Loading

இளமாறன் நக்கலடித்து சிரித்ததில் கடுப்பான முகுந்த், “இங்க என்ன காமெடி ஷோ வா டா நடக்குது?” என்று காய்ந்தான். அதில் முயன்று சிரிப்பை அடக்கிய மாறன், “செல்வி டியர்! உன் அம்மா பண்ண தப்புக்கு என் அண்ணனை தண்டிக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்” என்றிட, அவளோ பாவமாக விழித்தாள்.

ஆனால் முகுந்த் தான் கடுப்பாகி, “இந்த கல்யாணமே வேணாம். முதல்ல நிறுத்துடா இத” என்று செல்வியை பார்வையால் எரித்தபடி கூற, இவ்வளவு நேரம் அவள் கூறிக்கொண்டிருந்த வார்த்தையை இப்போது அவள் கேட்டது, பெரும் அதிர்ச்சியையும் ஒரு வித வலியையும் பரவ செய்தது.

அவள் முகத்தை கண்டு ஒரு நொடி திருப்தியாக உணர்ந்தவன், “எனக்கும் இந்த கல்யாணம் வேணாம் மாறா…” என்று சிலிப்பிக் கொண்டு திரும்பி விட, கண்ணில் நின்ற நீருடன் பரிதவித்து முகுந்தையே பார்த்தாள் செல்வி.

எந்த எதிர்பார்ப்பும் மனதில் இல்லை எனவும், திருமணத்திற்கு பின்னே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இப்போது மறந்து போக, எதையோ எதிர்பார்த்து பாவை மனம் படபடத்தது.

இளமாறன் தான், முகுந்த் அவளிடம் விளையாடுகிறான் என உணர்ந்து, செல்வியின் பாவ முகத்தையும் கண்டு உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டிருக்க, அதற்குள் கீழே அய்யர் “மாப்பிள்ளைய அழைச்சுட்டு வாங்கோ” என்று கத்தி கொண்டிருந்தார்.

சாராதாவோ யாரையும் மேலே விடாமல் பிடித்து வைத்து, ‘ஐயோ இவன் இவ்ளோ நாள் பேசாம, இப்போ அவள் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கானே’ என நொந்தவர் “சித்ரா போய் என்னன்னு பாரு!” என்று அவளை அனுப்ப முயன்றார்.

அதில் அவளோ திகைத்து “நான்…” நானா என விழிக்க, ‘அட இவள் வேற…!’ என நொந்தவர், “ப்ச்… நேரமாகுது சித்ரா அதிர்ச்சி ஆகாம போய் கூட்டிட்டு வா!” என பதற, அவளோ அவரை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு மேலே சென்றாள்.

மணமகன் அறையில் யாரும் இல்லாததை கண்டு குழம்பி, தயங்கியபடி செல்வி அறையை எட்டி பார்க்க, அங்கு செல்வி கண்ணீர் மல்க நிற்பதை கண்டு, “அக்கா என்ன ஆச்சுக்கா? ஏன் கண்ணுலாம் கலங்கி இருக்கு?” என்றாள் பதற்றமாக.

அவளை கண்டதும் செல்வி அவளை கட்டியணைத்து “என் அம்மா தான் சொல்லுச்சுன்னா உனக்கு எங்க போச்சு புத்தி. எனக்காக நீ ஏன் சித்ராம்மா கல்யாணத்தை நிறுத்தின…” என்றிட அவளோ அதிர்ந்து இளமாறனை பார்த்தாள். அவனோ கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க, அதில் நெளிந்தவள், “க்கா… என்ன உளறுற..? அப்படி எல்லாம் எதுவும் இல்ல…” என்றாள் மெல்லிய குரலில்.

“பொய் சொல்லாத சித்ரா. நேத்து நலுங்கு வைச்சுட்டு போனதும் என் அம்மா உங்கிட்ட பேசுனதை நான் கேட்டேன்” என்றதில் சித்ரா மீண்டும் அதிர்ந்தாள்.

முந்தைய நாள், இளமாறனிடம் பேசி விட்டு மொட்டை மாடிக்கு வந்த சித்ராவை நீலா தடுத்து நிறுத்தினார்.

“செல்விக்கு கல்யாணம் ஆனதும், நீ உன் வேலைய ஆரம்பிச்சு அந்த பையனை மடக்கிடலாம்னு நினைக்காத சித்ரா. உன்னால தான் என் பொண்ணுக்கு எப்போவோ நடக்க இருந்த கல்யாணம் நின்னுச்சு. இப்போ உன்னால அவள் வாழ்க்கையும் கெட்டுச்சு. அப்பறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்…” என்றார் காரமாக.

சித்ராவோ, “எனக்கு என் அக்கா வாழ்க்கை தான் முக்கியம். அவளுக்கு நல்ல லைஃப் கிடைக்கும் போது நான் எப்படி அதை தடுப்பேன்? அவள் வாழ போற வீட்டுல என்னால எந்த அவமானமும் வராது. நான் வரவும் விட மாட்டேன்… இளாவை கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டேன். போதுமா!” என வார்த்தைகள் தேய பேசியவள் முயன்று கண்ணீரை அடைத்து கொண்டாள்.

அதன் பிறகு, செல்வி நீலாவை வறுத்து எடுத்து விட்டாள்.

“என்னம்மா நினைச்சுட்டு இருக்க நீ?  பொண்ணு மாதிரி நினைக்க வேண்டிய பொண்ணோட வாழ்க்கையை அழிக்க பார்த்திருக்க. உனக்கும் ஒரு பொண்ணு இருக்கான்னு மறந்துட்டியா? என் கல்யாணத்துக்கும் அவள் மாறனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? அவளுக்காக வந்த வரனை இப்படி தட்டி விட்டுட்ட” என்று ஏகத்துக்கும் கடித்தாள்.

ஆனால் நீலாவோ, “என்னடி ரொம்ப தான் அவளுக்கு வக்காலத்து வாங்குற? எல்லாம் கை கூட வர்ற நேரத்துல அவள் கல்யாணத்தை நிறுத்துனதும் இல்லாம, உன் கல்யாணத்தையும் சேர்த்து நிறுத்திட்டா அவள். மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னா அப்படி இப்படி தான் இருப்பாங்க. அதுக்காக அவங்க சின்னதா ஒன்னு சொன்னதும் கல்யாணத்தையே நிறுத்திடுறதா. சரி அப்படின்னா அவள் கல்யாணத்தை மட்டும் நிறுத்தி இருக்க வேண்டியது தான. அவளுக்கு நாலஞ்சு பேர காதலிக்கிறது எல்லாம் சாதாரணம். ஆனால் உனக்கு அப்படியா? என் பொண்ணை நான் அப்படி வளர்க்கல” என்றார் அவரும் சீறலாக.

“போதும் நிறுத்துமா. இன்னொரு வார்த்தை சித்ராவை பத்தி பேசுன நான் உன் பொண்ணுன்னே மறந்துரு. அவள் காதலிச்ச பையனோட கல்யாணம் நடக்கலைன்னு அவள் எவ்ளோ வேதனைப்பட்டுருப்பா? அவளுக்கு என்ன ஆசையா கல்யாணத்தை நிறுத்தணும்னு! உன் புத்தி ஏன் இப்படி போகுது. இன்னைக்கு நியாயமா அவளோட கல்யாணம் நடக்க வேண்டியது. உண்மைய சொல்லும்மா. நிஜமா எனக்காகவா அவளை மாறனை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொன்ன. நிச்சயமா இல்ல. உனக்கு ஆரம்பத்துல இருந்தே அவளையும் அவ குடும்பத்தையும் பிடிக்காது. அதை நீ இப்படி காட்டுற. எனக்கு பார்த்த மாப்பிள்ளை என்ன என்ன பேசுனான். அவன் பேசுனதுக்கு நான் அவனை கல்யாணம் பண்ணிருந்தா வாழா வெட்டியா தான் இங்க இருந்துருக்கணும்” என்று ஏகத்துக்கும் ஏசியவள் மூச்சு வாங்க நிறுத்தினாள்.

இப்பொழுது வார்த்தை பாராமல் செல்வி அதனை சொல்லி காட்டிட, இளமாறனோ விழி இடுங்க சித்ராவை முறைத்தான். நீலாவால் ஏதோ ஒரு பிரச்சனை வரும் என்று ஆரம்பித்திலிருந்தே அவனின் உள்ளுணர்வு சொல்லியதால் தான், செல்வி திருமணத்தை நிறுத்த சொன்னதும் அதனை கேட்டு அதிர்ச்சியாகாமல் சமாளிக்கலாம் என்று கூலாக இருந்தான்.

ஆனால் அவனும் இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்பார்த்திருக்காததில், செல்வியின் அருகில் சென்றவன், “செல்வி டியர், இப்போ என்ன உன் தங்கச்சியும் உன் அம்மாவும் என்ன நாட்டோட மன்னரும் தளபதியுமா. அவங்க சொல்லிட்டா நான் கேட்டுடுவேனா? என்ன ஆனாலும் எனக்கும் உன் தங்கச்சிக்கு நடக்க இருக்குற கல்யாணம் நடந்தே தீரும். ஒன்னு அவள் சம்மதத்தோட, இல்ல சம்மதம் இல்லாம. இப்போ இவ்ளோ தூரம் வந்ததுக்கு அப்பறம், உன் தங்கச்சி பண்ண அதே தப்பை நீயும் பண்ணி, உன் அம்மாவுக்கு இவள் மேல இருக்குற கோபத்தை கூட கொஞ்சம் அதிகமாக்கிறாத. நான் சொல்றது உனக்கும் புரியும்னு நினைக்கிறன்…” என்றான் மிகவும் யோசித்து.

அதில் அவளின் புருவம் யோசனையும் சுருங்க, “அக்கா ப்ளீஸ் இன்னொரு வாட்டி என்னால உன் கல்யாணம் நின்னா, அதை விட பெரிய வலி எனக்கு வேற எதுவும் இல்ல. ப்ளீஸ்க்கா. இதை பத்தி அப்பறம் பேசலாம். அய்யர் ரொம்ப நேரமா கூப்புடுறாரு. ரெண்டு பேரும் மணமேடைக்கு போங்க” என்று கெஞ்சிட, முகுந்த் செல்வியை முறைத்து விட்டு, வெளியில் செல்ல போனான்.

மாறன் தான், “எங்கடா அண்ணா போற?” என நக்கலுடன் வினவ, “மணமேடைக்கு தாண்டா போறேன். அப்பறம் என்கிட்ட ஒரு பக்கத்துக்கு டயலாக் பேசுவீங்க இது தேவையா… ஆனா ஒன்னு, இவள் மணமேடைக்கு வரலைன்னாலும், வந்துருக்குற மாமா பொண்ணு அத்தை பொண்ணு யாரையாவது கரெக்ட் பண்ணி மணமேடைக்கு வர வைச்சுருவேன். சோ என் கல்யாணம் இன்னைக்கு கண்டிப்பா நடக்கும்…” என கூட கொஞ்சம் செல்வியின் மனதில் அதிர்வை கொடுத்து விட்டு செல்ல, அவளுக்கோ அப்படி ஒரு எண்ணமே அனலை மூட்டியது.

ஆனால் கோபத்திற்கு பதில் கண்ணீரே அவள் கன்னத்தை நனைக்க வைக்க, “செல்விக்கா… ப்ளீஸ் வாயேன்” என்ற சித்ராக்ஷியின் கெஞ்சலில் தன்னிலைக்கு வந்தாள். ஆனால், மாறனிடம், “என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிப்பீங்க தான?” என கேட்டு வைத்து விட்டு தான் மணமேடைக்கு சென்றாள்.

சித்ராவோ இளமாறனை காணாமல் தவிக்க, அவனோ அவளை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான்.

பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் இனிதே முகுந்த் செல்வியின் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்க, செல்விக்கு தான் அவனின் தொடுதல் சிலிர்ப்பை கொடுத்தது.

ஆனால் முகுந்தோ காரியமே கண்ணாக மூன்று முடிச்சிட்டு நெற்றி வகுட்டில் குங்குமமிட்டு கையில் தூசி இருப்பது போல் தட்டி விட்டுக் கொண்டவன் அவளை திரும்பியும் பார்க்க வில்லை.

நீலாவுக்கு தான் மகளின் திருமணம் கண்டு மகிழ்வு இருந்தாலும் சித்ராவிற்காக சண்டை இட்டது கோபம் வந்தது. மாறன் “கங்கிராட்ஸ் அண்ணா…” என்று கை குலுக்க, சித்ராவிற்கு நிறைவாய் தன் தமைக்கையின் திருமணம் முடிந்ததில் மகிழ்ச்சியில் திளைத்தாள்.

செல்வியை அணைத்துக்கொண்டு “கங்கிரேட்ஸ் அக்கா…” என்று நெற்றியில் முத்தமிட, முகுந்த் தான் குரலை கனைத்தான். சித்ராக்ஷியோ “அக்கா, மாமாக்கு பொறாமை போல…” என நக்கலடிக்க, செல்வி தான் “சும்மா இரு சித்ரா…” என வெட்கத்தில் தலையை தரையில் புதைத்தாள்.

கீழ்க்கண்ணால் அதனை வெகுவாய் ரசித்த முகுந்த், இளமாறனின் முகம் சிணுங்கியதை கண்டு, “பட் பொறாமை எனக்கு இல்ல. வேற எங்க இருந்தோ தான் தீயிர ஸ்மெல் வருது…” என்றான் தன் தம்பியை வாரியபடி.

அதில் சித்ரா அப்போது தான மாறனை கவனித்து அவனின் குறுகுறு பார்வையில் குப்பென சிவந்து விட, தடுமாறிய பார்வைதனை முயன்று வேறு புறம் திருப்பினாள்.

பின், பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய புதுமண தம்பதிகளை நிறைவுடன் கண்டவர்கள் ஆசி வழங்க, நீலாவை மட்டும் முறைத்தபடி நின்றாள் செல்வி.

முகுந்த் தான் அவளின் கையை பற்றி நீலா, ராஜேந்திரனிடம் ஆசீர்வாதம் வாங்க காலில் விழ செய்ய, செல்வியின் முகம் தான் தன் தாயின் செயலில் முகம் சுருங்கியது.

அதன் பிறகு, கேலி கிண்டல்களுடன் விருந்து பகிரப்பட, முகுந்த் அவனுக்கு வைத்த சாம்பாரில் புதைந்தான்.
அவனை முழங்கை கொண்டு இடித்த சாரதா தான், “டேய்… நீ இதுவரை சாம்பார் சாதம் சாப்பிட்டதே இல்லையா?” என்று பல்லைக்கடிக்க, அவனோ “இல்ல அத்தை இன்னைக்கு ரொம்ப டேஸ்ட் ஆ இருக்கு. யார்கிட்ட இருந்து ஆர்டர் வாங்குனீங்க?” என கேட்டதில், அவர் தீயாய் முறைத்து விட்டு, “ரொம்ப முக்கியம் இது. உன் பொண்டாட்டிக்கு இனிப்பு ஊட்டிவிடு… அவளை பாரு சாப்பிடாம அளந்து கிட்டு இருக்கா” என்றார் கடிந்தபடி.

அவனும் அவளை கவனித்தபடி தானே இருந்தான். ஓரக்கண்ணால் முகுந்தை பார்ப்பதும், பின் இலையில் பருக்கைகளை எண்ணுவதுமாக இருந்திட, சித்ராக்ஷி தான், “அக்கா மாமாவுக்கு முதல்ல ஊட்டி விடுக்கா…” என்றாள் குறும்பாக.

அவனோ “ஐயோ எனக்கு வேணாம்மா. உன் அக்கா என்ன ஈவ் டீசிங்ல உள்ள பிடிச்சு போடவா… அப்பறம் நடத்துன கல்யாணத்தை கேன்சல் பண்ண சொல்லுவா” என சீண்டிட, செல்விக்கு தான் அவனின் கோபம் புரிந்து கண்ணில் நீர் முட்டிய படி நின்றது.

இளமாறனோ, “அப்படி கேன்செல் பண்ணுனா என்னடா…? இன்னும் அத்தை பொண்ணுங்க மாமா பொண்ணுங்க எல்லாம் மண்டபத்தை விட்டு போகாம தான இருக்காங்க…” என்று அவன் பங்கிற்கு கேலி செய்ய, சித்ராக்ஷி தான் பொங்கி விட்டாள்.

“இப்ப எதுக்கு என் அக்காவை ரெண்டு பேரும் கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். எத்தனை அத்தை பொண்ணுங்க மாமா பொண்ணுங்க வந்தாலும் என் அக்கா மாதிரி வர முடியாது. அது மட்டும் இல்ல, எங்க மாமா பசங்களும் இதே கல்யாணத்துக்கு தான் வந்துருக்காங்க…” என்றாள் சிலுப்பிக்கொண்டு.

அதில், இளமாறன் அவளை விழி உயர்த்தி பார்க்க, முகுந்த் தான் செல்வியின் நிலையை உணர்ந்து வேகமாக அவன் இலையில் இருந்த லட்டை பிய்த்து செல்வியின் வாயருகில் கொண்டு சென்றான் குறும்பு பார்வையுடன்.

அவளோ முதலில் திகைத்து பின் நெளிந்து கொண்டு அதனை வாங்கி கொள்ள, மாறன் “அட அட… என்ன ஒரு கண்கொள்ளா காட்சி” என உடனே அதனை போட்டோ எடுத்தான். பின், “செல்வி டியர் இப்போ உன் டர்ன்” என்க, செல்வி தான் புன்னகை முகத்துடனும், கைகளில் நடுக்கத்துடனும் லட்டை முகுந்த் வாயருகில் கொண்டு செல்ல, இருவரின் விழிகளும் ஒன்றையொன்று ஒரு நொடி தீண்டியது.

அவன் பார்வையின் வீரியம் அவளை மேலும் நடுங்க செய்ய, அவளின் கரங்கள் தான் அந்தரத்தில் நின்றது. ‘இவள் இப்போதைக்கு ஊட்ட மாட்டா…’ என எண்ணிய முகுந்த் தான் அவளின் கையை பிடித்து அவனே ஊட்ட வைக்க, செல்விக்கு தான் வெட்கம் பிய்த்து தின்றது.

“போதும் போதும்… உங்க ரொமான்ஸ்… நீங்களே ஊட்டினா நாங்க ஊட்ட வேணாமா?” என கடுப்பாக கேட்ட இளமாறன், ஒரு லட்டை எடுத்து முகுந்துக்கு ஊட்டி விட, பின் செல்விக்கு ஊட்டுவதற்கு அவளின் பக்கம் வந்தான்.

ஆனால் அவளருகில் சித்ராக்ஷி அமர்ந்திருக்க, அவளை நெருக்கி சேரில் அமர்ந்தவன், தன்னவளை உரசியபடியே செல்விக்கு ஊட்டி விட போனான்.

அவனின் நெருக்கத்தில் திகைத்த சித்ராக்ஷி பேந்த பேந்த விழித்திருந்ததில் ரசனையுடன், முழு லட்டையும் சித்ராக்ஷியின் வாயில் திணித்தவன், அவளை கீற்று புன்னகையுடன் பார்க்க, முகுந்த் தான் “டேய்… உன் டர்ன் இன்னும் வரவே இல்லையே டா…!” என்றான் கிண்டலாக.

இவர்களின் குறும்பை கண்டு ரசித்திருந்த குடும்பத்தாருக்கு வயிறுடன் சேர்த்து மனமும் நிறைய இதே போல் இளமாறன் சித்ரா திருமணமும் சிறப்பாக நடைபெற வேண்டும் என வேண்டுதலும் போட்டு கொண்டனர்.

லட்டை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்த சித்ராக்ஷி ஒருவாறு அதனை விழுங்கி கொண்டு, மாறனை முறைத்தபடி எழுந்து கை கழுவும் இடம் சென்றாள்.

அவனும் அவள் பின்னேயே செல்ல, சொந்தங்களின் கேலி பார்வையை கண்டுகொள்ளாது அவளை ஒரு ஓரத்திற்கு கடத்தினான்.”என்ன என்ன பண்றீங்க?” என்று அவள் திமிர, அவளை சுவற்றோரம் சாய்த்தவன் “பார்த்தா தெரியல. உன்னை கடத்தி இருக்கேன்” என்றான் தோளை குலுக்கி.

“ப்ச்… விடுங்க யாராவது பார்க்க போறாங்க…” என மேலும் அவள் பதறிட, “அவங்க பார்க்குறது இருக்கட்டும். நான் உனக்கு ஊட்டி விட்டேன்ல இப்போ நீ எனக்கு ஊட்டி விடு…” என்று தன் கையில் கொண்டு வந்த லட்டை அவள் கையில் கொடுத்தான்.

அவளோ கோபமாக “அதுக்கு வேற ஆளை பாருங்க…” என்று கடுமையாக முறைத்திட, அவனோ “ஆஹான்…” என அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு, சுற்றி யாரையோ தேடியவன், “தீபா இங்க வா!” என ஒரு பெண்ணை அழைத்தான்.

அந்த தீபா என்ற பெண்ணும் பாவாடை தாவணியில் துள்ளி குதித்து “என்ன அத்தான்?” எனக் கேட்க, இளமாறன் சித்ராக்ஷியை பார்த்த படி, “உன் அத்தானுக்கு லட்டு ஊட்டி விட ஒரு பொண்ணு கூட இல்ல. நீ ஊட்டி விடுறியா?” என பாவமாக முகத்தை வைத்தான்.

தீபாவோ, “என்னது என் அத்தானுக்கு ஊட்டி விட பொண்ணு இல்லையா… இங்க நான் இருக்கேன். இத்தனை அத்தை பொண்ணுங்க இருக்கோம். அதெப்படி நீ அப்படி சொல்லலாம்…” என முறைத்து, சித்ராக்ஷியின் கையில் இருந்து லட்டை பருங்கினாள்.

ஏற்கனவே உள்ளுக்குள் கனலாக எறிந்திருந்த கோபம், இப்போது தீயாய் பரவத்தொடங்க, தீபாவின் கையில் இருந்த லட்டை வெடுக்கென சித்ராக்ஷி வாங்கி கொண்டு, “உன்ன யாரோ கூப்புட்றாங்க போ!” என்றாள் அவளை அனுப்பும் பொருட்டு.

அவளை பொங்கிய சிரிப்புடன் பார்த்த தீபா, “அத்தான் ஒர்கவுட் ஆவுது…” என கண்ணடித்து விட்டு நகர, ‘எது… ஒர்க் அவுட் ஆ?’ என்று விழித்தவள், இளமாறனின் குறும்பு புன்னகையில் புரிந்து கொண்டாள் தன்னை வேண்டுமென்றே சீண்டுகிறான் என.

அதில் அவனை கண்டு பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்து விட்டவள், லட்டை கீழே போட போக, அவனோ அவள் கையை இறுக பற்றி சுவற்றின் புறம் தள்ளி, “இப்போ ஊட்டுவியா மாட்டியா டி? எப்படியும் நாளைக்கு கல்யாணத்துக்கு எனக்கு ஊட்டி விடணும். அதுக்கு இப்போவே ட்ரையல் பார்க்கலாம்… ஹ்ம்ம்?” என விழியால் வினவ, அவள் தான் அதில் மொத்தமாக வீழ்ந்தாள்.

அந்த இடைவெளியை பயன்படுத்தி, அவள் கையில் இருந்த லட்டை அவளை பார்த்து கொண்டே அவன் வாயில் வைக்க, லட்டை சாப்பிடும் சாக்கில் அவளின் விரல்களின் ருசியையும் ருசித்து கொண்டிருந்தான்.

“ம்ம்ம்… பட்டர் ஃபிங்கர்(butter finger)…” என்று ரசித்தபடி சற்றே கிறங்கியும் கூற, அவளோ “பட்… பட்டரா…” என்றாள் திக்கி திணறி.

அவனோ மேலும் அவளை நெருங்கி கிசுகிசுப்பாக, “பட்டர்ன்னா… நீ நினைக்கிறது இல்ல சித்ரா. பட்டர் பிங்கர் ன்னா, ஹனியோட சேர்த்து க்ரன்ச்சியா பீனட், பட்டர் இருக்குற மில்க் சாக்லேட். இப்ப அதை சாப்பிட்ட மாதிரி இருக்கு…” என்றவனின் குரலில் மயங்கி நின்றவள் தான் சட்டென நிகழ்விற்கு வந்து அவனை தள்ளி விட்டு விட்டு ஓடியே விட்டாள்.

“ஹே! கிட்கேட்… இன்னும் எவ்ளோ நாள் என்கிட்ட இருந்து ஓடுறன்னு பாக்குறேன்” என புன்னகைத்து கொண்டவன் விசிலடித்தபடியே டைனிங் ஹாலுக்கு வர, சாரதாவும் முகுந்தும் தான் அவனை ஒரு மார்க்கமாக பார்த்தனர்.

ஆனால், இங்கு சித்ராக்ஷி தான் படபடத்த மனதுடன் கூடவே, கரித்திருந்த கண்களை கட்டுப்படுத்தி கொண்டு, தன் தமக்கையை புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு, அவள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

மறுநாள் எழுந்ததுமே, கையில் பையுடன் நின்றிருந்தவளை செந்திலும் பார்வதியும் தான் திகைப்புடன் பார்த்தனர். “எங்க போற சித்ரா..?” என பார்வதி வினவ, “ம்மா… ப்ராஜக்ட் காக அவசரமா வெளியூர் போகணும். பெங்களூர் தான் ஒரு ஒரு வாரத்துல வந்துடுவேன்…!” என்றாள் அவர்கள் கண்ணை பாராமல்.

“என்ன இந்த திடீர் ப்ராஜக்ட் சித்ராம்மா?” என புரியாது செந்தில் கேட்க, “இல்லப்பா ஏற்கனவே ஆபிஸ்ல சொல்லிட்டு தான் இருந்தாங்க. நான் தான் அக்கா கல்யாணத்துனால தள்ளி போட்டுக்கிட்டே வந்தேன். ஆனால் இன்னைக்கு கண்டிப்பா வர சொல்றாங்க…” என ஏதேதோ சமாளிக்க, பார்வதி தான் “என்ன சித்ராம்மா நீ… இன்னும் 10 நாள்ல கல்யாண தேதியை குறிச்சுட்டு நீ பாட்டுக்கு போறேன்னு சொல்ற?” என்றார் அதிருப்தியாய்.

அதில் அதிர்ந்து நின்றவள், “என்ன பத்து பத்து நாள்ல கல்யாணமா? என்னமா சொல்றீங்க…?” என்று பதறினாள். “நேத்து தான் சித்ரா முடிவு பண்ணுனோம். மாப்பிள்ளை கூட அவர் உங்கிட்ட சொல்லிக்கிறேன்னு சொன்னாரு அப்போ சொல்லலையா..?” என கேட்டதில், அவளுக்கு தான் வேண்டுமென்றே மறைத்திருக்கிறான் என்று புரிந்து சற்றே கோபம் எழுந்தது.

பின், “அது… அது சொன்னாரு மா. அப்போ நானும் ஊருக்கு போறேன்னு சொன்னேன். அவரும் சரின்னு சொன்னாரு…” என்று அவனை போலவே அவனை கோர்த்து விட, இருவரும் தான் ஒப்புக்கொள்ளவே இல்லை. சிரமப்பட்டு சம்மதிக்க வைத்தவள், திரண்ட கண்ணீரை அடக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

ஆனால், ரயில் நிலையம் சென்றது மட்டும் தான் அவளுக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு அவள் கண் விழித்தது அவளின் அறையில் தான்.

‘நம்ம ஊருக்கு தான கிளம்புனோம்… நம்ம ரூம்லயே இருக்கோம். ஒருவேளை கனவு எதுவும் கண்டோமா..?’ என குழம்பியபடி மெல்ல எழுந்தவளுக்கு தலையில் கிண்ணென வலி எழுந்தது. அதன்பிறகே நெற்றியில் கட்டிட்டிருப்பதை கண்டு மேலும் குழம்பி நிமிர்ந்தவள் எதிரில் இறுகிய முகத்துடனும், நெருப்பை கக்கிய விழிகளுடனும் இளமாறன் நிற்பதை கண்டு சில்லென எழுந்த பயத்தை மறைத்து கொண்டு,

“நான் நான் எப்படி இங்க வந்தேன்…” என்று கேட்டிட, அவனோ பளாரென அவளை அறைந்திருந்தான் சினத்துடன்.

கிட்கேட் உருகும்…❤️
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
33
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்