அதிகாலை பனிக்காற்று முகத்தில் வந்து மோத, அதை ரசித்தபடியே அந்த குளிர் கொஞ்சமும் தன்னை பாதிக்கவில்லை என்ற ரீதியில் ஓட்டமும் நடையுமாக தனது நடைப்பயிற்சியை செய்து கொண்டிருந்தாள் அவள். தளர்வான அவளது டீ-சர்ட் நனைந்திருந்த விதமே அவள் நீண்ட நேரமாக இதை செய்து கொண்டிருக்கிறாள் என காட்டியது.
ஓய்ந்து போன கால்கள் சற்றே ஓய்வு கொடுக்குமாறு கெஞ்ச, சாலை ஓரமாக இருந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்தாள். அப்போது பார்த்து அவளை கடந்து சென்ற ஒரு வெள்ளை நிற மகிழுந்து சற்று தூரம் சென்ற பின்பு மீண்டும் பின்னோக்கி வந்து அவளருகில் நின்றது. யாரென நிமிர்ந்து அவள் நோக்க, கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்த்தவனை கண்டதும் இவள் முகம் மலர்ந்தது.
“ஹாய்டா. வாட் எ சர்ப்ரைஸ்? உன்னை இங்க இப்ப எதிர்பார்க்கவே இல்லை.” என இவள் மகிழ்ச்சியுடன் கூற, “நீ எதிர்பார்த்து இருந்தாதான் ஆச்சர்யம். ஆனா இந்த டயலாக் நான் சொல்ல வேண்டியது மேடம். நான் இந்த ஊர்லயே இருக்கிறவன். நீதான் எப்ப வர, எப்ப போறன்னு எதுவும் தெரிய மாட்டேங்குது.” என்றான் அவன்.
இவள் உடனே, “சரி சரி விடு. இனிமேல் உன்கிட்ட சொல்லிட்டே வரேன் சரியா?” எனவும், “ஓகே. உன் ஜாக்கிங் முடிஞ்சுதுன்னா வா நானே டிராப் பண்றேன்.” என அழைத்தான் அவன். “ஓ ஷ்யூர்பா. ஆல்மோஸ்ட் முடிஞ்சது. வா போகலாம்.” என அவள் ஏறி அமரவும் கார் கிளம்பியது.
வீட்டை அடைந்ததும் இவள் இறங்கி, “வாயேன். ஒரு கப் காபி குடிச்சுட்டு போகலாம்.” என உபசரிக்க, “நீ சொல்லாம இருந்தாலும் நான் வருவேன். ஏன்னா ஆன்ட்டியோட கையால மார்னிங் காபி குடிச்சா அந்த நாள் பூரா எனர்ஜி இருக்குமே.” என பாராட்டியபடியே இறங்கி வந்தான் அவன்.
அவளின் அன்னையோ வாசலிலேயே நின்று கொண்டு இவள் வரவை எதிர்பார்த்திருக்க, “அம்மா யார் வந்திருக்கா பாரு.” என மகிழ்வுடன் கூறியபடி அவரை நோக்கி சென்றாள். அவனை கண்டதும், “வாப்பா.” என வரவேற்றாலும், “நீ வெளில போய் எந்நேரம் ஆகுதுடி. மாப்பிள்ளை எப்பவோ எழுந்துட்டாரு. நீ போய் அவரை பாரு.” என்றார் அவர்.
“அம்மா.” என அழுத்தமாக கூறினாலும், இவன் முன்பு எதையும் காட்டிக் கொள்ளாமல், “இதோ வந்துடறேன். வெயிட் பண்ணு. அம்மா இவனுக்கு காபி குடு.” என்றபடி உள்ளே செல்ல, அவரும், “இருப்பா. காபி எடுத்துட்டு வரேன்.” என்றபடி உள்ளே சென்று விட்டார்.
அவர் காபியோடு வந்ததும், “ஆன்ட்டி. யாரோ மாப்பிள்ளைன்னு சொன்னீங்களே. யாரு உங்க ரிலேட்டிவா?” எனக் கேட்டான் இவன். “என்னப்பா தெரியாத மாதிரி கேட்கற. ரதியோட வீட்டுக்காரரை தான் மாப்பிள்ளைன்னு சொன்னேன்.” என அவர் கூறியதும், ‘என்ன ரதிக்கு கல்யாணம் ஆகிடுச்சா?’ என அவன் மனம் அதிர்ந்ததில் கையிலிருந்த காபி கோப்பை நழுவியது.