Loading

அத்தியாயம்: 3

 

 

“கவின், நயனி எழுந்துட்டிங்களா.. நேரமாச்சி.. ” என சமையலறையில் இருந்து கனி பத்து நிமிடங்களாக கத்திக் கொண்டு இருக்கிறாள்.. ஆனால் அவர்களிடம் சிறு அசைவு கூட இல்லை.. 

 

இட்லி குக்கரில் மாவை ஊற்றி அடுப்பில் ஏற்றி வைத்தவள், மூவருக்குமான மத்திய உணவை மேஜையில் கடை விரித்த டப்பாக்களில் அடைத்து வைக்கத் தொடங்கினாள்.. 

 

காலை நேரம் எப்பொழுதுமே பரபரப்பான நேரம் தான்.. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீடு, வாரம் ஒரு நாள் போடும் காய்கறி சந்தைக்கு நிகரானது.. கூச்சலுக்கும் குழப்பத்திற்கும் குறைவிருக்காது.. 

 

கனிரா ஆறு மணிக்கு முன்னதாகவே எழுந்து, வாசலை கூட்டிப் பெருக்கி, சின்னதாய் புள்ளிக் கோலமிட்டுவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள்., இரு பெர்னால் கொண்ட கேஸ் அடுப்பில் ஒன்றில் குக்கரை வைத்து சாதத்தை வேகவிட.. மற்றொன்றில் பருப்பை வேக வைத்தாள்.. 

 

இவ்விரண்டும் அவள் குளித்து முடித்து விட்டு வரும் நேரம் விசில் விட்டு வெந்ததை சொல்லியது.. பருப்பை கடந்து எடுத்தவள் அதை தாளித்து தனித்து வைத்தாள்.. கீரை கடைந்து, அவரைக்காயை சமைத்து முடித்தவள்.. கடைசியாக கலர் கலர் அப்பளங்களை பொரித்து எடுத்து விட்டு சிறுவர்களுக்கு குரல் குடுக்கத் தொடங்கினாள்.. 

 

“ஸ்… வாட்டர் பாட்டிலுக்கு தண்ணி ஊத்தல.. காலைலக்கு சட்னி அரைக்கல.. ” என தலையில் தட்டிக் கொண்டு மீண்டும் சமையலறைக்குள் செல்ல.. நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.. 

 

அதை கண்டவள் படுக்கை அறைக்குள் சென்று சிறுவர்களை எழுப்பாது, இழுத்து வந்து குளியல் அறைக்குள் விட்டாள்.. 

 

“கனிம்மா.. ” என சிணுங்கிக் கொண்டு அவளின் வயிற்றில் முகம் புதைய கட்டிக் கொண்டு நின்றவனின் மீது தண்ணீரை வாரி இறைத்தவள்.. 

 

“பத்து நிமிஷம் தா டயம்.. அதுக்குள்ள எல்லா வேலையையும் முடிச்சிட்டு வந்திடனும்.. குவிக்.. ” என்று விட்டு நயனியை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்கும் மற்றொரு குளியலறைக்குள் சென்றாள்.. 

 

அவளுக்கு உடை‌ மாற்றும் நேரம் சேர்வத்தாய் கையில் காய்கறிகளுடன் வந்தார்.. 

 

“நாளைக்கி அமாவாச.. உ மாமாக்கு சாமி கும்பிடனும்.. பொம்பளப்பிள்ளைங்க ரெண்டும் வரும்.. தெரியும் தான.. இந்தா இதெல்லாத்தையும் எடுத்து வை.. பனங்கற்கண்டு வாங்கிட்டு வந்திருக்கேன்.. பாயாசம் வச்சிடு.. இந்த கலர் கலர் அப்பளத்த இனி பொரிக்காத.. எல்லாம் சோடா உப்பு.. சாதா அப்பளத்த எண்ணைல போடாம சுட்டு எடுத்திடு.. வடக்கி‌ ஊற வச்சி ஆட்டிடு.. அப்றம்.. ” என வரிசையாக செய்ய வேண்டிய பணிகளை சொல்ல.. கனி வேகமாக காய்கறிகளை பிரிந்து நெகிழி டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் அடுக்கத் தொடங்கினாள்.. 

 

“கனிம்மா ஸ்விட்ச்ல ஷாக் அடிக்குது.. ” என்று கவின் குளியலறைக்குள் இருந்து குரல் குடுக்க.. 

 

“ஈரக் கையோட அத தொடாத கவின், பக்கத்துல ப்ளாஸ்டிக் குச்சி இருக்கு பாரு.. அத வச்சி ஆஃப் பண்ணு.. இந்த வாரம் மச்சான் வரவும் சரி பண்ணச் சொல்றேன்.. ” என்றவளிடம் சீப்பை குடுத்து..

 

“கனிம்மா தலை கட்டனும்.. ” என்றாள் நயனி..

 

“ரெண்டு நிமிஷம் டா குட்டி.. இத எடுத்து வச்சிட்டு வர்றேன்.. ” என கனிரா சொல்ல..

 

“இங்க வாடி உனக்கு நா தலைய வாரி விடுறேன்.. ” என தன் பேத்தியை அழைத்தார் சேர்வத்தாய்.. 

 

அவளோ, “கனிம்மா வருவாங்க.. நீங்க ரொம்ப இறுக்கமா பின்னி விடுவிங்க.. தலையே வலிக்கும்.. ” என வர மறுக்க.. பாவம் சேர்வத்தாயின் முகம் சுருங்கி விட்டது.. 

 

“அப்படிலாம் சொல்லக் கூடாது நயனி.. போ ஐயம்மாட்ட சீப்ப குடு.. ”  

 

“தேவையில்லடிம்மா.. எம்பேத்தி எங்கிட்ட, நீ சொல்லி வரத் தேவையில்லை.. ” என வீராப்பாய் கூறினார் அவர்.. யாருக்கும் எந்த உதவியும் செய்யாது அந்த வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கியவரின் மூச்சு மட்டும் நேரமாக நேரமாக வெகு வேகமாக ஏறி இறங்கியது.. 

 

“கனிம்மா.. ” என்றபடி கவின் காலை தூக்கி மேஜையில் வைத்தான்.. ஷூ லேஸ்ஸை கட்டி விடச் சொல்லி.. 

 

“ஸ்கூல் பேக்கெல்லாம் எடுத்து வச்சிட்டியா.. ஹோம்வொர்க் செஞ்சியா.. ” என வரிசையாக கேள்வி கேட்டபடி அவனுக்கு ஷூவை மாட்டிவிட்டு நயனிக்கு தலை பின்னி ரிப்பன் வைத்தவள், கவினுக்கும் தலை சீவி விட்டு, நெற்றியில் திருநீற்றை பூசி, முத்தம் ஒன்றை வைத்தாள்… 

 

புகைப்பட சட்டத்தில் அடைத்து வைக்கப்பட்ட தன் தமக்கை சாம்பவியின் முன் வந்து சிறுவர்களை நிற்க வைத்தாள்.. 

 

‘எப்பையும் உன்னோட குழந்தைங்களுக்கு நீ ஆதரவா இருக்கனும்க்கா.. ‘ என வேண்டிக் கொண்டு இட்லியை ஊட்டி விட்டு முடிக்கும் நேரம் ஸ்கூல் பஸ் வந்தது.. 

 

இருவரையும் அதில் ஏற்றி விட்டவள் அடுத்த சிலநொடிகளில் தானும் பாந்தமான காட்டன் புடவையை மாற்றிக் கொண்டு வந்தாள்.. 

 

“அத்த இதுல காலைலக்கு மத்தியத்துக்குன்னு, ரெண்டு நேர சாப்பாடும் இருக்கு.‌‌. பப்பாளி பழம் வெட்டி வச்சிருக்கேன்.. பன்னெண்டு மணி வாக்குல சாப்பிட்டுங்க.. சாயங்காலம் நா வர நேரமாகும்.. ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே வருது.. அதுக்கு பிள்ளைங்கள ட்ரெயினிங் குடுக்கனும்.. கவினயும் நயனியவும் எங்கூடவே வச்சிக்கிறேன்.. நைட் சாப்பாட்டுக்கு சப்பாத்தி மாவ பிசைஞ்சி குருமாவும் செஞ்சி ஃப்ரிட்ஜில் வச்சிட்டேன்.. ” 

 

“என்னைக்கி பண்ண குருமாவோ.. ” என முகம் சுளிக்க.. 

 

“காலைல தா பண்ணேன் அத்தை.. மாவும் இப்ப தா பிசைஞ்சேன்.. நா கிளம்புறேன் அத்தை.. பாத்துக்கங்க.. எதுவும் வேணும்னா கால் பண்ணுங்க.. ” என்றபடி தன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல.. சேர்வத்தாயின் குரல் அதில் ஏற விடாது தடுத்தது.. 

 

“இந்தா.. இத மறந்திட்டு போற.. மரியாதையா சாப்பிடு.. சுவரு இருந்தாத்தா சித்திரம் வரைய முடியும்.. ” என்றவர் தந்த லன்ச் பேக்கில் கனிராவின் காலை உணவும் சிறு டப்பாவில் இருந்தது.. 

 

புன்னகைத்த படி தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல.. சேர்மத்தாய் கோபமாக வீட்டிற்கு வந்து லேண்டு லயன் ஃபோனை எடுத்தார்.. அவரின் கோபம் நம்பரை அழுத்திய வேகத்தில் தெரிந்தது.. 

 

“ஹலோ..”

 

“…”

 

” ம்.. நாந்தா..”

 

“… “

 

” உ மனசுல என்ன தா நினைச்சிட்டு இருக்க.. வயசு பொண்ணு தலைல அத்தனையையும் கட்டிட்டு நீ சொகுசா காலம் முழுக்க வாழ்ந்திடலாம்னா.. ” 

 

“….”

 

“எனக்கு உ சமாதானம் பேச்சு தேவையில்ல.. அடுத்த மாசத்துக்குள்ள அவா இந்த வீட்டுல இருக்குற கூடாது.. அவள கொண்டு வந்து எங்கிட்ட விட்டப்போ என்ன சொன்ன.. ஒரு வர்ஷத்துல அவளுக்கு கல்யாணம் பேசி முடிச்சிடுவேன்னு தானா சொன்ன.. ஒரு வர்ஷம் ஆச்சி.. இனியும் தாமதிக்காத.. சொல்லிட்டேன்.. ” என ஊருக்கே கேட்பது போல் கத்தி விட்டு விட்டு இறுக்கமாக முகத்தை வைத்தபடி இருந்தார் சேர்வத்தாய்.. 

 

“குட்மார்னிங் கனி.. உங்கத்த உன்ன வறுத்தெடுத்திட்டு இருக்கு.. நீ என்னடான்னா கூலா வண்டியோட்டிட்டு இருக்க.. ” என்றபடி கனியின் ஸ்கூட்டருக்கு இணையான வேகத்துடன் ஓட்டி வந்தாள் தோழி..

 

 “அவங்கள பத்தி தெரியாதா.. ” 

 

“தெரியும் தா.. ஆனா இந்த மொற நா அவங்க பக்கம் தா.. நியாயமா பேசுறாங்கப்பா.. எல்லா மாமியாரும் கெட்டவங்க கிடையாதுன்னு உன்னோட அத்தைய பாத்து தெரிஞ்சுக்கிட்டேன்.. 

 

எத்தன நாளைக்கி தா உங்கக்கா பசங்கள மேச்சிட்டு இருக்கப் போற.. உனக்குன்னு ஒரு வாழ்க்க வேண்டாமா.. ஒரு குடும்பம் வேண்டாமா.. ” 

 

“எனக்கு தா ஆல்ரெடி ஒரு குடும்பம் இருக்கு.. ” 

 

“அது உ அக்காவோடது.. உன்னோடது கிடையாது.. உன்னோடதா மாறனும்னா உ மச்சான நீ கல்யாணம் பண்ணிக்கனும்.. “

 

“நா சரின்னு தா சொன்னேன்.. ஆனா மச்சான் தா கேக்க மாட்டேங்கிறாரு.. ” என்ற போது தமக்கையின் கணவன் பேசியது நினைவிற்கு வந்தது.. 

 

ஓராண்டிற்கு முன், அது சாம்பவி இறந்து போன மறு மாதம்.. எப்பொழுதும் துறு துறுவென இருக்கும் கவினை சமாளிக்கவும், நயனி என்ற பெண் குழந்தையை வளர்க்கவும் வேண்டியும் சாம்பவியின் கணவனான திருமூர்த்தியிடம் சேர்வத்தாய் மறுமணத்திற்கு கேட்டார்.. 

 

அவனோ தன் காதல் மனைவியை மறக்க முடியாது, அவளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது மறுக்க.. குழந்தைகளின் பொறுப்பு கனிராவின் கைக்கு வந்து சேர்ந்தது.. 

 

இதற்கு முன் சித்தி என்ற உறவில் அவ்வபோது அளவான பாசம் காட்டி வந்தவள் தாயாய் மாறி சிறுவர்களை அரவணைத்து நின்றாள்.. 

 

அந்த அரவணைப்பை பார்த்த சேர்வத்தாய்க்கு கனிராவையே மகனுக்கு கட்டி வைத்தால் என்ன, தமக்கை குழந்தைகளை தன் குழந்தைகள் போல் பார்த்துக் கொள்வாள் என்ற யோசனை தோன்ற.. இருவருக்கும் இடையே திருமணப் பேச்சு எழுந்தது.. 

 

தமக்கை குழந்தைகளை விட்டு பிரிய மனமில்லாத கனிராவும் திருமணத்திற்கு‌ சம்மதம் சொல்லி விட்டாள்.. ஆனால் திருமூர்த்தி‌யோ..

 

“உங்கக்கா உன்ன அடிக்கடிக்கடி அவளோட முதல் குழந்தன்னு சொல்லுவா தெரியுமா.. ” 

 

“ம்.. நல்லா தெரியும் மச்சான்.. எனக்கும் அம்மா கிடையாது தானா.. பவி தா அம்மாவா இருந்து என்ன வளத்தா.. இத நா உங்களுக்கு சொல்ல வேண்டியதே இல்ல.. எங்க ரெண்டு பேர பத்தியும் உங்களுக்கு நல்லாவே தெரியும்.. சின்ன வயசுல இருந்து பாத்திருக்கிங்களே மச்சான்.. ” என புன்னகைக்க..  

 

“அக்கா அம்மான்னா.. அப்ப நா.. ” என கேள்வி எழுப்பா.. 

 

“மச்சான்.. ” என புரியாது முடித்தாள் கனிரா.. 

 

“உங்கக்கா உனக்கு அம்மான்னா நா உனக்கு அப்பா கனி.. அந்த ஸ்தானத்துல தா உன்ன இது நாள் வரை வச்சி பாத்திருக்கேன்.. இப்ப திடீர்னு உன்ன கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா.. மகளா பாத்த உன்ன.. ச்ச.. வேண்டாம் கனிரா.. அம்மா சொல்ற கேட்டு உனக்குள்ள அந்த எண்ணத்த வளக்காத.. ” 

 

“நா வளக்கல மச்சான்.. ஆனா இந்த குழந்தைங்களுக்கு அம்மா வேணுமே.. அப்ப நீங்க வேற யாரையாது கல்யாணம் பண்ணிக்கலாம்ல.. ” என்றபோது திருமூர்த்தியால் உடனே சம்மதம் சொல்ல முடியவில்லை..

 

கனிராவுடன் எழுந்த திருமண பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தவனால் மறுமணத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. 

 

அது அவனின் காதல்.. சாம்பவியை கண்ட முதல் நாளில் இருந்து முளைவிட்ட காதல் இன்று குடும்பமாய் அவளுடன் வாழ்ந்து, குழந்தை குட்டி என விருட்சமாய் எழுந்து நிற்கும் போது அதன் வேர் அழிந்து விட்டது.. ஆனால் விருட்சத்தை காக்க வேர் வேண்டுமே என்ற கனிராவிற்கு அவன் தந்த பதில் மௌனம் மட்டுமே.. 

 

சாம்பவியை மறக்க முடியாத அவனின் காயத்தை காலம் சரி செய்யும் என்று அவனை அவன் போக்கில் விட்டார் சேர்வத்தாய்.. 

 

சேர்வத்தாய்க்கு ஒரு மகன் இரு மகள்கள்.. நடுத்தர குடும்பம் தான்.. சொல்லப்போனால் சேர்வத்தாய் தான் அந்த குடும்பத்தின் அச்சாணி.. 

 

தலைமகனான திருமூர்த்தி வேலைக்கு செல்லும் வரை கணவன் வாங்கி வைத்த கடனுக்கு வட்டி கட்டி, மகள்களை படிக்க வைத்தார்.. 

 

தங்கை இருவருக்கும் நகை போட்டு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு திருவின் தலையில் விழ.. ஏகப்பட்ட பொறுப்பு அவனுக்கு.. 

 

அதனால் பத்து ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தன் இருபத்தி ஆறு வயதில் இருந்து துபாயில் வேலை பார்க்கிறான்.. 

 

இன்னும் ஒப்பந்தம் முடியவில்லை.. இரண்டு ஆண்டுகள் மீதம் உள்ளது.. அது முடிந்த பின் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டிருக்கும் சேர்வத்தாயின் இப்போதைய ஒரே கவலை கனிரா தான்.. 

 

பிள்ளைகள் இருவரும் அவளுடன் அளவுக்கு அதிகமாக ஒன்றிக் கொள்வதை அவரால் ஏற்க முடியவில்லை.. 

 

“அதா அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்ல.. அப்றமும் எதுக்கு வயசுக்கு வந்த பொண்ண வீட்டில வச்சிருக்கனும்.. அந்த பிள்ள தலைல அவன் குடும்பத்த தூக்கி வைக்கனும்… 

 

பிள்ளைங்களும் கனிம்மா கனிம்மான்னு அவா காலக் கால சுத்தி வருதுங்க.. நாளைக்கி அவளுக்கு கல்யாணமாகி புருஷெ வீட்டுக்கு போய்ட்டா, அவள விட்டுடு எப்படி இதுங்க ரெண்டு இருக்குங்க.. 

 

ஏற்கனவே அம்மா பாசம் பாதிலயே அந்து போச்சி.. இப்ப அம்மையா அவள நனைக்குதுங்க.. அதுவும் நிரந்தரம் கிடையாதுன்னா எப்படி அதுங்க ஏத்துக்கும்.. தவிச்சி போய்டாது.. 

 

ஒன்னு திரு கனிராவ கல்யாணம் பண்ணிக்கனும்.. இல்ல கனிராக்கு கல்யாணம் பண்ணி உடனே தூர வைக்கனும்.. பிள்ளங்க கிட்ட இந்த குலாவு குலாவுனா வரப்போற திரு பொண்டாட்டிய இதுக அம்மாவா ஏத்துக்காதுங்க.. இந்த மொற வர்றவன இதுக்கு ஒரு முடிவு கட்டாம திரும்பி போக விடக்கூடாது.. ‘ என்ற உறுதியுடன் இருந்தார் அவர்.. 

 

தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. சேர்வத்தாையோட நினைப்பு ரொம்ப சரிதான்.
      கனி மீதி இவ்வளவு பாசமா இருக்கும் பிள்ளைங்க அவ கல்யாணம் பண்ணி போயிட்ட என்ன பண்ணுவாங்க