அத்தியாயம் 1 – முத்த தாம்பூலம்

Loading

அத்தியாயம் 01

 

 

அந்த இரட்டை கதவைத் திறந்து கொண்டு, உள்ளே துள்ளி குதித்து ஓடி வந்தாள் பர்விதா “அக்கா மாப்பிள்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க… மாமா செம்மையா இருக்காரு..!” என அக்கா பார்கவியின் கழுத்தை கட்டிக் கொண்டு சந்தோஷமாக கூறினாள்.

 

தங்கை கூறியதை கேட்டதும் பார்கவிக்கு கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட்டன. கண்ணாடி முன்பு அமர்ந்து இருந்தவள் “அவரு என்ன கலர் ட்ரெஸ் டி” என்றாள் தங்கையிடம் “மெரூன் கலர் ஷர்ட் சாண்டல் கலர் பேண்ட்ல அசத்தலா இருக்காரு…” என்றாள் பர்விதா.

 

உடனே தான் அணிந்து இருந்த கோல்ட் மஞ்சள் வண்ணப் புடவையை பார்த்தவள், எழுந்து கண்ணாடியில் தன்னை அப்படியும் இப்படியும் பார்த்தாள். தன் அறையில் இருந்த அலுமாரியை திறந்து அதனுள் தேடி ஒரு மெரூன் நிற புடவையை எடுத்தாள்.

 

“அக்கா என்ன பண்ற.. இப்ப எதுக்கு இந்த புடவ… ”

“இத தான் கட்ட போறேன்… ” என்றவாறு தான் கட்டியிருந்த புடவையை வேகமாக உருவினாள் பார்கவி. “அக்கா என்ன பண்ற இந்த புடவையிலயே அழகா தான் இருக்க …,இப்ப நேரமும் இல்ல.. உன்ன கூப்பிடுவாங்க… சரி இந்த மெரூன் சாரிக்கு ஜாக்கெட் இருக்கா..!”என்றாள் பர்விதா.

 

” நான் இப்ப போட்டு இருக்குற ஜாக்கெட் இந்த சாரிக்கு மேஜ் ஆகும்… நான் சீக்கிரம் புடவ மாத்திடுவேன் நீ போயி ஹோல்ல இரு.. என்ன கூப்டா உடனே வா… ” என்றாள் பார்கவி புடவையை உடலில் சுற்றிக்கொண்டே “சரிக்கா குயிக்கா ரெடியாகு நான் போயி மாமாவ சைட் அடிக்கேன்…” என கூறி கண்ணடித்து விட்டு தமக்கை முறைப்பதற்கு முன் சிட்டாக பறந்து விட்டாள்.

 

பர்விதா செல்லவும் உதட்டில் சிறு புன்னகையுடன், புடவையை உடுத்த ஆரம்பித்தாள் அன்றைய நிகழ்வின் நாயகி.

 

வெளியே வந்த பர்விதா மாப்பிள்ளை வீட்டாற்களை பார்த்து கையை கூப்பி வணக்கம் வைக்க அனைவரும் சிறு புன்முறுவலுடன் பதில் வணக்கம் வைத்தனர். ” வாம்மா…இவ என் இரண்டாவது பொண்ணு பர்விதா காலேஜ் படிக்கிறா” என்று அறிமுகப் படுத்தினார் வசந்தராஜன். ” லெச்சனமா இருக்கா.. ” என்றார் மாப்பிள்ளையின் தாய் செவ்வந்தி.

 

இரண்டாவது பெண் என்றதுமே மாப்பிள்ளையின் தம்பி அஸ்வந் ஆர்வமாக ஏறிட்டு பார்த்தான். இவர்கள் சம்பாஷனையின் போதே சமையல் அறையில் இருந்து வந்தார் இரண்டு பேரழகிகளை பெற்றெடுத்த தாய் சங்கரி.

 

வந்தவர் சற்றே தள்ளி நின்று கண்களால் பர்விதாவை அழைத்து கையில் இருந்த காஃபி ரேயை நீட்டி “இந்தாடா அக்கா கிட்ட இந்த ரேய குடுத்து அழைச்சிட்டு வா..” என்றார். சரியென தலையசைத்து ரேயை வாங்கி கொண்டு பார்கவி அறையினுள் நுழைந்தாள்.

 

உள்ளே வந்தவள் மலைத்து தான் போனாள். மெரூன் நிற புடவையை பாந்தமாய் உடுத்தி, தேவதையாக ஜொலித்தாள் பார்கவி. அவள் கூறியது போலவே அந்த மெரூன் நிற புடவைக்கு அவள் போட்டு இருந்த ஜாக்கெட் கச்சிதமாக பொருந்தி இருந்தது.

 

“வாவ்! அக்கா அம்மன் சிலை மாதிரி இருக்க … இது என் அக்கா வா … இல்ல நான் இல்லாத நேரம் வானத்து தேவதை யாரும் வந்துடாங்களா.. ” என்றாள் பர்விதா தமக்கையின் அழகை சிலாகித்து.

 

“போடி ரொம்ப பண்ணாத.. நான் சாதாரணமா தான் ரெடியாகி இருக்கேன்…” என்றாள் வெட்கத்தோடு பார்கவி. “சாதாரணமாவா!.. உன்ன மட்டும் மாமா இந்த மாதிரி பார்த்தார்னு வை.. இது பொண்ணு பார்க்குற பங்ஷன் இல்ல கல்யாண பங்ஷன்னு நினைச்சு தாலி கட்டி கையோட கூட்டித்து போயிடுவாரு..” என்றாள் குறும்பாக பர்விதா.

 

“போதும் டி ரொம்ப ஓட்டாத.. ” என்றாள் பார்கவி கன்னங்கள் சிவக்க. திருமணம் இப்போதே நடந்தாலும் அவளுக்கு சம்மதமே. மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்த நொடியில் இருந்தே அவனை மனதினுள் கணவனாக சிம்மாசனம் போட்டு அமர வைத்து விட்டாள்.

 

நாளுக்கு நாள் அவனை அதிகமாகவே நேசிக்க ஆரம்பித்து விட்டாள். எதற்காம் இந்த பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் இதெல்லாம். நேரடியாக திருமணத்தை வைத்தால் என்னவாம் என்றெண்ணி நொந்து கொண்டதும் உண்டு. இதோ அவனை நேரில் காணப் போகும் இந்த நொடிக்காக கடந்த பத்து தினங்கள் ஆவலாக காத்திருந்தாள்.

 

“நான் ஒன்னும் சும்மா சொல்லல.. வேணும்னா மாமா உன்ன பாத்ததும் குடுக்குற ரியாக்ஷன பாரு.. அப்ப புரியும்… இந்தாக்கா இத புடி உன்ன கூட்டி வர சொன்னாங்க.. ” என்றபடி காஃபி ரேயை நீட்ட அதை வாங்கி கொண்ட பார்கவிக்கு பதற்றம் தன்னால் வந்து ஒட்டிக் கொண்டது.

 

தன் மனம் கவர்ந்த மன்னவனை பார்க்க போகும் ஆசையில் துள்ளி குதித்த இதயத்திற்கு, எதிர்பதமாக அன்னநடை போட்டு ஹோலுக்கு வந்தாள். தமக்கையின் இடப்பக்கம் பர்விதா வந்தாள். பர்விதா தாயின் பக்கம் நின்று விட, பார்கவி மாப்பிள்ளை வீட்டார்களுக்கு காஃபி கொடுக்க அருகில் சென்றாள்.

 

“நல்லா பார்த்துக்கோங்க சம்பந்திமா இவதான் உங்க மருமக பார்கவி..” என்றார் வசந்தராஜன். “என் மருமகள தெரியாம இருக்குமா.. ஃபோட்டோ பாத்ததுமே எங்க எல்லாருக்குமே ரொம்ப புடிச்சு போச்சு.., போட்டோவ விட நேர்ல அம்சமா ஜொலிக்குறா..” என்றவாறு காற்றில் நெட்டி முறித்தார் செவ்வந்தி.

 

“காஃபி எடுத்துக்கோங்க சம்மந்தி..” எனவும் குனிந்து ரேயை பார்கவி நீட்டவும், செவ்வந்தியும் இன் முகமாக எடுத்துக் கொண்டார். அடுத்து அஸ்வந் எடுத்துக்கொள்ள, அடுத்தாக விழாவின் நாயகன் அபர்ஜித், இருபத்தெட்டு வயது வாலிபன், வழக்கறிஞன், பார்த்ததும் ஈர்த்துவிடும் தோற்றம்.

 

அவன் வழக்கறிஞன் என்பதால் வார்த்தை கொண்டு பேசுவான் அது இயல்பு. ஆனால் அவன் கண்களும் ஆயிரம் கதை பேசும், தீட்சண்யமான பார்வை, திடகாத்திரமான ஆண்மகன், தந்தை இல்லாத வீட்டின் தலைமகன் என்பதால் இதுவரை படிப்பை தவிர வேறு சிந்தனையும் வந்தது இல்லை. எனவே காதலும் வரவில்லை. திருமணத்திற்கு செவ்வந்தி பெண்பார்க்க கேட்டபோது சம்மதம் கூறிவிட்டான்.

 

பார்கவியின் புகைப்படத்தை பார்த்தும் பிடித்தும் விட்டது. அந்த பேரழகியை பிடிக்கவில்லை என்றால் தான் அதிசயம் .

 

அபர்ஜித்திற்கு காஃபி குடுக்க வேண்டும் என்றதுமே ஒருவித படபடப்பு. ரேயை இருக பற்றிக்கொண்டே கையை நீட்டினாள். அவன் எடுக்க வில்லை..அவள் வந்ததில் இருந்தே அவளை மட்டும் தான் அவன் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் குனிந்த தலை நிமிராமல் இருக்கவும் சீண்டவே அவ்வாறு செய்தான்.

 

ரொம்ப நேரமாக அவன் வோச் அணிந்த கை அப்படியே இக்கவும் தலையை நிமிர்த்தி, விழிகளை உயர்த்தி அவனை ஏறிட்டாள். நான்கு விழிகளும் ஒன்றொடு ஒன்று கலந்து கொண்டன. அவள் முகம் பார்த்துக்கொண்டே காஃபி கப்பை எடுத்தான் அந்த விடாக்கண்டன்.

 

அனைவருக்கும் காஃபி குடுத்து விட்டு தாயிடம் செல்ல போனவளை இழுத்து தன் அருகே அமர்த்திக் கொண்டார் செவ்வந்தி.

 

இரண்டு ஜோடிப் புறாக்களும் ஒருவரை ஒருவர் கடைக்கண்ணால் ரசித்தபடி இருக்க, பெரியவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் வைப்பதாகவும், திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதாம்பூலம் மாற்றிக் கொள்வதாகவும்,முடிவாக்கப்பட்டது.

 

“ஒரு மாதந்தான் இருக்கு நாள் போதும்ல சம்பந்தி..” என்ற செவ்வந்தியிடம் “போதும் சம்பந்திமா பார்த்து பண்ணிடலாம்… உங்க கிட்ட முன்னமே சொன்னது தான் என் அம்மா படுத்த படுக்கையாக இருக்காங்க.. இப்போவோ அப்போவோனு இருக்கு அதான் அவங்க உயிரோட இருக்கும் போதே அவங்க முதல் பேத்திக்கு சரி கல்யாணத்த முடிச்சிடலாம்னு தான்… எங்க அவசரம் புரியும்னு நினைக்கிறேன்…”என்றார் தன்மையாய் வசந்தராஜன்.

 

“புரியுது சம்மந்தி.. உங்களுக்கு தோது படுமானு தான் கேட்டேன்… நீங்க சொன்ன மாதிரியே வார ஐப்பசி கல்யாணத்த வச்சுக்கலாம்…” என்றார் செவ்வந்தி.

 

தமக்கை அத்தையின் பக்கத்தில் இருக்க குடித்து முடித்த காஃபி கப்பை மூவரிடமும் வாங்கிய பர்விதா அபர்ஜிதிடம் வாங்கும் போது “துடைச்சுக்கோங்க மாமா…” என்றாள் கிசுகிசுப்பாக, அவளை பார்த்து “காஃபி கரையா..?” என்றிட ” இல்ல என் அக்காவ பார்த்து ஊத்துற ஜொள்ள.. ” என்றாள் கண்சிமிட்டி, அவனுக்கு லேசான வெட்கமும் எட்டி பார்த்தது. முகத்தை திருப்பிக் கொண்டு ” வாலு… ” என்றான்.

 

 

“சரி சரி.. இந்த பொண்ணையும் பையனையும் தனியா பேசலாம் சொல்ல மாட்டிங்களா..! அது தானே காலகாலமா நடக்குறது..” என்றாள் பொதுவாக குறும்புடன் பர்விதா. அவள் அவ்வாறு கூற “சுட்டி ” என அவள் காதை விளையாட்டாக திருகி விட்டு, பேச வேண்டுமா என்பதை போல் மகனை பார்த்தார் செவ்வந்தி.

 

அபர்ஜித் எழுந்தே நின்று விட்டான். அஸ்வந்தோ “மானத்த வாங்காதண்ணா பொண்ணே இங்க தான் உட்கார்ந்து இருக்கு…நீ எங்க ஆளுக்கு முன்ன போக போற..” என்றான்.

 

” அம்மா கவி மாப்பிள்ளைய மேல கூட்டித்து போம்மா…” என்றார் வசந்தராஜன்.

 

தலையை ஆட்டி விட்டு பார்கவி முன்னாடி போக, சற்று சங்கடமாக இருந்தாலும் அவள் பின்னே சென்றான் அபர்ஜித் . பர்விதா ரேயுடன் சமையல் அறைக்கு போக “வீட்ட சுத்தி பார்கலாமா..!” என எழுந்து கொண்டான் அஸ்வந். சங்கரி பர்விதாவிடம் “தம்பிய கூட அழைச்சிட்டு போயி வீட்ட சுத்தி காட்டுமா…” என்றார்.

 

பர்விதாவும் “வாங்க ” என்றவாறு அவனுடன் நடந்தாள். இருவரும் வீட்டை சுற்றியபடியே சாதாரணமாக பேசினர்.

 

அஸ்வந் படித்த அதே குரூப் தான் பர்விதாவும் படிப்பதா கூற, அவர்கள் பரிபாஷைகள் படிப்பில் தொடங்கி பிடித்ததில் வந்து நின்றது.

 

பேசியவாறே இருவரும் வெளியே தோட்டத்துக்கு வந்திருந்தனர். மாடிக்கு செல்லவில்லை அங்கு தான் அவர்கள் உடன் பிறப்புகள் ஆயிரங் காலத்து பயிரை வளர்க்க அடிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனரே.

 

” க்கும்” குரலை செருமினான் அபர்ஜித். வந்ததில் இருந்து தரையில் எதையோ தேடிக் கொண்டு இருந்தாள் பார்கவி “சரிங்க நீங்க தேடி எடுத்துட்டு வாங்க நான் கீழ போறேன்…” என்றான் அபர்ஜித். “எ..எத தேடி எடுக்க…” என்று அப்போது தான் நிமிர்ந்து கேட்டாள் பார்கவி.

 

“எனக்கு எப்டி தெரியும் நீங்க தான் வந்ததுல இருந்து கீழ குனிஞ்சு எதையோ தேடிட்டு இருந்தீங்க…” என்றான் அவன்.

 

“அச்சோ அதெல்லாம் ஒன்னும் தேடல.. பேச கொஞ்சம் கூச்சமா இருக்கு அதான்…” என்றாள் நெளிந்து கொண்டே “என்னங்க கூச்சம் இந்த மூமென்ட் நமக்கு புதுசு தான்.. இத தள்ளி வச்சுட்டு ப்ரெண்ட்லியா பேசலாம்…”

 

“ம்ம் ..”என தலையை ஆட்டினாள் அவள்

 

“பார்கவி உங்களுக்கு என்ன பிடிச்சு இருக்கா… ” என்றான் அவன். அவளுக்கு கூச்சமும் வெட்கமும் பிடிங்கி தின்றது.

 

இருவரின் பிடித்தம் கேட்டுதானே திருமணம் முடிவு செய்யப்பட்டது. இனியும் தன் விருப்பத்தை கூற வேண்டுமா! இருந்தாலும் சொன்னாள் “ம்ம் .. பிடிச்சு இருக்கு உங்க ஃபோட்டோ பார்த்ததுமே பிடிச்சு போச்சு…”

 

“வாவ்! எனக்கும் உன்ன ஃபோட்டோல பார்ததுமே பிடிச்சிருச்சு …. வா போனு பேசலாம்ல ” எனவும் சம்மதமாக தலையை ஆட்டினாள். “ஒகே இது என் நம்பர் ***** உன் ஃபோன் நம்பர் சொல்லு…” என்று அவள் நம்பர் வாங்கி கொண்டான்.

 

” நீ ரொம்ப அழகா இருக்க.. மே பி அதான் பார்த்ததும் விழுதுட்டேன்னு நினைக்கிறேன்…” என்றான் அபர்ஜித்.

 

அவளோ நாணத்தோடு “தேங்க்ஸ்…நீங்களும் செம ஸ்மார்ட்…” என்றாள். இருவரும் ஒருவரையொருவர் ரசித்தபடி தங்களது விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொண்டனர். எதிர்கால வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகளை கலந்து கொண்டனர்.

 

“சரி பர்விதா வா உள்ள போகலாம்…” என அஸ்வந் அழைக்க ” ம்.. வாங்க அஸ்வந்” என அவனுடன் நடந்தாள். “இன்ஜினியரிங் படிச்சிட்டு வேலை கிடைக்காம முக்கால்வாசி பேர் சும்மா சுத்துறாங்களே.. உங்களுக்கு மட்டும் எப்டி இருபத்தஞ்சு வயசுலயே கிடைச்சிட்டு…” என்றாள் பர்விதா.

 

சிறிய சிரிப்புடன் ” ஒருவேள காலேஜ் டொப்பர், கோல்ட் மெடல் லிஸ்ட் என்றதால இருக்கும்” என்றான். ” ஐயோ இதுவேறயா.. நான்லாம் ஆவரேஜ் ஸ்டுடன்ட் தான்.. உங்க கிட்ட இனி பார்த்து தான் பேசனும்பா… ” என்றாள்.

 

“ஹேய் எயிட்டி ஃபைவ் பர்சன்டேஜ் ஆவரேஜ்ஜா..”

 

” பின்ன இல்லையா ”

 

சிறிதாக சிரித்துக் கொண்டான் அஸ்வந்.

” சரி உன் அக்கா என்ன படிச்சாங்க ”

 

” அக்காக்கு டீச்சராக ஆச.. ஆர்ட்ஸ் குரூப் தான் எடுத்தா.. ஆனா படிச்சு முடிஞ்சு ஒரு மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள கல்யாணம் ” என்றாள் சற்று வருத்ததுடன்

 

“அதனால என்ன..? கல்யாணம் பண்ணிட்டு வேலைக்கு போகட்டும் என் அண்ணா அதெல்லாம் ஃபுல் சப்போட் குடுப்பான்.. உன் அக்காக்கு இருபத்திமூணு வயசுதானே ”

 

” ம் ஆமா.. அவளுக்கு இபத்திமூனு எனக்கு இருபத்தி ஒன்ணு ” என்றாள் . கேளாமலே அவளது அனைத்து தகவல்களும் அவனுக்கு கடத்தப்பட்டன .

 

பேசிக்கொண்டே இவர்கள் ஹாலுக்கு வரவும், மேலே இருந்து பார்கவி அபர்ஜித் வரவும் சரியாக இருந்தது. இரு ஜோடிகளையும பார்த்த பெரியவர்கள் மனதில் ஒரே மாதிரியான சிந்தனைகள்.

 

அபர்ஜித் வரவும் எழுந்த செவ்வந்தி “கண்ணா பார்கவியோட பாட்டிய போயி பார்த்து பேசிட்டு வா…” என்றார். அனைவரும் வசந்தராஜனின் தாய் வள்ளியம்மை இருந்த அறைக்குள் நுழைந்தனர் .

 

கட்டிலில் உடல் மெலிந்து உருக்குலைந்து படுத்து இருந்தார் அவர். “அம்மா..அம்மா..” எனவும் கண்களை திறந்தார்.

 

“பார்கவிய பொண்ணு பார்க்க வாரதா சொன்னேன் இல்லையா.. இவங்கதான் சம்பந்திமா செவ்வந்தி.. இது தான் பார்கவி மாப்பிள்ள அபர்ஜித், அது அவர் தம்பி அஸ்வந்.., ” என அறிமுகம் செய்து வைத்தார்.

 

அவரும் அனைவரையும் கண்களால் பார்த்து விட்டு, கைகளை சற்று உயர்த்தி (நல்லா இருங்க) எனும் விதமாக செய்கை செய்தார். அபர்ஜித் மட்டும் அவர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டான்.

 

செவ்வந்தி வள்ளியம்மையின் கையை பற்றி கொண்டு “எதுவும் யோசிக்காதிங்க.. உங்க பேத்தி கல்யாணத்த கண் குளிர பார்க்க போறீங்க…” என்றார் அன்பாக.

 

வள்ளியம்மாவால் பேச முடியவில்லை. கண்களை மூடி திறந்து, தலையை ஆட்டினார்.

 

பெண் பார்க்கும் படலம் இனிதே முடிய, விடைபெற்று சென்றனர் மாப்பிள்ளை வீட்டார்.

 

அபர்ஜித்தின் ஃபோன் நம்பரை உதட்டோர புன்னகையுடன் பதிவு செய்து கொண்டாள் பார்கவி (மை லைஃப்) என்று.

 

அன்று இரவில் இருந்து இருவரும் நிறையவே பேசினர். அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர் ஒரு நண்பர்களை போல். அதை தாண்டி கொஞ்சிக் கொள்வதோ, சில்மிச போச்சுக்களோ இருவரிடமும் இல்லை.

 

திருமணம் முடிவான உடன் அந்தரங்கம் பேசும் மற்ற ஆண்களை போல், அபர்ஜித் எல்லை மீறி பேசாமல் கண்ணியமாக இருந்தது அபர்ஜித்தை இன்னமும் பிடித்து போனது பார்கவிக்கு.

 

இவர்கள் இவ்வாறு இருக்க அஸ்வந் பர்விதா எப்போது தொலைபேசி எண்களை மாற்றிக் கொண்டானரோ… தமது உடன்பிறப்புகள் திருமணத்தை எப்படி கோலாகலமாக செய்து முடிக்கலாம் என்ற டிஸ்கஷன்னில் இருந்தனர்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 49

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
45
+1
4
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்