வரமொன்று தருவாய்..
தவம் 03
கண்ணிமைக்கும் கணத்தில் வந்து நிரப்பிய பேய் இருளில் மூவரும் விக்கித்துப் போய் நின்றிட்டாலும் அடுத்த நொடியே சற்றுத் தள்ளி இருந்த இடத்தில் பிறப்பெடுத்த சிறு வெளிச்சம் மூவரின் கவனத்தையும் கவர்ந்தது.
அலைபேசியின் டார்ச்சை உயிர்ப்பிக்க சத்யா அலைபேசியை கையில் எடுத்தாலும் சார்ஜ் தீர்ந்து அலைபேசி செயலியழந்து போயிருக்க எரிச்சலானவனை சற்றே அமைதிப்படுத்தியது,இந்த ஒளி.
“என்னடா நடக்குறது எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு..” சைந்தவி பதட்டத்துடன் சத்யாவின் கரத்தைப் பற்றிக் கொள்ள அவள் பிடித்த வேகத்தில் அண்ணன்காரனுக்குமே ஒரு நிமிடம் உடல் அதிர்ந்தது.
“சத்து மாவு பயமா இருக்குடா..” அழுகுரலில் முணுமுணுத்தவாறு அவனை நெருங்கி நின்ற பெண்ணவளுக்கும் பயத்தின் உச்ச நிலை.
“இல்ல வா என்னன்னு போய் பாக்கலாம்..” என்றவனுக்கு இருளின் ஆட்சியில் கதவைத் தேடி வெளியே ஓடவும் வழியில்லை.
“பேசாம வெளில போய்ரலாமா..?” பெண்ணவள் கேட்டாலும் அவளுக்கு ஏனோ அந்த சிற்பத்தை விட்டுச் செல்ல மனம் இடம் தரவில்லை.
“இல்ல சத்யா அங்க போக வேணா..அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க நா வரமாட்டேன்..வாங்கபோலாம்..” சைந்தவி கும்மிருட்டுக்கு பயந்து கத்திட சத்யாவுக்கோ அங்கிருந்த செல்ல ஏதோ ஒன்று தடுத்தது.
இருவரின் கரத்தையும் இறுகப் பற்றிக் கொண்டு ஒளி விகசித்துக் கொண்டிருந்த இடத்தை நோக்கிச் செல்ல அங்கிருந்த சிறு பெட்டியைக் கண்டதும் அவனின் புருவங்கள் சுருங்கின.
“என்னடா இது..? இந்த பெட்டில இருந்து லைட் வருது..?” இத்தனை நேரம் பயந்தவள் இவள் தானா என சந்தேகம் வரவழைக்கும் விதமாய் ஆர்வமாய் அவள் கையில் எடுத்து சத்யா தடுக்கும் முன்னமே திறந்திட அந்த பெட்டிக்குள் அவள் கண்ட அதே உருவத்தின் சிற்பம்,ஒற்றைக் கரத்துக்குள் பொத்தி வைத்து அடக்கும் படி சிறியதாய்.
அதிர்வும் இரசனையும் சூழ்ந்த விழிகளுடன் அவள் அதை கையில் எடுத்து விட்டு பெட்டியை ஏதோ நினைவில் தவறவிட பெட்டியில் இருந்து உருண்டிடோடிற்று,அவர்கள் தேடி வந்த சிவப்பு மாணிக்கம்.
“டேய் செவப்பு மாணிக்கம் டா..” ஆச்சர்யம் மிகுந்த குரலில் சொல்லிக் கொண்டு அவள் கையிலெடுக்க அதன் முன் பாய்ந்து தடுக்கப் பார்த்து கீழே விழுந்து இருந்தாள்,சைந்தவி.
சைந்தவியை பற்றியிருந்த கரத்துடன் சத்யா கீழே விழ சத்யாவின் கரத்தைப் பற்றியிருந்ததால் பக்கத்தில் விழுந்தாள்,பெண்ணவள்.
●●●●●●●
“ஆ அம்மா..எந்த யானடா இது என் மேல ஏறி படுத்து இருக்குறது..?” தன்னை நோகடிக்கச் செய்த கனத்தை சபித்த படி விழி திறந்த சைந்தவிக்கு தன் தோற்பட்டையில் தலை வைத்து ஒற்றைக் காலை தன் மீது போட்டுக் கொண்டு உறங்கியிருப்பவளின் மீது கோபமாய் வந்தது.
“பைத்தியக்காரி..தூக்கத்துல கால் போட வேணாம்னு சொன்னா கேக்க மாட்டா..மெண்டல்..” பெண்ணவளை விலக்கித் தள்ளி விட்டு எழுந்தவளுக்கு தமக்கு சற்றுத் தள்ளி படுத்திருந்த சத்யாவைக் கண்டதும் வந்ததே கோபம்.
ஓங்கி அவனுக்கு ஒரு உதை விட்டவளோ,”பயந்தாங்கொல்லி எரும..எத்தன தடவ தான் சொல்றது என் ரூம்கு வராதன்னு..அண்ணனா இருந்தாலும் இப்டி பண்ணாதன்னு சொல்றத கேக்க மாட்டியா..?” அவனுக்கு புரிகிறதா இல்லையா என்றும் தெரியாமல் கத்தியவளுக்கு தனிமைக்கு பயந்து தன்னறையில் வந்து கீழே படுக்கும் சகோதரனின் செயலில் உச்சகட்ட கடுப்பாகும்,சில சமயங்களில்.
“என் ரூம்ல வந்து படுத்து உசுர வாங்குதுங்க ரெண்டும்..” முணுமுணுக்க அவள் எத்தி வைத்த உதையிலும் சத்யாவுக்கு விழிப்புத் தட்ட மறுத்திருக்க அப்போது தான் சுற்றும் முற்றும் பார்த்தாள்,அவள்.
“அஅஅஅஅஅஅஅஅ..” சுற்றத்தை விழிகளை சுழல விட்டு மீண்டவள் தொண்டை கிழிய கத்தியதில் பதறிக் கொண்டு எழுந்தான்,சகோதரன்.
“என்ன..? என்ன..? என்ன..? யாரு..? யாரு..? யாரு..?” அவன் பதட்டமாய் வினவ அதில் ஏக சினம்,தங்கைக்கு.
“ஒரு கேள்விய ஒரு மொற கேட்டுத் தொலடா பக்கி..பெரிய பாட்ஷான்னு நெனப்பு..” அந்த களேபரத்திலும் அவள் வாரிட முறைப்பொன்றை அள்ளி வீசி விட்டு விழிகளை சுற்ற விட்டவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“சைந்து எங்கடி இருக்கோம் நாம..? சுத்தியெல்லாம் இருட்டா இருக்கு..?” பதபதைப்புடன் கேட்டவனுக்கு அடர் மரங்கள் சூழ் நிலவொளி மட்டும் எட்டிப் பார்க்கும் இடத்தில் தாமிருப்பது அதிர்வே.
“எனக்கு மட்டும் என்னடா தெரியும்..? நா உங்க கூட தான வந்தேன்..மொதல்ல இந்த பக்கிய எழுப்பி விடு..இடியே விழுந்தாலும் நிம்மதியா தூங்குவா இவ..” சலிப்பாய் அலுத்துக் கொண்டவளுக்கு பயம் தான்,இல்லாமல் இல்லை.சகோதரனின் முகத்தைப் பார்த்து கொஞ்சம் தன்னை மீட்டுக் கொண்டாள்.
அவள் உடைகையில் அவன் நிமிர்ந்து நின்றால் அவன் விழுகையில் அவள் தானே தாங்கிப் பிடித்தாக வேண்டும்..?
“எலி..எலிம்மா..எலிக்குட்டி எந்திரிடி..எலிம்மா எந்திரிம்மா” சகோரதன் பெண்ணவளின் கன்னத்தை தட்டியும் பலனில்லை.
“ஓங்கி ஒன்னு வச்சா தான் சரியாகும்..” சட்டைக்கையை மடித்து விட்டு அவன் பளாரென அறைய தயாராகவும் அக்காக்காரி அவளின் காலை மிதித்து விடவும சரியாய் இருக்க விழி திறந்தவள் முதலில் கண்டது,தன்னை அடிக்க கையோங்கி இருந்த சகோதரனைத் தான்.
“எதுக்குடா என்ன அடிக்க பாக்கற..? அதுவும் தூங்கிட்டு இருக்குற பொண்ண..” நிலமை தெரியாது அவள் எழுந்தமர்ந்து அவனின் சிகையை பிடித்தாட்டிட சத்யாவுக்கு எங்கேயாவது ஓடிச் சென்றிடலாம் போல்.
“சைந்து இங்க வாடி..” கீழே குனிந்து கல்லொன்றை பொறுக்கிக் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து கத்திட அந்த சமயம் தான் விழிகளை அலைய விட்டு சுற்றுச் சூழலை அலசினாள்,பெண்ணவள்.
“என்னடா இது எங்க இருக்கோம்..? நம்மள யாருடா கடத்திட்டு வந்தா..?எப்டிடா இங்க இருக்கோம்..?” சகோதரனின் சிகையை விட்டு விட்டு எழுந்து கொண்டவளோ பொத்தியிருந்த கரத்தில் ஏதோ பிடிபட விரித்துப் பார்த்தவளின் விழிகள் பளிச்சிட்டன,அந்த சின்னச சிற்பத்தைக் கண்டதும்.
“டேய் குட்டி செல என் கைல தான் டா இருக்கு..”விழிகள் மின்னக் கூறியவளின் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டினான்,சத்யா.
“நீ என்னான்னா செலய பாக்கற..அவ என்னான்னா கல்ல பொறுக்குறா..நாம எங்க இருக்கோம்னு தெரிதா..? நடு காட்டுல இருக்கோம் டி..ஏதாச்சும் மிருகம் வந்து பிராண்டிட்டு போகப் போகுது..எந்திரிச்சி வாங்கடி..” இருவரிடமும் கத்த விளையாட்டு தனத்தை கை விட்டவர்களாய் அவனுடன் நடந்தாலும் எப்படி இவ்விடம் வந்தோம் என்பதே மூவரின் புத்தியையும் ஆக்கிரமித்திருந்த பெருத்த சிந்தனை.
அடர்ந்த மரங்கள் பெரிய இடைவெளிகளில் வளர்ந்திருந்ததும் வெறுமனே சிறு புற்கள் மாத்திரம் தரையை ஆக்கிரமித்திருந்ததும் அவர்களுக்கு நடப்பதற்கு பெரிதாய் சிரமம் தராதிருக்க எட்டு வைத்தவர்களின் இலக்காய் இருந்தது என்னவோ,தூரத்தே தெரிந்த ஓரிரண்டு தீப்பந்தங்கள் தான்.
அதே நேரம்,
“எங்க போனாங்கன்னு தெரில பா..மூணு பேரு ஃபோனும் சுவிட்ச் ஆஃப்னு வருது..” பதட்டத்தில் அங்குமிங்கும் அலைந்தவாறு உரைத்தான்,இரட்டையரின் மூத்த அண்ணன்.
“எங்கதான் போனாங்கன்னு தெரில..இப்போ என்ன பண்றது..?” நாடியைத் தடவியாறு கேட்டது பெண்ணவளின் ஒற்றைத் தம்பி தான்.அவனுக்கு ஏகத்துக்கும் யோசனை.
“எம்பொண்ணு எம்பொண்ணுன்னு மார்ல அடிச்சிகிட்டு விடாதன்னு சொன்னேன்..கேட்டியா..இப்போ பாரு எங்க போனாங்கன்னு தெரில..” பெண்ணவள் தந்தை அவளின் தாயார் பார்வதியை வசைபாட அவருக்குமே பதில் சொல்லிடத் தெரியவில்லை.
“பொம்பள புள்ள வெவரமா இருக்கு..பயப்ட தேவலன்னு என் கிட்ட சொன்னியே…இப்போ பாரு எப்டி இருக்கான்னு..ஒருவேள உனக்குத் தெரியாம லவ்வு கிவ்வு ஏதாச்சும் இருந்துச்சோ..?” கலவரத்துடன் மனிதர் கேட்க முறைப்பாய் மாறியிருந்தது,அவளின் தாயாரின் பார்வை.
“ஆமா அப்டியே அவ லவ் பண்ணி கிழிச்சிட்டாலும்..” சத்தமின்றி முணுமுணுத்தவருக்கு கண் முன்னே வந்து போனது,”நீங்க மட்டும் அந்த மனுஷன லவ் மேரேஜ் பண்ணியிருந்தன்னு வைங்க..உங்க காதலுக்கு மொத எதிரியே நா தான்..” என பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துப் துப்பும் மகளின் உருவம் தான்.அவள் அடிக்கடி உபயோகிக்கும் வசைமொழிகளில் இதுவும் ஒன்று.
“நம்ம பொண்ணு அப்டி லவ்வெல்லாம் பண்ண மாட்டாங்க..அவள பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல..” கூறிய தாயாருக்கு மகளின் மேல் அலாதி நம்பிக்கை.அவளின் நடவடிக்கைகளை கண்கூடாகக் கண்டிருப்பவர் ஆயிற்றே.
“லவ்வும் கருமமும் வாய்ல நாலு போடத் தான்..சின்ன பய பேசறதா இது..” தவறுதலாய் முதிர்ச்சியின்றி “ஐ லவ் யூ” என உடன் பயிலும் மாணவியிடம் சொன்ன பள்ளி மாணவனுக்கு அவள் பொழிந்த அறிவுரை மழையை எப்போதுமே அவரால் மறக்க முடியாது.அவருக்கே போதுமென்றாகி விட்டது,அவளின் பேச்சைக் கேட்டு.
“இங்க பாரு தம்பி..படிக்கிற வயசுல படிக்கிற வேலய மட்டும் பாரு..லவ் பண்ணா லைஃப் நாசம்..”
“அப்போ படிச்சிட்டு அப்றம் லவ் பண்ணா..”
“அப்பவும் நாசந்தான்..மகா நாசம்..வாழ்க்கயே நாரிப் போய்ரும் தம்பி..பாத்து கவனமா இருந்துக்க..” அன்று நடந்தேறிய உரையாடலை கேட்ட பின்னர் அந்த பையனை அவரின் வீட்டுப் பக்கம் அவர் கண்டதேயில்லை.
தோழியொருத்தி காதலிப்பதாய் வந்து சொன்னால் போதும்.”பைத்தியமா டி லவ் பண்ற..லவ் பண்ணி அப்றம் ஙொய் ஙொய்னு தலய சொறிஞ்சி கிட்டு சுத்த வேண்டியது தான்..ஆளப் பாரு லவ்வாம்..” திட்டுவது மட்டுமல்ல,அந்தப் பெண் காதலிப்பது சரியா என்கின்ற ரீதியில் அவளை குழப்பி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பாள்,படுபாவி.
அவருக்குமே சில சமயம் அவளின் தான்தோன்றித்தமான நடத்தைகளில் பயம் கிளர்ந்தெழுவதுண்டு.அப்படி பயமுறுத்தும் வகையில் தான் இருக்கும்,அவளின் செயல்களும்.
காதல் மீது பிடித்தமில்லை..ம்ஹும்..ம்ஹும்..பிடித்தம் இருக்கவில்லை.அதனால் தான் அந்த நடத்தைகள்.
பிடித்தம் இல்லாதவற்றின் மேல் எழுந்திடும் பிடித்தம்,பிடித்தவற்றின் மீதான பிடித்தத்திலும் பிடியிறுக்கமும் பிடிவாதமும் கொண்டது என்பது வழமையான கருத்து.அவள் வாழ்வில் நடந்தேறப் போவது என்னவோ..?
மகளைப் பற்றி யோசித்தவருக்கு கணவரிடம் மாட்டிக் கொள்வது உசிதமில்லை எனத் தோன்றிட மெல்ல நழுவி இருந்தார்,அங்கிருந்து.
“என் ஃப்ரெண்டு ஒருத்தன் அந்த ஊர் தான்..அவன் பாக்கறேன்னு சோல்லி இருக்கான்..பாத்துட்டு ஃபோன் பண்ணட்டும்..அப்றம் என்னன்னு பாக்கலாம் சித்தப்பா..” மூத்தவன் மொழிந்திட ஆமோதிப்பாய் தலையசைத்தார்,மனிதர்.
●●●●●●●●
“இன்னும் கொஞ்சம் தூரம் தான்..அதுக்கப்றம் அந்த ஊரு வந்துரும்ல..” தூரத்தே தெரிந்த வெளிச்சத்தை விழிகளால் உரசிய படி பேசினாள்,பெண்ணவள்.
“ம்ம்..நல்ல வேள இன்னிக்கி பௌர்ணமி..இல்லன்னா நாம நடந்து போற அளவு வெளிச்சம் இருந்துருக்காது எலி..”
“ம்ம்..அதுன்னா உண்ம தான் சத்து மாவு..என்ன சைந்து ஏதோ யோசனைலயே வர்ர..?”
“இல்லடி நாம எப்டிடி இங்க வந்தோம்..? அங்க இருக்குறப்போ வழுக்கி விழுந்தோம்..அவ்ளோ தான் ஞாபகம் இருக்கு..இப்போ என்னன்னா இங்க இருக்கோம்..? எனக்கு ஒன்னுமே புரில..தோ கைல இருந்த நம்ம துணிப்பை மட்டுந்தான் என் கைல இருக்கு..அதுவும் கண் விழிச்சு பாத்ததும் துணிப்பை பக்கத்துல இருந்துச்சு..ஃபோன் எல்லாம் என்ன ஆச்சுன்னு தெரில..”
“நாம விழுந்தப்போ என் கைல இருந்து ஃபோன் கீழ விழுந்துது..உங்க ரெண்டு பேரோட ஃபோன் இருந்த பேக் எங்க..?”
“அதான்..எங்கயாச்சும் மிஸ் பண்ணிட்டோமோ தெரில..யாராச்சும் நம்மள கடத்திட்டு வந்து போட்டு இருந்தாலும் துணிப்பையோட அப்டியேவா விட்டுட்டு போவாங்க..எனக்கு ஒன்னுமே புரில..” சைந்தவி கலக்கம் சூழ் குரலில் சொல்ல பெண்ணவளுக்கும் அதே எண்ணம் தான்.
“சரி விடு அந்த ஊருக்கு போய் ஃபோன் பண்ணி. வீட்ல விஷயத்த சொல்லிர்லாம்..” யோசனையுடன் கூறிட்ட சத்யாவுடன் இருவரும் அந்த கிராமத்தை நெருங்கிட அங்கிருந்த குடில் வீடுகளையும் அதனருகே இருந்த தீப்பந்தங்களையும் கண்டதும் மூவரின் நெற்றியிலும் முடிச்சுக்கள் விழத் துவங்கின.
“கரண்டே இல்லாத ஒரு குக்கிராமத்துல வந்து மாட்டிருக்கோம் டா..” அக்காக்காரி பாவமாய் சொல்ல பெண்ணவளின் பார்வை அவ்விடத்தை ஆராய்ந்து மீண்டது.
“என்னடா இது ஒன்னும் புரில..வா போய் ஒரு வீட்டு கதவ தட்டலாம்..” பெண்ணவள் இருவரையும் இழுத்துக் கொண்டு சென்று குடிலொன்றின் ஓலைக் கதவை தட்டிட தூக்க கலக்கத்துடன் வந்த வாலிபனைக் கண்டதும் விழிகள் சட்டென வேறு புறம் திரும்பிட அசூசையில் முகம் சுளித்தாள்,அவள்.
மேலாடையின்றி இடுப்பின் கீழிருந்து கணுக்காலின் மேல் விளிம்பு வரை காற்சட்டைப் போன்ற அமைப்பில் அவன் அணிந்திருந்த ஆடை அவளுக்கு கோபத்தையும் சேர்த்தே தந்தது.
“இன்னுமும் இப்டி ட்ரெஸ் போட்றாங்களா..?” அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனை சங்கடத்துடன் ஆராய்ந்தவாறு சைந்தவி கேட்டிட சகோதரனுக்குள்ளும் அதே கேள்வி தான்.
“தெரில..” உதடு பிதுக்கியவனோ அந்த வாலிபனைப் பார்த்து புன்னகைத்திட அவனோ உறக்கம் மிகுந்த விழிகளுடன் அவர்களை பெரிதாக கவனியாது நின்றிருந்தான்,பாதி விழிகளை சுருக்கியவாறு.
“சார் நாங்க எப்டி இங்க வந்தோம்னு தெரில..இது எந்ந வில்லேஜ்னு சொல்ல முடியுமா..?” சகோதரன் பவ்யமாய் கேட்டிட அவனின் பேச்சில் உறக்கம் விலக நிமிர்ந்தவனோ மூவரையும் பார்த்து வைத்தான்,விழிகளில் எக்கச் சக்க திகைப்புடன்.
“என்ன சார் இப்டி பாக்கறீங்க..?” அவனின் பார்வையின் அர்த்தம் புரியாமல் அப்பாவியாய் சத்யா வினவிட அடுத்த கணம் அவனின் வஸ்திரத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சிறு கத்தியின் முனை நீண்டிருந்தது,அப்பாவியின் கழுத்தை நோக்கி.
கத்தி முனையில் விழி பிதுங்க தொண்டைக் குழி ஏறி இறங்க நின்று கொண்டிருந்தவனுக்கு பயத்தில் உடல் நடுங்கிட பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்.
“ஹலோ யாரு நீங்க எதுக்கு இவன புடிச்சு வச்சு இருக்கீங்க..?” பயத்தை மறைத்துக் கொண்டு பெண்ணவள் சீற சகோதரனின் கழுத்தில் கிடுக்கிப் பிடி போட்டு தன்னருகே இழுத்துக் கொண்டவனோ அவனின் கழுத்தை இன்னும் நெருக்கியவாறு கத்தி முனையை வைத்திட சர்வமும் ஒடுங்கியது,சத்யாவுக்கு.
“நாசமா போறவ..வாய வச்சிட்டு சும்மா இருந்துருக்கலாம்ல..” மனதுக்குள் நினைத்தவனின் கால்கள் கிடுகிடுவென ஆடிற்று.
“மூச்..அதே இடத்தில் நில்லுங்கள்..நீங்கள் துளி அசைந்தால் கூட உம்முடன் வந்திருப்பவனின் கழுத்தில் என் ஆயுதம் இறங்கி விடும்..” அவன் சுத்தத் தமிழில் உரைத்திட அவர்கள் பேய் முழி முழித்தனர்.
அவர்களின் முழியைக் கண்டு எள்ளலாய் நகைத்தவனோ,”ஒற்றர்கள் அகப்பட்டு விட்டார்கள்..எல்லோரும் இவ்விடம் வந்து சேருங்கள்” என குரல் கொடுத்திட தூக்கி வாரிப் போட்டது,மூவருக்கும்.
வரம் கிட்டும்.
🖋️அதி..!
2024.10.07