Loading

இளமாறன் அறைந்த கன்னத்தில் அவனின் ஐந்து விரல்களும் பதிந்திருக்க திகைத்திருந்த பாவையின் விழியில் இருந்து நீர் வழிந்தது.

மாறனோ, கடும் கோபத்தில் இருக்க, “என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? என்ன பார்த்தா கேனப்பய மாதிரி இருக்கா…? இல்ல நீ என்ன பண்ணாலும் கொஞ்சிகிட்டே இருப்பேன்னு நினைச்சியா?” என வார்த்தைகளால் அவளை சாட, பெண்ணவளோ அவனின் கத்தலில் தேம்ப தொடங்கினாள்.

அவளின் விசும்பலில் தான் முயன்று ஆத்திரத்தை அடக்கியவன், “எங்க வேணா தொலைஞ்சு போ…! ஆனால் சுத்தி யார் இருக்காங்கன்னு கவனமா பார்த்து இருக்கணும். எதையோ நினைச்சுக்கிட்டு நடந்தா இப்படி தான் ஆகும்…” என்று சுள்ளென அவளின் காயத்தை காட்டி கொந்தளித்தவனை கண்டு நன்றாக அழுது விட்டவளை என்ன தான் செய்வது என தெரியாது தலை முடியை அழுந்த கோதினான் இளமாறன்.

அவளிடம் திருமண தேதி குறித்ததை பற்றி கூறவே சிறிது நேரம் முன்பு, சித்ராவின் வீட்டிற்கு வர, அவளின் பெற்றோர் அவனின் அனுமதியுடன் தான் பெங்களூர் செல்லவிருக்கிறாள் என கூறியதில் திகைத்தான்.

அதனை முகத்தில் காட்டாது, “ஆமா நான் தான் போக சொன்னேன்…” என்று சமாளித்து விட்டு, “இப்போ எங்க அவள்?” என்று அவர்களிடம் வினவினான் கோபத்தை அடக்கி கொண்டு.

“அவள் இப்போ தான் மாப்பிள்ளை கிளம்பினா” என செந்தில் கூறியதில், ‘என்கிட்ட சொல்லிட்டு கூட போகணும்னு உனக்கு தோணலைல?’ என உள்ளுக்குள் எழுந்த வலி  இதயத்தை கீற அவளை காண இரயில் நிலையம் சென்றான்.

அருகில் தான் இரயில் நிலையம் இருந்ததில் நடை பயணமாக சென்ற சித்ராக்ஷி ஒரு தெருவில் திரும்பும் போது ஒருவன் முன்னிருந்து வந்து கட்டையால் அவள் தலையில் அடிக்க, அதோடு அவள் மயங்கி விட்டாள். அவனோ அவளை இழுத்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டிருக்கும் போதே, இதனை தூரத்தில் பார்த்து கொண்டே வந்த இளமாறன் அடி வெளுத்து விட்டான்.

“யார் மேல கை வைக்கிற?” என அவனை துவம்சம் செய்ய, அவனோ நழுவி அவனிடம் இருந்து தப்பித்து அதே ஆட்டோவில் ஏறி சென்று விட்டான்.

ஆனால் அந்த ஆட்டோ எண்ணை குறித்து கொண்டவன், ரத்தம் வழிய மயங்கி இருந்த சித்ராக்ஷியை வேகமாக கையில் அள்ளி கொண்டு அருகிலேயே இருந்த க்ளினிக்கிற்கு கொண்டு சென்றான். ஆழமான காயம் இல்லாததால் கட்டு மட்டும் போட்டு விட,  அதிர்ச்சியில் அவள் மயங்கிய நிலையிலேயே இருந்தாள்.

பின், அதே நிலையோடு அவளை வீட்டிற்கும் தூக்கி வர, அவளை கண்ட பெற்றவர்கள் தான் பதறி விட்டனர். இளமாறன் தான், “இல்ல தெரியாம ஒரு கார்காரன் இடிச்சுட்டு போய்ட்டான். பயப்பட எதுவும் இல்ல” என பொய்யுரைத்து விட்டு, படபடத்தவர்களை “கோவிலுக்கு போயிட்டு வாங்க, கொஞ்சம் மனசு அமைதியா இருக்கும். நான் அவளை பாத்துக்குறேன்” என அழுத்தமாக அவர்களை அனுப்பி விட்டவனுக்கு, சிறிது சிறிதாய்
சினம் தலைக்கு ஏறியது.

சித்ராக்ஷிக்கோ இப்போது தான் யாரோ தன்னை அடித்தது போல் நினைவு வர, அவனை பாவமாக பார்த்தாள். “சொல்லுடி… எதுக்கு இப்படி பண்ணுன…? ஊரை விட்டு போய்ட்டா நான் உன்னை விட்டுடுவேன்னு நினைப்போ? இல்ல மறந்துடுவேனா…? உன் காதல் உனக்கு பெருசுன்னா என் காதல் எனக்கு பெருசு…” என்று பல்லைக்கடித்து வார்த்தைகளை துப்ப, விலுக்கென நிமிர்ந்தாள்.

அவனோ “இப்போ எதுக்கு நீ இப்படி கிளம்புனன்னு எனக்கு தெரிஞ்சாகணும்…! மறுபடியும் செல்வி அம்மா ஏதாவது சொன்னாங்களா? ஆனா அதுக்கு கண்டிப்பா வாய்ப்பு இல்லை…!” என உறுதியாக கூறியவனை கண்ணீரோடு அவள் புரியாமல் பார்த்தாள்.

“இப்படி என்னை பார்த்து எதுவும் ஆக போறது இல்ல சித்ரா. பதில் சொல்ல முடியுமா முடியாதா… இல்ல மறுபடியும் அறைஞ்சுருவேன்…” என சீறிப்பாய அவன் அடிக்க வந்ததிலேயே அவள் “சொல்றேன்…” என்றாள் வேகமாக.

அதில் அவனுக்கு தான் அவளை கண்டு பாவமாகி விட, இருந்தும் “ம்ம்…” என்றான் உறுமலுடன்.

சித்ராக்ஷி தான், எங்கோ வெறித்து கொண்டு, எ”ங்க ரெண்டு வீட்டுலையும் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. ஆனால் செல்வி அக்கா இருக்கும் போது இந்த கல்யாணத்தை பத்தி பேச எனக்கு பிடிக்கல. அதை நான் ரோஹித்கிட்டயும் சொன்னேன். அப்பறம் கொஞ்ச நாள்ல, அவன் சொந்தத்துலயே அவனோட அண்ணன் முறையில ஒரு மாப்பிள்ளை இருக்குறதா சொன்னான். அவன் பேர் வசந்த்.

உடனே வீட்லயும் எல்லாரும் அவனை பத்தி விசாரிச்சதுல, அவங்களுக்கும் திருப்தி தான். எங்க ரெண்டு நிச்சயமும் ஒண்ணா நடக்க இருக்கும் போது தான், செல்வி அக்கா ஜாதகத்துல ஏதோ தோஷம் இருக்குன்னு பரிகாரம் பண்ண எல்லாரும் கோவிலுக்கு போயிருந்தோம். செல்வி அக்காக்கு திடீர்னு உடம்பு சரி இல்லாம போனதும், அவள மட்டும் வீட்டுக்கு அனுப்பிட்டோம்” என்றவளுக்கு கண் சிவந்தது கோபத்தில்.

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்த செல்விக்கு, தலைவலியோடு, வயிற்று வலியும் பிய்த்து தள்ள, அந்நேரம் காலிங் பெல் அடித்ததில், வெளியில் சென்று பார்த்தாள். அங்கோ வசந்த் நின்றதில் சற்று திகைத்து விட்டு, “வா… வாங்க…” என்றவளுக்கு பாவம் பேச கூட முடியாத நிலை.

பின், “எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க. எனக்கு உடம்பு சரி இல்ல அதான் வந்துட்டேன்” என்றதில், “அப்படியா?” என கேட்டு கொண்டவன், அவள் உடல் நிலையில் அக்கறை கொள்ளாது, அவளிடம் பேச நினைத்தும் பேச முடியாமல் சென்றதையும் இப்போது தான் தனக்கு ஃபிரீ டைம் கிடைத்ததில் அவளை பற்றி அறிந்து கொள்ள தான் வந்திருப்பதாகவும் கூற, அவளுக்கோ ஐயோ என்றிருந்தது.

“கல்யாணத்துக்கு அப்பறமா பேசிட்டு தான இருக்க போறோம். இப்போ பேச என்ன இருக்கு?” என அவளின் பல்லவியை அவனிடம் பாடியவளை கண்டுகொள்ளாது பேசியபடியே இருக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கு தான் தலையை சுற்றியது.

அதில், இங்கு நின்றால் சரியாக வராது என அவளின் உள்மனம் உணர்த்த, “எனக்கு ரொம்ப தூக்கம் வருது. நீங்க கிளம்புங்களேன். வீட்ல எல்லாரும் இருக்கும் போது வாங்க…” என்றவள் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொள்ள, வசந்த் முகம் தான் கறுத்தது.

அவனின் வீட்டிற்கு சென்று, “அவள் நல்ல பெண்ணே இல்லை. நான் வீட்டுக்கு போறேன். அவள் வேகமா உள்ள வர சொல்லி பேசிக்கிட்டே இருந்தா. இப்படி தான் யார் வந்தாலும் உள்ள கூப்பிட்டு வைச்சுப்பாளா…? வீட்ல யாரும் இல்லைன்னு சொல்லிருந்தா நான் அப்படியே கிளம்பி இருப்பேன்ல…” என்று கோள் மூட்டி விட, சிறிதாய் தொடங்கிய பிரச்சனை, ரோஹித் வீட்டிற்கும் பரவி ஒரு பெரும் புயலுக்கு காத்திருந்தது.

இது எதுவும் அறியாத பெண் வீட்டார் கோவிலில் இருந்து திரும்பி வர, அப்போது தான் உறங்கி எழுந்த செல்விக்கு சற்று தெளிச்சியாக இருந்தது.

சித்ராக்ஷி “இப்போ எப்படிக்கா இருக்கு? தூங்கி எழுந்தியா? நானும் உன் கூட வந்துருப்பேன். நீ தான் பாதியில வரக்கூடாதுன்னு சொல்லி இருக்க வைச்சுட்ட” என திட்டிக்கொண்டவளுக்கு சோம்பலாய் ஒரு புன்னகையை கொடுத்தவள், ஏதே நினைவு வந்தவளாக, பேசும் முன் வெளியில் காரசாரமாக விவாதம் ஓடிட இரு பெண்களும் வெளியில் வந்து பார்த்தனர்.

நீலா தான் செல்வியிடம், “ஏண்டி மாப்பிள்ளை வந்தாரா என்ன?” என்று வினவ, அவளும் “ஆமா மா… அதான் சொல்லலாம்னு நினைச்சேன். அவரு வந்தாரு” என கூறும் முன், “என்னத்தடி பேசி தொலைச்ச மாப்பிள்ளை ரொம்ப கோபமா இருக்காரு போல. சம்பந்தி வீட்டுல என்ன பொண்ணு வளர்த்து வைச்சுருக்கன்னு கேட்க்குறாங்க” என்று சற்றே காய்ந்தார்.

அவளோ புரியாது, “நான் எதுவுமே பேசலைம்மா…” என நடந்ததை விளக்கிட, சித்ராக்ஷிக்கு ஏதோ தவறாக பட்டதில், “பெரியம்மா, அக்கா தான் இவ்ளோ சொல்றாள்ல. ஒருவேளை அவங்க ஏதாவது தப்பா நினைச்சுருப்பாங்க. நான் ரோஹித் அப்பா கிட்ட பேசுறேன். அவரு சொன்னா அவங்க கேட்பாங்க” என்றிட, தன் பெண்ணின் திருமணம் நின்று விடுமோ? என கவலை கொண்ட அவரோ அப்போதைக்கு அவளின் பேச்சை கேட்டார்.

செல்வி தான், கண்ணில் நிறைந்த நீருடன், “நான் எதுவுமே பேசல சித்ரா” என்று உதட்டை பிதுக்க, “அக்கா… இதுக்குலாமா அழுவாங்க நான் பாத்துக்குறேன்…” என்று ரோஹித்திற்கு போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை என்றதும், வீட்டிலேயே சென்று பார்க்கலாம் என்று போனவள், அங்கு பார்த்தது அவனின் அப்பா ஜெயசீலனை தான்.

“அங்கிள் ரோஹித் இல்ல?” என அவள் வினவிட, “அட, சித்ராவா? உள்ள தான் மா அவன் இங்க தான் இருக்கான். ஏன் வாசலிலேயே நிக்கிற உள்ள வா…!” என பாசத்துடன் அழைக்க சிறு புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள். 

அதற்குள் ரோஹித்தும் வெளியே வந்து விட, “உனக்கு போன் பண்ணேன் ஏன் எடுக்கல” என முணுமுணுப்பாக கேட்டிட, அவன் பதில் கூறும் முன் ஜெயசீலனே குரலை கனைத்தார்.

“சித்ரா… எனக்கு நீ மருமகளா வர்றதுல ரொம்ப சந்தோசம் மா. அதுவும் என் பையனுக்கு பிடிச்சுருக்குன்ற ஒரு காரணத்துனால தான் நான் வேற சாதியா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒத்துக்கிட்டேன். இதுக்கு என் சொந்த பந்தமே ரொம்ப எதிர்ப்பு காட்டுனாங்க…” என்றதில் முணுக்கென ஒரு கோபம் தோன்ற, மேலும் அவர் பேசுவதை கவனித்தாள்.

“உன் அக்காவுக்கு கல்யாணம் ஆனா தான் நீ கல்யாணம் பண்ணிப்பன்னு என் பையன் ரொம்ப பீல் பண்ணுனான். அதான் நானே, ரொம்ப கஷ்டப்பட்டு என் ஒன்னு விட்ட அண்ணன் பையன் வீட்ல பேசி ஒத்துக்க வைச்சேன். பொண்ணு படிக்கவும் இல்லன்னு பீல் பண்ணப்பவும் உன் அக்கா நல்ல பொண்ணா இருப்பான்னு தான் நான் சம்மதிச்சேன். ஆனா… உன்ன மாதிரி இல்லமா..” என்று பேசும் முன் கோபத்துடன் அவரை தடுத்தவள் “இப்போ என்ன சொல்ல வர்றீங்க?” என்றாள் சீறலாக.

“உனக்கும் ரோஹித்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு முழு சம்மதம். ஆனால் செல்வியை கல்யாணம் பண்ண வசந்த் வீட்ல யோசிக்கிறாங்க. அதுனால, முதல்ல உன் கல்யாணம் நடக்கட்டும்” என்றிட, “இப்போ இங்க என்ன பிரச்சனை நடக்குதுன்னு எனக்கு சத்தியமா புரியல அங்கிள். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். அவள் என்னை விட ரொம்ப நல்லவ. அவளுக்கு கோபப்பட தெரியாது. யாரையும் கஷ்டப்படுத்த தெரியாது. அப்படி இருக்குறவளை பத்தி நீங்க இப்படி சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது. வீட்ல யாரும் இல்லாதப்போ அவரு ஏன் அங்க வரணும்? நீங்க சொல்ற பழியை நானும் வசந்த் மேல போடலாம் அங்கிள்” என்றவளுக்கு எழுந்த சினத்தை கட்டுப்படுத்த தான் வழி தெரியவில்லை.

ரோஹித், “சித்ரா என்ன பேசுற…? இப்ப என்ன முதல்ல நம்ம கல்யாணம் முடியட்டும் தான சொல்றாங்க. அவங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்…” என்றதில், அவனை விழி இடுங்க பார்த்தவள் “இல்ல தெரியாம தான் கேக்குறேன். அதென்ன ஆனா ஊன்னா ரொம்ப கஷ்டப்பட்டு சம்மதிக்க வைச்சேன். ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்ன்னு பிலிம் காட்டுறீங்க…? உனக்கு எந்த விதத்துலயும் நான் குறைஞ்சு போய்டல ரோஹித். என் அக்காவும் தான். அவளை கட்டிக்க அவனுக்கு தான் தகுதி இல்ல…” என்றவளுக்கு எதையாவது பேசி விட போகிறோம் என பயம் எழுந்தது.

“அங்கிள் சாரி. நான் இப்போதைக்கு எதை பத்தியும் பேசுற மன நிலையில இல்ல. நான் அப்பறம் வரேன்” என்றவள் விருட்டென அங்கிருந்து வெளியேறிட, ரோஹித், ‘இவளுக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு…’ என மனதினுள் திட்டிக்கொண்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

இருவரும் சென்றதும், இதுவரை அடக்கி இருந்த ஏளன புன்னகையை வீசிய ஜெயசீலன், யாருக்கோ போன் செய்தார்.

“வசந்த்… நான் சொன்ன மாதிரி நல்லாவே பண்ணிட்ட. அநேகமா இந்த சித்ரா பொண்ணு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காதுன்னு தான் நினைக்கிறேன்…” என்றார் நெற்றியை தேய்த்து கொண்டு.

வசந்தோ, “இதுக்கு தான பெரியப்பா இவ்ளோ நாடகமே. என்ன அவள் மட்டும் ரூமில போய் கதவை சாத்திக்கிட்டா, இல்லைன்னா இன்னும் பெருசா ஏதாவது பண்ணிருக்கலாம்…” என்றான் விஷமமாக.

“அட விடு வசந்த். இதுக்கே நல்லா ரெண்டு குடும்பமும் அடிச்சுப்பாங்க. இந்த ரோஹித் தான் சித்ராவை கட்டிப்பேன் அது இதுன்னு ஒத்த கால்ல நின்னுட்டான். சரி அதோட விடுவான்னு பார்த்தா அவள் அக்காவுக்கும் கல்யாணம் ஆகணுமாம். நம்ம சாதி என்ன அவங்க சாதி என்ன? இவனுக்கு தான் கொஞ்சம் கூட அறிவே இல்லாம போச்சு. அதுனால தான் ஒத்துக்குற மாதிரி ஒதுக்கிட்டு, உன்னையும் உள்ள இழுத்து விட்டேன்” என்றார் பெருமையாக.

வசந்த்,  “பெரியப்பா… அந்த அக்காகாரி, என்னமோ புடவையை சுத்திகிட்டு ரொம்ப போர். ஆனா ரோஹித் சித்ராவை லவ் பண்றதுல ஒரு நியாயம் இருக்கு” என்றவனின் குரலில் லேசான ஆசை ஒன்று எட்டிப்பார்க்க, “டேய், இப்ப தான உன் தம்பிக்கு அவள் மேல கோபம் வர்ற மாதிரி எல்லாம் செட் பண்ணேன். இப்போ நீ ஆரம்பிக்கிறயா?” என்றார் சிடுசிடுப்பாக.

“இல்ல பெரியப்பா, அவளுக்கு ஏதோ பெரிய உலக அழகின்னு நினைப்பு. சும்மா ரெண்டு வார்த்தை பேச போனதுக்கு கூட, பேசாம போய்ட்டா” என்றவன் பெண் பார்க்கும் படலத்தில் அவனின் பார்வை சித்ராவை மொய்த்ததில் தான் அவள் அவனிடம் பேசாமல் தவிர்த்தாள் என்று அறிந்தே இருந்தான். ஆனாலும் சித்ரா அப்போது அதனை பெரியதாக எடுக்கவில்லை.

மேலும், அவன் “அதான் அவளை கல்யாணம் பண்ணி அவளோட தகுதி என்னன்னு காட்டணும்…” என்றவனுக்கு அவள் மேல் இருக்கும் ஆசை அப்பட்டமாக தெரிந்தது.

ஜெயசீலன் தான், “நீ லூசுத்தனமா எதையாவது பேசாத வசந்த். அப்படி பார்த்தாலும் அவள் நம்ம வீட்டுக்கு தான வருவா. அதுவும் ரோஹித் எப்படி எடுத்துப்பான்… அதோட இப்போ செல்வி கல்யாணம் மட்டும் தான் நின்னுருக்கு. சித்ராவை எப்படியும் ரோஹித் விட மாட்டான்” என்று  கடுப்பானார்.

“பெரியப்பா, எப்படியாவது இதை பெரிய பிரச்சனை ஆக்கி, ரோஹித்க்கு வேற கல்யாணம் பண்ணி வைங்க. அதுக்கு அப்பறம் நான் எப்படியாவது சித்ராவை கல்யாணம் பண்ணிக்கிறேன். கவலைப்படாதீங்க ரொம்ப வருஷம்லாம் வாழ மாட்டேன். சீக்கிரம் டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிறேன் நம்ம சாதியில் இருக்குற பொண்ணை பார்த்து. அது நம்ம குடும்பத்துக்கு புதுசா என்ன?” என்றான் சற்றே கிண்டலாக.

அதில் அவர் தான் “ப்ச், இப்ப எதுக்கு அதை நியாபப்படுத்துற” என முகம் சுளித்து விட்டு, “என்னமோ பண்ணு” என போனை வைத்து விட்டு திரும்ப அங்கோ சித்ரா காளி அவதாரம் எடுத்திருந்தாள்.

வெளியில் சென்றவள் மீண்டும் ஒரு முறை ஜெயசீலனிடம் பேசி பார்க்கலாம் என்றே உள்ளே வந்து, இருவர் பேசுவதையும் கேட்டு கொதி நிலைக்கு சென்று விட்டாள். இதில் வசந்த் பேசியதும் வெளியில் நன்றாக கேட்டது.

அவளை கண்டு அதிர்ந்தவரை வெறியாய் முறைத்தவள், “பெரிய மனுஷனாயா நீ எல்லாம்? வெட்கமா இல்ல. நான் என்ன உன் பையனை கல்யாணம் பண்ணியே ஆவேன்னு ஒத்த கால்ல நின்னேனா? உனக்கு ஜாதி தான் முக்கியம்ன்னா, அப்போ அதுக்கு ஏத்த மாதிரி உன் பையனை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கணும். அதை விட்டுட்டு, ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை கெடுக்கறுறீங்க. அதுவும் அந்த சார், ஆசைக்கு வேற ஜாதி பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு, ஆஸ்திக்கு அவரு ஜாதி பொண்ணை கல்யாணம் பண்ணிப்பாரோ…

யோவ்… இதுக்கு முடிவா கல்யாணமே வேணாம்ன்னு போயிருக்க வேண்டியதுதான. எதுக்கு இந்த நல்லவன் வேஷம். நீ எல்லாம்…” என்று திட்டுவதற்கு கூட கூசி போக, தன்னுடன் சேர்த்து தன் தமக்கையையும் அல்லவா பாழும் கிணற்றில் தள்ள இருந்தோம் என்பதை உணர்ந்து, “உன் முன்னாடி நிக்க கூட எனக்கு பிடிக்கல. நீயும் உன் ஜாதி வெறியும்” என்று வார்த்தைகளை துப்பிட, இந்த சத்தத்தில் தான், உள்ளிருந்து ரோஹித் வந்தான்.

வந்தவன், “நிறுத்துடி. யாரை கேட்டு என் அப்பாவையே எதிர்த்து பேசுற? அதுவும் மரியாதை இல்லாம…?” என்று வெகுண்டெழுந்தவனிடம் அவளும் கோபமாக, “இவனுக்குலாம் என்னடா மரியாதை? வயசு மட்டும் தான் ஆகியிருக்கு. அறிவு கொஞ்சம் கூட இல்ல” என்று வாய்க்கு வந்த படி திட்டியதில், “போதும் டி… உன்னை போய் நான் நல்ல பொண்ணுன்னு நினைச்சேன் பாரேன். என்ன சொல்லணும். என் அப்பா அப்போவே சொன்னாரு உன் ஜாதிக்காரங்க எல்லாம் பசுந்தோல் பார்த்துன புலின்னு. சுத்த பஜாரித்தனம் பண்ணுவாங்கன்னு…. அது சரியா தான் போச்சு. உன்னை லவ் பண்ணதுக்கு எனக்கு இது தேவை தான். என் அப்பாவை நானே அசிங்கப்படுத்திட்டேன்…” என்றான் கடும்கோபத்தில்.

அவன் பேச்சில் அவளுக்கு தான் தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. இப்படி பட்ட வஞ்சத்தை கொண்டவர்களுடனா நாம் நட்பு பாராட்டினோம்? எந்த ஜாதியாக இருந்தாலும் அதே ரெண்டு கண்ணு, ரெண்டு காது, சிவப்பு கலர் ரத்தம் தான இருக்க போகுது என தன்னை நொந்திட, ஜெயசீலன் தான் “அட விடுப்பா… சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிருச்சு. அதுக்காக உன் காதலை எல்லாம் தூக்கி போட கூடாது” என தூண்டி விட, சித்ராக்ஷி “அடப்பாவி” என அவரை பார்த்தாள்.

“ப்பா… சாரி ப்பா என்னால தான் உங்களுக்கு இந்த அவமானம். தராதரம் தெரியாதவங்க கூட எல்லாம் பிரெண்ட்ஷிப் வைச்சுக்கிட்டு, அவளையே லவ் பண்ணுன என்னை சொல்லணும்…” என்று அவரை கட்டிப்பிடித்து கொள்ள, “அப்படி எல்லாம் சொல்லாதப்பா…! ஏதோ தெரியாம பேசிட்டா… உன்ன தான் முழுசா நம்பி காதலிச்சுருக்கா. நீயே இப்படி பேசலாமா” என நீலிக்கண்ணீர் வடிக்க, அதில் சித்ராக்ஷியின் முகம் பார்த்தவன், அவள் அதிர்ந்திருப்பதை கண்டு சிறிது யோசித்தான்.

பின், “சரி சித்ரா இது எல்லாத்தையும் நான் மறந்துடுறேன். என்னை நானே கஷ்டப்பட்டு சம்மதிக்க வைச்சு லவ் பண்ண பாவத்துக்கு உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அந்த செல்வியோட நிழல் கூட உன்  மேல படக்கூடாது. அவளுக்கு வசந்த இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. அவளை விட்டுட்டு நீ என்கூட இருப்பன்னா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றிட, முதலில் அவன் பேசியதில் வெகுவாக வலித்தாலும் இக்கூற்று அவளை சுயத்திற்கு கொண்டு வந்தது.

மெல்ல அவனருகில் சென்றவள், “அவ்ளோ கஷ்டப்பட்டு ஒன்னும் நீ என்னை கல்யாணம் பண்ண வேண்டாம்…! என் அக்காவுக்கு உன் நொண்ணனை விட நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிவைப்பேன்.  நானும் சந்தோசமா இருப்பேன். கேவலம் ஜாதி வெறி புடிச்ச என் காதலுக்காக, என் அக்காவை விடணும்னா அப்படி பட்ட காதல் எனக்கு தேவையே இல்ல…” என்றவள் புயல் வேகத்தில் அங்கிருந்து சென்றிருந்தாள்.

அதன்பிறகு, அவள் திருமணத்தை நிறுத்த சொன்னதில், நீலா கொதித்து விட்டார். செல்வியோ “நீ எடுக்குற முடிவு சரியாதான் இருக்கும் சித்ராம்மா…” என்று விட, அவளுக்கும் எதிரிலிருந்தோ தப்பித்த உணர்வு தான் என்றாலும், காயம் நெஞ்சில் தங்கி தான் இருந்தது.

சித்ராவின் பெற்றோர் நடந்ததை புரிந்து கொண்டாலும், நீலாவும் ராஜேந்திரனும் அவளை வசை பாடி விட்டனர். அவர்கள் பேச்சில் பொறுக்க இயலாதவள், அதன் பிறகு செல்வியிடம் உன் வீட்டுக்கே வர மாட்டேன் என்று முற்றிலும் அங்கு செல்வதை தவிர்த்தாள். என கூறி முடிக்க, இளமாறன் அவளையே பார்த்திருந்தான்.

“ஓ… அப்போ அன்னைக்கு முகுந்த் வீட்டுக்கு வந்தப்போ உள்ள விடாம இருந்துட்டு, இதுனால கல்யாணத்தை நிறுத்திய மாட்டீங்கள்ளன்னு கேட்டாலே, அது இதுனால தானா?” என வினவிட, அவளும் “ம்ம்” என்றாள் தலையை ஆட்டி. 

“அவளுக்கு அந்த பிரச்சனை தான் பெருசாகி, நான் ஏதோ பேசிட்டு வந்ததுல அவங்க கல்யாணத்தை நிறுத்திட்டாங்கன்னு நினைச்சுட்டு இருக்கா. இன்னும் முழு விவரம் அவளுக்கும் தெரியாது” என்றாள் குனிந்தபடி.

இளமாறன் தான் பெருமூச்சு விட்டு, அவளருகில் அமர்ந்து, “அவங்க அவங்க சுயநலத்துக்கு என்ன வேணா பண்றாங்கள்ல?” என்று எரிச்சலாய் கூறினான், ஜெயசீலன் மற்றும் வசந்தை எண்ணி.

“ஆமா இளா. அவங்க கல்யாணம் வேணாம்னு சொல்லிருந்தா இவ்ளோ பிரச்சனைக்கே வழி இல்ல. அவங்க மரியாதையும் காப்பாத்தப்பட்டிருக்கும். நிச்சயம் வரைக்கும் போயிருக்காது. தான் சமத்துவமா இருக்கேன்னு வெளிய காட்டிக்கிறதுக்காக எல்லாரும் ஏதுவா பேசிட்டு, நமக்கு தெரியாமையே குள்ளநரித்தனம் பண்றாங்க. இது தேவையே இல்லையே” என்றவளுக்கும் மனம் பற்றி எரிந்தது.

பின் எதேச்சையாக நிமிர்ந்தவள், அங்கு அவளின் மொத்த குடும்பமும் நிற்பதை கண்டு, திகைத்தாள். அதிலும் நீலா தன் மகளுக்காகவா இவள் காதலை தூக்கி போட்டு வந்தாள்? என்றே அதிர்ந்து நிற்க, செல்வி ஓடி வந்து அவளை அணைத்து கொண்டாள் கண்ணீருடன்.

“இவங்கல்லாம் எப்போ வந்தாங்க” என விழித்து அவள் இளமாறனை காண, அவனோ ஒரு புருவத்தை உயர்த்தி அசட்டையாக தோளை குலுக்கி விட்டு வெளியில் சென்று விட்டான் முகத்தில் மட்டும் கடுகடுப்பு குறையவில்லை.

அவளுக்கோ இப்போதும் அவனின் அமைதி தான் உள்ளுக்குள் பெரும் பிரளயத்தை உண்டு பண்ணியதில் அவன் சென்ற திசையையே பாவமாக வெறித்தாள்.

கிட்கேட் உருகும்!❤️
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
30
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்