Loading

வானம் – 24

கடந்த ஒரு வார காலமாய் சித்தார்த்திற்கு கண்ணாமூச்சி ஆட்டம் காண்பித்தாள் சரயு. அவள் கடைக்கு வராமல் இருந்ததே நிம்மதி என நினைத்தாலும் மனதினோரம் அவளது வருகையை எதிர்பார்த்த மனதை கடிவாளம் கட்ட முயன்றான் சித்தார்த். 

அவள் வராததற்கு காரணம் செமஸ்டர் தேர்வுகள் என்பதை இதழிகாவின் மூலமே அறிந்துக் கொண்டான். இவன் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவதால் அவள் இதழிகாவை சந்திக்க வரும் நேரங்களும் தவிர்க்கப்பட்டது. 

“பாண்டியா” என்ற அழைப்பில் சில விநாடிகளில் அவன்முன் வந்து நின்றான் பாண்டியன். “இன்னிக்கு கோர்ட்க்கு போகணும். ஸ்டாக் வந்துச்சுனா செக் பண்ணி வச்சுருங்க” என்றவாறே அங்கிருந்து புறப்பட எத்தனிக்க, “அண்ணா” என தயங்கியவாறே அழைத்தான் பாண்டியன். 

“என்ன பாண்டியா?” என்றவனின் குரலில் ஏனிந்த தயக்கம் என்ற கேள்வியும் படிந்திருந்தது. “உங்க சொந்த வாழ்க்கைல தலையிடறேன்னு தப்பா நினைச்சுக்க வேண்டாம் ண்ணா. சரயு ரொம்ப நல்ல பொண்ணு ண்ணா…” என்றவன் மேலும் கூற சற்று தடுமாறி அவனது முகத்தை ஏறிட்டான் பாண்டியன். 

குறுநகையை படரவிட்டவன், “தங்கச்சிக்கு ஆதரவா!” என்றவனின் குரலில் கேலி படர்ந்திருந்தது. “அது… அப்படி இல்லண்ணா, உங்களுக்கும் ஒரு வாழ்க்கை துணை இருந்தா நல்லது தான ண்ணா. அது மட்டுமில்லாம இதழிகாகவும்…” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை தயக்கம். எங்கே தன்னை தவறாக புரிந்து கொண்டு விடுவானோ என்று! 

“என் வாழ்க்கைய பத்தி மட்டும் யோசிச்சா பத்தாது பாண்டியா. சரயு வாழ்க்கைய பத்தியும் யோசிக்கணும். சரயுவுக்கு தகுதியானவன் நான் இல்ல” என்றவன் மேலும் பேச முயன்றவனை தடுத்து, “எனக்கு லேட்டாகிருச்சு பாண்டியா, நான் கிளம்புறேன்” என்றவாறே வேகமாய் அங்கிருந்து வெளியேறினான். 

நீதிமன்ற வளாகத்தில் நிற்கும்போது கூட அவனது எண்ணங்களை சரயுவே ஆட்கொண்டிருந்தாள். தான் வந்ததை கூட உணராமல் நிற்பவனின் தோள் தட்டினார் ரமணன். 

“சார்” என விழிக்க, “நான் வந்தத கூட கவனிக்காம ஏதோ சிந்தனைலயே இருந்தீங்களா அதான்…” என அவர் விளக்கமளிக்க, “சாரி சார், ஏதோ யோசனைல கவனிக்காம விட்டுட்டேன்” என்றவன், “நம்ம கேஸ் எப்போ சார், டைமாச்சா?” என்றான் சித்தார்த். 

“15 நிமிஷம் ஆகும் சித்தார்த், வெய்ட் பண்ணுவோம்” என்றவரிடம் சரியென தலையாட்டியவாறே திரும்பியவனின் கண்களில் பட்டாள் அவள். 

அவனின் கண்களில் சிறு ஆச்சர்யம் படர்ந்ததோ! ‘இவ எங்க இங்க?’ என்ற கேள்வியோடு அவளை பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சற்று தள்ளி நின்றவாறே. 

‘நாம இங்க இருப்போம்னு இவளுக்கு எப்படி தெரியும்?’ என்ற கேள்வியோடு அதற்கான பதிலும் அவன்முன் படர்ந்தது. பாண்டியன், அவனின் வேலையாக தான் இருக்கும் என நினைத்தவன் மீண்டும் அவளை பார்க்க அருகே இருந்த மரத்தினோரம் சாய்ந்து நின்றவாறே அவனை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சரயு. 

“சித்தார்த்” என்ற ரமணின் அழைப்பில் வேகமாய் அவர் புறம் திரும்பியவனின் கண்கள் அதிர்ந்தன அவர் அருகே நின்றிருந்தவளைப் பார்த்து. 

தொண்டைக்குழிக்குள் அவளது பெயர் சிக்கிக்கொண்டன. ‘தேவிகா’ கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து அவளை பார்க்கிறான். உடல் மெலிந்து போய் கண்ணை சுற்றிலும் கருவளையம் படர்ந்திருக்க நோயாளி போல் தோன்றமளித்தாள். 

“மாப்பிள” என தயங்கியவாறே தேவிகாவின் அன்னை அழைக்க, “சித்தார்த்” என அழுத்தமாய் உறுமினான் அவன். “சாரி தம்பி. உங்கள முறை சொல்லி அழைக்கிற தகுதிய கூட இவ எங்களுக்கு கொடுக்கல” என்றவரின் பார்வை தன் மகளை எரித்தது. 

தேவிகாவை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் இறுகிய உடல் அசைவே காட்டிக் கொடுத்தன. தன்னை சமன்படுத்த முயன்றவனின் கரங்களை ஒரு தளிர் கரம் இதமாய் பற்றியது. 

அவனது கரங்களோடு தனது கரத்தை கோர்த்திருந்தாள் சரயு. அவளது முகத்தை ஏறிட்டவனுக்கு அவளது கண்கள் பதிலளித்தது. அவனின் இதயத்துடிப்பை உணர்ந்திருந்தாள் சரயு. தான் அவனை அணைத்த நொடி அவனிடம் ஏற்பட்ட அதே மாறுதல் என்பதை உணர்ந்தவளுக்கு அவனின் நிலையை விளக்க தேவையில்லாமல் போனது. 

“நம்ம கேஸ் வரும்போது சொல்லுங்க சார், நாங்க அங்க வெய்ட் பண்றோம்” என ரமணனிடம் தெரிவித்தவள் அவனை அங்கிருந்து சற்று தொலைவிற்கு அழைத்துச் செல்ல, மகுடிக்கு கட்டுண்ட பாம்பை போல அவளது பின்னே சென்றான் சித்தார்த். 

அவள் முதலில் நின்றிருந்த அதே மரத்தினடியில் அவனை நிற்க வைத்தவள், “சித் இங்க பாருங்க” என அவனது முகத்தை தன் கரங்களால் ஏந்த அவனது இதழ்களோ ஏதோ கூற வந்து தடுமாறி நின்றது. 

“ரிலாக்ஸ், இந்தாங்க இந்த தண்ணிய கொஞ்சம் குடிங்க” என தண்ணீர் பொத்தானை எடுத்து நீட்டினாள். அதனை வாங்கியவன் கடகடவென அனைத்து தண்ணீரையும் தன் தொண்டைக்குழிக்குள் இறக்கினான். 

“ஆர் யூ ஓகே?” என்றவளின் கேள்விக்கு சிறு தலையசைப்பு வந்தது. இவர்களின் சம்பாஷணைகளை பார்த்துக் கொண்டிருந்த தேவிகாவிடம், “எல்லாம் உன்னால தான் டி. அழகான வாழ்க்கைய நாசமாக்கிட்டியே!” என தலையில் அடித்துக் கொண்டே அழத் துவங்கினார் அவளின் அன்னை. 

“மா, இது கோர்ட். கொஞ்சம் அமைதியா இருங்க” என்ற ரமணின் வார்த்தைகளுக்கு சிறிது கட்டுப்பட்டவர் போல் வாயை மூடிக்கொண்டு விசும்பத் தொடங்கினார். ஆனால் இவை எதற்கும் தேவிகா எதிர்வினையாற்ற விரும்பவில்லை போலும். 

கண்கள் எதையோ வெறித்தவண்ணம் சிலையாய் நின்றிருந்தாள். அதற்குள் அவர்களின் முறை அழைக்கப்பட அனைவரும் நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். 

அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இயந்திரகதியாய் பதிலளித்தாள் தேவிகா. குழந்தையை சித்தார்த்திடமே ஒப்படைக்க சம்மதமா என்ற கேள்விக்கும் சம்மதம் என்றவள் அவனுக்கு விவாகரத்து அளிக்கவும் சம்மதமே என்க, அக்னி சாட்சியாய் ஆரம்பித்த அவர்களின் இல்லற வாழ்விற்கு விவாகரத்து வழங்கி முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி. 

நீதிமன்றத்தை விட்டு வேகமாய் வெளியேறினான் சித்தார்த். கிட்டத்தட்ட அவனின் பின்னே ஓடி வந்தாள் சரயு. “சித்தார்த்” என்ற ரமணின் அழைப்பில் தான் அவனது கால்கள் சற்று தடைப்பட்டன. 

“ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க, பிரசியூஜர்ஸ் முடிச்சுட்டு வந்தறேன்” என்க சரியென தலையாட்டியவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டவாறே அங்கிருந்த மரத்தில் சாய்ந்து நின்றான். முதலில் இருந்த படபடப்பு, தயக்கம் தற்போது காணாமல் போயிருந்தது. இருந்தும் அதற்கு காரணமானவளை காண்பதை தவிர்த்தான். 

சொன்னபடியே பத்து நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்தார் ரமணன். “எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது சித்தார்த். அவங்க சைட்ல இருந்து ஒரு விசயம் கேட்ருக்காங்க” என சற்று தயங்கியவாறே அவனின் முகம் பார்த்தார் ரமணன். 

“இன்னும் என்கிட்ட இருந்து அவங்களுக்கு என்ன வேணுமாம் சார்?” என்றவனின் குரலில் அத்தனை விரக்தி. “உங்க சூழ்நிலை புரியுது சித்தார்த். ஆனா, அவங்க சைட் கேட்கிறத என்னால மறுக்க முடியல. அதான் உங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னேன்” என்றவரிடம் கேள்வியாய் நோக்கினான். 

“தேவிகாவுக்கு இப்போ ரீசன்ட்டா அபார்ட் ஆகிருக்கு” என்றவர் அவனின் முகம் பார்க்க, அவனின் முகமோ எவ்வித உணர்வுமின்றி மேலே கூறுங்கள் என்றது. அவர்கள் தன்னிடம் கேட்டதை கூறலானார். 

சித்தார்த்திடம் பத்து நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு சென்றவரை இடைமறித்தனர் தேவிகாவும் அவளது அன்னையும். கேள்வியாய் அவர்களை நோக்க, தேவிகாவின் அன்னை “சார் எங்களுக்காக மாப்பிள்ளை கிட்ட… சித்தார்த் தம்பிகிட்ட கொஞ்சம் பேச முடியுமா சார்?” என்றார் தயக்கமாய். 

“அவர்கிட்ட என்ன பேசணும்? இதுவரைக்கும் உங்க பொண்ணால அவர் பட்டது போதாதுனு வேற எதுவும் எதிர்ப்பார்க்குறீங்களா?” என்றவரின் வார்த்தைகளில் கோபம் படிந்திருந்தது. 

“உங்க கோபம் நியாயமானது சார். ஏன் எனக்குமே இவ மேல கோபம் இருக்கு. ஆனா, மரணத்தோட விளிம்புல இவள பார்க்கிறப்போ பெத்த வயிறு அப்படியே விட்டுட்டு போக முடியல சார். இவள பெத்ததே பாவம்னு நினைச்சேன். ஆனாலும் எக்கேடோ கெட்டுப் போனும் விட முடியல சார், என் நிலம யாருக்கும் வரக்கூடாது” என முந்தானையால் கண்ணைக் கசக்கினார் அவர். 

“உங்களோட கதைய கேட்க எனக்கு நேரமில்ல மா. என்ன பேசணுமோ அத பேசுங்க” என கத்தரித்தார் அவர். உண்மையிலேயே அவர்களிடம் பேச விரும்பவில்லை அவர். சித்தார்த் அவரின் தரப்பு வாதியாக இருந்தாலும் அவனோடு ஒருவித நட்பு இழையோடியிருந்தது. அவனின் இன்றைய நிலைக்கு காரணமானவர்களிடம் பேச மனம் ஒப்பவில்லை. 

“திரும்ப குழந்தை உண்டாகி அதுனால இவ மரணத்தோட எல்லை வரைக்கும் போய்ட்டு வந்துட்டா சார். இப்பக்கூட இவள இங்க கூட்டிட்டு வர விருப்பமே இல்ல. அந்த தம்பி வாழ்க்கைகாக தான் இவ வர்றதயே சம்மதிச்சேன்” என மீண்டும் அவர் தன் மகளைப் பற்றியே கூற ரமணன் பொறுமையை இழந்தார். 

“ம்மா, கொஞ்சம் அமைதியா இரு” என முதன்முறையாக வாயை திறந்தாள் தேவிகா. “சாரி சார். எனக்காக அவர்கிட்ட ஒரே ஒருதடவ இதழிகாவ…” என மென்று முழுங்கியவள், “தூர இருந்து பார்க்க அனுமதி வாங்கித் தர முடியுமா சார், ப்ளீஸ்” என கண்களில் நீர் கோர்க்க கைகளை கூப்பினாள் தேவிகா. 

ஏனோ மறுக்க முடியவில்லை அவரால். “என்னால உறுதி கொடுக்க முடியாது மா. சித்தார்த் கிட்ட கேட்டுப் பார்க்கிறேன், அவர் சம்மதிச்சா நீ பார்த்துக்கோ” என்றவர் அவனிடம் வந்திருந்தார். 

அவள் கேட்டதை சித்தார்த்திடம் கூற அவனது கரங்கள் கோபத்தால் இறுகின. “இதழி மா என் மக சார். அவள பார்க்க மட்டும் இல்ல அவள பத்தி பேசக்கூட யாருக்கும் உரிமை இல்ல” என்றவன் கோபத்தில் மரத்தை காலால் உதைக்க, “சித்தார்த்” என உடனிருந்த இருவருமே ஒருசேர அவனை கட்டுப்படுத்த முயன்றனர். 

இதனை சற்றுத் தொலைவில் இருந்து பார்த்தவளுக்கோ கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. 

“நான் கிளம்புறேன் சார்” என்றவன் வேகமாய் அங்கிருந்து வெளியேற சித்தார்த்தின் பின்னே ஓடினாள் சரயு. ஆனால் அவனோ வேகமாய் தனது வண்டியை கிளப்ப, ஆட்டோ ஒன்றை பிடித்தவள் அவனை பின்தொடர்ந்தாள். 

பிரஷாந்த் – ரம்யாவின் திருமண வேலைகள் படுஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் கவனத்தில் ஏற்காதது போல் வளைய வந்தாள் ரேவதி. 

வழக்கம்போல் அன்றும் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவளை இடைமறித்தார் வாணி. குழப்பமாய் தாயை ஏறிட்டவளிடம், “உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க ரேவதி? உன்னை சுத்தி நடக்கிறது எதுவும் உனக்கு தெரியாதா இல்ல தெரிஞ்சும் இப்படி நடந்துக்குறியா?” என்றார். 

“என்ன மா சொல்ற! என்னை சுத்தி என்ன நடக்குது? எப்பவும் போல தான இருக்கு. இதுல என்ன குத்தம் கண்டுபிடிச்ச!” என இயல்பாய் வினவ, வாணிக்கே ஒரு நிமிடம் குழப்பமானது. 

ஒருவேளை மகளின் மனதில் பிரஷாந்த் இல்லையோ, தான்தான் தவறாக புரிந்து கொண்டோமா! என நினைத்தாலும், ‘இல்ல இவ நம்மகிட்ட இயல்பா இருக்கிற மாதிரி நடிக்கிறா’ என மறுபக்கம் முரணாக தோன்ற எதுவாக இருந்தாலும் அவளிடமே நேரடியாக கேட்டுவிடுவோம் என முடிவெடுத்தார். 

“பிரஷாந்த் கல்யாண வேலைலாம் ரொம்ப தீவிரமா நடந்துட்டு இருக்கிறது தெரியுமா தெரியாதா டி? ஏன் இப்படி எதுவும் நடக்காத மாதிரியே பேசற” என்றவரிடம், 

“அத்தான் கல்யாணம் விசயம் தான் ஊருக்கே தெரியுமே ம்மா. இதுல என்ன இருக்கு… சரி, வா எனக்கு வந்து சாப்பாடு போடு. ரொம்ப பசிக்குது” என சாப்பிட அமரப் போனவளை தடுத்தார் வாணி. 

“ப்ச், என்ன மா வேணும் உனக்கு” என அவள் நொந்துகொள்ள, “இங்க பாரு கண்ணு, நான் உன்னை பெத்தவ டி. உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியாம போகுமா! ஏன் இப்படி உள்ளுக்குள்ள போட்டு மருகிக்கிட்டு வெளிய இப்படி எதுவுமே நடக்காத மாதிரி நடமாடுற… எனக்கு பயமா இருக்கு டி உன்னை பார்த்தா!” என்றவரின் குரலில் அப்பட்டமாய் பயம் வெளிபட்டது. 

அவளது கண்களில் ஈரம் படர அதனை வெளிகாட்டாதவாறு, “ம்மா, என்ன மா இது சின்ன புள்ள தனமா! இப்ப என்ன உனக்கு தெரியணும்? ஆமா, எனக்கு அத்தான கட்டிக்க ஆச இருந்துச்சு தான். அது ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்ததால வந்த இன்பாக்சுவேஷன். அவ்ளோ தான், அதுக்காக அவருக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கை அமையக்கூடாதா என்ன! இங்க பாரு மா… உன் மகள கட்டிக்க இனிமேலா ஒரு ராஜகுமாரன் பொறந்து வரப் போறான், எனக்கானவன் இங்க தான் எங்கயாச்சும் பக்கத்துல இருப்பான். அதுனால சமத்தா அவன தேடி பிடிச்சு அவன என் கைல ஒப்படைக்கிற வேலய பாரு. இப்படி கண்டதையும் யோசிச்சு உடம்ப கெடுத்துக்காத. போ, போய் சமத்தா எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வா. பசிக்குது மா” என வயிற்றைப் பிடிக்க, பசி என்றவுடன் அந்த தாயுள்ளம் மற்றதை மறந்து சமையலறையை நோக்கி ஓடினார். 

கண்களை இறுக மூடி தூணில் சாய்ந்தவளின் கண்களில் ஈரம் படர்ந்தது. ‘சாரி மா. என்னை மன்னிச்சுரு, அத்தான தவிர வேற ஒருத்தர என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது. ஆனா, வேற வழி இல்ல மா. அவராச்சும் சந்தோசமா இருக்கட்டும்’ என மனதினுள் கூறிக் கொண்டாள். 

கடந்த சில தினங்களாவே அவளை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்திருந்தான் பிரஷாந்த். அவளே அவனைத் தேடி வருவாள் என அவன் தவிர்க்க, ஆனால் அதற்கு மாறாக அவளோ அவன் தன்னை காணாததை நினைத்து நிம்மதியடைந்தாள். 

தங்கம்மாள் மட்டுமே அதீத மகிழ்ச்சியில் கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தார். முத்துச்சாமி வெளிவேலைகளை கவனித்துக் கொள்ள அவர்களின் வீடு விழாக்கோலம் பூண்டு திருமண வைபவத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. 

ரம்யாவின் மனதில் பிரஷாந்தை நினைத்து அடிக்கடி சஞ்சலம் ஏற்பட்டாலும் அதனை தண்ணீர் தெளித்து அமைதிப்படுத்தினார் தங்கம்மாள். இருந்தும் அவள் பிரஷாந்தை நேரடியாக சந்திக்க பல முயற்சிகள் எடுத்தும் அவை தோல்வியிலேயே முடிய ரேவதியை சந்திக்க முடிவெடுத்து அவளை சந்திக்கவும் தயாரானாள். 

வானம் -25

ரேவதி வழக்கமாக செல்லும் கோவிலில் அவளுக்கு முன்பே சென்று அவளை சந்திக்க தயாராகி இருந்தாள் ரம்யா. கர்ப்பகிரகத்தில் நுழைந்தவள் அம்மனிடம் கண்கள் மூடி பிராத்தித்துக் கொண்டிருந்தவளின் முன் நின்றாள் அவள்.

பூசாரி நீட்டிய திருநீறு தட்டில் சில நாணயங்களைப் போட்டவள் சிறுகீற்றாக திருநீற்றை விரலில் தொட்டு நெற்றியில் வைத்துக்கொண்டே நிமிர்ந்தவளைக் கண்டு சிநேக புன்னகையை உதிர்த்தாள் ரம்யா.

அவள் யாரென அடையாளம் கண்டுக்கொண்டவளுக்கு தொண்டைக்குழிக்குள் ஏதோ சிக்கிக்கொண்ட உணர்வு. எச்சிலைக் கூட்டி முழுங்கியவள் பதிலுக்கு குறுநகையை படரவிட்டவாறே கோவில் பிரகாரத்தை சுற்றி வர முனைய, “ரேவதி” என அழைத்தவாறே அவளருகில் வந்தாள் ரம்யா.

அழைப்பை ஏற்றுக்கொண்டதன் வண்ணம் அவள் கால்கள் தடைபட, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ரேவதி” என்றவளை கேள்வியோடு நோக்கினாள் ரேவதி.

“ப்ளீஸ், ஒரு அஞ்சு நிமிஷம் தான்” என்றவளிடம் மறுக்க முடியாமல், “கோவில சுத்திட்டு வந்தறேன்” என்றவாறே கோவிலை வலம் வந்தவளின் மனதில் ஆயிரம் கேள்விகள்.

தங்களின் காதலைப் பற்றி தான் ஏதேனும் கேட்க போகின்றாளா! தங்கம்மாள் அத்தை என்ன சொல்லி அவளை சம்மதிக்க வைத்திருப்பார்கள்… என பல கேள்விகள் ஓடினாலும், இன்னும் சில தினங்களில் பிரஷாந்த் அவளுக்கு முழு உரிமையாகப் போகின்றவன் என்ற நினைப்பே அவளது தொண்டைக்குழிக்குள் கண்ணாடித் துண்டு அடைப்பட்டுக்கொண்டது போல் இருந்தது.

என்னதான் மெதுவாக பிரகாரத்தை சுற்றினாலும் இறுதியில் தொடக்கப்புள்ளியை அடைய தானே வேண்டும். சில நிமிடங்களில் இருவரும் எதிரெதிரே நின்றுக் கொண்டிருந்தனர்.

“சொல்லு ரம்யா, என்கிட்ட என்ன பேசணும்?” என வலிய வார்த்தைகளை கோர்த்து வினவினாள் ரேவதி.

“எனக்கும் உன் அத்தை பையன் பிரஷாந்த்க்கும் கல்யாணம் முடிவாகிருக்கிறது தெரியும் தான!” எனும்போதே ஏதோ ஒருவித தயக்கம் படர்ந்திருந்தது.

“இது ஊரறிஞ்ச விசயமாச்சே, இதுல என்ன இருக்கு” என்றவள் தன்னை நிதானப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள் ரேவதி.

“இல்ல உனக்கும் அவருக்கும் இடைல…” என அவள் தயங்க, “எத கேட்க வந்தியோ அத நேரடியாவே கேளு ரம்யா… எதுக்கு இவ்வளவு தயக்கம்” என்றவளின் வார்த்தைகளின் அளவு சற்றுக் கூடியிருந்தது.

“சாரி, இப்படி கேட்கிறேனு தப்பா நினைச்சுக்காத! உனக்கும் அவருக்கும் இடைல காதல்…” எனும்போதே ரம்யாவின் குரல் தடுமாறியது. தனக்காக நிச்சயிக்கப்பட்டவனை வேறொருத்தியுடன் இணைத்துப் பேசவே மனம் தடுமாறியது.

“காதல்… அப்படினு சொல்ல முடியாது. ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்தவங்க, சோ அதுனால ஒருவித பிடித்தம் இருந்துச்சு எங்களுக்குள்ள. அவ்ளோ தான். இத நினைச்சு நீ பயப்பட வேண்டாம். பிரஷாந்த் அத்தான் உனக்கு தான்” என அவள் கரம் பற்றி ஆறுதலாய் அழுத்தம் கொடுத்தவள், “புதுப் பொண்ணுக்கு என்னோட வாழ்த்துகள். என் அத்தான கண்கலங்காம பார்த்துக்குவ தான!” ஒரு கண்ணை சிமிட்ட, அதில் கன்னக்கதுப்புகள் செம்மையுற, “ம்…” என தலையாட்டினாள் ரம்யா.

“குட்” என அவள் கன்னம் தட்டியவள், கிளம்ப எத்தனிக்க, “ஒரு நிமிஷம் ரேவதி” என தடுத்தாள் ரம்யா.

‘என்ன’ என அவள் பார்க்க, “அவரு தான் நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறதா சொன்னாரு. அதான்…” என அவள் முடிக்காமல் ரேவதியை பார்க்க, “அத்தானுக்கு இப்பவே கண்ணாலம் பண்ண விருப்பம் இல்ல ரம்யா. அதான் உன்னை சமாளிக்க அப்படி ஏதாச்சும் சொல்லிருப்பாரு. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரி ஆகிரும்” என்றவள், “அத்தான் உனக்கு தான்” என்றவள் குரலில் இருந்த உணர்வை பிரித்தரிய முடியவில்லை.

வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் நுழையும் வரை மூச்சு முட்டியது ரேவதிக்கு. படுக்கையில் விழுந்தவளின் மனம் கனத்துக்கிடந்தது. இறுக மூடிய கண்களுக்குள் இருந்து நீர்த்துளி வெளியேறத் துடித்துக் கொண்டிருந்தது.

சித்தார்த்தின் இருசக்கர வாகனம் கட்டுப்பாடற்று சாலையில் சென்றுக்கொண்டிருக்க அவனை ஆட்டோவில் பின்தொடர்ந்துக் கொண்டிருந்த சரயுவின் இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியிருந்தது.

“அண்ணா, ப்ளீஸ் கொஞ்சம் வேகமா போய் அந்த வண்டிய ஓவர்டேக் பண்ணுங்க ண்ணா. ப்ளீஸ்” என அவளின் அதரங்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன.

ஆட்டோ ஓட்டுநரும் தன்னால் முடிந்தவரை அவனை விரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவனைத் தாண்டி சென்று அவனை வழிமறிக்க சற்று தடுமாறி வண்டியை நிறுத்தியவனின் முகம் ரௌத்திரமாகியது.

ஆட்டோவில் இருந்து வேகமாய் இறங்கியவளின் கரங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது கன்னத்தைப் பதம் பார்த்திருந்தன.

“ஆர் யூ மேட்? என்னாச்சு சித் உங்களுக்கு! இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிட்டு வர்றீங்க, உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆகி இருந்தா…” என முடிக்க முடிக்காமல் மூச்சு வாங்கியது அவளுக்கு. அத்தனை பதட்டம். வேகமாய் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

அவனது முதுகில் படர்ந்திருந்த அவளது கரங்கள் இன்னுமே நடுங்கிக் கொண்டிருந்தன. “எனக்கும் கியூட்டிக்கும் நீங்க வேணும் சித்” என்றவளின் கண்கள் அவனது சட்டையை ஈரப்படுத்தியது.

அவனின் இத்தனை நேர கோபங்களும் வடிந்திருந்தது அவளின் ஒற்றை அறையில். தாறுமாறாக ஓடிக்கொண்டிந்த அவளின் இதயத்துடிப்பை அவனது தேகமும் உணர, அவளைக் கட்டுப்படுத்த முயன்றான் அவன்.

“சரயு” என்ற அழைப்பு அவளது காதில் ஏறிய வண்ணம் தெரியவில்லை. அப்பொழுது தான் தாங்கள் சாலையின் நடுவே நிற்பது உணர, அவளை வலுக்கட்டாயமாக சாலையோரம் இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தினான் சித்தார்த்.

அவளின் இதயத்துடிப்பு இன்னுமே தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்க தற்போது அவளை சமாதானப்படுத்தும் நிலையில் இருந்தான் சித்தார்த். அவன் மனம் அவளை விட்டு விலக நினைத்தாலும் காலமும் சூழலும் அதற்கு எதிராக வேலையைத் துவங்க தடுமாறிப் போனான்.

ஆட்டோ ஓட்டுநர் நீட்டிய தண்ணீர் பொத்தானை வாங்கி சரயுவிடம் நீட்டினான் சித்தார்த். ஓரளவு அவள் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள, தன்னை விடாது பின்தொடர்ந்து வரும் அவளை பார்த்தவனுக்கு அய்யோ’ என்றிருந்தது. சில நேரங்களில் அவளின் அருகாமையை அவனும் விரும்பினாலும் நிதர்சனத்தை உணரும் வேளையில் மனம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடுகிறது.

விக்கிரமாதித்தனைப் போல் மனம் தளராமல் அவளும் அவனை மரமிறக்கினாலும் மீண்டும் மனம் மாறி தொடக்கப்புள்ளிக்கே வந்துவிடுகிறான்.

சில நொடிகள் அமைதியே நிலவ அதனை உடைத்தது சித்தார்த்தின் வார்த்தைகள். “ஆட்டோல ஏறு சரயு” என்றவன் அவளின் பதிலை எதிர்நோக்காமல் ஆட்டோ ஓட்டுநரிடம் விடுதி விலாசத்தைக் கூற அவளோ வேகமாய் தடுத்தாள்.

“இப்ப கூட்டிட்டு வந்ததுக்கு எவ்ளோ ண்ணா?” என்றவள் அவர் கூறிய பணத்தை அவரிடம் நீட்டியவள், “நீங்க போங்கண்ணா, நாங்க பார்த்துக்கிறோம்” என்க அவரோ சித்தார்த்தை பார்த்தார்.

“சரயு…” என மேற்கொண்டு பேசப் போனவனை கரம் நீட்டி தடுத்தவள் “நீங்க போங்கண்ணா” என்றாள் அவரிடம். இருவரையும் ஒருமுறை அழுந்தப் பார்த்தவர் வண்டியை கிளப்ப, சரயுவோ கரங்களை மார்பின் குறுக்கே கட்டியவண்ணம் தார்சாலையை வெறித்து நோக்கினாள்.

“சரயு” என்ற அவனின் அழைப்பை அவள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. “சரயு, இங்க பாரு. இப்ப ஏன் இப்படி அடம்பிடிக்கிற” என்றவனின் வார்த்தைகளில் வேதனை படிந்திருந்தது.

“எனக்கு முடிவு தெரியாம நான் இங்க இருந்து கிளம்புறதா இல்ல” என தீர்க்கமாய் பதில் வந்தது அவளிடமிருந்து.

கண்களை இறுக மூடித் திறந்தவன், “என் சூழ்நிலைய உனக்கு தெளிவா சொல்லியும் இப்படி நீ அடம் பிடிக்கிறது சரி இல்ல சரயு” என்றவனின் வார்த்தைகளில் சிறு கோபம் எட்டிப் பார்த்தது.

“நான் நீங்க தான் வேணும்னு இவ்ளோ தெளிவா சொல்லியும் இப்படி நீங்க அடம் பிடிக்கிறது தான் சரியில்ல சித்” என்றவளின் வார்த்தைகளிலும் பிடிவாதம் படர்ந்திருந்தது.

“ப்ச்” என நெற்றியை அழுந்தப் பிடித்தவன் மூச்சை ஒருமுறை நிதானமாக இழுத்துவிட்டு, “இங்க பாரு சரயு… இப்பவும் நான் தெளிவா சொல்றேன். இது சின்னபிள்ள விளையாட்டு கிடையாது மா. வாழ்க்கை, என் வாழ்க்கைய விட உன் வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம்” என்றவன் அவளைப் பார்க்க, அவனின் கடைசி வரிகளை நிதானமாக மனதினுள் ஏற்றி ரசித்தவள், “இப்பவும் என் வாழ்க்கை தான உங்களுக்கு ரொம்ப முக்கியம்?” என வினவியவளின் உள்ளர்தத்தை உணர்ந்தவனுக்கு அருகே இருந்த மரத்தில் முட்டிக் கொண்டால் தேவலாம் என்றிருந்தது.

“என் வாழ்க்கையே நீங்க தான்னு நான் சொல்றேன். அப்போ என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா அது உங்ககூட இருந்தா தான நல்லா இருக்கும் சித்!” என்றவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்திருந்தான் சித்தார்த்.

“இங்க பாருங்க சித், உங்க கடந்த காலத்துல நடந்த ஒரு தப்புக்காக வாழ்நாள் முழுக்க நீங்க தண்டனைய அனுபவிக்கிறது எந்த வகைல நியாயம்? லீகலாவும் என்னை ஏத்துக்கிறதுல இப்போ உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லயே” என அவனுக்கு தன்னைப் புரிய வைக்கும் நோக்கோடு கூற, அவனுக்குத் தான் தன்னை அவளிடம் எவ்வாறு புரிய வைப்பது எனப் புரியாமல் தவித்தான்.

“என் சூழ்நிலை புரிஞ்சு தான் பேசுறியா சரயு? இப்போ காதல் கண்ணை மறைக்கலாம். ஆனா எதிர்காலத்துல ஏதோ ஒரு சூழ்நிலைலயாச்சும் உன் மனசு குழந்தைக்காகவும் தாய்மைகாகவும் ஏங்குச்சுனா… அந்த நொடி நரக வேதனை சரயு. ப்ளீஸ், உனக்கு அது வேண்டாம்” என்றவனின் கரங்கள் அவளை நோக்கி கூப்பி இருந்தன. கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்த்ததோ!

“சித்” என பதறியவள் அவனது கரத்தைப் பற்ற போக வேகமாய் சற்று தள்ளி நகர்ந்து வண்டியை எடுத்தவன் அவள் ஏறுவதற்காக காத்திருக்க மேற்கொண்டு அவனிடம் வாதிட விரும்பாமல் அமைதியாய் ஏறிக் கொண்டாள்.

அந்த பயணம் இருவரின் மனதினுள்ளும் ஆயிரமாயிரம் யோசனைகள், குழப்பங்கள். பயணம் நீண்டுக்கொண்டே செல்வது போல் இருந்தன. அவளது விடுதியின் முன் வண்டியை நிறுத்த இறங்கிக் கொண்டவள் அவன் எதுவும் பேசுவான் என அவன் முகம் பார்க்க அவனோ வண்டியை முறுக்கினான்.

வண்டி அவனது இல்லத்தையும் கடந்து செல்ல கனத்த மனதோடு விடுதிக்குள் நுழைந்தாள் அவள்.

வானம் – 26

சோர்வாய் அறைக்குள் நுழைந்தவளை வழிமறித்தாள் சம்யுக்தா. “என்கிட்ட கூட சொல்லாம எங்க டி போய்ட்டு வர்ற? வரவர உன் போக்கே சரியில்ல” என்றவளுக்கு பதிலேதும் அளிக்காமல் மெத்தையில் பொத்தென அமர்ந்தாள் சரயு.

“ஏய், இங்க பாரு டி. ஒருத்தி காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன். நீ பேசாட்டுக்கு போய் உட்கார்ந்தா என்ன அர்த்தம்?” என்றவளுக்கு,

“என்ன அர்த்தம் சம்யுக்தா, உன் பிரண்ட் இப்போ காதல்ல விழுந்துட்டாங்கனு அர்த்தம். நான் அப்பவே நினைச்சேன். இப்போ உண்மையாகிருச்சு பார்” என்றவாறே அவர்களது அறைக்குள் நுழைந்தாள் வானதி.

அவள் புரியாமல் விழிக்க, “உன் ஆருயிர் தோழி நீங்க வேலைப் பார்க்கிற உங்க ஓனரோட கமிட் ஆகிட்டாங்கன்னு சொல்றேன், நீ என்னடான்னா இப்படி முழிக்கிற. இப்பக் கூட அவரு தான் உன் பிரண்ட்ட டிராப் பண்ணிட்டு போறாரு” என்றவள்,

“ஏன் சரயு, உனக்கு ரொம்ப பெரிய மனசு தான் போ… ஆம்பளையே இல்லனு சொல்லி பொண்டாட்டியே விட்டுட்டு ஓடிப்போய்ட்டா. ஆனா நீ மறுவாழ்க்கை கொடுக்க தயாராகிட்ட போல” என்றவளின் வார்த்தைகளில் நக்கல் தொனித்தது.

ஆனால் அடித்த நொடியே சரயுவின் கரங்கள் வானதியின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது. “இனி ஒரு வார்த்தை என் சித்துவ பத்தி தப்பா பேசுன, பேசற நாக்க இழுத்து வச்சு அறுத்துருவன். ஜாக்கிரதை” என்றவள், “ஒழுங்கா இவள ரூம விட்டு வெளிய போக சொல்லு சம்யு, இல்லனா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்றவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

தனது தோழியின் கோப முகத்தைக் கண்ட சம்யுக்தாவே ஒரு நொடி ஸ்தம்பித்தாள். “அக்கா ப்ளீஸ், தயவுசெஞ்சு வெளிய போய்ருங்க” என்றவளை முறைத்தவள்,

“நான் யாருனு காட்றேன் பார்” என கறுவிக்கொண்டே அறையை விட்டு வெளியேறினாள் வானதி.

இன்னும் ரௌத்திரமாய் நின்றிருந்தவளை அமர வைத்தவள் குடிக்க தண்ணீர் கொடுக்க மடமடவென ஒரு லிட்டர் தண்ணீர் பொத்தானையும் காலி செய்தாள் சரயு.

“ஏன் டி இப்படி தேவை இல்லாம அந்த வானதிய வேற பகைச்சுக்கிற” என்றவளை ஏகத்துக்கும் முறைத்து வைக்க, “அவ பேசுனது தப்பு தான். இல்லனு சொல்லல, ஆனா அவசரப்பட்டு கை நீட்டீட்ட. இப்போ அவ ஒன்னுக்கு ரெண்டா வார்டன்ட்ட பத்த வச்சானு வச்சுக்க நாளைக்கு நமக்கு தான் பிரச்சினை. வீடு வரைக்கும் இந்த பிரச்சினை போனா என்ன பண்றது?” என கவலைப்பட,

“அதுக்காக அவ அப்படி பேசும்போது கைக்கட்டி வேடிக்கை பார்க்க சொல்றியா சம்யு!” என்றவளிடம் என்ன கூறுவது எனத் தெரியாமல் முழித்தாள் சம்யுக்தா.

“சித் பத்தி தப்பு தப்பா பேசுனாலும், நான் பொறுமையா இருக்கணும். அப்படி தான சொல்ல வர்ற!” என்றவளிடம்,

“நான் அப்படி சொல்ல வரல டி. ஆனா இன்னிக்கு வானதி பேசுனத இனி நம்மள சுத்தி உள்ளவங்க பேசுவாங்க. அப்போ என்ன பண்ணுவ சொல்லு? ஊர்ல இருக்கிறவங்க ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் நம்ம ரியாக்ட் பண்ண முடியுமா! ஒருவேள சித்தார்த் சார் உன் காதல ஏத்துக்கிட்டு நாளைக்கு வாழ்க்கைல நீங்க இணைஞ்சீங்கன்னா இதவிட பலமடங்கு இப்படிப்பட்ட பேச்ச நீ எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போ என்ன பண்ணுவ?” என்றவளின் கேள்விக்கு சரயு எதுவும் கூறாமல் அமைதி காக்க அவளருகே அமர்ந்தவள்,

“இங்க பாரு சரயு, உன்னோட காதல என்னாலுமே முதல்ல ஏத்துக்க முடியல. ஆனா உன் காதலோட தீவிரத்த பார்த்து தான் நான் எதுவும் பேசாம அமைதியானேன். இப்பக்கூட சித்தார்த் சார நான் தப்பு சொல்லல. அவரோட கடந்தகால வாழ்க்கைல நடந்தத வச்சுதான் எல்லாரும் இப்படி பேசறாங்க. ஆனா உண்மையா என்ன நடந்ததுனு எனக்கு மட்டுமல்ல இங்க யாருக்குமே தெரியாது. ஆனா அது உனக்கு தெரியும்னு நான் நினைக்கிறேன். ஏன்னா இதே வார்த்தைய வானதி ஏற்கெனவே சொன்னப்போ இருந்த உன் கோபத்த விட இப்போ உன் கண்ணுல பார்த்த அந்த கோபம் பல மடங்கு அதிகம்.

அவரோட கடந்த கால வாழ்க்கைய நீ ஏத்துக்கிட்ட மாதிரி அதப்பத்தி புறணி பேசறவங்களோட வார்த்தைகளையும் நீ கடந்து போக பழகிக்கணும். இதுக்கெல்லாம் நீ மனசார தயாரானா மட்டும் தான் உன் வாழ்க்கை நல்லா அமையும் சரயு. என் மனசுல பட்டத சொல்லிட்டேன் இதுக்குமேல உன் விருப்பம் ” என்றவள் தன் வேலைகளைப் பார்க்க செல்ல சம்யுக்தாவின் வார்த்தைகளை மனதில் அசைபோட ஆரம்பித்தாள் சரயு.

உண்மை தானே! நாளை சித்தார்த் உடன் வாழ்வை தொடங்கினாலும் வானதி மாதிரியான ஆட்கள் நாக்கில் விஷத்தை தடவித் தானே பேசுவார்கள். எல்லாவற்றிற்கும் தான் பதிலளிக்க முடியாதே!

ஓரளவு மனதை சமன்படுத்த முயலும் நேரம் அவளது அலைப்பேசி ஒலித்தது. பிரஷாந்த் தான் அழைத்திருந்தான். அண்ணனின் எண்ணைக் கண்டவளின் முகம் லேசாக மலர்ந்தது.

“என்னண்ணா, கல்யாண கலை வந்துடுச்சா மாப்பிள்ளை சாருக்கு” என்றாள் சரயு.

“ப்ச், இப்போ அது ஒன்னு மட்டும் தான் குறைச்சல் குட்டிமா” என்றவனின் வார்த்தைகளில் எரிச்சல் மண்டிக் கிடந்தது. அதில் துணுக்குற்றவள், “என்னண்ணா, அங்க எதுவும் பிரச்சினையா? அம்மா எதுவும் சொன்னாங்களா?” என படபடத்தாள் சரயு.

சித்தார்த்தை பற்றி கடந்த ஒரு வார காலமாக சிந்தித்துக் கொண்டிருந்ததில் அங்கே தன் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை சற்றே மறந்திருந்தாள். மனம் குறுகுறுத்தது, தன் அண்ணனின் பிரச்சினையை மறந்துவிட்டோமே என்று.

“இவ்ளோ நாள் அம்மா தான் என்னை பாடாபடுத்துனாங்கனா இப்ப அந்த வரிசைல உன் தோழியும் சேர்ந்துட்டா” என்றவனின் குரல் உடைந்திருந்தது.

“அண்ணா…!” என்றவளின் அழைப்பில் தன் மனதில் இருந்ததை மொத்தமாய் கொட்டித் தீர்த்தான் பிரஷாந்த்.

“இவளுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு! ஏன் இப்படி பைத்தியகாரத்தனம் பண்றானு தெரியலண்ணா. எனக்கு என்னவோ அம்மா மேல தான் சந்தேகமா இருக்கு. அது ஏதாச்சும் சொல்லி குட்டைய கொளப்பி விட்ருக்குமா இருக்கும். அதான் இவளும் அதுக்கேத்த மாதிரி இப்படி பண்றா. நான் அவக்கிட்ட பேசிக்கிறேன் ண்ணா. ஆனா இத இப்படியே வளர விடறது நல்லதில்ல ண்ணா. கல்யாண தேதி வேற நெருங்கிட்டு இருக்கு. இன்னொரு பொண்ணும் இதுல சம்பந்தப்பட்டுருக்கா. யாருக்கும் சேதாரம் இல்லாம இத எப்படி நடத்தப் போறோம்னு தெரியல ண்ணா” என்றவளின் மனம் மிகவும் குழம்பிப் போயிருந்தது.

மறுமுனையில் பேச்சற்றுப் போக தன் அண்ணனின் மனவுணர்வுகளைப் புரிந்துக் கொண்டவளாய், “இதப்பத்தி ரொம்ப யோசிச்சு நீ குழப்பிக்காதண்ணா. நான் ரேவதிட்ட பேசறேன், இப்போ எக்ஸாம் நடக்கிறதால என்னாலயும் ஊருக்கு வர முடியாது. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்ன தான் வருவேன்னு நினைக்கிறேன். என்ன பண்றதுனு பார்ப்போம் ண்ணா” என்றவளிடம் வெறும் “ம்” மட்டும் கொட்டியவனை கண்டு வருத்தத்தோடு கண்களை இறுக மூடினாள் சரயு.

எவ்வளவு நேரம் அதே நிலையில் இருந்தாள் என்றே கணிக்க முடியவில்லை.”சரயு” என்ற சம்யுக்தாவின் அழைப்பில் தான் கண்களைத் திறக்க முற்பட்டவளுக்கு முன்பே இரு கண்ணீர்த் துளிகள் கருவிழிகளில் இருந்து வேகமாய் கன்னத்தினோரம் உருண்டோடியது.

அதனைக் கண்ட சம்யுக்தா, “ஹேய், என்னாச்சு டி. யார் ஃபோன் பண்ணது” என்றவள் சரயுவின் அலைப்பேசி ஒலியைக் கேட்டுக்கொண்டே தான் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தாள். அவள் மீண்டும் உள்ளே வந்து பார்க்கும்போது கண்களை இறுக மூடியிருக்க முகத்தில் ஆயிரம் சிந்தனைரேகைகள் ஓட அமர்ந்திருந்தவளைக் கண்டதால் பதறிப் போய் அவ்வாறு வினவி இருந்தாள்.

தன் அண்ணன் கூறியதைப் பற்றி தன் தோழியிடம் பகிர, “என்ன செய்ய போற டி, நடக்க இருக்கிற கல்யாணத்த நிறுத்தி ரேவதியையும் உன் அண்ணனையும் சேர்த்து வைக்க நினைச்சாலும் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் அங்க கேள்விக்குறி ஆகிடுமே. இதுல மூணு பேரோட வாழ்க்கை இருக்கே சரயு” என்றவள் சரயுவின் முகம் பார்க்க அவளும் அதே குழப்பத்தில் தான் உள்ளாள் என்று காட்டிக்கொடுத்தது.

“ம்… அதான் எனக்கும் என்ன பண்றதுனு தெரியல சம்யு. மொதல்ல ரேவதிகிட்ட பேசிப் பார்க்கிறேன். அதுக்கு பிறகு தான் ஏதாவது முடிவு எடுக்கணும்” என்றவள் ரேவதியிடம் பேசலாம் என்றெண்ணி மாடிக்கு விரைந்தாள். சற்று தனிமை தேவைப்பட்டது அவளுக்கு.

மாடியில் துணி துவைக்கப் போட்டிருந்த கல்லில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். மாடி சுவற்றின் நிழல் அங்கே படர்ந்திருந்ததால் சற்று குளுமையாய் தோன்ற அந்த சூழலை சற்று உள்வாங்கிக்கொண்டே தோழியின் எண்ணை இணைப்பில் கொண்டு வந்தாள்.

ஆனால் முழு ரிங் சென்றடைந்தும் எதிர்முனையில் பதிலற்றுப் போக மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்க ஒரு கட்டத்தில் அலைப்பேசி அணைக்கப்பட்டு விட்டது என பதிவு செய்யப்பட்ட குரல் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

உடனே தன் அத்தையை அழைத்து ரேவதியிடம் பேச முற்பட, அவரோ வீட்டில் இருந்தும் தான் வெளியே இருப்பதாக பொய்யுரைக்க அவர் கூறுவது பொய் என புரிந்துக் கொண்ட பின்பும் அவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை. “சரிங்கத்த, வீட்டுக்கு போனோனே அவள எனக்கு கால் பண்ண சொல்லுங்க” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

‘உன் மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டு இப்படி பண்ற’ என சரயுவின் மனம் கேட்ட கேள்வியை தன் தாயிடம் இருந்து எதிர்நோக்கினாள் ரேவதி. ஆனால் பதிலளிக்காமல் அறைக்குள் நுழைந்தவளைக் கண்டு தாயுள்ளம் பதறியது.

மனம் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகி இருக்க துவைக்கும் கல்லில் இருந்து இறங்கி நிழலை விட்டு தள்ளி வந்திருந்தவளை உச்சி வெயில் காய்த்தது. அந்த வெயில் கூட அவளை சுட்டெரித்ததா என்றுக் கேட்டால் கூட இல்லை என்றே கூறுமளவிற்கு அவளின் மனம் உழன்றுக் கொண்டிருந்தது.

நெடுநேரமாகியும் தோழியைக் காணாமல் மாடிக்கு வந்த சம்யுக்தா கண்டது இலக்கற்று வெறித்தப் பார்வையோடு வெயிலில் நின்றிருந்தவளைத் தான்.

வெயில் பட்ட தரையெங்கும் கொதிக்க அவளின் அருகே சென்றடைவதற்குள் கால் பொத்து போகின்ற அளவு எரிந்தது சம்யுக்தாவிற்கு. காலை உதறிக்கொண்டே அவளை இழுத்துக்கொண்டு நிழலுக்குள் வந்தாள்.

“ஏன்டி மொட்ட வெயில்ல அப்படி என்ன யோசனை. ஒரு நிமிஷத்துக்கே என் கால் பொத்து போற அளவுக்கு எரியுது. நீ என்னடானா ஐஸ் கட்டி மேல நிக்கிறவ மாதிரி கூலா நிக்கிற” என அவளை உலுக்கினாள் சம்யுக்தா.

“என்ன” என திடுக்கிட்டு தன் தோழியை நோக்க, தலையில் அடித்துக் கொண்டாள் சம்யுக்தா. “அப்படி என்ன யோசனை டி? ரேவதிகிட்ட பேசுனியா?” என்றாள்.

“அவ ஃபோன் எடுக்கல சம்யு” என்றவளின் குரலில் என்னவென்று பிரித்தரிய முடியாத வேதனை படர்ந்திருந்தது. “சரி விடு டி. எக்ஸாம் முடிஞ்சோனே ஊருக்கு போகப் போற தான! அப்புறம் என்ன! நேர்ல பார்த்து பேசு. எல்லாம் சரியாகும்” என ஆறுதலளித்தாள் சம்யுக்தா.

அவள் தலை சரியென ஆடியது. அதன்பின் ஏதோ சிந்தனையோடே சுழன்றுக் கொண்டிருந்தாள் சரயு.

அன்று மாலை இருவருமாய் சூப்பர் மார்கெட்டிற்கு சென்றிருந்தனர். காலையில் நடந்த நிகழ்வால் அவள் உள்ளே நுழைந்தவுடனே தனிச்சையாய் சித்தார்த்தின் விழிகள் அவள் மீது படர்ந்தது.

ஆனால் அவளோ எதையோ வெறித்த வண்ணம் உள்ளே நுழைந்திருந்தாள். வழக்கமாய் அவள் கடைக்குள் நுழையும் போதே அவளின் கண்கள் சித்தார்த்தின் இருக்கையில் தான் படரும். அவனும் அதை உணர்ந்திருந்தான் தான். ஆனால் இன்று ஏனோ அவளின் முகமே சரியில்லை எனக் கூறியது.

அவனின் மனம் உடனே கேள்வியாய் அவளை நோக்க அவள் அவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையே மறந்து உள்ளே சென்றுக் கொண்டிருந்தாள். அவனைக் கண்ட சம்யுக்தா வழக்கம்போல் சிறு புன்னகையோடு கடக்க சரயுவோ இயந்திரகதியாய் அவளின் பின்னே சென்றுக் கொண்டிருந்தாள்.

‘என்னவாயிற்று இவளுக்கு! ஒருவேளை காலையில் நடந்ததை நினைத்து இன்னும் வருத்தத்தில் இருக்கிறாளோ.பக்குவமில்லாத வயசு. போகப்போக புரிஞ்சுக்குவா’ என நினைத்தாலும் மனம் ஏனோ அவளின் பின்னேயே சென்றது.

மனதை அடக்கி திசைத்திருப்ப முயன்றான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டான். கூடவே வேலையும் சேர்ந்துக் கொள்ள அதில் மூழ்கியவன் அவ்வபோது அவளை தன் பார்வை வட்டத்துக்குள் கொண்டு வர மறக்கவில்லை.

இயந்திரத்தனமாய் செயலாற்றிக் கொண்டிருந்தாள் சரயு. அவனின் புருவம் யோசனையில் நெற்றிமேட்டை தொட்டு இறங்கியது. அவன் மனம் ஏனோ அவள் வேறு ஏதோ பிரச்சினையில் உள்ளதாக உரைக்க அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவள் செயல் அமைந்தது.

வாடிக்கையாளர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பருப்பு வகைகளைக் கேட்க அவளோ வேறொரு பிராண்டின் பருப்பு வகைகளை எடுத்து நீட்டினாள்.

“இது இல்ல மா. நான் கேட்டது @ பிராண்ட்” என அவர் மீண்டும் வினவ, “சாரி மேம்” என மன்னிப்பு வேண்டியவாறே மீண்டும் வேறொரு பிராண்டின் பருப்பு வகையை எடுக்க, சற்று தள்ளி நின்ற பாண்டியன் அதனைக் கண்டு வேகமாக அவர்கள் அருகே ஓடி வந்தான்.

தன் தோழியின் அருகே வந்த சம்யுக்தாவின் “சரயு” என்ற அழுத்தமான அழைப்பில் தன் தவறை உணர்ந்தவள், “சாரி மேம், ஒரு நிமிஷம் இருங்க. நான் அந்த பிராண்ட் எடுத்து தரேன்” என்றவள் அங்கே பருப்பு வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உலோக சட்டத்தில்(ரேக்) தன் கண்களால் துழாவ, அதற்குள் அங்கு வந்த பாண்டியன், “அந்த பிராண்ட் ஸ்டாக் இங்க இல்ல மேம். குடோன்ல இருக்கு. உங்களுக்கு உடனடியா வேணுமா மேம்?” என வினவினான் அவன்.

அவர் தொடர் வாடிக்கையாளர் என்பதால், “நோ ஃபிராப்ளம், நீங்க ஸ்டாக் எடுத்து வைங்க. நான் நைட் வந்து வாங்கிக்கிறேன்” என்றவர் அங்கிருந்து நகர, “சரயு, நீ குடோனுக்கு போய் அந்த பிராண்ட் பருப்பு வகைகள் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்து இங்க வைக்கிறியா? இன்னிக்கு மதியம் தான் லோடு வந்துச்சு. அதான் இன்னும் இங்க கொண்டு வந்து வைக்கல” என்றான்.

“ம். சரிங்கண்ணா… நான் போய் எடுத்துட்டு வரேன்” என்றவள் அவனிடம் குடோன் சாவியை பெற்றுக் கொண்டு செல்ல சம்யுக்தாவிற்கு அடுத்த வாடிக்கையாளர் வரவும் அவள் அதில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.

அவள் சென்ற சில நிமிடங்கள் கழித்து தானும் குடோனை நோக்கிப் புறப்பட்டான் சித்தார்த். அவளிடமிருந்து விலகியே நில் என மூளை உரைத்தாலும் மனம் ஏனோ கிடந்து தவித்தது அவள் முகம் கண்டு. கால்கள் தானாக அவளை நோக்கி செல்ல அவளோ அதனை உணராமல் பருப்பு வகைகளை எடுத்து சிறு தள்ளுவண்டியில் போட்டுக் கொண்டிருந்தாள்.

“சரயு” என்ற அழைப்பில் திடுக்கிட்டு அவள் திரும்ப அவளருகே நின்றிருந்தவனைக் கண்டு விழிகள் விரிந்தது. “எதுவும் பிரச்சினையா?” என்றான் சித்தார்த்.

தன் குழப்பத்தைக் கண்டு கொண்டான் என்பதை அவனின் கேள்வியிலேயே புரிய விழிகள் இரண்டும் வெளியே தெறித்துவிடும் அளவிற்கு ஆச்சரியத்தில் விரிந்தது.

அவளின் முட்டைக் கண்ணுக்குள் கருவிழிகள் இரண்டும் விரிய அவனை நோக்கியவளைக் கண்டு மனம் தடுமாறிப் போனது அவனுக்கு. “என்ன கேட்டீங்க?” என்ற அவளின் கேள்விக்கு அவன் இதழ்கள் தானாய் பதிலளிக்க ஆரம்பித்தன.

“எதுவும் பிரச்சினையா? ஏன் வந்ததுல இருந்து ஒரு நிலைல நில்லாம மனச அலைப்பாய விடற?” என்றவனை கண்களால் பருகினாள் அவள்.

தன் ஒட்டுமொத்த குழப்பமும் அந்த நொடியே பறந்துப் போயிருந்தது. “உங்கள கட்டிக்கவா சித், ப்ளீஸ்” என இறைஞ்சின அவளின் விழிகள்.

ஆச்சரியத்தை தேக்கி இருந்த விழிகள் தற்போது இறைஞ்ச அதனை மறுக்க முடியாமல் நின்றிருந்தான் சித்தார்த். அவனின் மௌனமே அவளுக்கு சம்மதமாய் தோன்ற அவனை இறுக அணைத்திருந்தாள் அவள்.

அந்த நொடி நேரம் அவள் மனம் அமைதியை கண்டுக்கொண்டது. அவள் அவனை அணைத்திருந்தபோதும் அவன் கரங்கள் அவளை தொட்டும் பார்த்திடவில்லை.

அந்த மௌன நிலையை கலைக்க இருவருமே முற்படவில்லை. முழுதாய் இரண்டு நிமிடங்கள் கரைந்திருந்தன. தன் மனம் ஓரளவு சமநிலையை அடைய அவனை விட்டு தானாய் விலகினாள். அவன் தன்னை அணைக்கவில்லை என்பது அவள் கருத்தில் உரைத்திருந்தாலும் அதனையெல்லாம் அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தன்னை அவன் கவனித்திருக்கிறான். தன்னுடைய குழப்பமான முகம் அவனைப் பாதித்திருக்கிறது என்பதே பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

“தேங்க்ஸ் சித்” என்றவளிடம் என்ன கேட்பது என தடுமாறிப் போனான் அவன். அவளை விலக சொல்லிவிட்டு பின் தானே அவள் நெருங்குவதற்கான வாய்ப்பை அளிக்கின்றோமே என மனம் அலைபாய்ந்தது. அதனையும் தாண்டி அவளுக்கு என்ன பிரச்சினை எனவும் மனம் கேள்வி எழுப்பியது.

அதனை உணர்ந்தவள் போல் தன் அண்ணனின் திருமணத்தைப் பற்றி தானே கூறலானாள். இதுவரை நடந்தவற்றை கூறி முடித்தவள், “கண்டிப்பா அண்ணா ரேவதிய தவிர வேற யாரையும் மனசளவுல கூட நினைக்க மாட்டாரு. அதே தான் ரேவதிக்கும். அவ அண்ணா மேல உசுரா இருக்கிறா. அதுனால இந்த கல்யாணம் கண்டிப்பா நிக்கும், அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவாங்கன்னு நான் நினைச்சேன். ஆனா அவளோட இப்போதைய செயல்பாடுகள் எல்லாம் முரணா இருக்கு. நான் கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறா. அண்ணன அவாய்ட் பண்றா. அதான்…” என தன் குழப்பத்தை அவனுக்கு புரிய வைக்கும் நோக்கத்தோடு அனைத்தையும் ஒப்புவித்திருந்தாள் அவள்.

பொறுமையாய் அனைத்தையும் கேட்டு முடித்தவன், “ஆரம்பத்துல இருந்தே உன் அண்ணனும் ரேவதியும் காதலிக்கிறது தெரிஞ்சும் இந்த கல்யாணத்த ஏற்பாடு பண்ணது உன் அம்மா தான!” என்றவனிடம் ஆம் என தானாக தலையாடியது.

“அப்போ அவங்க நினைச்சது நடக்கணும்னு ரேவதிகிட்ட பேசி இருக்க வாய்ப்பிருக்கலாமே” என்றான். தன்னுடைய கணிப்பும் அதே தான் என்பது போல் தலையாட்டினாள் அவள்.

“ம், அத தான் நானும் நினைச்சேன். ஆனா அவங்க ஏதாவது சொன்னாங்ககிறதுக்காக ரேவதி அண்ணாவ விட்டுக்கொடுப்பானு நினைக்கல” என்றாள் கவலையோடு.

“ம். புரியுது சரயு. ஒருவேளை அவங்க எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிருக்கலாம். அதுனால கூட அந்த பொண்ணு விலக நினைச்சிருக்கலாம் இல்லயா!” என்றான் அவன்.

‘அதை பண்ணக்கூடிய ஆள் தான் அம்மா’ என நினைத்தாலும் அவனிடம் தன் தாயை விட்டுக் கொடுக்கவும் மனம் வரவில்லை. அவளின் அமைதியில் அவள் மனம் புரிய இதழ்களில் குறுநகை படர்ந்தது.

“இது ஃபோன்ல பேசி முடிக்கிற விசயம் இல்ல சரயு. நீ நேர்ல போகும்போது பேசு. கண்டிப்பா தீர்வு கிடைக்கும்” என்றான் சித்தார்த்.

“தேங்க்ஸ்” என மனம் நிறைய நன்றியுரைக்க சிறு தலையசைப்போடு அவன் அதனை ஏற்றுக்கொள்ள, தாங்கள் உள்ளே நிறைய நேரம் இருப்பது தேவையில்லாத பேச்சுக்களை உருவாக்கும் என நினைத்து, “சரி, நீ கிளம்பு. இத நான் பார்த்து எடுத்துட்டு வரேன்” என்றான் சித்தார்த்.

அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் அவள் நகர கதவு வரை சென்றவளின் கால்கள் சித்தார்த்தின் வார்த்தைகளில் சிக்குண்டன.

“நியாயமான உன் அண்ணனோட விருப்பத்தயே ஏற்றுக்கொள்ளாத உன் அம்மா உன்னோட வரம்பு மீறிய விருப்பத்த ஏத்துக்குவாங்கன்னு நினைக்கிறியா சரயு?” என்றிருந்தான்.

வானம் -27

“என் விருப்பம் வரம்பு மீறியதா சித்?” என்றவளின் குரல் உடைந்திருந்தது. சரயுவின் கேள்வியில் அவன் தான் தடுமாறிப் போனான்.

“இல்ல… அது” என தடுமாறியவன், “இந்த ஊர் உலகம் அப்படி தான் சொல்லும் சரயு. அதுதான உண்மையும் கூட” என்றவனின் விழிகள் அவளை நேராய் சந்திக்காமல் எங்கெங்கோ அலைபாய்ந்தது.

“நான் இந்த ஊர் உலகத்துக்காக வாழப் போறது இல்ல சித். எனக்கான என் வாழ்க்கைய நான் வாழ நினைக்கிறேன். யார் என்ன சொன்னாலும் சரி ஏத்துக்கலனாலும் சரி என் விருப்பம் மாறாது” என்றவளின் குரலில் நீயே ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் எனது விருப்பம் மாறாது என்பதாய் அழுத்தமாக உரைத்தாள் சரயு.

அவன் ஏதோ கூற வருவதற்குள் அங்கிருந்து வேகமாய் வெளியேறி இருந்தாள். சித்தார்த்திற்கு தான் தலை விண்ணென வலிக்கத் தொடங்கியது. அவனின் நிலைப்பாடே இன்னும் தெளிவாக இல்லையோ என்ற சந்தேகமும் உடன் எழுந்தது. தன் மனமும் சரயுவின் பின்னே செல்ல முயல்வதை எவ்வாறு தடுப்பது எனப் புரியாமல் தவித்தான். கண்களை இறுக மூடி ஓரிரு நிமிடங்களில் தன்னை சமன்படுத்திக் கொண்டு அரைமணிநேரம் கழித்தே கடைக்கு வந்து சேர்ந்தான்.

சரயுவை எவ்வாறு எதிர்கொள்வது எனப் புரியாமல் தலையில் கை வைத்த வண்ணம் அமர்ந்திருந்தவனை பாண்டியன் அழைக்க, “சொல்லு பாண்டியா” என்றான்.

“சரயுவுக்கு தலைவலினு லீவு சொல்லிட்டு போய்ருக்கு ண்ணா. உங்ககிட்ட சொல்லிட்டு போக பார்த்துச்சு. நீங்க இல்லனதும் என்கிட்ட சொல்லிட்டு போச்சுண்ணா” என்றவனுக்கு அவளின் மனநிலை உணர்ந்ததால் சரியென தலையசைத்தான் சித்தார்த்.

அதன்பின் சில தினங்களாக கடைக்கு வருவதைத் தவிர்த்திருந்தாள் சரயு. படிப்பைக் காரணம் காட்டியே அவள் தவிர்க்க சம்யுக்தாவும் அவளை மேலும் துருவ மனமின்றி விட்டிருக்க இதழிகா தான் சரயு புராணம் பாடியே தனது தந்தையையும் அவளைப் பார்க்க ஏங்க வைத்திருந்தாள்.

கடைக்குக் கிளம்பும் முன் அவனை நச்சரிக்கத் தொடங்கி இருந்தாள் இதழிகா. “அப்பா, நாம ஹாஸ்டல்ல போய் சரயுவ பார்த்துட்டு வரலாம் ப்பா. வாங்க” என அவனது கரத்தைப் பற்றி அவளது விடுதியை நோக்கி இழுக்க சித்தார்த்திற்கு தான் அவளை என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் தவிக்க, “சரயுவுக்கு தான் எக்ஸாம் இருக்குனு சொல்லுச்சுல்ல குட்டிமா. படிக்கிற புள்ளைய தொந்தரவு பண்ணக்கூடாதுனு எத்தன தடவ சொல்லி இருக்கேன். இன்னிக்கு சாயந்தரம் உன்னை பார்க்க வருவா டா கண்ணு” என்றார் கற்பகம்மாள்.

இதே வார்த்தைகளைத் தான் அவர் இரு தினங்களாக வார்த்தைகளை சற்று மாற்றிப் போட்டு கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அது இதழிகாவிடம் செல்லுபடியாகாமல் போயிற்று.

“போ பாட்டி, இதே தான் நீ ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்க. நான் இன்னிக்கு சரயுவ பார்த்தே ஆகணும்” என அடம்பிடிக்க, அவளின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவன், “இங்க பாருங்க இதழிமா… நீ சமத்துப் பொண்ணு தான! அதான் இன்னிக்கு ஈவ்னிங் சரயு வந்து பார்க்கிறதா சொல்லி இருக்குல்ல. கண்டிப்பா வருவாங்க. அப்படி வரலன்னா நானே உன்னை அவங்க ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போய் காட்றேன். ஓகே வா” என்றான் சித்தார்த்.

“பிராமிஸ்” என கரத்தை நீட்டியவளின் நெற்றியை முட்டியவன் “பிராமிஸ் இதழி மா” என வாக்கு கொடுத்த பின் தான் குழந்தை சமாதானமாக சரயுவிடம் இன்று பேசியே ஆக வேண்டும் என நினைத்தவாறே கடைக்குப் புறப்பட்டான்.

அவளின் கைப்பேசி இலக்கங்களை இத்தோடு பத்து முறையாவது அழுத்திவிட்டு பின் அதனை நீக்கவுமாக இருந்து பின் ஒரு வழியாக தொடுதிரையில் தெரிந்த பச்சை வண்ண குறியீட்டை அழுத்தி இருந்தான் சித்தார்த்.

விடுதி அறையில் தனது உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் சித்தார்த்தின் அழைப்பைக் கண்டு புருவ முடிகள் சுருங்க யோசனையோடே அழைப்பை ஏற்று காதில் ஒற்றினாள் சரயு.

அழைப்பு ஏற்கப்பட்டதை உணர்ந்தவனுக்கு மனம் படபடப்பாக அமைதி காக்க எதிர்முனையிலும் அதே அமைதி நீடித்தது. சில விநாடிகளில் தனது தொண்டையை சீர்ப்படுத்தி கொண்டே, “ஹலோ சரயு” என்றிருந்தான்.

அதற்கும் மறுமுனையில் பதிலளிக்காமல் போக, தான் அழைத்த காரணத்தை கூறிவிட வேண்டும் என்ற முனைப்பில் அவனே பேச்சைத் தொடர்ந்தான்.

“ரெண்டு நாளா உன்னை பார்க்காம இதழிமா ரொம்ப கஷ்டப்படறா. நமக்குள்ள நடக்கிற விஷயங்களாக அவ பாதிக்கப்படறத நான் விரும்பல” என்றவன், “இதுக்குத் தான் அப்பவே நான் தள்ளி வைக்க நினைச்சேன்” என முணுமுணுக்க அதுவும் அவளது காதில் விழுந்தது.

“நமக்குள்ள அப்படி என்ன நடக்குது சித் சார்?” என்றவளின் குரலில் ஒருவித ஏக்கம் படர்ந்திருந்திருந்தது.

ஹய்யோ என்றிருந்தது அவனுக்கு. “சரயு, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மா. இதுக்குமேல என் நிலைமைய உனக்கு எப்படி புரிய வைக்கிறதுனு தெரியல மா” என்றவனின் குரல் உடைந்திருந்தது.

அவனின் குரல் அவளை உலுக்க, “உண்மையாவே ரெண்டு நாளா எக்ஸாம், பிராஜெக்ட்ல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். அதுனால தான் கியூட்டிய பார்க்க வர முடியல சித். இன்னிக்கு அவள பார்க்கணும்னு தான் என் வேலைகள கொஞ்சம் சீக்கிரம் முடிக்கலாம்னு செஞ்சுட்டு இருந்தேன்” என்றவள் சற்று இடைவெளி விட்டு,

“எக்காரணத்தக் கொண்டும் நமக்கிடைல நடக்கிற விஷயங்களாக கியூட்டிய தவிக்க விட மாட்டேன் சித்” என்றவளின் குரலில் குற்றவுணர்வு படர்ந்திருந்தது.

“ம்” என்றவனுக்கு அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல், “வச்சற்ட்டுமா சரயு?” என்றிருந்தான். அதற்கு “ம்” என்று மட்டுமே பதில்வர சில விநாடிகள் கழித்தே அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

அலைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தவளை உலுக்கியது சம்யுத்தாவின் குரல். “எல்லாத்தையும் பேக் பண்ணிட்டியா டி? நான் ரெடி” என்றவாறே தனது கைப்பையோடு ட்ராலி ஒன்றையும் எடுத்து வைத்திருந்தாள்.

“ம், ஆல்மோஸ்ட் முடிய போகுது சம்யு. இத எடுத்து வச்சுட்டு கியூட்டிய போய் பார்த்துட்டு வந்தறேன். அண்ணா வேற சீக்கிரம் வர சொல்லி இருக்கிறான் கிளம்பலாம்” என்றவள் வேகவேகமாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சரயு.

சரயு, சம்யுக்தா இருவருமே பிரஷாந்த்தின் திருமணத்திற்கு செல்லத் தான் சரயுவின் சொந்த ஊர் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு இன்னும் ஒருவார காலமே இருக்க ரேவதியின் செயல்பாடுகள் வேறு சரயுவை பயமுறுத்தி இருக்க கடைசி இரு தினங்களுக்கு முன் செல்ல இருப்பதாக இருந்த பயணம் தற்போது மாற்றப்பட்டு உடனே செல்ல முடிவெடுத்திருந்தாள். சம்யுக்தாவும் உடன் வந்தால் நன்றாக இருக்கும் என சரயு நினைக்க அவளும் சம்மதம் தெரிவிக்க இருவரும் தற்போது கிளம்பி இருந்தனர்.

பத்து நிமிட இடைவெளியில் சித்தார்த்தின் இல்லத்தில் இருந்தாள் சரயு. அவளை அங்கும் இங்கும் நகரவிடாமல் அவளை இறுகப் பிடித்து வைத்திருந்தாள் இதழிகா.

“சாரி கியூட்டி. கொஞ்சம் வேலை டா, அதான் உன்னை பார்க்க வர முடியல” இத்தோடு பலமுறை மன்னிப்பு வேண்டியும் அவள் கோபத்தோடு இருந்தாலும் அவளை விட்டு நகராமல் இருக்க சரயுவின் இதழ்கள் மெல்லிய புன்னகையைத் தத்தெடுத்தது.

“என் கியூட்டியோட கோபம் போகணும்னா சரயு என்ன பண்ணனும்” என அவளிடம் சரணடைய அவளோ தனது பஞ்சு போன்ற கன்னத்தை காட்டினாள்.

இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி முத்தம் வைத்தாள் சரயு. “நல்ல தண்டனையா தான் தர்றா என் பேத்தி” என்ற கற்பகம்மாளும் சிரித்திருந்தார்.

“சாரி ஆன்ட்டி. அண்ணா கல்யாணத்துக்காக ஊருக்கு போறதால பிராஜெக்ட் வொர்க்க அவசரமா முடிக்க வேண்டியதாகிருச்சு. அதான் வர முடியல” என மன்னிப்பு வேண்டினாள் சரயு.

“நீ மொதல்லயே சொல்லி இருந்த தான மா. அதுனால என்ன. படிப்பு முக்கியம்ல. என்ன, இந்த சின்ன வாண்டு தான் ஒரே அடம்” என தன் பேத்தியை குறை கூற, அவளோ அவரை முறைத்துக்கொண்டே, “நீ ஊருக்குப் போறியா சரயு?” என்றவளின் முகம் சோகத்தைத் தத்தெடுத்திருந்தது.

“ஆமா டா கியூட்டி. ஊர்ல இருக்கிற தாத்தா, பாட்டிய பார்க்க போகணும்ல. அதுமட்டுமில்லாம பிரஷாந்த் மாமாவுக்கு கல்யாணம் டா கியூட்டி. அப்போ நான் அங்க இருக்கணும்ல! கல்யாணம் முடிஞ்சோனே வந்துருவேன். அதுவரைக்கும் நம்ம வீடியோ கால் பண்ணி தினமும் பேசிக்கலாம். ஓகே வா!” என்றாள் சரயு.

தன் குடும்பத்தாரை அவள் உறவுமுறை வைத்து கியூட்டிக்கு விளக்குவது கற்பகம்மாளின் மனதை நெருடத் தொடங்கியது. அதை அறிந்தும் அறியாதவளாய், “என் கியூட்டி சமத்து தான, ஒரே வாரத்துல வந்துருவேன் தங்கம்” என்றாள் இதழிகாவிடம்.

“நானும் உன்கூட வரேன் சரயு” என அடம்பிடிக்க, “கண்டிப்பா உன்னையும் ஒருநாள் கூட்டிட்டு போறேன் டா கியூட்டி. இப்ப மட்டும் நான் போய்ட்டு வரேன். என் செல்லம்ல, தினமும் விடீயோ கால் பண்றேன். ப்ராமிஸ்” என இதழிகாவை சமாதானப்படுத்திய அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் கற்பகம்மாளிற்கு பல குழப்பங்களை உருவாக்கியது.

இதழிகாவை சமாதானப்படுத்தியவள் கற்பகம்மாளிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். அவள் சென்ற பத்து நிமிட இடைவெளியில் சித்தார்த் வீட்டிற்கு வந்திருந்தான்.

“என்ன கண்ணா அதுக்குள்ள வந்துட்ட? எதுவும் மறந்து வச்சுட்டு போய்ட்டியா?” என்ற கற்பகம்மாளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினான் சித்தார்த். சரயு தன் வேலையை முடித்துவிட்டு இதழிகாவை பார்க்க போவதாக கூறி இருந்ததால் தான் அவளைக் காணும் ஆவலில் உடனே கிளம்ப எத்தனித்தவனை வேலை கட்டிப்போட சிறிது தாமதமாக வந்திருந்தான்.

“அதெல்லாம் எதுவும் இல்ல மா. சும்மா தான். இதழி மா வேற கிளம்பும்போது அடம் பிடிச்சாள்ள, அவ ஞாபகமா இருந்துச்சு. அதான் உடனே வந்தேன்” என்றவன், “எங்க மா இதழி?” என கேள்வியை முடிக்கும் முன்பே கையில் ஒரு புது டெடி ஒன்றுடன் அவன் முன் பிரசன்னமானாள் அவனின் செல்வபுதல்வி.

“புது டெடி யார் வாங்கி குடுத்தா இதழி மா” என்றவாறே அவளைத் தூக்கி இருந்தான் சித்தார்த். “சரயு கொடுத்தா ப்பா” என்ற இதழிகாவின் வார்த்தைகளின் பின்னே, “சரயு தான் வாங்கிட்டு வந்தா கண்ணா. உன் மகள பத்தி தான் தெரியுமே. சமாதானப்படுத்தணும்ல… பாவம் அந்த புள்ள” என்றார் கற்பகம்மாள்.

“ஓ… ” என்றவன், “எப்போ வந்தாங்க மா” என சற்று தயங்கியே வினவினான் சித்தார்த். “ஒரு அரை மணி நேரம் முன்னாடி தான் வந்தா கண்ணா. ஊருக்குப் போகுதாம். அவ அண்ணாக்கு கல்யாணம்னு சொன்னா… இவள சமாதானப்படுத்திட்டு சொல்லிட்டு போச்சு பா” என்க, அவன் முகம் ஏனோ வாடியது.

‘ஊருக்குப் போறத பத்தி ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?’ என அவன் மனம் கேள்வி எழுப்ப, அதே மனம் ‘அவ ஏன் உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு எதிர்பார்க்கிற’ என எதிர்கேள்வியும் எழுப்பியது.

‘அது, என்கிட்ட வேலை செய்ற பொண்ணு லீவுனா ரீசன் சொல்லணும்ல. அதான்’ என மனதிற்கு சப்பைக்கட்டு கட்டினான். ‘அதுதான் உண்மை காரணமா?’ என மீண்டும் கேள்வியெழ, மனதை தட்டி அமைதிப்படுத்தியவன் சில நொடிகள் மகளுடன் கழித்துவிட்டு,

“அம்மா ஒரு முக்கியமான வேலைய மறந்துட்டு வந்துட்டேன். போய்ட்டு வரேன் மா” என வேகமாக கிளம்பியவனை பார்த்தவருக்கு ஏதோ புரிபடுபது போல் தோன்றியது. அவன் வந்ததில் இருந்து அவனின் தடுமாற்றத்தை அவனின் முககுறிப்பை வைத்தே கவனித்துக் கொண்டுதான் இருந்தார் கற்பகம்மாள்.

தனது வண்டியை எடுத்தவன் பதினைந்து நிமிட இடைவெளியில் வந்து நின்ற இடம் காந்திபுரம் புது பேருந்து நிலையம் தான். சரயு எந்த பேருந்தில் எந்த நேரத்தில் ஏறுவாள் என்றுகூட தெரிந்திராத நிலையில் ஏன் அவள் ஒருவேளை ஏற்கெனவே சென்றிருந்தால்? எதுவும் அறியாமல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தான்.

தன்னையே தான் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லையோ என்றுகூட குழம்பிப் போனான். எதுவாகினும் அவளைக் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற மன ஆவலை தயங்காமல் நிறைவேற்ற வந்திருந்தான் அவன்.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அதன் மீது சாய்ந்து நின்றிருந்தவனின் கண்கள் சரயுவின் ஊருக்கு செல்லும் பேருந்துகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தது. பதின்பருவ பையனின் செயல்பாடுகளைப் போல் தனது செயல் இருப்பதாய் நினைத்தவனின் இதழ்கள் குறுநகையை படரவிட்டது.

வண்டியின் கண்ணாடியை பார்த்தவாறே தனது சிகையை கோதி விட்டவன் சற்று தள்ளி நின்றிருந்த பேருந்தில் கண்களை சுழல விட்டவனின் பார்வை ஓரிடத்தில் நிலைத்து நின்றது.

சம்யுக்தாவோடு சரயு ஏதோ வளவளத்துக் கொண்டிருக்க காற்றில் அடங்காமல் பாய்ந்தோடிய சிறு கற்றை முடியை அவளது விரல்கள் காதோரம் இழுத்து அடக்கிக் கொண்டிருந்தது.

நொடிநேரம் அவளை கண்களில் நிரப்பிக் கொண்டிருக்க ஏதோவொரு உந்துதலில் திரும்பிப் பார்த்தாள் சரயு. அவள் பார்ப்பதைக் கண்டு கொண்டவன் வேகமாக தனது பார்வையை மீட்டுக்கொண்டு திரும்பி நின்றவன் எதிரே இருந்தவரிடம் ஏதோ பேச்சுக் கொடுக்க சரயு அவனை குழப்பத்தோடு பார்ப்பது போல் தோன்றியது அவனுக்கு.

முகத்தை திருப்பாமல் அதே வேகத்தில் வண்டியை எடுத்தவன் அங்கிருந்து சில மீட்டர் தூரம் சென்ற பின்பே மூச்சை இழுத்து விட்டான் சித்தார்த்.

அவள் பார்த்து விட்டாளோ என மனம் படபடத்தது. அவனின் மனநிலையை அவனாலே உணர முடியாத சூழல். கண்டிப்பாக இதற்கு காதல் என பெயர் சூட்ட இயலாது. ஆனால் ஏதோ ஒரு சலனம் அவன் மனதில் உண்டாகி இருந்தது. அவளைக் காணாத இந்த தினங்களில் அதனை அவன் உணர்ந்திருந்தான். இன்னும் சில தினங்களுக்கு அவளை காணாத முடியாத சூழ்நிலை ஏற்படவே தான் இன்றே அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பேருந்து நிலையம் வந்திருந்தான். இது எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை என்றாலும் அந்த நொடிநேரம் அவனது மனம் வெகுவாய் ரசித்தது.

அவளின் நினைவிலே சாலையோரம் நின்றிருந்தவனை கடந்து சென்றது சரயு செல்லும் பேருந்து.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!