்டு விளக்கேத்து ராசாத்தி!”

 

பூஜையறையில், மீனாட்சியம்மனின் படத்தின் முன் விளக்கேற்றிவிட்டு, கண்மூடி கணவனுடன் நின்றாள் கருவிழி.

 

“பார்த்தியா மீனாட்சி, உன் பொறந்த வீடுதேன்.. உன் மவளுக்குப் புகுந்த வீடு!” என்ற அங்கயற்கண்ணியின் குரலில், புன்னகையுடன் மகளைப் பார்த்தார் தங்க மீனாட்சி.

மகளைப் பெற்ற தாயாய் அவர் கண்கள் கலங்கியது. தன்னைப் போல் யாரையும் நம்பி ஏமாந்து போகாமல், தன் கண் பார்க்க மகள் வாழப் போகிறாள்! என்ற நினைப்பே அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது.

 

பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு, கருவிழியுடன் வந்த அழகரின் கரத்தைப் பிடித்துக் கொண்டார் தங்க மீனாட்சி.

 

“அழகரு! இவ விவரம் புரியாதவ! விளையாட்டுத்தனம் அதிகம்தேன். ஆனாலும் ஒரு சுடு சொல்லு தாங்கிக்க மாட்டா! நீதேன் அவளைப் பார்த்துக்கணும் அழகரு!” தொண்டை அடைக்கச் சொன்னார் அவர்.

 

“அத்தே! நான் பார்த்து வளர்ந்தவ இவ! நான் பார்த்துக்கிறேன் அத்தே! உங்க மவளைப் பத்தின கவலை உங்களுக்கு வேண்டாம்!” ஆதரவாய் அவர் கரம் பற்றினான் அவன். அவன் சொன்ன வார்த்தைகளும், அதிலிருந்த நம்பிக்கையுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

 

“மது! பிள்ளைங்களுக்கு பால் பழம் வச்சிருந்தோமே எடுத்துட்டு வாம்மா! பால் பழத்தைக் கொடுத்துப்புட்டு, அறைக்கு அனுப்பி விடுங்க! கொஞ்ச நேரம் பிள்ளைங்க ஓய்வெடுக்கட்டும்! விடியும் முன்னமே எந்திரிச்சது களைப்பா இருக்கும்.!”

 

“விழி! அந்த ஜடையில் கனமா மாட்டியிருக்கிறதை எல்லாம் எடுத்துட்டு, கொஞ்சம் குறுக்கை சாய்ச்சுக்கோ! முகமெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போச்சு! மூஞ்சியெல்லாம் கழுவிட்டு, ஏ.சி-யைப் போட்டுக் கொஞ்ச நேரம் படுத்து எந்திருச்சு வாங்க! மத்தியான சாப்பாட்டுக்கு கீழே இறங்கி வந்தால் போதும்!” மருமகளின் முகம் பார்த்தே சொன்னார் அரசி.

 

“அழகரு! எனக்கு இது பிடிக்காது! பார்க்கவே நல்லா இல்லை!”

 

“சும்மா சாஸ்திரத்திற்கு கொஞ்சமா சாப்பிடு டி! பாலும் பழமும் தானே?”

 

“மாமா ப்ளீஸ்..!”

 

“சரி நான் முழுசா குடிச்சுடுறேன்! நீ கடைசியில் குடிக்கிற மாதிரி ஆக்டிங் விட்டுட்டு டம்ளரை வச்சிரு!” மனையாளின் முகச்சுணக்கம் தாங்காது, சொன்னான் அழகர்.

 

“மாமான்னா மாமாதான்! தேங்க்ஸ் அழகரு!”

 

“எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேணாம் டி! வட்டியும் முதலுமா சேர்த்து முத்தமா வாங்கிக்கிறேன்.!”

 

“நான் தர மாட்டேனே..!”

 

“உன்கிட்டே எப்படி வாங்கணும்ன்னு எனக்குத் தெரியும் டி! சும்மா சும்மா உரசிக்கிட்டே திரிஞ்சில்ல, எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா..” பாதியில் நிறுத்திவிட்டு அவள் முகம் பார்த்தான் அவன். இவளுக்கோ அவனின் வேறு விதமான பேச்சில் முச்சடைத்தது.

 

“அழகரு! விழியை அறைக்கு கூட்டிட்டுப் போய்யா! எதாவது வேணும்ன்னா குரல் கொடுங்க!” எனச் சொல்லி அவர்களை அறைக்கு அனுப்பினார் அரசி.

 

“மதும்மா! நீயும், நெடுமாறனும் கூட, கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க! இங்கே வேலை ஒண்ணும் இல்லை! கயலு இருக்கா! சமைக்க ஆளுங்க வேற வந்திருக்காங்க நாங்க பார்த்துக்கிடுவோம்!” என மதுவையும் நெடுமாறனையும் கூட அறைக்கு அனுப்பி வைத்தார் அரசி.

 

“மது இங்கே இருந்தால் ஒத்தாசையாய் இருக்குமே அரசி, ஏன் அனுப்பின? நாமளும் பேசிக்கிட்டே வேலை பார்த்திருக்கலாம்.!”

 

“சின்னஞ் சிறுசுக! எதாச்சும் பேசி சிரிக்கணும்ன்னு ஆசைப்படுங்க! இங்கண மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்து என்ன செய்யப் போறாங்க! நம்மளைத்தேன் யாரு புரிஞ்சுக்கலை! நாமளாவது நம்ம பிள்ளைகளையும், மருமகள்களையும் புரிஞ்சுப்போம்!” என அரசி சொல்ல,

 

“அது என்னமோ சரிதேன்.!” எனப் புன்னகையுடன் தலையசைத்தார் பூங்கொடி.

******

அறைக்குள் அழகருடன் உள்ளே நுழைந்த கருவிழியோ, நுழைந்த விநாடியே அவனின் இறுகிய அணைப்பிற்குள் தான் இருந்தாள்.

 

“ஏய் கரு கரு! நம்பவே முடியலை டி! நெசமாவே நம்ம கல்யாணம் முடிஞ்சுருச்சா?”

 

“கைக்குள்ளே இப்படி இறுக்கி பிடிச்சு வச்சிக்கிட்டு என்ன கேள்வி அழகரு இது?” சிணுங்கினாள் பெண்.

 

“நீ என் பொண்டாட்டி டி!” என்றவனின் உதடுகள் அவள் காதோரம் உரசியது.

 

“நீ கொஞ்சம் தள்ளி நில்லு அழகரு!” அவனிடமிருந்து விலக முயன்றாள் கருவிழி.

 

“கல்யாணத்திற்கு முன்னாடி ஓயாமல் உரசுவ! இப்போ தள்ளிப் போன்னு சொல்றே? முடியாது டி!” இன்னும் கொஞ்சம் இறுக்கம் கூட்டினான் அவன். அவன் செயலில் அவளுக்கோ உடல் சிலிர்த்து, புத்தம் புது உணர்வுகள் அவளை ஆட்கொள்ளத் துவங்கியிருந்தது.

 

“அழகரு! நீ இப்படி பண்ணிட்டு இருந்தால், நான் கத்தி அத்தையைக் கூப்பிடுவேன்.!” மிரட்டிப் பார்த்தாள் பெண்.

 

“கூப்பிடு டி! நிஜமாவே தைரியமானவளாய் இருந்தால் கூப்பிடுடி! கூப்பிடுடி பார்ப்போம்!” வேண்டுமென்றே உசுப்பேற்றியவன்,

 

“அத்தே..!” என அழைப்பதற்காய் அவள் வாய் திறந்த நேரம், தன் வன்மையான உதடுகளால் அவள் மெல்லிதழ்களைச் சிறைப் பிடித்திருந்தான். அவளின் விளிப்பு அவள் இதழ்களுக்குள்ளேயே கரைந்துப் போக, கண்களில் மயக்கத்துடன், தன்னவளின் இதழ்களில் அவன் புதைந்திருந்த அதே நேரம்,

 

“முக்கிய செய்தி! மத்திய அமைசரின் மகன் விபத்தில் பலி!” என்ற செய்தி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது.

 

“மத்திய அமைச்சர், திரு. தர்மேந்தரின் மகன் ரோஹன் என்பவர், சில மாதங்களுக்கு முன், தீப்தீ என்ற பெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கு விசாரணைக்காக சென்னையிலிருந்து அவரை டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை பத்துமணியளவில் வாகனம் சிறை வளாகத்திலிருந்து கிளம்பிய சற்று நேரத்துற்குள்ளாகவே எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் மற்றும் உடன் சென்ற இரு காவலர்களும் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.” என்ற செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

 

அந்த அறையின் சொகுசு இருக்கையில் அமர்ந்து, கரத்தினில் குடியிருந்த மதுபானக் கோப்பையுடன், அந்த செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சாட்சாத் ரோஹனே தான்.

 

“ஐ அம் பேக் பேபி! நான் உனக்காக மட்டும் வந்திருக்கேன் பேபி! ஏன்னா எனக்கு நீ ரொ..ம்ப ஸ்பெஷல். இந்த உலகத்தைப் பொருத்தவரை நான் செத்துட்டேன். செத்துப் போனவன் எப்படி கொலை பண்ணுவான்? நான் செத்தாலும் கூட, உன்னை வந்துக் கொல்லுவேன்டி!”

 

என்றவன் கரத்திலிருந்த அலைபேசியைத் தூக்கி சுவற்றில் எறிய, அலைபேசியின் திரையில் ஒளிர்ந்த கருவிழியின் முகத்தில் கீற்று கீற்றாய் விரிசல்கள் விழுந்திருந்தன. அந்த விரிசல்களின் இடைவெளியில் இதழ் விரித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் கருவிழி.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
25
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பொறாமைக்கொள்ளாமல் நமது நல்லதை பற்றி மட்டுமே யோசிக்கும் நட்பு அமைவது சிறப்பானது. அதிலும், அந்நட்பு உறவாகவும் தொடர்வது என்பது ஒருவகை வரம் தான்.

    மகன் கல்யாணத்தை யார் ஏற்பாடு செய்திருந்தால் என்ன? அவன் சந்தோஷத்தை பார்த்து மகிழாமல் முகசுனக்கத்தோடு அலைகின்றனர்.

    வீரு 😍😍 கோபியர் கொஞ்சும் ரமணா 🤣🤣 இப்படி காத்து கிட்ட wanted da வாய கொடுத்து வாங்கிகிட்டியே டா.

    அவர்களது ஆழ்நேசம் விதியை வென்று வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில் கடவுளின் துணையோடு திருமணத்தை நடத்திவிட்டார் அங்கயற்கண்ணி.

    அவர்களுக்கே அவர்களுக்கான பிரத்யேக நேரந்தனில் விழி மனதினில் எந்த சஞ்சலம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றான் அழகர்.

    “அவளது அகம் முழுவதும் அழகனின் ஆட்சியே”💛✨

    1. Author

      உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப மகிழ்ச்சி டா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 💜