Loading

இளமாறனின் நெஞ்சிலேயே தன் காயங்களை ஆற்றிக்கொண்டிருந்த சித்ராக்ஷி, அவனின் அணைப்பில் உருகி இருக்க, அவளின் தலையை தடவிக்கொடுத்துக் கொண்டிருந்த இளமாறன் தான், “சித்ரா…” என கிசுகிசுப்பாய் அழைத்து, “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா! அதுக்கு அப்பறம் இவ்ளோ பிரச்சனையே இல்லையே!” என்றான் ஆர்வமாக.

அவளோ சட்டென அவனிடம் இருந்து, தள்ளி அமர்ந்து, “அது… அது… அக்கா கல்யாணம் முடியட்டும்” என்றாள் தட்டு தடுமாறி.

சித்ராக்ஷியை கூர்மையாக  பார்த்த இளமாறன், “இப்போ உனக்கு என்ன தான்டி பிரச்சனை?” என லேசாய் எழுந்த எரிச்சலுடன் கேட்டிட, “எனக்கு என்ன பிரச்சனை…? நான் தான் ஏற்கனவே சொன்னேனே அக்கா கல்யாணம் முடியவும்…” என்று மீண்டும் அதே பல்லவியை பாடியதில், ஒரு நொடி அழுத்தமாக பார்வையை பதித்தான்.

அவளோ அவனை காண இயலாமல் தவித்து விழி தாழ்த்த, “சரி, நேத்து ஏதோ ஜாதி பிரச்சனைன்னு சொன்ன? அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு?” எனக் கேட்டான் இறுகிய குரலில்.

“நீங்க தான இப்போ என்கிட்டே எதுவும் கேட்க மாட்டேன்னு சொன்னீங்க?” என்று மெல்லிய குரலில் அவனை குற்றம் சொல்வது போல் கேட்டிட, இளமாறன் தான் முறைப்புடன், “செல்வி கல்யாணம் ஏன் நின்னுச்சுன்னும், இப்போ ரோஹித் வந்து என்ன பேசுனான்னும் தான் நான் கேட்க மாட்டேன்னு சொன்னேன். உன் பிளாஷ் பேக் அ இல்ல. உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை ஆச்சு?” என்று கேள்வி எழுப்ப,

அவள், “ப்ளீஸ் இளா… அக்கா கல்யாணம் முடியவும் நான் சொல்றேன்…” என்றாள் மீண்டும் கண்ணில் துளிர்த்த நீர்த்துளியுடன்.

அதில் கடுப்பானவன், “என்னமோ பண்ணு போ! ஆனா நீ என்ன சொன்னாலும் உன்னை விட்டு போவேன்னு மட்டும் கனவுல கூட நினைக்காத. அப்படி ஒருவேளை நீ என்னை விட்டு போகனும்னு நினைச்ச…” என்று பல்லைக்கடித்துக்கொண்டு மிரட்டியவன், “இப்படி கொஞ்சி கெஞ்சிக்கிட்டு எல்லாம் இருக்க மாட்டேன். தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன்…!” என கடிந்து விட்டு, வெளியில் சென்று விட்டான்.

சித்ராக்ஷிக்கு தான் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. கூடவே கண்ணை வேறு கரிக்க, இப்போது பெற்றோரிடம் என்ன சொல்வது என புரியாமல் தவித்திருந்தாள்.

வெகு நேரம் கழித்து, வெளியில் சென்றவளை பார்வதி, “நானே சாப்பிட கூப்பிடணும்னு நினைச்சேன் சித்ராம்மா… அக்கா பேசுனதை எல்லாம் மனசுல வச்சுக்காத… வா!” என அழைத்திட, அதன் பிறகும் அவளிடம் அவர்கள் எதுவுமே கேட்கவில்லை.

கேட்காதவரை நல்லது என எண்ணிக்கொண்டவளுக்கு, அடுத்து வந்த ஒரு மாதமும் தனிமையில் தான் கழிந்தது.

செல்வியும் சித்ராக்ஷி நிச்சயத்தை நிறுத்தியதில் கோபமாக இருக்க, அவளை பார்க்க வரவே இல்லை. இளமாறனும் கடை, கல்யாண வேலை என்று அலைய, இடையில் இடைவெளி கிடைத்தாலும் முயன்று அவளை காண வராமல் போனிலும் அழைக்காமல் இருக்க, சித்ராக்ஷி தான் தினமும் போனை எடுத்து பார்ப்பதும், அலுவலகம் சென்று வாசலில் அவனை தேடுவதுமாக பொழுதை கழித்தாள்.

ஒருவேளை உடம்பு எதுவும் சரி இல்லையா? என குறுஞ்செய்தி அனுப்பி கேட்கலாம் என்றெல்லாம் எண்ணுபவள், வாட்சப் உள்ளே வரை சென்று அவன் ஆன்லைனில் இருப்பதை கண்டு டைப் செய்ய சென்று விட்டு, பின் அதனை செய்யாமல் அவனின் முகப்பு படத்தை மட்டும் பார்த்து விட்டு வெளியில் வந்து விடுவாள்.

அப்படியும் ஒரு முறை போன் செய்யலாம் என்றெண்ணி அவன் எண்ணை அழுத்தப்போகையில், பார்வதி வந்தவர், “சித்ராம்மா, இன்னைக்கு செல்விக்கு முகூர்த்தப்புடவை எடுக்க போறோம்… நீலா அக்கா எங்களை கூப்பிடவே இல்ல. ஆனா சம்பந்தி அம்மா தான் எங்களையும் கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாங்க. செல்விக்காகவாவது நாங்க போனா தான நல்லது. அதான் நானும் அப்பாவும் போறோம்…” என்று படபடவென பேச,

அவளோ விழிகள் மின்ன, “என்கிட்ட சொல்லவே இல்லம்மா… செல்வி அக்காவும் வர்றாளா?” எனக் கேட்டாள்.

“இல்ல சித்ராம்மா… அவள் வரலைன்னு சொல்லிட்டா! மாப்பிள்ளை தான் நேத்து வீட்டுக்கு வந்து அவளுக்கு என்ன மாதிரி டிசைன் வேணும், கலர் வேணும்னு வம்படியா கேட்டுட்டு போனாரு…” என்றவர் இதனை இளமாறன் தாய் மூலம் அறிந்திருக்க, அதில் மேலும் விழி விரித்தவள், “அப்போ நேத்து முகுந்த் மாமா அக்கா வீட்டுக்கு வந்தாரா? அவள் பேசுனாளா என்ன?” என்றாள் ஆச்சர்யமாக.

“ம்ம்க்கும்… பெரிய மாப்பிள்ளை வந்ததும் இவள் பேசிட்டாலும்…! அவர் பேரை சொன்னாலே வெட்கப்படுறா” என விளையாட்டாய் கூறியவர், “நான் சொன்னது எங்க மாப்பிள்ளையை… மாறன் தம்பி தான் வந்துட்டு போச்சு.” என்றதும் அவளுக்கு தான் முகம் வாடி விட்டது.

‘பக்கத்துக்கு தெரு வரைக்கும் வந்துருக்காரு. என்ன பார்க்க வரணும்னு தோணலையா?’ என்றே சிந்தனைகள் சீறிப் பாய, அதோடு அவனிடம் தானாய் சென்று பேச வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விட்டாள்.

“புஸ்ஸ்ஸ்…” என்று தோசைக்கல்லில் நீர் தெளித்ததும் தோசை வார்க்க தயாராகி விட்டது போல் ஒரு சத்தம் வர, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, மெல்லிசான தோசையாக ரௌண்டு போட்ட இளமாறனை முறைத்த முகுந்த், “டேய்… நீ பண்றது ரொம்ப ஓவர்டா!” என முறைக்க,

சாரதாவும், “நல்லா கேளு முகுந்தா. இவன் பண்றது கொஞ்சமாவது நல்லா இருக்கா…?” என்று எகிறினார்.

இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்த இளமாறன் தான், சுட்ட தோசையை பிய்த்து சாப்பிட்டு பார்த்து, “உப்பு ஓவர் எல்லாம் இல்ல டா… கரெக்ட் ஆ தான் இருக்கு” என்றவன், சாரதாவிடம், “தோசை சூப்பரா இருக்கு அத்தை சாப்பிட்டு பாரேன்” என ஒரு வாய் கொடுத்ததில் இருவரும் வெறியாகி விட்டனர்.

“டேய்… நாங்க தோசைய சொல்லல…” என்று இருவரும் ஒரு சேர கத்திட, “பின்ன, எதை சொல்றீங்க?” என்றான் யோசிக்கும் பாவனையில்.

“நடிக்காத மாறா…! ஏன் சித்ராவை அவாய்ட் பண்ற? பாவம்ல அந்த பொண்ணு” என்று தன் மச்சினிச்சிக்கு பாவம் பார்த்திட, “யாரு அவள் பாவமா… விட்டா கிறுக்கன் ஆக்கிடுவா! ஒரு மாசம் அவளும் பொறுமையா யோசிக்கட்டும். எப்படியும் உன் கல்யாணத்துக்கு வந்து தான ஆகணும். அப்போ இருக்கு மேடம்க்கு” என்றவன் தோசையில் கவனமானான்.

இந்த இடைப்பட்ட நாட்களில் இருவரும் அவனிடம் இருந்து நடந்தவற்றை தெரிந்து கொண்டு, சித்ராவிடம் பேச சொல்ல, அவன் தான் அவளை தவிர்த்தான். ஆனால் ஒவ்வொரு நாள் கடக்கும் போது இனி தன் வாழ்நாளில் இந்த ஒரு மாதம் மட்டும் வரவே கூடாது என்றே மனம் தவித்து வலித்ததை அவனாலும் தடுக்க இயலவில்லை.

முகுந்த் தான், ஏதோ யோசனையில் இருந்ததைக் கண்ட சாரதா, “நீ என்னடா யோசிக்கிற?” என  வினவ, அவனோ, “இல்ல… ஏதாவது யோசிச்சு பார்த்தா பிரச்சனையை தீர்க்க வழி கிடைக்குமான்னு நினைச்சேன். ஆனால், இந்த நேரத்துல தான் எல்லா குத்து பாட்டும் மண்டையில ஓடுதே… இது என்ன டிசைன் அத்தை…!”   
என்றான் வெகு தீவிரமாக.

சாரதாவோ அவனை விட தீவிரமாக, “கல்யாணம் ஆகட்டும் தம்பி… அப்பறம் எல்லா சோகப்பாட்டும் மண்டையில ஓடும்…” என்று வார, மாறன் தான், “அதுவும் செல்வியை கல்யாணம் பண்ணுன…! அவள் அடிக்கிற லெக்ச்சர்ல எல்லா தத்துவப்பாட்டும் மைண்ட் வாய்ஸ் ஆகிடும்…” என்றான் நக்கலாக.

“அப்போ ரொமான்ஸ் பாட்டுலாம் ஒரு ஓரத்துல கூட ஓடாதா மாறா…” என திரு திரு வென விழித்துக் கொண்டு கேட்க, அதில் பக்கென புன்னகைத்தவன், “இப்போ வர அவள் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம இருந்துட்டு இவருக்கு ரொமான்ஸாம்… ரொமான்சு…” என கேவலமாக ஒரு பார்வை பாரக்க, சாரதா தான் நமுட்டு சிரிப்புடன்,

“அநேகமா கல்யாணத்து அன்னைக்கு அவள் உன் மூஞ்சியைவே மறந்துருக்க போறா… பாத்துடா… தாலி கட்டுறப்ப ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள புடிச்சு போட்டுற போறா” என்று போற போக்கில் அவன் மேல் குண்டு எறிந்து விட்டு போக, அவன் தான் ஒரு மாசத்துல எல்லாமா முகம் மறந்துருக்கும். ஒருவேளை மறந்துருந்தா… என்று சற்றே முகம் சுருங்கியவன், அதே நினைவோடு அலைந்தான்.

அவனையே கவனித்த மாறன் தான், “சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டுட்டு, நீ சுண்டல் சாப்புடுறீயா அத்தை. அவன் ஏதோ லவ் பெயிலியர் ஆன ரேஞ்சுக்கு சுத்திட்டு இருக்கான்” என்று நகைக்க, அவரோ “அட நீ விடு மாறா. அப்படியாவது செல்வி கிட்ட போய் பேசுறானா பாப்போம்” என்க, அவனோ அந்த காரியத்தை மட்டும் செய்யவே இல்லை.

இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் வீடே கோலாகலமாக இருந்தது. சித்ராவிற்கும் மாப்பிள்ளை பார்த்தாயிற்று என அறிந்த சொந்த பந்தமும், அவளையும் சேர்த்தே கிண்டலடிக்க, அன்று மாலையே மண்டபத்தில் மாப்பிள்ளை பெண்ணிற்கு நலுங்கு வைக்கப்பட்டது.

செல்வியின் அருகில் அவள் முகத்தை அவ்வப்பொழுது பாவமாக பார்த்துக் கொண்டு நின்ற சித்ராக்ஷியை கண்டு மனம் வலித்தாலும் செல்வி குனிந்த தலை நிமிராமல் இருக்க, இளமாறனோ அவள் முன் வருகிறான் போகிறானே தவிர அவளை காணவே இல்லை.

ஆனால் சாரதா ஒவ்வொன்றிற்கும் சித்ராக்ஷியின் பெயரை தான் ஏலம் போட்டார்.

“ஏன்மா சித்ரா, வந்தவங்க உன் சொந்தம் தான… அவங்களுக்கு காபி குடு!” என ஆரம்பித்தவர், முகுந்திற்கு நலுங்கு வைக்க, அவருக்கு அருகில் கையில் சந்தன தட்டுடன் நிற்க வைத்து விட்டார்.

இதில் நீலா அவளை ஏகத்துக்கும் முறைத்து வைக்க, அவளுக்கு தான் ஐயோ என்றிருந்தது.

ஒவ்வொருவராக அவனுக்கு நலுங்கு வைத்திட, இறுதியாக ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்த இளமாறனை அழைத்ததும், அவனும் புன்னகையுடன் வந்து அவனின் தமையனை கண்டு கண் சிமிட்டினான்.

அருகில் நின்றவளையும் ஓரக்கண்ணில் பார்த்து விட்டு, சந்தனத்தை எடுத்து முகுந்திற்கு பூசி விட்டான். அப்பொழுது அவனின் மாமன் மகள் முறையில் இருக்கும் இரு பெண்கள் வந்து மாறனின் கன்னத்தில் சந்தனத்தை தடவ, “ஏய்… ராட்சசிங்களா…” என அவனும் சிரித்தபடி விளையாட்டாய் அவர்களுக்கு சந்தனத்தை பூசி விட்டான்.

இதில் சித்ராக்ஷிக்கு தான் ஜிவ்வென்று கோபம் ஏறியது. ஆனால் இவர்களின் விளையாட்டோ நிற்கவே நிற்காது என்ற ரீதியில் ஆளாளுக்கு அவளிடம் இருந்தே சந்தனத்தை எடுத்து மாற்றி மாற்றி பூசிக்கொள்ள, மீண்டும் இளமாறன் எடுக்க வருகையில், “ப்ச்… நீங்களே சந்தனத்தை எல்லாம் காலி பண்ணிட்டா மாப்பிள்ளைக்கு நலுங்கு வைக்க வேணாமா…?” என்றாள் தணிந்த குரலில் சிடுசிடுப்பாக.

இளமாறனோ அவளின் கோபத்தை குறும்பாய் பார்த்து விட்டு, “இங்க வேற யாராவது நலுங்கு வைக்கணுமா என்ன?” என்று வினவிட, பெரியவர்களோ அவரவர் வேலையில் இருந்ததில் “இல்லப்பா… முகுந்தை ரூமுக்கு போக சொல்லு…” என்று உத்தரவும் கொடுக்க, முகுந்தின் விழிகளோ மணப்பெண்ணின் அறையை தான் தழுவி இருந்தது.

பின்னே, சேர்ந்து நலுங்கு வைப்பார்கள் என்று பார்த்தால், அவளை கண்ணில் கூட காட்டாமல் தனி தனியாக சந்தனம் பூசி இப்படி கெடுத்து விட்டார்களே என்று நொந்தவன், அறைக்கு செல்ல, சித்ராக்ஷியும் சந்தனத்தட்டை டொம்மென டேபிளில் வைத்து விட்டு உள்ளே சென்றாள்.

‘ஒரு மாசமா பேச கூட இல்ல. இப்போ வந்தும் திரும்பி கூட பாக்கல. இதுல அந்த பொண்ணுங்க கூட விளையாடிட்டு இருக்காரு…! ஒரு மாசத்துல எல்லாத்தையும் மறந்துட்டாரு போல. இனிமே ஏதாவது சாக்லேட் பேர் சொல்லி கொஞ்சட்டும் அப்பறம் பாத்துக்குறேன்!’ என முணுமுணுத்து தனியாக புலம்பி கொண்டவளின்  பின்னிருந்து “ஹே… புலம்பல் பெர்க்கி நானா…(perky nana)” என்ற இளமாறனின் குரல் கேட்டது.

அவளோ வலுக்கட்டாயமாக திரும்பாமல் இருக்க, “திரும்புடி… பெர்க்கி…” என்றான் கண்டிப்பாக.

“ப்ச்… இதென்ன பெர்கி? ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு…!” என்றவளின் முகம் சிவந்து ஜொலித்திருந்தது கோபத்தில்.

“ஹே… கிட்கேட் பொண்ணே… அது கெட்ட வார்த்தை இல்ல. பெர்க்கி நானான்னா பனானா பிளேவர் வித் ச்சியூவபில் சாக்லேட். எக்ஸேக்ட் ஆ உன்ன மாதிரி. அதை சாப்பிட்டா உடனே முழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது. வாய்க்குள்ளேயே ரொம்ப நேரம் அரைக்கணும்… இப்போ நீ என்ன திட்டவும் முடியாம, விட்டு கொடுக்கவும் முடியாம வாய்க்குள்ளேயே புலம்புரீல அந்த மாதிரி…” என்றான் பெரு விளக்கமாக.

அவள் தான் ‘முதல்ல நாட்டுல இருக்குற சாக்லேட் எல்லாம் தடை பண்ணனும்’ என்று நொந்து விட்டு “நான் போறேன்…” என்று திரும்ப அவனோ அவள் முன் வந்து நின்று, “போ…! ஆனா இதை வாங்கிட்டு போ…” என்று மெல்ல நெருங்கினான்.

சித்ரா தான் “என்ன? என்ன வாங்கணும்…? என திக்கி திணற, மாறனோ குறுநகையுடன் அவள் கன்னத்தில் சந்தனத்தை தடவி விட்டு, “நியாயமா இந்நேரம் உன் கன்னத்துலையும் இந்த சந்தனம் இருந்துருக்கனும்… சரி பரவாயில்லை. நாளை கழிச்சு நடக்க போற நம்ம கல்யாணத்துக்கு இது ட்ரையல் ஆ இருக்கட்டும்” என்று காற்றிலேயே முத்தத்தை பறக்க விட்டு செல்ல, அவள் தான் பேயாய் விழித்தாள்.

அதோ இதோவென, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையில் திருமண நாள் இனிதே விடிந்தது. வேட்டி சட்டையில் மலர்ந்த முகத்துடன் தலை சீவிக்கொண்டிருந்த முகுந்திடம் வந்த மாறன்,

“முகுந்தா இன்னும் முகூர்த்தத்துக்கு அரை மணி நேரம் தான் இருக்கு. இப்போ கூட ஒன்னும் குறைஞ்சு போகல. கல்யாணத்துக்கு முன்னாடி செல்விட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு வா…” என்றதில், முகுந்த் “இல்ல நான் கல்யாணத்துக்கு அப்பறமே” என்று இழுத்திட,

சாரதா தான், “கல்யாணத்துக்கு அப்பறம் உன்ன யாருடா பேச விட போறா… பொண்ணுங்க தான் பேசுவாங்க. கிடைச்ச சான்சை விடாத முகுந்தா…” என கண்டிப்பாய் கூறியதில் அவனும் சரி என தலையசைத்தான்.

சாரதா தான்,” பொண்ணு ரூம்ல இப்போ யாரும் இல்ல போய் சட்டுனு பேசிட்டு வா…” என்று அவசரப்படுத்த, அவனும் தயங்கி தயங்கி உள்ளே சென்றான்.

மாறனோ இவனை நம்ப முடியாது என அவன் பின்னே சென்று கதவை திறந்து வேடிக்கை பார்க்க, அங்கே செல்வி சுவற்றின் புறம் திரும்பி குனிந்து அமர்ந்திருந்தாள்.

முகுந்த் அறைக்கு சென்று அவளுக்கு வெகு தூரத்தில் நின்று கொண்டு, “செ… பூ… ம்… பா…” என்று ஏதேதோ பேச எண்ணியவனின் முதல் வார்த்தை மட்டுமே வெளிவந்தது அதுவும் மெதுவாக.

இங்கிருந்து இளமாறன் தான் தலையில் அடித்து கொண்டு, “டேய்ய்ய்ய்… என்ன ஜீபூம்பா போட்டு மாத்ருபூதத்த வரவைக்க போறியா… கொய்யால பக்கத்தில போய் பேசுடா…” என்று ஹஸ்கி வாய்ஸில் அவனை பல்லைக்கடித்து மிரட்ட, அதில் அசடு வழிந்த முகுந்த், “இருடா… பேசுறேன்…” என நொந்தவன், ‘ஐயோ எக்ஸாம் ஹாலை விட பதட்டமா இருக்கே’ என புலம்பி கொண்டு, அவளருகில் சென்றவன், அவள் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து விட்டான்.

அதில் அனைத்தும் மறந்தவன், “செல்வி… ஏன் இப்படி அழுதுட்டு இருக்க?” என்று வேகமாக அவளருகில் அமர்ந்து பதற்றமாய் வினவ, அவளோ அவனை கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும் அழுகையை விடாமல் மேலும் தொடந்தாள்.

அவனுக்கு தான் அவளின் கண்ணீர் ஒரு வித வலியை கொடுக்க, “ப்ச்.. செல்வி உன்னை தான் கேக்குறேன்… ஏன் அழகுற?” என்றான் மீண்டும்.

அவன் பேச பேச அவளின் கேவலின் சத்தம் மட்டும் அதிகம் ஆகிட, அவனோ நன்றாக அவளை நெருங்கி அமர்ந்து கன்னம் தாங்கி, “கேக்குறேன்ல… சொல்லு செல்வி. ஏன் இப்போ இந்த அழுகை. ஏதாவது பிரச்சனையா? என்னன்னு சொன்னா தான தெரியும்… பாரு மை எல்லாம் அழிஞ்சு போச்சு…” என உருகியவன் மொத்தமாக அவளிடம் இழந்து  நிற்க, முதலில் மாறன் உள்ளே வரலாம் என்று தான் நினைத்தான்.

பின் அவன் கொஞ்சுவதை கண்டு நின்று விட்டு, “அழுதா மை அழிய தானடா செய்யும்…! இவன் என்ன புதுசா கண்டுபிடிக்கிறான்” என நக்கலடித்தவன் அவர்களை வேடிக்கை பார்க்க, செல்வியோ, “இந்த கல்யாணம் வேணாம்…” என்றாள் விசும்பலாக.

அந்த வார்த்தை தான் காதல் கொண்ட மனதிற்கு எத்தகைய வேதனையை கொடுக்கிறது என இறுகி போனவன், “ஏன்?” என்றான் ஒற்றை வார்த்தையில்.

அவளோ பதலளிக்காமல் கண்ணீர் விட, அதில் பொறுமை இழந்த முகுந்த் “ஓங்கி ஒன்னு விட்டேன். செவிலு திரும்பிரும். உனக்கும் உன் தங்கச்சிக்கும் கல்யாணம்ன்னா என்ன காரா பூந்தின்னு நினைப்பா…? இப்போ நீ என்ன நடந்துச்சுன்னு சொல்லல… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என கோபத்தில் கத்த தொடங்கி விட்டான்.

அவளோ அவன் கத்தலிலும் கோபத்திலும் மிரண்டு உதட்டை பிதுக்க, “இந்த பாவப்பட்ட ரியாக்ஷன் எல்லாம் என்கிட்ட கொடுக்காத. ஒழுங்கா என்ன ஆச்சுன்னு சொல்லு!” என்றான் விரலை நீட்டி.

அதில் செல்வி தான், “என்னால தான் உங்க தம்பிக்கும் சித்ராக்கும் நடக்க இருந்த கல்யாணம் நின்றுச்சு…” என்று மூக்கை உறிஞ்சிட, அவனோ புருவம் சுருக்கி புரியாமல் பார்த்தான்.

அவளோ அதற்கு மேல் கூறாமல் நிறுத்த, “ஒவ்வொரு வார்த்தைக்கும் பேக் ரவுண்டு மியூசிக் போட்டு கதை கேட்க முடியாது… ஒழுங்கா முழுசா சொல்லு…!” என்றவன் கொலை வெறியில் இருந்தான்.

செல்விக்கு அவன் மிரட்டலும் சேர்ந்து அழுகையை கொடுக்க, “என் அம்மா தான் எல்லாத்துக்கும் காரணம். அவங்களுக்கு அவளை எப்போவுமே பிடிக்காது. நானும் அவளும் ஒரே வீட்டுல வாழ போறோம்னு என் தங்கச்சிகிட்ட நிச்சயத்துக்கு முன்னாடி அவள் உங்க தம்பிய கல்யாணம் பண்ணா, எனக்கு உங்களை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு ஏதேதோ பேசிருக்காங்க… அதுனால தான் அவள் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டா… இது தெரியாம நான் வேற அவள் கிட்ட ஒரு மாசமா பேசல…! இப்போ அவள் வாழ்க்கய கெடுத்துட்டு நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிறது குற்ற உணர்ச்சியா இருக்கு” என்று கூறிட, முகுந்த் தான் ‘பே’ வென பார்த்தான்.

பின், பொங்கி எழுந்த கோபத்துடன் “உங்கம்மாவை முதல்ல சீரியல் பாக்குறத நிறுத்த சொல்லு. அதுல கூட நல்ல நல்ல ஐடியா பண்ணி வில்லத்தனம் பண்ணுவாங்க…” என்று கடுப்படிக்க, செல்வி மீண்டும் அழ தொடங்கிட, இளமாறன் தான் வயிற்றைப்பிடித்துகொண்டு வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

முகுந்தோ ‘என்ன சிரிப்பு சத்தம் கேட்குது’ என நிமிர்ந்து இளமாறனை வெறித்து “எதுக்கு டா சிரிக்கிற?” என வினவ,

அவனோ சிரிப்பை நிறுத்தாமல், “இல்ல… இதுக்கு நீ கல்யாணத்துக்கு அப்பறமே இவள் கிட்ட பேசியிருக்கலாம்… லைக்… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்துருக்கலாம் மொமெண்ட்… ஹா ஹா…” என விழுந்து விழுந்து சிரித்ததில் முகுந்த் தான் பார்வையால் சுட்டெரித்தான்.

கிட்கேட் உருகும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
40
+1
3
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்