Loading

 அத்தியாயம்-3

அடர்த்தியான புதருக்குள் தங்களை மறைக்க நினைத்தவனின் எண்ணம் தோற்று போனது. வேறு வழியில்லாமல் அரண்மனை சுவரை கடக்க முடியாமல் அருகே இருந்த வாயிலை நோக்கி முன்னேறினான். அவன் மேல் சிறு ஐயம் கொண்டு விரிந்த தன் அளகபாரத்தை அள்ளி முடியாது பளிங்கு தரையில் பாதம் தேயாது அவனிடம் ஓடினாள் ஆழினி.

அவள் வருவதை கண்டவன், “வீரா செல்! திரிசல தேசத்தின் இளவரசி நம்மை கண்டு கொண்டார்” என்று தன் குதிரையை ஏவ அதுவோ ஓர் அடி நகராது வானத்தை பார்த்துப்படி நின்றது.
“என்னவாயிற்று? செல் வீரா!” என்று அவன் ஏவியது எல்லாம் வீணே! அதற்குள் படைகளுடன் அங்கு வந்து சேர்ந்தாள் அந்த நாட்டின் இளவரசி.

‘இப்படி மாட்டி விட்டாயே!’ 8என்று தன் குதிரையை மனதில் கறுவி வருபவர்களை எப்படி கையாளுவது என்று யோசனையில் ஆழ்ந்தான்.

“வீரர்களே! அவனை என்னிடம் அழைத்து வாருங்கள்”
“உத்தரவு இளவரசி” என்று ஒன்று போல கூறி அவனை நெருங்கினர்.

“இளைஞனே! குதிரையில் இருந்து இறங்கு! இளவரசி உன்னை அழைத்து வர உத்தரவிட்டுள்ளார்”
“சற்று பொறுங்கள் வருகிறேன்” என்று குதிரையில் இருந்து இறங்கி அருகே அதை கட்டிப்போட்டு அவர்களோடு செல்ல ஆயத்தமானான்.

‘நாம் வந்த நோக்கத்தினை இளவரசி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், அவரது புத்தி கூர்மையால் நம்மை வீழ்த்திவிட முடியும். எதற்கும் சற்று கவனமாகவே இருப்போம்’ என்ற மனவோட்டத்தை விழியில் காட்டாமல் வீரர்களோடு நடந்தான்.

என்னதான் அவன் கண்ணில் எதையும் காட்டவில்லை என்றாலும் அவனது படர்ந்த நெற்றியில் புதிதாக பூத்த வேர்வையை கண்டுக் கொண்டாள் ஆழினி. அதிலேயே அவன் ஏதோ ஒன்றை தன்னிடம் இருந்து மறைக்க முயல்கிறான் என்பதை அறிந்து கொண்டாள்.

பார்க்க ஆஜானுபாகுவாக இருக்கின்றான். ஒரு வேளை பக்கத்து நாட்டு ஒற்றனாக இருப்பானோ? அவ்வாறாக இருப்பின் எப்படி அதை நாம் அறிவது என்ற யோசனையில் அவனை அரண்மனையை நோக்கி அழைத்து சென்றாள். நீராடி கோவில் செல்ல பூச்சரத்துடன் வந்த இளவெயினி ஆழினியுடன் வருபவனை கண்டு சிலையாக சமைந்தாள்.

தன் மனதிற்கினியவன் இப்படி தன் தமக்கையிடன் அகப்பட்டு விட்டான் என்ற அதிர்வை காட்டிலும், இவளது மனம் ஒருவனால் கவரப்பட்ட செய்தியை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று அவள் மனம் கலங்க தான் செய்தது.  

இவளை கண்டவனின் கால்கள் அங்கு ஒரு நொடி நின்றதை கண்டவளுக்கு மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட அதை பெரிது செய்யாமல் மேலும் முன்னேறினாள்.

அவளை நெருங்க நெருங்க இளவெயினியின் பார்வை அவனை மையலாய் வருடி சென்றதை கவனித்தவளுக்கு உலகம் சூனியமானது. சிறுபிள்ளையாக பாவித்து வளர்த்த தன் தங்கையிடம் இப்படி ஒரு செயலை அவள் எதிர் பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

எதையும் தீர விசாரிக்காது தாமே முடிவு செய்வது பெரும் தவறு என்று மனதிடம் முறையிட்டு அரசவைக்குள் நுழைந்தாள் ஆழினி மைவிழியாள்.

மனம் கவர்ந்த கள்வனை காண அச்சுப் பதுமையாக தயாராகி 
வந்தவளுக்கு அவனை 
அரண்மனையிலேயே கண்டது
மகிழ்ச்சியாக இருந்தாலும் 
அவன் இருக்கும் நிலைமையை நினைத்து மனம் பதற தான் செய்தது இளவெயினிக்கு. 
இருப்பினும் அவனின் புத்திக்
கூர்மையை அறிந்தவள் 
அமைதியாக அவைக்கு 
சென்றாள்.

ஆழினி வீரர்கள் சூழ புதியவன்
நேராக தன் தந்தையிடம் வந்தவள், “தந்தையாரே குதிரையில் அமர்ந்து நம் அரண்மனையை வெறித்துக் கொண்டிருந்தார் இவர். சந்தேகத்தின் பெயரில் இவரை உள்ளே அழைத்து வந்துள்ளேன். தாங்கள் இவரிடம் அவர் வந்த நோக்கத்தை விசாரிக்கவும். நான் தங்கையுடன் கோவிலுக்கு சென்று வருகிறேன்” என்று அங்கு நொடி பொழுது நிற்காமல் தாவி அவளறை சென்றவள், பணி பெண்கள் உதவியுடன் விரைவாக தயாராகினாள்.

அங்கு வந்தவள் கண்டதும் புதியவனுடன் தோழமையாக பேசிக்கொண்டிருந்த தந்தையை தான். குழம்பிய வதனத்தை மறைக்காமல் அவர்களை நெருங்கினாள்.

அவள் வருவதை கண்ட புதியவன் கேலியான பார்வையில், “இளவரசியரே உண்மையில் நான் யாரென்று தங்களுக்கு பிடிப்படவில்லையா?”

இல்லை என்று சொல்லாது, தலையை இடம் வலமாக ஆட்டி அவனை பார்த்தாள்.

“தங்கள் செல்ல சீமாட்டியிடம் என்னை பற்றி கூறியது இல்லையா அரசே? கண்ணன் போல கருமையாகவும் அல்லாமல் திருமால் போல திவ்வியமாகவும் அல்லாமல் என் ஈசனின் அம்சம் கொண்டு ஒரு மாமன் உனக்கு இருக்கிறான் என்று உரைத்தது இல்லையா? நீங்கள் ரொம்ப மோசம் மாமா. உங்கள் மாமன் மைத்துனன் சண்டையில் எங்களை எட்ட நிற்க வைத்து இன்று என்னிடம் இனிமையாக பேசுகிறீர்கள். இது எல்லாம் சரியில்லை! இன்று நான் இங்கு பிரவேசிக்க இல்லை என்றால் ஒன்றும் இல்லாத கோவத்திற்காக முழுதாக பதினைந்து ஆண்டுகள் என் அன்னையிடம் பேசாமல் இருந்தது போல மீதி நாட்களை கடந்திருப்பீர்” என்று ஆழினியிடம் ஆரம்பித்து தன் மாமனிடம் முடித்தான் அந்த புதியவன்.

அவன் சொன்னதில் பாதி புரிந்தும் புரியாமலும் போக, இளையவளும் மூத்தவளும் தங்கள் தந்தையை கேள்வியாக பார்த்தனர்.

அவர் பதில் கூற ஆரம்பிக்க, “மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் அனைவரையும் உணவருந்த அரசியார் அழைப்பு விடுத்துள்ளார்”.
“வருவதாக கூறுங்கள்” என்று அந்த பணிப்பெண்ணை அனுப்பி வைத்தாள் ஆழினி.

“தந்தையாரே, உணவருந்தியப்படி நமது உரையாடலை தொடரலாம், வாருங்கள்” என்று அவரை அழைத்து, அருகில் இருந்தவனை கண்ணால் அழைத்து தன் தங்கையின் கைப்பிடித்து அழைத்து செல்ல பயத்தில் விதிர்விதிர்த்து போனாள் இளவெயினி.

அனைவரும் வருவதை கண்ட செம்பியன் தேவி இன்முகத்துடன் உபசரித்தார்.
“வாருங்கள் மருமகனே! தங்களுக்கு இப்போது தான் அரண்மனையின் தடம் கண்ணில் அகப்பட்டதோ?தங்களுக்கு ஈசன் மாளிகை மட்டும் தான் கண்களுக்கு தெரியும் என்றல்லவா நினைத்தேன்” என்று கண்ணில் குறும்பை தேக்கி அவர் பேச, கண்ணை சுருக்கி கண்ணால் இறைஞ்சினான் வர்தமானன்.

“வர்தமானா! உனக்கும் அரசிக்கும் ஏதோ ரகசியம் இருக்கிறது போல”

“அரசே அது வந்து”

“சொல் வர்தமானா!”

“தாங்கள் எனக்கும் என் மருமகனிற்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை கண்டு பொறாமை கொண்டு அவரிடம் ஏன் கேள்வி கணைகளை தொடுக்கின்றீர்?”

“தேவியாரே தாங்கள் எதற்கு தங்கள் அருமை மருமகனிற்காக கேடயமாக மாறுகிறீர்கள்?”

‘இவர்கள் இருவரும் இன்று இளவரசி ஆழியினிடம் என்னை மாட்டி விடாமல் ஓயமாட்டார்கள் போலவே. இவர்களுக்கு முன் நாமே அவரிடம் சரணடைந்து விடுவோம், பிறகு என்னவளிடம் தஞ்சமடைந்து விடுவோம்’ என்று அகத்தில் பேசியவன்.

இவர்கள் செய்கையை வெறும் பார்வையாளராக மட்டும் கவனித்து கொண்டிருந்த ஆழினியிடம் திரும்ப, தன் காந்த குரலில் “இங்கு என்ன நடக்கிறது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள்.

“இளவரசி அவர்களே, நான் தங்களிடம் சற்று பேச வேண்டும்”

“தாங்கள் யுவராஜா வர்தமானன் அவர்களா?”

“தேவி அவர்களுக்கு என்னை பற்றிய செய்திகளும் தெரிந்திருக்கும் போலவே”

“தங்களை பற்றி திரிசல தேசம் அறியாததா? தங்களை போல் வாள் போர் புரிய எவரும் இல்லை என்று பிறந்த குழந்தையும் தங்கள் புகழ் படுகிறதே. எமக்கு தெரியாமல் இருப்பீர் என்று எப்படி கனா கண்டீர்”

“தங்களிடம் எதிர்த்து வாதாட தேசத்தில் எவரும் இல்லை என்று செவி வழியே கேட்டதுண்டு, கண்ணால் கண்ட பின்பு நானும் ஒப்புக்கொள்கிறேன் இளவரசி. தங்களிடம் வாய்ப்பேச்சில் வெற்றி கொள்ள முடியாது என்று. அடியேனை மன்னித்து, தங்களுடன் சிறு உரையாடல் மேற்கொள்ளலாம் என்று உத்தரவு கொடுத்தால் அகம் மகிழ்வேன்” என்று மார்பில் கை பதித்து அவள் கண் பார்க்க,

“யுவராஜா அவர்கள் எமது தங்கை மீது இருக்கும் விழியை சற்று விலக்கி எம்மை கண்டால், பேசுவதை பற்றி சிந்திக்கலாம்” என்று ஆழினி கூற அங்கு இருக்க முடியாமல் அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் இளவெயினி.

“தங்களிடம் இருந்து எதுவுமே தப்பி கொள்ளாது போலவே இளவரசி.”

“என்னிடம் வாயாடியது போதும் உங்கள் மேல் கோவமாக இருக்கும் என் செல்ல தங்கையை சமாதானம் செய்த பிறகு எனது அறைக்கு வாருங்கள், மற்றதை அங்கு பேசுவோம்”

“விடைபெறுகிறேன்” என்று எழுந்து ஓட்டப்பந்தயத்தில் ஓடாத குறையாக புள்ளிமான் பின்னே புயலாக தொடர்ந்தான் வர்தமானன்.

செல்லும் அவனை இன்முகத்தோடு பார்த்திருந்தவர்கள், ஆழினியிடம் திரும்பினர்.

“ஆழினி உன் தங்கையின் மாற்றத்தை நீ கண்டுக்கொள்ளாதது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவள் மையல் கொண்ட ஆண் மகன் வர்தமானன் என்று எங்களுக்கு முன் தினம் தான் செய்தி வந்தது” என்று செம்பியன் தேவிமொழிந்தார்.

“அன்னையே சில நாட்களாக என் மனம் வெறுமையை சூடி என்னை வதைக்கிறது. எதிலும் நாட்டமில்லாமல் மனம் முழுவதும் ஒரு வித இறுக்கம் தென்படுகிறது. அதை அறிய முற்பட்டு எனக்கு கிடைத்தது என்னவோ தோல்வியே!”

“இளவரசி ஆழினிக்கு மனம் தெளிவில்லை என்று கூறினால் கேளிக்கையாக இருக்கிறது. பிறர் மனதை தன் வசம் கொள்ளும் என் மகளா? என்று ஐயம் ஏற்படுகிறது”

“தந்தையாரே! அதை பற்றி நாம் பிறகு உரையாடலாம். தாங்கள் இதுவரை தங்கள் தங்கையின் பெயரை கூட கூறி நான் கேட்டது இல்லை. ராஜமாதா புண்ணிய ஸ்தலம் செல்லும் முன் என்னை அழைத்து, பிரிந்த இந்த உறவை எம்மால் மட்டும் தான் கோர்க்க முடியும், அவர் தரிசனம் முடித்து வரும் வேளை அதை நான் செய்து முடித்திருப்பேன் என்று மொழிந்து சென்றார். அவர் சென்ற பிறகு அதற்காக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் இரண்டு திங்களுக்குள் தங்கள் தங்கையின் மகன் வர்தமானன் இங்கு வந்துள்ளார். இதில் என்னை குழப்பும் விடயம் என்னுடன் கோவில் வரும் இளவெயினி எப்படி இவர் மேல் மையல் கொண்டாள். நான் எப்படி இப்படி ஒரு கவனச்சிதறலில் இருந்தேன்” என்று கவலையாக இருவரையும் கண்டாள்.

“ஆழினி உன்னிடம் நாங்கள் பேச வேண்டியது பல இருக்கிறது. சற்று பொறுமை கொள் வர்தமானன் சென்றதும் அனைத்தையும் கூறுகிறோம். இப்பொழுது நீ உணவருந்து” என்று தற்போதைய பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார் செம்பியன் தேவி.

அவர் பேசியதை கேட்ட அரசரின் முகம் மாற, கண்ணை திறந்து எல்லாம் சரியாக நடக்கும் என்று கண்ணால் அவரை ஆறுதல் படுத்தினார் அவரது சரி பாதி.

எல்லாம் சரியாக நடக்க வேண்டும் ஈசனே என்று பரம்பொருளிடம் பாரத்தை இறக்கி உணவருந்தினர் எழினியாதன்.

ஆழினியின் மனம் மீண்டும் சஞ்சலப்பட ஆரம்பிக்க, அதை புறம் தள்ளி உணவை உண்ண ஆரம்பித்தாள்.

அவர்கள் உணவருந்தி முடிக்க, ஒரு வித தயக்கத்துடன் அங்கு வந்தாள் இளவெயினி. அவளுள் புயலடிப்பது அவள் கண்ணில் தெரிய, “என் தங்கை தவறிழைக்க மாட்டாள் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நீ கவலை கொள்ள தேவையில்லை இளவெயினி. ஒருவர் மீது மையல் கொள்வது அத்தனை பெரிய தவறு எதுவும் இல்லை. நமது மாமன் அவர்கள் திருடன் போல் இனி உன்னை காண வராது, இனி உரிமையாக வந்து காண சொல்.”

“எமக்கு உரைத்தது இளவரசி அவர்களே! தங்கள் திருமணம் உறுதியான பிறகு இளவெயினியை முறைப்படி வந்து என்னவளாக உரிமை கொள்கிறேன். நாம் சிறிது நேரம் உரையாடலாமா?”

“என் தங்கையின் வருங்கால மணாளன், தங்களிடம் பேசாமல் எப்படி? வாருங்கள் அறைக்கு செல்வோம்” என்று அவள் முன்னே செல்ல அவன் பின்னே சென்றான் ஒரு வித முடிவுடன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. கோவளர் சுரேன்

      வார்த்தைகளில் வழிவதல்ல காதல்… வாழ்க்கையில் வலிகளை தாங்கி வெல்வது… அருமையான தொடர்… மேலும் எழுத என் வாழ்த்துகளும்! வணக்கங்களும்!💙🙏

    2. Abirami

      வாவ் செம சுபா பேபி. சூப்பரா இருக்கு ஸ்டோரி. வர்தமானன் என்ன சொல்ல போகிறான் ஆழினியிடம்?? தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். 😍😍😍😍

    3. Archana

      😍😍😍😍சூப்பர் எபி கா பேர் எல்லாமே வித்தியாசமா இருக்கு வர்தமா நல்லவன் தானா???