Loading

அத்தியாயம் – 3

தன் மீது கை போட்டபடி திருமணத்திற்கு சம்மதம் சொன்னவனை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள் மணி!

“கைய எடுடா எரும மாடு..” என்று முதலில் அவனது கையைத் தட்டி விட்டவள், “யார் என்ன சொன்னாலும்.. எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை..” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ஆனால் அடுத்த நிமிடமே, “ராகவுக்கு கல்யாணத்துல ஓகேன்னா, எனக்கும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம்..” என்று கூறியிருந்தான் மானபரன்.

‘அடேய்..! என்னங்கடா நடக்குது இங்க?” என்றபடி பார்த்து வைத்த மணியோ, கோபத்துடன் காலை தொப்.. தொப் என்று வைத்தபடி.. தனது அறையை நோக்கிச் சென்றாள்.

செல்லும் அவளையே சிரிப்புடன் பார்த்து இருந்தனர் பாலாஜியும், தேவகியும்.

அவர்களுக்கு இன்னமும் தங்களது மருமகள் குழந்தையாகவே தான் தெரிந்தாள். இந்தக் கோபமும்.. சின்னக் குழந்தையின் செல்லப் பிடிவாதமாகவே பட்டது!

அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டியோ, ஒரு பெருமூச்சுடன்.. “நான் போய் அவகிட்ட பேசறேன்..” என்றபடி அவளது அறைக்குச் சென்றார்.

மெல்ல அவள் அறைக்குள் நுழைந்தவர் அவள் அருகே சென்று அவளது தோளைத் தொட்டார்.

பாட்டி அருகே வந்த அமர்ந்ததும் அவர் மடியிலேயே தலை வைத்து படுத்துக் கொண்டாள் மணி.

“ஏண்டா கண்ணா.. ராகவ உனக்குப் பிடிக்கலையா?” என்று அவர் கேட்க, “பிடிக்கல..” என்று தலையசைத்தாள் அவள்.

“இங்கு பாரு மணி.. சின்ன வயசுல இருந்து, அவன போட்டியாவே பார்த்திருக்க. இன்னும் மூணு பேருமே குழந்தையாவே தான் இருக்கீங்க.. அதனால தான் உனக்கு அப்படி இருக்கு.

நீ மட்டும் அவன கல்யாணம் பண்ணிகிட்டா எனக்கும் நிம்மதியா இருக்கும்.. இல்ல வெளியில முன்ன பின்ன தெரியாத யாருக்காவது உன்ன கல்யாணம் பண்ணி கொடுக்கறத விட ராகவனுக்கு, உன்ன கல்யாணம் பண்ணி கொடுக்கிறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன்.

இந்த பாட்டிக்காக சம்மதம் சொல்லுடா.. ப்ளீஸ்..” என்று அவர் கூற, மணியோ குழம்பிப் போனாள்.

“தெரியல பாட்டி.. என்னால சரியா முடிவு எடுக்க முடியல.. ஒரே குழப்பமா இருக்கு..” என்று அவள் கூற, முன்பு முற்றிலுமாக மறுத்தவள்.. இப்பொழுது குழப்பத்தில் இருப்பதாகக் கூறவும், அதுவே சற்று முன்னேற்றமாகத் தோன்றியது பாட்டிக்கு.

“இங்க பாருடா.. அப்பா, அம்மா இல்லாத புள்ளைய.. நான் கூட இருந்து பார்த்துக்க இங்க வந்து இருந்தேன்..

வேற எங்கயோ வெளில உன்ன கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு, நீ எப்படி இருக்க.. எப்படி இருக்கன்னு என்னால நித்தமும் தவிச்சிட்டு இருக்க முடியாதுமா.. பாட்டி உனக்கு நல்லது தானே செய்வேன்?

அத விட உன்னோட மாமாவும், அத்தையும் உன் மேல உயிரையே வச்சிருக்காங்க.. எங்க எல்லாரையும் நம்பி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுமா..” என்று அவர் மிகவும் இறைஞ்சுதலாகக் கேட்க.. பாட்டி மீது இருந்த பாசத்தால் அவளது குழப்பம் தெளியாமலேயே ஏதோ ஒரு நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தாள் மணி .

அவளைப் பொறுத்தவரையில் இந்தக் கல்யாணம் அது இது என்ற எந்த கனவுகளும் அவளுக்கு இல்லை.. எந்தக் கற்பனையும் இல்லை.. எந்தவொரு எதிர்பார்ப்பும் கூட இல்லை!

‘ஏதோ வீட்ல சொல்றாங்க.. நானும் கல்யாணம் பண்ணிக்கிறேன்..’ என்ற மனநிலையில் தான் அவள் சம்மதம் தெரிவித்தாள்.

இங்கு சிந்தனையில் ராகவின் அன்னையோ, அவனை தனியாய் அழைத்துச் சென்று பேசினார்.

“இத்தன நாள் சின்ன புள்ளைங்க மாதிரி நீங்க மூணு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்கன்னு தான் நாங்க நினைச்சிட்டு இருந்தோம். இப்போ அவ இவ்வளவு பிடிவாதமா உன்ன கல்யாணம் பண்ணிக்க மறுக்கிறா.

என்னடா நடக்குது இங்க?” என்று அவர் கேட்க ராகவோ, மென்மையாக சிரித்தான்.

“அம்மா.. அவ இன்னும் சின்ன குழந்தையாவே இருக்கறா.. கல்யாணம்ன்னு சொன்னதுமே என் மனசுல அவ ஞாபகம் தான் முதல்ல வந்துச்சு. அதனால தான் சட்டுன்னு நான் சம்மதம் சொல்லிட்டேன்.

அவளுக்கும் சம்மதம்னா, கல்யாண ஏற்பட ஆரம்பிங்க. இல்லன்னா வேற பொண்ண பாக்கலாம்..” என்று அவன் கூற, அப்பொழுது கதவைத் திறந்து கொண்டு பாட்டி வெளியில் வர.. அவன் பேசுவது உள்ளே இருந்த மணிக்கும் தெளிவாகவே கேட்டது.

‘என்ன இது.. இவன் நடந்துக்கறது எதுவுமே எனக்கு சுத்தமா புரியல.. என்ன எப்படி இவன் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னான்..?’ என்று குழம்பித் தவித்தவள், வேறு வழி இல்லையென்று பாட்டிக்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்.

அவள் அப்பொழுது தான் பி ஏ ஜுவல்லரி டிசைனிங் மூன்று வருட படிப்பை முடித்துவிட்டு, அதற்கும் மேலாக ஒரு டிப்ளமோ கோர்ஸ் செய்து கொண்டு இருந்தாள். அந்த மூன்று மாத முடிவதற்குள் இவர்கள் திருமணம் பேசிக் கொண்டிருக்க அதுவும் சற்று தலைவலியாகத் தான் இருந்தது மணிக்கு!

அதை அவள் பாட்டியிடம் கூற.. பாட்டியோ, “என்னமா..? நீ இங்க இருந்தாலும் சரி.. ராகவ் வீட்டுக்குப் போனாலும் சரி.. காலேஜ் ஒரே இடத்துல தான் இருக்கு. அதுவும் இன்னும் ரெண்டே மாசம் தான் இந்த கோர்ஸ் இருக்கு.

அப்புறம் எப்படி இருந்தாலும் நீ நம்ம கடைங்கள்ல ஏதாவது ஒண்ணுல தான் வேலை செய்ய போற.. இப்போ ராகவ கல்யாணம் செய்துட்டு, அவனுக்கு ஹெல்ப்பா இருப்ப..” என்று கூற, என்னவோ மனதிற்குள் எல்லாமே ஒரு கலக்கமாக இருந்தது.

அவளுக்கு முழு மனதுடன் எதற்குமே சம்மதிக்க இயலவில்லை.. ஆனால் சம்மதம் சொல்லி ஆக வேண்டிய நிலை அவளுடையது!

மனதுக்குள் ஆயிரத்தெட்டு குழப்பங்கள் அவளை வந்து வாட்ட.. முகமெல்லாம் அப்பிக்கொண்ட கவலையுடன் வலம் வந்தாள் பெண்ணவள்.

ஆனால்.. மிகவும் உற்சாகத்துடன் வளைய வந்தது அவளின் அண்ணனும், ராகவும் தான்.

இருவருக்கும் மனதிற்குள் ஏகப்பட்ட திட்டங்கள் இருந்தன. இந்தத் திருமணத்தின் மூலம் ஒருவரை ஒருவர் ஜெயிக்க முடியும் என்று திட்டவட்டமாக நம்பியிருந்தனர்.

சிறுவயதிலிருந்தே இருவருக்குள் ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது!

மானபரனின் தாய், தந்தை இருந்தவரையில் அது மனத்திற்குள்ளாக மட்டுமே இருந்தது.. ஆனால் அவள் இறந்த பிறகு.. அதுவரை தங்களுடன் இருந்த தாத்தா, பாட்டி.. அவர்களுடன் சென்றுவிட்டார்களே என்ற பொறாமையும் சேர்ந்து வளர, ராகவோ.. மானபரனை முற்றிலுமாக வெறுத்தான்.

அதே போலத் தான் மானபரனும்.. தனிக்காட்டு ராஜாவாக.. தன் வீட்டில் ஒற்றைப் பிள்ளையாக வளரும் ராகவைக் கண்டு பொறாமைப் பட்டான்.

அவன் வீட்டில் எந்தப் பொருள் வாங்கினாலும், அது அவனுக்கே அவனுக்கானதாய் முழுதாக சென்றடைந்தது.

ஆனால் இங்கு மானபரனின் வீட்டிலோ.. அவன் ஆசையாக வாங்கும் எல்லாப் பொருட்களிலுமே தங்கைக்கும் பங்கும் இருந்தது.

எதையுமே அவனால் தனித்து அனுபவிக்க முடியவில்லை..

இவ்வளவு ஏன்.. “பாட்டி.. எனக்கு இன்னைக்கு பூரி செஞ்சு கொடுக்கறீங்களா?” என்று அவன் கேட்டால் கூட.. “அச்சச்சோ.. இன்னைக்கு தோசை கேட்டாடா உன் தங்கச்சி..” என்று பாட்டி கூறுகையில் எரிச்சல் வரும் மானபரனுக்கு.

ராகவுக்கும், மானபரனுக்கும் ஒரே வயது தான்.. ஏழு வருடங்கள் இருவரும் அவரவர் குடும்பத்துக்கு தனிக்காட்டு ராஜாக்கள் தான்.

ஆனால்.. இருவரது ஏழாவது வயதில் பிறந்து வைத்த அழகுமணியால் இருவரது குடும்பத்திலும் சிறு மாறுதல் ஏற்பட்டது.

முதலில் எதற்கெடுத்தாலும் பேரன்கள்.. பேரன்கள் என்று கொஞ்சிக் கொண்டிருந்த தாத்தாவும், பாட்டியும்.. “இனி இந்த வீட்டுக்கு எல்லாமே அழகுமணி தான்.. அவ தான் இந்த வீட்டு மகாலட்சுமி..” என்று அவளைத் தலையில் தூக்கி வைத்த ஆட.. ராகவ், மானபரன் இருவருக்குமே காதில் புகை வராத குறை தான்.

மானபரன் என்ன தான், ராகவ் அவன் வீட்டில் தாய், தந்தையின் அன்பைத் தனியாளாக பெற்றுக்கொண்டு சுகமாக இருக்கிறான் என்று எண்ணினாலும்.. அது அப்படியாக இருக்கவில்லை.

ஏனென்றால்.. மணி பிறந்த பிறகு.. பெண் குழந்தையின் மீது பெரும் ஆசைகொண்ட தேவகியோ, தன் மகனை விட, மணியைத் தான் தூக்கி வைத்துக் கொஞ்சலானார்.

ஆக மொத்தத்தில் இரு வீட்டினருக்கும் கண்ணின் மணியான அழகுமணி.. அந்த வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் எதிரியானாள்!
ஏற்கனவே ராகவுக்கும், மானபரனுக்கும் இடையில் இருந்த துவேஷம், இருவருக்கும் சொத்து பிரித்துக் கொடுத்த பின் இன்னமும் வளர்ந்தது.

ஆளாளாளுக்கு நான்கு, நான்கு கடைகள் பிரித்துக் கொடுக்கப்பட.. கூடிய விரைவில் ஐந்தாவது கடை ஆரம்பித்துவிட வேண்டும் என மானபரன் நினைத்தால் அதை எப்படியாவது சதி செய்து ராகவ் தடுத்துவிடுவான்..

இதே ராகவ் அப்படி நினைத்தால்.. மானபரன் அதைத் தடுத்துவிடுவான்.

முன்னாளில் அத்தனை ஒற்றுமையாக இருந்த குடும்பம், இப்பொழுது இந்தப் பையன்களின் சிறுபிள்ளைச் சண்டையால் உடைந்தே போய்விடுமோ என்று அஞ்சித் தான் பாட்டி இப்படி ஒரு முடிவு எடுத்தாள்.

ஆனால் அதுவே, ராகவனுக்கும் சரி.. மானபரனுக்கும் சரி.. அழகுமணியைப் பழிவாங்கும் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று பெரியவர்கள் யாருக்குமே தெரியவில்லை!

ஆக.. இவர்களது உட்பகையில்.. தன்னையும் அறியாது மாட்டிக்கொண்ட பலியாடு தான் அழகுமணி.

இன்னும் இருபத்தைந்து நாட்களில் திருமணம் என்று முடிவான நிலையில்.. திருமணத்திற்குப் புடவை எடுப்பதில் இருந்து எந்த விஷயத்திலும் மணி ஆர்வம் காட்டாது இருக்க.. ராகவும் வேலையில் மிகவும் பிசியாக இருப்பதாகக் கூறிவிட.. மானபரனும்..

“எனக்கென்ன பாட்டி தெரியும்? எல்லாம் பெரியவங்க நீங்களே பார்த்து முடிவு பண்ணுங்க..” என்று கூறி கழன்று கொண்டான்.

அதனால் பெரியவர்கள் மூவருமே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்தனர்.

ஆனால் மனசெல்லாம் இன்னமும் குழப்ப மேகங்கள் கரையாதிருந்த மணியோ.. ராகவிடம் தனித்துப் பேசவேண்டும் என்று விரும்பினாள்.

அவனிடம் நேரே பேசி.. அவன் எதற்காக இந்தத் திருமணத்திற்கு சம்மதம் கூறினான் என்று அறியவேண்டும் என்று எண்ணினாள்.

அதற்க்காக சென்னையின் முக்கிய சாலையில் இருக்கும் அவனது முதல் கிளையான அலங்காருக்கு சென்றாள் மணி.

பெரும்பாலான நேரம் அவன் அந்த முதல் கடையில் தான் இருப்பன்.. எனவே அதை சரியாக யூகித்துத் தான் அவள் அங்கே செல்ல நினைத்தது.

அங்கே சென்று கடையின் மேனேஜரிடம் இவள் வந்திருப்பதாக, ராகவிடம் கூறும்படி இவள் கூற.. அவரோ ராகவிடம் சென்றார்.

அவர் வந்து ராகவிடம் விஷயத்தைக் கூறவும்.. ராகவுக்கு சிறு அதிர்ச்சி!

‘இவ எதுக்காக இப்போ என்ன பார்க்க வந்திருக்கா?’ என்று யோசித்தவன், வேண்டுமென்றே..

“இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன்.. அவள கெஸ்ட் ரூம்ல உட்கார வைங்க..” என்று கூற, மேனஜரோ முகத்தில் சற்று குழப்பத்துடன், “சரி சார்..” என்றுவிட்டு வெளியே சென்றார்.

விருந்தினர் அறையில் அவள் பதட்டத்துடன் கைகளில் சொடக்கெடுத்து கொண்டு அமர்ந்திருக்க.. ராகவோ..

‘இவ ஏன் இப்படி இவ்வளவு பதட்டத்தோட உட்காந்திருக்கா?

அதுவும் என்கிட்டே பேச இவளுக்கு என்ன இருக்கு?’ என்று யோசித்தபடியே அவளையே அங்கிருந்த சி.சி.டி.வி வழியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னமோ முதன் முறையாக அவளைப் பார்ப்பது போல ஒரு பிரமை அவனுக்கு.

அவளைத் தலைமுதல் கால்வரை பார்த்தவன் விழிகளில் அதுவரை இருந்த ஆராய்ச்சி மெல்ல மாறி, கண்கள் கனிந்தன.

ஒரு கணம் தன்னை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென சுய உணர்வு அடைந்து தலையை உலுக்கிக் கொண்டு அந்த அறையை நோக்கி சென்றான்.

அதுவரையில் அந்த அறையையே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவளோ.. அவன் உள்ளே வரக் கண்டதும் பதட்டத்துடன் எழுந்து நின்றவள், சற்று தடுமாறினாள்.

அவள் தடுமாறுவதையும் ராகவ் சலனமில்லாது பார்த்துக் கொண்டிருக்க.. ஒரு நொடி கண்களை இறுக்க மூடித் திறந்தாள் பெண்ணவள்.

அதற்குள் ராகவோ, அவளுக்கு முன்பிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டிருந்தான். பதிலுக்கு தன்னை அமரக் கூட சொல்ல மாட்டான் என்று சரியாகவே கணித்தவள், மெல்ல தானே அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. மணி, ராகவைப் பார்க்காது தலை குனிந்து அமர்ந்திருந்தாள். ராகவோ, அவளையே விழியெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரும் ஒன்றாக, ஒரே இடத்தில் இருக்கும் பொழுது இப்படி அமைதியாக இருப்பது இதுவே முதல்முறை. அதை நினைத்து அதிசயித்திய மணி.. இவனிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தாள்.

ஒரு கட்டத்தில் தைரியமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தால்.. ஆளையே ஊடுருவும் பார்வை ஏனோ அவளை மீண்டும் தலைகுனிய வைத்தது.

‘என்ன இப்படி பார்த்துட்டு இருக்கான்? ஏன் வந்த.. எதுக்கு வந்தன்னு எதுவுமே கேட்க மாட்டீங்கறான்?’ என்று குழம்பியவள்.. ஒரு பெருமூச்சுடன் தன்னை மீண்டும் தைரியப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவள்..

“ஏன் வந்தேன்.. என்ன விஷயம்னு எதுவுமே கேட்க மாட்டியா?” என்று கோபமாய் மணி கேட்க, ராகவோ அலட்சியமாய் சிரித்தான்.

“இங்க வந்து என்ன பார்க்கணும்னு சொன்னது நீ தான்.. சரி நல்லா பார்த்துட்டு போக வந்திருப்பியாக்கும்னு தான் உன் முன்னாடியே வந்து உட்கார்ந்து தரிசனம் கொடுத்துட்டு இருந்தேன்..” என்று அவன் கூறவும், குப்பென்று வியர்த்துவிட்டது மணிக்கு..

‘அடப்பாவி.. நானா இவன பார்த்துட்டு இருந்தேன்? இவ்வளவு நேரமா உரிச்சுத் திங்கற மாதிரி என்ன இவன் தான பார்த்துட்டு இருந்தான்.. இப்போ இப்படி சொல்லறான்?’ என்று அதிசயித்து வாய்பிளந்து பார்த்தாள்.

அவளது அந்த பாவனையில் சிரிப்பு வந்துவிட்டது ராகவுக்கு.

“என்ன இப்படி பார்க்கற?” என்று சிரிப்புடன் அவன் கேட்க, அவனது சிரிப்பில் இன்னமும் திகைத்துப் போனாள்!

‘இவனுக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா?’ என்று எண்ணியபடி மீண்டும் அவளது வாய் அவளையும் அறியாது திறக்க முயல, சட்டென சுய உணர்வுக்கு மீண்டு, வாயை மூடிக் கொண்டவள்..

“நான் ஒன்னும் உன்ன பார்க்கறதுக்கு வரல. உன்கிட்ட பேச வந்தேன்..” என்று அவள் கூற, ராகவோ கன்னத்தில் கை வைத்துக் கொண்டு..

“ஹ்ம்ம்.. பேசு கேட்போம்..” என்றான் ஏதோ கதை கேட்கும் பாவனையுடன்.

அதைக் கண்டு எரிச்சலானாலும், இது போன்ற சிறிய விஷயங்களில் கவனத்தை செலுத்தினால், முக்கியமான விஷயத்தை மறந்துவிடுவோம் என்று எண்ணியவள்..

“என்ன எதுக்காக கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்ட?” என்று நேரடியாக கேட்க, சட்டென சிரித்துவிட்டான் ராகவ்!

“இப்போ எதுக்கு சிரிக்கற? இங்க என்ன காமெடி ப்ரோக்ராமா நடக்குது?” என்று அவள் எரிச்சல்பட, ராகவோ..

“இல்ல இதுக்கு உண்மையான ஒரு பதில் தோணுச்சு.. ஆனா அத சொன்னா இப்போ நீ அடிக்கவே வந்துடுவ.. அதனால வேற பதில் சொல்லறேன்..” என்றவன், சிரிப்பை முற்றிலுமாக அடக்கிக் கொண்டு..

“பாட்டியோட சொத்துக்காக..” என்று பட்டென்று கூறினான்.

அதில் மீண்டும் வாய் பிளந்து போனது மணிக்கு!

“நிஜமாவா சொல்லற? ஆனா உன்கிட்ட இருக்கற பணத்துக்கு.. பாட்டியோட இந்தப் பணமெல்லாம் ஒன்னுமே இல்ல..” என்று அவள் கூற.. உடனே ராகவோ,

“சரி.. உன் மேல திடீருன்னு வந்த காதலால தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு சொன்ன நம்பிடுவியா?” என்று அவன் கேட்க, அவனை முறைத்துப் பார்த்த மணியோ..

“நீ சத்தியமே செஞ்சாலும் நான் நம்ப மாட்டேன்..” என்றாள் வெடுக்கென்று.

அதில் இன்னமும் சிரிப்பு தான் வந்தது ராகவுக்கு..

“அப்பறம் என்ன? நான் என்ன சொன்னாலும் நீ நம்பப் போறது இல்ல.. அப்பறம் எதுக்கு என்கிட்ட கேள்வி கேட்கற?

கல்யாணம் செய்தோமா.. லைஃப என்ஜாய் பண்ணினோமான்னு இருக்கணும்..” என்று இரு கைகளையும் தூக்கி அவன் சோம்பல் முறிக்க, மணிக்கு சட்டென்று வயிற்றைப் பிசைந்தது.

“என்னது என்ஜாய் பண்ணுவியா? அதெல்லாம் கனவுல கூட நடக்காது பார்த்துக்க..” என்று இன்னமும் எகிறினாள் மணி.

அதைக் கேட்டு மெல்ல எழுந்த ராகவோ..

“அப்படியா?.” என்று கேட்டுக் கொண்டே மெல்ல அவளருகே சென்று, அவளை மிக நெருங்கி.. அவளது மதிமுகத்திடம் குனிந்து..

“அப்படியா?” என்று மீண்டும் ரகசியக் குரலில் கேட்க, தனது கைப்பையை இறுக்கப் பற்றிக் கொண்டு, தான் அமர்ந்திருந்த இருக்கையினூடு ஒடுங்கிக் கொண்ட பெண்ணவளோ..

“ராகவ்.. நீ தப்பு பண்ற..” என்று நடுங்கிய குரலில் கூற, அவனோ..

“தப்பா? ஆமா தப்பு தான்.. ஆனா எனக்கு பிடிச்சுருக்கே..” என்று அவன் அதே குரலில் கூறவும், மணியோ அவனை மார்பின் மீது கை வைத்துத் தள்ளிவிட முயற்சிக்க, அவனோ சட்டென அவளது கையைப் பற்றிக்கொண்டான்.

‘ஹயோ.. தெரியாத்தனமா இவன்கிட்ட வாண்ட்டடா வந்து சிக்கிட்டமா?’ என்று இவள் சிந்தித்துக் கொண்டிருந்த போது, நல்ல வேளையாக அந்த அறைக்கதவு தட்டப்பட்டது.

அதில் எரிச்சலடைந்த ராகவின் தாடை இறுகியது! சட்டென அவளை விட்டு விலகிச் சென்று அவன் கதவைத் திறக்க, அங்கு நின்றிருந்தார் மானேஜர்.

இது தான் சாக்கென்று நினைத்தவள், ராகவையும், அந்த மேனஜரையும் தாண்டிக் கொண்டு விறுவிறுவென சென்றவள், கடையை விட்டு வெளியே காலை எடுத்து வைக்க முயல.. அங்கு வந்த ஒருவரோ மிடுக்காக..

“மேடம்.. இப்போ யாரும் கடையை விட்டு வெளில போக முடியாது.. இன்கம் டாக்ஸ் ரெய்டுக்கு வந்திருக்கோம்..” என்று கூற, அவள் அதிர்ச்சியுடன் திரும்பி ராகவைப் பார்த்தாள்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
25
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்