Loading

மறுநாள் எழுந்ததில் இருந்தே சித்ராக்ஷிக்கு இளமாறனின் நினைவு தான். முந்தைய நாள், தான் பேசியதும் அவன் எதுவும் பேசாமல் சென்றதும் அவளுக்குள் உறுத்திட, செய்வதறியாது மருகினாள்.

‘ஏன் எதுவும் பேசாம போனாரு…? தப்பா நினைச்சுட்டாரோ?’ என ஏதேதோ நினைவில் மூழ்கியவளுக்கு, ஏன் தான் மீண்டும் ரோஹித்தை சந்தித்தோம் என எரிச்சலாக இருந்தது.

‘இளாவுக்கு போன் பண்ணுவோமா? வேணாம்… அப்படி தப்பா நினைச்சு என் மேல கோபமா இருந்தா கூட நல்லது தான். அப்போ தான் அக்கா கல்யாணம் முடிஞ்சதும் எங்க கல்யாணத்தை பத்தி பேச மாட்டாரு’ என தானே அனைத்து முடிவுகளையும் எடுத்துக்கொண்டவள், கூம்பிய முகத்துடன் அலுவலகத்திற்கு சென்று சேர்ந்தாள்.

தன் மொத்த கவனத்தையும் வேலையில் புதைத்திருந்தவளிடம் பியூன் வந்தவர், “ம்மா… உங்களை பார்க்க விசிட்டர் வந்துருக்காங்க…” என்க, சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவள் “இளா தான் வந்துருப்பாரு” என எண்ணி அடுத்த நொடி வெளியில் செல்ல, ஆனால் அங்கு ரோஹித் இருப்பதை கண்டதும் மனமும் முகமும் ஏமாற்றம் அடைந்தது.

அதோடு ‘இவன் ஏன் வந்துருக்கான்?” என நொந்து, “நீ ஏன் வந்த?” என்று அவனிடம் நேரடியாக வினவ, ரோஹித் தான், 

“என்ன சித்ரா ஒரு ஃப்ரெண்ட் ஆ கூட உன்ன பார்க்க வர எனக்கு உரிமை இல்லையா?” என்றான் கேள்வியாக.

அதற்கு சித்ரா பேரமைதி காத்திட, அவனோ “எனக்கு தெரியும் உனக்கு அப்பா மேலயும் என் மேலயும்  ரொம்ப கோபம் இருக்கும்ன்னு. ஆனால், நான் ஒன்னும் கல்யாணத்தை நிறுத்தல. நீ தான் யாருக்காகவோ உன் தலையில நீயே மண்ண அள்ளி போட்டுக்கிட்ட… அவ்ளோ நடந்ததுக்கு அப்பறமும் என் அப்பா நம்ம கல்யாணத்துக்கு சரின்னு தான சொன்னாரு…! என்னதான் வேற ஜாதியா இருந்தாலும்…” என்ற வார்த்தையையும் இணைப்பாய் சேர்த்துக்கொள்ள, அவள் தான் காளியாய் நின்றிருந்தாள்.

“இன்னொரு வார்த்தை பேசுன. பப்ளிக் பிளேஸ்ன்னு கூட பார்க்க மாட்டேன். அறைஞ்சுடுவேன். உன் வீட்டு பொண்ணுங்களுக்கு அந்த மாதிரி நடந்துருந்தா நீ இப்படி தான் கேஷுவலா பேசுவியா?” என சித்ராக்ஷி கோபமாய் பேசிட,

“தப்பு உன் அக்கா மேல. அவளால தான் இவ்ளோ பிரச்சனையும். பார்க்க அமுக்குணி மாதிரி இருந்துகிட்டு, என் அண்ணன் மேலயே பழி போட்டாள்… இப்போ கூட நீ என் அப்பாவை காப்பாத்துன நால தான் பொறுமையா பேசுறேன் சித்ரா” என்று அவன் ஏதேதோ பேச, அதற்கு மேல் பொறுக்க இயலாமல் அவனை பளாரென அறைந்திருந்தாள்.

“என் அக்கா பத்தி பேச உனக்கு தகுதியே கிடையாது. போய்டு…!” என்றவள், இத்தனை நாள் மனதில் பூட்டி இருந்த கோபத்தையும் ஆதங்கத்தையும் வார்த்தையில் கொட்ட இயலாது, ஒரு அறையில் காட்டி இருந்தவள், கோபத்தில் அலுவலகம் செல்லாமல் அந்த ஐடி பார்க்கை விட்டு வெளியில் நடந்தாள்.

ஆனால் ரோஹித்துக்கு தான் அவள் சட்டென அறைந்து விட்டது கடும்கோபத்தை கொடுக்க, அவள் பின்னே சென்று அவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன், “நீ ரொம்ப ஓவரா போற சித்ரா. ஏதோ பிரெண்ட் ஆச்சேன்னு நமக்குள்ள நடத்த பிரச்சனையெல்லாம் மறந்துட்டு உன்ன பார்க்க வந்தா… உன் திமிரு மட்டும் குறையவே இல்ல.

நல்ல வேளை உன்ன நான் கல்யாணம் பண்ணல. பண்ணிருந்தா உன் கூட ஒரே இம்சையா தான் இருந்துருக்கும். இதுல வார்த்தைக்கு வார்த்தை அக்கா புராணம் வேற… உன்ன காதலிச்சேன்னு நினைச்சாலே வெறுப்பா இருக்கு…” என வார்த்தைகளை துப்பியவன், அவளை ஏகத்துக்கும் முறைத்து விட்டு அவளை தாண்டி செல்ல சித்ராவிற்கு தான் கோபத்தோடு கண்ணீரும் முட்டிக்கொண்டு வந்தது.

பொதுவெளியில் தன் உணர்வுகளை காட்ட இயலாமல், அலுவலகம் சென்று தன் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கே சென்று விட்டவள், தாய் தந்தை முகத்தை பாராமல் அறைக்குள் அடைய, இருவரும் “என்ன ஆச்சு சித்ராம்மா…” என பதறினர்.

ஆனால், அவள் வந்த சில மணி துளிகளில் நீலா அங்கு வந்தார் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன்.

அவரை அங்கு எதிர்பாராமல் விழித்த செந்திலும் பார்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, நீலாவோ உச்சஸ்தாதியில் “எங்க உங்க அருமை மக… இன்னும் அவளுக்கு என் மகளோட வாழ்க்கையை கெடுத்தது பத்தாதா…?” என்று கத்திட அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை.

உள்ளுக்குள் கண்ணீரில் கரைந்திருந்த சித்ராக்ஷி தான் இவரின் குரல் கேட்டு குழப்பமாக வெளியில் வர, அவள் வந்ததும் தான் தாமதம் நீலா அவளை பிடி பிடி என பிடித்து விட்டார்.

“இந்த மேனா மினுக்கிக்கு என் மகளோட கல்யாணத்துல விளையாடுறதே வேலையா போச்சு. பொம்பளப்புள்ளையா அடக்க ஒடுக்கமா வளத்துருந்தா இந்நேரம், இவளும் புகுந்த வீடு போயிருப்பா… ஆனா இவளும் போகாம, இப்போ என் மகளுக்கு எதிரா மறுபடியும் ஏதோ பண்றா…” என்று காட்டு கத்தாக கத்தியவர், அவளின் அலுவலகம் வழியே தான் கடைக்கு சென்றிருந்தார், சரியாக அவர் கண்களில் சித்ராக்ஷியும் ரோஹித்தும் பற்றிட, இப்போதும் இங்கு வந்து பொரிந்தார்.

பார்வதி தான் “அக்கா வாய்க்கு வந்ததை பேசாதீங்க! இப்போ என்ன ஆச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கீங்க…” என்றார் சற்றே கோபம் எழுந்து.

சித்ராக்ஷியோ நடப்பது எதுவுமே புரியாமல் திகைக்க, நீலா, “எனக்கு என்ன லூசா புடிச்சிருக்கு காரணம் இல்லாம உன் வீட்டுக்கு வந்து கத்த… இன்னைக்கு இவ அந்த ரோஹித் பய கூட நடு ரோட்டுல பேசிக்கிட்டு நின்னா… இதுல இவ கையை வேற அவன் கிட்ட குடுத்துட்டு!” என்றவரின் முகத்தில் லேசான சுளிப்பு இருக்க,

மேலும் “அதான் அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல… அப்பறம் எதுக்கு அவன் கிட்ட இவள் பேசனும் இப்போ? என் பொண்ணு கல்யாணத்தை எப்படி நிறுத்தன்னு திட்டம் போடவா? இவள் செல்வி நிச்சயத்தை அமைதியா நடக்க விட்டப்போவே நினைச்சேன். இப்போ தான தெரியுது இவள் அவன் கூட கூத்தடிக்கிறது” என பேசிக்கொண்டே செல்ல, நட்ராஜோ “போதும் அண்ணி… இதுக்கு மேல சித்ரா பத்தி ஏதாவது பேசுனீங்க மரியாதை கெட்டுடும். எனக்கு தெரியும் என் பொண்ண பத்தி…” என்று எகிறினார்.

அதில் நீலா தான், “நல்லா தெரியுமே உங்க பொண்ண பத்தி… அதான் தண்ணி தெளிச்சு விட்டுடீங்களே… ஆயிரக்கணக்குல சம்பாதிக்கிறா. அவள் என்ன பண்ணாலும் நீங்க சும்மா இருக்கலாம்… அவள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும். அதுக்கு எதுக்கு என் பொண்ணு வாழ்க்கையில விளையாடனும்?” என்று கேள்வியை எழுப்பியவர், நட்ராஜ் மேலும் பேச வரும் முன், “எங்க இன்னைக்கு அவனை பார்க்கலைன்னு உங்க பொண்ண சொல்ல சொல்லுங்க பாப்போம்…” என்றார் ஏளனமாக.

சித்ராக்ஷி தான் அவர் பேசிய பேச்சிலும், வார்த்தைகளிலும் துவண்டு கண்ணில் நீர் மல்க நிற்க, இப்போது அவளின் பெற்றோரின் பார்வை அவளை நோக்கியது.

இப்போது என்னவென்று சொல்ல? அவன் என்ன பேசினான், தான் என்ன பதில் சொன்னேன் என்றறியாது எதை எதையோ கூறி விட்டு, இப்போது தன்னிடம் கேட்டால் தான் என்ன தான் பதில் சொல்வது? என நொந்தவள், இப்போது உண்மையை கூறினால் கூட தப்பாக தானே ஆகும் என்று மருகி நின்றாள்.

அப்போது “நான் உள்ள வரலாமா?” என்ற ஆழ்ந்த குரல் அங்கு எதிரொளிக்க, அனைவரும் வாசல் பக்கம் பார்த்ததில் இளமாறன் தான் கையை கட்டியபடி நின்றிருந்தான்.

இதில் சித்ராக்ஷிக்கு தான் இன்னும் கண்ணீர் சுரந்தது. ஒரு மனமோ அவனிடமே ஆதரவு தேடிட, மற்றொரு மனமோ இறுகி நின்றது.

அவனை கண்டதும், நட்ராஜ் பார்வதிக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த கல்யாணமும் நின்று விடுமோ என்றே அவர்களின் பெற்ற மனம் பதற, இளமாறனோ, “என்ன எல்லாரும் நின்னுக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கீங்க போல…” என்றவன்,

நீலாவை கண்டு “ஓ சீரியஸ் டாக்கா? என்ன அத்த நடக்க போற கல்யாணத்துக்கு என்ன என்ன வாங்கணும்னு லிஸ்ட் போட்டுட்டு இருக்கீங்களா” என்றான் அடக்கமாக.

அவன் குரலில் கேலி இருந்ததோ என்று ஒரு நொடி யோசித்தவர், “வாங்க சின்ன மாப்பிள்ளை… நீங்க கட்டிக்க போறவ” என்று ஆரம்பித்ததில், இளமாறன், “ஆமா அத்தை நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியும்…” என்றான் உடனே.

பின், நட்ராஜிடம் “என்ன மாமா இவளை இப்படி வளத்துருக்கீங்க…?” என்றதில், மற்ற மூவரும் அவனை விழித்து பார்க்க, நீலா இளக்கார நகையுடன் “ஓ! உங்களுக்கும் தெரிஞ்சுருச்சா…” என்றிட, சித்ராக்ஷிக்கு தான் இதயம் தாறு மாறாய் துடித்தது.

அவனோ “ம்ம்… ஆமா அத்தை… என்னை கட்டிக்கப்போறவளுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. பாருங்க வண்டி சாவியை வண்டியிலேயே வைச்சுட்டு வந்துருக்கா. அப்பறம் வண்டிய காணோம் சகுனம் சரி இல்ல… கல்யாணத்தை இன்னும் ஆறு மாசம் கழிச்சு வைங்கன்னு உளறுவா!” என நக்கலாய் கூறியவன், அவளின் சாவியை டேபிளில் வைத்து விட்டு நிமிர நீலாவுக்கு சப்பென ஆகி விட்டது.

சித்ராக்ஷி அவனை பாராமல் குனிந்து கொள்ள,  “அதில்ல மாப்பிள்ளை…” என்று மேலும் பேச வர,

அவனோ “ஆமா அத்த அதுவும் இல்லாம ஆபிஸ்ல தலைக்கு மேல வேலய வைச்சுக்கிட்டு, தலைவலிக்குதுனு பாதியில வந்துட்டா… எல்கேஜி பசங்க கூட காரணம் சொல்லி ஸ்கூல் கட் அடிக்காம ஒழுங்கா போவாங்க. இவள் என்னன்னா ஆபிஸ் கட் அடிச்சுட்டு வர்றா” என்றவன் சோபாவில் சென்று அமர்ந்து நீலாவை சிறிதும் பேச விடாமல்,

“ஆமா செல்வி அண்ணி எங்க? அவங்களை தனியா விட்டுட்டு நீங்க ஏன் இங்க வந்தீங்க? என்ன இருந்தாலும் இன்னும் ஒரு மாசத்துல எங்க வீட்டுக்கு வர போற பொண்ணு. கூட இருந்து நீங்க தான பார்த்துக்கணும்…” என்றான் அவரை விரட்டி அடிக்காத குறையில்.

அதில் மேலும் பேச்செழாமல் சித்ராக்ஷியை ஒரு முறை முறைத்து விட்டு அவர் வெளியில் செல்ல, சித்ராவிற்கு அவன் எல்லாவற்றையும் கேட்டிருப்பானோ…? என்ற திக் திக் உணர்வு மனமெங்கும் பரவ, கூடவே அவனின் பேச்சும் சிறு மலர்ச்சியை தர மறுக்கவில்லை. ஆனாலும் அவனை பாராமல் அவள் உள்ளே சென்று விட்டாள்.

பார்வதி அவனுக்கு காபி கலக்க அடுக்களைக்குள் புகுந்து விட, நட்ராஜ் தான் தயங்கி தயங்கி பேசிக்கொண்டிருந்தார்.

பின் அவனே, “மாமா, நீங்க வேணா போய் அத்தைக்கு ஹெல்ப் பண்ணுங்களேன்…! நான் சித்ராகிட்ட கொஞ்சம் பேசணும்” என அழுத்தப்பார்வையுடன் கூறியதில் முதலில் விழித்தவர், பின் எழுந்து உள்ளே சென்றார்.

அவனும் அடுத்த நொடி, சித்ராவின் அறையில் இருக்க, ‘எப்படியும் அவன் வருவான்’ என்று உணர்ந்த சித்ரா சிறிதும் கண்ணீரை வெளிக்காட்டாது, கையை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் வந்து ஆசுவாசமாக அமர்ந்தவன், “என்ன பிரச்சனை?” என்றான் அமைதியாக.

அவளோ “எ.. என்… என்ன பிரச்சனை? அதெல்லாம் ஒன்னும் இல்லையே…!” என திணற, அவளை ஆழமாய் பார்த்தவன், “இன்னைக்கு ரோஹித் உன்ன பார்க்க வந்தானா?” என்றான் கேள்வியாக.

அதில் உள்ளிழுத்த கண்ணீர் துளி மீண்டும் முணுக்கென கண்ணை மறைக்க, பதில் கூறாமல் அமர்ந்திருந்தவளை சலனமின்றி பார்த்தவன்,

“நான் முதல்ல உன் ஆபிஸ் தான் போனேன்.. அங்க நீ கிளம்பிட்டன்னு சொன்னதும் வீட்டுக்கு வந்துட்டேன். உன் பெரியம்மா பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே…!” என்றான் தலையை சாய்த்து.

அவள் பயந்தது போன்றே அவன் அனைத்தையும் கேட்டிருக்கிறான் என்று உணர்ந்தவளுக்கு இப்போது என்ன பதிலுரைப்பது என்றே புரியவில்லை.

அவள் அமைதியையும் கலங்கிய முகத்தையும் வெகு நிமிடம் அமைதியாய் பார்த்தவன், “என்ன டைலெமா டபுள் டெக்கர் சாக்கோ…?(dilemma double decker)” என கிசுகிசுப்பாக அவள் முகத்தருகில் குனிந்து குறுகுறுவென பார்த்த படி அழைத்தான்.

இளமாறனின் அழைப்பில் சுருங்கிய புருவத்துடன் நிமிர்ந்தவள், “என்னது?” என்றாள் சோர்ந்த குரலில்.

“உன் மனநிலையை தான் சொல்றேன் கிட்கேட் கேர்ள்… டைலெமான்னா என்ன? ரெண்டும் கெட்டான் யோசனையில் இருக்குறது. டபிள் டெக்கர்ன்னா உன்ன மாதிரி சாக்லேட் தான். ஒரு பக்கம் சாப்ட் ஆ இருக்கும் இன்னொரு பக்கம் க்ரிஸ்பியா இருக்கும். இப்போ நீ இருக்குற மாதிரி…” என்றான் குறும்பு கொப்பளிக்கும் குரலில்.

அதில் அவள் தான், அவனின் விளக்கத்தில் திருதிருவென விழித்து விட்டு, “நான் ஒன்னும் ரெண்டும் கெட்டான் நிலையில இல்ல…” என வாய்க்குள் முனக, இளமாறன் தான் இன்னும் அவளருகில் நெருங்கி அமர்ந்து,

“ப்ச்… இப்போ அவனை பார்க்கலைன்னு சொன்னா பொய் சொன்ன மாதிரி ஆகிடும். பார்த்தேன்னு சொன்னா, உன் பெரியம்மா சொன்னது தான் உண்மைன்னு எல்லாரும் நினைப்பாங்கனு பதில் சொல்ல தெரியாம பெக்க பெக்கன்னு முழிக்கிற…? அப்படி தான?” என அவளின் மனவுணர்வை துல்லியமாய் அளந்து கேள்வியாய் வினவியவனை ஒரு கணம் அதிர்ந்து பார்த்தாள் சித்ராக்ஷி.

அவனோ, இரு புருவத்தையும் உயர்த்தி கண்ணெடுக்காமல் அவள் விழியை ஆராய, அவள் தான் அதற்கு மேல் அடக்க இயலாமல் முகத்தை மூடி தேம்பி தேம்பி அழ தொடங்கினாள்.

அவள் கண்ணீரில் பதறியவன், “ஹே! சித்ரா… என்ன இது? பேபி மாதிரி அழுதுகிட்டு… இங்க பாரு சித்ரா…” என தன்னவளின் கையை எடுத்து விட முயற்சிக்க, அவளோ வீம்பாக முகத்திலிருந்து கரங்களை எடுக்காமல் அழுது தீர்த்தாள்.

“முட்டாள்! இப்போ அழுகைய நிறுத்தப்போறியா இல்லையா?” என இளமாறன் அவளை அதட்ட, “நான் எந்த தப்பும் பண்ணல இளா!” என்றாள் விசும்பிக்கொண்டே.

“நீ தப்பு பண்ணுனன்னு நான் எப்போ சொன்னேன்…” என்று அவள் முகத்தை நிமிர்த்தி சற்றே அழுத்தத்துடன் வினவ, அவள் தான், உதட்டை கடித்து அழுகையை அடக்கினாள்.

தன்னவளின் முகம் இளமாறனின் கைகளில் இருக்க, அவளின் துடித்த அதரங்களை, தன் கட்டை விரல் கொண்டு வருடி சமன் செய்தவன்,

“லவ் பண்றது ஒன்னும் பெரிய பாவம் இல்ல சித்ரா… ஒருவேளை அந்த காதல் கை சேரலைன்னா நம்ம பண்ணது பாவம்ன்னு நினைக்கிறதும், மத்தவங்களை பேச விட்டு வேடிக்கை பாக்குறதும் முட்டாள்த்தனம். முதல்ல நீ பண்ண காதல் தப்பு இல்லைன்னு நீ உணரு.

அப்படி அதே தப்பாவே இருந்தா கூட, அத ஒரு அனுபவமா தான் எடுக்கணுமே தவிர தன்னை தானே வேதனையில அமிழ்த்திக்கணும்னு நினைக்கிறது ரொம்ப பெரிய முட்டாள்த்தனம்.

செல்வி கல்யாணம் ஏன் நின்னுச்சுன்னு எனக்கு தெரியல. நீயா சொல்ற வர அத நான் யார்கிட்டயும் கேட்க போறதும் இல்லை. சொல்லுன்னு உன்ன கம்பெல் பண்ண போறதும் இல்ல. ரோஹித்கிட்ட நீ என்ன பேசுனன்னும் நான் கேட்க போறது இல்லை.

ஆனா, ஒருவேளை அவன் உன்ன பிளாக்மெயிலோ, இல்ல இரிட்டேட்டோ பண்றான்னு தெரிஞ்சா, உன்னால அத ஃபேஸ் பண்ண முடியலைன்னா தயவு செஞ்சு என்கிட்ட சொல்லு. நீயா ஒன்னு நினைச்சுக்கிட்டு, உன்ன நீயே வ்ருத்திக்காத… இது ஆக சிறந்த முட்டாள்தனம்டி என் முட்டாள் மைலோ பார்…!” என தீவிரத்துடன் ஆரம்பித்தவன், கொஞ்சலுடன் முடித்து இருக்க, அவளோ அவனையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள்.

அதில் இளமாறன் தான், “ஓ… மைலோ பார்ன்னா என்னன்னு தெரியலையா? இது நியூஸிலேண்ட், ஆஸ்திரேலியால கிடைக்கும்…” என்று விளக்கம் சொல்லும்போதே, அவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து மீண்டும் தன்னுள் ஏற்பட்ட காயத்தினை கண்ணீரில் கரைத்து கொண்டிருந்தாள்.

தன் நெஞ்சில் சாய்ந்து ஆதரவு தேடியவளை கண்டு ஒரு கணம் உறைந்தவன், பின் நளினமாய் பூத்த குறுநகையுடன் மென்மையாய் சித்ராக்ஷியை அணைத்துக்கொண்டான்.

கிட்கேட் உருகும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
39
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்