Loading

வணக்கம் நண்பர்களே! வருகிற 7 – ஆம் தேதி என்னுடைய தந்தைக்குத் திதி கும்பிடப் போவதால் இந்தக் கதையின் அடுத்தப் பதிவு வர தாமதம் ஆகும்.நன்றி

🌸🌸🌸

யாதவியிடம் பேசி முடித்து விட்டு மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் யக்ஷித்ரா.

 

“எப்போ இருந்துடா நைட் ஷிஃப்ட்?” என்று வினவிக் கொண்டு இருந்தார் அகத்தினியன்.

 

“மூனு நாள் கழிச்சு, அப்பா!” என்றான் அற்புதன்.

 

மெதுவாக நடந்து போய், சோஃபாவில் அமர்ந்த யக்ஷித்ரா,”உங்களோட டிரெஸ், சாப்பாடு எல்லாம் நான் தாயார் பண்ணி வச்சிடறேன் ங்க. அத்தையைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” எனக் கணவனிடம் கூறினாள். 

 

“நீயே ஆஃபீஸ் முடிஞ்சுக் களைச்சுப் போய் வருவ! சாயந்தரமும் வேலையை இழுத்துப் போட்டுக்கனும்னு நினைப்பா?” என்று மருமகளைக் கடிந்து கொண்டார் கீரவாஹினி.

 

‘இங்கே வைத்துக் கூறி இருக்கக் கூடாதோ?’ என்று நினைத்து,‌

அமைதியாகி விட்டாள் யக்ஷித்ரா.

 

மீண்டும் மாமியாரே தொடர்ந்து,”நான் பாத்துக்கிறேன் யக்ஷி” எனக் கனிவாக உரைத்தார் கீரவாஹினி.

 

இவர்களிருவரையும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு பார்த்திருந்தனர் தந்தையும்,மகனும்.

 

பிறகு,”அம்மா! ரெண்டு பேருமே எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். நானே பாத்துக்கிறேன்.எனக்கு மதியம் செய்றக் குழம்பே, கொஞ்சமாக ஈவ்னிங் – க்கும் எடுத்து வைங்க.நான் சாதம் வச்சிக்கிறேன். இனி,‌ டின்னருக்குக், ‘கேன்டீனில்’ தான் சாப்பாடுன்னு ஆஃபீஸில் சொல்லிட்டாங்க. என் துணியை எல்லாம், எப்பவும் போல, இஸ்திரி போட்டுப் பக்காவாக வச்சிடுவேன். நான் தயாராகிட்டு, உங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டுப் போகனும்ன்ற, ஒரு விஷயத்துக்காக மட்டும் தான், மூனு பேரையும் கூப்பிடுவேன்” எனத் தீர்க்கமாக கூறி விட்டான் அற்புதன்.

 

“அந்த இஸ்திரி வேலையையாவது எனக்குக் கொடுக்கலாமேடா?” என்று அவனிடம் கேட்டார் அகத்தினியன்.

 

“முடியாது அப்பா” என்று மறுத்தவனிடம்,

 

“பிடிவாதம் பிடிக்காதடா!” என அதட்டினார் அவனது தந்தை‌.

 

“என் வேலையை நானே செய்துக்கிறேன் ப்பா! முடியலைன்னா, உங்ககிட்ட வருவேன். அப்போ பண்ணிக் கொடுங்க” என்று கூறியவன், அறைக்குப் போனான் அற்புதன்.

 

அவன் சென்று ஓய்வெடுக்கட்டும், என எண்ணியவள், இன்னும் இரவு உணவைச் செய்யாமல் இருந்ததால், அத்தையை அமர வைத்துத் தான் மட்டும் சமைத்தாள் யக்ஷித்ரா.

 

தன் மனைவி சமையலில் இறங்கி விட்டதை தெரிந்து கொண்ட அற்புதனோ, அந்த அரைநாள் விடுப்பில், ஏதாவது முக்கியமானது நடந்திருக்கிறதா? என்று வாட்ஸப் குழுவிலும், மின்னஞ்சலிலும் பார்வையை வீசினான்.

 

முடித்த வேலைகளைப் பற்றித் தான் மேம்போக்காகப்‌ பேசிக் கொண்டு இருந்தார்கள். மீட்டிங் என்றும் எந்த தகவலும் இப்போது வரை அவனுக்கு வரவில்லை. எனவே, மடிக்கணினியை மூடி வைத்து விட்டு, மனைவி வந்து அழைக்கவும், குடும்பத்துடன் உணவுண்டு விட்டு, நித்திரைக்குச் சென்றான் அற்புதன்.

 

இப்படி ஏதாவது பாரம் ஏறிய சமயத்தில் தான் அவனுக்குக் கதைக் கேட்கும் ஆர்வம் ஏற்படுமோ? என்ற எண்ணம் உதிக்கவும், உறங்கும் அவனைப் பார்த்து விட்டுத் தானும் கண் அயர்ந்தாள் யக்ஷித்ரா.

 

அதிகாலையில் எழுந்தவளோ, வீட்டினரிடம் தன் இல்லத்திற்குச் செல்லப் போவதைப் பற்றித் தெரியப்படுத்த வேண்டி, மூவரும் கூடியிருந்த நேரம் பார்த்துப் பேச்சை ஆரம்பித்தாள்.

 

“யாதவிகிட்ட நேத்துப் பேசினேன்ல? அம்மாவைப் பார்க்கனும் போல இருக்கு. போயிட்டு வரவா?” என்று கேட்டு விட்டு அவர்களைப் பார்த்தாள் யக்ஷித்ரா.

 

“போயிட்டு வா ம்மா. இவனையும் கூப்பிட்டுப் போ‌” என்று கூறி விட்டார் அகத்தினியன்.

 

“சம்பந்தியம்மாவைத் தனியாக விட்டுட்டு யாதவியை இங்கே கூப்பிட்டு வர முடியாது. அதனால், நீ எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்துட்டு வா” என்றார் கீரவாஹினி.

 

இப்போது கணவனைப் பார்த்தாள் யக்ஷித்ரா.

 

அவன் சம்மதம் சொல்லாமல் இருக்கவும், அங்கே வருவது அவனுக்குப் பிடிக்கவில்லையோ? என்ற ஐயம் ஏற்பட்டது இவளுக்கு.

 

“எனக்கு டே – ஷிஃப்ட் (day shift) முடிஞ்சதும், ஒரு சில ஃபார்மாலிட்டீஸ் இருக்கும். அதை முடிச்சிட்டு, ஒரு நாள் லீவ் போட்டுட்டு வர்றேன். பகல் முழுக்க இருப்பேன். நீ நைட் அங்கே தங்குறதாக இருந்தால் இன்ஃபார்ம் பண்ணிடு யக்ஷி” என்று கூறினான் அற்புதன்.

 

அதாவது, மாமியார் மற்றும் மச்சினிச்சி மட்டுமே இருக்கும் அவ்வீட்டில், அவன் இரவு தங்குவது உசிதமில்லை, இவனுக்கும் சங்கடமாக இருந்தது. அதனால் தான், மாலை வரை இருப்பதாக வாக்களித்தான் அற்புதன்.

 

“சரிங்க” என்று மொழிந்தவளோ, அத்தையிடமும், மாமாவிடமும் சொல்லி விட்டு, அலுவலகம் செல்ல, வாசற்புறம் வந்தாள் யக்ஷித்ரா.

 

கணவன் தன்னுடைய வண்டியை அவளுக்கு முன்னால் நிறுத்தவும்,”இதைச் சொல்லலை உங்ககிட்ட! ப்ச்! எனக்கு கேப் அலர்ட் செய்துட்டாங்க. இன்னும் ஃபைவ் மினிட்ஸில் வந்துரும்ங்க” என்று அவனிடத்தில் உரைத்தாள் மனைவி.

 

“ஓகே… பை” என்று அதன்பின் அங்கு நில்லாது, தன் பைக்கில் வேகமாகச் சென்று விட்டான் அற்புதன்.

 

 ‘கேப் (cab)’ விஷயத்தை முற்றிலுமாக மறந்து போயிருக்கிறோமே! என்று தலையில் அடித்துக் கொள்ளப் போக, அதற்குள், அவளை அழைத்துக் கொள்ள, வந்த வண்டியின் ஹாரன் ஒலி கேட்டது.

 

“ஓடீபி?” என்று கேட்டான் டிரைவர்.

 

(OTP – One Time Password – ஒரு முறை கடவுச்சொல்)

 

தன் செல்பேசியில் இருந்து வந்தக் குறுந்தகவலில், குறிப்பிட்ட ஒன்றிலிருந்து வந்த நான்கு இலக்க எண்களைப் பார்வையிட்டு, அப்படியே டிரைவரிடம் கூறினாள் யக்ஷித்ரா.

 

உடனே, அதைச் சரி என்று கூறி, அவளை வண்டியில் ஏற அனுமதித்தான் டிரைவர்.

 

அதில் ஏறி உட்கார்ந்தவளுக்குக் கணவனுடைய ஆதங்கம் சூழ்ந்த முகம் மனதினுள் தோன்றியது.

 

அம்மா வீட்டிற்குச் செல்லும் போது, கணவனுடன், அவனுடைய வண்டியில் தான் போக வேண்டும் என்று உறுதியாக எண்ணிக் கொண்டவளோ, அவளது அலுவலகம் வந்ததும், இறங்கிக் கொண்டாள் யக்ஷித்ரா.

 

நேஹா,”ஹாய் யக்ஷி!” என்றவளுக்குப், புன்னகைத்துப் பதிலளித்தாள்.

 

“ஹலோ நேஹா!”

 

தோழிக்கும், அவளது கணவனுக்குமானப் பிணக்குகள் சரியாகி விட்டது என்பதை யக்ஷித்ராவின் முகத்திலேயே கண்டு தெரிந்து கொண்டாள் நேஹா.

 

“என்னோட ஹஸ்பண்ட்க்கு, நைட் ஷிஃப்ட் மாத்திட்டாங்க” என்று அவளிடம் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

அதனால் தான், இவளிடம் மாற்றம் தெரிந்ததோ? என நினைத்துக் கொண்டு,

 

“ஓஹோ! இன்னும் ஒரு மாசத்துக்கு அவருக்கு இந்த நிலைமை தான?” என்று விசாரித்தாள் நேஹா.

 

“ஆமாம்” என்ற யக்ஷித்ராவிடம்,

 

“அதெல்லாம் நீயும், ஃபேமிலியும் இருக்கிறதால், ப்ரோ சமாளிச்சுக்குவார்” என்று ஆருடம் கூறினாள்.

 

யக்ஷித்ராவின் மாமனார், மாமியாருடைய குணநலன்களைப் பற்றி, அவள் சொல்லிக் கேட்டிருக்கிறாள் நேஹா. கணவனுடனானப் பந்தத்தைக் கேட்பது அநாகரீகம் என்று அதை ஒதுக்கி வைத்து விடுவாள்.அதனால் தான் இப்படி கூறியுள்ளாள்.

 

🌸🌸🌸

 

“அக்காவுக்குச் சொல்லிட்டேன் மா. நம்ம வீட்டுக்கு வர்றேன்னுட்டா” என்றாள் யாதவி.

 

“அதுக்கு யாது உனக்கு வேண்டாத வேலை?” என அவளைக் கடிந்து கொண்டார் மீனா.

 

“ஏன் ம்மா? உங்களுக்கு அவளைப் பார்க்கனும்னு அவ்ளோ ஆசை! இருந்தும், கூப்பிட மாட்டேங்குறீங்க! அதான், நான் கேட்டுட்டேன். வர்றேன்னு சொல்லிட்டாள்!” என்று அன்னையிடம் உரைத்தாள் யாதவி.

 

“சும்மா சும்மா அவளை இங்கே கூப்பிட்றது சரியாக இருக்காதுடி! சம்பந்தி என்ன நினைப்பாங்க?” என்று அதட்டினார் மீனா.

 

“அவங்க நம்மளையே, அங்கே வந்து செட்டில் ஆகிடுங்கன்னு, சொல்லிட்டு இருக்காங்க. அப்பறம், அக்காவை அனுப்பி வைக்க மட்டும் என்ன இருக்கப் போகுது ம்மா?”

 

“அதுக்காக எல்லாத்தையும் நமக்குச் சாதகமாகவே செய்துக்கக் கூடாது யாது!” என்றார்.

 

“நான் சொல்லிட்டேன். வர்றதும், வராததும் அவளைப் பொறுத்ததும்மா!” என்று அவரிடம் சொல்லி விட்டுப் போனாள் யாதவி.

 

அவருக்கும் மகளைப் பார்க்க ஆசையாக இருந்தால், அமைதியடைந்து விட்டார் மீனா.

 

இரண்டு நாட்கள் சென்றதும், அதிகாலையிலேயே எழுந்து குளித்த யக்ஷித்ரா, மாமாவுக்கும், அத்தைக்கும் காஃபி கலந்து கொடுத்து விட்டு, பீரோவில் இருந்து சேலை ஒன்றை எடுத்தாள் யக்ஷித்ரா.

 

யாதவிக்கு அழைத்து, தாங்கள் வரும் நேரத்தைக் கூறினாள் யக்ஷித்ரா.

 

ஒன்பது மணியளவில், புடவையை அணிந்து கொண்டவள், காலை உணவைத் தயாரிக்க முயன்ற போது,

 

“நீ போய் ஹாலில் உட்காரு” என்று தயாராகி விட்டதால், யக்ஷித்ராவை அடுக்களைக்குள் அனுமதிக்கவில்லை கீரவாஹினி.

 

காலை உணவை இங்கேயே முடித்துக் கொண்டவர்கள், சில தின்பண்டங்கள் வாங்கி வைத்திருந்தார்கள் யாதவிக்காக. அவற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். 

 

கணவன் கேட்கும் முன்னரே,”உங்களோட பைக்கில் போகலாம் ங்க” என்று அவசரப்படுத்தினாள் யக்ஷித்ரா.

 

ஆட்டோ பிடிக்கலாம் என்று நினைத்திருந்தான் அற்புதன். இவள் இப்படி கூறவும், அகமகிழ்ந்தவன், தன் இருசக்கர வாகனத்தை எடுத்து வந்தான்.

 

வெகு நாட்கள் கழித்து, கணவனும், மனைவியும் இப்படி ஒன்றாகப் பயணிக்கின்றனர் இருவரும். 

 

முன்னர் ஒரு நாள் மாப்பிள்ளையால் வீட்டிற்கு வர முடியாத போதும், இப்பொழுது விடுப்பு எடுத்துக் கொண்டு வருவதால், அவனுக்கான விருந்து தடபுடலாகத் தயாரானது மாமியாரின் வீட்டில்.

 

சிக்கன் பிரியாணி, கிரேவி, தயிர் வெங்காயம் என்று சமைத்து ஜமாய்த்து இருந்தார் மீனா.

 

எத்தனை நாட்கள் கழித்து மனைவியின் பிறந்த வீட்டிற்குச் சென்றாலும், மாப்பிள்ளைக்கு ராஜ் உபசாரம் தான் நிகழும்.அது எழுதப்படாத சட்டமா? என்றெல்லாம் தெரியவில்லை.

 

வண்டியிலிருந்து பதமாக இறங்கி, தான் முதலில் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள் யக்ஷித்ரா.

 

“அக்கா!” என்று தமக்கையைக் கட்டிக் கொண்டாள் யாதவி.

 

ஏற்கனவே அலைபேசியில் பேசும் போது, அவளைப் பிரிந்த சோகத்தைப் பகிர்ந்து கொண்டாளே? 

 

எனவே,”யாது!” என்று இவளும் பாசத்தைப் பொழிந்தாள் யக்ஷித்ரா.

 

அதற்குள் அற்புதனும் அங்கே வந்து விட,”ஹாய் மாமா” என்று அவனுக்கும் ஒரு வணக்கத்தை வைத்தாள் யாதவி.

 

“ஹாய் டா” என்றதோடு அவர்களது பேச்சு முடிந்தது.

 

உள்ளிருந்து மெல்ல எட்டிப் பார்த்த மீனா, மகளும், மருமகனும் ஒன்றாக நிற்பதைக் கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டு, தாமதித்து வெளியே வந்தார்.

 

“வாங்க மாப்பிள்ளை… வா யக்ஷி” என இருவரையும் வரவேற்றார் மீனா.

 

“சரிங்க அத்தை” 

 

“அம்மா” எனத் தன்னை அழைத்த மூத்த மகளை உச்சி முகர்ந்தார் மீனா.

 

வீட்டின் முன்னறையில், அவர்களை அமர வைத்தவர், குடிக்கக் கொண்டு வந்து, கொடுத்தார்.

 

யாதவியோ அன்னையுடனேயே நின்று கொண்டாள். இந்தச் சங்கடத்திற்காகத் தான், இவ்வீட்டிற்கு அடிக்கடி வராமல் இருக்கிறான் அற்புதன். 

 

அத்தையும், யாதவியும் தான் இருக்கும் போது, இயல்பாக இருப்பதில்லை. ஒதுங்கி நின்று கொள்வார்கள். எனவே தான், இரண்டொரு வார்த்தைகள் பேசி விட்டு, மாமியாருக்காக உணவைக் கொறித்து விட்டு, வேலை இருப்பதாக கிளம்பி விடுவான். அவனது மனைவி எவ்வளவு நேரம் அங்கு இருந்தாலும், எதுவும் கூறாமல், தாய் வீட்டில் சீராடி விட்டு வருமாறு யக்ஷித்ராவிடம் கூறி விடுவான் அற்புதன்.

 

வந்ததும் உணவைப் பரிமாற வேண்டாமென்று நினைத்தவர், தான் அமர்ந்தால் தான், யாதவியும் அங்கிருக்க சௌகரியமாக இருக்கும் என்று, யக்ஷித்ராவின் அருகில் அமர்ந்து கொண்டார் மீனா.

 

அவருக்கு அடுத்தப்படியாக வந்து உட்கார்ந்தாள் யாதவி.

 

“அம்மா! இவருக்கு நைட் ஷிஃப்ட் போட்டுட்டாங்க” என்று மறக்காமல் கூறினாள் யக்ஷித்ரா.

 

“அப்படியா? உங்களுக்குச் சிரமமாக இருக்குமே மாப்பிள்ளை?” என்று மருமகனிடம் விசாரித்தார் மீனா.

 

“என்னப் பண்றது அத்தை? போய்த் தான் ஆகனும்! வேலையை விட முடியாதுல்ல!” என்றான் அற்புதன்.

 

எப்படியோ நேரத்தைக் கடத்தியவர்கள், மதிய உணவிற்காக ஆயத்தம் செய்தனர்.

 

திருமணம் முடிந்து, வெகு மாதங்கள் கழிந்திருந்தாலும், இப்போதும் மறு வீட்டு விருந்து போல, தனக்காக சமைத்து வைத்திருப்பதைப் பார்த்த அற்புதனுக்குப் புன்னகை வந்தது.

 

அந்த மனநிலையிலேயே உணவுண்டு முடித்தார்கள்.

 

வாங்கி வந்த தின்பண்டங்கள் அடங்கிய பையை மேஜையில் வைத்து விட்டு, “வெளி வேலை இருக்கு அத்தை” என்றவன்,

 

மனைவியிடம்,”கிளம்பும் போது சொல்லு யக்ஷி, வந்து பிக்கப் செய்துக்கிறேன்” என்று வெளியேறினான் அற்புதன்.

 

அவன் சென்றதும்,”அக்கா! வந்து நம்ம சைக்கிளைப் பாரு” என யக்ஷித்ராவை அழைத்துப் போய் விட்டாள் யாதவி.

 

“மகளைக் கண்ணாரப் பார்க்க விட்றாளா!” என்று பொரிந்து கொண்டார் மீனா.

 

யக்ஷித்ராவும், யாதவியும் தங்கள் இருவருடைய மிதிவண்டிகளைப் பார்வையிட்டனர். 

அவற்றையே பார்த்துக் கொண்டு இருந்தவர்களை,”உள்ளே வாங்க” என்று மகள்களை அழைத்தார் மீனா.

 

மதிய உணவு வயிற்றை நிறைத்து இருந்ததால், உறக்கம் வந்தது யக்ஷித்ராவிற்கு. ஆனால், எப்போதாவது வரும் அன்னை வீட்டில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் உறங்கி விட்டால், அதிலேயே மாலையாகி விடும். 

 

இரண்டு நாட்கள் தங்கினாலும் கூட, பிறந்த வீட்டை விட்டுச் செல்ல மனம் வராது திருமணமாகியப் பெண்களுக்கு.

 

இந்த நாள் முழுவதும் அன்னையுடனும், தங்கையுடனும் தங்கியிருக்கப் போகும் மனைவியை வெகுவாகத் தன் மனம் தேடப் போகிறது என்பதை புரிந்து கொண்ட அற்புதனும், அவளுடைய உணர்வுகளை மதித்து, வேறெங்கு செல்லலாம் என்று நினைத்தவாறு பயணித்துக் கொண்டிருந்தான்.

 

– தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்