சமயபுரம் மாரியம்மன் கோயில். எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும் கோயிலில் திங்கள் கிழமை முதல் முகூர்த்தத்தில் யாழினிக்கு திருமணம்.
ஆறு ஏழரை முகூர்த்தம். ஏழு இருபதுக்கு மண மேடைக்கு வர வேண்டும் என்று உத்தரவு.
யாழினி.
ஐந்தடி உயரம். ஒல்லியான உடல்வாகு. பிரம்மன் பார்த்து பார்த்து படைத்தான் போல. கோயில் தூணில் உள்ள சிலை உயிர் பெற்று வந்து பெண்ணாக பிறந்தது போல் தோற்றம். நிலவை போல் வட்ட முகம். ( எத்தனை சந்திராயன் வந்து நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பினாலும் பெண்ணின் முகத்தை நிலவுடன் தான் ஒப்பிடுவோம்)
எப்பொழுதும் புன்னகை தவழும் உதடுகள் இன்று ஏனோ புன்னகையை மறந்து இருந்தது. அளவான நாசி அதில் ஒற்றை சிகப்பு கள் மூக்குத்தி. லென்ஸ் வைக்காமலேயே வைத்தது போல் தோன்றும் அடர் சாம்பல் நிற கண்கள்.
அவளின் கண்களை பார்த்த பின்னர் நம் கண்கள் அவளின் அழகு வதனத்தை தாண்டி எங்கும் பார்க்காது. அப்படி ஒரு ஈர்ப்பு நிறைந்த கண்கள் இன்று ஒளியை இழந்து எப்பொழுது வேண்டுமானாலும் கண்ணீரை வடிய விட காத்திருந்தது.
தங்க நிறத்தில் புடவை. எப்படியும் ரூபாய் ஐம்பது ஆயிரம் இருக்கும். பின்னர் சும்மவா. வருங்கால மந்திரி தனது மனைவிக்கு இதைவிட குறைவாக வாங்கினால் நன்றாகவா இருக்கும்.
கிட்டத்தட்ட ஐம்பது சவரன் நகைகளை சுமந்து கொண்டு தங்க சிலை போல் தயாராகி அமர்ந்து இருந்தாள் யாழினி.
அவளின் அருகில் நின்றிருந்த அவளது உயிர் தோழி காவ்யா, “யாழினி… இப்பவாவது நான் சொல்லுவதை கேள். திருமணம் வேண்டாம் என்று மறுத்து விடு” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
எந்த உணர்வும் இல்லாமல் எங்கோ வெரித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளின் கண்கள் அம்பாளின் சன்னதியை நோக்கியே சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
அவளின் உள்ளமோ ‘நான் என்ன பாவம் செய்தேன் அம்மா. எனக்கு ஏன் இப்படி சோதனை மேல் சோதனையாக கொடுத்துக் கொண்டே இருக்கிறாய்? ஏதாவது ஒரு மாயாஜாலம் செய்து இந்த திருமணத்தை தயவு செய்து நிறுத்தி விடு தாயே!’ என்று மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டிருந்தது.
அவளின் சார்பில் அவளோடு அவளுடன் இருந்தது காவியா மட்டுமே. அவளின் தந்தை சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தார். அவரின் முகத்தில் எப்படியாவது இந்த கல்யாணத்தை முடித்து யாழினி இங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது தெரிந்தது.
இருவருக்கும் நடுவில் அவளது தாய் நின்று கொண்டு இருந்தார். அவரால் தன் மகளுக்காக பேச முடியாமல் மகளை தவிப்பாக பார்த்துக் கொண்டு கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தார்.
யாழினியின் அருகில் இருந்த அவளது உயிர்த்தோழி காவ்யா, “இன்னும் நீ யாருக்காக யோசிக்கிறாய். உன் தந்தை என்றாவது ஒரு நாள் உன் மேல் பாசம் வைப்பார் என்று இவ்வளவு காலம் யோசித்து யோசித்து எதுவும் செய்யாமல் அவர்களுடனே இருந்து விட்டாய். இன்னும் பத்து நிமிடங்கள் தான் உள்ளது. உன் வாழ்க்கை இனிமேல் இன்னும் மோசமாக இருக்கும் என்பதை சற்று நினைத்துப் பார். தயவு செய்து நான் சொல்வதைக் கேள்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக கெஞ்சிக் கொண்டு நின்றிருந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடம் சற்று பரபரப்பாக ஆவது போல் தோன்றியது மணமகன் வந்து கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாக புரிய காவ்யாவிடம் தான் படபடப்பு கூடியது.
யாழினியின் தோளை பற்றி உலுக்கி, “யாழினி… யாழினி…. ” என்று கூப்பிட்டாள்.
யாழினியோ அப்பொழுதும் சிறிதும் உணர்ச்சி இன்றி அப்படியே அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது அவர்களின் அருகில் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்தார்.
வந்தவர் யாழினியை மேலும் கீழுமாக உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அளவெடுப்பது போல் பார்த்தார்.
பின்னர் அவளின் நாடியை பிடித்து தன்னை பார்க்கச் செய்து, “உனக்கு இந்த திருமணத்தில் மனப்பூர்ண சம்மதம் தானே? அப்படி சம்மதித்தால் தான் நல்லது. விரும்பாமல் கல்யாணம் செய்தால் என் தம்பிக்கு மந்திரி பதவி கிடைக்காது” என்று சற்று அதிகாரமாக நாடியை பிடித்து அழுத்தியபடி கேட்டார்.
அவரின் பிடியில் வலி ஏற்பட்டாலும் எந்த பதிலும் சொல்லாமல் எந்த உணர்வையும் தன் முகத்தில் காட்டாமல் வெரித்த பார்வையுடன் நின்றிருந்தாள் யாழினி.
‘இவர் கல்யாண மாப்பிள்ளையின் அக்காவாகத்தான் இருக்கும் இவர் இப்படி இவரிடம் நாம் யாழினிக்கு விருப்பமில்லாத திருமணம் என்று சொல்லிவிட்டால் கண்டிப்பாக நிறுத்தி விடுவார்’ என்ற நம்பிக்கையில் காவியா தான் அவரிடம், “ஆன்ட்டி நான் சொல்வது உண்மைதான். அவளுக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. அவளது அப்பா சொல்லிட்டாங்க என்பதற்காக கல்யாணம் பண்ண வந்து அமர்ந்திருக்கிறாள்” என்று மெதுவாக கூற, அந்தப் பெண்மணியும் காவியாவை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை பார்த்துவிட்டு, “அப்படி என்றால் நீ திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று இளக்காரமாக கேட்டார்.
அதில் அதிர்ந்து ஒரு அடி பின்னால் நகன்ற காவ்யா, “என்ன ஆன்ட்டி இப்படி சொல்றீங்க?” என்று பயந்தவாறு கேட்டாள்.
“பின்ன எப்படி சொல்றது. அவளுக்கு ஜாதகம் எல்லாம் பொருத்தமா இருக்குன்னு சொல்லி தானே கல்யாணம் பண்ணி இங்க வந்திருக்கோம். இப்ப இந்த மாதிரி சொன்னா என்ன அர்த்தம்” என்று சற்று அதட்டலாக கேட்டார்.
அவளின் அதட்டலான குரலில் சுய உணர்வுக்கு வந்த யாழினி, தன் தோழியின் பயந்த முகத்தைக் கண்டு அவளின் அருகில் நின்று கொண்டு, “ஒன்னும் இல்லை ஆன்ட்டி. என்னுடைய விருப்பத்துடன் தான் திருமணம் நடக்க இருக்கிறது.
நீங்கள் சொல்லும் பொழுது மணமேடைக்கு வருகிறேன் நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள்” என்று நிதானமாக பேசினாள் யாழினி.
அவரும் யாழினியை முறைத்தவாறு, “கூப்பிட்டவுடன் வந்து சேர்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகன்றார்.
அவர் சென்றதும் சில நிமிடங்களில் முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நான்கு இந்து பெண்கள் உள்ளே வேகமாக வந்து யாழினியிடம், “சீக்கிரம்…” என்று அவசரப்படுத்தி, “வா… மணமேடைக்கு செல்லலாம்” என்று அவளை அழைத்துச் சென்றார்கள்.
காவியாவின் கண்களுக்கு அவளை இழுத்துச் செல்வது போல் தோன்றியது. காவியாவும் அவர்களின் பின்னால் வேகமாக ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அங்கிருந்த மணமேடையில் கிட்டத்தட்ட ஐம்பது வயதான ஒருவர் பட்டு வேஷ்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரைச் சுற்றி வெள்ளை வேஷ்டி சட்டையில் பலர் பாதுகாப்பு அரண் போல் நின்று கொண்டிருந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கவும் அய்யர் “கல்யாண பெண்ணை அழைத்து வாருங்கள்” என்று சொல்ல சொன்னதும் யாழினியை இழுத்து அவரின் அருகில் அமர வைத்தனர் அழைத்துச் சென்ற பெண்கள்.
ஐயர் மணப்பெண்ணை பார்த்ததும் ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டார். இந்த சின்ன பெண்ணையா இவர் திருமணம் செய்யப் போகிறார் என்று பாவமாக பார்த்தார்.
பாவப்படுவதை தவிர அவரால் என்ன செய்து விட முடியும். மாங்கல்ய தட்டில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்து, மாப்பிள்ளையின் கையில் கொடுத்து, தாலி கட்டும்படி கூறிவிட்டு, “கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்றார்.
கெட்டிமேளம் முழங்க தாலி கட்ட யாழினியின் கழுத்தின் அருகில் கொண்டு செல்லும் பொழுது, அந்த இடம் மிகவும் சலசலப்பாக மாறியது. வேக வேகமாக வந்த காவல்துறையினர் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டனர்.
திடீரென்று தன்னை சூழ்ந்து நின்ற காக்கி உடையை கண்டு “ஏய்…” என்று கத்தினார் மணமகனாக வீற்றிருக்கும் பூபதி பாண்டியன்.
அவரை நோக்கி அழுத்த நடையுடன் அவரின் அருகில் சென்றான் திருச்சியின் அசிஸ்டெண்ட் கமிஷனர் சூர்யா.
ஏ சி பி யை கண்டதும் “ஏய் ஏ சி பி. பூஜைக்கு வந்தா நேரா சன்னதிக்கு போ. இங்க வந்து ஏன் நிக்கிற? ” என்று கோவமாக கேட்டார் பூபதி பாண்டியன் எம் எல் ஏ.
“ஆமாம். பூஜைக்கு தான் வந்தேன். ஆனால் நீ நினைத்தது போல் மாரியம்மன் பூஜைக்கு அல்ல. பூபதி பாண்டியனுக்கு பூஜை போட” என்று கூறி அவரின் சட்டையை ஒற்றைக் கையால் பிடித்து தூக்கி நிறுத்தினான்.
அவரின் சட்டையை பிடித்ததும் அங்கு சுற்றி நின்ற கரை வேட்டி சட்டை அணிந்து இருந்தவர்கள் எல்லோரும் “ஏய்….” என்று கத்தினார்கள்.
சுண்டு விரலை காதில் வைத்து குடைவது போல் செய்து. “ஸ்ஸ்… ஏண்டா இந்த கத்து கத்துக்கிறீர்கள்? ” என்றான் ஏசிபி சூர்யா.
“ஏய்… சட்டையில் இருந்து கையை எடுடா” என்று அவன் பிடியிலிருந்து விடுபட போராடினார் பூபதி பாண்டியன்.
அவர் அப்படி சொன்னதும் சட்டென்று கையை விட்டு விட்டான். அதில் தடுமாறி விழ போனவரை அவரது தொண்டர்கள் பிடித்துக் கொண்டனர்.
சமாளித்து நின்ற பூபதி பாண்டியன் கோவமாக சூர்யாவை முறைத்து, “ஏய்… என் மேலேயே கை வைக்கிறியா?” என்று அவனை அடிக்க நெருங்கினார்.
அவனும் சிரித்துக்கொண்டே, “கை மட்டும் அல்ல, காலையும் வைப்பேன். பொது இடம் என்று பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்தில் நின்ற இன்ஸ்பெக்டரிடம் “அரெஸ்ட் ஹிம்” என்றான்.
“என்னது அரெஸ்ட்ரா…? எதுக்கு எங்க தலைவரை அரெஸ்ட் பண்றீங்க?” என்று தொண்டர்கள் கொந்தளிக்க, அவர்களை அமைதியாக பார்த்த சூர்யா, “ஒரு சத்தம் இல்லாம அமைதியா இங்க இருந்து நீங்க போயிட்டீங்கன்னா, நானும் இவரை அரெஸ்ட் பண்ணி அமைதியா கூப்பிட்டு ஸ்டேஷன் போயிடுவேன். அதை விட்டுட்டு கத்தி கூச்சல் போட்டு, கூப்பாடு போட்டு, கலாட்டா பண்ணுனீங்க அப்படின்னா, இவரை அடிச்சு இழுத்துகிட்டு தான் போவேன்” என்று அழுத்தமாக கூறினான்.
அதில் அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாகிவிட, பூபதி பாண்டியன் இப்பொழுது ஏகினார்ர். “என்னை அரஸ்ட் பண்றியா நீ?” என்று.
“ஆமாம்… உன்னை தான் அரெஸ்ட் பண்ண போகிறேன்” என்று தயங்கி நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து கை விழங்கை வாங்கி, எம் எல் ஏ வின் ஒரு கைகளில் மாட்டிக் கொண்டு தன் பக்கம் இழுத்தான்.
அதில் தடுமாறி அவன் அருகில் வந்து நின்ற பூபதி பாண்டியனிடம் “கொலை பண்ணிட்டு தைரியமா வந்து இரண்டாவது கல்யாண வேற பண்றியா?” என்று பற்களை கடித்த வண்ணம் கண்களில் கோபம் மின்ன அவரிடம் கர்ஜனையாக கேட்டான்.
அதில் ஒரு நொடி திகைத்து விழித்த பூபதி பாண்டியன், பின்னர் சமாளித்து “என்னது கொலையா? எந்த கொலை? “என்று சூர்யாவிடம் நக்கலாக கேட்டார்.
அவனும், “ஓ… எந்த கொலையா? அப்போ எத்தனை கொலை பண்ணிருக்கீங்க?” என்று அதே நக்கலுடன் அவரைப் பார்த்தான்.
அதில் அரண்ட பூபதி பாண்டியன், “என்னை இப்ப எதுக்கு அரெஸ்ட் பண்ணுகிறீர்கள்? என்று எனக்கு தெரிந்தாக வேண்டும்” என்று இறுகிய முகத்துடன் அழுத்தமாக கேட்டார்.
“**** ரிப்போர்ட்டர் கொலை சம்பந்தமா உன்னை.. உங்களை இப்பொழுது அரெஸ்ட் செய்கிறேன்.
என்னிடம் இருக்கும் ஆதாரத்திற்கு உனக்கு சாரி உங்களுக்கு விளக்கம் கொடுக்க அவசியமே இல்லை. கைது செய்து ஜெயிலில் தள்ள முடியும். இருந்தும் எம்எல்ஏ என்ற ஒரே காரணத்திற்காக மிகவும் பொறுமையாக இருக்கிறேன். என் பொறுமையை சோதிக்காமல் ஒழுங்கா வந்து ஜீப்ல ஏறிடுங்க” என்று பொறுமையாக அவரிடம் கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
அங்கு மண மேடையில் நடப்பது எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்த யாழினியை கண்டு அவளின் அருகில் சென்று, “உன் வயது என்ன?” என்று அதட்டினான்.
“இருபத்தி ஒன்று” என்று நடுங்கியபடி கூறினாள்.
“அவர் வயது என்ன என்று தெரியுமா?” என்றான்.
‘தெரியாது’ என்று தலையை ஆட்டினாள் யாழினி.
“ஐம்பது வயது”
அதிர்ச்சியில் கண்களை விழித்து நின்றாள்.
“சோ… அவரைப் பற்றி உனக்குத் தெரியாது. அப்படித்தானே?”
‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள்.
“உன்னோட அப்பா அம்மா எங்கே?” என்று சுற்றிலும் கண்களால் துழாவ, அவளது தாய் வேகமாக அவளின் அருகில் வந்து நின்றாள்.
அவரைப் பார்த்து, “என்ன பணத்திற்காக உங்கள் மகளை அவனுக்கு கல்யாணம் பண்ண சம்மதித்து விட்டீர்களா?” என்று மிரட்டலாக கேட்டான்.
அவரோ பயந்தவாறு “இல்லை… அப்படியெல்லாம் இல்லை” என்று கூற,
உடனே “அப்போ உங்களை மிரட்டி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தார்களா?” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.
அதில் அரண்டுவிட்ட யாழினி என் தாய் “இல்லை” என்று வேகமாக தலையாட்டிக்கொண்டே தன் கணவனை பார்த்தார்.
சூர்யாவும் யாழினியின் பெற்றோர் இருவரையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டு, “எது எப்படியோ. இப்பொழுது இந்த கல்யாணம் நடக்காது. இப்பதைக்கு கொலை கேஸ்ல அவரை கைது செய்கிறேன். இந்த திருமணம் பற்றி விசாரித்துவிட்டு மேலும் வேற கேஸ் போட முடியுமா என்று பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு பூபதி பாண்டியனை இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினான்.
பூபதி பாண்டியனை கைது செய்து அழைத்துச் சென்ற சில நிமிடங்களுக்கு எல்லாம் காக்கி உடைகளும் வெள்ளை உடைகளும் அங்கிருந்து வெளியேறிவிட்டது.
இம்மையும் புரியாமல் மறுமையும் புரியாமல் நடப்பவற்றை பார்த்து விழி விரித்து கொண்டு நின்றிருந்த யாழினியின் அருகில் வந்த பெண்மணி, “ஏய்… அதுதான் கல்யாணம் நின்னுடுச்சுல்ல. இன்னும் எதுக்கு இந்த அலங்காரம். ஒழுங்கா நாங்க கொடுத்த நகையெல்லாம் கழட்டி கொடு” என்று முரட்டுத்தனமாக அவளிடம் இருந்து நகையை பிடுங்க ஆரம்பித்தார்.
அவரின் கைகளை பற்றிய காவ்யா “ஆன்ட்டி ப்ளீஸ் நானே கழட்டி தருகிறேன்” என்று வேகமாக அவள் நகைகளை கழட்டினாள் காவ்யா.
நகைகளை கழட்டியதும் அவற்றை வாங்கி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பைகளில் வைத்துக்கொண்டு, “உன்னை கல்யாணம் பண்ணனும்னு நெனச்ச ராசி என் தம்பி அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இந்த அதிர்ஷ்ட கெட்ட மூஞ்சிய எப்படி அவன் கல்யாணம் பண்ணிக்க நினைச்சானு தெரியல” என்று சொல்லிக்கொண்டு, “இந்த அதிர்ஷ்டம் கெட்டவளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் புடவையா? ஒழுங்கா கழட்டி கொடுடி” என்று புடவையை உருவா பார்த்தார்.
அவர் என்ன செய்யப் போகிறார் என்று காவியாவும் யாழினியும் உணர்வதற்குள் அவளது புடவையின் முந்தானையை பிடித்து உருவ முயன்றார் அந்தப் பெண்மணி.
நூரு பேர் கூடி இருக்கும் அந்த இடத்தில் கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் அந்தப் பெண்மணி செய்ய முயன்ற செயலில் யாழினி அதிர்ந்து தன்னை சமாளிப்பதற்குள், அவளின் அருகில் வந்த வயதான பெண்மணி தன் கையில் இருந்த புடவையை அவளுக்கு போர்த்தி அவரது மானத்தை காப்பாற்றி அணைத்துக் கொண்டார்.
யாழினியின் உடலோ அவமானத்தில் நடுங்கியது. அந்த நடுக்கத்தை உணர்ந்த அவளை அணைத்துக் கொண்டிருந்த பாட்டி, “கவலைப்படாதே மா. ஒன்றும் இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பது போல் அவளது முதுகை தடைவி ஆறுதல் படுத்தினார்.
யாழினியின் வாழ்க்கையில் அவளுக்கு முதன் முதலில் கிடைத்த ஆறுதலான அணைப்பு. அதில் மேலும் அவள் உடைந்து “பாட்டி…” அழ ஆரம்பித்து விட்டாள்.
யாழினி அழ ஆரம்பித்ததும் சுற்றி இருந்த மக்களை பார்த்து, “உங்களுக்கு கொஞ்சம் கூட நடக்கும் இந்த அராஜகத்தை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வில்லையா? உங்கள் வீட்டுப் பெண்ணிற்கு இப்படி நடந்தாலும் இதே போல் தான் வேடிக்கை பார்ப்பீர்களா?” என்று கோபமாக சுற்றி நின்ற மக்களை பார்த்து கேட்டார் அந்தப் பாட்டி.
பின்னர் காவ்யாவிடம் யாழினியை அழைத்துச் சென்று தான் போர்த்திய புடவையை உடுத்தி அழைத்து வருமாறு கூறி அனுப்பினார்.
அதேபோல் செய்து காவ்யா கொண்டுவந்து கொடுத்த புடவை ரவிக்கையை அப்பெண்மணியிடம் கொடுத்து “இனி இப்படி எந்த பெண்ணிடமும் நடந்து கொள்ளாதே” என்று கோவமாக சொல்லி அனுப்பினார்.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சலசலத்து கலைய ஆரம்பித்தது. வேகமாக யாழினியின் தாயிடம் வந்த அவளது தந்தை, “இவள் ராசியை பார்த்தாயா. கல்யாணம் பண்ண நினைத்தவனை திருமணத்திற்கு முன்பே சிறைக்கு அனுப்பி விட்டாள். இவளின் ராசியால் இன்னும் என்னென்ன நடக்க போகுதோ. இனி இவள் என் வீட்டிற்கு வர கூடாது. எங்காவது போய் சாகச் சொல்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிய தந்தையை அதிர்ந்து பார்த்துக் கொண்டு நின்றாள் யாழினி.
தொடரும்….
நைஸ் ஸ்டார்ட் 🤩
அமைச்சர் பதவிக்காக வயது வித்தியாசம் பார்க்காம ஒரு கல்யாணம் அதுக்கு அவளோட அப்பாவே உடந்தை…. அவளோட ராசி சரியில்லைன்னு வேற பேசுறாரு…. மோசமான அப்பா…😡😡😡 சூர்யா அதிரடி சூப்பர்…. 😍😍😍 நல்ல பாட்டி…. 👍
நன்றி… நன்றி 😊😊🙏😍😍