Loading

கையில் ஒரு பிஸ்கெட் பொட்டலத்துடன் அந்த அறையை நோக்கிச் சென்றான் ருத்ரன். மெல்லக் கதவைத் திறந்தவன்.. மீண்டும் சுற்றும் முற்றும் பார்க்க எப்பொழுதும் போல அசாத்திய அமைதி தான் நிலவியது அங்கு.

அந்த அமைதியில் நாக்கை உள்ளே மடக்கி கன்னத்தில் முட்டிக் கொண்டு சிரித்தவன், கையிலிருந்த பிஸ்கெட் பொட்டலத்தை அங்கேயே வைத்துவிட்டு மீண்டும் அறையைப் பூட்டிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

கப்பலின் மேல் தளத்துக்குச் சென்றவன், அங்கே இருந்த ஆட்களில் முக்கியமானவனான சமீரை அழைத்து..

“ஷிப்பை ஸ்டார்ட் செய்யலாம்..” என்றவுடன் சமீர் குழம்பினான்.

“இன்னும் நேரம் இருக்கே ஜி?” என்று அவன் கேட்க, ருத்ரனோ, தன் சட்டைக்குள் கையை விட்டு நெஞ்சைத் தடவியபடி..

“என் மனசுக்கு ஏனோ கொஞ்சம் தப்பாப்படுது. நாம கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினா நல்லதுன்னு தோணுது.

அப்படியே கொஞ்ச நேரம் கடல்ல சுத்துவோம்.. அப்படியே நம்ம ஆளுங்களை எல்லாம் ரொம்ப கவனமா இருக்கச் சொல்லு.. நம்ம எல்லைப்பகுதில தான் இன்னைக்கு அந்தக் கடத்தல் நடக்கப் போகுது.

இது நிச்சயம் நம்ம கண்ணுக்கு வராதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க..

இப்போ இந்த விஷயம் நம்ம கண்ணுக்குப் பட்டுடுச்சு. நாமளும் அந்த இரை மேல குறி வச்சிருக்கோம்னு தெரிஞ்சா, அவங்க சும்மா இருக்கமாட்டாங்க.

அதனால கவனம் நாலு பக்கமும் இருக்கட்டும்!

ஹ்ம்ம்.. ஷிப்பை கிளப்பு.” என்று அதிகாரமாய் அவன் கூற, உடனடியாக நங்கூரம் எடுக்கப்பட, கப்பல் கிளம்பியது!

தண்ணீரைக் கிழித்துக் கொண்டு கப்பல் கிளம்புவதை அதன் முனையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

பிடிமானத்திற்கு ஏதுமின்றி அந்தக் கப்பலின் கூர்மையான முனையில் ஏறி, இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தவனின் சட்டை, காற்றில் படபடக்க.. அவனது அடர்ந்த சிகையை குளிர்காற்று தழுவி விளையாடிக் கொண்டிருந்தது.

வானம் முழுக்கக் கறுத்து, கருநீல வைரமாய் ஜொலிக்க, அந்த வண்ணத்தில் தன்னைத் தொலைத்தவன், கீழே இறங்கி மீண்டும் அந்த ஆயுத அறைக்குச் சென்றான்.

கதவைத் திறந்து பார்த்த பொழுது முன்னர் அவன் அங்கு வைத்துவிட்டுச் சென்றிருந்த அந்த பிஸ்கட் பொட்டலம் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

அதைக் கையிலெடுத்தவன், “ஹ்ம்ம்.. ரொம்ப கஷ்டம் தான் போலிருக்கு..” என்றபடி மீண்டும் அந்த அறைக்குள் நடைபயின்றான்.

அந்தச் சிறிய அறையில் மிகப்பெரும் துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பின்புறத்திற்குச் சென்றவன், சிறு திரை மறைவுக்குள் கையை விட்டு இழுக்க, அவன் கையோடு வந்தாள் அக்னி!

மூச்சிரைக்க அவன் மார்போடு வந்து சாய்ந்தவள், பதறி விலக முற்பட, அவளை விலக்காது அப்படியே அணைத்திருந்தான் ருத்ரன்.

“எப்போ கையைப் பிடிச்சு இழுத்தாலும் இப்படி என் நெஞ்சோட வந்து ஒட்டிக்கறியே? அவ்வளவு ஆசையா என் மேல?” என்று நக்கலாய் அவன் வினவ, அக்னிக்கோ ஆத்திரம் பொங்கியது.

“ஆசையும் இல்ல.. தோசையும் இல்ல.. விடுங்க என்ன..” என்று அவள் விலக முற்பட, தன் வலிய கரங்களால் அவளை வளைத்துப் பிடித்திருந்தவன் அப்படியே நின்றான்.

கையை இப்படியும், அப்படியும் ஆட்டி அவள் விளக்க முயன்றும் முடியாது போகவே.. “விடு என்ன..” என்றாள் கடித்த பற்களுடன்!

அதைக் கேட்டு இதழுக்குள் சிரித்தவன்..

“உன்னை விட்டுப் பத்து நிமிஷம் ஆச்சு.. அது கூடத் தெரியாம இருக்க.” என்று கூற, குப்பென முகம் செஞ்சாந்தாய் சிவந்து போனது.

அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாது, அவள் தலை குனிந்து சட்டென ஓரெட்டு பின்னால் செல்ல, அவனோ உடனே ஓரடி முன்னே வந்து அந்த இடைவெளியை நிரப்பினான்.

“எதுக்கு இங்க வந்து ஒளிஞ்சுட்டு இருக்க?” என்று அவன் கேட்ட பொழுது இப்பொழுது அவன் முகம் மிகவும் தீவிரமாக இருந்தது.

அதற்கும் அவள் பதில் கூறாது அமைதி காக்க, தன் ஒற்றை ஆட்காட்டி விரல் கொண்டு அவளது தாடையை உயர்த்தி தலையை நிமிர்த்தியவன், “கேட்கறேனில்ல? சொல்லு.. எதுக்கு இங்க வந்து ஒளிஞ்சுட்டு இருக்க?” என்றான் இப்பொழுது இன்னமும் கடினமான குரலில்.

அந்தக் குரலில் அவனை நேராகப் பார்த்தவள்..

“நீங்க ஏதோ சதி வேலைல ஈடுபட்டிருக்கீங்கனு தெரிஞ்சுது. அது என்னனு கண்டுபிடிக்கத் தான் நான் இங்க வந்தேன்.” என்று சற்றும் தயங்காமல் கூற, அசந்துவிட்டான் ருத்ரன்.

“இத்தனை நடந்ததுக்கு அப்பறமும் கொஞ்சம் கூட அடங்க மாட்டியா நீ?” என்று அவன் சிறு சிரிப்புடன் கேட்க, அவனை ஊன்றிப் பார்த்த பெண்ணவளோ..

“உங்க கண்ணுல என் மேல அளவு கடந்த காதல் தெரியுது ருத்ரன். ஒரு பேச்சுக்கு நானும் உங்களைக் காதலிக்கிறேன்னு வச்சுப்போம்.. ஆனா, நீங்க இந்தக் காளிக்ஷேத்ராவை விட்டுட்டு வந்தா தான் நம்ம கல்யாணம் நடக்கும்னு சொன்னா.. நீங்க என்ன செய்வீங்க ருத்ரன்?” என்று அவள் கேட்க, ருத்ரனின் கண்கள் இடுங்கியது.

“காதலுக்கு எந்தவொரு நிபந்தனையும் தேவையில்லை அக்னி!

நீ அக்னி.. நான் ருத்ரன்.. இந்தப் பொருத்தம் மட்டுமே போதும் நம்ம காதலுக்கு!

எனக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் உனக்கும் பிடிக்கணும். எனக்கு எதெல்லாம் பிடிக்காதோ, அதெல்லாம் உனக்கும் பிடிக்கக் கூடாதுனு நான் ஆசைப்பட்டா.. நான் ஒரு தனிமனுஷியை காதலிக்க முடியாது.

நான் காதலிக்கறது என்னோட நகலாத் தான் இருக்கும்.

எனக்கு நகல் வேண்டாம் அக்னி! எனக்கு இதே காரமான, கோபமான.. சூடான அக்னி தான் வேணும்.

அது உனக்கும் தெரியும்.. ஆனா நீ சொல்ல வந்தது.. நீ என்னைக் காதலிச்சாலும் கூட உன்னோட நாட்டு மேல இருக்க பற்றை உன்னால மாத்திக்க முடியாதுனு சொல்லற.. இல்லையா?” என்று அவன் நேரடியாகக் கேட்க, உள்ளுக்குள் வியர்த்தது அவளுக்கு.

‘எப்படி பால் போட்டாலும் கண்டுபிடிச்சுடறானே..” என்று உள்ளுக்குள் பதறியவள்..

“இல்ல இல்ல.. அப்படியெல்லாம் இல்ல..” என்றாள் உடனடியாக.

அந்தத் தடுமாற்றத்திலேயே அவளது மனம் அவனுக்கு நன்றாய் புரிந்து போய்விட, மீண்டும் இதழ் முட்டும் சிரிப்பு வந்தது அவனுக்கு.

இப்படியே அவளுக்கு அருகேயே.. அவளது சுவாசத்ஹதுக்குள்ளே உறைந்து போய் நின்றிக்க வேண்டும் என்று உள்ளுக்குள் பேராசை கிளம்பியது அவனுக்கு.

ஆனாலும் இங்கு அவளுக்கு அதிக ஆபத்து என்று உணர்ந்தவன், “நீ இங்க என்னை உளவு பார்க்க வரல அக்னி.. ஆபத்தைத் தேடி வந்திருக்க.

அதனால நாம் திரும்ப ஊர் போய்ச் சேரும் வரைக்கும் நீ இந்த இடத்தை விட்டு வெளில வந்துடாத. திரும்பக் கரைல கப்பல் நின்ன பிறகு தான நீ இந்த ரூமை விட்டு வெளில வரணும்.

கண்டிப்பா இந்தக் கப்பலைப் பத்திரமா கரைக்கு கொண்டு போய்டுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா.. நீ வெளில வந்தா என்னோட கவனமெல்லாம் உன் மேல குவிஞ்சுடும். அப்பறம் என் வேலைல நான் கவனமா இருக்க முடியாது. சரியா?” என்று அவன் தன்மையாகவே கேட்க, அவளோ அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.

அதைக் கண்டும் தனக்குள்ளாவே சிரித்தவன்.. “சரி, கொண்டு வந்த சாப்புட்டுல மீதி இருந்ததுன்னா, அதையே நைட்டுக்கும் வச்சுக்கோ..” என்று அவன் கூற, மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தவள்..

“நான் என்ன பிக்னிக்கா வந்துருக்கேன்.. சாப்பாடெல்லாம் கட்டி கொண்டுட்டு வர?” என்று கேலியாய் கேட்க, அதற்குச் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தவன், மீண்டுமாய் அந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து அவளுக்குக் காண்பித்து ஆட்டிவிட்டுச் சென்றான்.

அவன் அங்கிருந்து சென்றதும் அதுவரை பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றினாள் அக்னி.

‘இவனுக்கு நான் இங்க வந்து ஒளிஞ்சுருக்கறது கரைல இருக்கும் போதே தெரிஞ்சுடுச்சு.. ஆனா ஏன் இவன் அப்போவே இவனோட ஆளுங்ககிட்ட என்னைப் பிடிச்சு கொடுக்கல?

அப்படி செய்திருந்தா அப்போவே என்னை மறுபடியும் ஜெயில்ல போட்டிருப்பங்களே? இப்போ எதுக்கு கூடக் கூட்டிட்டு வந்திருக்கான்? என்று குழம்பியவள், அவன் கூறியதையும் மீறிக் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றாள்.

அங்கே கப்பலின் கட்டுப்பாட்டு விசையை இயக்கிக் கொண்டிருந்தான் ருத்ரன். அவனைச் சுற்றி அவனது ஆட்கள் அனைவரும் தேனீ போலச் சுறுசுறுப்புடன் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அதே சமயத்தில் எதேச்சையாக அந்தப் பக்கம் திரும்பிய சமீர், அந்த அடித்தளத்திலிருந்து அக்னி வருவதைக் காணவும் திகைத்துப் போனான்.

அவனது பார்வை சென்ற திசையைத் திரும்பிப் அபார்த்த ருத்ரனோ தலையில் பலமாக அறைந்து கொண்டான்.

‘இவளை நான் கீழேயே தான இருக்கச் சொன்னேன்? யாரைக் கேட்டு இவ மேல வந்தா?

நான் மாமாவையும், அர்ஜுனையும் திருப்பி அனுப்பிட்டு இவளைக் கூட்டிட்டு வந்திருக்கேன்னு நினைக்க மாட்டாங்களா?’ என்று மனதுக்குள் புகைந்தவன், கப்பலின் கட்டுப்பாட்டு விசையை அருகிலிருப்பவனிடம் கொடுத்துவிட்டு இவளிடம் செல்ல ருத்ரன் திரும்பிய சமயம், அவனுக்கு அருகே இருந்த மற்றொரு ஆள், “ஜி.. அங்க பாருங்க..” என்று கூவினான்.

ருத்ரன் விறுக்கென்று திரும்பிப் பார்க்க, அங்கே இவர்களைப் போல இரு சிறு கப்பல்களும், ஒரு மோட்டார் போட்டும் தூரத்தில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அதைப் பார்த்த ருத்ரனின் கண்களிலோ மகிழ்ச்சிப் புன்னகை.

“அதோ.. நமக்கு வலது பக்கத்துல வந்துட்டு இருக்கற கப்பல்ல தான் நாம எதிர்பார்க்கற பொருள் இருக்கு.

இந்த ரெண்டாவது கப்பல்ல கபீரும், அவனோட ஆட்களும் இருக்காங்க.” என்று கூறினான் ருத்ரன்.

அதே வேளையில் தனது கப்பலில் கபீரோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

“என்ன ஜி யோசிக்கறீங்க?” என்று அவனது அடியாள் ஒருவன் கேட்கவும், அவனை நிமிர்ந்து பார்த்தவனோ..

“இந்த எல்லைல நாம கடைசியா வியாபாரம் செஞ்சு பதினஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு.

இதோ இப்போ கோஸ்ட்டுன்னு சொல்லறாங்களே அந்தத் துக்கடாப் பையன் காளிக்ஷேத்ராவுக்கு அரசனானதுக்கு அப்பறம் நம்மளால இங்க எந்த வியாபாரமும் செய்ய முடியல.

நம்ம சி. எம். மிதுன் இருக்கானே.. அவனோட அப்பா தன இந்தக் காளிக்ஷேத்ராவுக்கு தலைவனா இருந்தவன். அவனைக் கொன்னுட்டு தான் இந்த கோஸ்ட் தலைவனானான்.

அந்தச் சமயத்துல மிதுன் மும்பைல படிச்சுட்டுட்டு இருந்ததால அவன் தப்பிச்சுட்டான்.

இத்தனை நாளா அந்த ஊருக்குள்ள அவனாலேயே போக முடியல. ஏன்.. சி. எம் ஆனதுக்கு அப்பறம் கூட அந்த கோஸ்ட்டை அழிக்க அவன் எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருக்கான்.. ஆனா, அவனோட முயற்சிகளால் அந்த கோஸ்டோட பவரும், அவன் மேல இருக்கற பயமும் அதிகமாச்சே தவிர, குறையல.

அதனால இப்போ நம்ம காலைப் பிடிச்சுருக்கான். இத்தனை வருஷமா தடைபட்டுப் போயிருந்த கடத்தலை மறுபடியும் ஆரம்பிக்க நினைச்சிருக்கான். இன்னைக்கு மட்டும் நாம சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டோம், இனி இந்த வங்கக்கடல் நம்ம பக்கம் தான்!” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போது அவனது அடியாட்களில் ஒருவன் முன்னே வந்து,

“ஜி.. அதோ அவங்க கப்பல் வந்துடுச்சு..” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, அந்த எதிரே வந்த கப்பலின் மாலுமியை நோக்கி ஒரு ராக்கெட் லாஞ்சர் பாய்ந்து வந்து அவனை மட்டுமல்லாது, அந்தக் கப்பலின் இயக்கு விசையையும் தகர்த்து தூக்கி எரிந்தது.

அந்தச் சத்தத்தின் அதிர்வில் கபீரே ஒரு கணம் உடல் விதிர்த்து, காதுகளைப் பொத்திக் கொண்டு கீழே அமர்ந்துவிட்டான்.

மெல்ல மேலே எழுந்து பார்த்தால், அவர்களது கப்பலுக்குப் பக்கவாட்டாக இன்னுமொரு கப்பல் நின்றிருந்தது. அதின் மேற்புறத்தில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, அங்கே தோளில் ராக்கெட் லாஞ்சரை வைத்துக் கொண்டு நின்றிருந்தான் அவன் – ருத்ரன்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்