அத்தியாயம்- 12
மலர் நாராயணசாமி பற்றி கேட்கவும் தேவா “நாராயணசாமி பெரிய பார்மசுட்டிக்கல் ட்ரக் டீலர்னு சொன்னேனில்லயா… அவன் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எப்டி இருந்தான்னு தெரியுமா… ஒரு சாதாரண பார்மஸி வச்சுருந்தான் திருநெல்வேலில… அப்றம் மூனு வருஷத்துல அப்டி இப்டி பழகி ஆள் புடிச்சு டீலர்ஷிப் வாங்கி திருநெல்வேலி முழுக்க எல்லா கடைகளுக்கும் மருந்து சப்ளை பண்ணான்…. அதுல நெறைய அரசியல் தொடர்பும் பெரிய புள்ளிங்களோட பழக்கமும் அவனுக்கு கெடச்சுது… அவங்களுக்கு வேணுங்கறத இவன் செஞ்சு குடுக்க ஆரம்பிச்சான்… மீன்ஸ் அடியாளு, கட்ட பஞ்சாயத்து அப்றம் மருந்தில்லாம போதை மருந்து கடத்துறதுன்னு எல்லாத்துலயும் உதவியா இருந்தான்…. தூத்துக்குடி ஹார்பர்லேர்ந்து பல வெளிநாடுங்களுக்கு சரக்கு அனுப்பி வைக்கிறது அங்கேர்ந்து வர்ர சரக்க பத்ரமா கை மாத்றதுன்னு பல பொறுப்புகள் இவன தேடி வந்துச்சு… அந்த கான்டாக்ட்ஸ், இன்புலுயன்ஸ்ல அடுத்த அஞ்சு வருஷத்துல தமிழ்நாடு ஃபுல்லா மெடிசின் சப்ளை பண்ற டீலர்ஷிப் வாங்குனான்…. நெறைய பணம் பொழங்க ஆரம்பிச்சப்றம் ஊர்பக்கம் நம்பிக்கையான ஆளுங்க கிட்ட அவன் பாத்துட்ருந்த வேலய ஒப்படச்சுட்டு சென்னை வந்தான்… இங்க வந்தப்றம் ஆளே டோட்டல் சேஞ் டீக்கா ட்ரஸ் பண்றது, நெறைய க்ளப்ஸ் போறது, பெரிய பெரிய க்ளப்ல மெம்பர் ஆனான்… சென்னை டீலிங் மட்டும் அவன் பாத்துட்டு மத்த இடத்துக்குலாம் அவனோட சொந்தக்காரங்க நம்பிக்கையான ஆளுங்க கிட்ட பொறுப்ப விட்டுட்டான்… அவன் இந்த டீலர்ஷிப், கட்ட பஞ்சாயத்து, அடியாள் சப்ளை, ஸ்மங்லிங் மட்டும் செய்றதில்ல… நெறைய டாக்டர்ஸ், பொலிடிஷியன்ஸோட கான்டாக்ட் இருக்கறதால ஆதரவில்லாதவங்க, ரோட்ல சுயநினைவேயில்லாம சுத்தரவங்களலாம் கடத்தி அவங்க உடல் உறுப்புகள திருடி விக்கிறது, அப்றம் எக்ஸ்பையர் ஆன மெடிசின்ஸ கெமிக்கல் ப்ராசஸ் மூலமா ரீலேப்லிங் பண்ணி ரிஸேல் பண்றதுன்னு மனசாட்சியே இல்லாத வேலைகளும் பாக்ரான்… சிட்டிக்குள்ள எக்ஸ்பையர் ஆன மெடிசின்ஸ்லாம் பார்மஸிஸேலேர்ந்து கலெக்ட் பண்ணி கவர்ன்மென்ட் ரூல்ஸ் படி கொடுங்கையூர்ல இருக்ற பழைய குப்பைக் கிடங்குல ஸேப்டி மெஷர்ஸோட டிஸ்போஸ் பண்ணனும்… ஆனா இவன், தான் டைரக்ட்டா செஞ்சா ரிஸ்க்ன்னு சொல்லி ஆள் வச்சு அத கொடுங்கையூர் பக்கத்துல இருக்ற எழில் நகர்ல ஒரு ஆள்ட்ட வித்து மறுபடியும் அந்த ஆள்ட்டேர்ந்து அவனே வாங்கி சிட்டில இருக்ற அவனோட அஞ்சாறு குடோன்களுக்கு பிரிச்சு அனுப்பி அப்றம் அத ரீலேப்லிங் பண்ணி விக்கிறான்… அப்டி கொடுங்கையூர்ல பழக்கமானவனுங்க தான் உன்னை கடத்துனான்ங்களே லிங்கமும் அவன் ஆளுங்களும்… உன்னை கடத்திட்டு போனதும் அந்த மாறி அவனோட குடோன் ஒன்னுக்கு தான்… இதுல என்ன கொடுமன்னா இவன் விக்கிற எக்ஸ்பையரி மெடிசின்ஸ சில பெரிய பார்மஸிஸ், ஹாஸ்பிட்டல்ஸ்லாம் அவங்க பார்மஸில தெரிஞ்சே கம்மி விலை, கமிஷன் வருதுன்னு விக்கிறாங்க… இப்டி உயிரோட விளையாட்ற கேவலமான தொழில் பண்ற மிருகம்… ம்ஹும் அவன்லா மிருகமில்ல… மிருங்ககூட இரக்க படுங்க… அவன்லா மிருகத்துலயும் சேராத மோசமான ஜந்து… அவனால எத்தன பேர் வாழ்க்க சீரழிஞ்சுருக்கு தெரியுமா… இப்டி கேவலமான பொழப்பு பாத்து அவன் பேர்ல மட்டும் இருநூறு கோடி மதிப்புள்ள சொத்து இருக்கு… அவன் பொண்டாட்டி, புள்ளைங்க, சொந்தக்காரன், தெரிஞ்சவன்னு இன்னும் நூறு கோடி சொத்து வச்சுருக்கான்…. அவன் கடந்த பதினஞ்சு வருஷத்துல இந்த ஈனப்பொழப்பு பாத்து இவ்ளோ சம்பாரிச்சுருக்கான்… பத்தாததுக்கு இன்னும் ஹோட்டல்ஸ், கல்யாண மண்டபம், ஹாஸ்பிட்டல், ரிசார்ட்ன்னு எக்கச்சக்க சொத்து எப்டியும் ஆயிரம் கோடி தேரும்… ஒரு மெடிசின் டீலர்ஷிப் எடுத்து ஒருத்தனால பதினஞ்சு வருஷத்துல எப்டி இவ்ளோ சம்பாரிக்க முடியும்… அவன் பண்ற வேற வேலைகள சேத்தாலும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு ஐநூறு கோடி சேக்கலாம்… ஆனா இவன்கிட்ட அதவிட டபுளா கணக்குல வந்து இவ்ளோ இருக்குன்னா கணக்குல வராதது எவ்ளோ இருக்கும்… ஸோ இவன் பல பெரிய புள்ளிங்களுக்கு பினாமியா இருக்கான்…இவன் மூனு தடவ எக்ஸ்பையரி மெடிசின்ஸ் வித்த கேஸ்ல அரெஸ்ட்டாகி உள்ள போனான்… ஆனா ஒவ்வொரு தடவையும் பதினைஞ்சு நாள்ல வெளில வந்து அதெல்லாம் தன்னோட இன்ப்லுயன்ஸால ஒன்னுமில்லாம பண்ணிட்டான்… பத்து வருஷம் கழிச்சு இப்ப மறுபடியும் எக்ஸ்பையரி மெடிசின்ஸ விக்க ஆரம்பிச்சுருக்கான்… அதனால இவன ஸ்ட்ராங்கான்ன எவிடன்ஸோட சிக்க வைக்கணும்… அப்டி மட்டும் செஞ்சா தமிழ்நாடே ஒரு மாசத்துக்கு அல்லோல கல்லோல படும்… கல்வி வள்ளல், கருணை கடல், சமூக சேவகர்ன்னு இன்னும் பல முகமூடியோட வலம் வர்ர டாக்டர்ஸ், பிஸ்னஸ் மேங்னட்ஸ், மினிஸ்டர்ஸ், அரசியல்வாதிங்கன்னு பல பெரிய முதலைங்களோட வேஷமெல்லாம் வெளுக்க ஆரம்பிச்சுரும்… அதுக்கு முதல்ல அந்த நாதாரி நாராயணசாமிய புடிக்கணும்… அவனுக்கும் எனக்கும் தீக்க வேண்டிய கணக்கொன்னு இருக்கு…” என்று கூறியவன் செந்தழலென சினமேறி, உடல் விறைக்க, முகமிறுகி, விழிகளிரண்டிலும் அனல் பறக்க ஆடல்வல்லானின் ரௌத்திர முகமோ என்று அஞ்சும் அளவுக்கு கோபத்தனலை அருகில் இருப்பவரும் உணரும் வண்ணம் வீறுகொண்ட வேங்கையாய் நின்றிருந்தான்.
அவன் கூறியதுக் கேட்டு பேச்சற்று அதிர்ச்சியில் உறைந்ததிருந்த தேன்மலருக்கு அவன் கூறியதே காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, அவளுள்ளும் கோபத்தீ மூள, ஏதோ மூளைக்குள் உரைக்கவும் அவனிடம் சொல்லலாமென்று அவனைக் கண்டவள் ஒருகணம் அவனின் கோபம் முகம் கண்டு அச்சம் கொண்டாள்.
நொடியில் அச்சம் விடுத்து தன்னுள் எழுந்த கோபத்தீயை அப்போதைக்குப் புறந்தள்ளி தணிவாக “சார்… அந்த நாராயணசாமி எவ்ளோ பெரிய கேடுக்கெட்டவன்னு நீங்க சொன்னதுலேர்ந்து தெரியுது… அவன கண்டிப்பா புடிக்கலாம்… நீங்க அவன பத்தி சொன்னத கேக்கும்போது எனக்கு ஒன்னு தோனுது… சொல்லலாமா…” என்று கேட்டாள்.
தேவா இரண்டு நிமிடங்கள் மௌனம் காத்து நிற்க, தேன்மலருக்கு அவன் கோபத்தைக் கட்டுப் படுத்துவதுப் புரிந்து அவளும் அவனின் அனுமதிக்காக அமைதியாக நின்றாள்.
இரண்டு நிமிடங்களில் தன்னை சமன் செய்துக் கொண்ட தேவா, சற்றே இறுக்கமாக “ம்ம்ம்… சொல்லு…” என்று தலையசைக்க,
தேன்மலர் அவனை ஏறிட்டு “சார்… நீங்க நாராயணசாமி பல பேருக்கு பினாமியா இருக்கலான்னு சொன்னிங்கல்ல… அந்த குடோன்ல வெறும் ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ் பாக்ஸஸ் மட்டும் தான் இருந்தத பாத்தேன்… அப்போ அவன் ஏன் ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸோட பினாமியா இருக்க கூடாது? அந்த குடோனே அவனோடதாயில்லாம ஏ ஆரோடதா இருந்தா? என்னை அங்க கடத்திட்டு போனத பாத்தா எங்க அப்பா ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ்க்கு தான் இன்ஸ்பெக்ஷனுக்கு போயிருக்கணும்…. அங்க ஏதோ அவருக்கு தெரிஞ்சுருக்கு… அதான் அவர இப்டி பண்ணி எங்களையும் ட்ரேஸ் பண்ணி கண்காணிச்சுருங்காங்க…. எனக்கும் எதாவது தெரிஞ்சுருக்கனுனு என்னை கடத்திருக்க வாய்ப்பிருக்கில்லயா….” என்று கேட்டாள்.
தேவா கூர்மையாக அவள் கூறியதைக் கேட்டவன் சிறிது யோசனைக்குப் பிறகு “ம்ம்… இருக்கலாம்… வாய்ப்பிருக்கு…” என்றான்.
தேன்மலர் சிறிது யோசனைக்குப் பின் தயங்கி “சார்… நா கொஞ்ச நாள் இங்க இருக்கலாமா… அவங்க என்னை தேட்றத நிறுத்துனோன நா இங்கிரேந்து போய்ட்றேன்…” என்றாள்.
தேவா தீர்க்கமாக அவளைப் பார்த்து “ம்ம்… அப்றம் இன்னும் என்ன யோசிச்சீங்க மேடம்… உன்னை அவனுங்க அவ்ளோ சீக்ரம் விட்ருவானுங்கன்னு நினச்சியா? ஒரு எப் டி ஏ ஆபிஸர்க்கு அவங்கள பத்தின ரகசியம் தெரிஞ்சப்றம் அவங்க சும்மா இருப்பாங்கன்னு நினக்கிறியா? உங்க அப்பாவ நீ ஸேஃப் பண்ணீற்கலாம்… பட் எவ்ளோ நாளைக்கு? உங்க அப்பாவோ இல்ல நீயோ அவங்களுக்கு கெடக்கிற வர தேட்றத விட மாட்டானுங்க…. உங்க அப்பா ஒரு என் ஆர் ஐ… அவர் மேல கை வச்சா என்ன நடக்கும்னு தெரிஞ்சும் இவ்ளோ பெரிய வேலை பாத்துருக்காங்கன்னா… நீயும் உங்க அப்பாவும் அவங்ககிட்ட மாட்டலன்னா… நீ சொன்னியே உன் ஃப்ரெண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ்னு எல்லாரையும் மானிட்டர் பண்ணாங்கன்னு… அவங்கள எதாவது பண்ணி உங்களுக்கு வலை விரிப்பாங்க… அவனுங்க சாதாரணமானவனுங்களா? இவ்ளோ தூரம் புத்திசாலித்தனமா காய் நகத்திட்டு இப்ப முட்டாள் மாறி பேசற நீ… இப்போ கம்மியான டைம்ல உனக்கும் எதுவும் ஆகாம உன்னை சுத்தி உள்ளவங்களுக்கும் எதுவும் ஆகாம நீ தனியா அவங்கள சமாளிக்றது ரிஸ்க்… என்னை கேட்டா நீ பண்ண முட்டாள் தனமான மூவ் உனக்கு ஹெல்ப்பா இருந்த உன் ப்ரெண்ட இதுலேர்ந்து விலக்கி விட்டதுதான்… நீ அவன் ஸேஃப்ட்டிக்கு பண்ணனு புரியுது பட் இப்போ அவன இதுல உள்ள இழுக்க முடியாது… எனக்கு நாராயணசாமிக்கு தண்டனை வாங்கி தரணும் உனக்கு உங்க அப்பாவ இப்டி பண்ணவங்கள கண்டு புடிக்கணும்… ஸோ இப்போ நாம தேட்ற ரெண்டு பேருக்குமே லிங்க் இருக்குன்னு தெரியுது… நம்ம ரெண்டு பேரோட எதிரியும் கூட்டாளிங்க தான்… உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா நாம சேந்து அடுத்தகட்ட நடவடிக்கைல இறங்கலாம்… இல்ல நா தனியாவே சமாளிச்சுருவேன்னா உன் இஷ்டம்…” என்று தோள்களை குலுக்கிவிட்டு அமைதியாக அவள் முகத்தை ஊடுருவினான்.
தேன்மலருக்கு அவன் பேசிய அனைத்தும் சரியெனவேப் பட்டது, ஏனெனில் அருளை பிரச்சனையிலிருந்து விலக்கத் திட்டம் வகுத்தப் பின்பே தானும் அவனுமே உண்மையைக் கண்டுப்பிடக்கலாமென்று பொய் கூறி அவனிடம் தன் அப்பா, அப்பாயியை முதலில் அமெரிக்கா அனுப்ப உதவி கேட்டாள். அப்போதே அவளின் உள்மனது குற்றயுணர்வாகவும், தப்பு செய்கிறாய் எனவும் அவளை எச்சரித்தது, இருந்தும் தன் மேல் அருள் அன்புக் கொண்டிருப்பதைப் போல் அவன் மேல் அவள் கொண்டிருந்த அக்கறையும் அன்பும் அவன் குடும்பத்தை எண்ணியும் அவளின் உள்மன எச்சரிக்கையை அலட்சியம் செய்தாள். சிறிது நேரம் முன்பு தேவா கூறிய விடயங்களைக் கேட்டு தான் தேடிக் கொண்டிருக்கும் எதிரி எவ்வளவு ஆபத்தானவன் என்றுணர்ந்தவள் அருளை விலக்கியது சரியே என்று நிம்மதிக் கொண்டாள்.
பெங்களூர் வீட்டில் எந்த தடயமும் கிட்டாதபோதே அவளுள் எப்படி தன் அப்பாவை படுக்க வைத்தவனைக் கண்டுப் பிடிப்பது? எங்கே போவது? யாரைக் கேட்பது? என்ற கேள்விகளும் ஒருவித அச்சமும் இருந்துக் கொண்டேயிருந்தது. இப்போது தேவா பேசியதும் அவனை நம்பலாமா என்று யோசித்தவள் அவன் கண்களில் தான் சற்றும் முன் கண்ட கோபமும் சிறிதாய் இழையோடிய சோகமும் அவனும் தன்னைப் போல் உண்மையாகவேப் பாதிக்கப் பட்டவன் என்று உணர்த்த “சரிங்க சார்… நாம ரெண்டு பேரும் சேந்தே அவனுங்களை ஒரு வழி பண்ணுவோம்…” என்று கண்களில் அனல் தெறிக்க, உடல் இறுகி, பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள்.
அதைக் கண்ட தேவாவின் இதழ்கள் சிறிதாய் விரிந்தது. ஏனெனில் அவள் அவளைப் பற்றிக் கூறியபோதே அவளது தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான். இப்பொழுது அவளின் கோபம் கண்டு அவள் மீதான மதிப்பு இன்னுமேக் கூட, சிறு தலையசைப்போடு “தேங்க்ஸ் என் மேல நம்பிக்க வச்சதுக்கு…” என்றான். தேன்மலர் தன்னை நிதானித்து மென்னகையைப் பதிலாகத் தந்தாள்.
தேவா “பேச்சிட்ருந்ததுல இருட்னதே தெரில… சரி மலர் நா உனக்கு சாப்ட எதாவது செஞ்சு கொண்டு வரேன்… நீ டேப்லட் போடனுல…” என்றுவிட்டு அவன் திரும்ப,
தேன்மலர் “சார் ஒரு நிமிஷம்…” என்கவும் திரும்பி அவளை என்ன என்பது போல் பார்த்தான்.
தேன்மலர் தயங்கி “சார் கேக்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… உங்க தங்கச்சி நாராயணசாமியால…” என்னும் போதே அவனின் முகம் இறுகுவதைக் கண்டவள் “சாரி சார்… ஏதோ தோனுச்சுன்னு கேட்டேன்… இனிமே கேக்க மாட்டேன்…” என்று கூற, அவன் அவளை ஒரு நொடி ஊடுருவி விட்டு திரும்பி விறுவிறுவென்று அடுக்களைக்கு விரைந்தான்.
தேன்மலர் நாக்கைக் கடித்து தலையில் தட்டிக் கொண்டு “உனக்கு தேவையாடி இது… அவரு உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னதே பெரிய விஷயம்… இதுல அவரு கோவப்பட்ற மாறி வேற பேசித் தொலைக்கிற…” என்று மனதிற்குள் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.
பின் அவன் தனியே சமைக்கிறானே என்று மெல்ல தயங்கி அடுக்களைக்குச் சென்றவள் முதலில் அவன் முகம் பார்க்க, அவனது முகயிறுக்கம் தளர்ந்திருப்பதைக் கண்டு நிம்மதிக் கொண்டவள் “ம்கும்…” என்று கனைத்து அவனது கவனத்தைத் தன்புறம் திருப்பினாள்.
அவன் என்ன என்று கேள்வியாய் நோக்க, தேன்மலர் “சார் நானும் எதாவது செய்றேன்…” என்று கூற,
அவன் சரி என்று தலையாட்டி “நீ இந்த வெங்காயத்த நறுக்கி சட்னி அரச்சுரு… நா தோசை சுட்றேன்…” என்றான். தேன்மலர் அவன் சொன்னபடி வெங்காயச் சட்னி தயார் செய்ய அவன் தோசையை ஊற்றி முடித்தான்.
பின் இருவரும் அடுக்களைக்கு அருகேயிருந்தச் சாப்பாட்டு மேசையில் அனைத்தையும் எடுத்து வைத்து சாப்பிட அமர்ந்தனர். இருவரும் அமைதியாக உண்டு முடிக்க, தேன்மலர் பாத்திரங்களைக் கழுவ எடுத்துச் செல்ல, தேவா அவள் கழுவி வைக்கும் பாத்திரங்களைத் துடைத்து உரிய இடத்தில் எடுத்து வைத்தான். ஒரு ஆண் இவ்வளவு நேர்த்தியாய் அடுக்களையை மட்டுமல்ல வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பதை முதன்முதலில் கண்டவள் வியந்துப் போனாள். ஏனெனில் அவளது வீட்டிலோ அல்லது அவளது கிராமத்திலோ ஆண்கள் எவரும் வீட்டு வேலைச் செய்து கண்டதில்லை. தான் படித்துக் காலத்தில் அமெரிக்காவில் இது சாதாரணம் தான் ஆனால் நம் நாட்டில்? அருள் அவ்வப்போது அவனது தாய்க்கு உதவுவதைக் கண்டிருக்கிறாள் தான் ஆனால் அதில் இவ்வளவு நேர்த்தியையும் ஒழுங்கையும் கண்டதில்லை.
தான் மனதில் நினைத்ததை “எப்டி சார் இவ்ளோ க்ளீனா வச்சுருக்கீங்க வீட்ட…” என்று அவனிடம் கேட்டே விட்டாள்.
அவளது கேள்வியில் அவளின் கள்ளமில்லா பேச்சைக் கண்டு மென்னகைப் புரிந்தவன் “அம்மாவுக்கு எப்பவும் வீடு க்ளீனா இருந்தா தான் புடிக்கும்… எனக்கும் அப்டி தான்… எங்க அம்மா ஆண் பெண் வித்தியாசம்லாம் பாக்க மாட்டாங்க…. எனக்கும் என் தங்கச்சிக்கும் அத்தன வீட்டு வேலையும் செய்ய சொல்லி குடுத்து தான் வளத்தாங்க… அதே மாறி அம்முவையும் தைரியமா வெளி உலக அனுபவம் எல்லாம் வேணும்னு சொல்லி தான் வளத்தாங்க… அம்மாவுக்கும் அம்முவுக்கும் இன்டீரியர்ல ரொம்ப விருப்பம்… இந்த வீடு கட்னப்போ ரெண்டு பேரும் ஆசை ஆசையா ரசிச்சு இன்டீரியர் டெக்கரேஷன அவங்களே பண்ணாங்க… ரெண்டு பேரும் நல்லா க்ராப்ட் வொர்க் பண்ணுவாங்க… அதெல்லாம் வீடு முழுக்க அழகா டெக்கரேட் பண்ணுவாங்க…” என்று கூறும் போதே அவன் கண்களில் அவ்வளவு ஒளி அதோடு ஏக்கமும் வருத்தமும் கலந்தே இருந்தது.
தேன்மலர் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தவள், அவனது அம்மா, தங்கையின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று நெகிழ்ந்தவள் மறுகணம் அவர்கள் இருவரையும் சீக்கிரமே அவனிடமிருந்து பறித்த ஆண்டவனை நிந்திக்கவும் தவறவில்லை.
தேவா தன் குடும்பத்தின் ஞாபகங்களில் உழன்றவன் பின் தேன்மலரை கண்டு “சரி மலர்… நீ போய் தூங்கு… அம்மு ரூம்க்கு போ… அங்க டேபிள்ல டேப்லட் இருக்கு மறக்காம போட்டுக்கோ…” என்றான்.
தேன்மலர் சரி என்று தலையாட்டி செல்ல, தேவா “மலர்…” என்றழைக்க,
தேன்மலர் நின்று, திரும்பி “என்ன சார்…” என்று கேட்க,
தேவா குரலில் ஒருவித சோகம், கோபம், இயலாமை, ஆற்றாமை இழையோட “ஒரு வருஷத்துக்கு முன்னாடி மதுரைக்கு போன அப்பாவும் அம்மாவும் ஆக்ஸிடென்ட்ல போனப்றம்… அம்மு ரொம்ப உடைஞ்சு போய்ட்டா… அவள தேத்றதே எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு… அப்பப்ப அப்பா அம்மாவ நினச்சு கவலப்பட்டதால அவளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகும்… நாலு மாசம் முன்னாடி அப்டி உடம்பு முடியாம போனப்ப… ஹாஸ்பிட்டல் கூப்ட்டு போய்ட்டு டாக்டர் எழுதி குடுத்த மருந்த அங்கியிருந்த பார்மஸில தான் வாங்கி அவளுக்கு குடுத்தேன்… மறுநாள் அவளுக்கு ரொம்ப முடியாம பிக்ஸ் வந்து ஹாஸ்பிட்டல் போற வழிலயே…” என்று கண் கலங்கினான்.
தேன்மலருக்கு மிகவும் வருத்தமாகிவிட, மேலும் அவன் கண்களில் கண்ணீரைக் கண்ட பின் அவள் மனம் கணத்துப் போக, அவளுக்கும் விழிகள் கலங்க, தழுதழுத்தக் குரலில் “சார்…” என்றழைக்க, அவள் குரலில் தன் கண்களைத் துடைத்த தேவா “உன்னையும் அழ வச்சுட்டனா…” என்று கூற,
தேன்மலர் “சார்… பரவால்ல சார்… உங்க வலி என்னன்னு எனக்கு நல்லா புரியுது… ஏன்னா கிட்டத்தட்ட நானும் அதே வலியை தான் அனுபவிச்சுட்ருக்கேன்…” என்று கூறி அதரங்களில் விரக்திப் புன்னகையைப் படர விட்டாள்.
தேவா “அப்போ எனக்கு எதுவும் தோனல… அப்றம் தான் டவுட் வந்து என் ப்ரண்ட் மூலமா அம்மு சாப்ட்ட டேப்லட்ட டெஸ்ட் பண்ணதுல அது எக்ஸ்பையரி ஆகிருந்தது தெரிஞ்சது… அம்மு மாறி இன்னொரு உயிர் போகக் கூடாதுன்னு தோனுச்சு… அதனால அத பத்தி அந்த ஹாஸ்பிட்டல்ல கேட்டப்ப சரியான பதில் சொல்லாம நா பொய் சொல்றதா சொன்னாங்க… போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்தேன்… ஆனா போலீஸ் அவங்க மேல ஆக்ஷன் எடுக்காம என்கிட்ட சமாதானம் பேசுனாங்க… நா ஒத்துக்கலனோன என்னை மிரட்னாங்க… ஆள் வச்சு அடிச்சாங்க… அப்றம் என் ப்ரண்ட் தான் சொன்னான் நம்மள மாறி சாதாரண ஆளுங்களால அவங்கள ஒன்னும் பண்ண முடியாது கம்ப்ளைன்ட்ட வாப்பஸ் வாங்குன்னு… அப்ப தான் முடிவு பண்ணேன் ஏன் நம்மாள முடியாது போலீஸ் முடியாதுன்னு சொன்னா என்ன… ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் கெடச்சா அவங்க ஆக்ஷன் எடுத்து தானே ஆகணும்… ஸைலன்ட்டா கம்ப்ளைன்ட்ட வாப்பஸ் வாங்கிட்டு நா தனியா விசாரிக்க ஆரம்பிச்சேன்… அப்ப தான் இதுக்கெல்லாம் காரணம் நாராயணசாமின்னு தெரிஞ்சது… அவன பத்தி எவிடென்ஸ் கெடைக்காதான்னு தேடி அலைஞ்சப்ப தான் உன்னை அவங்க கடத்தனது நா காப்பாத்துனதெல்லாம் நடந்தது…” என்று ஒரு பெருமூச்சோடு தன் தான் ஏன் நாராயணசாமியின் மேல் கோபம் கொண்டிருக்கிறானென்று கூறி முடித்து தேன்மலரை ஏறிட்டான்.
தேன்மலர் முகம் வருத்தத்தோடிருப்பதைக் கண்டவனுக்கு என்னவோ போலிருந்தது. பின் “சரி மா… நீ போய் தூங்கு… எனக்கு இப்ப தூக்கம் வராது…” என்றுவிட்டு கூடத்திலிருந்த ஸோஃபாவில் விழி மூடி சாய்ந்தமர்ந்தான். தேன்மலர் அவனை அப்படி காண முடியாமல் அவனைத் திருப்பி திரும்பிப் பார்த்தவாறே அவனின் தங்கையின் அறைக்குச் சென்றாள்.
தேன்மலர் அவன் கூறியபடி மருந்தை விழுங்கியவள் தேவாவும் அம்முவும் சேர்ந்து சிரித்திருந்தப் புகைப்படத்திற்கு முன் போய் நின்றாள். அவளுள் என்னென்னவோ பல எண்ணங்கள் மனதை அழுத்த அந்தப் படத்தை வெகு நேரம் வெறிந்திருந்தவள் மெல்ல அப்படத்தை வருடிவிட்டு மெத்தையில் வந்து வீழ்ந்தாள். மெத்தையில் வீழ்ந்தவளுக்கு அருள் மற்றும் ராகவியின் நினைவுகள் மேலோங்க, அவர்களிடம் பேச வேண்டுமென்று உந்தித் தள்ளிய மனதை அதட்டி அடக்கியவளுக்கு ராஜேஷ் மற்றும் துர்காவிடம் அவர்கள் அங்குப் போனதிலிருந்து தான் பேசவில்லையே என்ற நினைவு வர, நாளை எப்படியாவது அவர்களிடம் பேசிவிட வேண்டுமென்று முடிவெடுத்து உறங்க முற்பட்டவளுக்கு தன் அப்பா மற்றும் அப்பாயியை நினைத்துக் கவலை எழ, இமை மூடியவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
தேவாவிற்கோ தன் குடும்பத்தின் நினைவு மனதை அழுத்த கண்கள் மூடி அமரந்திருந்தவன் எழுந்து உலாத்திக் கொண்டே விழி நீர் வடித்தான். இவ்வாறு இருவரும் தங்களின் கவலைகளில் உழன்று அவ்விரவைத் தூங்கா இரவாகக் கழித்து விடியும் வேளை கண்ணசந்தனர்.
இவர்கள் கவலையில் உழன்றுக் கொண்டிருந்த அதே நேரம் அங்கு அருளும் அவனது வீட்டில் தேன்மலரை நினைத்துக் கவலையும் கோபமும் கொண்டு உலாத்திக் கொண்டிருந்தான். தேன்மலர் அருளிடம் வேலாயியும் சிதம்பரமும் பத்திரமாக அமெரிக்கா சென்றபின் தானும் அவனும் இணைந்தே உண்மையைத் தேடலாம் என்று கூறியிருந்தாள். அதனால் அருள் இரண்டு நாட்கள் கழித்து தனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த ப்ரத்யேக எண்ணிற்குக் குறுந்தகவல் அனுப்ப, தேன்மலரிடமிருந்து பதில் வராததால் திரும்ப திரும்ப குறுந்தகவல் அனுப்பினான். அப்போதும் அவளிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லாததால் பயந்துப் போனான். அருள் பதற்றத்தோடு அந்த எண்ணிற்கு அழைக்க, அது அணைத்து வைக்கப் பட்டிருப்பதாக அல்லது உபயோகத்தில் இல்லை என்னும் கணினிக் குரல் வரவும் வெகுவாய்க் குழம்பிக் கவலைக் கொண்டவன் பொறுத்துப் பார்க்கலாம் என்று விட்டுவிட்டான். ஆனால் நாட்கள் வாரமாகியும் தேன்மலரிடமிருந்து எந்த தகவலுமில்லாததால் தன் ஹேக்கர் நண்பன் மூலம் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று அறிந்துக் கொண்டவனுக்கு அப்போதுதான் புரிந்தது தேன்மலர் தன்னை விட்டு விட்டு அவள் மட்டும் தனியே உண்மையைக் கண்டுபிடிக்கச் சென்றிருக்கிறாளென்று, அதனால் அவனுக்கு கண்மண் தெரியாதக் கோபம் ஒருபுறமிருந்தாலும் அவளைப் பற்றியக் கவலையும் ஒருபுறம் அவனை வாட்டியது.
சுரேஷ் மற்றும் ராகவிக்கு எந்த விடயமும் தெரியாதாகையால், அவர்களிடம் அவனும் தேன்மலரும் தேன்மலர் தன் அப்பா, அப்பாயியை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாகவும் அதை யாரிடமும் கூற வேண்டாமென்று கூறியிருந்ததால் அவர்கள் இருவரும் அருளிடம் தேன்மலரை பற்றி விசாரித்து அவளிடம் பேச வேண்டுமென்று கூற, அருள் அவர்களிடம் ஏதேதோ காரணம் கூறி சமாளித்தான். ராகவி தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகும் செய்தியை தேன்மலரிடம் சொல்ல வேண்டுமென்று அவனை நச்சரிக்க, அருள் வேறு வழியில்லாமல் தேன்மலர் அவனுக்குக் கொடுத்திருந்த அமெரிக்காவிலிருக்கும் அவளின் நண்பர்களான கிறிஸ்டி வில்லியம்ஸ் மற்றும் ஹர்ஷவர்தனின் எண்ங்களுக்கு முயற்சிக்க, அவர்களோ தேன்மலரோ அவளது குடும்பத்தினரோ யாரும் அங்கு வரவில்லையென கூற, அருள் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தான்.
படிக்கும் காலத்தில் கல்லூரியில் தேன்மலருக்கு கிறிஸ்டியும் ஹர்ஷவர்தனும் தான் நண்பர்களென்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்பிலும் பிறவற்றிலும் அவளோடுப் போட்டி போடும் ஸாம் டேலரும் கின்ஸி ஸ்மித்தும் தான் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி வளாகத்திற்குள் அவர்கள் மூவரும் எதிரி போல் வலம் வந்தாலும் மூவருக்குள்ளும் நல்ல நட்பிருந்தது. அவர்களின் நட்பு வெளியே யாருமறியாமல் வளர்ந்தது. தேன்மலர் ஸாம் மற்றும் கின்ஸி பற்றி கிறிஸ்டி மற்றும் ஹர்ஷவர்தனிடம் கூட உரைத்ததில்லை. பாதுகாப்புக் கருதியே அருளிடம் வேலாயியையும் சிதம்பரத்தையும் கிறிஸ்டி, ஹர்ஷவர்தன் கவனித்துக் கொள்வார்களென்று கூறியிருந்தாள்.
தேன்மலரின் இத்தகு நகர்வால் தான் ஜேவின் ஆட்கள் சிதம்பரம் மற்றும் தேன்மலரின் நண்பர்களிடத்தில் விசாரித்தும் அவர்களுக்கு உருப்படியானத் தகவல்கள் எதுவும் கிட்டவில்லை. ராகவியிடம் அவர்கள் கூறியதைக் கூற ராகவி பெரும் வருத்தம் கொண்டாள்.
கல்லூரியில் அவர்களது துறைத்தலைவர் சீதாராமன் தேன்மலரை பற்றி விசாரித்தப் போது அவள் எங்கிருக்கிறாளென்று தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறினர். அதைத் தான் ஆர்யனின் ஆட்கள் கேட்டு அவனுக்குத் தெரிவித்தது.
அருள் தேன்மலர் பேச்சைக் கேட்டு அவளைத் தனியாக அன்று மருத்துவமனையில் விட்டு வந்திருக்கக் கூடாதோ என்று தன்னையே நொந்துக் கொண்டு வருந்தினான். ஆனால் எப்படி அவள் தன்னைப் புறக்கனிக்கலாமென்ற கோபமும் ஒருபுறம் அவனை வதைத்துக் கொண்டிருந்தது. அருள் தான் யாரிடமும் எதுவும் கூற முடியாமல் தேன்மலரை நினைத்து கவலைக் கொண்டு நொந்து வருந்திக் கொண்டிருந்தான்.
விடியலில் உறங்க ஆரம்பித்த தேன்மலருக்கு அரைமணி நேரத்திற்கு மேல் உறக்கம் அவளைத் தழுவவில்லை ஆதலால் தன் காலை வேலைகளை முடித்துவிட்டு அறை விட்டு கூடத்திற்கு வந்தவள் அங்கு தேவா ஸோஃபாவில் சாய்ந்தமரந்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சத்தமிடாமல் கூடத்தின் பக்கவாட்டிலிருந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்துக் கொண்டு வீட்டின் பக்கவாட்டிலிருந்து பின் பக்கம் வரை விரிந்திருந்தத் தோட்டத்திற்குச் சென்றாள். தோட்டத்தின் பசுமையும் விடியலின் குளிர்ந்தக் காற்றும் அவளின் மனப்புழுக்கத்தைக் குளிர்விக்க, சிறிது நேரம் அந்த ரம்மியமானக் காலைப் பொழுதை ரசித்தப்படி தோட்டத்தை வலம் வந்தவள் அங்குப் போடப்பட்டிருந்தக் கல் இருக்கையில் அமர்ந்து அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கலானாள்.
அவள் எழுந்த சிறிது நேரத்தில் கண்விழித்த தேவா, தேன்மலர் தோட்டத்தில் உலவுவதைக் கண்டு சிறிதாக இதழ் விரித்தவாறேச் சென்று தன் காலை வேலைகளை முடித்தவன் அவளுக்கும் அவனுக்குமாய்க் காபியைக் கலந்து இருக்கோப்பைகளில் எடுத்துக் கொண்டுத் தோட்டத்திற்கு விரைந்தான். தேவாவை கண்ட தேன்மலர் அவன் கையிலிருந்துத் தனக்கானக் கோப்பையை வாங்கியவாறே “என்னை கூப்ட்ருக்கலால… நா காபி போட்ருப்பேனே…” என்றாள்.
தேவா “அவ்ளோ பயமா… பயப்படாம குடி மா… நா நல்லாவே காபி போடுவேன்…” என்று கூற,
தேன்மலர் குறுநகையோடு “அது எனக்கு நேத்து நைட்டே தெரிஞ்சுருச்சு சார்…” என்று கூற, தேவா இதழோரம் சிறிதாகப் புன்னகையைச் சிதற விட்டான்.
அச்சமயம் அங்கு வந்த அமீரா நேற்று அங்கிருந்து சென்று விடுவேன் என்று அடம்பிடித்த தேன்மலரும் அவளுடன் அதிகம் பேசாத தன் நண்பன் தேவாவும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் கொண்டவள் “ஹேய் தேவா… யாரோ சொன்னாங்க நா இங்கேர்ந்து போறேன்னு… இப்ப காபி குடிச்சுட்ருக்காங்க…” என்று கேட்டவாறு அவர்களை நோக்கி வந்தாள்.
தேவாவும் தேன்மலரும் ஒரே நேரத்தில் “ஹே மீரா வா… ஹாய் மீரா…” என்று கூற, அமீரா சிரித்துக் கொண்டே அவர்களுடன் வந்தமர, தேவா தேன்மலரை பார்க்க, தேன்மலரும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.
தொடரும்…