வரமொன்று தருவாய்..
தவம் 06
“என்னடி சொல்ற..?” நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமியவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாது திகைப்புடன் பெண்ணவளிடம் கேட்டாள்,அக்காக்காரி.
“அந்த செவப்பு மாணிக்கம் இருக்கே..அத கைல எடுத்ததால தான் நாம இங்க வந்துருக்கோமாம்..அது தொள்ளாயிரம் வருஷம் பின்னாடி வந்துருக்கோம்..” என்க தலை சுற்றிப் போனது,கேட்டவர்களுக்கு.
“அது எப்டிடி..? நாம அந்த மாணிக்கத்த புடிச்சதும் சரியா இந்த வருஷத்துக்கே வந்து நிக்கறோம்..?”
“அந்த மாணிக்கத்துக்கு ரெண்டு தடவ தான் பவர் இருக்காம்..அதுவும் நம்ம காலத்துல இருந்து இந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் மட்டுந்தான் போக முடியுமாம்..அதுவும் இல்லாம அந்த மாணிக்கத்த அந்த சித்தர் உருவாக்கி எடுத்ததுக்கு காரணமே நா தானாம்..நா இந்த காலத்துக்கு வரனுங்குறது தான் ஒரே ரீசன்..”
“என்னடி ஒளறி கிட்டு இருக்க..? நீ எதுக்காக இங்க வரனும்..? நீ வர்ர அளவு தேவ என்ன..?”
“இங்க இளவரசரோட சாபத்த தீக்கறதுகு நா தான் வர்னுமாம்..என்ன எழவோ தெரில..அந்த தாத்தா வேற ஒன்னயும் முழுசா சொல்ல மாட்டேங்குறாரு..பொறகு வெளக்கமா சொல்றேன்னு சொல்றாரு..எனக்கு சும்மா சொன்னாலே புரியாது..இதுல அவரு வேற பொடி வச்சு பேசவும் சைப் டைட்டிள் இல்லாம சைனீஸ் படம் பாக்கற போல தான் இருக்கு..”
இத்தனை நேரம் இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சகோதரனுக்கு நிலமையின் தீவிரம் தெரிந்தாலும் அத்தனை குழப்பமாய் இருந்தது.
“சரி அந்த இளவரசனுக்கு எதுக்கு சாபம் கொடுத்தாராம்..? என்ன சாபமாம்..?”
“இங்க வந்துட்டு போனாரு..மன்னர் சார்..அவரோட தாத்தா ஒரு வுமனைசர்..அதாவது பெண் பித்தன்..அந்தப் புரம் ஃபுல்லா பொண்ணுங்கள நெரப்பி வச்சிருப்பாராம்..அவர் கண்ணுல எந்த பொண்ணு அழகா தெரிஞ்சிச்சோ அவளால தப்பிச்சி போகவே முடியாதாம்..”
“ம்ம்..அப்றம் என்ன எலி..?” குழப்பத்துக்கு மாறான ஆர்வம் சத்யாவின் முகத்தில்.
“ஒரு தடவ காட்டுல இருக்குற முனிவர பாக்க போனவருக்கு அங்க அவரோட மடத்துல வேல செஞ்சிட்டு இருந்த பொண்ணு மேல வந்துச்சாம் கண்ணு..அந்த பொண்ணு கடத்தினதுக்கு அந்த முனிவர் கொடுத்த சாபம் தானாம் அது..இனிமே அவரு எந்த பொண்ணு மேலயாச்சும் சுண்டு வெரலால தீண்டுனா கூட அந்த பொண்ணு ஏழர நாழிகை..அப்டின்னா மூணு மணி நேரம் செலயா மாறி நின்னுருமாம்..இது தெரிஞ்சதும் அவரால பொண்ணுங்கள நெருங்க கூட முடியலயாம்..”
“அப்றம்..”
“இந்த பைத்தியம் அவரு சொல்லியும் கேக்காம செலய டச் பண்ண போனதுக்கு அப்றம் சாபம் தந்துட்டாராம்..அவரு ஒடனே செத்துப் போவாருன்னு..மனுஷனும் அங்க ரத்த வாந்தி எடுத்து மண்டயப் போட்ருச்சாம்..”
“அவன எல்லாம் கண்டந்துண்டமா வெட்டி இருக்கனும்..சரி இப்போ இந்த கெழட்டு மூதேவி தான் செத்துருச்சுல..அவருக்கு தான் சாபம்..ஆனா இப்போ எப்டி இளவரசனுக்கு சாபம் வந்துருக்கும்..?”
“அங்க தான் இருக்கு ட்விஸ்டு..அந்த கெழட்டுப்பய ரொம்ப அழகாம்..அந்த திமிருல தான் இப்டியெல்லாம் இருக்குன்னு அந்த முனிவருக்கு ஒரு எண்ணம்..அந்த கெழட்டுப்பய செத்ததுக்கு அப்றம் ஒரு தடவ அந்த முனிவர் இங்க கோயிலுக்கு வந்துருந்தாராம்..”
“ம்ம்ம்ம்ம்..”
“அந்த நாள் தான் இளரசருக்கு நேம் வக்கிற பங்க்ஷன் கோயில்ல நடந்துட்டுருந்துக்கு..அப்போ வந்தவருக்கு அங்க அந்த கெழட்டுப் பய ஜாடைல பொறந்திருந்த இளவரசன கண்டதும் ஏன்னு இல்லாம கோபம் வந்து சாபம் கொடுத்துட்டாராம்..”
“எதே அந்த பச்ச மண்ணுக்கு எதுக்கு டி சாபம்..? என்ன லாஜிக் இது..?”
“சத்து மாவு..லாஜிக் எல்லாம் பாக்க கூடாது..அவரு கோவத்துல சாபம் கொடுத்துட்டாரு..ஏன்னா அந்த கெழட்டுப்பய ஜாடைல இருக்குறதுனால இளவரசனும் பெரியவன் ஆனதுக்கப்றம் தப்பு பண்ணுவாருன்னு அவருக்கு தோணிருக்கு போல..அதான் சாபம் கொடுத்து விட்ருக்காரு..”
“அதான் என்ன சாபம்..?”
“அந்க கெழட்டுப்பயலுக்கு போலவே இளவரசனோப சுண்டு வெரல் யாராச்சும் பொண்ணு மேல பட்டுச்சுன்னா இல்லன்னா பொண்ணு யாரும் அவர டச் பண்ணுச்சுன்னா அந்த பொண்ணு மூணு மணி நேரம் செலயா நின்னுருமாம்..”
“அடப்பாவி இப்டி வாழ்க்கைல வெளயாடிட்டானே..பாவம்ல ப்ரின்ஸ்..ஸோ ஸேட்..என்னன்னாலும் இப்டி ஒரு சாபம் வேணா..பாவம் மனுஷன்..”
“வருத்தப்பட்டது போதும்..கதய கேளு..அப்றம் என்னாச்சுன்னா இப்ப வந்தாரே மன்னர் சாருக்கு கோவமா வர அவரு போய் நியாயம் கேட்டு இருக்காரு..அதுக்கப்றம் தான் அவருக்கு அவரோட தப்பு புரிஞ்சிருக்கு..”
“ம்ம்..”
“அவரால சாபத்த இல்லாமாக்க முடியாது..ஆனா கொறக்கிறேன்னு கொறச்சுருக்காரு..எப்டி கொறச்சு இருக்காருன்னா..இளவரதனுக்கு ரத்தம் சம்பந்தம் இருக்குற நெருங்குன ஆளுங்க..அம்மா,பாட்டி,கூடப் பொறந்த அக்கா தங்கச்சிங்கள தவிர வேற யார் மேல அவரு வெரலாச்சும் பட்டாலும் யாராச்சும் பொண்ணு அவர டச் பண்ணாலும் அந்த பொண்ணு செலயாகிருவாங்க..”
“இதென்னடி அநியாயம்..?”
“அரசர் சாரும் இதே கேள்விய தான் கேட்டு இருக்காரு..அதுக்கு பயப்டாதீங்க..இந்த சாபத்துல இருந்து உங்க மகன காப்பாத்தா ஒருத்தி வருவா..அவ வந்தா எல்லாம் சரியாய்டும்..ஆனா அதுக்கு அவருக்கு இருபத்தேழு வயசு ஆகற வர காத்திருக்கனும்..அப்போ ஒருத்தி வருவா..வந்து உங்க பையன் சாபத்துக்கு எல்லாம் விமோச்சனம் கொடுப்பான்னு சொல்லியிருக்காரு..”
“அப்போ எலி..?இப்போ அந்த சாப விமோச்சனம் கொடுக்க வந்த ஆளு நீ தான்..உன்னால தான் அந்த மனுஷன் நிம்மதியா இருக்க போறாரு..சரி டி எதுக்காக உன்ன சூஸ் பண்ணாங்க..? உனக்கும் அவருக்கும் என்ன தான் சம்பந்தம்..? காரணமே இல்லாம எதுக்கு நீ வரனும்..?”
“ஆமா எலி..சத்து மாவு சொல்றதும் கரெக்ட் தான்..எதுக்காக நீ வரனும்..? அதான் என்னோட பெரிய டவுட்டே..”
“எனக்கும் புரில டி..ஆனா அவரு சொன்னாரு நா தொட்டாவோ எப்டியாச்சும் அவர காப்பாத்தி கொடுக்க சொல்லி சொல்றாங்க..நாம பைத்தியம் மாதிரி இங்க வந்து மாட்டிகிட்டோம்..”
“சரி அவர சாபத்துல இருந்து வெளிய எடுக்கனும்னா நீ என்ன செய்யனும்..?”
“அவர கல்யாணம் பண்ணிக்கனுமாம்..”
“எதே..” சட்டென அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்,சத்யா.
“ஆமா..அவர கல்யாணம் பண்ணிக்கனுமாம்..அவரு கட்டு தாலி கழுத்துல தொங்க ஏதோ ஒரு காட்டுக்கு போய் அங்க இருக்குற சாமிய வேண்டிகிட்டு என்னோட ரத்தத்தால அவரி நெத்தில பொட்டு வச்சிட்டு வேண்டிகிட்டா சரியாய்டுமாம்..”
“அதுக்கு எதுக்கு டி தாலி கட்டனும்..? சும்மா போய் வேண்டிகிட்டு வந்துர்லாம்ல..” கோபத்தில் குதித்தான்,சகோதரன்.
“வரம் கேக்கற பொண்ணு முழு மனசோட அவர ஹஸ்பண்டா நெனச்சிகிட்டு தான் வரம் கேக்கனுமாம்..இல்லன்னா சாபம் தீர்ரதுக்கு வரம் கெடக்காதாம்..அதுவும் இல்லாம அவரு ஜாதகத்துல ஏதோ தோஷம் இருக்காம்..அது ஆயுசுக்கு கண்டம்னு சொன்னாங்க..அவருக்கு நெறய ஆபத்து வருமாம்..அதுல இருந்து அவர காப்பாத்த போறது அவரு கட்ற தாலி தானாம்..”
“என்ன எழவுடி இது..? பொய்யா கட்டி வச்சிருக்கானுங்க..மெண்டல் பயலுங்க..அப்டியெல்லாம் எதுவும் இல்ல..பேசாம இங்க இருந்து தப்பிச்சி போய்ரலாம்..”
“எரும மாடே நாம தப்பிச்சு போனும்னா அந்த செவப்பு மாணிக்கம் நம்ம கைக்கு வேணும்..”
“ஆமா நாம அன்னிக்கு மயங்கிக் கெடந்த எடத்துல போய் பாத்துட்டு வந்தா இருக்கும்ல..”
“ம்ஹும் இருக்காது..ஏன்னா அது இப்போ இருக்குறது மன்னர் சார் கைல..” என்றிட அதீத அதிர்ச்சி அவன் விழிகளில்.
இவ்வளவு நேரமும் அமைதியாய் குறுக்கே பேசாது கேட்டுக் கொண்டிருந்த சைந்தவியின் விழிகளும் ஒருங்கே விரிந்தன.
“அப்போ என்ன கல்யாணம் பண்ணிக்க போறியா..?”
“என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது அந்தாள எல்லாம்..” கத்தியவளின் விழிகள் இயலாமையில் கலங்கிட மற்றைய இருவரினதும் புருவங்கள் சுருங்கின.
பஞ்சு போன்ற மெத்தையில் படுத்திருந்தாலும் உறக்கம் துளியும் இல்லை,அவள் விழிகளில்.
அகலுடையாய் கூறிய விடயமே செவியோரம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்க அவளுக்கோ அவர் சொன்ன விடயத்தை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
“நீர் இளவலை மணந்து கொண்டு மகாராணியாகிட வேண்டும் மகளே..” கட்டளையா வேண்டுதலா என்று பிரித்தறிய முடியா குரலில் அவர் கூறிட அவள் கண் முன்னே வந்து சென்றது,ஒரு உருவம் தானே.
அந்த சிற்பத்தின் நிழற்படம் தானே,சரேலென இமைத்தாழை சாற்ற மறந்திருந்த விழிகளுக்குள் வந்து போனது.
ஏன் அந்த விம்பம் மின்னி மறைந்தது என்று அவளுக்கு புரியவேயில்லை.அந்த சிற்பத்தை வெறும் சிற்பமாக மட்டும் அவளால் கருத முடியவில்லை என்பது சத்தியமான உண்மை.
சகோதரங்களிடம் தவறுதலாய் எடுத்துச் சொன்னால் கூட கேலிக் கிண்டலுக்கு ஆளாக்கி விடுவார்கள் என்று தெரிந்தவளுக்கு இப்படியான உணர்வொன்று எழுந்ததே இல்லை.
அன்று அந்த அரண்மனையில் வைத்து அந்த சிற்பத்தைக் கண்டதுமே அவளுக்குள் உண்டாகிற்ற பிரளயம் ஈர்ப்பென்று செய்தி சொல்லிப் போனதை அவள் மனமோ மறுபேச்சின்றி ஏற்றுக் கொண்டது.அதன் பின் நடந்தவை ஒவ்வொன்றும் அதை பற்றிய எண்ணத்தையே புதைந்திடச் செய்திருக்க நேற்று அந்த சின்னச் சிற்பம் தன் கையில் இருப்பதை கண்டவள் உணர்ந்த உவகைக்கு அளவே இல்லை.
ஆனால்,இப்போது திருமணம் என்று வரும் பொழுது மனதின் ஏன் அந்த சிற்பத்தின் உருவம் கண் முன்னே வந்து நிற்கிறது என்று அவளுக்கு புரிந்த பாடில்லை.ஈர்ப்பு தான்.இதுவரை அவள் உணர்ந்தே இராத ஈர்ப்பு தான்.இருப்பினும்..?
அது வெறும் சிற்பம் என்று இன்னுமே அவளால் நம்பிட முடியவில்லை.கண்ட நொடியில் இருந்து இந்தக் கணம் வரை ஒரு உயிராகவே அது அவளின் மனதில் இடம் பிடித்து தடம் பதித்திருந்தது.
சிற்பத்தின் மீதான ஈர்ப்பு.நடைமுறையில் சாத்தியமற்ற விடயம் என்று அவளுக்கு தெரிகிறது.இதே திருமணம் என்கின்ற கட்டாயம் வராவிடின் அது காலத்தோடு கரைந்து போயிருக்கும் என்கின்ற எண்ணமும் மனதில் இருந்திடாமல் இல்லை.
தன்னை நினைத்தே அவளுக்கு புன்னகையும்.அவளறிந்து இதுவரை எந்த ஆணிடமும் அவள் ஈர்க்கப்பட்டதுமில்லை.அவளை சலனப்படுத்தியதுமில்லை.யாராலும் தன்னை அசைத்திட முடியாது என்கின்ற அசாத்திய நம்பிக்கை அவளுக்கு இருந்ததை மறுக்க இயலாது என்றாலும் இப்பொழுது அதில் சிறு மாற்றம்.
உள்ளத்தில் சிறு ஈர்ப்பு.மனதில் சிறு சலனம்.திடுமென இந்த பூகம்பங்கள் உருப்பெற்றதன் காரணம் புரியாது விட்டத்தை வெறித்துக் கொண்டே விழித்திருந்தாள்,அவள்.
அதே சமயம்,
“நீ செய்வது உனக்கு உசிதமாய்த் தோன்றுகிறதா மதுரா..? நம் செய்கையை எவரேனும் மன்னரின் காதோரம் கூறினால் நம்மை பற்றி என்ன எண்ணுவார்..?”
“பெண் பித்தன் என்று அவர் எண்ணிக் கொண்டாலும் எனக்கு அது ஒரு பொருட்டே இல்லை..நீ இதழ்களை பூட்டிக் கொண்டு வா..” நிமிர்வாய் உரைத்தான்,அரிமாவவன்!
“அடேய்..யாரேனும் காதோரம் ஒப்புவித்தால்..”
“தந்தையின் காதோரம் இரகசியம் பேசிட அன்னைக்கு மட்டுந்தான் உரிமையுண்டு..அவருக்கு விடயம் சென்று சேரும் சாத்தியமில்லை..ஆக,நீ அச்சம் கொள்ளாதே..”
“நா எடுத்துரைத்து நீ கேட்டுக் கொண்டால் பிரபஞ்சம் உருவழிந்து தான் போய் விடும்..” முணுமுணுத்த படி மித்தரனின் பின்னூடு வந்து தாவி உத்திரத்தில் ஏறிக் கொண்டான்,தேனவன்.
“மதுரா தீர்க்கமாய் சிந்தித்துக் கொள்..நடுநிசியில் உத்திரத்தை பெயர்த்துக் கொண்டு குதிப்பது சரியல்ல..அதுவும் அந்நிய மங்கையர் தங்கியிருக்கும் இடத்தில் இப்படி அத்துமீறி பிரவேசிப்பது அழகுமல்ல..அந்த பேதையை நீ சந்திக்க வேண்டுமென்றால் பொழுது விடிந்த பின் வந்து உரையாடிடலாமே..கொள்ளையர் கூட்டம் போல் நடுநிசியில் உட்பிரவேசிப்பது சரி தானா..?”
“தேனவா..பொழுது விடிந்த பின் யான் அந்தப் பெண்ணிடம் உரையாட வந்தால் கூட என் பின்னே இருவரை வேவு பார்த்திட உடன் அனுப்பி வைத்திடுவார் ராஜகுரு..அவர் என்னை அந்தப் பெண்ணை சந்திக்க அனுமதிக்காமல் போயினும் அதிசயமில்லை..அவருக்கு என் சித்தம் நன்றாகவே தெரியும்..”
“……………”
“அப்படியிருக்கையில் யாரும் அறியாமல் அந்தப் பெண்ணை காண வருவது சற்று சிரமம்..புரிந்து கொள்வாய் என்று நினைக்கின்றேன்..இப்பொழுதும் உப்பரிகையின் ஊடு உள்ளே வந்திருக்கலாம்..தவறியேனும் யாரின் விழி வீச்சிலும் சிக்கக் கூடாது என்பதற்குத் தான் இந்த பிரயத்தனம்” நிதானமாய் மொழிந்தவனோ உத்திரத்தை பெயர்த்துக் கொண்டு உள்ளிறங்கியது என்னவோ,அந்த சிறிய அரண்மனையில் சத்யா தங்கியிருந்த அறையில் தான்.
“யாரடா இந்த ஆண்மகன்..?” ஆழ்ந்த துயிலுடன் சயனத்திருந்தவனை நோக்கியவனோ அரவம் எழுப்பாது கதவை விரித்து வெளியே வந்திடவும் உறக்கம் இல்லாது பேதையவள் வெளியில் வந்து மேன்மாடத்துக்கு படிக்கட்டுக்களிள் ஊடு ஏறிச் செல்லவும் சரியாய் இருந்தது.
ஆங்காங்கே பற்றி எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்கள் இருளை விரட்டிக் கொண்டிருக்க அந்த வெளிச்சத்தில் ஏறிச் செல்பவளை துல்லியமாய் கண்டு கூர்மையேற்றிக் கொண்டன,அரிமாவவனின் நீ(ல)ள நயனங்கள்.
“தேனவா அந்தப் பெண் மேன்மாடத்துக்குள் பிரவேசித்து விட்டாள்..நீ இங்கேயே தரித்து நில்..யான் மேலேறிச் சென்று உரைக்க வேண்டியவற்றை அவளிடம் உரைத்து விட்டு வருகிறேன்..” மித்தரனிடம் கூறியவனோ பதில் மொழிக்கு தரித்திராமல் அரவமின்றி அவளைப் பின் தொடர தன்னைப் பின் தொடர்பவனைப் பற்றிய சிந்தனை சிறுதுளியுமின்றி மேன்மாடத்தில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்,பேதையவள்.
செவ்வேலரின் ஓய்வுப் பொழுதுகளை கழிப்பதற்காக கட்டப்பட்டிருந்த அரண்மனை தான் அது.மூன்று மாடங்களாய் நிமிர்ந்து நின்ற அந்த அரண்மனையின் மூன்றாம் மாடத்தின் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றால் பரந்து விரிந்ததாய் விசாலமான உப்பரிகை.
அந்த உப்பரிகையில் இருந்து படுத்துக் கிடக்கும் பசுமை சூழ் பர்வதங்களை தீண்டிச் செல்லும் மென் காற்றின் தழுவலுடன் இரசிக்க முடியும்.
அகத்தில் குடைந்த எண்ணவலைகளை அடக்கிட உப்பரிகைக்கு வந்தவளோ கரங்களை மார்புக்கு குறுக்கே மடித்த படி நின்றிருந்த அவளைத் தழுவியிருந்த பருத்திச் சேலை காற்றின் தாளத்துக்கேற்ப அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்தது.
அவர்களை இங்கு அழைத்து வருகையிலேயே வஸ்திரங்களும் அணிகலன்களும் குதிரை பூட்டிய ரதங்களில் கொண்டு வரப்பட்டிருக்க அதைக் கண்டு வியந்து விக்கித்தான் போயினர்,உடன் பிறப்புக்களும்.
பட்டாடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொள்ளும் படி அகலுடையார் வேண்டிட அவரின் மனம் கோணாதவாறு மறுத்தவளோ முன்பிருந்த உடையில் இருந்திட முடியாது என்கின்ற ஒரே காரணத்துக்காகத் தான் பருத்திச் சீலையை போர்த்திக் கொண்டதே.அணிந்து பழக்கம் இல்லாதவளுக்கு அதுவும் அசௌகர்யத்தை தான் உருவாக்கியிருந்தது.
முகுதுப் புறம் தன்னை நோக்கி இருக்குமாறு திரும்பி நின்றிருந்தவளை உப்பரிகை கதவு வாயிலில் தரித்து நின்ற படி பார்த்திருந்தான்,அரிமாவவன்.
இடையில் கரமொன்றை மடக்கி ஊன்றியவாறு மறு கரத்தை விரித்து கதவு நிலையில் வைத்திருந்தவனின் இதழ்களில் கேலி புன்னகை தொக்கியிருக்க எகத்தாளமாய் இதழ் வளைத்தவனின் விழிகள் அவளை கூர்ந்து நோக்கின.
“அஹ்ஹான்..அருமையான காட்சி தான்..அணிகலன் எதுவும் பூட்டிக் கொள்ளாமல் பெண்ணொருத்தி நிற்பது அதிசயமாகத் தான் இருக்கிறது..” மெதுவாய் இதழ் மொழிந்தவனோ வதனத்தை மறைக்கும் விதமாய் கரு நிற துகிலங்கியை சுற்றிக் கொள்ள தலைப்பாகை போல் சிரசில் ஏறியது,கனமான துணியொன்று.
கதர் உடையில் வறியவன் போன்ற தோற்றத்தில் உடைவாள் சகிதம் நின்றிருந்தவனின் நீல விழிகள் மட்டும் வெளித் தெரிந்து ஆளை அசரடிப்பதாய்.
மெதுவாய் பூனை பாதங்களுடன் அவளை நெருங்க முயன்றிட அதற்கு முன்னமே பேதயைவளின் முன்னர் இருவர் உப்பரிகையின் விளிம்பில் இருந்து பாய்ந்து இருவர் குதித்திட அச்சம் தொற்றிக் கொண்டவளின் பாதங்கள் ஈரடி பின்னேறின.
முகத்தை கருநிறத் துணிகளால் திரையிட்டு போர் வீரர்கள் போன்ற அங்கியில் விகாரச் சிரிப்புடன் அவளை நோக்கியவர்களின் விழிகளுக்குள் அமர்த்தலாய் அசராது நின்றிருந்த அரிமாவனின் விம்பம் வீழாது போனது தான்,அந்தோ பரிதாபம்.
“நம் காரியத்தை எளிதாக்கி விட்டாள் இவள்..” அவள் விழும் படி கூறிக் கொண்டு முன்னேறிட அச்சத்தின் போர்வையில் சிக்குண்டு தவித்தாள்,பேதையவள்.
“யாருடா நீங்க..? எதுக்குடா இங்க வந்துருக்கீங்க..நாசமாப் போறவனுங்களா.? யாருடா நீங்க..? மங்கி வேஷத்துல வந்திருக்கீங்க..” அவளுக்கு உச்சமான அச்சம் தான்.பிரதிபலிக்காது அவர்களை திட்டிட புரியாத பாவம்,முன்னிலை இருந்த இருவரின் முகத்திலும்.
அவளின் வசவுகளை உள்வாங்கியவனின் ஒற்றைப் புருவம் அசட்டையாய் ஏறி இறங்கிட உடைவாளை காற்றில் சுழற்றிட படி அவளின் பின்னே வந்து நின்றவனைப் பார்த்த இருவரின் விழிகளும் அச்சத்தால் நிரம்பின.
“என்ன இது நாம திட்டுனதுக்கு பயந்துட்டானுங்களா..?” எண்ணியவளின் தெறித்த விழிகள் அச்சத்தில் குளித்து தனக்கு பின்னே நோக்குவதை உணர்ந்தவளாய் பின்னே திரும்பிட அங்கு நின்றிருந்தவனைக் கண்டு அலறினாள்,பயத்தின் மிகுதியில்.
பாவம்,பேதையவளும்.அரிமாவவனையும் அவர்ளின் கூட்டு என்று நினைத்திருந்தாள்,வதனம் மூடி வருகை தந்திருப்பதை கண்டு.
அச்சத்தில் மிச்சத்தை வதனத்தில் படரவிட்டு பேராழி விழிகளில் மிரட்சி விரிந்திருக்க தன்னை உரசிக் கொண்டிருந்த விழிகளையும் வதனத்தின் அலையடித்த உணர்வுக் கோலங்களையும் துச்சமாய் கருதியவனுக்கு அவளின் திண்ணம் அறிய முடிவதாய்.
“மடத்தி” இதழ்கள் மெதுவாய் அசைந்திட அவளுக்கு திட்டியவனோ திரை மறைத்த நுதலை முதலிரு விரல்களால் அழுந்தத் தடவிக் கொண்ட தோரணை,
அட அப்படி ஒரு அழகு!
கம்பீரம் மிளிர்ந்து வழிந்தது.
அவளின் கரத்தை பற்றி இழுத்து தனக்கு பின்னே நிற்க வைத்திட அவன் பிடியில் எகிறினாள்,அவள்.
பதட்டத்தில் அவனின் நீல விழிகளை அவளை ஆராய மறுத்திருக்க அதை தெளிவாய் ஆழி விழிகள் கொண்டு உரசியிருந்தாலே போதும்,கண்டறிந்திருப்பாள்.
“டேய் விட்றா எதுக்குடா கைய புடிக்கிற..எரும மாடே விட்றா..” கரத்தை விடுவிடுவித்துக் கொள்ள பிரயத்தனப்படவளை ஒற்றைக் கையால் பற்றிக் கொண்டு உடைவாளால் தன்னை நோக்கி வந்தவனை விளாசிட அவனின் மாரும் சிரசும் வாளுக்கு இரையானது.செங்குருதி ஏற்றி வந்த வாளை கிலியுடன் பார்த்திருந்தவளின் வதனத்திலும் உதிரத் துளிகளிள் அபிஷேகம்.
முதல் வந்தவளை சாய்த்த பொழுதே இன்னும் மூவர் களத்தில் குதித்திட அலட்சியமாய் இதழ் வளைத்தான்,அலட்சியம் கடைவிழியில் தேங்க.
காற்றைப் போல் அவன் வாள் சுழற்றிய வேகத்தில் வியந்து மிரண்டு அவள் திகைத்துப் போயிருக்க இன்னுமே அவளின் கரத்தை பற்றிக் கொண்டு தான் இருந்தது,அவனின் அழுத்தமான பிடி.
அரிமாவவன் வாள் வீச்சில் வியந்து நின்றவளின் இமைகள் கொட்டிக் கொள்ள மறந்தது.ஒற்றைக் கரத்தால் அவள் வாளியற்றிய தோரணை தன்னை மறந்து அவனை வியந்து நோக்கிட உந்தித் தள்ளாமல் இல்லை.
அரணாய் நின்று அணையிட்டு அவளுக்கு சிறு சேதாரமுமின்றி அவன் காத்திட வந்திருந்த நால்வரும் அவனின் வாள் முனையால் கீறப்பட்டு குருதி கொப்பளிக்க தரையில் சரிந்திருந்த ஒருவனின் சிரசு மட்டும் முண்டத்தில் இருந்து தனியாய்.
“யாரு சாமி இது..?” பேய் முழியுடன் அவள் அவனின் பக்கவாட்டுத் தோற்றத்தை விரிந்த விழிகளுடன் உரசிக் கொண்டிருக்க அவனின் பிடியை விலத்தியவனோ வயிற்றில் ஆழமான காயத்துடன் தரையில் கிடந்தவனின் நெஞ்சில் பாதமேற்றி நசுக்கிட அவன் அலறிய அலறலில் அவளுக்கு உயிர்க்கூடு வற்றிப் போனது.
அவள் சிரசை கொய்திட வந்தவர்கள் தான்.இருப்பினும் அவர்களின் அலறல் அவள் அகத்தை கலங்கச் செய்தது மெய்.கண் முன்னே அரங்கேறிய கொலை அவள் சித்தத்தை மழுங்கடிக்கச் செய்திருந்தது.
“ஐயோ என்ன பண்றீங்க..?” சேலையால் வதனத்தில் இருந்த உதிரத் துளிகளை ஒற்றி எடுக்க மறந்தவளாய் முன்னே வர அழுத்தமாய் அவளை கூரிட்டுத் தள்ளியது,அவள் பார்வை.
“விலகிச் செல் பெண்ணே..துரோகிகளுக்கு கருணை காட்டுவது உசிதமானதல்ல..” அவன் சீறிட அவளோ நகர்ந்திடவில்லை.
“தள்ளி நில் மடத்தி..” அதிரும் குரலில் நேற்று சந்தித்தவன் தான் என நினைவில் வந்திட,”நீங்க” அவள் வினாத் தொடுக்கும் முன்னே பக்கமாய் வந்த இன்னொரு குள்ள நரி அவளை வாளால் வதம் செய்யப் பார்த்திட குறுக்கே வந்து தடுத்தவனின் கரங்களில் சிறு கீறல்.
உதிரம் கோடாய் பிரசவமாகத் துவங்கிட அவளை கண்டனமாய் பார்த்து விட்டு புதியவனுடன் வாட் போரிட்டவனோ அவனை சாய்த்திடும் கணம் அரிமாவவனின் துணியை கீறிச் சென்றது,அவனின் வாள் முனை.
கீறிச் சென்ற வாள் முனையுடன் பாதி துகிலங்கி இணைந்து வந்திருக்க திரையிடிருந்ததை பாதியை அவன் கழற்றியெறிட காற்றின் விசையில் அடிபட்டு அவள் முகத்தில் மோதியது,அது.
சட்டென பார்வைக்கு தடுப்பாய் வந்ததை விலக்கி விட்டு அவள் விழிகள் நிமிர்ந்திட ஆக்ரோஷம் ஓடிய விழிகளுடன் முறுக்கித் திரித்த புஜங்களுமாய் எதிரியவனை சாய்த்து விட்டு சினத்தில் சிவந்து அவள் புறம் திரும்பினான்,அரிமாவவன்!
அவளின் சிற்பம் உயிர்க்கொண்டு அவளுக்காய் போரிட்டதை நம்ப மறுக்கும் பிரமிப்புடன் பார்த்திருந்தாள்,அவள்.
அவள் எழிலிசையழகி!
வரம் கிட்டும்.
🖋️அதி..!
2024.10.10